கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆதிரையின் யாதுமாகி நின்றாய் 2 - அத்தியாயம் 35

Aathirai

Active member
அத்தியாயம் 35

இனியனும், அஞ்சலியும் நினைத்தது போலவே, ஒரே வாரத்தில் அருணையும், மைதிலியையும் இங்கே ட்ரான்ஸ்ஃபர் செய்வதற்க்கான முயற்சி வெற்றி பெற்றது. ஆணையர். திருநாவுக்கரசின் உதவியால் தான் அது நடந்தது.

அவர்கள் நால்வரும் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அன்று ஞாயிறு மாலை நால்வரும் இனியன்-அஞ்சலி வீட்டில் சந்தித்துக்கொண்டனர்.

“எப்படியோ ஒருவழியா நாம எல்லாரும் திரும்பவும் ஒன்னா இருந்து வேலை செய்யப் போறோம். நம்ம ஊருக்கு வந்ததுமே ஒரு தனி உற்சாகம் வந்துடுச்சு.” என்று சந்தோஷத்தில் பேசிக்கொண்டிருந்தான் அருண்.

“டேய். ரொம்ப பேசாத. அந்தப் பரமசிவனுக்கு இந்நேரம் இதுகூட தகவல் போயிருந்தாலும், போயிருக்கும். நாம பிளான் பண்றதுக்கு முன்னாடியே, அவன் நம்மள விட அதிகமா பிளான் பண்ணுவான். சோ, நாமெல்லாம் ரொம்ப கேர்ஃபுல்லா தான் இருக்கணும்.” என்று சொன்னாள் மைதிலி.

“கரெக்ட் தான் மைதிலி. ஆனா, அவன் பிளான் பண்றதுக்கு முன்னாடியே, நாம அவன யோசிக்கவே விடாத மாதிரி கொஞ்சம் அவன டென்ஷனாக்குனா என்ன.?” என்றான் இனியன்.

“அவன டென்ஷனாக்குவியா.? என்னடா பேசற.?” என்றான் அருண்.

“ம்ம்.. இனி சொல்றது கரெக்ட் தான் அருண். ஒருத்தர் ஒரு விஷயத்த யோசிக்கறதுக்கு முன்னாடியே அதை தடுக்கற மாதிரி நிறைய விஷயங்கள் நடந்தா, அவங்க அதுல இருந்து வெளிவரதுக்கே நாள் ஆகும். அதனால, அவனப் பத்தின பழைய கேஸெல்லாம் புரட்டி அதுல அவன எப்படி மாட்டிவிடலாம்னு யோசிங்க.” என்றாள் அஞ்சலி.

“ஏய். அஞ்சலி. நீதான் இதெல்லாம் சொல்றியா.? நீ எப்படி இந்த அளவுக்கு மாஸ்டர் பிளான் பண்ண கத்துக்கிட்ட.?” என்றாள் மைதிலி ஆச்சர்யமாக.

“எல்லா பிளானுமே அஞ்சலியோடதுதான். இப்போன்னு இல்ல, அவ மொதல்ல இருந்தே இந்த மாதிரி நல்ல நல்ல ஐடியா கொடுப்பா. பேசாம நம்ம டிபார்ட்மெண்ட்ல இருந்தா இன்னும் நல்லா இருக்கும்.” என்றான் இனியன்.

“உங்க டிபார்ட்மெண்ட்ல இல்லைன்னாலும், உங்க கூடவே தான இருக்கேன். அப்பறம் என்னப்பா.?” என்றாள் அஞ்சலி.

“அதுவும் சரிதான். எல்லாரும் ஒரே டிபார்ட்மெண்ட்ல இருக்கறத விட, ஒருத்தர் நம்மள விட கொஞ்சம் அதிகமான அதிகராத்துல இருக்கறது கூட நல்லதுதான்.” என்றாள் மைதிலி.

அதைக் கேட்டு சிரித்தாள் அஞ்சலி. “சரி, நாளைக்கு ஜாய்ன் பண்ணதும் என்ன பண்ணப் போறோம் இனியா.?” என்றான் அருண்.

“நம்ம கூட இன்னும் மூணு பேர டீமா வச்சுட்டு கோதாவுல இறங்க வேண்டியது தான். அவங்களும் நம்ம கூட இருந்தா கண்டிப்பா ஹெல்ஃப்ஃபுல்லா இருக்கும்.” என்றான் இனியன்.

“ஓகே இனியா. ஆனா, அவங்க எந்த அளவுக்கு நம்பிக்கையானவங்கன்னு நமக்குத் தெரியும்.?” என்றாள் மைதிலி.

“இவ்ளோ நாள் பார்த்தது வச்சு தான் சொல்றேன். அதுவும் இல்லாம கமிஷனரே ரெக்கமண்ட் பண்ணாரு. அவர் சொன்னா கண்டிப்பா சரியாதான் இருக்கும். நாளைக்கு உங்களுக்கு அவங்கள இன்ட்ரோடியூஸ் பண்றேன். அதோட, நாம எந்த விஷய்த்த பண்றதுன்னாலும், எல்லாமே கொஞ்சம் சீக்ரெட்டா இருக்கட்டும். நம்ம ஃபேமிலிட்ட கூட சொல்ல வேண்டாம்.” என்றான் இனியன்.

அதை ஆமோதிப்பவர்களாக இருவரும் தலையாட்டினர். அருண் எதையோ தீவிரமாக யோசித்தவன்,

“சரி, நம்ம டிபார்ட்மெண்ட் இல்லாம இன்னும் ரெண்டு டிபார்ட்மெண்ட் கூட இருந்தா நல்லா தான் இருக்கும்.” என்றான்.

“எதை டா சொல்ற மரமண்டை.?” என்றாள் மைதிலி.

அவளை முறைத்தவன், “நீதித் துறையும், பத்திரிக்கை துறையும்.” என்றான்.

“அதாவது ஒரு லாயரும், ஒரு ஜர்னலிஸ்ட்டும் கூட வேணும்னு சொல்ற.” என்றான் இனியன்.

“ஆமா. ஏன்னா, நாம தூசி தட்டற விஷயங்கள கேஸ் போட்டா தான் சரிவரும். அப்போ பார்த்தா, அதுல சப்போர்ட் பண்ற மாதிரி ஒரு லாயர் இருக்கணும் இல்ல.? அதே மாதிரி அந்த விஷயத்த பெரிசாக்கி, அத மக்கள் கிட்ட சேர்க்கறதுக்கு ஒரு நல்ல ஜர்னலிஸ்ட்டும் தேவை தான.?” என்றான் அருண்.

அவன் அதைச் சொன்னதும், மூவரும் அவனை ஆச்சர்யமாகப் பார்த்தனர். “டேய். இந்த மண்டைக்குள்ள மூளை இருக்கான்னு நிறைய டைம் சந்தேகப்பட்டிருக்கேன். ஆனா, இன்னைக்கு தான் கொஞ்சம் ஃபீல் பண்றேன். உனக்குள்ள மூளைன்னு ஒன்னு இருக்கு.” என்றாள் மைதிலி கிண்டலாக.

“ஏய். என்ன கிண்டலா.? மனுஷன் எவ்ளோ யோசிச்சு யூஸ்ஃபுல்லா ஒரு விஷயத்த சொன்னா, உனக்கு இருக்கு கொழுப்பு.” என்று அவளை கடிந்தான் அருண்.

“வாழ்க்கைலயே ஒரு உருப்படியான விஷயத்த இன்னைக்குதாண்டா சொல்லியிருக்க. அதுக்காகவே உன்னைப் பாராட்டலாம். சரி, அந்த ரெண்டு பேரையும் நீயே சூஸ் பண்ணு.” என்றான் இனியன்.

“பரமசிவனுக்கு ஆப்போசிட்டா வாதடற லாயர்ன்னா, இன்பா அதாவது, இன்பராஜ். என்னோட ஃப்ரெண்ட் ஒருத்தன் மூலமா அவர் நல்ல பழக்கம். அவனுக்கு ஆப்போசிட்டா நிறைய கேஸ் வாதாடி இருக்கார். ஆனா, அவன் வேற யாரையாவது சிக்க வச்சிட்டு எப்படியோ எஸ்கேப் ஆகிடுவான். அதனால, எப்படியாவது அவனுக்கு எதிரா ஏதாவது ஸ்ட்ராங்கான எவிடென்ஸ் கிடைக்குமான்னு எதிர்பார்த்துட்டிருக்கார். அதனால அவர் நமக்கு கண்டிப்ப ஹெல்ஃப் பண்ணுவார்.” என்றான் அருண்.

“அருண், நீங்க சொன்ன விஷயம் நிஜமாவே சூப்பர். உங்களப் பாராட்டணும். கரெக்ட்டான ஒரு ஆளையும் சஜஸ்ட் பண்ணிருக்கீங்க.” என்றாள் அஞ்சலி.

“சரிடா, மீடியால இருந்து யாருடா நமக்கு சப்போர்ட் பண்ணுவா.?” என்றாள் மைதிலி.

“அட, நம்ம ஜீவா தான். அவன் தான், இப்போ நிறைய விஷயங்கள அவங்க நியூஸ்பேப்பர்க்கு தரது. அதோட, நிறைய புக்கும் ப்பளிஷ் பண்ண ஆரம்பிச்சிட்டான்.” என்று அருண் சொன்னவுடன் அஞ்சலியின் முகம் சற்றே சுருங்கியது.

அதை இனியனும், மைதிலியும் கவனித்து விட்டார்கள்.

“டேய். நீதான் அவன சொல்ற. ஆனா, அவன் நமக்கு எப்படிடா ஹெல்ஃப் பண்ணுவான்.? எனக்குத் தெரிஞ்சு டவுட் தான்.” என்றாள் மைதிலி.

“நீ உன் அத்த பையனப் பத்தி அவ்ளோதான் தெரிஞ்சு வச்சிருக்க. ஆனா, எனக்கு என் நண்பனப் பத்தி தெரியாதா.?” என்றான் அருண்.

“சரி, அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சா.? இல்லையா.?” என்றாள் அஞ்சலி.

“அவன் வீட்டுல ஓகே சொல்லிட்டாங்க. பொண்ணு சைட்ல கொஞ்சம் தகராறு பண்றாங்களாம். அதனால சார் வெய்ட் பண்றார்.” என்றாள் மைதிலி.

அதைக் கேட்டும் அமைதியாகவே இருந்தாள். “ஏன், அஞ்சலி ஜீவா நம்மோட டீம்ல வொர்க் பண்றது உனக்கு ஓகே இல்லையா.?” என்று கேட்டான் அருண்.

“தெரியல. ஆனா, ஆரம்பத்துல இருந்தே அவரோட முழியே சரியில்ல. அதான் கொஞ்சம் யோசிக்க வேண்டியதா இருக்கு.” என்றாள்.

“ஏய். அதெல்லாம் அவன் விளையாட்டுக்கு பண்றது. நீ ரொம்ப சீரியஸ் ஆகாத. இனியனப் பார்த்தாலே அவன் மிரண்டு ஓடிடுவான். உனக்கே தெரியும் தான.? அப்பறம் ஏன் ஃபீல் பண்ற.?” என்றாள் மைதிலி.

அப்போதும் அமைதியாகவே இருந்தாள். “சரி, நாங்க அப்படியே கிளம்பறோம் டா. நாளைல இருந்து டியூட்டில ஜாய்ன் பண்ணனும். பார்க்கலாம் மச்சான்.” என்று அவனை ஆரத்தழுவி விடைபெற்றான் அருண்.

அதே போல், மைதிலியும் சொல்லிக்கொண்டு புறப்பட்டாள். அவர்கள் சென்ற பிறகு, அமைதியாக நின்றிருந்த அஞ்சலியைத் தன் புறம் இழுத்து அணைத்தபடி பேசினான் இனியன்.

“ஏய். என்னாச்சு செல்லம்.? ஏன் ஒரு மாதிரி ஆயிட்ட.? ஜீவா வரது உனக்குப் புடிக்கலையா.?” என்றான்.

“ம்ம்.. ஏன்னு தெரியல இனி, அவர் என்னை லவ் பண்ணாருன்னு சொன்னதுல இருந்தே அவர் மேல எனக்கு நல்ல அபிப்ராயம் இல்ல. ஏதோ, என்னோட கதையக் கேட்டு அவர் புக் ப்பளிஷ் பண்ணாருன்னு தெரிஞ்சதும் ஏதோ கொஞ்சம் அவரப் பத்தின நல்ல எண்ணம் மனசுல இருக்கு. இருந்தாலும் ஏனோ, புடிக்கல.” என்றாள்.

“உனக்கு ஏன் புடிக்கலன்னு எனக்குத் தெரியும். நீ பரமசிவனோட வார்த்தைகளக் கேட்ட்துனால, உன்னை யாரெல்லாம் விரும்பறாங்களோ அவங்களோட பார்வைகள் சரிய இருந்தா கூட, உனக்கு இப்போ தப்பாதான் தெரியும். ஏன்னா அது இயல்பு. ஜீவா உன்னை ஒரு கட்டத்துல விரும்பினான். ஆனா, நீ எனக்கானவள்ன்னு தெரிஞ்சதுக்கப்பறம் டீசண்ட்டா ஒதுங்கிட்டான். என்ன உன்னை சைட் அடிக்கறத மட்டும் நிறுத்தல. அதுக்குத்தான் அன்னைக்கு முதுகுல ரெண்டு அடி வைச்சேனே. பார்க்கல.?” என்றான்.

“அதெல்லாம் சரிதான். ஆனா, நீ இல்லாதப்போ அவரோட வேலைய கரெக்ட்டா பண்ணிட்டே தான் இருப்பாரு.” என்றாள் இன்னும் வருத்தத்தில்.

“அவன் கூட நீ இருக்கறத விட இனிமேல் நாங்க இருக்கறதுதான் அதிகமா இருக்கும். அப்பறம் நீ ஏன் கவலைப்படற.?” என்றான்.

“ம்ம்ம்...” என்று சமாதானத்திற்க்கு தலையாட்டி வைத்தாள்.

“ஜீவாக்காக கவலைப்படாத. ஆனா, அந்தப் பரமசிவன் அப்படி இல்லையே.! அவன தான் என்ன பண்றதுன்னு யோசிக்கணும். நீ இதே மாதிரி நிறைய ஐடியா கொடுத்து எங்கள சப்போர்ட் பண்ணு. அதே போதும். தேவையில்லாத விஷயத்துக்கெல்லாம் கலெக்டர் அம்மா கவலைப்பட்டா, மக்கள் எப்படி உன்னை நம்பி வருவாங்க.?” என்றான் கிண்டலாக சிரித்துக்கொண்டே.

“ம்ம்.. கடமைன்னு வந்துட்டா, எவனா இருந்தாலும் பார்த்துக்குவேன்.” என்றாள் ஒரு திமிராக.

“அப்பா, என்ன ஒரு டயலாக்.! ஆனா, இவன என்ன பண்ணுவ.?” என்றபடி அவளை அப்படியே அலேக்காக தூக்கினான்.

அதை எதிர்பார்த்தவளாய், “நீ என்னோட செல்ல ராஜா. உன்னை என்ன பண்ணப் போறேன்.?” என்றாள் வெட்கத்தில் குழைந்துகொண்டு.

“ஓ! அப்போ, ராஜா மன்மத லீலையை ஆரம்பிக்கட்டுமா ராணி.?” என்றான் கண்களில் கொண்ட காதலுடன்.

“ம்ம்...” என்றவள் அவனது தோள்களில் வெட்கத்துடன் சாய்ந்தாள். ராஜாவும், ராணியும் சந்தோஷமாக இருந்த இரவு அது.

அவர்கள் வீட்டிலிருந்து வந்த மைதிலி, தன் வீட்டிற்க்குள் நுழைந்தாள். அவளது அம்மா தேவி, இரவு உணவை முடித்து அனைத்தையும் சாப்பிடுவதற்க்காக தயாராய் வைத்திருந்தார்.

“அம்மா, டிஃபன் ரெடி ஆயிடுச்சா.?” என்றாள்.

“வாடி, காலைல தான் வந்த. அதுக்குள்ள ஃப்ரெண்ட்ஸப் பார்க்கணும்னு ஓடிட்ட.? பாரு நைட்டே ஆயிடுச்சு. இப்போதான் வர. இதுக்குத்தான் இந்த வேலை வேண்டாம்னு சொன்னேன். கேட்டாத்தான.?” என்று ஆரம்பித்தார்.

“ம்மா. தயவுசெய்து உன்னோட புராணத்த ஆரம்பிச்சுடாத. எனக்கு ஏற்கனவே ரொம்பப் பசிக்குது. நான் போய் கை, கால் கழுவிட்டு வந்திடறேன்.” என்றாள்.

“நான் ஏதாவது சொன்னா, என் வாய அடக்க வேண்டியது. எல்லாம் அவங்கவங்க இஷ்டத்துக்கு பண்ணுங்க.” என்று தன்னைப்போல் புலம்பியபடி இருக்க உள்ளே நுழைந்தார் அவரது தம்பி பிரபாகரன்.

“என்னக்கா, வீட்டுக்குள்ள வரும்போதே புலம்பிட்டு இருக்க.?” என்றார்.

“என்னால புலம்பத்தாண்டா முடியும். நான் சொன்னா இந்த வீட்டுல ஒரு புழு, பூச்சி கூட மதிக்க மாட்டிங்குதே.?” என்று சொன்னார் கவலையுடன்.

“அம்மா, புழு, பூச்சியெல்லாம் சுதந்திரமா தான் இருக்கும். யாரோட பேச்சையும் கேட்டுப் பண்றதில்ல. இதுக்கெல்லாமா ஃபீல் பண்ணுவ.?” என்று தனது முகத்தை துண்டால் துடைத்தபடி வந்தாள் மைதிலி.

அவள் சொன்னதைக் கேட்ட்தும் எரிச்சலானவர், “பாருடா. திமிரா பேசறா.? இவள என்ன சொல்ல.?” என்றார்.

“அக்கா, நீ அவளப் பத்தி கவலைப்படறத விட்டுட்டு அவளுக்கு டிஃபனப் போடு.” என்றபடி தனது அறைக்குச் சென்றார்.

“அதான், மாமாவே சொல்லிட்டாரு இல்ல.? அப்பறம் என்ன வா.” என்று தட்டுடன் டேபிளில் அமர்ந்தாள்.

இதற்க்கு மேல் பேசுவதற்க்கு ஒன்றும் இல்லை எனத் தெரிந்தவர், அவளுக்கு உணவைப் பறிமாறினார். அவள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே, யாருடனோ பேசியவாறே கையில் புதிய அலைபேசியுடன் உள்ளே வருபவனைப் பார்த்து முகத்தைச் சுருக்கினாள் மைதிலி.

ஆனால், அவனோ இவளைக் கண்டுகொள்ளவே இல்லை. பேச்சில் மும்முரமாய் இருந்தான். அவனை முறைத்துக்கொண்டே சாப்பிட்டு முடித்தவள், தட்டை கழுவிவிட்டு அவனது அறையில் நுழைந்தாள். அவன் அப்போதுதான் பேசி முடித்து திரும்பினான்.

என்ன என்பதைப் போல் பார்த்தவனை, “யாருடா போன்ல.?” என்றாள்.

“ஃப்ரெண்ட். ஏன்.?” என்றான்.

“வரவர உன் போக்கே சரியில்லன்னு அம்மா சொன்னாங்க. என்னதான் பண்ற.? என்ன வேலைக்குப் போற.?” என்றாள் சந்தேகத்துடன்.

“ஆமா, திருட்டுப் பட்டம் வாங்குனவனுக்கு கலெக்டர் தான் கூப்பிட்டு வேலை கொடுப்பாரு. என்னயும் மனுஷனா மதிச்சு நம்பற ஒரு கம்பெனில அக்கவுண்ட்ஸ் பார்த்துட்டுருக்கேன்.” என்றான் திமிராய்.

“கம்பெனி பேர் என்ன.?” என்று போலீஸ் தொணியிலேயே விசாரித்தாள்.

“ம்ம்.. மன்னாரன் கம்பெனி. உன்னோட போலீஸ் விசாரணையெல்லாம் உங்க டிபார்ட்மெண்ட்ல வச்சுக்க. என்கிட்ட வச்சுக்காத. தள்ளு.” என்று அவளை அவமதிப்பாய் பேசிவிட்டு விலகிச் சென்றவன் கன்னத்தில் பளாரென அறை விழுந்தது.

(தொடரும்...)





 
Top