கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆயிரம் காலத்துப் பயிர் 3

Rajalakshmi Narayanasamy

Moderator
Staff member
மாலை தன் தோழியோடு கோவிலுக்குப் போய் விட்டு, அப்படியே நூலகம் சென்று வரலாம் என கிளம்பினாள் செண்பா.


அவள் ஏதோ சாதாரணமாகத் தான் கிளம்பினாள். ஆனால், அவளைப் பார்த்தவர்கள் எல்லாம் அவள் முகம் பார்த்து மகிழ்வாகச் சிரித்தார்கள்.


'எதுக்கு எல்லாம் நம்மள பாத்து சிரிக்காங்க' என புரியாது, பதிலுக்கு 'ஈ...' என மொத்த பல்லையும் காட்டிக் கொண்டே வந்தவள், தோழியின் வீட்டு வாயிலை அடைந்ததும் அவளை அழைத்தாள்.


"கனி ஏ கனி" என்று வெளியிலிருந்து கூப்பாடு போட்டாள் செண்பா.


வழக்கமாக இப்படி தன் தோழியை கோவிலுக்கு, நூலகத்திற்கு, விளையாட, நடைபயிற்சிக்கு என்று அழைக்க வரும் போதெல்லாம் "வயசு பிள்ளை மாதிரியா நடந்துக்குறீங்க? அடக்க ஒடுக்கமா வீட்டுக்குள்ள உட்கார முடியல உங்களால" என்று முனுமுனுத்தவாறு அவளை முறைக்கும் கனியின் தாயார், இன்று அவளை "செண்பா ஏன் அங்கேயே நிற்கிற? வாசல்லையே எம்புட்டு நேரம் நிப்ப? கனி கிளம்பிக்கிட்டு இருக்கா கோவிலுக்கு, வர செத்த நேரம் ஆகும். இப்படி வந்து உள்ள உட்காரு" என்று வாய் நிறைய வரவேற்றார்.


'என்ன அத்தை அன்பா கூப்டுறாப்ல இருக்கு.. ஒரு வேளை நம்மள உள்ள கூப்பிட்டு போய் சாத்திடுவாங்களோ, இவ்வளவு பிரியமா கூப்பிடுதாங்களே' என்று யோசித்தவள் "என்ன அத்தை ரொம்ப பிரியமா கூப்பிடுறீங்க? வழக்கமா கையில தொடப்பக்கட்ட வச்சாப்பல முறைக்க இல்ல செய்வீங்க" என்றாள் இடக்காக.


"எப்பவுமே முறைப்பும் விறைப்புமா இருக்க முடியுமா? நேரம் காலம் வரும் போது பிரியத்தையும் காட்டணும்லே டி" என்றவர், "வெறும் தலையோட இருக்காத, இனி மேல் தலை நிறைய பூ வச்சுக்கோ" என்று தன் மகளுக்கு கட்டி வைத்த பூவில் ஒரு இனுக்கு மட்டும் கனிக்காக எடுத்து வைத்து விட்டு மொத்த பூவையும் செண்பாவின் தலையில் அழகாக வைத்து விட்டார்.


மயக்கமே வந்து விட்டது வெண்பாவிற்கு. தான் காண்பது கனவா நனவா என்று தன்னைத் தானே கிள்ளினாள். ஏதோ ஒரு வேகத்தில் நறுக்கென கிள்ளிக் கொள்ளவும் வலி உயிர் போய், ஆவென கத்த வாயைத் திறந்து பின் கிள்ளிய கையாலேயே வாயை பொத்திக் கொண்டு உச் உச் என உச்சு கொட்டிக் கொண்டு பரிதாபமாக அமர்ந்திருந்தாள்.


"என்ன மகாராணி சூயஸ் கால்வாயில விட்ட கப்பல் குறுக்கால மாட்டிகிச்சுன்னா இம்புட்டு சோகமா உட்கார்ந்திருக்க?' என்று தன் தோழியை நக்கல் செய்தாள் தயாராகி வெளியே வந்த கனி


"இல்ல இல்ல செவ்வாய்க்கு அனுப்புன ராக்கெட்டு சமுத்திரத்ததுல விழுந்திருச்சு" என்று பதிலுக்கு வாரினாள் செண்பா.



"இப்படி மாறி மாறி வாய் அளந்துக்கிட்டே இருந்தா, அங்க கோவில் நடையை சாத்திட்டு போயிடுவாங்க, எப்படி வசதி?" என்று இருவரையும் விரட்டினார் கனியின் தாயார்.


ஏன் கனி.. கனி.. என்ன பாத்தா எப்பவும் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் உங்க அம்மா முகத்துல, இன்னிக்கு என்னவோ அதிசயமா உனக்கு கூட இல்லாம கட்டிவச்ச மொத்த பூவையும் என் தலையில தோரணமா தொங்கவிட்டு பாசமா வேற பேசுறாங்களே! என்ன ஆச்சு உங்க அம்மாவுக்கு? என்னைய கடத்திட்டு போய் எங்கேயும் பலி கிலி கொடுத்திட மாட்டாங்களே" என்று மிகவும் தீவிரமாக விசாரித்தாள் செண்பா


"உனக்கு இருக்கிற கொழுப்புக்கு இதுவும் பேசுவ இன்னமும் பேசுவ. எப்பவும் கரிச்சு கொட்டிக்கிட்டே வா இருப்பாங்க? அப்பப்ப பாசத்தையும் காட்டத் தான் செய்வாங்க. போன வாரம் கூட பால்கொழுக்கட்டை செஞ்சப்ப உனக்கு ரொம்ப பிடிக்கும்னு தனியா ஒரு தூக்கு வாளி நிறைய ஊத்தி குடுத்து விட்டாங்களே.. அத நல்லா ஒத்தை ஆளா உட்கார்ந்து மொக்குனயில்ல? நீ இதுவும் பேசுவ இதுக்கு மேலயும் பேசுவ" என்று செண்பாவின் கன்னத்தில் இடித்தாள் கனி.


இருவரும் சேர்ந்து கோவிலை நோக்கி நடக்கும் போதும் எதிர்ப்பட்ட அனைவரும் செண்பாவைப் பார்த்து முகம் மலர சிரிக்கவே செய்தார்கள்.


'என்ன தான் ஆச்சு நம்ம ஊருக்கு?' என்று சிந்தனை ஓட, கனியிடம் "கனி நம்ம ஊர் ஆட்களுக்கு எல்லாம் ஏதோ ஆகிடுச்சு, என்ன பார்த்து எல்லாரும் ஒரு மாதிரி வில்லங்கமா சிரிக்கிறாங்க" என்று கனியின் காதில் கிசுகிசுத்தாள் செண்பா.


"ஆமாமா இனிமே உன்ன பாக்குறவங்க எல்லாம் சிரிக்கத் தான் செய்வாங்க. சிரிச்சா பதிலுக்கு சிரியேன். இது ஒரு பிரச்சனையா உனக்கு" என்று தோழியை தோளோடு அணைத்துக் கொண்டாள் கனி.


"என்ன பார்த்து ஏன் சிரிக்கணும்? ஏதாவது காரணம் இருக்கா? உனக்கு தெரிஞ்சு இருக்கும்னு நினைக்கிறேன். மொத்த ஊரும் வித்தியாசமா பார்க்குது, உங்க அம்மா என்னடான்னா வீட்டுக்குள்ள கூப்பிட்டு வச்சு கொஞ்சி கிட்டு இருக்காங்க. இதெல்லாம் பார்த்தா ஏதோ சந்தேகமா இருக்கு"



"இதுல நீ சந்தேகப்பட என்ன இருக்கு? கொஞ்ச நாள்ல கல்யாணம் பண்ணிக்கிட்டு வெளியூர் போகப் போற பிள்ளை அப்படின்னு உன் மேல எல்லாருக்கும் திடீர்னு பாசமும் கரிசனமும் வந்துடுச்சு"


"என்னது கல்யாணம் கட்டிக்கிட்டு வெளியூர் போகப் போறேனா? நான் முதல்ல வேலைக்குப் போகணும் சம்பாதிக்கணும் நான் சம்பாதிச்ச பணத்தை..." என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போனவள் சட்டென்று பேச்சை நிறுத்தி விட்டு "ஆமா எனக்கு கல்யாணம்னு உனக்கு யார் சொன்னா?" என்று கேட்டாள்.


"அதான் காலையில மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்திருந்தாங்கலாமே எல்லாம் பேசி முடிவு பண்ணியாச்சு அப்படின்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்களே"


"உனக்கு யாரு சொன்னா"


"எங்க அம்மா தான் சொன்னாங்க. தெருவுல பேசிக்கிட்டாங்க போல" என்றாள் கனி.


"ஈர பேனாக்கி பேனை பெருமாள் ஆக்கி அந்த பெருமாளையே நம்ப வச்சிடுவீங்க போல" என்று ஆச்சரியப்பட்டாள் ஷெண்பா.


"அப்போ அந்த இடம் ஒத்து வரலையா? வேண்டாம்னு சொல்லிட்டியா?" என்று கேட்டாள் கனி. அவளது குரலில் மெல்லிய சோகம் படர்ந்திருந்தது.


"மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்தா தானே சரின்னு சொல்றதுக்கும் இல்லைன்னு சொல்றதுக்கும். வந்தது அப்பாவோட சினேகிதரும், அவரோட மகனும். பக்கத்து ஊர்ல ஏதோ வேலை விஷயமாக வந்திருக்காங்க, அப்படியே அப்பாவை பார்த்துட்டு போகலாமுன்னு வந்து இருக்காங்க. வேற ஒன்னும் இல்லை" என்றாள் செண்பா.


"உங்க வீட்டில வெளியில் சொல்லக் கூடாதுன்னு சொல்லி வச்சிருப்பாங்களா இருக்கும். அதான் என்கிட்டயே மறைக்கிற பாத்தியா" என்று முறுக்கிக் கொண்டாள் கனி.


"உண்டுன்னா உண்டுன்னு சொல்லப்போறேன். இல்லைன்னா இல்லைன்னு தானே சொல்ல முடியும். இதுக்கெல்லாம் கோவிச்சுக்கிட்டா நான் என்ன செய்றது" என்றவள், "உண்மையிலேயே நானும் மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க தான் அப்படின்னு நினைச்சேன். அப்புறம் அப்பா வந்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது அவரு அப்பாவோட நண்பர்ன்னு" என்று சேர்த்து சொன்னாள்.


"ஓ அப்பாவும் பையனும் வந்தாங்களாமே.. அந்த பையன் செம 'கைசில'யாமே" என்று ரகசியக் குரலில் கேட்டாள் கனி.


"ஆமா ஆமா செம 'கைசில' தான். இந்த மாதிரி விஷயம் எல்லாம் எப்படி தெரியுது உனக்கு? நானே முகத்தை சரியா பார்க்கல.. அதுக்குள்ள உன் வரைக்கும் தகவல் வந்துடுச்சா" என்று தன் தோழியை கலாய்த்தாள் செண்பா.


"ஆமா உனக்கு வரப்போற மாப்பிள்ளை அப்படின்னா எப்படி இருப்பார்னு எல்லாரும் தெரிஞ்சுக்க வேணாமா? அதனால கொஞ்சம் உத்து பார்த்து இருந்திருப்பாங்க. யாராவது கேட்டால் மாப்பிள்ளை குட்டை நெட்டை கருப்பு மாநிறம் அப்படின்னு ஏதாவது சொல்லனும் இல்ல" என்றாள் கனி


"குட்டை அப்டின்னு சொல்ல முடியாது சராசரி உயரம், கொஞ்சம் கருப்பு தான் ஆனாலும் கலையான முகம், நல்ல இளவட்டம் தான்" என்றாள் செண்பா


"இப்பதான் நானே சரியா பார்க்கலைன்னு சொன்ன.. இப்ப என்னமோ இன்ச் இன்சா வர்ணிக்கிற போலவே "


அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.. லேசா கண்ணுல பட்டத உன்கிட்ட சொன்னேன்.


"லேசா கண்ணுல பட்டதே இம்புட்டா?,

சரி உனக்கு பார்த்த மாப்பிள்ளை இல்லைன்னு சொல்லிட்ட, அப்ப நான் நல்லா சைட் அடிக்கலாம் இல்லையா? அடுத்த தடவ வந்தா என் கிட்ட சொல்லு. நான் ஒரு எட்டு வந்து பாக்குறேன்"


"பார்ப்ப பார்ப்ப கண்ணு முழிய நோண்டி காக்காக்கு போட்ருவேன்"


"ஏன் தாயி, உன்ன கட்டிக்க போறவன் தான் எனக்கு அண்ணன் முறை. அவர பார்த்தா தான் தப்பு. வேற யாரையும் நான் சும்மா பார்த்து ரசிச்சா உனக்கு என்ன வேகுது? அழகு ரசிக்கத் தானே படைக்கப்பட்டிருக்கு"


"இப்படியே பேசிக்கிட்டு திரி.. என்னைக்காவது யாராவது பெரியவங்க காதுல விழுந்துச்சு அன்னைக்கு இருக்கு உனக்கு தீபாவளி" என்று தனது தோழியை செல்லமாக மிரட்டியவள் பயபக்தியோடு கோவிலுக்குள் நுழைந்தாள்.


இருவரும் சாமி கும்பிட்டு விட்டு நூலகம் செல்லவும் நூலகர் பெண்மணியும் இதைப் பற்றி விசாரித்தார்


"என்ன செண்பா கல்யாண சாப்பாடு எப்ப" என ஆவலோடு விசாரித்தார்.


"நான் கல்யாண சாப்பாடு போடவெல்லாம் நாள் ஆகும் சித்தி.. இந்த கனி போற போக்க பார்த்தா ரொம்ப சீக்கிரமே கல்யாண சாப்பாடு, வளைகாப்பு சாப்பாடு எல்லாம் போட்டு டுவா போல" என்று தன் தோழியை வாரினால் செண்பா


"அப்படி என்னடி செஞ்ச?" என்று கனியைப் பார்த்துக் கேட்டார் நூலகர்.


"ஒண்ணுமில்லை அத்தை இன்னைக்கு இவங்க வீட்டுக்கு ஒரு பெரியவரும் அவர் மகனும் வந்து இருக்காங்க. அதான் இவளுக்கு பார்த்த மாப்பிள்ளையும் அவங்க அப்பாவும் அப்படின்னு ஊருக்குள்ள பேச்சு கிளம்பிருச்சு


ஆனா இவ அப்படி எல்லாம் எதுவும் இல்ல அப்படின்னு சாதிக்கிறா. அந்த பையனும் செம்ம கைசில அப்படின்னு வேற சொல்லிகிறா.. அதான் உனக்கு பார்த்த மாப்பிள்ளை இல்லைன்னா சொல்லு நான் கொஞ்சம் ரசிக்கிறேன்னு சொன்னேன். விளையாட்டுப் பேச்சு பேசினதுக்கு எல்லாம் வினையம் இழுத்து விடுவா போல" என நொடித்தாள் கனி


'கைசில'வா அப்படின்னா என்னடி?


"அதெல்லாம் சின்ன பிள்ளைங்க சமாச்சாரம்.. உங்கள மாதிரி கெழடுகளுக்கெல்லாம் அது புரியாது" என்று கூறி நூலகரிடம் இரண்டு கொட்டுகளை வாங்கிக் கொண்டாள் கனி


"நீ சொல்லாட்டி போடி எம்மவ சொல்லுவா.. நீ சொல்லு செண்பா கைசிலலன்னா என்ன என அப்பாவியாக கேட்டார் நூலகர்.


"அது வந்து சித்தி கை னா என்ன?"


"கையின்னா என்னன்னு கேட்டா என்ன பதில் சொல்ல? நம்ம..

இந்த... இருக்குல்ல இது தான் கை" என்று தனது கையை காண்பித்தார் நூலகர்


"நான் சொல்லல இவங்க அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வர மாட்டாங்க நீவா நம்ம புத்தகத்தை எடுத்துட்டு போகலாம் என்று அவரை வாரினால் கனி


"அட இவ ஒருத்தி இவளும் சொல்ல மாட்டா, சொல்ல வர்ற பிள்ளையும் சொல்ல விட மாட்டா, நீ போயி புத்தகத்தை எடுத்துட்டு வா, நானும் செண்பாவும் பேசிக்கிறோம்."என்று அவளை விரட்டியவர் செண்பாவிடம் கேட்டார் " நீ சொல்லு செண்பா.


"அதான் சித்தி கைக்கு இங்கிலீஷ்ல என்ன?"


"கையின்னா ஹேன்ட்"


"சரி சில னா என்னது"


"ஸ்டேச்சு (statue) ஆ?"


"ஐயோ ஐயோ சில பொருள்கள் அப்படின்னு சொல்வோம்ல சில சில அப்டின்னா என்ன இங்கிலீஸ்ல?"


"சில னா சம்(some) ஆ அப்ப"


"ஆமா, இப்ப இரண்டையும் சேர்த்து சொல்லுங்க"


"ஹேண்ட்ஸ் சில வா? கை மாதிரி எங்கேயாவது சிலை செஞ்சு வெச்சிருக்காங்களா? அத ஏன் இவ்வளவு ரகசியமா பேசுறீங்க?"


"கனி சொன்னது சரி தான்.. நீங்க அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வர மாட்டீங்க"


"என்ன செண்பா நீயே இப்படி சொன்னா எப்படி? சித்திக்கு தெரியாதத நீ தானே கத்து கொடுக்கணும்" என்று மீண்டும் அவளை தாஜா செய்து கேட்டார் நூலகர்.


"கை அப்படின்னா ஹேண்ட்.. சில அப்படின்னா சம்.. இங்கிலீஷ்ல இது ரெண்டையும் சேர்த்து சொல்லுங்க"


"ஹேண்ட்... சம்"


"தனித்தனியா சொல்லாம இரண்டையும் சேர்த்து வேகமா சொல்லுங்க"


"ஹாண்ட்சம்"


ஆமா அதே தான் கைசில-வுக்கு அர்த்தம்.


"எல்லாம் நல்லா கோளாறா தாண்டி பேரு வச்சிருக்கீங்க" என்றவர் புன்னகையோடு இருவருக்கும் புத்தகங்களை பதிந்து கொடுத்துவிட்டார்.


வீடு நோக்கி நடக்க துவங்கியவளின் எண்ணமெல்லாம் அவனை சுற்றியே சுழன்றது.


தன்னைப் பார்த்து அவன் கேலியாக சிரித்துக் கொண்டிருந்ததும் தனது அசட்டுத் தனங்கள் எல்லாம் இப்போது பூதாகரமாக தெரிய மீண்டும், அவன் அவளைப் பார்த்து ஆறுதலாய் புன்னகை சிந்தியது போல கற்பனை விரிய அமைதியாக கண்மூடி சாய்ந்தாள் செண்பா.


குறும்புச் சிரிப்போடு அவன் முகம் வந்து வந்து போனது மனக்கண்ணில்
 
Top