கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆதிரையின் யாதுமாகி நின்றாய் 2 - அத்தியாயம் 30

Aathirai

Active member
அத்தியாயம் 30

பரமசிவனின் இந்த எதிர்பாராத செயலால் திக்குமுக்காடித்தான் போயிருந்தனர் அஞ்சலியும், இனியனும். எத்தனை தைரியமாக தாங்கள் வருவதற்க்கு முன்பே தங்களை எச்சரிக்க இப்படி ஒரு வேலையை அவன் செய்திருக்கிறான் என்ற உள்ளுணர்வு அவர்களுக்கு சொல்லியது.

அழகு சுந்தரம் இருவரையும் மிகவும் கவனமாக இருக்கும் படி எச்சரித்து விட்டுத்தான் போயிருந்தார். ஆனால், அவர் சொல்லி விட்டார். அதன் விளைவை அனுபவிக்கப் போகிறவர்கள் இவர்களே. சிறிது நேரம் இருவரும் பேச்சற்று அமைதியாய் அமர்ந்திருந்தனர்.

அந்த சமயம் பார்த்து திலகா இனியனின் செல்பேசிக்கு அழைத்திருந்தார். அதைப் பார்த்ததும், பேசும் மனநிலையில் இனியன் இல்லையென்றாலும் ஒரு கட்டாயத்தில் அவரது அழைப்பை ஏற்றான்.

“இனியா.. என்னடா ஊருக்கு நல்லபடியாய் போய் சேர்ந்துட்டீங்களா.? போனே பண்ணல நீ. நானே தான் கூப்பிட்டுக் கேட்கணுமா.?” என்று கேட்க,

“ப்ச்ச்.. அப்படியெல்லாம் இல்ல மா. இங்க ஒருத்தர் வந்திருந்தார் அவர்கிட்ட பேசிட்டிருந்தோம். இப்போ தான் கிளம்பறார். நீ கூப்பிடலன்னாலும், நான் இப்போ உனக்கு கூப்பிட்டு சொல்லியிருப்பேன். சரியா.?” என்று இனியன் சமாளித்தான்.

“ம்ம்.. ம்ம்.. சரி, சரி விடு. நல்லபடியா போயிட்டீங்க தானே! எந்த சிரமமும் இல்லையே?” என்றார்.

“ஒரு பிரச்சினையும் இல்ல மா. நல்லபடியா வந்துட்டோம். இனி திங்க்ஸ் எல்லாம் எடுத்து வைக்க வேண்டிய வேலை இருக்கு. நான் நாளைக்கு கூப்பிடறேன். சரியா.? வைச்சிடறேன்.” என்று வைக்கப் போனான்.

“டேய்.. இனியா இரு இரு. உனக்கு ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லணும். உங்கண்ணன் ஒரு வழியா மாலதிய ஆம்பூர்க்கே கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிட்டான். கிளம்பிட்டான். வீடு பார்க்கறதா சொல்லியிருக்கான். எனக்கு இப்போ தாண்டா கொஞ்சம் நிம்மதியா இருக்கு.” என்று சொன்னார்.

இனி தங்களின் நிம்மதி தொலையப் போவதை நினைத்து கவலைப்படுவதா, திலகா சொன்ன விஷயத்தை நினைத்து சந்தோஷப்படுவதா என்றே தெரியவில்லை இனியனுக்கு.

“ஓ! அப்படியா பரவால்ல மா. ரொம்ப சந்தோஷம். நான் அண்ணாகிட்ட பேசறேன். நீயும், அப்பாவும் உடம்பைப் பார்த்துக்கோங்க.” என்று சொல்லி வைத்து விட்டான்.

அஞ்சலி கேட்டாள், “அத்தை என்ன சொன்னாங்க இனி.?”.

“அண்ணா, அண்ணிய ஆம்பூர்க்கே கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிட்டாராம்.” என்றான்.

“ஓ! ரொம்ப நல்ல விஷயம். ஹேப்பியா இருக்கு இனி. இனிமேல், அத்தையும், மாமாவும் அவங்களைப் பத்தி கவலைப்படத் தேவையில்ல. இல்ல.?” என்றாள் சிரித்துக்கொண்டே.

“ஹூம்ம்... ஆமா அஞ்சலி. ஆனா, இனிமேல் அவங்க நம்மளை நினைச்சுத்தான் கவலைப்படணும்.” என்றான் இனியன் கவலையாய்.

“ஏன் அப்படி சொல்ற இனி.?” என்றாள்.

“இதோ, இந்தப் படத்துல இருக்கறவன் இனி நம்ம லைஃப்ல என்னென்ன செய்யக் காத்திருக்கானோ தெரியலையே?” என்றான்.

“எதுக்கு இனி இவ்ளோ பயப்படற.? இந்த மாதிரி ஆளுக எல்லாம் நம்ம ஃபீல்ட்ல சகஜம் தானே! அத ஃபேஸ் பண்றதுதானே நம்ம ஜாப். அதுக்கு போய் ஃபீல் பண்ற.?” என்றாள் சாதாரணமாக.

“ஹூம்ம்.. என்னோட பயம் என்னை நினைச்சு இல்ல அஞ்சலி. உன்ன நினைச்சு.” என்றான் அவள் கன்னத்தில் கை வைத்து.

“என்ன நினைச்சு எதுக்கு நீ பயப்படற.?” என்றாள்.

“அவன் உன்னை குறி வைச்சு தான் இதை எல்லாத்தையும் ஆரம்பத்துல இருந்தே பண்ணிட்டிருக்கான். உன்ன நினைச்சா தான் பயமா இருக்கு அஞ்சலி. இனிமேல் நீ ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும். நாம இனி எல்லாத்துக்கும் தயாராவே இருக்கணும்.” என்றான் இன்னும் கன்னத்தை அழுத்திப் பிடித்தவாறு.

அவன் கண்களில் தெரியும் கலக்கமும், தன் மேல் உள்ள காதலும் ஒன்றாய்த் தெரிய அவன் கைகளின் மேல் முத்தமிட்டபடி அதை எடுத்து மறு கன்னத்தில் ஒற்றிக் கொண்டாள் அஞ்சலி.

“நீ இருக்கும் போது, என்னை யாரும் எதுவும் பண்ண முடியாது இனி. நீ ஏன் இவ்ளோ கவலைப்படற.? நீ எவ்ளோ பெரிய வீரன்.? கராத்தேவெல்லாம் கத்து வைச்சிருக்க, எனக்காக எத்தனை பேர்கிட்ட சண்டை போட்டிருக்க.? ஏன், அன்னைக்கு கூட ஜீவாவ அடிச்சியே, அப்பா! அப்போதான் உன்னுடைய வீர சாகசத்தைப் பார்த்தேன். அசந்துட்டேன் தெரியுமா.?” என்று பேச்சை மாற்றி அவனை சமாதானம் செய்ய முயன்றாள்.

“ஹூம்ம்.. அதெல்லாம் சும்மா அஞ்சலி. அது ஒரு விஷயமே கிடையாது. நான் பயப்படறதே அவன் உன்னை எதுவும் பண்ணிடுவானோன்னு தான். எல்லா நேரமும் நான் உன்னோடவே இருந்து உனக்குப் பாதுகாப்பு குடுக்க முடியாது. நான் என்னோட வேலைல பிஸியா இருப்பேன். நீ உன்னோட வேலைல பிஸியா இருப்ப. அதனால தான் ரொம்பக் கவலையா இருக்கு.” என்று திரும்பவும் எதையோ யோசித்தபடி வருத்தப்பட்டான்.

“இனி, நீ இவ்ளோ ஃபீல் பண்ணி நான் பார்த்ததே இல்ல. நீ எப்பவும் தைரியமா தான இருப்ப.? நான்னா மட்டும் என்ன.? அவ்ளோ ஸ்பெஷல்லா.?” என்றாள் வேண்டுமென்றே.

“அஞ்சலி. என்ன நீ அப்படி சொல்லிட்ட.? நீதான் எனக்கு இனி எல்லாமே. அப்பா, அம்மா, குழந்தைங்கன்ற ரிலேஷன்ஷிப் ஒரு ஸ்டேஜ் வரைக்கும் தான் கூட இருப்பாங்க. ஆனா, வைஃபோட ரிலேஷன்ஷிப் கடைசி வரைக்கும் கூட வரது. அப்படிப்பட்ட ரிலேஷன்ஷிப்ப நான் ரொம்ப கேர்ஃபுல்லா சூஸ் பண்ணனும்னு ஸ்கூல் படிக்கும் போதே டிசைட் பண்ணிட்டேன். ரொம்ப எக்ஸ்பெக்டேஷன்ஸ் எதுவும் இல்ல. ஆனா, நீ எப்படி என் லைஃப்ல வந்து என்னை இவ்ளோ மாத்தினன்னு இப்பவும் எனக்கு சத்தியமா தெரியல.” என்று இனியன் சொல்ல, அவன் கண்களையே பார்த்தபடி இருந்தாள் அஞ்சலி.

“நீ இல்லன்னா, இந்த இனியன் இன்னைக்கு இவ்வளவு பெரிய பதவில இருந்திருக்க மாட்டான். யாரும் என்னை மதிச்சிருக்கவும் மாட்டாங்க. ஏன், என்னைப் பெத்தவங்களே என்னை வெறுத்திருந்திருக்கலாம். ஆனா, எல்லாமே உன்னால தான் மாறுச்சு. அதுக்கப்பறம் எனக்கு உன் மேல் இருக்கற காதல் இன்னும் அதிகமாச்சு. இப்போ வரைக்கும் அதே காதல் தான் உன் மேல இருக்கு. எனக்கு எப்பவுமே நீ ஸ்பெஷல் தான் அஞ்சலி. எனக்கு கிடைச்ச பொக்கிஷம் நீ.” என்று அவள் கையைப் பற்றி முத்தமிட்டான்.

அவனின் உருக்கமான பேச்சிலும், காதலிலும்

“அப்படிப்பட்ட பொக்கிஷத்த யாராவது திருட நினைச்சாலோ, இல்ல ஏதாவது பண்ணனும்னு நினைச்சாலோ என்னால அதை எப்படி தாங்கிக்க முடியும் சொல்லு.? நான் அந்த மனநிலைல தான் இப்போ இருக்கேன்.”

“அதே மாதிரி எனக்கு என்ன பிரச்சினைன்னாலும் நான் அதை ஃபேஸ் பண்ணத் தயாரா இருக்கேன். ஆனா, உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா அதை என்னால கண்டிப்பா தாங்கவே முடியாது செல்லம். நான் உடைஞ்சே போயிடுவேன். அதனால தான் நான் காஞ்சிபுரத்துல இருக்கும் போதே உன்மேல அவ்ளோ கோபப்பட்டேன். அது இப்போ வரைக்கும் உனக்கு புரிஞ்சுதா இல்லையான்னே எனக்குத் தெரியல.” என்றான் மீண்டும் கவலையாய்.

“ஏய்.. இனி.. நீ அன்னைக்கு என் மேல கோபப்பட்டது நியாயம் தான். நான் அப்படிப் பண்ணிருக்கக் கூடாதோன்னு நானே ஃபீல் பண்ணேன். நான் புரிஞ்சுக்கிட்டேன் இனி. நீ எதுவும் ஃபீல் பண்ணாத. நாம ரெண்டு பேரும் கண்டிப்பா சேர்ந்து போராடலாம். இவன் தான நமக்கு பிரச்சினை.?” என்று சொன்னவள், எழுந்து போனாள்.

அங்கே இருந்த ஒரு பெரிய ஸ்டூலைப் போட்டு ஏறி, அந்த சுவரில் மாட்டியிருந்த பரமசிவனின் படத்தைக் கழட்ட முயன்றாள்.

“ஏய்.. என்ன பண்ற அஞ்சலி.?” இனியன் அவள் விழுந்துவிடுவாளோ என்ற பதட்டத்தில் அவள் ஏறியிருந்த ஸ்டூலைப் பிடித்து நின்றான்.

“இரு ஒரு நிமிஷம்.. ம்ம்.. இந்தா பிடி.” கழட்டிய அந்த போட்டோவைக் கொடுத்தாள்.

“ஹூம்ம்.. பொறுக்கி.. நாம எங்க கழட்டி வைச்சிடுவோம்னு ஹெவியா போட்டோவ ஃப்ரேம் போட சொல்லிருக்கான் போல.” என்றபடியே மெல்ல இறங்கினாள்.

“இப்போ இதை எதுக்கு கழட்டுன.?” என்றான் இனியன்.

“ம்ம்.. இரு இரு சொல்றேன். இதை எடுத்துட்டு வா.” என்றபடி மாடிப்படி ஏறினாள்.

இனியனும் பின்னாலேயே புரியாமல் அந்த படத்தை எடுத்துக்கொண்டு மேலே சென்றான். மேலே நல்ல விசாலமான காற்றோட்டமான பெரிய ஹால். அங்கே ஒரு சின்ன அறை இருந்தது.

“இனி இங்க வா..” என்று அந்த அறையில் இருந்து அவனை அழைத்தாள் அஞ்சலி.

“என்ன பண்ணப் போற அஞ்சலி. அப்பா! எனக்கு கையே வலிக்குது.” என்றபடி அந்தப் படத்தை சுவரின் ஒரு பக்கமாய் சாய்த்து வைத்தான்.

“என்ன நீ அதுக்குள்ள கை வலிக்குதுன்னு சொல்ற.? இனிமேல் தான் உன் கைக்கு அதிக வேலை இருக்கு. ஏன்னா, உன் ஆசை தீருர வரைக்கும் இந்த போட்டோவ உன் கையால குத்து. கராத்தேல பிளாக் பெல்ட் வாங்கினேன்னு நிரூபி.” என்று அஞ்சலி ஒரு முறுக்கலாய் சொல்ல,

“ஏய்.. எப்படி அஞ்சலி.? சூப்பர் போ. ம்ம்.. கரெக்ட் தான்.” என்று சொல்ல,

“நம்ம படத்தை இங்க ஏண்டா மாட்டி வைச்சோம்னு அவன் ஃபீல் பண்ணனும். அவன என்ன பண்ணனும்னு நினைக்கிறோமோ, அதையெல்லாம் இவன் போட்டோவ வைச்சு பண்ணிடலாம். நம்ம கோபத்தை மொத்தமா இதுல காட்டிடலாம். எப்படி.?” என்று கண்ணைச் சிமிட்டி அவனிடம் சொல்ல,

அவனோ தன் இரு கைகளால் அவள் கன்னங்களைப் பிடித்தபடி, “அய்யோ!! என் அருமை பொண்டாட்டியே!! இதுக்கு உனக்கு ஏதாவது ஒண்ணு கொடுத்தே ஆகணும்.” என்று நெற்றியில் முத்தமிட்டான்.

அப்படியே கீழே வந்தவனின் உதட்டைத் தன் கையால் மூடியவள், “இனி இது ரொமான்ஸ் பண்ற நேரம் இல்ல, இது ஆக்‌ஷனுக்கான நேரம். கமான் ஸ்டார்ட்.” என்று அவனை ஏற்றிவிட,

அவன் தன் கண்களை சுழட்டி வெறி கொண்ட பார்வையால் ஒரு குத்து விட, அந்த போட்டோவில் பரமசிவனின் முகமே கிழிந்து விட்டது.

அதைப் பார்த்து அஞ்சலி பயங்கரமாய்ச் சிரித்தாள். “இனி, ஒரே குத்துலயே இவன் முகமே கிழிஞ்சிடுச்சே! அப்போ, நேர்ல இருந்தா அவன் மூக்குல ரத்தமே வந்திருக்கும் இல்ல.? அதை நினைச்சா எனக்கு சிரிப்பா வருது.” என்று மறுபடியும் சிரித்தாள்.

“சூப்பர் அஞ்சலி. இவ்ளோ நேரம் எனக்குள்ள இருந்த ஸ்ட்ரெஸ் எப்படி போச்சுன்னே தெரியல. மைண்ட் ரொம்ப ரிலாக்ஸா இருக்கு. தேங்க்யூடி செல்லம்..” என்று அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டான்.

இருவரும் அவர்களின் மன அழுத்தம் குறைந்த சந்தோஷத்தில் அதைக் கொண்டாடிக் கொண்டு இருந்தனர். ஆனால், இதன் பின்விளைவு எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதை இருவரும் இப்போது அறியாமல் இருப்பதே உண்மை.

(தொடரும்...)



 
Top