கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆதிரையின் யாதுமாகி நின்றாய் 2 - அத்தியாயம் 32

Aathirai

Active member
அத்தியாயம் 32

அன்றைய நாள் எப்படியோ கழிய, அஞ்சலி புது வீட்டில் அன்று தான் இரவு உணவை சமைத்துக் கொண்டிருந்தாள். அன்று காலை, அந்த ஆட்சியர் அவளிடம் நடந்து கொண்டவற்றை அவள் யோசித்துக்கொண்டே தான் இருந்தாள்.

என்ன காரணம்.? எதனால் அவர் அப்படி நடந்து கொள்ள வேண்டும். ஒரு வேளை இதுவும் அந்தப் பரமசிவனின் வேலையோ.? என்று கூட நினைக்கத் தோன்றியது. இல்லையென்றால் ஒரு சின்ன புன்னகை கூடவா சிந்த முடியாது அந்த கலெக்டருக்கு.?

யோசித்துக்கொண்டே இருந்தவள், வெளியே காலிங்க் பெல்லின் சத்தம் கேட்டு சென்றாள். அவள் செல்லும் முன்பே, மறுபடியும் இரண்டு முறை அதே காலிங்க் பெல்லை அழுத்தும் சத்தம்.

அஞ்சலி ஒரு நிமிடம் நிதானித்து நின்றாள். யாராக இருக்கும்.? இனியனாக இருந்தால் இப்படி பெல்லை அழுத்த மாட்டானே! யாராக இருந்தாலும் வரும் வரை சிறிது நேரமாவது காத்திருப்பார்கள் தானே! கதவைத் திறந்துதான் ஆக வேண்டுமா.? என்று அவள் யோசித்த கணம் திரும்பவும் காலிங்க் பெல்லை அழுத்தினர்.

அவள் ஒரு நிமிடம் இனியனை மனதில் நினைத்துக் கொண்டாள். அவன் இருந்தால் இந்த இடத்தில் என்ன செய்வான் என்று நினைத்தபடி போய் கதவைத் திறந்தாள். திறந்தவள் முகமே மாறியது.

கதவின் முன்னே, வேஷ்டி சட்டை சகிதமாக முறுக்கு மீசையை முறுக்கி விட்டபடி அந்த போட்டோவில் இருந்த அதே முகம். பரமசிவன் தான் நின்றிருந்தான். கூடவே அவனுடன் நாலைந்து அடியாட்கள் போல் சிலர் நின்றிருந்தனர்.

“வணக்கம் கலெக்டர் அம்மா. என்ன உள்ள ரொம்ப வேலையோ! உங்களப் பார்க்க தான் வந்தேன். உள்ள வரலாமா.?” என்றான் வில்லத்தனமான சிரிப்பில்.

அவளோ, பின்னால் நின்றிருந்தவர்களைப் பார்க்க, “ஒண்ணும் பயப்படாதீங்க. உங்களை எதுவும் செய்ய மாட்டோம். சும்மா பேசிட்டு போலாம்னு தான் வந்தோம். இப்போவாது உள்ள விடறீங்களா.?” என்று ஒரு காலை முன்னே எடுத்து வைத்து கேட்க,

அவள் முறைப்பை பதிலாய் தந்தவாறே, நகர்ந்து நின்று வழி விட்டபடி உள்ளே சென்றாள். அவனோ, அவளை விழுங்கும்படி பார்த்துக்கொண்டே நடந்தான். அவளிடம் எதுவும் கேட்கவில்லை, அவனாகவே அங்கே போட்டிருந்த சாரில் அமர்ந்து கொண்டான்.

அடியாட்கள் அவனது அருகே நின்றனர். வேண்டா வெறுப்பாய் நின்று கொண்டிருந்தவளை அப்படியே தன் கண்களால் ஒரு நிமிடம் அளவெடுத்துக் கொண்டிருந்தான். அஞ்சலிக்கு உடம்பே கூசியது போல் ஆனது.

“அண்ணே!!!” என்று அருகில் இருந்தவன் கூப்பிட,

“ப்ச்ச்.. டேய்.. ஏண்டா குறுக்க வர, நான் தான் கலெக்டர் அம்மாவ ரசிச்சிட்டிருக்கேன் இல்ல. கொஞ்ச நேரம் சந்தோஷமா இருக்க விடமாட்டீங்களே!” என்று சலித்துக்கொண்டவன்,

“என்ன கலெக்டர் அம்மா, இவ்ளோ தூரம் நீங்க வறீங்கன்னு ஒவ்வொரு ஏற்பாட்டையும் பார்த்து பார்த்து செஞ்சா, நீங்க ஒரு வார்த்தை கூட உள்ள வாங்கன்னு கூப்பிடல, ஒரு டீ, காஃபி வேணுமான்னு கேட்கல.? ச்சே.. மனசு எவ்ளோ பாடுபடுது தெரியுமா.?” என்றான் சிரித்தபடியே.

அவன் சிரிப்பதைப் பார்த்து பற்றிக்கொண்டு வந்தது அஞ்சலிக்கு.

“என்ன விஷயம்.? எதுக்கு வந்திருக்கீங்க.? ஏதாவது பிரச்சினைன்னா, கலெக்டர் ஆஃபீஸ்க்கு வந்து பாருங்க. அத விட்டுட்டு இப்படி நேரம் கெட்ட நேரத்துல தனியா வீட்டுல இருக்கும் போது வந்தா என்ன அர்த்தம்.?” என்று சற்று கோபமாய் அஞ்சலி பேச,

“அப்பப்பப்பாபா... டேய்.. நம்ம கலெக்டர் அம்மா வாயத் தொறந்து பேசிட்டாங்கடா. காதுல இன்பத் தேன் வந்து பாயுதே!” என்று கிண்டல் பேசி சிரிக்க, அவனுடன் சேர்ந்து அனைவரும் சிரித்தனர்.

பல்லைக் கடித்துக்கொண்டு, கோபத்தையும் அடக்கியபடி நின்றாள் அஞ்சலி. பரமசிவனோ, அவள் செய்யும் ஒவ்வொரு விஷயங்களையும் அளந்து கொண்டே தான் இருந்தான்.

“கோபம் வரணுமே கலெக்டர் அம்மாக்கு. வரணும். வந்து என்னை அடிக்கணும்னு தோணனும்.” சொன்னபடியே திடீரென்று எழுந்து ஒரு வேகத்தில் அவள் முன்னே போய் நின்றவன்,

“என் கன்னத்துல ஒரு அறை அறைஞ்சா கூட வாங்கிக்குவேன். அப்படியாவது உங்க கை என் மேல படும் தான!” என்று உணர்ச்சி பொங்கக் கூறியவனைப் பார்த்து ஒரு அடி பின்னே சென்றாள் அஞ்சலி.

அவன் அப்படி தன் முன்னே வந்து நிற்பான் என்று நினைத்தே பார்க்கவில்லை அவள். ஆனால், அது அவளுக்கு ஒருவித அருவெறுப்பைத் தந்தது. வில்லத்தனமான ஒரு காமுகன் தன் முன் இப்படி நின்று பேசுவான் என்று அவள் ஒரு நாளும் கனவிலும் நினைத்ததில்லை.

என்றும் ஆசை கொஞ்சும் இனியனின் காதல் முகத்தை அருகில் பார்க்கும் போது ஏற்படும் ஆன்ந்தத்திற்க்கு அப்படியே எதிப்பதம் அவனது முகம். ஒரு நிமிடம் அவன் கழுத்தை அப்படியே நெறித்து விடலாம் போல் இருந்தது அவளுக்கு.

ஆனால், எந்நிலையிலும் நிதானமாய் இருக்க வேண்டும் என்னும் குறிக்கோளுடன் வளர்ந்தவள், அந்த நிமிடம் சற்று பொறுமையாய் இருக்க வேண்டியதாய் ஆனது. அதே பொறுமையுடன் பேசினாள்.

“இப்போ, எதுக்கு இங்க வந்திருக்கீங்க.?” என்றாள்.

“உங்களைப் பார்க்கத்தான். நீங்க வேற, இதுவரைக்கும் ஐயாவுக்கு யார் மேலயும் இவ்ளோ ப்ரியம் ஏற்பட்டதில்ல தெரியுமா.? இதுக்கும் எனக்கு மூணு பொண்டாட்டி. ஒருத்தி கூட என்கூட உருப்படியா குடும்பம் நடத்துனதில்ல.”

நீ ஒரு பொம்பளப் பொறுக்கின்னு தெரியாம கல்யாணம் பண்ணிருப்பாங்க. தெரிஞ்சிருந்தா அவங்க வாழ்க்கை உன்னால சீரழிஞ்சிருக்காதே! மனதில் நினைத்துக்கொண்டாள் அஞ்சலி.

“அவங்க யாருமே உங்கள மாதிரி அழகில்ல கலெக்டர் அம்மா. எல்லாம் வத்தலும், தொத்தலும், ஒடைசிலா இருந்தாளுக. நீங்க அப்படியே செஞ்சு வைச்ச சிலை மாதிரி இருக்கீங்க. உங்கள வர்ணிக்க கூட என்கிட்ட வார்த்தை இல்ல.” என்று அவன் வரம்பு மீறி பேசிக்கொண்டே போனான்.

“உங்க புருஷன், அதான் அந்த அஸிஸ்டெண்ட் கமிஷனர். எந்த ஜென்மத்துல என்ன புண்ணியம் பண்ணாரோ! உங்களைக் கல்யாணம் பண்ணிக்க. கேள்விப்பட்டேன், அவர் உங்கள உருகி உருகி காதலிச்சாராமே! ச்சே.. அந்த இடத்துல நான் இல்லாம போய்ட்டேன்.” என்றவன்,

ஒரு பெருமூச்சொன்றை விட்டுக்கொண்டு சொன்னான், “ஹூம்ம்ம்... கொடுத்து வைச்ச மகராசன். ஆண்டு அனுபவிக்க அவனுக்கு தான் கொடுப்பனை இருக்கு.” என்று இன்னும் அதிகமாக பேசிக்கொண்டே போனான்.

அவனின் ஒட்டுமொத்த வார்த்தைகளுக்கும் எரிமலை வெடிப்பது போல் நெஞ்சம் குமுறிக் கொண்டிருந்தது அஞ்சலிக்கு. இருந்தாலும், பொறுமையாய் சொன்னாள்,

“ஒரு லேடி தனியா இருக்கும் போது, இப்படி வரம்பு மீறி வந்து ஆபாசமா பேசினா அதுக்கு என்ன தண்டனை தெரியுமா.?” என்றாள்.

“ஆஆஆஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஹாஹாஹா.....” என்று பயங்கர சத்தத்துடன் சிரித்தான் ஏளனமாக.

“அய்யோ! கலெக்டர் அம்மா, இந்த சட்டம், தண்டனை, நீதி, நேர்மை, நியாயம் எல்லாம் என்னோட வீட்டுக் குப்பைத்தொட்டில இருக்கு. இதுல நீங்க என்கிட்டயே சட்டம் பேசறீங்களா.? முடிஞ்சா அதை என்னால விலைக்கே வாங்க முடியும்.” என்று ஆணவத்தின் மொத்த உருவமாய்ப் பேசினான்.

“நீங்க பண்ணதுக்கும், பண்ணப் போறதுக்கும் உங்கள இத்தனை நாள் நான் விட்டு வைச்சிருக்கேன்னா, எல்லாம் ஒரு காரணமாத்தான். எனக்கு ஒருத்தவங்கள புடிச்சிருச்சுன்னா, அவங்கள அவ்ளோ சீக்கிரம் சீண்ட மாட்டேன். அதனால தான் உங்ககிட்ட அமைதியா இவ்ளோ நேரம் பேசிட்டிருக்கேன்.” என்றதும், அவளது விழிகள் விரிந்தன.

“அப்பா! எவ்ளோ பெரிய கண்ணு. குண்டு குண்டா மீன் மாதிரி. அதுலயே சொக்கிக் கிடக்கலாம் போலயே! கடவுளே! நீ என்ன ரொம்ப சோதிச்சிட்ட. சீக்கிரமே இதுக்கெல்லாம் முடிவு கட்டறேன்.” என்று அவனுக்குள்ளேயே சொல்லிக் கொண்டவன்.

“சரி, கலெக்டர் அம்மா. இவ்ளோ நேரம் உங்களப் பத்தியே பேசிட்டு இருந்துட்டேன். இப்போ விஷயத்துக்கு வரேன்.” என்று அவள் முன்பு வந்து நின்றான்.

“நம்ம மேட்டருக்கு வருவோம். அந்த செல்வம் கேஸூ. அதான், உங்க அக்கா புருஷன சொன்னேன். அவன் எல்லா ஆதாரத்தையும் எங்கயோ மறச்சு வைச்சுட்டு செத்துப் போய்ட்டான். அவன் பொண்டாட்டி, அதான் உங்க அக்கா இந்நேரம் உங்ககிட்ட எல்லா உண்மையையும் சொல்லிருப்பான்னு நினைக்கிறேன். அதனால, கூடிய சீக்கிரமே அந்த ஆதாரத்த என் கைல கொடுத்துட்டு நீங்க நிம்மதியா இருங்க. அதை விட்டுட்டு இந்த நேர்மை, நீதி, நியாயம்னு பேசினா, இந்த பரமசிவனோட இன்னொரு முகத்தை நீங்க பார்க்க வேண்டியது வரும். நான் உங்ககிட்ட மட்டும் தான் இவ்ளோ அடக்கமா, மரியாதையா பேசிட்டிருக்கேன். நீங்க வேணும்னா என்னோட பசங்ககிட்ட கேட்டுப் பாருங்க.” என்று அவர்களை கை நீட்ட,

அவர்களோ சிரித்துக்கொண்டே, “ஆமாங்கண்ணி.” என்று சொன்னதும், அவர்களை எரித்து விடுவதைப் போல் பார்த்தாள்.

“ம்ம்.. புத்திசாலி பசங்க. சரியா சொன்னாங்க.” என்று அவன் மறைமுகமாய் பேசினான்.

“சரி, நான் அப்போ வரேன் கலெக்டர் அம்மா. இனிமேல் அடிக்கடி உங்கள பார்க்க வேண்டியது வரும். தோணுச்சுன்னா வந்திடுவேன்.” என்று சொல்லி கிளம்ப முயன்றவனை,

“ஒரு நிமிஷம். இருங்க.” என்று சொன்னவள், நேரே மேலே சென்றாள்.

சிறிது நேரத்திலேயே கீழே வந்தவள், கையில் பேப்பரால் சுற்றப்பட்ட ஒன்றை எடுத்து வந்தாள். அதை அவனிடம் கொடுத்தாள்.

வாங்கியவன், “இது என்ன கலெக்டர் அம்மா? இவ்ளோ பெரிசா?” என்றவனிடம்,

“நீங்க கேட்டீங்க தானே! அதான் உடனே கொடுத்துட்டேன். நீங்களே பாருங்க.” என்று சொன்னதும்,

“ச்சே. இவ்ளோ சீக்கிரம் உடனே கொடுத்திட்டீங்களா?” என்று ஆவலாய் பிரித்தவனுக்கு அதிர்ச்சி. அவன் கூடவே வந்தவரகளும் அதிர்ந்துதான் போயினர்.

நேற்று இனியன் உடைத்த அவனது உருவ போட்டோவை பேப்பரை சுற்றி அவனிடமே கொடுத்து விட்டாள் அஞ்சலி. அவன் முகத்தில் ஈயாடவில்லை. முகமே சொங்கிப் போனது.

“நீங்க இன்னும் கொஞ்ச நாளைக்கு இப்படியெ பண்ணிட்டிருந்தா உங்க நிலைமை உங்க போட்டோ மாதிரியே ஆயிடும். அதனால கொஞ்சம் கேர்ஃபுல்லாவே இருங்க.” என்று மிரட்டும் தொணியில் பேசினாள்.

அதற்க்கு மேல் அவன் அங்கு நிற்கவில்லை. அந்தப் படத்தை தன் ஆட்களிடம் கொடுத்துவிட்டு விருட்டென்று செல்லும் போதே, சரியாக இனியன் அப்போதுதான் ஜீப்பில் வந்து இறங்கினான்.

இனியனும் அவனைக் கண்டுகொண்டான். வரும் போதே, இத்தனை ஆட்கள் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து அவனுக்கு சற்று பதட்டமாகத்தான் இருந்தது.

பரமசிவன் அவன் அருகே வந்து நின்றான். “வாங்க அஸிஸ்டண்ட் கமிஷனர் சார். இவ்ளோ நேரம் கலெக்டர் அம்மாகிட்ட தான் பேசிட்டிருந்தேன். நீங்க இப்போ தான் வரீங்க.?” என்று சொன்னதும், அவனை ஒரு பார்வை பார்த்தான்.

“ஒண்ணும் இல்ல, சும்மா பேசிட்டு போலாம்னு தான் வந்தேன். அதுக்கு, அவங்க ஒரு பரிசக் கொடுத்துட்டாங்க.” என்று தன் கிழிந்த போட்டோவைக் காட்டினான்.

அதைப் பார்த்ததும், இனியனின் முகம் மாறியது.

“இதைக் குடுத்துட்டு கலெக்டர் அம்மா ஒரு வார்த்தை சொன்னாங்க. இனிமேல் நீங்க கேர்ஃபுல்லா இருக்கணும்னு. ஆனா, பாவம் அவங்களுக்குத் தெரியல, அது உங்களுக்குத்தான்னு.” என்று சொல்ல,

இனியன் அதிர்ந்தான். “புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு தனது காரில் சென்று வேகமாய் ஏறிக் கிளம்பிவிட்டான் அனைவருடன்.

அவன் சொன்ன வார்த்தைகள் திரும்பத் திரும்ப இனியனின் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தன. ஏதோவொன்று நடக்க இருப்பதாய், அவனது வார்த்தைகள் அவனை எச்சரித்தன.

(தொடரும்...)

 
Top