கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆயிரம் காலத்துப் பயிர் 1

Rajalakshmi Narayanasamy

Moderator
Staff member
அதிகாலை ஐந்து மணிக்கே அப்பாவின் குரல் காதுகளில் ரீங்காரம் இடவும் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் செண்பகவல்லி.

இதெல்லாம் இப்போது சமீபகாலமாகத் தான் நடக்கிறது. சரியாகச் சொல்வதானால், அவள் பட்டப்படிப்பு முடிந்த சில நாட்களில் ஆரம்பித்தது.

அதற்கு முன்பானால், அவளை ஆறு முப்பது மணி வரை யாருமே எழுப்ப மாட்டார்கள். ஆனால், சரியாக ஆறு முப்பதிற்கு மூளையின் அலாரம் சிறப்பாய் செயல்பட்டு அவளைத் துயில் எழுப்பிவிடும்.

சரியாக அந்நேரம் தெருக்குழாயில் தண்ணீர் கொட்ட ஆரம்பிக்கவும், செண்பா கையில் குடத்தோடு குழாயடிக்குப் போகவும் சரியாக இருக்கும். அதன்பின் எட்டு முப்பது வரை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் சுமார் நாற்பது-ஐம்பது குடம் அளவுக்காவது நீர் பிடித்து சிமெண்ட் தொட்டி, அண்டா-குண்டா என எல்லா பாத்திரங்களிலும் நிரப்பினால் தான் அன்றைய பொழுது இலகுவாக ஓடும் வீட்டில்.

அல்லது தண்ணீரைத் தேடி எங்கெங்கெல்லாம் அலைவது? நீர் பிடித்துக் கொண்டே பல் விளக்கி, அம்மா போட்டு வைத்திருக்கும் ஆறிப்போன டீயை கடமைக்கு வாயில் கவிழ்த்து, குளித்து கிளம்பினால், காலை உணவை உண்ணக்கூட நேரமில்லாமல் கல்லூரிப் பேருந்தைப் பிடிக்க ஓட வேண்டும்.

பசுமை போர்த்திய குளுமையான கிராமம் என சொல்ல முடியாவிட்டாலும், குடிநீருக்குப் பஞ்சமில்லாத ஊராக இருந்தது அவளது கிராமம். ஆக, விவசாய நிலங்களில் கிணறு வெட்டி வைத்தவர்கள், வீட்டுத் தேவைக்கு தெருக் குழாய் தண்ணீரே போதுமென நினைத்ததால், அவள் தண்ணீர்குடம் சுமப்பது அக்கிராமத்தில் அனைவருமே செய்யும் ஓர் இயல்பான வேலையாகவே இருந்தது.

அதைப் பற்றி குறை சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் கல்லூரிப் படிப்பெல்லாம் முடிந்த இந்த சில நாட்களாக அவளை இப்படி அதிகாலைக்கே எழுப்பிக் கொண்டிருந்தனர்.

இன்னும் அவளது தந்தை நகர்ந்து செல்லவிலை என்பது அவரது கனைப்புக் குரலில் கேட்கவும், மூடியிருந்த கண்களை சட்டெனத் திறந்து பட்டென எழுந்து அமர்ந்தாள்.

பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு தன்னைப் பார்த்த மகளை கிஞ்சித்தும் இரக்கம் இல்லாத பார்வை பார்த்த ராகவன் குளியல் அறையை நோக்கி கண்ணை காட்டினார்

அதற்கு மேல் எதுவும் பேசாமல் எழுந்து சென்று அவள் முகம் கழுவி பல்துலக்கி வெளியே வரும்போது அவளுக்கான டீயுடன் தயாராய் நின்றார் அவளது தாயார் பாக்யா.

"அம்மா நீங்க எழுப்பினா எந்திரிக்க மாட்டேன்னு தினமும் அப்பாவை விட்டு என்ன எழுப்ப வைக்கிறீங்களே உங்களுக்கே இது நியாயமா தெரியுதா? பள்ளி கல்லூரி படிக்கும் போது கூட இப்படி நடுச்சாமத்தில் எழுந்தது இல்ல.. இப்ப ஏன் இப்படி எல்லாம் செய்றீங்க?" என்று நொந்து போன குரலில் கேட்டாள்

"நான் வந்து செல்லமே தங்கமே அப்டின்னு கொஞ்சிக்கிட்டு இருந்தா நீ எங்க எழுந்து வரப் போறே? அதனால் தான் உன் அப்பாவை எழுப்பி விடச் சொல்றது" என்றவாரே மகளின் தலையை ஆதரவாக கோதி விட்டு "போ போய் குளிச்சிட்டு வா, நேரம் ஆகுது பாரு" என்று இதமாகக் கூறினார்

"ஐயோ அம்மா வரவர உங்க தொல்லை எல்லாம் தாங்க முடியாம போய்க்கிட்டிருக்கு. சீக்கிரமே ஒரு வேலையைத் தேடிக்கிட்டு சென்னைக்கோ இல்ல பெங்களூருக்கோ உங்களை விட்டு ரொம்ப தூரம் போக போறேன். அப்போ தான் எனக்கு நிம்மதி" என படபடவென பொறிந்தாள்

"நாங்க என்னடா அம்மா செய்யட்டும் நீயே சொல்லு, முன்னே எல்லாம் பெண் பார்க்க வராங்கன்னா ரெண்டு நாள் முன்னாடியே தகவல் சொல்லி அனுப்புவாங்க, அவங்க வர நேரம் நாம அதுக்கேத்த மாதிரி தயாராய் இருக்கலாம். ஆனா இப்ப எல்லாம் அப்படி யார் வரா?"

"அப்பறம் எப்படி வர்றாங்க? எதுக்கு?"என சலித்தாள் மகள்.

"எல்லா இடத்திலும் பெண்கள் நல்லா படிச்சு நல்ல நிலைமையில் இருக்காங்க. பசங்க பாதி பேர் படிக்கிறாங்க. பாதிப்பேர் பாதியிலேயே படிப்பை நிப்பாட்டிட்டு வெளியூர் வெளிநாடு ராணுவம் ன்னு வேலைக்கு போயிடுறாங்க.

படித்த பெண்கள் எல்லாரும் உன்ன மாதிரி சாஃப்ட்வேர் பையன் தான் வேணும்னு அடம் பிடிக்கிறீங்க, அப்ப எப்படி மத்த வேலை பார்க்கிற பசங்களுக்கு எல்லாம் கல்யாணம் எப்படி நடக்கும்? பாவம் 90'ஸ் கிட்ஸ்" என ஏகத்துக்கும் பெருமூச்சு விட்டார் அவளது தாயார்.

"ரொம்ப கரிசனப்படாதேம்மா. நீ என்ன பையனோட அம்மா மாதிரி புலம்புற?" என கலாய்த்தாள் செண்பா.

"ஏன் டீ, உனக்கப்பறம் உன் அண்ணனுக்கு கல்யாணம் செய்யனுமே! அப்ப நானும் இப்படித் தானே லோல்படனும், அத நெனச்சாலே எனக்கு சோறு தொண்டைக்குழிய தாண்டி எறங்க மாட்டுதே" என அங்கலாய்த்தார் அன்னை.

அதை நினைத்தாள் செண்பகவல்லிக்குமே கண் கட்டத்தான் செய்தது.

ஆனாலும், அவள் அண்ணனின் படிப்பு, வெளிநாட்டு வேலையெல்லாம் கண் முன்னே வந்து போகவும், "மா, அண்ணன் படிப்பென்ன? வேலையென்ன? அதும் அண்ணன் மாதிரி ஆட்களுக்கெல்லாம் டிமாண்ட் அதிகம்மா, நீ அண்ணனுக்காக தெருத்தெருவா திரியுற காலம் வராது" என ஆறுதல் சொன்னாள் செண்பா.

இவ்வளவு நேரம் தன்னைப் பாடுபடுத்துகிறார்கள் என பட்டாசாய் வெடித்தவள், தாய் கவலைப்படவும் தன்னலம் மறந்து தாய்க்கு ஆறுதல் சொல்லும் பெண்ணை எண்ணி மனம் நிறைந்தது பாக்யாவிற்கு.

"பெண்ணுக்கு தட்டுப்பாடு ஆனாலும் ஆனது இந்த மாப்பிள்ளை வீட்டார் தொல்லை தாங்கலை" என புலம்பலுடன் காலை உணவு தயாரிக்கச் சென்றார் பாக்யா.

"அவங்களும் என்னம்மா செய்வாங்க? ஒரு நாளுக்கு நாலு அஞ்சு ஊருக்கு போய், கல்யாண வயசுல பெண் இருக்கா? அந்த பெண் அவங்க எதிர்பார்க்கிறார் போல படிச்சிருக்கா? ஜாதகம் பொருந்துதா அப்டின்னு எல்லாம் பார்த்து அலசி ஆராய்ஞ்சி, எல்லாம் ஒத்து வந்தா அதுக்கப்பறம் குடும்பம், பழக்கவழக்கம் எல்லாம் பார்த்து கல்யாணம் முடிவாக எப்படியும் 2-3 வருசம் ஆகிடுது. பையனுக்கு வயசு ஏறுதேன்னு கவலைப் பட்டு பெண் தேடுறவங்க அதிகமாகிட்டாங்க." என எதார்த்தத்தை எடுத்துரைத்தார் ராகவன்.

"ஆமாங்க, நம்ம செண்பா பிறந்தப்ப எல்லாம் 'என்ன பொம்பள பிள்ளையா' அப்டின்னு குறைவா பேசினவங்கல்லாம் இப்ப, 'உங்களுக்கென்ன பெண்பிள்ளை வச்சிருக்கீங்க. குடுத்து வச்சவங்க' அப்டின்னு மெச்சுதலா இல்ல பேசறாங்க" என ஆச்சர்யப்பட்டார் பாக்யா.

செண்பகவல்லி படித்து முடித்துவிட்ட தகவல் தமிழகம் முழுக்க தீயாய் பரவியதைப் போல், தினமும் சிலர் பெண் பார்க்கவென அவர்கள் வீட்டிற்கு படை எடுக்க ஆரம்பித்திருந்தனர். அதிலும் சிலர், அதிகாலை கண் விழித்து வாசல் தெளிக்கும் முன்பே பெண் பார்க்கவென வீட்டு வாசலில் காத்திருக்க ஆரம்பித்தனர்.

அவர்களது வட்டாரத்தில் அவ்வளவு மணமகள் பஞ்சம் நிலவியதே இப்படியான வருகைகளுக்குக் காரணம்.

ஓரிரு முறை மகளை வந்தவர்கள் முன்னே துயிலெழுப்பி ஓய்ந்து போன பாக்யா, இப்படிப்பட்ட தர்மசங்கடமான சூழல்களைத் தடுப்பதற்காக, தன் அருமை மகளை அதிகாலையிலேயே எழுப்பி தயார்ப்படுத்த ஆரம்பித்தார்.

ஆனால்,தாயின் கனிவான பேச்சுக்களுக்கெல்லாம் மசியாமல் தலைமுதல் கால் வரை போர்த்திக் கொண்டு செண்பா சுக நித்திரையில் ஆழவும் தினமும் அவளை எழுப்பும் வேலை ராகவனிடம் வந்தது.

தந்தையிடம் பயம் இல்லாவிட்டாலும் அவர் பேச்சை இதுவரை மீறியதில்லை என்ற அளவின் அதிக மரியாதையும் அன்பும் இருந்தது மகளுக்கு.

ராகவன் என்ன தான் பிள்ளைகளுக்குச் செல்லம் கொடுத்து வளர்த்திருந்தாலும், அவர் மிகவும் கண்டிப்பானவரும் கூட. தாயிடம் கிடைக்கும் அதீத சலுகைகள் அவரிடம் கிடைக்காது.

ஆகையால், தினமும் அதிகாலை அதிரிபுதிரியாக விடிந்தது செண்பா-விற்கு.

அவள் தயாராகி வரவும், மகளது அலங்காரத்தின் திருப்தியுற்றவர், "இப்படியே நலுங்காம இரு, தண்ணி எடுக்கும் போது நெறய நனைஞ்சிட்டா வேற துணி மாத்து, அப்படியே உக்காந்திருக்காத. அறுவடை காலம்ல பாப்பா, வேலை நிறைய கெடக்கு, நீ கதவ சாத்திக்கிட்டு உள்ளயே இரு, யாராவது வந்தா மரியாதையா பேசு, உன் துடுக்குத்தனத்த எல்லாம் காட்டாத, பத்திரம்" என்றபடி, காட்டு வேலைக்குப் புறப்பட்டு விட்டார்கள் பாக்யாவும் ராகவனும்.

'இந்தக் காலத்துல போய் இப்படி யாரோ காலங்காத்தால அறிவில்லாம்ம பெண் பார்க்க வீட்டு முன்னாடி வந்து நின்னாங்கன்னு தினமும் என்னை இப்படி கொடுமப்படுத்துறாங்களே.. கடவுளே, இதெல்லாம் எப்ப முடிவுக்கு வருமோ! இருக்கட்டும் இன்னிக்கு மட்டும் யாராவது பெண் பார்க்க வந்தேன், பெவிகால் விக்க வந்தேன்னு வரட்டும் இருக்கு' என மனதிற்குள் கறுவிக் கொண்டே தண்ணீர் குடத்தை சுமந்தாள் செண்பா.

இரண்டு மணி நேரம் நிற்க நேரமில்லாமல், நீர் பிடித்து நிரப்பி விட்டு வேர்வையிலும், தண்ணீரிலும் தொப்பலாக நனைந்திருந்தவள், உடை மாற்றலாம் என உள்ளறையை நோக்கித் திரும்பும் போது, வெளியே கதவைத் தட்டும் சப்தம் கேட்டது.

'ஹையோ காலங்காத்தாலயே வா' என மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவள், 'நிக்கட்டும் கொஞ்ச நேரம். நாம போய் துணிய மாத்திட்டு வந்திடுவோம்' என நினைத்தவாறே உள்ளறை நோக்கி விரைந்தாள்.

இதற்கு முன் இப்படி அதிகாலையிலேயே வந்து அவள் பல் கூட விலக்க அவகாசம் கொடுக்காது, "பெண்ண பார்த்துட்டு அடுத்த ஊருக்குப் போகனும்மா.. இன்னிக்குள்ள ஒரு பத்து ஊருக்காவது போனாத்தான் சீக்கிரமா வேலை முடியும்" என நின்ற மாப்பிள்ளையின் தந்தையைக் கண்டு அவள் நெஞ்சம் கோபத்தில் விம்ம, அவரைப் பார்த்து அஷ்ட கோணலாக முகத்தைக் காட்டி, நாக்கைத் துருத்தி வக்கலம் காட்டி, 'இந்த பொண்ணே வேண்டாம்' என தெறித்து ஓட விட்டிருந்தாள்.

திருமணத்திற்கு முன், சில ஆண்டுகளாவது வேலைக்குப் போக வேண்டும், வீட்டிற்கு உள்ளே தாய் தந்தையின் கதகதப்பிலேயே வளர்ந்ததால், தனியாய் சுதந்திரமாய் சில காலம் கழிக்க ஏதுவாய், தூரமாய் ஏதேனும் நகரத்திற்குப் போய் வேலை பார்க்க வேண்டும், மனம் நிறைய தனக்கேற்றவனைத் தேடி காதலித்து மணம் செய்ய வேண்டும், தன்னை தேவதையாய் கொண்டாட ஓர் நாயகன் வர வேண்டும் என்றெல்லாம் வாலிபக் கனவுகள் பல இருந்தன செண்பகவல்லிக்கு.

ஆனால், கிராமத்தில் எளிய வாழ்க்கை வாழ்ந்து மனிதர்கள் யாரையும் நோகப் பேசி பழகியிறாத அவளது பெற்றோர், அவளை எங்கும் வேலைக்கு அனுப்பத் தயாராய் இல்லை. வேலைக்கு அனுப்பாவிட்டாலும் பரவாயில்லை, இப்படி வருபவர்களுக்கெல்லாம் தன்னை ஒரு ஷோக்கேஸ் பொம்மையாக காட்டாதிருக்கலாம் என மனதுக்குள் மிகவுமே வருத்தம் சுமந்தாள் செண்பா.

தனது வருத்தத்தையும் கோபத்தையும் பெற்றோர் மேல் காட்டத் துணியாத பெண்ணவள், அதற்குக் காரணியான மாப்பிள்ளை வீட்டார்களை அவளால் முடிந்த அளவுக்கு வெறுப்பேற்றினாள் எனலாம்.

அதனாலேயே, அவளுக்குப் பலபல புத்திமதிகளைச் சொல்லி சென்றிருந்தார்கள் பெரியவர்கள்.

ஆனாலும், 'ஒட்டிப் பிறந்த ரெட்டப்பிள்ள மாதிரி என் சேட்ட எப்டி என்ன விட்டுப் போகும்' என தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள் செண்பா.

வெளியே கதவைத் தட்டிக் கொண்டே இருந்தாலும், காதில் வாங்கிக் கொள்ளாமல், ஆற அமர ஆடை மாற்றி மெதுவாய் வந்து சேர்ந்தவள், வெளியே நின்று கொண்டிருந்த பெரியவரை மேலும் கீழுமாய்ப் பார்த்தாள்.

'வெள்ளையும் சொல்லையுமா வந்திருக்கறத பார்த்தாலே தெரியுது..பொண்ணு தேடி தான் வந்திருக்காரு." என மனதிற்குள்ளாகவே வெகு தீவிரமாய் சிந்தித்தவள், அவர் வாய் திறந்து பேசும் முன்பாகவே, "அப்பா அம்மா காட்டுக்கு போய் இருக்காங்க, என் ஜாதகம் எல்லாம் இல்லை. வேணும்னா ஒரு ஒரு மாசம் கழிச்சு வந்து பாருங்க அப்பாம்மாவை. இப்ப அறுவடை நேரம் அதனால எப்பவும் பிசியா தான் இருப்பாங்க.. போய்ட்டு வாங்க" என மனப்பாடம் செய்து வைத்ததை அப்படியே ஒப்பித்து விட்டு கதவை சாற்றினாள்.

அவளது நடவடிக்கைகளையும், பேச்சையும் மிக சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தான், அந்தப் பெரியவரோடு வந்து சிறிது ஒதுக்குப் புறமாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வந்த இளைஞன்.
 
Top