கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆதிரையின் யாதுமாகி நின்றாய் 2 - அத்தியாயம் 22

Aathirai

Active member
அத்தியாயம் 22

யார் திடீரென்று தங்களைப் பார்த்துப் பேசுவது என்று திரும்பிப் பார்த்தவர்களுக்கு ஒரே ஆச்சர்யம், சற்று முன்பு அவர்கள் யாரைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தனரோ, அதே நர்மதா தான் அங்கே நின்றிருந்தாள்.

“ஹேய்.. நர்மதா.. நீ எப்படி இங்க.?” என்று ஆச்சர்யத்துடன், தான் நீண்ட காலமாக பார்க்காதவளைப் பார்த்தவுடன் ஓடிச்சென்று பிடித்தபடி கேட்டாள் அஞ்சலி.

“நான் இங்க தான் ஒரு வருஷமா வொர்க் பண்ணிட்டிருக்கேன் அஞ்சலி. பி.எட் முடிச்சுட்டு கவர்மென்ட் எக்ஸாம்ல பாஸ் பண்ணி இங்க ஜாயின் பண்ணிட்டேன்.” என்றாள் நர்மதா.

“இப்போ கூட உன்னைப் பத்தி தான் பேசிட்டிருந்தோம் நர்மதா. உன்னை ஸ்கூல விட்டே ஓடவிட்ட கதையைத்தான் சொல்லிட்டிருந்தேன். ஆனா, நீ இங்க இருப்பன்னு சத்தியமா நினைக்கல.” என்றாள் அஞ்சலி.

அவளைப் பார்த்ததும், இனியனுக்கு சங்கடமாக இருந்ததால் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தான். அவன் சங்கடத்தைப் புரிந்து கொண்டவளாய் அவனிடம் பேசினாள் நர்மதா.

“என்ன இனியன் சார், எப்படி இருக்கீங்க.? ஐ.பி.எஸ் ஆகிட்டீங்கன்னு கேள்விப்பட்டேன். அப்பறம் அஸிஸ்டண்ட் கமிஷனரா இருக்கீங்கன்னு நடராஜன் சார் சொன்னார்.” என்றாள் அவள் அவனை முதன் முதலில் பார்த்த அதே பார்வையில்.

அவள் பார்வையை எதிர்கொள்ள முடியாவிட்டாலும், தைரியமாய் அவள் கண்களைப் பார்த்து, “ஆமா...” என்றான்.

“அப்பா, ஒருவழியா என்கிட்ட சார் பேசிட்டார் அஞ்சலி. அப்போவெல்லாம் பேசறதுக்கே காசு கொடுக்கணும் இல்ல சாருக்கு. பேசிட்டா முத்து உதிர்ந்திடுமே கீழ.” என்று அவள் பாட்டுக்கு அவனை கேலி செய்துகொண்டே இருக்க, அவனோ அன்று செய்த தவறால் அவளைத் திருப்பிப் பேச முடியாதபடி நின்றிருந்தான்.

“ஹூம்ம். அப்பறம் நீ எப்படி இனியன மேரேஜ் பண்ணிக்கிட்ட.? கடைசில என்னோட ஆள நீ கரெக்ட் பண்ணிட்ட போல.” என்று சிறிது பொறாமையில் பேச,

இப்போது இனியன் பேசினான். “ஹலோ.. அவ ஒன்னும் என்னைக் கரெக்ட் பண்ணல. நான் தான் அவளைக் கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிருக்கேன். எதையும் தெரிஞ்சுக்காம பேசாதீங்க மேடம். உங்களுக்குக் கிடைக்கலன்னா அதுக்கு இப்படித்தான் பேசுவீங்களா.? அவங்க இப்போ, நீங்க நினைக்கற மாதிரி சாதாரண அஞ்சலி இல்ல. அவ சப்-கலெக்டர் அஞ்சலி தேவி. கொஞ்சம் பார்த்துப் பேசுங்க.” என்று சிறிது எரிச்சலுடனேயே பேசினான்.

“அப்பா, உன்னைக் கொஞ்சம் சீண்டியதும் என்னம்மா கோபம் வருது இனியன் சாருக்கு. ம்ம்... எனக்கும் தெரியும் அவ ஒரு சப்-கலெக்டர்ன்னு. ஆனாலும், எப்பவும் அவ எங்களோட ஃப்ரெண்ட் அஞ்சலி தான். நான் சும்மாதான் கேட்டேன். நீங்க ரொம்ப சீரியஸா பேசுனதைக் கேட்டதும், அவ மேல நீங்க எவ்ளோ லவ் வைச்சிருக்கீங்கன்னு எனக்குத் தெரியுது. அந்த விஷயத்துல அஞ்சலி ரொம்பக் கொடுத்து வைச்சவ.” என்றாள் அவளைப் பிடித்துக்கொண்டே.

“ப்ச்.. சும்மா இரு நர்மதா. சரி எங்கள விடு. உன்னோட லைஃப் எப்படிப் போய்கிட்டிருக்கு.? ஹஸ்பெண்ட் என்ன பண்றார்.?” என்று அவள் நெற்றி வகிட்டில் வைத்திருக்கும் குங்குமத்தைப் பார்த்தே அவள் திருமணம் ஆனவள் என்று தெரிந்து தான் கேட்டாள் அவளிடம்.

“ஆங்.. நானும் லவ் மேரேஜ் தான். நான் காலேஜ் படிக்கும் போது ஒருத்தர் என் அருமை தெரிஞ்சு பின்னாடியே சுத்தி லவ் பண்ணார். படிப்பு முடிஞ்சதும் வந்து வீட்டுல பேசுங்கன்னு சொன்னேன். அதுக்கப்பறம் வீட்டுல பேசி சம்மதம் வாங்கி எல்லாரோட ஆசிர்வாதத்தோட தான் மேரேஜ் ஆச்சு. ஜஸ்ட் சிக்ஸ் மன்த்ஸ் தான் ஆகுது. ரொம்ப ஹேப்பியா போய்ட்டிருக்கு லைஃப். நல்லவேளை இனியன் எனக்கு ஓகே சொல்லிருந்தா, இந்த மாதிரி ஒரு ஹேப்பியான லைஃப்ப நான் மிஸ் பண்ணிருப்பேன். அதுக்கு இனியன்க்கு தான் நான் தேங்க்ஸ் சொல்லணும்.” என்று சொன்னதும் இனியனுக்கு இன்னும் எரிச்சல் அதிகமானது.

“நல்லவேளை நான் உனக்கு ஓகே சொல்லிருந்தா எனக்கும் அஞ்சலி மாதிரி ஒரு தேவதைய லவ் பண்ணவோ, மேரேஜ் பண்ணவோ சான்ஸ் இருந்திருக்காது. இந்த விஷயத்துல நான் கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும்.” என்றான் இனியன் வேண்டுமென்றே.

அவன் அப்படிச் சொல்வான் என்று எதிர்பார்க்காத நர்மதாவின் முகமே மாறியது. இனியனுக்கு ஏனோ நர்மதாவின் பொறாமையான பார்வையும், பேச்சும் பிடிக்கவே இல்லை. இருந்தாலும் அஞ்சலிக்காக அமைதியாக இருந்தான்.

“சரி, எனக்கு கிளாஸ்க்கு டைம் ஆச்சு. சும்மா உங்களைப் பார்த்தேன். அதான், பேசிட்டுப் போலாம்னு வந்தேன். அப்பறம் பார்க்கலாம். பை..” என்று சொன்னபடி அப்படியே நழுவினாள் நர்மதா.

அவள் கிளம்பியதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். உடனே அஞ்சலி, “ஹூம்ம்.. இனி இத்தனை வருஷம் கழிச்சுக் கூட நீ அவள ஓட விட்டுட்ட.” என்றாள்.

“ஹூம்ம்.. அவளுக்கு எவ்ளோ திமிர் இருக்கணும்.? அவளுக்கு உன்னைப் பார்த்து பொறாமை அஞ்சலி. நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது அவளுக்குப் பிடிக்கல. உன்னையும், என்னையும் வெறுப்பேத்தத்தான் அவ அப்படி பேசிட்டுப் போறா. அவ சொன்னதுல பாதி பொய்தான். எனக்கு நல்லாத் தெரியும். இதனால தான் நான் அப்போவே அவளை வெறுத்தேன்.” என்றான் இனியன்.

“அவ அப்போதிருந்தே அப்படித்தான் இனி. என் மேல கொஞ்சம் பொறாமை குணம் ஜாஸ்தி. நான் கிளாஸ்ல ஃபர்ஸ்ட் மார்க் வாங்கும் போது, என்னைவிட அதிகமா வாங்கணும்னு அவ பண்ணக் கூத்து இருக்கே. அதெல்லாம் மறக்கவே முடியாது. இன்னும் அந்த பொறாமை குணம் அவள விட்டுப் போகவே இல்ல.” என்றாள்.

“ம்ம்ம்.. எல்லாமே எனக்குத் தெரியும். சரி, விடு இருக்கட்டும். வா, நாம போய் அப்பாவையும், உங்க அக்காவையும் பார்த்துட்டு வரலாம்.” என்று சொன்னபடி இருவரும் ஆசிரியர்கள் இருக்கும் அறைக்குச் சென்றனர்.

அங்கே அப்போதுதான் ஒரு வகுப்பு முடிந்து நடராஜன் அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் அங்கே அவருக்கு முன்னரே நின்றுகொண்டிருப்பதைப் பார்த்ததும்,

“அடடே, கலெக்டரும், போலீஸூம் அவங்க ஸ்கூல விசிட் பண்ணிருக்காங்க போலிருக்கே.? சரி வாங்க வாங்க. ஹெட் மாஸ்டரப் போய் பாத்துட்டு வந்துடலாம்.” என்று சிரித்துக்கொண்டே சொன்னபடி அவர்களை அழைத்துக்கொண்டு பள்ளி முதல்வரின் அறைக்குச் சென்றார் நடராஜன்.

இன்னும் அதே ஹெட் மாஸ்டரே அங்கு பணியில் இருக்க, அவர்களுக்கு ஒரே சந்தோஷம். அவருக்கும் தங்கள் பள்ளியில் பயின்ற மாணவர்கள் இப்படி ஒரு நல்ல நிலைக்கு வந்திருப்பதைக் கண்டு இன்னும் ஏக சந்தோஷம்.

“எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா உங்க ரெண்டு பேரையும் பார்க்கும் போது. இதுதான் இந்த ஸ்கூலுக்கும், எங்களுக்கும் பெருமை. ஒரு காலத்துல நீ பண்ண சேஷ்டையால உங்கப்பா வருத்தப்படாத நாளே இல்ல. ஆனா, இப்போ நீ இந்த நிலைக்கு வந்திருக்கறதப் பார்த்து சந்தோஷப்படற முதல் ஆளும் அவர்தான். நீங்க ரெண்டு பேரும் மேரேஜ் பண்ணிக்கிட்டதும் ரொம்ப சந்தோஷம். பொருத்தமான ஜோடி. சந்தோஷமா இருக்கணும்.” என்று அவர்களைப் பற்றி பெருமையாய்ப் பேசியதோடு, அவர்களை வாழ்த்தவும் செய்தார்.

இருவரும் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியே வரும் போது, சரியாக ஜானகி அங்கே வருவதைப் பார்த்தனர்.

அவள் அவர்களைப் பார்த்ததும் புன்னகைத்தபடியே அவர்களிடம் ஓடி வந்தாள். “அஞ்சலி எப்படி இருக்க.? எப்போ வந்த.?” என்று கேட்டவள், இனியனைப் பார்த்து, “நல்லா இருக்கீங்களா.?” என்றும் கேட்டாள்.

“நான் நல்லா இருக்கேன் கா. நான் சண்டே தான் வந்தேன்.” என்றாள் அவள்.

“நல்லா இருக்கேன். நீங்க சேஃபா இருக்கீங்க தானே.? ஒன்னும் பிரச்சினை இல்லையே.?” என்று அக்கறையுடன் விசாரித்தான் இனியன்.

“ம்ம்... சேஃபா தான் இருக்கேங்க. எங்க வீட்டுல தான் இருக்கேன். பக்கத்துல இருக்கறவங்க எல்லாரும் தெரிஞ்சவங்க தானே, அதனால ஒன்னும் பிரச்சினை இல்ல. நைட் பக்கத்து வீட்டு பாட்டியும், அவங்க பேத்தியும் வந்து படுத்துக்குவாங்க. எல்லா விஷயத்துலயும் எனக்கு உதவியா இருக்காங்க. நான் திருந்திட்டேன்னு தெரிஞ்சதும் எல்லாருமே என்கூட ரொம்ப அன்பா பழகறாங்க.” என்று சொன்னாள்.

“அக்கா, அத்தை வீட்டுக்குப் போயிட்டு தான் வரேன். உன்னைப் பத்தி சொன்னாங்க. நீ அங்கயாவது போலாமே. ஏன் நம்ம வீட்டுல தனியா இருக்க.?” என்றாள் அஞ்சலி.

“அதெல்லாம் வேண்டாம் அஞ்சலி. நான் நம்ம வீட்டுலயே இருக்கேன். அதுதான் எனக்கு பிடிச்சிருக்கு.” என்றாள் ஜானகி.

“ஹூம்ம்..” என்று பெருமூச்சு விட்டாள் அஞ்சலி.

“சரி, நீங்க எப்போ டியூட்டில ஜாயின் பண்ணனும்.?” என்றாள் ஜானகி.

“மண்டே தான் கா ரெண்டு பேரும் டியூட்டில ஜாயின் பண்ணனும்.” என்றாள் அஞ்சலி.

“சரி பார்த்து பத்திரமா இருங்க ரெண்டு பேரும். நான் தினமும் சாமிகிட்ட அதைத்தான் வேண்டிக்கிட்டு இருக்கேன். உங்க ரெண்டு பேருக்கும் எதுவும் ஆகக் கூடாதுன்னு.” என்று சிறிது உணர்ச்சிவசப்பட்டாள் ஜானகி.

“அய்யோ அக்கா, எங்களுக்கு எதுவும் ஆகாது. நீ பார்த்து பத்திரமா இரு. உன்னைப் பார்த்துட்டுப் போலாம்னு தான் வந்தேன். உடம்பைப் பார்த்துக்கோ. சரியா.?” என்று சொல்லிவிட்டு இருவரும் கிளம்பினர்.

செல்லும் போது, ஜானகியைத் திரும்பிப் பார்த்தாள். அவள் கண்களில் கண்ணீருடன் அவர்கள் செல்வதையே பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள். அவள் முற்றிலும் மாறிவிட்டாள் என்று அந்தக் கணத்தில் அஞ்சலியால் உணர முடிந்தது.

“என்னாச்சு அஞ்சலி.? ஏன் அக்காவ திரும்பித் திரும்பி பார்த்துட்டே வர.?” என்றான் இனியன்.

“அக்காக்குள்ள பயங்கர சேஞ்சஸ் இனி. அவள நான் இப்படிப் பார்த்ததே இல்ல. அவ ரொம்ப மோசமா நடந்துக்கிட்ட போது அவ கூட எல்லாருமே இருந்தோம். இப்போ அவ ரொம்ப மாறினதுக்கப்பறம் அவ கூட யாருமே இல்ல. அவ தனியா இருக்கா. அத நினைக்கும் போது ரொம்பக் கஷ்டமா இருக்கு. எத்தனை நாளைக்கு அவ இன்னும் இப்படித் தனியா இருக்க முடியும்.? அவளுக்குன்னு ஏதாவது ஒரு நல்ல லைஃப் அமைஞ்சுட்டா தான் எனக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.” என்றாள் அஞ்சலி.

“ம்ம்ம்... அதுவும் சரிதான். அவங்களுக்கு இன்னும் வயசு கூட ஆகல. அவங்களுக்கு இன்னொரு வாழ்க்கை அமைஞ்சா பரவாயில்ல தான்.” என்று இனியனும் பேசிக்கொண்டு வர, அவனுக்கு திடீரென்று ஒரு யோசனை உதித்தது.

“ஏய்.. அஞ்சலி இப்படிப் பண்ணா என்ன.?” என்றான்.

“எப்படிப் பண்ணா.?” என்று அவன் என்ன சொல்லப் போகிறான் என்ற எதிர்பார்ப்புடன் பார்த்தாள் அஞ்சலி.

“பேசாம, உங்க அக்கா ஜானகிக்கும், உங்க மாமா கதிரேசனுக்கும் கல்யாணம் பண்ணி வைச்சுட்டா என்ன.?” என்றான்.

அவன் அப்படிச் சொன்னதும், அஞ்சலிக்கு ஒரு பக்கம் அதிர்ச்சியாக இருந்தாலும், ஒரு பக்கம் அது நியாயமாகவும் தெரிந்தது.

“அது ஒத்துவருமான்னு எனக்குத் தெரியல இனி. ஏன்னா, அக்காக்கும், கதிர் மாமாக்கு சின்ன வயசுல இருந்தே ஆகாது. ரெண்டு பேரும் அப்படி சண்டை போட்டுக்குவாங்க. அதனாலயே ரெண்டு பேரும் பெரிய பசங்களா ஆனப்போ கூட சரியா பேசிக்கக் கூட மாட்டாங்க. அப்படி இருக்கும் போது இது கொஞ்சம் ஏத்துக்க முடியாத விஷயம் தான்.” என்றாள்.

“அப்படி இல்ல அஞ்சலி. அவங்க ரெண்டு பேரும் இப்போ இருக்க மனநிலைல அவங்களுக்குத் தேவை ஒரு துணை. அது அவங்களைப் பத்தி முழுசா தெரிஞ்சவங்களாகவும், அவங்க பிரச்சினைகளைப் புரிஞ்சுக்கிட்டவங்களாகவும் இருக்கணும். அவங்க சின்ன வயசுல எப்படி வேணும்னாலும் இருந்துட்டுப் போகட்டும். இப்போ கண்டிப்பா அப்படி இருக்க மாட்டாங்கன்னு எனக்குத் தோணுது.” என்றான் இனியன்.

“அதெப்படி அவ்ளோ கான்ஃபிடண்ட்டா உனக்குத் தோணுது இனி.?” என்றாள் அவள் ஆச்சர்யத்துடனே.

“தெரியல. திடீர்னு தோணுச்சு. இதுக்கான பிளான நாம எக்ஸிகியூட் பண்ணா கொஞ்சம் வொர்க் அவுட் ஆகும்னு தோணுது.” என்றான்.

“என்ன பிளான்.?” என்றாள்.

“இப்போ வீட்டுக்குப் போலாம் அஞ்சலி. அதெல்லாம் அப்பறமா சொல்றேன். சரியா.?” என்றான்.

அவளும் அவன் சொன்னதுக்கு "ம்ம்ம்" என்று தலையாட்டிவிட்டு வண்டியில் ஏறினாள். அவன் சொல்வதைப் போல் இருவரும் வாழ்க்கையில் இணைந்தால் அதை விட சந்தோஷம் வேறு என்ன இருக்கப் போகிறது என்று தோன்றியது அவளுக்கு. அது நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடனே சென்றாள் அஞ்சலி...

(தொடரும்...)
 
Last edited:
Top