கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆதிரையின் யாதுமாகி நின்றாய் 2 - அத்தியாயம் 13

Aathirai

Active member
அத்தியாயம் 13

அக்காவின் இந்த நிலைமைக்குக் காரணமானவனை தண்டித்தே ஆக வேண்டும் எனும் நினைப்பிலேயே உறங்கிப் போன அஞ்சலி விடிந்தது கூடத் தெரியாமல், திடீரென்று எழுந்தாள். அப்போதுதான் இனியன் குளித்து முடித்து தலையைத் துவட்டிக்கொண்டே வெளியே வந்தான்.

கண்களைத் தேய்த்து முடித்தவள், “ஏன் இனி, என்ன நேரத்திலேயே எழுப்பல.? பாரு மணி 7 ஆச்சு.” என்று காலையிலேயே புலம்ப ஆரம்பித்தவளை அருகே வந்து முறைத்துக்கொண்டே நின்றான் இனியன்.

“உனக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா.? உன்னை 6 மணியில இருந்து எழுப்பிட்டிருக்கேன். நீ தான் எழுந்திருக்கல. நான் போன்னு விட்டுட்டேன்.” என்றான்.

“ஓ. அப்படியா.!! ஆனா, எனக்குத் தெரியவே இல்ல. ராத்திரி தூக்கமே இல்ல இனி. அதனால தான் கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன்னு நினைக்கிறேன்.” என்றாள்.

“சரி, விடு. அதான் எழுந்திருச்சாச்சுல்ல.? போ, போய் குளிச்சுட்டு வந்து ரெடியாகு.” என்று கண்ணாடி முன்பு நின்றவாறே தலையை சீவிக் கொண்டிருந்தான்.

“அய்யோ.! வேலைக்கார அம்மா வந்திருப்பாங்கல்ல.? அவங்களுக்கு கொஞ்சமாவது ஹெல்ப் பண்ணனுமே. நான் வேற, ச்சே.” புலம்பியபடியே பாத்ரூமிற்க்கு ஓடியவளை ஒரு நிமிடம் நின்று பார்த்தபடி தன் யூனிஃபார்மை அயர்ன் பாக்ஸை வைத்துத் தேய்க்க ஆரம்பித்தான் இனியன்.

அவள் குளித்து முடித்து வெளியே வரும் போது இனியன் யூனிஃபார்மை மாட்டிக்கொண்டு தயாராக இருந்தான். அவளுக்கு ஒரு மாதிரி ஆனது. திருமணமானதில் இருந்து என்ன வேலை இருந்தாலும், அவள் தான் அவனது யூனிஃபார்மை அயர்ன் செய்து தருவாள். அது அவனுக்கு ஒரு செண்டிமெண்ட்டான விஷயமாக எண்ணினான். ஆனால், இன்றோ அவனே அயர்ன் செய்து கொண்டதை எண்ணி அவள் சற்று வருந்தினாள்.

“ஹே.. இனி, இன்னைக்கு நீயே யூனிஃபார்ம் அயர்ன் பண்ணிட்டியா.?” என்றாள்.

“ஆமா, வேற என்ன பண்றது.? நீ இன்னைக்கு ரொம்ப பிஸி. அதனால தான். பரவால்ல விடு.” என்று சற்று சலித்துக்கொண்டே சொல்ல, அஞ்சலிக்கு இன்னும் வருத்தமாக இருந்தது.

அவளால் அதைத் தாங்க முடியவில்லை. திரும்பி நின்றிருந்தவனைப் போய் கட்டிக் கொண்டாள். அவனோ, அதை எதிர்பார்க்காதவனாய், சற்று மனதை லேசாக்கிக் கொண்டு அவள் கைகளைப் பற்றி முத்தமிட்டான்.

அதை சமாதானமாய் உணர்ந்தவள், “ஸாரி இனி. மேரேஜ்க்கு அப்பறம் நீ என்கிட்ட எவ்ளோ செண்டிமெண்ட்டா இருக்கன்னு எனக்குத் தெரியும். ஆனா, அதை இன்னைக்குத்தான் நான் சீரியஸா நினைக்கிறேன். ப்ளீஸ் என்னைத் தப்பா நினைக்காத. நான் நேத்து நைட்ல இருந்து கொஞ்சம் அப்செட்டா இருக்கேன். அதனால தான் தூங்காம, இப்படி ஆயிடுச்சு.” என்று வருந்தினாள்.

அவளது கைகளைப் பிடித்தவாறே திரும்பியவன், அவளை அப்படியே இழுத்துப் பிடித்துக்கொண்டே சொன்னான். “இங்க பாரு அஞ்சலி. எந்த நிலையிலும் நீ ஒரே மாதிரி தான் இருக்கணும். இந்த மாதிரி ஏகப்பட்ட ப்ராப்ளம்ஸ் வரும். அதையெல்லாம் நீ எப்படி ஃபேஸ் பண்ணனுமோ, அப்படி ஃபேஸ் பண்ணு. ஆனா, தயவு செய்து கன்ஃப்யூஸ் ஆகாத. அது, உன்னை மட்டுமில்லாம, உன் கூட இருக்கறவங்களையும் சேர்த்து கஷ்டப்படுத்தும். சோ, டோண்ட் கன்ஃப்யூஸ். பி கிளியர். ஓகே.” என்று தெளிவாய்ப் பேச, அஞ்சலிக்கு அவனது பேச்சு ஒரு தெளிவை ஏற்படுத்தியது. அணைத்தவாறே நின்றிருந்தவனைப் பிடித்து அவனது கன்னத்தில் முத்தம் வைத்தாள்.

“அப்பா.. அஞ்சலி நீ ரொம்ப முன்னேறிட்ட. ஒரு கிஸ் கொடுக்க சொன்னா, எப்படியெல்லாம் கெஞ்சுவேன்.? இப்போ ஆட்டோமேட்டிக்கா கிடைக்குது. இதே போதும், இன்னைக்கு எவன் எவன் சிக்கப் போறானோ.? எல்லாத்தையும் வெளுத்து வாங்கப் போறேன்.” என்று சொன்னவனை அணைத்தவாறே சிரித்தாள் அஞ்சலி.

ரூமை விட்டு வெளியே வந்ததும், ஜானகி இருந்த அறைக்கு சென்று பார்த்தாள். அவள் அங்கே இல்லை. அப்போதே அஞ்சலிக்கு பக்கென்றது. “அக்கா, அக்கா..” என்று தேட ஆரம்பித்தாள். வெளியே வந்து பார்த்த போது கார்டனிலும் அவள் இல்லை. இப்போது பதற்றம் தொற்றிக்கொண்டது அவளுக்கு.

“இனி, அக்காவ காணோம். என்னாச்சுன்னு தெரியலையே.? நீ பார்த்தியா. கொஞ்சம் தேடிப் பாரேன்.” என்றாள்.

பதற்றத்துடன் தேடியவளின் நெற்றியில் ஒரு கொட்டு வைத்தவாறே, “ஏய் லூசு. கொஞ்சம் முன்னாடி தான சொன்ன. கன்ஃப்யூஸ் ஆகாதன்னு. எல்லா ரூம்லயும் தேடினயே, சமையல்கட்டுல தேடினயா.? அக்கா, அங்க சமையல்கார அம்மாக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்காங்க.” என்றான் இனியன்.

அப்போது தான் அவளுக்கு உயிரே வந்தது. “அதுக்கு எதுக்கு கொட்டற.?” என்றபடியே சமையல் அறைக்கு வந்தாள். அங்கே ஜானகி நேற்று இரவில் கட்டிய புடவையுடனேயே, வந்திருந்த சமையல்கார அம்மாவுக்கு உதவி செய்து கொண்டிருந்தாள்.

“அக்கா. நீ இங்கயா இருக்க. உன்னை எங்க எல்லாம் தேடறது.? ஒரு நிமிஷம் பயந்தே போயிட்டேன்.” என்று சொன்னாள்.

“நீ எதுக்கு பயப்படணும்.? ஒரு ஐ.ஏ.எஸ்சும், ஐ.பி.எஸ்சும் இருக்கற வீட்ல, நானே பயப்படல. நீ எதுக்கு பயப்படணும்.?” என்றாள்.

“சரி, நீ எதுக்கு இதெல்லாம் பண்ணிட்டிருக்க.? அவங்க எல்லாத்தையும் பண்ணிக்குவாங்க. கூட நான் இருக்கேன் நீ மொதல்ல போய் குளிச்சு ரெடியாகு. இனியன் கூடவே போய் நீ கம்ப்ளைண்ட் ஒண்ணு அவர்கிட்ட எழுதிக் குடு.” என்றாள்.

ஜானகியோ யோசித்தபடியே, உள்ளே சென்றாள். அவள் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த இனியன், “அஞ்சலி நீ தேவையில்லாத வேலையைத் தன் செஞ்சுட்டு இருக்க.? உன்னை ஹெல்ப் கேட்டா பண்ணலாம். ஆனா, நீயா ஏன் தேவையில்லாம பண்ணிட்டு இருக்கன்னு தான் எனக்குப் புரியல.” என்றபடியே சாப்பிடும் டேபிளில் வந்து அமர்ந்துகொண்டே சொன்னான் இனியன்.

“என்ன இனி பேசற.? அக்காக்கு இப்படி ஒரு அநியாயம் நடந்துருக்கு. அதுக்குக் காரணமானவங்கள எப்படியும் நான் தண்டிக்கனும்னு நினைக்கிறேன். அது தப்பா.?” என்று சொன்னபடியே அவனுக்கு தட்டத்தில் இட்லிகளை வைத்தபடியே சொன்னாள்.

“நீ என்ன விளையாடறியா.? நான் தான் சொல்றேன் இல்ல, அந்த பரமசிவன் நீ நினைக்கற மாதிரி சாதாரண ஆள் கிடையாதுன்னு. நீ சொல்ற மாதிரி உடனே அவன உள்ள தள்ளி தண்டிக்க முடியாது. அது ரொம்ப கஷ்டம். இந்த விஷயத்த நாம் கொஞ்சம் பொறுமையா தான் ஹேண்டில் பண்ணனும். என்னைப் பொறுத்தவரை அக்கா இப்போதைக்கு ஒரு சேஃபான இடத்துல இருக்கறது தான் பெட்டர். கொஞ்ச நாள் போனதுக்கப்பறம் என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம். நீ இப்படி அவசரப்பட்டா முடியாது.” என்றான் இனியன்.

“அதுக்கில்ல இனி. எனக்கு நேத்து அக்கா சொன்னதுல இருந்தே ரொம்ப கஷ்டமா இருக்கு. அவ இந்த மாதிரி கஷ்டத்த எல்லாம் அனுபவிச்சதே இல்ல. அத நினைக்கும் போது என்னால தாங்க முடியல. எப்படியாவது அவளுக்கு நியாயம் கிடைக்கணும். அதனால தான் சொன்னேன். ப்ளீஸ் தப்பா நினைக்காத.” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே,

ஜானகி, “அஞ்சலி.. அஞ்சலி..” என்று அழைத்தாள். அவளது அறைக்கு சென்றதும், “அஞ்சலி, ப்ளீஸ் நீ எனக்காக எதுவும் பண்ண வேண்டாம். தயவு செய்து நீ அவர் கிட்ட ஆர்கியூ பண்ணாத. அவர் சொல்றது தான் சரி. நான் கொஞ்ச நாளைக்கு அவனோட கண்ல படாம வேற எங்கயாவது போய் இருக்கறது தான் நல்லது. இப்போதைக்கு நான் கம்ப்ளைண்ட் அது, இதுன்னு போனா, கண்டிப்பா அவனுக்கு நான் இருக்கற இடம் தெரிஞ்சிடும். அதுக்கப்பறம் அவன் என்ன வேணும்னாலும் பண்ணுவான். அதனால, நீ கொஞ்சம் பொறுமையா இரு. இந்த விஷயத்த கொஞ்ச நாளைக்கு விட்டுடு.” என்றாள்.

“நீங்க ரெண்டு பேரும் இப்படி சொல்றீங்க. ஆனா, எனக்கு அவனப் பார்த்து நாலு, அறை அறையனும் போல இருக்கு. அப்படி ஒரு சான்ஸ் கிடைச்சா கண்டிப்பா நான் மிஸ் பண்ண மாட்டேன்.” என்றாள் அஞ்சலி.

“ஹும்ம்.. அவன் அதுவரைக்கும் உன்னை விட்டுவைப்பான்னு நீ நினைக்கிற.? ரொம்ப பேராசைப்படாத.” என்று சொன்னவாறே கையைக் கழுவ வந்தான் இனியன்.

அவனை முறைத்தாள் அவள். “என்னை முறைக்கறது இருக்கட்டும். இப்போ அக்காவ வேற எங்க சேஃபா தங்க வைக்கறது.?” என்று யோசித்தபடி நின்றான் இனியன்.

“ஏன், அக்கா நம்ம கூடவே இருக்கட்டுமே. இங்க சேஃப் தானே.?” என்றாள் அஞ்சலி.

“ம்ஹூம். இந்நேரம் கண்டிப்பா அந்த ஆளுங்க எல்லா இடத்தையும் நோட்டமிட்டு தகவல எப்படியும் அவனுக்கு கொண்டு சேர்த்துடுவாங்க. நாமளும் ட்யூட்டிக்குப் போயிட்டு வர லேட் ஆகும். அதனால, இங்க இருக்கறது கண்டிப்பா நல்லது இல்ல.” என்று சொன்னான் இனியன்.

“இல்லன்னா, நம்ம மைதிலி கூட அக்காவ ஸ்டே பண்ண வைச்சுடலாமா.? அவ கடலூர்ல தானே இருக்கா.” என்று சொன்னாள் அஞ்சலி.

“ம்ம். அதுவும் பரவால்ல தான். ஆனா, அதுல அக்காக்கு விருப்பமான்னு தெரியலையே.” என்று ஜானகியைப் பார்த்தனர் இருவரும்.

“நான் ஒண்ணு சொல்றேன் தப்பா நினைக்காதீங்க. நான் நம்ம ஊருக்கு போயிடறேன். நம்ம ஊர விட சேஃபான இடம் இருக்குமா என்ன.? அங்க போயிட்டா நான் எப்படியும் சமாளிச்சுக்குவேன். எனக்கு ஒரு பிரச்சினையும் வராது.” என்றாள் ஜானகி.

“அங்க போய் எங்க கா தங்குவ.? என்ன பண்ணுவ.?” என்றாள் அஞ்சலி.

“நீ எப்படியாவது ஹெல்ப் பண்ணி எனக்கு டீச்சர் ஜாப்ப நம்ம ஸ்கூலுக்கே ட்ரான்ஸ்ஃபராகற மாதிரி பண்ணிடறியா.? நான் நம்ம ஸ்கூல்லயே ஜாயின் பண்ணிடறேன். அதே மாதிரி நாம எல்லாரும் வாழ்ந்த வீட்லயே போய் இருக்கலாம்னு நினைக்கிறேன்.” என்றதும் அவர்கள் இருவரும் அவளைப் பார்த்தனர்.

“நான் ரொம்ப தப்பு பண்ணிருக்கேன் அஞ்சலி. உனக்கு, அப்பா, அம்மாக்கு ஏன் நிறைய பேருக்கு. அதனால தான், யாருமே என்கூட இல்லாம போயிட்டாங்க. இப்போ நிற்கதியா நிக்கறேன். அவ்ளோ திமிரா, ஆணவமா, சுயநலமா ஏன் இருந்தேன்னு இப்பவும் என்னை நினைச்சு ரொம்ப கேவலமா நினைக்கிறேன். அப்பாவையும், அம்மாவையும் நான் தான் கொன்னுட்டேன். மனசளவுல அவங்கள எந்த அளவுக்கு காயப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு அவங்க மனச நோகடிச்சு கொன்னுட்டேன். நிஜமா நான் உன் அளவுக்கு இல்லை அஞ்சலி. சின்ன வயசுல இருந்தே உன்னை நிறைய விஷயங்களுக்காக தேவையில்லாம காயப்படுத்தியிருக்கேன். நிறைய உன்ன அழ வைச்சிருக்கேன். ஆனா, நீ எப்பவுமே அப்படி கிடையாது. என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்குனவன ஏதாவது பண்ணனும்னு துடிக்கற. இந்த மனசு யாருக்கு வரும்.? உன்னை தொந்தரவு பண்ணிடக் கூடாதுன்னு எப்பவுமே நினைக்கிறேன். நான் கொஞ்ச நாளைக்கு தனியா இருக்கணும். இன்னும், நான் அனுபவிக்க வேண்டியது இருக்கு. அத அந்தக் கடவுளே முடிவு பண்ணட்டும்.” என்று விரக்தியாகவே பேசினாள் ஜானகி.

அஞ்சலியால் தன் கண்களை தானே நம்ப முடியவில்லை. நிஜமாலுமே அக்காதான் திருந்தி இப்படிப் பேசுகிறாளா.? என்று தோன்றியது. கனவிலும் இப்படி நடக்காதா.? என்று இருந்தவளுக்கு இப்போது ஜானகி பேசியதில் சிறிது நம்பிக்கை வந்தது. ஜானகியை அணைத்துக்கொண்டாள் அவள்.

“அக்கா. அப்படியெல்லாம் இல்ல கா.” என்றாள்.

வேறெதுவும் பேசத் தோன்றாமல் அவளை அணைத்துக்கொண்டு அழுதாள் ஜானகி. உண்மையான அன்பு எப்பொழுதும் தோற்காது. அந்த அன்புதான் ஜானகியை, அஞ்சலியிடம் இழுத்துக்கொண்டு வந்துள்ளதாய் இனியன் நினைத்தான். அவர்களைப் பார்த்துக்கொண்டே நின்றான்.


(தொடரும்...)
 
Last edited:
Top