கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆதிரையின் யாதுமாகி நின்றாய் 2 - அத்தியாயம் 23

Aathirai

Active member
அத்தியாயம் 23

இனியனும், அஞ்சலியும் வீடு வந்து சேரும் போது, மாலை 5 மணி ஆகிவிட்டது. அப்போது வீட்டில் யாருமே இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், உள்ளே அழுகும் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. அது மாலதியின் அறையிலிருந்துதான் என்பது இருவருக்கும் ஊர்ஜிதமானது.

இனியன் வெளியே நின்றுகொண்டிருக்க, அஞ்சலி அறையின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றாள். மாலதி தலையணையில் தன் முகத்தைப் புதைத்து அழுதுகொண்டிருந்தாள். கதவை யாரோ திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்தவள், அஞ்சலி அங்கே நின்றுகொண்டிருப்பதைப் பார்த்ததும் திரும்பவும் அப்படியே படுத்துக்கொண்டாள்.

அஞ்சலி எப்படிக் கேட்பது என்று தயங்கியவாறே அவளருகில் சென்று, “அக்கா.. என்னாச்சு.? ஏன் அழறீங்க.? என்கிட்ட சொல்லலாமே.?” என்றாள்.

“.....” அவள் பதிலேதும் பேசாமல் அழுதுகொண்டே தான் இருந்தாள்.

“அக்கா, இப்படி அழுதுட்டே இருந்தா மட்டும் எல்லாப் பிரச்சினைகளும் முடிஞ்சிடாது. எல்லாத்துக்கும் ஒரு தீர்வு உண்டு. ப்ளீஸ் கா. சொல்லுங்க.” என்று மாலதியின் கையைத் தொட, ஏதோ மின்சாரம் தாக்கியதைப் போலொரு உணர்வில் கையை உதறியபடி எழுந்தாள்.

எழுந்தவள், அஞ்சலியை முறைத்தபடி பார்த்தாள். அஞ்சலிக்கோ தான் என்ன செய்து விட்டோம்.? ஏன் இப்படிப் பார்க்கிறாள்.? என்று சங்கடமாக இருந்தது.

“இப்போ எதுக்கு நீ இங்க வந்த.? இன்னும் என்ன திட்டம் வைச்சிருக்க.? இந்த வீட்டுல இப்போ நீ நல்லவளாத் தெரியற. நான் தான் கெட்டவளா தெரியறேன். எல்லாம் என் நேரம். உன் நேரம் ரொம்ப நல்லா இருக்குமா. சந்தோஷமா இரு.” என்று பட்டென்று பேசினாள் மாலதி.

அஞ்சலிக்கு ஒன்றுமே புரியவில்லை. “அக்கா, நான் என்ன செஞ்சேன்.? என்ன பிரச்சினைன்னு சொல்லாம, என்னை குறை சொன்னா எனக்கு எப்படித் தெரியும்.?”

“ஆமா, உனக்கு ஒண்ணும் தெரியாமத்தான் இங்க எல்லாமே நடக்குது.” என்றாள் மாலதி இன்னும் கோபத்துடன்.

“இன்னும் நீங்க என்ன பிரச்சினைன்னே சொல்ல மாட்டீங்கறீங்க.” என்றாள் அஞ்சலி.

“எனக்கு என்ன பிரச்சினை வந்தா உனக்கென்ன.? நீ உன் புருஷனோட போய் சந்தோஷமா இருமா. என்கிட்ட எதுக்கு வந்து வீணா பேசிட்டிருக்க.?” என்று அவள் சொன்னதும், அவளுக்கு இதற்க்கு மேல் இவளிடம் பேசிப் பயனில்லை என்று தோன்றியது.

இவர்கள் பேசியதை வெளியே இருந்து கேட்டுக்கொண்டிருந்த இனியன், “அஞ்சலி, இங்க வா..” என்று சொல்ல, அவளும் அதை சாக்காய் வைத்து வெளியே வந்துவிட்டாள்.

“இனி, அவங்க எதுவுமே சொல்லமாட்டிங்கறாங்க. ஏதாவது பிரச்சினை என்னன்னு சொன்னா தானே தெரியும்.” என்றாள் அஞ்சலி.

“நீ கொஞ்சம் பேசாம இரு. அவங்க பேச்சே சரியில்ல. எப்பவும் இப்படித்தான் பேசறாங்க. நீ கேக்கறேன்னு ஒரு மரியாதைக்காகவாது ஏதாவது சொல்றாங்களா.? அதுவும் இல்ல. அப்படி இருக்கும் போது, நீ விட்டுடு. ரொம்ப அவங்ககிட்ட கெஞ்சாத. யார்கிட்ட எப்படி இருக்கணும்னு தெரிஞ்சுக்கோ.” என்றான் இனியன்.

“ம்ம்ம்ம்...” என்று தலையாட்டினாள்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதுதான் திலகா உள்ளே வந்தார். அவரைப் பார்த்த உடனே பேச்சை நிறுத்தி விட்டார்கள்.

உடனே இனியன் அவரிடம் சென்றான். “அம்மா, எங்க போன நீ இவ்ளோ நேரமா.? வந்ததிலிருந்து பார்க்கறோம், ரூம்ல அண்ணி அழுதுட்டு இருக்காங்க. என்னாச்சு.? அஞ்சலி அவங்ககிட்ட கேட்டா எரிஞ்சு விழறாங்க. என்னதான் நடந்துச்சு நீயாவது சொல்லேன்.?” என்றான் இனியன்.

ஒரு பெருமூச்சொன்றை விட்டபடி சொல்ல ஆரம்பித்தார் திலகம். இனியனும், அஞ்சலியும் வருவதற்க்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு...

“திலகா, திலகா... வீட்டுல இருக்கியா.?” என்று கேட்டபடி வெளியே வாசலில் இருந்து அழைத்துக்கொண்டிருந்தார் ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க பெண்மணி. அவருடனே மாற்றொரு நடுத்தர வயது பெண்மணி, மற்றும் கூடவே இரு ஆண்களும் வந்திருந்தனர்.

உள்ளேயிருந்து எட்டிப் பார்த்த பிறகு, திலகா ஒரு புன்னகையோடு, “வாங்க அத்தை. வீட்டுல தான் இருக்கேன்.” என்று கதவைத் திறந்தபடி தன் அப்பாவின் மூத்த தங்கையை வரவேற்றார். அவரோடு அவரது மகன், மருமகள் மற்றும் மருமகளது தம்பியும் உடன் வந்திருந்தனர்.

அவர்களை வரவேற்று வீட்டு ஷோஃபாவில் உட்கார வைத்தார். உள்ளேயிருந்த மாலதி எழுந்து வந்து அவர்களுக்கு தண்ணீர் எடுத்து வந்தாள். அதை திலகாவின் அத்தை ஏனோ வாங்கி கீழே வைத்ததோடு சரி, ஆனால் குடிக்கவில்லை. அதைப் பார்த்ததும் மாலதிக்கு ஏனோ எரிச்சலானது. ஆனாலும், வெளிக்காட்டிக்கொள்ளாமல் நின்றாள்.

அதற்க்குள் திலகா அவர்களுக்கு, பழங்கள், பிஸ்கட்டுகள் என்று தட்டு நிறைய சாப்பிடக் கொண்டு வந்து வைத்தார்.

“இதெல்லாம் எதுக்கு திலகா.? நான் எப்படி இருந்தாலும் சாப்பிடப் போறது இல்ல.” என்றார் அவரது அத்தை.

“ஏன் அத்தை, இவ்ளோ தூரம் வீட்டுக்கு வந்துட்டு எதுவுமே சாப்பிடாம இருந்தா எப்படி.? பழமாவது சாப்பிடுங்க.” என்றார் திலகா.

“அதெல்லாம் இருக்கட்டும் திலகா. எங்க யாரையும் காணோம்.? அப்பறம் புது ஜோடியையும் காணோம்.? வந்திருக்காங்கன்னு கேள்விப்பட்டேனே.” என்றார் அவர்.

“இன்னைக்கு அவங்க அத்தை வீட்டுக்கு விருந்துக்குப் போயிருக்காங்க. வர சாயங்காலம் ஆகும் அத்தை. அவரு எப்பவும் போல ஸ்கூலுக்குப் போயிட்டாரு. முகுந்தன் இந்த வாரம் தான் வருவான்.” என்றார் திலகா.

“ஹூம்ம்.. சரி சரி, என்ன முகுந்தனுக்கு இன்னுமா புள்ள பொறக்கல.? என்ன ஏதுன்னு பார்க்க வேண்டியதுதான.?” என்றார்.

அவர் அந்தப் பேச்சை எடுத்ததும், மாலதி அங்கிருக்கப் பிடிக்காமல் அவளது அறைக்குச் சென்று விட்டாள்.

“இல்ல அத்தை. அது வந்து, முகுந்தனோட வேலை அப்படி. அவனுக்கு சரியா வீட்டுக்கு வந்து போக முடியறது இல்ல. பொண்டாட்டிய அங்க கூட்டிட்டுப் போய் வைச்சுக்கவும் அவனுக்கு பயமா இருக்கு. அதுல கொஞ்சம் மனக்கசப்பு ரெண்டு பேருக்குள்ளயும். மத்தபடி ட்ரீட்மெண்ட் கூட போனாங்க. ஆனா, வாராவாரம் வர சொல்றாங்க. முகுந்தனுக்கு முடிய மாட்டிங்குது. என்ன பண்றது.? நானும் வேண்டாத தெய்வம் இல்ல. அந்த புத்து மாரியம்மன் எப்போதான் வழி விடப் போறான்னு தெரியல.” என்றாள் கவலையுடன்.

“சரி, சரி விடு. அதுக்கென்ன பண்றது.? யாருக்குத் தெரியும் உன் வீட்டுக்கு முதல்ல வந்தது மஹாலட்சுமியா இல்ல வேறயான்னு. ஏதோ, இப்போ வந்திருக்கற பொண்ணாவது சீக்கிரமே உண்டாகி உனக்கு ஒரு பேரனோ, பேத்தியோ பெத்துக் கொடுக்கட்டும். வேற என்ன சொல்ல முடியும்.?” என்று திலகாவின் அத்தை சொல்லிக்கொண்டிருக்க, அது உள்ளே இருந்த மாலதியின் காதிலும் விழ, நெஞ்சை ஈட்டியால் குத்தியது போலிருந்தது அவளுக்கு.

இது என்ன அநியாயம்.? குழந்தை உண்டாகவில்லை என்றால், அதற்க்கு நான் மட்டும் தான் காரணமா.? ஏன் அவர் காரணம் இல்லையா.? தான் அன்று செய்த சிறு தவறு தன்னை இன்று வரை நிம்மதியாய் இருக்க விடாமல் செய்து கொண்டிருப்பதை நினைத்து தலையில் அடித்துக்கொண்டாள் மாலதி.

“சரி அத்தை, போகட்டும் விடுங்க. என்ன விசேஷம்.? எல்லாரும் வந்திருக்கறதைப் பார்த்தா கண்டிப்பா நல்ல விஷயம்ன்னு தான் தோணுது.” என்றார் திலகா அவரிடம்.

“ஆமா. இவனோட பெரிய பொண்ணுக்கு திருமணம் முடிவாயிருக்கு. நீங்க எல்லாரும் குடும்பத்தோட வந்து முன்ன நின்னு இந்தக் கல்யாணத்த நடத்திக் கொடுக்கணும்.” என்று அனைவரும் சேர்ந்து பத்திரிக்கையை தட்டில் வைத்து நீட்டினர்.

அதை வாங்கிக்கொண்டார் திலகா. பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு அனைவரும் கிளம்பி விட்டனர். அவர்கள் செல்லும் போது கூட மாலதி வெளியே வரவில்லை. அதுவே திலகாவிற்க்கு பெரிய சங்கடமாய் இருந்தது.

அவர்கள் சென்ற பின், மாலதியின் அறைக்கு வந்த திலகா, “ஏன் மாலதி, அவங்க இருக்கும் போதே உள்ள வந்துட்ட.? அவங்க கிளம்பும் போது கூட வரல. அவங்க என்ன நினைப்பாங்க.?” என்றார்.

“அவங்க என்னைப் பத்தி என்ன நினைச்சிருப்பாங்கன்னு நான் நல்லாவே தெரிஞ்சுக்கிட்டேன் அத்த. அவங்க பேசுனது எல்லாம் இப்போ வரைக்கும் எனக்கு ஆறாத தழும்பு மாதிரி ஒட்டிக்கிட்டு இருக்கு.” என்றாள் எங்கேயோ பார்த்தவாறு.

“பெரியவங்கன்னா அப்படி, இப்படி பேசத்தான் செய்வாங்க. அதுக்கு என்ன செய்ய முடியும்.? இதுக்கு தான் காலா காலத்துல ஒரு குழந்தையப் பெத்துக்கணும்னு சொல்றது. நீங்க கேட்டா தானே, ஒரு வருஷம் போகட்டும்னு காத்திருந்தீங்க. அதுக்கப்பறம் அவன் அங்க போயிட்டான். நீ இங்க இருக்க. கூட்டிட்டுப் போய் வைச்சுக்கடான்னா அவன் பயப்படறான். இதுக்கு மேல வீட்டுப் பெரியவளா நான் என்ன பண்ண முடியும்.?” என்றார் திலகா.

“அப்போ, எல்லாத்துக்கும் காரணம் நான் தான்னு சொல்றீங்களா.?” என்றாள் ஆவேசமாக.

“அய்யோ, மாலதி. நான் அப்படி ஒன்னும் சொல்லல. எதையும் அந்த நேரத்துல பண்ணாம காலத்தக் கடத்துனா இப்படித்தான் ஆகும். உங்க ரெண்டு பேர் மேலயும் தப்பிருக்கு. நீங்க தான் இனிமேல் பேசி முடிவெடுக்கணும்.” என்றார் திலகா.

“ஆமா, அப்படியே பேசிட்டே இருக்க வேண்டியதுதான். எந்த முடிவும் கிடைச்ச மாதிரி இல்ல. உங்க பயந்தாங்கொள்ளி புள்ளைய வைச்சுட்டு வெற என்ன பண்ண முடியும்.?” என்றாள் மாலதி.

“மாலதி, அவன் ஒன்னும் பயந்தாங்கொள்ளி இல்ல. அவனுக்கு தெரிஞ்ச ஒரு விஷயம் எங்க நமக்கும் நடந்துருமோன்னு தான் பயப்படறான். அதுவும் உன்னை நினைச்சுத்தான். ஏன்னா, நீதான் வீட்டுல தனியா இருக்கப் போற. அதனால தான் அவன் வேண்டாம்னு சொன்னானே தவிர அவன் பிறந்ததுல இருந்தே பயந்தாங்கொள்ளி கிடையாது. அதை முதல்ல புரிஞ்சுக்கோ.” என்றார் திலகா.

“ஹூம்ம். நீங்க எப்பவும் உங்க புள்ளைக்கு சப்போர்ட் பண்ணித்தான பேசுவீங்க. ஆனா, பாருங்க எங்க பார்த்தாலும் என் தலை தான் உருளுது.” என்று சொன்னபடியே தலையில் அடித்துக்கொண்டாள்.

இதற்க்கு மேல் இவளிடம் பேசிப் பயனில்லை என்று தோட்டத்துக்கு சென்று விட்டார் திலகா. அது நடந்து முடிந்து அரை மணி நேரம் கழித்து தான் இவர்கள் இருவரும் வந்ததாய்ச் சொல்லி முடித்தார்.

“ஏன் அத்தை, அவங்க பேசாம அத்தான் இருக்கற ஊருலயே போய் இருக்கலாம் தானே.? ஏன் அங்க போகல.?” என்றாள் அஞ்சலி.

“ஹூம்ம். அது ஒரு பெரிய கதை. அதை நினைச்சு தான் அவன் இன்னமும் அவளை அங்க கூட்டிட்டுப் போகாம இருக்கான்.” என்றார் திலகா.

அவர் அப்படிச் சொன்னதும், அப்படி என்னதான் நடந்திருக்கும் என்று தெரியவில்லையே என்ற குழப்பத்தோடு இனியனைப் பார்த்து, “அப்படி என்ன ஆச்சு.?” என்று சைகையில் கேட்டாள்.

அவனோ, அதே சைகையில் “வெயிட் பண்ணு, சொல்றேன்.” என்று சொல்ல, புரியாமல் தலையாட்டியபடி நின்றாள் அஞ்சலி.


(தொடரும்...)
 
Last edited:
Top