Aathirai
Active member
அத்தியாயம் 25
அன்று இரவு தோட்டத்தில் அனைவரும் அமர்ந்து சாப்பிட ஆயத்தமாயினர். அஞ்சலி சமாதானமாய் போய்ப் பேசியும் மாலதி அங்கே வரவில்லை. அவளுக்கு அது ஒருபுறம் வருத்தமாய் தான் இருந்தது.
அவள் அங்கே வரும் போது இனியன் போனில் பேசிக்கொண்டிருந்தான். இவள் வருவதைப் பார்த்ததும், போனை சொல்லிக்கொண்டு வைத்தவன், என்னவாயிற்று.? என்பதைப் போல் சைகை காண்பித்தான்.
“ம்ஹூம்ம்..” என்று தலையாட்டியவளிடம் வந்தான்.
“ஏன், வரமாட்டேன்னு சொல்லிட்டாங்களா.?” என்றான்.
“ம்ம்ம்...” என்று தலையாட்டினாள்.
“எனக்கு எங்க அண்ணியைப் பத்தி தெரியும் அஞ்சலி. அவங்க அப்படித்தான். மாத்தறது ரொம்பக் கஷ்டம். அவங்களா மாறினாத்தான் உண்டு.” என்றான் சலித்துக்கொண்டு.
“சரி, அத்தான்கிட்ட பேசினியா.?” என்றாள்.
“ம்ம்ம்... இப்போதான் பேசிட்டு வைச்சேன். ஃபர்ஸ்ட் நாளைக்கு நைட்தான் வரேன்னு சொன்னான். நான் தான் இப்போவே கிளம்பு. கண்டிப்பா வரணும்னு சொல்லிருக்கேன். பார்க்கலாம். வந்தாதான் நிஜம்.” என்றான்.
“நீ சொல்றதைப் பார்க்கும் போது அத்தான் வருவாருன்னு தான் தோணுது. நம்பிக்கையோடு இருப்போம்.” என்று அவளும் சொல்ல, அப்படியே பேசிக்கொண்டே சென்று அங்கு தோட்டத்தில் அமர்ந்தனர் இருவரும்.
“ம்ம்.. வாங்கப்பா எங்க, உங்க அண்ணியக் காணோம்.? வரலையா.?” என்றார் நடராஜன்.
“நான் கூப்பிட்டேன் மாமா. ஆனா, அக்கா வரலன்னு சொல்லிட்டாங்க.” என்றாள் வருத்தம் தோய்ந்த முகத்துடன்.
“எனக்கு முதல்லயே தெரியும். அவ வரமாட்டான்னு. அஞ்சலி தான் நான் கூட்டிட்டு வரேன்னு சொன்னா. சரின்னு விட்டுட்டேன். அவளத் திருத்த முடியாது.” என்றார் திலகா.
“அதுக்காக அப்படியே விட்டுட முடியாது இல்ல அத்த.? அவங்கள கொஞ்சம் கொஞ்சமா பேசித்தான் சரி பண்ணனும். அவங்க மனசுல இருக்கற கஷ்டம் போயிடுச்சுன்னா அவங்க கண்டிப்பா மாறிடுவாங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு.” என்றாள் அஞ்சலி.
“இப்போ புதுசா இந்தக் குடும்பத்துக்கு வந்த பொண்ணு. அவள நினைச்சு நீ அக்கறைப்படற. ஆனா, அவ கொஞ்சம் பிடி குடுத்தாத்தானே பரவால்ல. அவ அப்படி நடந்துக்க மாட்டா. அப்படி இருக்கும் போது, எதை வைச்சு நம்பிக்கை இருக்குன்னு சொல்ற மா நீ.?” என்றார் நடராஜன்.
“அத்தான் கூட இருந்தாலே அவங்க கொஞ்சம் நல்லா இருப்பாங்க மாமா. அதுதான் அவங்க பிரச்சினையே. அத்தானும் இப்படி அக்காவ விட்டுட்டு இருக்கறது ரொம்பத் தப்பு.” என்றாள்.
“அவன் என்ன, வேணும்னா அப்படி இருக்கான்.? அவனோட பிரச்சினை அவனுக்கு. நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாச்சு. ஆனா, அவளக் கூட்டிட்டுப் போறதுல மட்டும் பிடிவாதமா இருக்கான்.” என்றார் திலகா.
“இல்ல மா. இத நாம சரிபண்ணித்தான் ஆகணும். நான் அண்ணாகிட்ட கொஞ்சம் முன்னாடி தான் பேசினேன். அவன இப்போவே கிளம்பி வரச் சொல்லிருக்கேன்.” என்றான் இனியன்.
“எதுக்குடா. அவன் நாளைக்கு நைட் தான வரேன்னு சொன்னான்.? ஏன் என்னாச்சு திடீர்னு அவன வரச் சொல்ற.?” என்றார் திலகா.
“அங்க தான் விஷயமே. நாளைக்கு நாம எல்லாரும் ஏலகிரி ஒன் டே ட்ரிப் போறோம். நாமள்லாம் இது மாதிரி ஃபேமிலியா வெளிய போய் எத்தனை வருஷம் ஆகுது.? அட்லீஸ்ட் இப்போவாவது அதுக்கு ஒரு சான்ஸ் வந்திருக்கு. அதுவும், இந்தப் பிரச்சினையத் தீர்க்கறதுக்கு ஒரு வழி கிடைச்சிருக்கு. அதுக்குத்தான் அண்ணாவ லீவ் போட்டுட்டு வரச் சொல்லிருக்கேன். எப்பவும் வேலையத் தானே பார்த்துட்டு இருக்கான். ஒரு நாள் லீவ் போட்டா ஒன்னும் குறைஞ்சிட மாட்டான். வரட்டும். இன்னும் மூணு மணி நேரத்தில இங்க இருப்பான்.” என்றான் இனியன்.
“எதுக்கு டா தேவையில்லாம.? அவன் வந்து மட்டும் எல்லாம் மாறிடப் போகுதா.?” என்றார் நடராஜன்.
“மாறும்னு நம்புவோம் பா. இத்தனை நாள் நாம எந்த ஒரு ஸ்டெப்பும் எடுக்கல. இனியும் அப்படியே இருந்தா, அண்ணனோட வாழ்க்கை இப்படியே போயிரும். நாளைக்கு எல்லாரும் பேசுவோம். வேற இடத்துக்குப் போனா, அவங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் மாறுதலா இருக்கும். அவங்களே எல்லாத்தையும் உணருவாங்க.” என்றான் இனியன்.
“ஹூம்ம்.. நீங்களும் ஏதோ சொல்றீங்க. நல்லது நடந்தா சரிதான்.” என்றபடி திலகாவும், நடராஜனும் சாப்பிட ஆரம்பித்தார்கள்.
அப்போதுதான் நடராஜன் சொன்னார். “உங்க அப்பா இருக்கானே, ஒருமுறை இங்க வந்திருந்தப்போ இதே மாதிரி எல்லாரும் உட்கார்ந்து சாப்பிட்டோம். அப்போ, இனியன் மட்டும் தூங்கிட்டான். அப்போதான் அவனைப் பத்தி சொல்லி உங்க அப்பன்கிட்ட வருத்தப்பட்டுட்டு இருந்தேன்.” என்றதும்,
“ம்ம்... எனக்குத் தெரியும் மாமா. அப்பா அன்னைக்கு நைட்டே வீட்டுக்கு வந்து சொன்னாரு. அத்தையோட கைமணம் நல்லா இருந்துச்சுன்னு சொன்னாரு. அப்போ கூட எங்க எல்லாரையும் ஒரு நாள் அத்தை கூட்டிட்டு வரச் சொன்னாங்கன்னும் சொன்னார். இப்போ நான் இங்க இருக்கேன். ஆனா, அவங்க தான் என் கண்ணுக்கு எட்டாத தூரத்துக்குப் போயிட்டாங்க.” என்று தட்டில் இருந்த சோற்றைப் பிசைந்து கொண்டே சொன்னபடி கண்ணீர் விட்டாள் அஞ்சலி.
அவள் அழுவதைப் பார்த்ததும் அவர்களுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. இனியனுக்கோ அவள் அழுவதைப் பார்க்க முடியவில்லை. அவனின் பெற்றோர் முன்னிலையில் அவளை அணைத்துக்கொள்ளவும் முடியவில்லை.
“சரி, விடு அஞ்சலி அழாத.” என்று அவளை சமாதானப்படுத்த முயன்றான்.
அதுவரை அவளைப் பற்றி தன் மனதில் இருந்த பல எண்ணங்களைத் தூக்கி எறிந்தவராக திலகா, “எதுக்கு அழற.? அழாத. நாங்க எல்லாரும் இல்லையா.? அவங்க எங்கயும் போகல. அவங்க எங்களோட ரூபத்துல தான் இருக்காங்க. நீ அழக்கூடாது. சரியா. நான் கோபத்துல ஒண்ணு, ரெண்டு பேசுவேன். நான் உனக்கு உன்னோட அம்மா மாதிரி இருக்க முடியுமான்னு தெரியல. ஆனா, உனக்கு நல்ல மாமியாரா இருப்பேன். நீ தைரியமான பொண்ணுன்னு இனியன் அடிக்கடி சொல்லுவான். வாழ்க்கைல எத்தனையோ கஷ்டங்களைப் பார்த்துட்ட, இனிமேல் உனக்கு எந்தக் கஷ்டமும் வராம இனியன் மட்டுமில்ல, நாங்களும் பார்த்துப்போம். உனக்கு உறுதுணையா இருப்போம்.” என்று அவளருகில் வந்து பேசியவர் அவளது கன்னங்களில் வழிந்த நீரைத் துடைத்து விட்டார்.
அஞ்சலி உணர்ச்சிவசத்தில் திலகாவைப் பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள். அதைப் பார்த்து இனியனுக்கும், நடராஜனுக்கும் திலகாவின் பேச்சை நினைத்து ஆச்சர்யமாய் இருந்தாலும், ஒரு பக்கம் சந்தோஷமாய் இருந்தது.
இதை அஞ்சலியே எதிர்பார்க்கவில்லை. மிகவும் சந்தோஷமாக இருந்தது அவளுக்கு. திலகா தன்னிடம் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்த்து சிரித்தபடி அறையில் அமர்ந்திருந்தாள்.
அப்போதுதான் யாரிடமோ செல்போனில் பேசிக்கொண்டு உள்ளே வந்த இனியன், அஞ்சலி இப்படி தன்னைத்தானே சிரித்துக்கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்த்து, அவளருகே வந்து நின்றான்.
அவள் அதைக்கூட கவனிக்காமல் அந்த நினைவிலேயே இருந்தாள். அவள் தான் நிற்பதைக் கூட கவனிக்காமல் அப்படி என்ன யோசித்துக்கொண்டிருப்பாள் என்று நினைத்தவன், அவள் தொடையை லேசாக பிடித்துக் கிள்ளினான்.
“ஸ்ஸ்ஸ்ஸ்... ஆஆஆஆ....” என்று அலறியவள், அவன் தன்னைக் கிள்ளியதை உணர்ந்து, “எதுக்கு இனி தொடையைப் பிடிச்சுக் கிள்ளின.? வலிக்குது.” என்றாள் சிணுங்கியபடி.
“அப்பறம்.. ஐயா வந்து நிக்கறது கூடத் தெரியாம அப்படி எந்த ட்ரீம நினைச்சு இப்படி சிரிச்சிட்டு இருக்க.?” என்றான்.
“ட்ரீமெல்லாம் ஒன்னும் இல்ல.? கொஞ்சம் முன்னாடி நான் அழுதப்ப அத்தை என்னை சமாதானப்படுத்துனாங்க இல்ல, அதை நினைச்சு ரொம்ப எமோஷனல் ஆயிட்டேன். நான் இதை எதிர்பார்க்கவே இல்ல இனி. அதே மாதிரி ரொம்ப ஹேப்பியாவும் இருக்கு.” என்றாள் அந்த சந்தோஷத்தை நினைத்தவாறே.
“ஓ.. ஓ... அதுதான் விஷயமா.? ம்ம்.. சரிதான் அஞ்சலி. நானும் கவனிச்சேன். எனக்கும் அம்மா உன்கிட்ட ரொம்ப எமோஷனலா பேசினத நினைச்சு ஹேப்பி தான். எப்படியோ நீ நினைச்ச மாதிரி உங்க அக்காவும் மாறிட்டாங்க, இப்போ எங்க அம்மாவும் மாறிட்டு வராங்க. இனி மாலதி அண்ணியத்தான் மாத்தணும்.” என்றான்.
“ம்ம்ம்.. கண்டிப்பா நீ வேணும்னா பாரு, அந்த அக்காவும் மாறிடுவாங்க.” என்றாள் நம்பிக்கை துளிர்த்த கண்களோடு.
“சரி.. சரி.. அதெல்லாம் இருக்கட்டும்..” என்று அவளுக்கு மிக நெருக்கமாய் அருகில் வந்து அமர்ந்தபடி பேசினான்.
“இந்த ஹேப்பி மூட்ல என்னையும் கொஞ்சம் கவனிக்கக் கூடாதா.?” என்றபடி அவளின் தாடையைப் பிடித்துக் கெஞ்ச,
அதைக் கண்டு பின்னே சென்றவள், “ம்ம்.. தெரியும், எங்கடா சார் இன்னும் எதுவும் சொல்ல ஆரம்பிக்கலையேன்னு நினைச்சேன். உனக்கு வேற வேலையே இல்லையா.? எப்போ பாரு.” என்று செல்லமாய் சிணுங்க.,
“ஆமா, என்ன பண்றது.? டியூட்டில இருக்கும் போதாவது அந்தக் கேஸ், இந்தக் கேஸ்ன்னு கொஞ்சம் பிஸில டயர்டாகி தூங்கிடுவேன். ஆனா, இப்போ லீவ்ல இருக்கறதால பொண்டாட்டி கூட சந்தோஷமா இருக்கணும்னு தோணுது. அது தப்பா.?” என்று கேட்டான் தன் நியாயமான கேள்வியை.
“ம்ம்ம்.. இந்தக் கொஸ்டீன்க்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்ல. நீ ஐபிஎஸ் ஆகிருக்க வேண்டியவனில்ல. பிஎல் படிச்சிட்டு வக்கீல் ஆகிருக்க வேண்டியவன். எப்படியெல்லாம் கேள்வி கேட்கற பாரு.” என்றாள் அஞ்சலி.
“சரி, வீண் பேச்செல்லாம் பேசாத. உன்னால முடியுமா.? முடியாதா.?” என்றான் இனியன்.
“ம்ம்ம்ம்....” என்று யோசித்தவள், “முடியும்.. ஆனா, முடியாது..” என்றாள் கண்ணடித்துக்கொண்டே.
அவளின் குறும்பை அறிந்தவன், “ஏய்.. உன்ன..” என்று அவளைப் பிடித்து அப்படியே மெத்தையில் விழுந்தான். இருவரின் சந்தோஷத்தில் உள்ளமும், உடலும் இணைந்தன.
மணி 12-ஐத் தாண்டியிருந்தது. தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்த மாலதி, காலிங்க் பெல் சத்தம் கேட்டு வந்து கதவைத் திறந்தாள். திறந்தவளுக்கு முகுந்தன் வந்து நிற்பதைப் பார்த்ததும் ஆச்சர்யமாகவும், அதிசயமாகவும் இருந்தது.
“என்ன திடீர்னு வந்து நிக்கறீங்க. நாளைக்குத் தான வருவேன்னு சொன்னீங்க.?” என்றாள்.
“ஆமா, நாளைக்குத்தான் வர வேண்டியது. இனியன் தான் போன் பண்ணி உடனே வான்னு சொன்னான். நாளைக்கு ஒரு நாள் லீவ் போட்டிருக்கேன். இதுவரைக்கும் எமர்ஜென்சி தவிர லீவ் எடுத்ததே இல்ல. அவன் ஏதோ ரொம்ப முக்கியமான விஷயம்னு சொன்னான். சரின்னு சொல்லிட்டு கிளம்பி வரேன்.” என்றான்.
அப்பவும் தம்பி சொல்லிட்டான்னு தான் வந்திருக்கீங்க, என்று மனதினுள் அவனிடம் கேள்வியைக் கேட்டுக்கொண்டாள். அவ்வளவுதான் அவளிடம் பேசியிருப்பான். அவர்களது அறைக்குச் சென்றவன், முகம், கை, கால் கழுவிவிட்டு வந்து அலுப்பில் அப்படியே படுத்து விட்டான். அவளிடம் வேறு எதுவும் பேசக்கூட அவனுக்குத் தோன்றவில்லை.
மாலதிக்கு இன்னும் மனது இறுகிவிட்டது. என்ன மனுஷனோ.? எப்படித்தான் இப்படி இருக்க முடிகிறது.? தனக்கு உரிமையானவளை ஒரு பேச்சுக்கென்று கூட அணைத்துக்கொள்ளவோ, தொடவோ தோன்றவில்லை என்றால் என்ன சொல்வது.?
தனக்கு வாய்த்தவன் அவ்வளவுதான் என்ற நினைப்பில், கண்கள் முழுவதும் குளமாய்த் தேங்கியிருக்க, வரும் அழுகையையும் அடக்கிக்கொண்டே படுத்தாள் மாலதி.
(தொடரும்...)
Last edited: