Aathirai
Active member
அத்தியாயம் 29
அதிகாலைப் பொழுது இதமாய் உதயமானது அந்த ஞாயிறில். சூரியன் தன் கதிர்களை வேகமாய் ஒளிக்க, அந்தக் கற்றைகள் தன் மேல் படுவதைக் கண்டு முகம் சுளித்து கண் விழித்தான் முகுந்தன்.
அருகே மாலதி இல்லை. இந்த இரண்டரை வருடத்தில் அவள் அருகாமையை என்றும் உணர்ந்ததே இல்லை முகுந்தன். ஆனால், இன்றோ அவள் இல்லாதது ஏனோ ஒரு மாதிரி தான் இருந்தது அவனுக்கு.
வேகமாய் எழுந்து குளித்து முடித்து, அறையை விட்டு வெளியே வந்தான். அப்போதுதான் மாலதியும் சரியாக வந்தாள்.
“ம்ம்.. பரவாலையே இன்னைக்கு சீக்கிரமே எழுந்திட்டீங்க.? இன்னும் தூங்குவீங்களோன்னு நினைச்சேன்.” என்றாள் தலையில் கட்டியிருந்த துண்டால் தன் கூந்தலை துவட்டியவாறே.
“இல்ல, சூரிய வெளிச்சம் கண் கூசுச்சு. முழிப்பு வந்திடுச்சு. நீயும் பக்கத்துல இல்ல. அதான், குளிச்சுட்டு வந்தேன்.” என்றான்.
மாலதியின் முகத்தில் ஒரு வித சந்தோஷம். காலையில் எழுந்ததுமே தன்னைத் தேடியிருக்கிறான் என்று சொன்னதும், இது நாள் வரை மனதில் இருந்த அனைத்து கவலைகளுமே ஒட்டுமொத்தமாய் மறைந்த உணர்வு.
“நிஜமாலுமேவா சொல்றீங்க.? நீங்க என்னைத் தேடுனீங்களா.?” என்றாள் புன்னகை சிந்திய முகத்துடன்.
என்றும் இல்லாத மாலதியைப் பார்த்த முகுந்தனுக்கு ஏனோ, அன்று அவளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது. புதிதாய் இப்பொழுதுதான் திருமணம் ஆனது போலொரு உணர்வு.
“ம்ம்..” என்று புன்னகைத்தவாறே தலையசைத்தான்.
“டேய்.. முகுந்தா, எழுந்திட்டியா.? காஃபி தரட்டுமா.?” என்ற திலகாவின் குரல் கேட்டு இருவரும் தங்கள் நிலைக்கு வந்தனர்.
“காஃபி வேண்டாம் மா. டிஃபன் ரெடியா.?” என்றான்.
“அதெல்லாம் ரெடி தான். அதிசயமா இருக்கு.? அதுக்குள்ள சாப்பிடப் போறியா.?” என்றார் திலகா.
“ஆமா மா. சாப்டுட்டு நானும், மாலதியும் கொஞ்சம் வெளிய போயிட்டு வந்திடறோம்.” என்று முகுந்தன் சொன்னதும் நம்ப முடியாமல் பார்த்தார்கள் அனைவரும்.
“நிஜமாலுமே அண்ணியக் கூட்டிட்டு வெளிய போறியா ணா.?” என்று கேட்டவாறே மேலிருந்து வந்தான் இனியன் கூடவே அஞ்சலியும் வந்தாள்.
“ஏண்டா நான் உன் அண்ணிய வெளிய கூட்டிட்டுப் போகக் கூடாதா.? அப்படிக் கேட்கற.?” என்றான் முகுந்தன்.
“அதுக்கென்னப்பா, நீ தாராளமா கூட்டிட்டுப் போ. நீ அப்படியெல்லாம் கூட்டிட்டுப் போக மாட்டியான்னு தான் நாங்க இவ்ளோ நாளா ஏங்கிட்டு இருந்தோம். அது நடந்தா எங்க எல்லாருக்கும் சந்தோஷம் தான்.” என்றார் நடராஜன்.
“டேய் அண்ணா, சும்மா தான் கேட்டேன். ரெண்டு பேரும் நல்லா போயிட்டு என்ஜாய் பண்ணிட்டு வாங்க.” என்றான் இனியன்.
“ஏன் இனி, அத்தான் இதுவரைக்கும் அக்காவ வெளிய கூட்டிட்டுப் போனதே இல்லையா.?” என்று காதில் கிசுகிசுத்தாள் அஞ்சலி.
“அட நீ வேற, எப்போ வந்தாலும் பண்ணண்டு மணி வரைக்கும் தூங்குவான். அப்பறம் நல்லா கறியும், சோறும் சாப்டுட்டு கொஞ்ச நேரம் வெளிய கிளம்பிடுவான். திரும்பவும் வந்து டீ குடிச்சிட்டு, பேகை எடுத்துட்டு ஊருக்குக் கிளம்பிடுவான். இது தான் யூசுவலா நடந்துட்டிருந்துச்சு. இன்னைக்குத்தான் அதிசயம் நடக்குது.” என்றான்.
“என்னடா என்னைப் பத்தி கலெக்டர் கிட்ட கம்ப்ளைண்ட் பண்றியா.?” என்றான் முகுந்தன், அவர்களது முணகிய பேச்சைக் கேட்டு.
“ம்ம்.. ஆமா, இவ்ளோ நாளும் நீ என்ன பண்ணன்னு சொல்லிட்டிருந்தேன்.” என்றான் அவன்.
“அத்தான். கம்ப்ளைண்ட்டெல்லாம் என்கிட்ட கொடுக்க முடியாது. இதோ உங்க போலீஸ் தம்பிகிட்டதான் கொடுக்கணும்.” என்றாள் அஞ்சலி.
“ம்ம்.. கலெக்டரும், போலீஸூம் சேர்ந்து பிளான் பண்ணி எல்லாம் பண்ணியிருக்கீங்க.” என்றான் முகுந்தன்.
“டேய்.. பிளான் பண்ணாலும், அதுல நல்ல விஷயம் தான டா நடந்திருக்கு. அத நினைச்சு நாம சந்தோஷப்படணும்.” என்றார் திலகா.
“ஆமாமாம். ஒரு ஐ.ஏ.எஸ்ஸூம், ஐ.பி.எஸ்ஸூம் வீட்டுல இருக்கறது சமூகத்துக்கு தேவையோ இல்லையோ, நம்ம குடும்பத்துக்கு தேவையா இருந்திருக்கு.” என்றார் நடராஜன்.
“ஆமாம் மாமா, கண்டிப்பா. இன்னைக்கு இவங்களால தான் நம்ம குடும்பம் இவ்ளோ சந்தோஷமா இருக்கு. நானும், இன்னைக்குத்தான் நிம்மதியா இருக்கேன். நான் இவங்களுக்கு நிறைய கடமைப்பட்டிருக்கேன்.” என்றாள் மாலதி உணர்ச்சிவசத்தில்.
அஞ்சலியும், இனியனும் மாலதிதான் நிஜமாலுமே பேசுகிறாளா.? என்று ஆச்சர்யமாய் அவளைப் பார்த்தனர்.
அவர்களுக்கு அருகே வந்தவள், “என்னை ரெண்டு பேரும் மன்னிச்சிடுங்க. நான் நிறைய தப்பு பண்ணியிருக்கேன். உங்க ரெண்டு பேருக்கும் நிறைய கெடுதல் நினைச்சிருக்கேன். நீங்க ரெண்டு பேரும் சேரக்கூடாதுன்னு கூட நினைச்சேன். ஆனா, இந்த நிமிஷம் யோசிச்சா அஞ்சலியோட இடத்துல வேற யாரும் இருந்திருந்தா, இதெல்லாம் செஞ்சிருப்பாங்களான்னு சந்தேகம் தான். என்னை மன்னிச்சிடு அஞ்சலி.” என்றாள் இருவரிடமும் குரல் தழுதழுக்க.
“அய்யோ, அக்கா. எதுக்கு மன்னிப்பெல்லாம் கேட்டுட்டு.? நாங்க உங்களை விட சின்னவங்க. நீங்களும், அத்தானும் எப்பவும் சந்தோஷமா இருக்கணும். அதுதான் நாங்க எதிர்பார்த்தது. ஒரே குடும்பமா இருந்துட்டு உங்களுக்கு ஒண்ணுன்னா எங்களால எப்படி பார்த்துட்டு சும்மா இருக்க முடியும். இப்போ எல்லாமே சரியாயிடுச்சு. அதுவே எங்களுக்குப் போதும். இனிமேல் நாங்க நிம்மதியா போய் எங்க வேலையை செய்வோம்.” என்றாள் அஞ்சலி.
“ஆமா, அண்ணி. நீங்களும், அண்ணாவும் சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சோம். அது நல்லபடியா நடக்கப் போகுது. அதுவே, சந்தோஷம்.”
“ரொம்ப தேங்க்ஸ் டா. உனக்கும் தேங்க்ஸ் மா.” என்றான் முகுந்தன்.
“டேய் அண்ணா, உன்னோட தேங்க்ஸ நீ உன்னோடயே வைச்சுக்கோ. அப்பறம், ரொம்ப முக்கியமான விஷயம். சீக்கிரமே குழந்தை பெத்துக்கோங்க. இல்ல, நாங்க முந்திக்குவோம்.” என்று இனியன் சொன்னதும், அஞ்சலி சிரிப்புடன் அவனை செல்லமாய் அடித்தாள்.
“அடப்பாவி. இதெல்லாம் சொல்வியா.? படவா. உன்ன..” என்றபடி அவனை அடிக்க துரத்தினான் முகுந்தன். அவனும் வேண்டுமென்றே ஓடினான்.
“டேய்.. அண்ணா, நீ என்னைப் புடிக்க முடியாது. நான் போலீஸ் ட்ரெயினிங்க் எடுத்திருக்கேன். நீ என்னைப் பிடிக்க ரொம்ப கஷ்டப்படுவ.” என்றவாறே வளைந்து, நெளிந்து ஓடிக்கொண்டிருக்க, அதைப் பார்த்து இவர்கள் சிரித்துக் கொண்டிருந்தனர்.
************
சில்லென்ற சாரல் மெல்லியதாய் வந்து தாக்க, அந்தப் பயணம் ஏனோ அஞ்சலிக்கு மிகவும் பிடித்திருந்தது. செல்லும் வழி எங்கும் மலைப் பிரதேசங்கள், கொஞ்சும் காற்று அவளை அந்த இடைப்பட்ட காலை நேரத்தில் மயக்கியது என்றுதான் சொல்ல வேண்டும்.
காலை உணவை முடித்துக்கொண்டு, உடனே வேலூருக்குக் கிளம்பி விட்டனர் அஞ்சலியும், இனியனும். நாளையிலிருந்து அவர்கள் பொறுப்பில் சேர வேண்டுமே!! பிரியா விடை கொடுத்து குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினர் இருவரும்.
மிகவும் மெதுவாகவே வண்டியை செலுத்திக் கொண்டிருந்த இனியன் மேல் கிட்டத்தட்ட சாய்ந்த வண்ணமே வந்தாள் அஞ்சலி. அவனும் அவ்வப்போது அவளது கையை தனது இடக்கையுடன் அணைத்துக் கொண்டும், சில சமயம் அவளது விரல்களை தேய்த்துக்கொண்டும், வலக்கையால் வண்டியை ஓட்டியபடியும் வந்தான்.
“ரொம்ப ஹேப்பியா அஞ்சலி.? நீ நினைச்ச மாதிரி மாலதி அண்ணியும் இப்போ கொஞ்சம் மாறி உன்னை புரிஞ்சுக்கிட்டாங்க.” என்றதும்,
அவனது தோளில் சாய்ந்திருந்தவள் எழுந்து, “ம்ம்.. ஆமா இனி. ரொம்ப ரொம்ப ஹேப்பி. இந்த ஹாலிடேஸ என்னால மறக்கவே முடியாது. எவ்ளோ சேஞ்சஸ் எல்லார்கிட்டயும்.? எல்லாரும் இப்போ ரொம்ப நெருக்கமான மாதிரி ஒரு ஃபீல். அது ரொம்ப நல்லா இருக்கு.” என்றாள் முகம் முழுக்க சந்தோஷத்துடன்.
“ம்ம்.. என்னோட அஞ்சலி எப்பவும் இப்படி ஹேப்பியா இருக்கணும். நீ இந்த மாதிரி இருக்கறதப் பார்க்கறப்போ நானும் ரொம்ப ஹேப்பி.” என்றான் அவள் கையைக் கோர்த்து முத்தமிட்டவாறே.
பதிலுக்கு அவளும் முத்தமிட்டாள். அந்த நொடி அது அவர்களுடைய காதலின் அடையாளமாய் இருந்தது. அப்படியே பேசிக்கொண்டு வந்து விட்டனர் வேலூருக்கு.
“இனி, இப்போ குடி போயிருக்கற வீட்டுல போனதுமே ரொம்ப வேலை இருக்கும் இல்ல.? எல்லா திங்க்ஸையும் அரேஞ்ச் பண்ணனும். அதுக்கே டயர்ட் ஆகிடுமே.? இதுல நாளைக்கே நாம ரெண்டு பேரும் டியூட்டில ஜாயின் பண்ணனும்.” என்றாள்.
“இல்ல அஞ்சலி. நான் நேத்தே எல்லாத்துக்குமே டிபார்ட்மெண்ட்ல இருக்கறவங்ககிட்ட போன் பண்ணி சொல்லி, கிளீன் பண்ண சொல்லிட்டேன். மோர் ஓவர் நைண்ட்டி பர்சண்ட்டேஜ் வேலை முடிஞ்சிருக்கும். நம்மளோட டிரஸ்ஸ்ஸ் இருக்கற பாக்ஸைத்தான் நாம செட் பண்ண வேண்டியிருக்கும். அதுவும் இன்னைக்கு நைட்க்குள்ள முடிச்சிடலாம். டோண்ட் வொர்ரி டியர்.” என்றான்.
“அப்பா.. ரொம்ப ஹேப்பி. நல்ல வேளை பண்ண இனி. இல்லன்னா நாளைக்கு ஃப்ரெஷ்ஷா போய் வொர்க் ஸ்டார்ட் பண்ண முடியாம போயிருக்கும். என் தங்கம்..” என்று அவனது கன்னத்தை கையால் தொட்டு முத்தமிட்டாள்.
அதை ரசித்தவாறே, இனியன் அந்த தனி வீட்டின் கேட்டிற்க்குள் நுழைந்தான். செல்லும் போதே, அங்கே வாட்ச்மேன் அவர்களுக்கு சல்யூட் அடித்தார்.
அதை ஆமோதித்து தலையாட்டியவன், நேரே காரை உள்ளே செலுத்தினான். வீட்டைச் சுற்றிலும் நிறைய மரங்கள் இருந்தன. அதுவே அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
பூச்செடிகள் கூட, நிறைய வைக்கப்பட்டிருந்தன. வேலூரில் அடிக்கும் வெயிலுக்கு, இது போல் ஒரு இடத்தில் இருந்தால் சற்று அமைதியாய் இருக்கும்.
விசாலமாகவும், நிழலாகவும் இருந்த அந்த இடத்தில் காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றனர் இருவரும். இவர்களைப் போல் பெரிய பதவியில் இருப்பவர்களுக்காக அரசு ஒதுக்கியிருக்கும் ஒரு வீடு.
அந்தக் கால கட்டிடம். ஆனாலும், புதிதாய் பெயிண்ட்டெல்லாம் அடித்து பார்ப்பதற்க்கு நன்றாகவே இருந்தது. உள்ளே சென்றதும், சிறிது கூட அதன் நாற்றம் இல்லாமல் நல்ல நறுமணத்தை சுவாசிக்க முடிந்தது அவர்களால்.
அஞ்சலி முதலில் சென்று வீட்டை முழுவதும் சுற்றிப் பார்த்தாள். அவளுக்கு வீட்டை மிகவும் பிடித்து விட்டது. இனியனும் அவளுடன் சேர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
“இனி, வீடு ரொம்ப நல்லா இருக்கு. லட்சணமா இருக்கு இல்ல.? எனக்குப் பிடிச்சிருக்கு. உனக்கு.?” என்று அவள் மேலே எங்கேயோ பார்த்தபடி அவனிடம் கேட்க,
அவனோ, இவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பதில் எதுவும் சொல்லாமல் இருப்பதை அறிந்து அவனைப் பார்த்தவள், அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை அப்போதுதான் பார்த்தாள்.
“ஏய்.. என்ன.? அப்படிப் பார்த்துட்டிருக்க.? நான் வீடு நல்லா இருக்குல்லன்னு கேட்டேன்.” என்றாள்.
“ம்ம்.. எனக்கு வீட்டையும் பிடிச்சிருக்கு. உன்னையும் பிடிச்சிருக்கு.” என்று அவளை அப்படியே ஒரு கையால் அணைத்துத் தூக்கினான்.
“ஏய்.. இனி. என்ன இது பகல்ல போய்.? கதவெல்லாம் திறந்திருக்கு. விடு என்னை.” என்றபடி அவனிடமிருந்து கீழே இறங்க முயன்றாள்.
இப்போது அவனது இரு கைகளும் அவளது உடலைத் தாங்கிக் கொண்டன. முன்பை விட அதிக இறுக்கம். அவளால் இறங்கவே முடியாதபடி அவளைப் பிடித்திருந்தான் இனியன்.
“இப்போ விடப் போறியா, இல்லையா.?” என்றாள் அவனிடம் சிணுங்கியவாறே.
“கிஸ் பண்ணு. அப்போதான் விடுவேன்.” என்றான்.
“ஏய்.. இது விளையாடற நேரமா.? விடு இனி.” என்றாள் திரும்பவும்.
“ம்ம்.. அதுக்கும் நான் ரெடி. விளையாடலாமா.?” என்றான் இன்னும் அதிக உற்சாகத்தில்.
அதைக் கேட்டு கண்களை அகல விரித்தவள், உதட்டைச் சுழித்து, “அய்யோ.. விடு இனி. அதெல்லாம் முடியாது.” என்றாள்.
“சரி, வேணாம். கிஸ் பண்ணு.” என்று வற்புறுத்தியதும்,
அவனது கன்னத்தை தன் இரு கைகளில் ஏந்தி முத்தம் தந்தாள்.
“ஏய்.. நான் கன்னத்துல கேட்கல. லிப் டூ லிப் வேணும். கொடு. இல்லன்னா விடமாட்டேன்.” என்றான் இன்னும் கறாராக.
“நீ ரொம்ப மோசம் போ...” என்று சொன்னவள், அவன் விருப்பத்தை நிறைவேற்றி அவன் இதழ்களில் தன் இதழ் பதித்தாள்.
அப்பா, அதன் பிறகு தான் அவளை கீழே விட்டான். அவனது காதைப் பிடித்துத் திருகினாள். அவனோ, அவளது இடுப்பைக் கிள்ளினான். இரண்டு பேரும் மாறி மாறி விளையாடிக் கொண்டிருக்க,
வெளியே கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. யாரென்று பார்க்க இருவரும் சென்றனர். வந்தவரைப் பார்த்ததும், இனியன் அறிந்து கொண்டான்.
“வாங்க.. நீங்க தான அழகு சுந்தரம்.?” என்று கேட்டவனுக்கு, ஆமாம் என பதிலளித்தார் வந்திருந்தவர்.
“ஸாரி சார். நீங்க சொன்னது மாதிரி திடீர்னு ஆளுங்க கிடைக்காம போயிட்டாங்க. அதனால தான் வீட்ட கிளீன் பண்ண முடியல. இப்போ தான் வேற ஆளுங்களுக்கு சொல்லி விட்டிருக்கேன். அவங்க வந்ததும் கிளீன் பண்ண சொல்லிடறேன்.” என்றார்.
அவர் அப்படிச் சொன்னதும், இவர்கள் இருவரின் முகமும் மாறியது.
“என்ன சார் சொல்றீங்க.? எல்லாம் பக்காவா கிளீன் பண்ணிருக்கு வீடு. பார்த்தாலே உங்களுக்குத் தெரியலையா.? நீங்க தான் எல்லாமே பண்ணீங்கன்னு நான் கூட என் வைஃப் கிட்ட சொல்லிட்டிருந்தேன். நீங்க என்னடான்னா இப்படி சொல்றீங்க.?” என்றான் இனியன்.
அவன் சொன்னதும் நம்ப முடியாமல் உள்ளே வந்து வீட்டைப் பார்த்தவர் திகைத்து தான் போனார்.
“சார். நான் ஒண்ணும் பொய் சொல்லல. நிஜமாலுமே நேத்திலிருந்து ஆளுங்க கிடைக்கலன்னு நான் அல்லாடிக்கிட்டிருக்கேன். நீங்க சொல்ற மாதிரி நான் எதுவுமே பண்ணல சார்.” என்றார் ஒரே போடாக.
இருவருக்கும் ஒரு வித குழப்பம். இவர் செய்யவில்லை என்றால், யார் இதைச் செய்தது என்று.?
“சார்... என்ன சார் இது.??” என்ற அழகு சுந்தரத்தின் குரலில் ஒரு கணம் விக்கித்துத்தான் போயினர் இருவரும். அவர் ஒரு போட்டோவை கை காண்பித்தார்.
அவர் சுட்டிக் காட்டியதைப் பார்த்த இருவரும், விழித்தனர். “யாரு இது.?” என்றான் இனியன்.
“உங்களுக்கு இது யாருன்னு தெரியலையா சார்.? இது தெரியாம எப்படி சார் வந்தீங்க.? இதுதான் சார் பரமசிவன்.” என்று அவர் சொன்னதும், இனியனும், அஞ்சலியும் அவனது படத்தை அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
அதில், மீசையை முறுக்கிக் கொண்டு பட்டு வேஷ்டி சகிதமாக, கால் மேல் கால் போட்டு ஸ்டைலாக போட்டோவில் வில்லத்தனமாய் சிரித்துக் கொண்டிருந்தான் பரமசிவன்.
(இனி பரமசிவன் ஆட்டம் தொடரும்...)