Aathirai
Active member
அத்தியாயம் 15
இனியன் அழைத்ததும் உள்ளே நுழைந்தவள், அவனது சத்தம் மட்டும் கேட்க ஆனால் அங்கே அவன் இல்லாததைப் பார்த்தாள். கதவு தாழ்ப்பாளிடும் சத்தம் கேட்டது. திரும்பியவள், அங்கே இனியன் சிரித்துக்கொண்டே நிற்பதைப் பார்த்தாள்.
“மேடம், ரொம்ப பிஸிதான் போல. அக்கா வந்ததுல இருந்து என்னைக் கண்டுக்கவே மாட்டிங்கற.” என்றவாறே அவளின் கைகளைப் பிடித்து இழுத்தவாறே அணைத்தான்.
அணைத்தவாறே, அவள் கழுத்தில் தன் இதழைப் பதிக்க, எந்த ஒரு உணர்ச்சியும், சிறுதுளி அசைவும் இல்லாமல் நிற்பவளைக் கண்டான். எதனால் இப்படி இருக்கிறாள் என்று நினைத்தவன் அவளை பிடித்து தோள்களைத் தொட்டவாறே கேட்டான்.
“என்னாச்சு, ஏன் எந்த ரியாக்ஷனும் தராம இருக்க.? எவ்ளோ ஆசையா வந்து கட்டிப்புடிச்சா, நீ சிலையாட்டம் நிக்கற. ஏதாவது பிராப்ளமா.?” என்று அஞ்சலியின் பதிலை எதிர்பார்த்தவாறு நிற்க, அவளோ என்ன சொல்வது.? எப்படிச் சொல்வது.? என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தாள்.
“அஞ்சலி, நான் உன்கிட்ட தான்மா பேசிட்டிருக்கேன். என்னன்னு சொல்லப் போறியா இல்லையா.?” என்று சற்று அதட்டலாய்க் கேட்டான்.
கொஞ்சம் அவனது சத்தத்தில் விருக்கென்று பயந்தவள், ஏதோ ஒருவாறாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “நான், நான்.. ஒரு விஷயம் உன்கிட்ட சொல்லணும்.” என்று தயங்கியபடியே சொன்னாள்.
“ஏய்.. இங்க பாரு. ஒரு நிமிஷம். எதுக்கு இப்போ தயங்கி, தயங்கி பேசிட்டிருக்க.? ஸ்ட்ரைட்டா ஐஸ் டூ ஐஸ் பார்த்து நீ கலெக்டர் ஆஃபீஸ்ல உன்னோட சீட்ல உட்கார்ந்திருக்கும் போது என்ன பேசுவயோ, அது மாதிரி பேசு.” என்று அவனே அவளுக்குத் தைரியத்தைக் கொடுக்க,
“இனி, நான் உன்கிட்ட கேட்காம ஒரு முடிவெடுத்துட்டேன். கலெக்டர் சார்கிட்ட சொல்லி வேலூருக்கு என்னை ட்ரான்ஸ்ஃபர் பண்ண சொல்லிட்டேன்.” என்று ஒரு வழியாக சொல்லியே விட்டாள்.
அதுவரை அவளின் இரண்டு தோள்களையும், தன் இரண்டு கைகளால் பிடித்திருந்தவன், மெல்ல அதை எடுத்தான். அவளை முறைத்துக்கொண்டே, “எதுக்கு.?” என்று கேட்டான்.
“அந்தப் பரமசிவன் மேல ஆக்ஷன் எடுக்கணும்னு ஒரு வெறியோட இருக்கேன். அதுக்கு நான் அங்க போனா தான் சரிவரும். அதனால தான்..” என்றாள் குனிந்து கொண்டே.
“ஓஓ.. மேடம் உடனே போய் அவன் மேல ஆக்ஷன் எடுத்து அவனுக்கு தண்டனை வாங்கிக் குடுத்துட்டு தான் மறுவேலை பார்க்கப் போறீங்க. கல்யாணம் ஆகி இன்னும் ஒரு மாசம் கூட ஆகல, கட்டின புருஷன் கிட்ட ஒரு வார்த்தை கேட்கணும்னு தோணல. நீ உன் இஷ்டத்துக்கு முடிவெடுத்திருக்க. சரி, நீ அங்க போ. நான் இங்கயே இருக்கேன். ரெண்டு பேரும் தனித்தனி வீட்ல இருந்து குடித்தனம் நடத்தலாம். ரொம்ப நல்லா இருக்கும் வாழ்க்கை. சரியா..?” என்றபடி அவனது முழுக் கோபத்தையும் அவள் மேல் காட்ட முடியாமல் மாட்டி வைத்திருந்த ஒரு சட்டையைப் போட்டுக்கொண்டு வெளியே வந்தவன், தனது தண்டர்பேர்ட் வண்டி சாவியை எடுத்துக்கொண்டு விருட்டென்று கிளம்பி விட்டான்.
அவன் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தவள், கட்டிலின் மேல் சிலை போல் அப்படியே அமர்ந்தாள். கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.
கோபத்தோடு அவன் வெளியே கிளம்புவதை ஜானகி பார்த்தபடியே அவர்களது அறைக்குள் வந்தாள், “அவர்கிட்ட சொல்லிட்டியா.? ரொம்ப கோபப்பட்டாரா.? சொல்லு அஞ்சலி..” என்று அவளை உலுக்கினாள்.
எதுவும் பேச முடியாமல் அவள் தோள் மேல் சாய்ந்து அழுதாள்.
“நான் தான் சொன்னேன் இல்ல. அவருக்குக் கூட அவனப் பத்தி நல்லா தெரிஞ்சிருக்கு. நீ தான் தேவையில்லாம அவன் மேல ஆக்ஷன் எடுக்கணும்னு ரொம்பப் பெரிய ரிஸ்க் எடுத்துட்டு வந்திருக்க. அவர கொஞ்சமாவது நினைச்சுப் பார்த்திருக்கணும். நீ இப்போ அழுது என்ன பிரயோஜனம் சொல்லு.” என்று சொன்னபடி அவளைத் தேற்ற முயன்றாள் ஜானகி.
கோபத்தோடு வெளியே வந்தவன் ஊரையே ஒரு சுற்று சுற்றிக் கொண்டிருந்தான். ஓரிடத்தில், போலீஸ் ஜீப் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான். அங்கே, ஒருவன் ஆடி 6 காரின் அருகே நின்றபடி போலீஸார் என்று கூட பார்க்காமல் அவர்களிடம் கோபமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தான்.
ஏற்கனவே கோபத்தில் இருந்தவன், தன் துறையில் இருப்பவர்களிடம் எப்படி இவன் சண்டை போடலாம் என்று வந்த வெகத்தில் வண்டியை நிறுத்தி விட்டு அவனைப் “பளார்.. பளார்..” என்று ரெண்டு அறை அறைந்தான்.
அவன் அப்படிச் செய்வான் என்று போலீசாரும் நினைக்கவில்லை. அவனும் நினைக்கவில்லை. அவன் யார்.? என்ன.? என்று கூட விசாரிக்கவில்லை.
போலீஸார் அனைவரும் அவனுக்கு சல்யூட் அடித்தபடியே, “சார்.. என்ன சார் இப்படிப் பண்ணிட்டீங்க.?” என்றனர்.
அடி வாங்கியவன், “டேய்ய்.. எம் மேலயா கை வைக்கற.. உன்ன..” என்றபடி அவனை அடிக்க வர, அவனின் கையைப் பிடித்து பின்னால் பக்கவாட்டில் இழுத்துப் பிடித்தான் இனியன்.
வலி தாங்க முடியாமல் கதறினான் அவன். “ஆஆஆஆஆஆஆ.. விடு.. விடு... ஆஆஆஆ..”
“சார்.. சார்.. சார்.. விடுங்க சார். பையன் யாருன்னு தெரியாம அடிச்சிட்டீங்களே சார். நாங்களே சுமூகமா பேசி தீர்த்திருப்போம். நீங்க இடையில வந்து இப்போ பெரிய பிரச்சினை ஆகப் போகுது. முதல்ல பையன விடுங்க சார்..” என்று அங்கே நின்றிருந்த சப்-இன்ஸ்பெக்டர் சொன்னார்.
“சார் என்ன நீங்க, இப்படிப் பேசறீங்க.? யாரா இருந்தா என்ன.? நம்ம கிட்டயே இவனுங்க வால ஆட்ட ஆரம்பிச்சிட்டா பயமே இல்லாம போயிடும். ஆரம்பத்துலயே மிரட்டி வைக்கணும். இதை வேற யாராவது பார்த்தா, அவனுக்கும் இதே மாதிரி தான் பண்ணனும்னு தோணும். முதல்ல என்ன பிரச்சினை.? யார் இவன்.?” என்றான் இன்னும் அவனை விடாமல்.
“சார்.. தயவு செய்து நீங்க முதல்ல பையன விடுங்க சார். அப்பறமா எல்லாம் பேசிக்கலாம்.” என்றபடி அவனின் கைகளை இனியனிடமிருந்து மெல்ல விடுவித்தவர்,
“நீங்க போங்க தம்பி.. பார்த்துப் போங்க” என்று அவனை அந்தக் காரில் ஏற்றி விட்டார்.
“மணியன், நீங்க போய் கொஞ்சம் வீட்ல தம்பிய ட்ராப் பண்ணிட்டு வந்துடுங்க.” என்று ஒரு கான்ஸ்ட்டபிளிடம் சொல்ல, அவரும் அதைக் கேட்டு அந்தக் காரை எடுக்க முயல,
“டேய்.. இந்தக் காரோட வேல்யூ தெரியுமாடா முட்டாப் பசங்களா. இந்த ஆளெல்லாம் ட்ரைவரா.? இந்த வண்டிய முதல்ல ஓட்டத் தெரியுமா இவனுக்கு.?” என்று கண்டபடி உளற..
இனியன் மறுபடியும் கோபத்தோடு. “டேய்ய் உன்ன..” என்று கையை முறுக்கியபடி செல்ல, மறுபடியும் சப்-இன்ஸ்பெக்டர் தடுத்தார்.
“சார்.. விடுங்க சார்.. அவன் குடிச்சிருக்கான் சார். அதான் ஏதோ ஒளர்றான். நீங்க மறுபடியும் அடிச்சிடப் போறீங்க.” என்று அவனை அந்தப் பக்கமாய் இழுத்தார்.
“டேய்ய்.. இருங்கடா.. உங்க எல்லாருக்கும் ஆப்பு ரெடியா இருக்கு.. என்ன பண்ணப் போறேன்னு பாரு.?” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே எங்கே மீண்டும் விபரீதம் ஆகிவிடுமோ என்று கான்ஸ்டபிள் வண்டியைக் கிளப்பி விட்டார். அவர்கள் போன பிறகு தான், சப்-இன்ஸ்பெக்டர் அவனிடம் திரும்பினார்.
“சார், நீங்க அஸிஸ்டண்ட் கமிஷனர் இனியன் தானே.? உங்கள நல்லாவே தெரியும் சார் எனக்கு. நான் விஷ்ணு காஞ்சி பி-2 போலீஸ் ஸ்டேஷனோட சப்-இன்ஸ்பெக்டர் நாவலரசு. ஏன், சார் தேவையில்லாம இப்படி பிரச்சினைல மாட்டிக்கிட்டீங்க.?” என்றார் அவர்.
“என்ன சார் இது.? திரும்பத் திரும்ப அதையே சொல்லிட்டிருக்கீங்க. எனக்கு கண்ணுக்கு தப்புன்னு தோணுச்சு. அதான் அப்படிப் பண்ணேன். நீங்க என்னடான்னா என்னையே சொல்லிட்டிருக்கீங்க. அப்படி என்ன சார் பிரச்சனையாகப் போகுது.? முதல்ல யார் அவன்னு நீங்க சொல்லவே இல்லையே.” என்றான் இனியன்.
“சார், அந்தப் பையன் மினிஸ்டர் சக்கிரவர்த்தியோட பையன். போதைல கார் ஓட்டிட்டு வந்தான்னு தான் தடுத்து நிறுத்தினோம். அதுக்கு வெளிய வந்து எங்கள அசிங்க, அசிங்கமா திட்டினான். எங்களுக்கும் கோபம் வந்துச்சு. ஆனா, அதுக்கப்பறம் அவன் வண்டி நம்பரப் பார்த்து யாருன்னு தெரிஞ்சதுமே, அவன எப்படியாவது சமாதானப்படுத்தி அனுப்பி வைச்சிடலாம்னு நினைச்சோம். அதுக்குள்ள நீங்க இடையில வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டீங்க. விஷயம் தெரிஞ்சா, உங்களுக்குத்தான் பிரச்சினை. அதனால தான் சார் இவ்ளோ தூரம் சொல்லிட்டிருக்கேன்.” என்று அவர் பதட்டப்பட்டார்.
“சார்.. விடுங்க சார். இந்த மாதிரி நாய்களெல்லாம் தறிகெட்டுத் திரியும் போது, பொறுப்பான அதிகாரியா நாம என்ன செய்யணுமோ அதைத்தான் நான் செஞ்சேன். எங்கயாவது போய் மோதி ஆக்ஸிடண்ட் பண்ணி யாராவது செத்திருந்தா, அப்போ என்ன பண்ணுவீங்க சார்.? சொல்லுங்க. அதனால தான் அடிச்சேன். ஆனா, அத்தனை அடி வாங்கியும் அவன் எவ்வளவு திமிரா பேசிட்டுப் போறான்னு பார்த்தீங்கள்ல.” என்றான் இனியன்.
“அதெல்லாம் சரிதான் சார். ஆனா, இதுக்கப்பறம் உங்கள என்ன பண்ணுவாங்கன்னு தெரியலையே சார். அதுதான் பயமா இருக்கு. நீங்க ரொம்ப நல்ல டைப்னு கேள்விப்பட்டிருக்கேன்.” என்றார்.
“ஹூம்ம்.. அதனால தான் அவன அடிச்சேன். நான் அடிச்சது சரின்னு உங்க மனசுக்குத் தோணும். இருந்தாலும் பெரிய ஆளுங்களுக்குக் கீழ இருக்கும் போது, எல்லாத்தையும் பொறுத்துட்டு தான் போக வேண்டியிருக்கும். ஆனா, நான் அப்படிப்பட்ட ஆளில்லை.” என்றான் இனியன்.
“எதுக்கும், நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க சார். பெரிய இடம் வேற.” என்றார் அவர்.
“சார். மிஞ்சி மிஞ்சிப் போனா சஸ்பெண்ட் பண்ணுவாங்க. இல்ல நாலு ரவுடிகள விட்டு அடிப்பாங்க. நான் அதையெல்லாத்தையும் ஃபேஸ் பண்ணனும்னு தான் இந்தப் பதவிக்கு வந்திருக்கேன். நான் எவனுக்கும் பயப்பட மாட்டேன்.” என்றான்.
அவர் அதன் பிறகு எதுவும் பேசவில்லை. “நம்ம கேட்க வேண்டிய இடத்துல கேட்டு தான் ஆகணும் சார். ரொம்ப பணிஞ்சு போனா, நம்மள ஒரு ஈ, காக்கா கூட மதிக்காது. அதை முதல்ல புரிஞ்சுக்கோங்க.” என்று அவருக்கு சிறிது அறிவுரையை சொல்லிவிட்டுத் தன் வண்டியை மீண்டும் எடுத்துக்கொண்டு கிளம்பினான் இனியன்.
நேராக வீட்டிற்கே வந்துவிட்டான். கதவு அவன் வருகையை எதிர்நோக்கி தாழ்ப்பாளிடாமல் திறந்தே இருக்க, அவன் நேராக எதையும் பார்க்காமல் உள்ளே அவர்களது அறைக்குச் சென்றான்.
அவன் உள்ளே நுழைவதைப் பார்த்த அஞ்சலியும், ஜானகியும் அவனது கோபம் இன்னும் குறையவில்லை என்றே நினைத்தார்கள். ஜானகி, சைகையில் “உள்ளே போய் சமாதானம் செய்” என்று அனுப்பி வைத்தாள் அவளை.
உள்ளே நுழைந்தவன், தன் சட்டையைக் கழட்டி தூர எறிந்து விட்டு, அப்படியே மெத்தையில் குப்புற சாய்ந்தான். அவள் உள்ளே வந்த போது, கீழே கிடந்த சட்டையை எடுத்து ஹேங்கரில் மாட்டி வைத்தாள். மெல்ல அவன் அருகே போய் அவனது தோளைத் தொட்டவளை தன் உடம்பாலேயே விரட்டினான்.
“இனி, ப்ளீஸ் இனி... ரொம்ப சாரி.. நான் செஞ்சது தப்புதான். ப்ளீஸ் என்னை மன்னிச்சிடு.” என்றாள். அவள் பேசுவதைக் கேட்க விரும்பாதவன், அருகே இருந்த மற்றொரு தலையணையை எடுத்து தன் காதுகளில் வைத்துக்கொண்டு தூங்க முயன்றான்.
அவளும் நீண்ட நேரமாக சமாதானம் செய்ய முயன்று தோற்றுப் போனதுதான் மிச்சம். அவன் அவளை சட்டை செய்யவே இல்லை. இதுதான் முதல் முறை அவர்களின் திருமணத்திற்க்குப் பிறகு இப்படி சண்டை போடுவது. அதுவே அவளின் மனதை என்னவோ செய்தது. அழுது கொண்டே அமர்ந்திருந்தவள் நடுசாமம் கழித்து அப்படியே தூங்கிப் போனாள்.
(தொடரும்...)
Last edited: