கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆதிரையின் யாதுமாகி நின்றாய் 2 - அத்தியாயம் 34

Aathirai

Active member
இதுவரை...

புதிதாக வேலூரில் பதவியை ஏற்க வந்த இனியனும், அஞ்சலியும் பரமசிவனின் அடுத்தடுத்த ஆரம்பகட்ட நடவடிக்கைகளால் மெல்ல தடுமாறுகின்றனர். அவர்கள் வீட்டிற்க்கே வந்து அஞ்சலியைப் பற்றி கண்ணியமற்ற முறையில் பேசி அவள் மேல் இருக்கும் ஆசையை வெளிப்படுத்துகிறான் பரமசிவன். பதிலுக்கு அவனது கிழிந்த நிலையில் இருக்கும் போட்டோவை அவனுக்குத் தருகிறாள் அஞ்சலி. அதை அறிந்த இனியன் அவள் மேல் கோபம் கொள்கிறான். எப்படியோ சமாதானம் செய்தவள், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிடுகிறாள்...

இனி....



அத்தியாயம் 34

பரமசிவனிடம் அஞ்சலி செய்த செயலை ஒரு திடமாய் மனம் ஏற்றுக்கொண்டாலும், இனி அவன் அடுத்து என்ன செய்யக் காத்திருக்கிறானோ என்ற அச்சம் இனியனை தூங்கவே விடவில்லை.

அடுத்த நாள் எழாமல் அசந்து தூங்கிக்கொண்டிருந்தவனை எழுப்பினாள் அஞ்சலி.

“இனி.. ஏய் இனி.. எழுந்திரு.. டைம் ஆச்சுடா..” என்று அவனைப் பிடித்து உலுக்கினாள்.

“இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன் செல்லம். நைட் சரியா தூங்கல.” என்றான் தூக்கக் கலக்கத்தில்.

அப்போதுதான் அவன் சரியாகத் தூங்கவில்லை என்று அவளுக்குத் தெரிந்தது. அதே நிலைதான் அவளுக்கும். அவன் என்ன செய்வானோ.? என்ற எண்ணம் அவளையும் ஆட்கொண்டிருந்தது. இருந்தாலும், மனதை திடமாகவும், தைரியமாகவும் வைத்திருப்பது அவசியம் என்று நினைத்து குளிக்கச் சென்றாள் அஞ்சலி.

குளித்து முடித்து வந்த போதும் இனியன் எழாமலே இருந்தான். இதற்க்கு மேல் விட்டால் இன்னும் தூங்கிக்கொண்டே இருப்பான் என்று நினைத்தவள், அவனை வம்படியாய் எழுப்பி விட்டாள்.

“எழுந்திருக்கவே முடியல செல்லம். ரொம்ப தூக்கமா வருது.” என்று திரும்பவும் படுக்கப் போனவனை அப்படியே பிடித்து இழுத்தாள்.

“அதெல்லாம் தெரியாது. நீ போய் குளிச்சுட்டு வா. தூக்கம் எல்லாம் போய்டும். டைம் ரொம்ப இல்ல. கிளம்பு.” என்று சொல்லி அவனை பாத்ரூமில் தள்ளி விட்டாள்.

முடியாவிட்டாலும், அவள் சொன்னதற்க்காக குளித்து முடித்து வந்தான் இனியன். அவள் அதற்க்குள் காலை உணவை தயாரிக்கும் மும்முரத்தில் இருந்தாள். அவளைத் தேடி வந்தவன், அவள் பரபரப்பாய் இருப்பதைப் பார்த்து சிறிது உதவ நினைத்தான்.

“கொடு நான் காய் கட் பண்றேன்.” என்று வாங்கி காய்கறிகளை நறுக்க ஆரம்பித்தான். அதே போல் இருவருக்கும் பேசலாமா.? வேண்டாமா.? என்பதைப் போல் பல யோசனைகள் மனதில் ஓடிக்கொண்டே தான் இருந்தன.

“இனி, இன்னைக்கு முதல் வேளையா கமிஷனரப் பார்த்து விஷயத்தை சொல்லு. அதே மாதிரி நீ அருண்கிட்ட, மைதிலிட்டயும் சொல்லிடு. நானும், அவங்ககிட்ட பேசிடறேன்.” என்றாள் அஞ்சலி.

“ம்ம்.. நானும் அதைப்பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கேன். அவர்கிட்ட பேசிட்டு உனக்கு என்னன்னு சொல்றேன். ஆனா, எனக்கு ஒரு டௌட். நாமதான் அருணையும், மைதிலியையும் இங்க வரதுக்கு பிளான் பண்றோம். ஆனா, அவங்க வரதுக்கு இஷ்டமில்லைன்னு சொல்லிட்டா என்ன பண்றது.?” என்றான் இனியன்.

“இல்ல இனி, எனக்கு நம்பிக்கை இருக்கு. ஏன்னா, இது மைதிலியோட சொந்த ஊரு. அதனால அவளுக்கு இங்க வரதுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஆனா, அருண் எப்படின்னு தெரியல.? பேசிப் பாரு. நமக்கு வேற வழியும் இல்ல. அவங்க ரெண்டு பேரும் இருந்தா நமக்கு கண்டிப்பா ஹெல்ப்பா இருக்கும். வந்துட்டாங்கன்னா நம்ம பிளான ஆரம்பிக்கலாம்.” என்றாள்.

“ம்ம்.. ஓகே. பார்க்கலாம்.” என்று காய்கறிகளை நறுக்கி முடித்தவன், அவளிடம் தந்துவிட்டுச் சென்றான். இருவரும் சாப்பிட்டுவிட்டு அவரவர் அலுவலகத்திற்க்குச் சென்றனர்.

அஞ்சலி சென்றதுமே ஆட்சியர் அவளைத் தனது அறைக்கு வரச் சொன்னார். கண்டிப்பாக இது பரமசிவனின் வேலையாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவள், ஒரு மன தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சென்றாள்.

உள்ளே சென்றதும், அவளை நிமிர்ந்து பார்த்த ஆட்சியர் அவளை ஒரு மரியாதைக்குக் கூட அமரச் சொல்லவில்லை. அவளை முறைத்துக்கொண்டே பேசினார்.

“என்ன மேடம், இங்க வந்ததுக்கப்பறம் ரொம்ப திமிர் வந்துடுச்சோ.? யார்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு உங்களுக்கு கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்ல.? ரொம்ப ஓவரா போறீங்க. இதெல்லாம் நல்லதுக்கில்ல. கொஞ்சம் கேர்ஃபுல்லா நடந்துக்கோங்க.” என்று கிட்டத்தட்ட மிரட்டும் தொணியிலேயே பேசினார்.

அஞ்சலி இதை எதிர்பார்த்தவளாய், கைகளைக் கட்டிக்கொண்டு பேசினாள்.

“சார், எந்த ஒரு விஷயத்தையும் மேலோட்டமா சொன்னா எனக்கு எப்படி சார் தெரியும்.? எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லுங்க.” என்றாள் வேண்டுமென்றே.

“நேத்து உங்க வீட்டுல நடந்த விஷயத்தைப்பத்தி தான் பேசிட்டு இருக்கேன். உங்களுக்குப் புரியலையா.?” என்றார் எரிச்சலாய்.

“நேத்து எங்க வீட்டுல என்ன நடந்தது சார்.? எதுவும் நடக்கலையே.?” என்றாள் சாதாரணமாக.

“ஹலோ.. எங்களுக்கு எல்லாமே தெரியும். நீங்க சொல்லைன்னா தெரியாம போய்டுமா.? நேத்து பரமசிவன் சார் உங்க வீட்டுக்கு வந்ததும், அவர நீங்க அவமானப்படுத்தினதும் தெரியும். ஒரு பெரிய மனுஷன்கிட்ட இப்படியா பிஹேவ் பண்ணுவீங்க.?” என்றார்.

“இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும் சார்.? அவரே போன் பண்ணி என்னோட படத்தை நாசம் பண்ணிருக்காங்கன்னு சொன்னாரா.?” என்றாள்.

“எந்த ஒரு பெரிய விஷயமும் என்னோட காதுக்கு ஈஸியா வந்துடும். அதுக்கு அவர்தான் போன் பண்ணி சொல்லணும்னு எந்த அவசியம் இல்ல.” என்றார் அவர்.

“ஆனா, அதுதான் உண்மை கலெக்டர் சார். அது எனக்கும் தெரியும். இங்க நீங்க பேசற ஒவ்வொரு வார்த்தையும் யார் சொல்லிக்கொடுத்துன்னும் எனக்குத் தெரியும்.” என்றாள்.

“ஹலோ.. இங்க பாருங்க. நான் யார் சொல்லியும் உங்ககிட்ட பேசல. ஒரு பெரிய பதவில இருக்கறவர இப்படி பண்ணா அது எவ்ளோ பெரிய இஷ்யூ ஆகும்னு தெரியாம நீங்க இருக்கீங்க. அத உங்களுக்குத் தெரியப்படுத்தணும்னு தான் உங்ககிட்ட பேசிட்டிருக்கேன்.” என்றார் சமாளித்து.

“சார், இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. நம்ம ஆஃபீஸ்க்கு தினம் தினம் எத்தனையோ பிரச்சினைகள் கம்ப்ளைண்ட்டா வருது. எத்தனையோ மனுக்கள்ல நிறைய பிரச்சினைகள தீர்த்து வைக்கச் சொல்லி மக்கள் நம்மகிட்ட முறையிடறாங்க. அது சம்பந்தமா இதுவரைக்கும் எங்க யார்கிட்டயாவது இதுமாதிரி பேசிருக்கீங்களா.? ஆனா, இது ஒரு விஷயம்னு என்னைக் கூப்பிட்டு கேட்டுட்டு இருக்கீங்க. இதுலயே உங்க லட்சணம் தெரியுது சார். ஆனா, நான் இதுக்கெல்லாம் பயப்பட மாட்டேன். என மனசுக்கு சரின்னு தோணுச்சுன்னா அத நான் கண்டிப்பா செய்வேன். இதுக்காக நான் எதையும் பேஸ் பண்ணத் தயாரா இருக்கேன்.” என்றாள் தைரியமாக.

“ஓ! அப்போ ஃபேஸ் பண்ணத் தயாராவே இருங்க. இதோட சீரியஸ்னெஸ் தெரியாம நீங்க அவரோட விளையாடறீங்க. ஆஸ் அ கலெக்டரா ஒரு சப்-கலெக்டர காப்பத்தணும்னு நினைச்சு உங்களக் கூப்பிட்டு வார்ன் பண்ணா, நீங்க ரொம்ப திமிராவே பேசறீங்க. இதுக்கும் மேல உங்க்கிட்ட பேசறது மை வேஸ்ட் ஆஃப் டைம். யூ கேன் கோ.” என்று முகத்தில் அறைந்தாற் போல் பேசி அனுப்பினார்.

அவளும் நிதானமாய் அவரைப் பார்த்துக்கொண்டு வெளியே வந்தாள். வந்தவளுக்கு அத்தனை கோபமும் அந்த பரமசிவனின் மேலேயே திரும்பியிருந்தது. அவனை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் இன்னும் அதிகமானது மனதில். அதற்க்கான திட்டத்தை சீக்கிரமே போட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வந்தாள்.

அதே சமயம், அங்கே தனது ஆணையரிடம் நடந்த விஷயங்களைக் கூறிக்கொண்டிருந்தான் இனியன்.

“அவன் பண்ணது ரொம்ப அசிங்கம் இனியன். உங்க வைஃப் இடத்துல நான் இருந்திருந்தா கண்டிப்பா அவன அங்கயே கொன்னிருப்பேன். ஆனா, அவங்க கோபத்த அவனோட போட்டோ மேல காட்டி சைலண்ட்டா அவன் மேல இருக்க கோபத்தையும், வெறுப்பையும் சொல்லிட்டாங்க. அந்த விஷயத்துல அவங்க ரொம்ப புத்திசாலி. ஆனா, அவன் இனிமேல் தான் உங்க ரெண்டு பேருக்கும் நிறைய டார்ச்சர் கொடுப்பான்னு தோணுது. சோ, நீங்க ரெண்டு பேருமே கேர்ஃபுல்லா தான் இருக்கணும்.” என்றார் அவர்.

“இந்த விஷயத்துல உங்ககிட்ட ஒரு ஹெல்ப் வேணும் சார்.” என்றான்.

“சொல்லுங்க. என்னால முடிஞ்சா நான் கண்டிப்பா பண்ணுவேன்.” என்றார் அவர்.

“சார், என்னோட ஃப்ரெண்ட்ஸ் மிஸ்.மைதிலியும், அருணும் கடலூர், நாகப்பட்டினம்ல ஏ.சி.பி யா இருக்காங்க. அவங்கள இங்க ட்ரான்ஸ்பர் பண்ணா, நாங்க எல்லாரும் ஒரு டீமா சேர்ந்து வொர்க் பண்ணி அவன எப்படியாவது மடக்கிடுவோம். அது உங்களால முடியுமா சார்.?” என்றான் இனியன்.

அவன் சொன்னதுமே ஒரு நிமிடம் யோசித்தவர், “ஓகே இனியன் கண்டிப்பா என்னோட சைட்ல நான் ட்ரை பண்றேன். எப்படியாவது அவன இந்த ஊர விட்டு ஏன் உலகத்த விட்டு அனுப்பினா தான் விடிவுகாலம் வரும்னு நினைக்கிறேன். இல்லைன்னா இந்த மாதிரி ஒவ்வொருத்தரையும் அவன் டார்ச்சர் பண்ணிட்டே தான் இருப்பான்.” என்றார்.

“ஆமா சார். அவனுக்கொரு முடிவு கட்டியே ஆகணும். நம்மளால முடிஞ்சத செய்வோம் சார். மீதிய நமக்கு மேல இருக்க கடவுளே பார்த்துப்பார்.” என்றான்.

அவரும் சிரித்துக்கொண்டே அதை ஆமோதித்தார். அதன் பிறகு, மதிய வேளையில் அருணுக்கும், மைதிலிக்கும், அஞ்சலிக்கும் ஒரே நேரத்தில் அழைப்பை இணைத்து பேசினான் இனியன். திடீரென அதுவும், மூவரும் ஒரே இணைப்பில் வருவது கண்டு ஆச்சர்யத்துடன் போனை எடுத்துப் பேசினர் அருணும், மைதிலியும்.

“டேய். என்னடா திடீர்னு கான்ஃப்ரென்ஸ் கால் கனெக்ட் பண்ணிருக்க.? ஏதாவது விசேஷமா.?” என்று சிரித்துக்கொண்டே அருண் கிண்டலாகக் கேட்டான்.

“டேய். மவனே, நீ நேர்ல மட்டும் இருந்த உன்னை அடிச்சிருப்பேன். நீ தப்பிச்சிட்ட.” என்றான் இனியன்.

“அதனால என்ன இனியா, அவன் நேர்ல வந்ததும் கொடுத்துட்டா போச்சு. உன்னோட பங்குக்கு நானும் சேர்ந்துக்கறேன்.” என்றாள் மைதிலி நக்கலாக.

“ஹூம்ம்.. வாம்மா வா. இதுதான் சான்ஸ்ன்னு என்னை அடிக்கக் கிளம்பிடுவியே.? இதுக்காகவே நான் அங்க வரமாட்டேன்.” என்றான் அருண்.

“ஆனா, நீங்க ரெண்டு பேரும் இங்க வந்தாகணும்.” என்றாள் அஞ்சலி இணைப்பில்.

அதைக் கேட்டு இருவரும் அமைதியான பின் கேட்டனர். “ஏன், என்னாச்சு அஞ்சலி. ஏதாவது ப்ராப்ளமா.?” என்றனர்.

ஆமாம் என்று, இருவரும் நேற்று அவர்கள் வீட்டில் நடந்த விஷயத்தைக் கூறினர். அதைக் கேட்டதும், நண்பர்களுக்கே கோபம் பற்றிக்கொண்டு வந்தது.

“என்ன ஒரு தைரியம்.? அவன் இப்படியெல்லாம் பேசினானா அஞ்சலி.? இனியன் இல்லாம போய்ட்டான். அவன் பிரிச்சி மேய்ஞ்சிருப்பான். அவனுக்கு இருக்கு ஒரு நாள்.” என்று கோபமாக சொன்னான் அருண்.

“ஆமா அஞ்சலி, அவன் கொஞ்சம் ஓவராவே போறான். எங்க சான்ஸ் கிடைக்கும் அவனப் புடிக்கணும்னு எல்லாரும் கங்கணம் கட்டிட்டு இருக்கோம். ஆனா, அவன் எல்லார் கையிலயும் சிக்காம ரொம்ப சாமர்த்தியமா எஸ்கேப்பாகிட்டிருக்கான். அவனுக்கு அரசியல் செல்வாக்கு அதிகம். பத்தாத்துக்கு இப்போ அவங்க அப்பா மினிஸ்டர் வேற. அதான் அவனுக்கு குளிர்விட்டுப் போச்சு.” என்றாள் மைதிலியும்.

“அவன் நம்மால சாதாரணமா புடிக்க முடியாது மைதிலி. அந்த ஸ்ட்ராங் எவிடென்ஸ் இப்போ யார்கிட்ட இருக்குன்னு முதல்ல தெரியணும். அக்காவும், அதைப்பத்தி என்கிட்ட தெளிவா எதுவும் சொல்லல. சோ, அதுல கொஞ்சம் எஃபர்ட் எடுத்துட்டா, அதுக்கப்பறம் எப்படியும் அவன புடிச்சிடலாம்.” என்றாள் அஞ்சலி.

“அதுமட்டுமில்ல, அவன கொஞ்சம் இல்லீகலா தான் நாம ஹேண்டில் பண்ணனும்.” என்றான் அருண்.

“எல்லாம் சரிதான். ஆனா, நீங்க அங்கயும், நாங்க இங்கயும் இருந்தா கண்டிப்பா எதுவும் பண்ண முடியாது. அதனால நீங்களும் இங்க இருக்கறது ரொம்ப முக்கியம். நான் கமிஷனர் சார்கிட்ட இதப்பத்தி சொன்னேன். கண்டிப்பா ஹெல்ப் பண்றேன்னு சொல்லியிருக்கார். ஆனா, நீங்க இங்க வரதுக்கு ஓகேன்னு சொன்னாதான் அடுத்த ஸ்டெப் எடுக்க முடியும். உங்களுக்கு ஓகே தான.?” என்றான் இனியன்.

“டபுள் ஓகே தான் இனியா, ஏன்னா என்னோட ஊருக்கே வர சொன்னா நான் சந்தோஷப்படுவேன். அம்மா, தம்பி, மாமான்னு எல்லார் கூடயும் இருக்கற சந்தோஷம் என்ன விட்டுப் போய் ரொம்ப மாசம் ஆச்சு. சோ, எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல. அந்த தடியனுக்கு தான் ஓகேவான்னு தெரியல.” என்றாள் மைதிலி வேண்டுமென்றே.

“ஏய். யாரப்பாத்து தடியன்னு சொன்ன.? இருக்கட்டும் நேர்ல வந்து பார்த்துக்கறேன்.” என்றவன், “எனக்கும் ஒன்னும் ப்ராப்ளம் இல்ல இனியா. திரும்பவும் நாம எல்லாரும் ஒன்னா சேர்ந்து இருக்கப்போறோம்னு நினைச்சாலே ரொம்ப ஹேப்பியா இருக்கு. உன்னோட சைட்ல நீ என்ன பண்ணனுமோ பண்ணிடு.” என்றான் அருணும்.

“ஓகே டா. ரொம்ப சந்தோஷம். நீங்க ரெண்டு பேரும் என்ன சொல்வீங்களோன்னு தான் நானும், அஞ்சலியும் பேசிக்கிட்டோம். இப்போ தான் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கு.” என்று சொன்னான் இனியன்.

சிறிது நேரம் பேசிவிட்டு நால்வரும் அவரவர் வேலையில் ஆழ்ந்தனர். ஆனால், இவர்கள் இருவரும் வந்த பிறகு, அந்த சந்தோஷம் நீண்ட நாள் நீடிக்காது என்பதை அந்த ஆண்டவனே நினைத்தது போல, அங்கு ஆங்காரமாய் ஒரு கையைத் தன் தொடையில் தட்டி சிரித்துக்கொண்டிருந்தான் பரமசிவன்.

(தொடரும்...)



 
Top