Aathirai
Active member
அத்தியாயம் 18
வேலூருக்கு பயணிக்கப் போகிறார்கள் என்று கேள்விப்பட்டவுடனேயே, திலகா இனியனை ஊருக்கு வரும்படி சொல்ல, அவர்கள் பணியில் சேர ஒரு வாரம் நேரமும் இருந்ததால் இருவரும் இனியனின் வீட்டிற்க்கு வந்தனர்.
வந்ததுமே தன்னுடைய வேலையைக் காட்ட வேண்டும் என்று நினைத்த மாலதிக்கு சந்தர்ப்பமே கொடுக்காத படி சுற்றிக்கொண்டு இருந்தனர் இனியனும், அஞ்சலியும். விருந்தினர்கள் வீட்டுக்கு போவது, வருவது என்றே நாட்கள் சென்றன. அதற்க்கு திலகாவும் மறுப்பு எதுவும் சொல்லவில்லை. ஆனால், மாலதியோ அதைக் கெடுக்கும் விதமாக செயல்பட்டாள்.
அன்று மதியம் உணவை சமைத்துக்கொண்டிருந்தார் திலகா. காய்கறிகளை நறுக்கியவாறே பேச ஆரம்பித்தாள் மாலதி.
“ஏன் அத்தை. வந்ததுல இருந்து புருஷனும், பொண்டாட்டியும் இப்படி ஊர் சுத்திட்டே இருக்காங்களே. ஒரு நாளாவது வீட்டுல இருக்கச் சொல்லலாம்ல. பாருங்க எல்லா வேலையும் நாமளே பார்க்க வேண்டியிருக்கு. அந்த மகாராணி இந்த வீட்டுல இருந்து ஒரு வேலை கூட செஞ்சு நான் பார்க்கல.” என்றாள்.
“அதுக்கு என்ன பண்றது மாலதி.? அவங்க என்ன வேணும்னா சுத்தறாங்க.? கல்யாணம் முடிஞ்சு யார் வீட்டுக்குமே அவங்க போக முடியலையே. அப்படி இருக்கும் போது, இப்போ தான் அவங்களுக்கு நேரம் கிடைச்சிருக்கு. அதனால போயாக வேண்டிய கட்டாயம். நான் தான் போகச் சொன்னேன்.” என்றார் திலகா.
“ம்ம்.. நீங்க இப்படியே சொல்லிட்டு அனுப்பி வைச்சிட்டிருந்தா, அவளுக்கு உங்க மேல பயமே இல்லாம போயிடும் அத்தை. அவ பெரிய கலெக்டரா இருக்கலாம். ஆனா, வீட்டுக்கு எப்பவுமே மருமக தான.? அதை ஏன் நீங்க யோசிக்க மாட்டிங்கறீங்க.?” என்றாள்.
திலகா எதுவும் பேசாமல் அமைதி காத்தார். “நான் சொல்றத சொல்லிட்டேன். அதுக்கப்பறம் உங்க இஷ்டம் அத்தை.” என்று மாலதி சொன்னபடியே சமையல்கட்டை விட்டு வெளியேறினாள்.
எதையோ யோசித்துக்கொண்டிருந்த திலகாவின் போன் அடிக்க, எடுத்தவருக்கு அது புது நம்பராய் இருந்தது. அதை அழுத்தி காதில் வைத்துப் பேசினார்.
“ஹலோ.. யாருங்க.?” என்றார்.
“ஹலோ.. சம்பந்தி அம்மா.. நல்லா இருக்கீங்களா.? நான் அஞ்சலியோட அத்தை மணிமேகலை. உங்களுக்கு கூப்பிடணும்னு முன்னாடியே நினைச்சேன். இப்போதான் அதுக்கு நேரம் அமைஞ்சது.” என்று குழைவாய்ப் பேசினார்.
“ஓ.. ம்ம்ம்.. சொல்லுங்க..” என்று உடனே தன் மிடுக்கான பாஷையில் சொன்னார்.
“ஒன்னும் இல்ல. அஞ்சலியும், மாப்பிள்ளையும் நம்ம ஊருக்கு வந்திருக்கறதா கேள்விப்பட்டேன். அதான், அவங்கள நாளைக்கு விருந்துக்கு வீட்டுக்கு அனுப்பி வைங்கன்னு சொல்லலாம்னு கூப்பிட்டேன்.” என்றார் மணிமேகலை.
“ம்ம். சரி பார்க்கறேன். அவங்க வந்ததுல இருந்து அங்கயும், இங்கயும் போகத்தான் சரியா இருக்கு. இன்னும் ஒழுங்கா ரெண்டு நிமிஷம் வீட்டுலயே இல்ல. நாளைக்கு குலதெய்வம் கோவிலுக்குப் போகலாம்னு இருக்கோம். அதனால, முடிஞ்சா தான் வருவாங்க. இல்லைன்னா இன்னொரு நாள் வரட்டும்.” என்றார் திலகா ஒரு அதிகார தொணியில்.
“சரிங்க சம்பந்தி அம்மா. முடிஞ்ச அளவுக்கு முயற்சி செய்யுங்க.” என்றார் மணிமேகலை திரும்பவும்.
“ம்ம்ம்.. சரி.. வச்சிடறேன்.” என்று சொல்லி பட்டென்று கட் செய்தார் திலகா.
மணிமேகலைக்கோ முகத்தில் அடித்தாற் போல் தான் இருந்தது. பின்னாலிருந்து தெய்வானையும், முருகப்பனும் “என்ன ஆச்சு.? என்ன சொன்னாங்க.?” என்று ஆர்வத்துடன் கேட்டனர்.
திலகா சொன்னதை சொன்னார் மணிமேகலை. “பார்த்தியாடி, அவளுக்கு கொழுப்ப.? என் பேத்திய அனுப்பறதுக்கு என்னவாம்.? அப்படியே ஆறு அடி குறைஞ்சு போயிடுவா பாரு.? ஹூம்ம்.. ஏதோ மாப்பிள்ளை பையனுக்காக பார்க்க வேண்டியதா இருக்கு.” என்று புலம்பினார் தெய்வானை.
“சரி விடு, தெய்வா. அவங்க அனுப்பனும்னு நினைச்சா அனுப்பலாம். ஆனா, வேணும்னே சொல்லும் போது நாம என்ன பண்ண முடியும்.?” என்றார் முருகப்பன்.
“இல்லன்னா மணி, நீ பேசாம மாப்பிள்ளை பையன்கிட்ட போன் பண்ணி ஒரு வார்த்தை சொல்லிப் பாரேன்.” என்றாள் தெய்வானை.
“அய்யோ.. அத்தை, அவருக்கு போன் பண்ணப் போயி அது சம்பந்தி அம்மாவுக்கு தெரிஞ்சா அது பெரிய சங்கடமாயிடப் போகுது.?” என்றார் மணிமேகலை.
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது. நீ போன் பண்ணிப் பேசு.” என்று தெய்வானை திரும்பவும் கூற, வேறு வழியில்லாமல் இனியனுக்கு போன் செய்தாள் மணிமேகலை.
இனியனும், அஞ்சலியும் உறவினர் ஒருவர் வீட்டினில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது மணிமேகலை போன் செய்தார். அவரின் பேரைப் பார்த்ததுமே தனியே வந்து பேசினான் இனியன். அது அஞ்சலிக்குக் கூட தெரியவில்லை.
“சொல்லுங்கம்மா.. நல்லா இருக்கீங்களா.? தாத்தா, பாட்டி எல்லாம் சௌக்கியமா.?” என்று முதலில் நலம் விசாரித்தான்.
“நாங்க எல்லாரும் சௌக்கியம் தம்பி. நீங்களும், அஞ்சலியும் நல்லா இருக்கீங்க தானே.?” என்றார் மணிமேகலை.
“நல்லா இருக்கோம் மா. சொல்லுங்கம்மா என்ன விஷயம்.?” என்றான் கேள்வியுடன்.
“இல்ல தம்பி. நீங்களும், அஞ்சலியும் நம்ம ஊருக்கு வரதா போன வாரம் அஞ்சலி போன்ல சொன்னா. அதான் வந்துட்டீங்கன்னா, நம்ம வீட்டுக்கு வரச் சொல்லலாம்னு கூப்பிட்டேன். கல்யாணம் முடிஞ்சதுமே முறைப்படி வீட்டுல உள்ள பெரியவங்ககிட்ட அனுப்பிவைக்கச் சொல்லி அன்னைக்கே சொல்லிட்டு தான் வந்தோம். இருந்தாலும், ஒரு முறை போன் பண்ணிப் பேசிடலாம்னு அம்மாவுக்கு கொஞ்சம் முன்னாடிதான் போன் பண்ணேன். ஆனா, அம்மா நாளைக்கு ஏதோ குலதெய்வம் கோவிலுக்குப் போகணும்னு சொல்றாங்க. முடிஞ்ச அளவுக்கு வீட்டுக்கு வரதுக்கு முயற்சி பண்ணுங்க தம்பி. என்னடா நான் போன் பண்ணி உங்களுக்கு பேசறேன்னு அம்மா தப்பா நினைக்கப் போறாங்க. எங்களுக்கும் அஞ்சலியைப் பார்க்கணும்னு ஆசை இருக்கும் தானே.?” என்றார் மணிமேகலை.
குலதெய்வம் கோவிலுக்குப் போறதப்பத்தி அம்மா சொன்னதா தெரியலையே. அப்பறம் எதுக்கு அப்படி சொல்லணும்.? என்று மனதினுள் நினைத்தவன். “சரிங்க அம்மா.. நான் சொல்றேன் வீட்டுல. அஞ்சலிகிட்ட பேசறீங்களா.?” என்றான் இனியன்.
“இல்ல தம்பி. பரவால்ல இருக்கட்டும். நான் அப்பறமா அவகிட்ட பேசிக்கறேன்.” என்று சொல்லிவிட்டு போனை வைத்தார்.
அவன் எதையோ யோசித்துக்கொண்டே சென்று அமர்ந்தான். அஞ்சலி அவனைப் பார்த்தாள். என்னவென்று கேட்டதற்க்கு “அப்பறமா சொல்றேன்” என்று தன் கண்களினாலேயே சைகை காட்டி விட, சரி என்று அமைதியாக இருந்தாள்.
வீட்டிற்க்கு வரும் வழியில் இதைப்பற்றி அவளிடம் கூறினான். “நாளைக்கு நிஜமாலுமே குலதெய்வம் கோவிலுக்குப் போறதா அம்மா சொன்னாங்களா.?” என்றாள்.
“அப்படி எதுவும் சொன்னதா எனக்கு ஞாபகம் இல்ல. ஆனா, உங்க வீட்டுல கூப்பிடறதுக்காகவே அம்மா அப்படி சொல்லிருக்கலாம்னு தோணுது.” என்றான் இனியன்.
“இது ஒரு பிரச்சினையா வரப் போகுது இனி. நீ எதுவும் சொல்லாத. வீணா பிரச்சினை வேண்டாம். வந்திருக்க ஒரு வாரம் நிம்மதியா இருந்துட்டுப் போலாம். நாம இன்னொரு நாள் கூட போய்க்கலாம்.” என்றாள் அஞ்சலி.
அவள் வாய் தான் அதைச் சொல்லியதே தவிர, அவள் மனமும் அங்கே செல்வதற்க்குத் துடித்ததை அவன் அறிந்து கொண்டான். அப்போதைக்கு அவளிடமும் எதுவும் சொல்லவில்லை. வீட்டிற்க்கு வந்தார்கள். வெயில் மண்டையைப் பிளக்க, சிறிது நேரம் அவர்களின் அறையில் ஓய்வெடுத்தார்கள்.
அது கூட, மாலதிக்குப் பொறுக்கவில்லை. “பாருங்க அத்தை. வந்ததும் உடனே ரூமுக்குள்ள போய் அடைஞ்சுக்கிட்டா.? ஹூம்ம்.. இவ ஒரு வேலைக்கும் தேற மாட்டா போலிருக்கு.” என்று திலகாவிடம் ஏற்றிவிட்டுக்கொண்டே இருந்தாள் மாலதி.
இரவு உணவு வேளையின் போது, அஞ்சலியும் சமையல்கட்டுப் பக்கம் வந்து அவர்கள் கேட்காமலேயே தன்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தாள். அதிலேயே அவளின் குணம் தெரிந்தது. திலகா அவளைப் பரவாயில்லை என்று எண்ணும் போது இந்த மாலதி வந்து இடையில் அவளின் மனதை குழப்பி விட்டு விடுவாள்.
இரவு உணவு முடிந்ததும், திலகாவை தோட்டத்திற்க்கு அழைத்தான் இனியன்.
“அம்மா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். நாளைக்கு நாங்க அஞ்சலியோட அத்தை வீட்டுக்கு விருந்துக்கு போகலாம்னு இருக்கோம்.” என்றான் இனியன்.
அவன் சொன்னதுமே திலகாவின் முகம் மாறியது. “இல்ல, இனியா. நாளைக்கு நம்ம குலதெய்வம் கோவிலுக்குப் போகணும். அதனால அவங்க வீட்டுக்கு இன்னொரு நாள் போயிக்கோ.” என்றார் எடுத்த எடுப்பிலேயே.
“சரி மா. நீ சொல்ற மாதிரி நாம கொஞ்சம் சீக்கிரம் எழுந்திருச்சு கோவிலுக்குப் போயிட்டு ஒரு பத்து மணிக்கெல்லாம் வந்திடலாம். அதுக்கப்பறம் நாங்க அவங்க வீட்டுக்குப் போயிட்டு வரோம்.” என்றான் இனியன்.
“டேய்.. அதெல்லாம் வேணாம். நாளைக்கு நிதானமா எழுந்திருச்சி கோவிலுக்குப் போயிட்டு வரலாம். அப்படியே பக்கத்துல இருக்கற கோவிலுக்கும் போக வேண்டி இருக்கு. உன் கல்யாணத்துக்காக வேண்டிக்கிட்டது.” என்றாள் உடனே.
“ம்மா.. எப்போ.? இப்போதான் வேண்டிக்கிட்டியா.? நாளைக்குப் போறதுக்கு.” என்றான் இனியன்.
அவனின் கேள்வியில் என்ன சொல்வதென்று தெரியாமல், “அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல டா. நிஜமாலும் தான்.” என்றார் திலகா.
“ம்மா.. சும்மா சொல்லாத. உன்னப் பொறுத்தவரைக்கும் நான் உனக்கு பையன் அவ்வளவு தான். ஆனா, நான் ஒரு போலீஸூங்கறதையும் மறந்துடாத. ஒருத்தர் பொய் சொன்னா என்னால ஈஸியா கண்டுபிடிக்க முடியும். அதை மொதல்ல தெரிஞ்சுக்கோ.” என்றான் இனியன்.
எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள் திலகா.
“இப்போ உனக்கு என்ன, நாங்க குலதெய்வம் கோவிலுக்குப் போகணும் அவ்வளவு தான.? நாங்க ரெண்டு பேரும் நேரத்துல எழுந்திரிச்சு கோவிலுக்குப் போயிட்டு வந்ததுக்கப்பறம் அவங்க வீட்டுக்குப் போறோம். சரியா.? நீங்க வேணும்னா மெதுவா போயிட்டு வாங்க.” என்றான்.
“ஏண்டா குடும்பத்தோட கோவிலுக்குப் போனா தானடா நல்லது. நீ என்ன இப்படி சொல்ற.?” என்றாள் திலகா.
“நீ என்ன இப்படி சொன்னாலும் ஏத்துக்க மாட்டிங்கற.? அப்படி சொன்னாலும் ஏத்துக்க மாட்டிங்கற.? நாங்க மொத்தத்துல அங்க போகவே கூடாதுன்னு சொல்றியா.?” என்றான்.
அவள் எதுவும் பேசவில்லை. “அம்மா, நாலு நாளா எல்லார் வீட்டுக்கும் போகும் போது நீ எதுவுமே சொல்லல. ஆனா, நாளைக்கு அவங்க வீட்டுக்குப் போறோம்னு சொன்னதும் உடனே குலதெய்வம் கோவிலுக்குப் போகணும்னு சொல்ற. ஏன், இந்த நாலு நாளா அதுக்கு நேரமே கிடைக்கலையா.?” என்று கேள்வி மேல் கேள்வியைக் கேட்டான்.
திலகாவால் ஒரு பதில் கூட சொல்ல முடியவில்லை. “உனக்கு அவங்களையும், ஏன் அஞ்சலியையும் பிடிக்காதுன்னு எனக்குத் தெரியும். ஆனா, நீ ஒரு உண்மையப் புரிஞ்சுக்கோ. நான் ஒன்னும் அண்ணி மாதிரி அடங்காப்பிடாரியையோ, புறம் பேசறவளையோ கல்யாணம் பண்ணிக்கல. அப்படிப்பட்டவளா இருந்திருந்தா அவளத் திரும்பிக் கூடப் பார்த்திருக்க மாட்டேன். ஆனா, அஞ்சலி நிஜமாலுமே ரொம்ப நல்ல பொண்ணு மா. அவளுக்கு அப்பா, அம்மா கிடையாது. இப்போ நீயும், அப்பாவும் தான் அந்த இடத்துல இருந்து அவளைப் பார்க்கணும். அப்பா எப்பவும் போல தான் இருக்கார். ஆனா, நீ மட்டும் தான் யார் யாரோ சொல் பேச்சக் கேட்டு இப்படி நடந்துக்கற. எனக்கு உன்னைப் பத்தி தெரியும். நீ மொதல்ல எல்லாம் இப்படி இல்ல. அண்ணனோட கல்யாணத்துக்கு அப்பறம் தான் ரொம்ப மாறிட்ட. அது ஏன்னு கூட எனக்கும் தெரியும், உனக்கும் தெரியும். ஒரே ஒரு நிமிஷம் நீ கொஞ்சம் தனியா உட்கார்ந்து யோசிச்சுப் பாரேன். உனக்கே புரியும். உன்னச் சுத்தி யார் நல்லவங்க, யார் கெட்டவங்கன்னு. அஞ்சலியோட நல்ல குணங்கள நீ தெரிஞ்சுக்க முடியாத மாதிரி உன் மனச குழப்பறாங்க. அதையெல்லாம் நீ கண்டுக்காம அவளோட நடவடிக்கைய நீ பார்த்தா தான் உனக்கு அவளைப் பத்தி தெரியும். நான் எல்லாமே சொல்லிட்டேன். இனிமேல் நீ தான் யோசிக்கணும். ஆனா, ஒண்ணு நாங்க நாளைக்கு குலதெய்வம் கோவிலுக்கும் போவோம், அவங்க வீட்டுக்கும் போவோம்.” என்றான் தீர்க்கமாக.
இன்னும் அதே அமைதியுடனேயே தான் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தாள். இனியனோ சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான். அவன் சொன்னதை இப்போது தான் நிதானமாக யோசிக்க ஆரம்பித்தாள் திலகா.
(தொடரும்...)
Last edited: