கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆதிரையின் யாதுமாகி நின்றாய் 2 - அத்தியாயம் 31

Aathirai

Active member
அத்தியாயம் 31

அடுத்த நாள் மிக முக்கிய நாளாக இருந்தது, இனியனுக்கும், அஞ்சலிக்கும். அன்று அவர்கள் இருவரும் அங்கே பணியில் சேர வேண்டிய நாள். காலையிலேயே அஞ்சலிக்கு கலெக்டர் ஆஃபீஸில் இருந்து கார் வந்து விட்டது.

இனியனோ, எப்பொழுதும் போல் அஞ்சலி அயர்ன் செய்து தந்த யூனிஃபார்மை மாட்டிக் கொண்டு நின்றான். அவசரமாய் கிளம்பியவளைப் பார்த்தான்.

“ஓகே இனி, எனக்கு கார் வந்துடுச்சு. நான் கிளம்பறேன். டிஃபன் சாப்டுட்டு கிளம்பு. நான் அங்க போய்ட்டு ஃப்ரீ டைம்ல கால் பண்றேன். தென்.” என்று எதையோ மறந்ததை ஞாபகப்படுத்த முயன்றவள் அருகே வந்து நின்றான் இனியன்.

அப்படியே அவளை ஒரு நிமிடம் அணைத்துக் கொண்டான். அவனது அணைப்பின் உணர்வை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அவனின் ஒவ்வொரு உணர்வையும் அவனின் முழுமையான அணைப்பு அவளுக்கு உணர்த்திவிடும்.

“என்னாச்சு இனி.? ஏன் இவ்ளோ எமோஷனல் ஆகற.? ரொம்ப பயப்படறன்னு தோணுது.” என்றாள் சரியாக.

“இல்ல அஞ்சலி. அது பயம் இல்ல. உன் மேல வைச்சிருக்கற காதல், அக்கறை. என்னை மீறி உனக்கு எதுவும் ஆகக் கூடாதுன்னு இந்த செகண்ட் வரைக்கும் யோசிச்சிட்டே இருக்கேன். அதுவே ஒரு மாதிரியா இருக்கு.” என்றான்.

“இங்க பாரு.. நீ நினைக்கற மாதிரி எதுவும் ஆகாது. நேத்து சொன்னதுதான். நீ இருக்கற தைரியத்துல தான் இனி நான் ரொம்ப தைரியமா இருக்கேன். என்னோட பலமே நீதான். உன்னை மீறி யாரும், என்னை எதுவும் பண்ண முடியாது. புரிஞ்சுதா? எவனா இருந்தாலும் பார்த்துக்கலாம். ஓகே வா.” என்றாள்.

“நீ ரொம்ப ஓவர் கான்ஃபிடண்ட்டா இருக்கற மாதிரி தோணுது அஞ்சலி. யாரா இருந்தாலும் ரொம்பக் கேர்ஃபுல்லா டீல் பண்ணு. ரொம்ப அதிகமா பேசிறாத. கொஞ்சம் பொறுமையா இரு. சரியா.?” என்று சொன்னான் இன்னும் அதே பதட்டம் மாறாமல்.

“நீ ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகறன்னு எனக்குத் தெரியல இனி. இருந்தாலும், நான் கேர்ஃபுல்லா இருக்கேன்.” என்று சொன்னபடி அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

மார்பினில் சாய்ந்தவளை அப்படியே இறுக்கி அணைத்தபடி, நெற்றியில் முத்தமிட்டான் இனியன். அதற்க்குள் டிரைவர் ஹார்ன் சத்தம் எழுப்பினார்.

“சரி, சரி.. நான் கிளம்பறேன் இனி. நைட் பார்க்கலாம். சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கு தானே! பை..” என்று சொன்னபடி அவசரமாய் சென்று வண்டியில் ஏறினாள்.

அவசரமாய்ச் சென்றவளைப் பார்த்து பெருமூச்சொன்றை விட்டபடி உள்ளே வந்து சாப்பிட்ட பின், தயாரானதும் தன் ஜீப்பை எடுத்துக்கொண்டு கிளம்பினான் இனியன்.

அன்று முதல் நாள், வேலூர் ஆட்சியர் அலுவலகம் எப்பொழுதும் போல பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. உள்ளே செல்லும் போதே, தன் பார்வையை எல்லா பக்கமும் செலுத்தியபடி வந்தாள் அஞ்சலி.

அவள் வந்து இறங்கியதும், அங்கே பணியில் இருக்கும் சக ஊழியர்களும், அவளுக்கு இணையான பணியில் இருப்பவர்களும் கை கொடுத்து அவளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதே போல், தங்களை அவளுக்கு அறிமுகம் செய்து கொண்டனர்.

அழகிய புன்னகையுடன் அனைவரிடமும் நன்றாகப் பேசினாள் அஞ்சலி. கலெக்டர் இன்னும் வரவில்லை என்று தெரிந்து கொண்டாள். அவள் நினைத்த அரை நிமிடத்தில் சைரன் காரில் வந்து இறங்கினார் கலெக்டர். நாகராஜன்.

அவள் வந்து இறங்கியதும், அவருடைய பி.ஏ அஞ்சலியை அறிமுகம் செய்ய, அவரோ அவளைப் பார்த்து சிரிக்கவும் இல்லை. நின்று பேசவும் இல்லை.

“ம்ம்.. ம்ம்..” என்று தலையசைத்து விட்டு நேரே தனது அறைக்கு விரைந்தார். அவரது செய்கையும், செயலும் அனைவரையும் சங்கடப்படுத்தியது. அஞ்சலிக்கோ ஒரு மாதிரியாகத்தான் இருந்தது.

அவரது பி.ஏ ஜெகன் அவள் அருகில் வந்து, “சார், கொஞ்சம் பிஸி மேம். அதனால தான் உங்ககிட்ட பேசாம போயிட்டாரு.” என்று சமாளிக்க,

அதைத் தெரிந்து கொண்டவள், “இட்ஸ் ஓகே. நானே அவரோட ரூம்க்கு போய் பேசிக்கறேன்.” என்று அங்கே சென்றாள்.

அவள் கதவைத் திறந்து கொண்டு, “எக்ஸ்கியூஸ் மீ சார்.” என்று சொன்னதும், அவர் அவளை நிமிர்ந்து பார்க்காமல் தனது கையைக் காட்டி உள்ளே வருமாறு சைகை காண்பித்தார்.

உள்ளே சென்றவளை உட்காரக் கூட சொல்லவில்லை. ஏதோ ஒரு ஃபைலை ஆராய்வதில் மும்முரமாய் இருப்பது போல் பாவனை செய்து கொண்டிருந்தார்.

“என்ன விஷயம்.? சொல்லுங்க.” என்று அவர் கேட்டதும்,

“சார், இது சப்-கலெக்டர் அஞ்சலி தேவி. நியூவா இன்னைக்குத்தான் ஜாயின் பண்ணிருக்காங்க.” என்று அவரது பி.ஏ ஜெகன் சொன்னதும், அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தவர்,

“ஜெகன். நான் அவங்களைத் தான கேட்டேன். நீ ஏன் மேன் பதில் சொல்ற.? போ, வெளில வெய்ட் பண்ணு.” என்று முகத்தில் அறைந்தாற் போல் பேசினார்.

அவரும் வேறு வழியில்லாமல் எதுவும் பேசாமல் கிளம்பினார். இவருக்குக் கொஞ்சம் கூட இங்கிதமே தெரியாதோ.? என்பது போல் இருந்தது அஞ்சலிக்கு.

“சரி, என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்தீங்க.?” என்றார் திரும்பவும் அவளை ஒரு கேவலமான பார்வை பார்த்தவாறே.

“ஒண்ணும் இல்ல சார். ஒரு ஃபார்மாலிட்டிக்கு சப்-கலெக்டர வெல்கம் கூட பண்ணத் தெரியாத கலெக்டர் சாரப் பார்த்துட்டு, சொல்லிட்டு போலாம்னு வந்தேன்” என்றாள் ஒரு புன்னகையுடன்.

“ஹலோ.. என்ன பேசறீங்க.? மைண்ட் யுவர் வேர்ட்ஸ். ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் நீங்க எனக்கு சொல்லித்தர வேண்டிய அவசியம் இல்ல.” என்று திமிராகப் பேசினார்.

“சார், நான் இன்னைக்குத்தான் பொறுப்பேத்து வந்திருக்கேன். நீங்க தான் நான் என்ன பண்ணனும்.? ஏது பண்ணனும்.? வொர்க் என்விரான்மெண்ட் எப்படி இருக்கும்.? இதெல்லாம் சொல்லிப் புரிய வைக்கணும். என்னோட டிப்பார்ட்மெண்ட்ல என்ன மாதிரியான ப்ராப்ளம்ஸ் இங்க வரும், அதை எப்படி ஹேண்டில் பண்ணனும், இது மாதியான விஷயங்கள நீங்கதான எனக்கு கத்துக் கொடுக்கணும். அதுவும் உங்க கடமை தான.?” என்றாள்.

“கடமையப் பத்தி நீ எதுவும் எனக்கு சொல்லித்தர வேண்டாம். என்ன ரொம்ப ஓவரா பேசற.?” என்று எழுந்தவர் எகிறினார்.

அவர் அப்படிப் பேசினாலும், அஞ்சலி முன்னர் இருந்த அதே புன்னகையுடனே பேசினாள். “சார், நீங்க ஒரு விஷயத்த மறந்துட்டீங்கன்னு நினைக்கிறேன். நான் இதுக்கு முன்னாடி இருந்த காஞ்சிபுரம் கலெக்டர் ஆஃபீஸ்ல எல்லா ரூம்லயும் சி.சி.டி.வி கேமரா இருக்கும். ஆனா, நீங்க இப்படி என்கிட்ட மிஸ் பிகேவ் பண்றதப் பார்த்தா இங்க எதுவும் இல்லைன்னு நினைக்கிறேன்.” என்றாள்.

அப்போதுதான் ஏதோ ஒன்று புத்தியில் உரைக்க, அமைதியாய் அமர்ந்து பேசினார். “நீங்க என்ன செய்யணும், எந்த மாதிரியான விஷயங்கள ஃபாலோ பண்ணனும்னு என்னோட பி.ஏ ஜெகன் உங்களுக்கு எக்ஸ்பிளைன் பண்ணுவார். நௌ யூ கேன் கோ.” என்றார் விரட்டியடித்தபடி அவளைப் பார்க்காமல்.

அவளோ சிரித்தபடியே, “தேங்க் யூ சார்.” என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.

செல்பவளை முறைத்தபடியே பார்த்தவர், தனது அலைபேசியில் யாருக்கோ தொடர்பு கொண்டு பேசினார்.

“ஆமா, எங்கிட்டயே சி.சி.டி.வி கேமரா இருக்குனு பயமுறுத்தறா. நீங்க கொஞ்சம் மிரட்டுனாதான் அடங்குவான்னு தோணுது. பார்த்துக்கோங்க.” என்று சொல்லி விட்டுப் போனை வைத்தார்.

வேலூர் மாவட்ட ஆணையர் அலுவலகம், சரியான நேரத்தில் வந்து சேர்ந்தான் இனியன். வந்ததும், அவனுக்குக் கீழே வேலை செய்பவர்கள் அனைவரும், முந்தைய நாள் அவனது வீட்டிற்க்கு வந்த அழகு சுந்தரமும் அவனை வரவேற்றனர். கமிஷனர் அறைக்குச் சென்றான். மரியாதையான ஒரு புன்னகையுடன் அவனை வரவேற்றார் கமிஷனர். திருநாவுக்கரசு.

“வெல்கம் மிஸ்டர். இனியன் நடராஜன். ரொம்ப சந்தோஷம் நீங்க இங்க ஜாயின் பண்ணிருக்கறதுல. உங்களைப் பத்தி கேள்விப்பட்டிருக்கேன். டியூட்டில ரொம்ப சின்சியர். இந்த ட்ரான்ஸ்ஃபர் கூட, மினிஸ்டர் பையன் போதைல இருக்கும் போது அடிச்சதுக்குத்தான். அப்பறம், ஃபோர் மன்த்ஸ் முன்னாடி தான் லவ் மேரேஜ். அதுவும் சப்-கலெக்டர. ம்ம்.. எல்லா விஷயமும் என் காதுக்கு வந்துடுச்சு.” என்று அவர் அவனைப் பற்றி சொல்லிக்கொண்டே போனார்.

“பரவால்ல சார். என்னைப் பத்தின நிறைய விஷயங்கள ஆராய்ச்சி பண்ணிருக்கீங்கன்னு நினைக்கிறேன்.” என்றான் சிரித்துக்கொண்டே.

“நான் எதுவும் ஆராய்ச்சி பண்ணலப்பா. ஒருத்தவங்க டியூட்டில ஜாயின் பண்றாங்கன்னு தெரிஞ்சாலே அவங்களப் பத்தின விஷயம் எல்லாமே ஆட்டோமேட்டிக்கா என் டேபிள்க்கு வந்துடும். அதை வைச்சு தான் சொன்னேன்.” என்றார்.

“ஓ! ஓகே சார். நானும் உங்களைப் பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன். நேர்மையான அதிகாரி, நிறைய சவாலான கேஸ்கள் எல்லாத்தையும் தனக்குக் கீழ் உள்ள டீம வைச்சு செயல்படுத்துவீங்கன்னு சொன்னாங்க. அதனால, உங்க உயிருக்கே நிறைய முறை ஆபத்துகள் வந்திருக்குன்னு சொல்லிருக்காங்க. எப்படி சார் எல்லா விஷயங்களையும் ஹேண்டில் பண்ணீங்க?” என்று ஒரு பெரும் ஆச்சர்யத்துடன் கேட்டான்.

“நம்ம ஃபீல்ட்ல இருக்கற விஷயம் தானப்பா. நேர்மையா இருந்தாலே சில நல்லவங்களுக்குப் பிடிக்காது தானே! உயிருக்கு கேரண்டி இருக்கா.? கிடையாது. என்னைக்காவது ஒரு நாள் நாம செத்துதான போகணும். அதுவரைக்கும் நம்மாள முடிஞ்ச நல்ல விஷயங்களைப் பண்ணிட்டுப் போவோமேன்னு நினைப்பேன். கொஞ்சம் கஷ்டம் தான். ஆனா, நமக்கு எதுவானாலும் தாங்கிக்க முடியுது. நம்மள சார்ந்தவங்களுக்கு ஏதாவதுன்னா தான் தாங்க முடியாது.” என்று ஒரு நிமிடம் மௌனமாய் நின்றவர் தொடர்ந்தார்.

“ஒரு சமயம் நான் தென்காசில இருந்தப்போ, என்னோட பையனக் கடத்தி வைச்சு மிரட்டி நிறைய விஷயம் பண்ண நினைச்சாங்க. ஆனா, என் பையன் கொஞ்சம் புத்திசாலி. அவனே ஏதோ ஒரு லக்ல தப்பிச்சு வந்துட்டான். அதுக்குக் காரணமானவங்கள நானும், என்னோட டீமும் சேர்ந்து என்கவுண்ட்டர்ல கொன்னுட்டோம். ரொம்ப மோசமானவங்க. விட்டிருந்தா இன்னும் எத்தனை பேர மிரட்டி என்னென்ன வேலை பண்ணிருப்பாங்கன்னு தெரியல.” என்றார் தன் ஒரு அனுபவத்தைப் பற்றி.

“இதுல என்ன ஒரு ஹைலைட்டான விஷயம்ன்னா, என்னோட பையனும் இப்போ, ஒரு ஐ.பி.எஸ் ஆகணும்னு வெறியோட சுத்திட்டிருக்கான். அவன தற்காத்துக்கறதுக்கான எல்லா வித்தைகளையும் கூடவே சேர்ந்து கத்துக்கிட்டான்னா பாரேன்.” என்று சிரித்தார்.

“ம்ம்.. அது ரொம்ப நல்ல விஷயம், அப்பறம் நீங்க பண்ணது ரொம்ப சேலஞ்சிங்கான விஷயம் சார். ஆனா, அதுக்கு நிறைய நீங்க டிப்பார்ட்மெண்ட்ல ஃபேஸ் பண்ணிருப்பீங்களே.?” என்றான் இனியன்.

“ம்ம்.. கண்டிப்பா. அதுக்கப்பறம் என்னை மதுரை ஜோனல் அஸிஸ்டண்ட் கமிஷனரா மாத்தினாங்க. அங்கயும் போய் என் கைவரிசைய காமிச்சேன். இவன் அடங்க மாட்டான் போலிருக்குன்னு, கமிஷனர் பதவியக் குடுத்து, இங்க அனுப்பி என்னை அமைதியா உட்காரச் சொல்லிட்டாங்க. ஆனாலும், என்னால அப்படி அமைதியா இருக்க முடியல.” என்றவரை ஆழமாய்ப் பார்த்தான் இனியன்.

“நீ ஏதோ கேட்க நினைக்கிறன்னு தெரியுது. ஆனா, எல்லாத்தையும் இன்னைக்கே என்னால சொல்ல முடியாது இல்லையா.? பேசுவோம், இன்னும் நிறைய இருக்கு நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது. பட், உங்களுக்கு கேஸ் விஷயமா எந்த ஒரு ப்ராப்ளம்ன்னாலும் நானும் கூட இருக்கேன்னு நினைச்சுக்கோங்க. எனக்குக் கீழ இருக்கறவங்கள நான் என்னைக்கும் ஒரு ஃப்ரெண்ட்லி மேனரா தான் பார்ப்பேன். எனிவே, இன்னைக்குத்தான் வந்திருக்கீங்க. கொஞ்சம் உங்களை ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க. நாளைல இருந்து களத்துல இறங்குங்க.” என்று அவர் சொன்னதும், அவனுக்கு எதையோ அவர் மறைமுகமாய் சொல்ல வருகிறார் என்றே புரிந்தது.

பரவாயில்லை கமிஷனர் இந்தளவுக்கு பேசுவதும், ஒரு நட்புறவாய் பழகுவதுமே அவனுக்கு நல்ல ஒரு மனநிலையை ஏற்படுத்தியது. ஆனாலும், மனதில் நிறைய விஷயங்களை ஆராய வேண்டும் என்ற எண்ணம் உதித்துக்கொண்டே தான் இருந்தது.

அதற்க்கு முதலில் இங்கே தனக்குக் கீழ் திருநாவுக்கரசைப் போல் ஒரு டீமை உருவாக்க வேண்டும். அவர்களின் உதவியுடன் தான் அடுத்து எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதை செயல்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் தனது அறையை நோக்கிச் சென்றான் இனியன்.

(தொடரும்...)
 
Top