கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆயிரம் காலத்துப் பயிர் 6

Rajalakshmi Narayanasamy

Moderator
Staff member
அவர் இறக்கி வைத்த பாரத்தை எல்லாம் தான் வாங்கிக் கொண்டு அவரை முழுவதுமாய்ப் பேச விட்டான் சிவா.


தன் மனதில் இருப்பதையெல்லாம் தயக்கமில்லாமல் கொட்டி முடித்ததும் அவருக்கே பாரம் இறங்கி மனம் லேசானது போல இருந்தது.


"மாமா மனசுல இருக்கிறதெல்லாம் என்கிட்ட கொட்டிட்டீங்க இல்ல? இனிமே செண்பாக்கிட்ட பேசும் போது உணர்ச்சிவசப்படாம பேசுவீங்க இல்லையா? ஏன்னா நீங்க உடைஞ்சு போய் பேசினா அவளும் உடைஞ்சு போவா. இப்ப உங்களுக்கு இருக்கிற குற்றவுணர்வு அதுக்கு அப்புறம் அவளுக்கு வந்துடும். அந்தத் தவறை நீங்கள் செய்யக்கூடாது சரியா?" என்று சிறு குழந்தைக்கு எடுத்துச் சொல்வது போல சொன்னான் சிவா.


"ஆமாப்பா பிள்ளை ஏற்கனவே ரொம்ப காயப்பட்டு போய் கிடக்கு இதுல நான் வேற எதுவும் பேசி அது மனச உடைச்சுடக் கூடாது" என்று அவனது கூற்றை ஆமோதித்தார் ராகவன்.


"பேசணும் மாமா, பேசாம எந்த பிரச்சனைக்கும் தீர்வு வராது. நீங்க அவகிட்ட போயி பரிவா பேசுங்க, அவ என்ன செய்ய விருப்பப்படுறா அப்டின்னு கேளுங்க. அவ என்ன சொல்வாளோ அதை காது கொடுத்து முழுசா கேளுங்க. அவ சொல்றது ஞாயமா பட்டுச்சின்னா ஊர் உலகத்தைப் பத்தி எல்லாம் யோசிக்காம அவளோட ஆசையை நிறைவேத்தி வைங்க. அது தான் அவளுக்கும் உங்களுக்கும் நம்ம குடும்பத்துக்கும் நல்லது" என்றான் சிவா


நம்ம குடும்பம் என்று அவன் தன்னையும் இணைத்துக் கொண்டதில் இருந்தே அவனது மனம் புரிந்து மகிழ்ந்தவர் "சரி மாப்ள, நான் செண்பா கிட்ட பேசிட்டு சொல்றேன்" என்றார்.


"மாமா ரொம்ப முக்கியமான விஷயம், நீங்க எதனால முன்ன அப்படி நடந்துகிட்டீங்க, இப்போ அவ மனசு உங்களுக்கு புரிஞ்சிடுச்சு, இனி அவ என்ன செய்யப் போறான்னு அவ கிட்ட கேக்க போறீங்க.. இதை நல்ல மனசுல வெச்சுக்கோங்க. அவகிட்ட போய் பேசும் போது திரும்பவும் உங்களோட கனவு, உங்களோட ஆசை அப்படின்னு எதைப் பத்தியும் பேசக்கூடாது. முக்கியமா கல்யாணத்த பத்தி பேசக்கூடாது" என்று மீண்டும் சொல்லி அனுப்பினான்.


அன்று மாலை செண்பாவை அழைத்தவர் "டேய் பாப்பா உனக்கு ஏதாவது வாங்க வேண்டியதிருக்கும் இல்ல? அப்பா டவுனுக்கு போறேன். கூட வரியா?" என்று கேட்டார்.


அவள் கல்லூரிக்குப் போய் வரும் வழியில் அருகிலிருந்த சிறு டவுனில் தனக்குத் தேவையானதை வாங்கிக் கொள்வாள். ஆனால் கல்லூரி படிப்பை முடித்து சில மாதங்களாக அவள் வீட்டை விட்டு எங்கேயும் செல்லவில்லை, அவர்களது சிற்றூரில் அவளுக்கு தேவையான சில பொருட்கள் கிடைக்கவும் இல்லை.


ஆனாலும் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருப்பதால் எதுவும் அவ்வளவு முக்கியமாக தோன்றவில்லை. பெண்களுக்கே வரும் ஒருவித அலட்சியம் அவளிடம் குடி வந்திருந்தது.


அத்தோடு மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வருகிறார்கள் என்றெல்லாம் திரும்பத்திரும்ப அதற்காகவே தினமும் தயாராக வேண்டியிருப்பதால் அப்படி யாரோ ஒருவருக்கு முன்னால் அலங்கரித்த பதுமையாக நிற்க விரும்பாதவள் தான் விரும்பி செய்யும் அலங்காரங்களைக் கூட தவிர்த்தாள்.


மிகச் சாதாரணமாக, தன்னை அலங்கரித்து கொள்வதை அவள் தவிர்த்தாலும் அவளது இளமை அவளைப் பேரழகியாகவே காட்டியது.


வீடு ,கோவில், நூலகம் என்றே சுற்றி வந்தவள் இன்று தந்தை டவுனுக்குப் போகலாம் என்று அழைக்கவும் மிகவும் உற்சாகமாகவே கிளம்பினாள். அடைபட்டுக்கிடந்த மனதிற்கு ஒரு சிறு நடைபயிற்சி கூட உற்சாகத்தை மீட்டுத்தரும், ஒரு பூ பூப்பது கூட புன்னகையைக் கொண்டு வரும்.


அவ்வப்போது சிறு பயணம் போனாலே மனதில் எந்த கவலையும் தேங்கி நிற்காது. இதையெல்லாம் அனுபவத்தில் உணர்ந்து இருந்த ராகவன் தனது மகளை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த சிறு பட்டணத்திற்கு கிளம்பினார்.


அங்கு சென்று அவளை கடை வீதியில் இறக்கி விட்டவர், "பாப்பா அப்பாவுக்கு ஒரு முக்கியமான சோலி இருக்கு, பேங்க் வரைக்கும் போயிட்டு வந்திடறேன். நீ கடைவீதில உனக்கு என்னென்ன வேணுமோ பார்த்து வாங்கிக்க" என்று அவளது கையில் பணத்தை திணித்தவர் நகர்ந்து சென்றுவிட்டார்.


அவர் இருந்தால் தான் தனக்குத் தேவையான பொருட்களை வாங்க கூச்சப்படக்கூடும் என்று உணர்ந்து தந்தை விலகிச் சென்றதைப் புரிந்து கொண்டவள், பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் கடை வீதிகளில் அலைந்து தனக்குத் தேவையான நாப்கின், அழகு சாதனப் பொருட்கள் என்று சிலவற்றை வாங்கினாள்.


வீட்டில் எத்தனை க்ளிப்புகள் இருந்தாலும், எத்தனை எத்தனை விதங்களில் ஹேர்ப் பேண்டுகள் இருந்தாலும், கடைகளில் சென்று இன்னும் அதிகமாய் வாங்குவதே பெண்களுக்குப் பேரானந்தம் தான்.


கைகளில் மருதாணி வைத்து பல நாட்கள் ஆகிறது என்று 2 டிசைனர் மருதாணி கோன் பாக்கெட்டுகளைக் கூட வாங்கிக் கொண்டாள்.


சரியாக அவள் கடைகளில் அலைந்து திரிந்து அவளுக்கு வேண்டியதை வாங்கி முடிக்கவும், அவளது தந்தை வந்து, "என்னடா பாப்பா கிளம்பலாமா?" என கேட்கவும் சரியாக இருந்தது.


"ம்ம் போகலாம் பா"


"இல்லையே என் செல்ல மக எதையோ மறந்துட்ட மாதிரி இல்ல தோணுது"


"இல்லையேப்பா, நான் எனக்குத் தேவையானது எல்லாம் வாங்கிட்டேனே, இனி எதுவும் வாங்க வேண்டியதில்லை, போகலாம் பா"


"சரி விடு, வண்டியில ஏறு" என்றவர் தங்கள் ஊர்ப் பக்கமாக வண்டியை திருப்பாமல் மீண்டும் கடைவீதிக்குள் நுழைந்து அந்த சிறிய ஐஸ்க்கிரீம் கடையில் நிறுத்தினார்.


கடையைப் பார்த்ததும் மீண்டும் உற்சாகம் ஆனால் செண்பா.


"என்னப்பா கேட்காமலே ஐஸ்கிரீம் கடைக்கெல்லாம் கூப்பிட்டு வந்து இருக்கீங்க"


"நீ ஐஸ்கிரீம் வேணும் அப்படின்னு கேட்டா தான் நான் வாங்கி கொடுக்கணுமா? என் மகளுக்கு என்ன பிடிக்குமோ அதை நான் மறப்பேனோ" என்றார் ராகவன்.


"அப்பா" என்று மகிழ்ச்சியோடு அவரது கரங்களைப் பிடித்துக் கொண்டாள் செண்பா.


கடைக்குச் சென்று அவளுக்குப் பிடித்த ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தவர், அவள் உண்ணும் அழகைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தார். பின் இன்னும் ஒரு ஃபேமிலி பாக்கெட்டும் அவளது தாயாருக்குப் பிடித்த வகையில் சில ஐஸ்கிரீம் வகைகளும், டெசர்ட்களும் வாங்கிக் கொண்டு இருவரும் புறப்பட்டார்கள்.


"அப்பா அப்பா இப்போ நான் வண்டி ஓட்டட்டுமா பா" என்று கேட்டாள் மகள்.


"சரிடா" என்று அவளை ஓட்டுவிட்டு பின் இருக்கையில் அமர்ந்து கொண்டார் ராகவன்.


அவர்கள் ஊர் நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது, "டேய் அப்படியே நம்ம தோட்டத்தை ஒரு எட்டு பார்த்துட்டு போயிருவோ,ம் நீயே ஓட்டிடுவியா? இல்ல அப்பா ஓட்டட்டுமா? காட்டுப்பாதையில் பத்திரமா போயிடுவியா டா"


"பயப்படாம வாங்கப்பா, உங்கள ஒன்னும் அப்படி கீழே போற்ற மாட்டேன்" என்றவள் மிக லாவகமாகவே வாகனத்தைக் கரடுமுரடான முட்செடிகள் நிறைந்த காட்டு ஒற்றையடிப் பாதையில் ஓட்டிக்கொண்டு போய் அவர்களது தோட்டத்தில் நிறுத்தினாள்.


"என்னப்பா இங்கே எதுவும் வேலை நடக்குற மாதிரி இல்லையே" எனக் கேட்டவளிடம், "மாம்பழ சீசன் இல்லடா நம்ம மரத்துல அஞ்சாறு பிஞ்சு இருந்துச்சு, இப்போ நல்லா காய்ச்சி இருக்கும், அத புடிங்கிட்டு போனா நீ ஏதோ சமையல் செஞ்சல்ல குக்கருல வச்சு அதுல அப்பாக்கு ஊறுகாய் போட்டு தரமாட்டியா? அதான் பறிச்சிக்கிட்டு போகலாம்னு வந்தேன்" என்றார்.


"ஓ செய்யலாமே பா" என்று பரந்து விரிந்து கிளை பரப்பி இருந்த அரை நூற்றாண்டு பழமையான மாமரத்தில் சென்று பழங்களைப் பறித்தாள் செண்பா.


அந்த மரத்தடியில் தன் தோளில் கிடந்த துண்டை உதறி விரித்து அதில் அமர்ந்த ராகவன், "பாப்பா இங்கே வா வந்து அப்பா பக்கத்தில் உட்காரு" என்று அழைத்தார்.


கையில் வாகாக சிக்கிய மாம்பழத்தோடு அவர் அருகே சென்று அமர்ந்தாள் செண்பா.


"டேய் நேத்து நீ அம்மாகிட்ட பேசிக்கிட்டு இருந்தத கேட்டேன். என்னால உனக்கு ரொம்ப சங்கடமா போச்சு இல்ல?" என மிருதுவான குரலில் கேட்டார்.


"ஐயோ அப்படி எல்லாம் ஒன்னும் இல்லப்பா"


"நீ இப்படித்தான் சொல்லுவேன்னு தெரியும்டா. அதனாலேயே நான் உன்னோட அப்பா, என்ன நடந்தாலும் நீ என்னை குறை சொல்ல மாட்ட அப்படிங்கறதனாலயே நான் உன் மனசை பத்தி யோசிக்காம நடந்துகிட்டேனோன்னு தோணுது"


"அப்பா"


"சொல்லுடா நான் செஞ்சது தப்பு தானே? சிவா தம்பி சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கு புரிஞ்சது. 'உங்கள ஒரு பொருட்காட்சியில் போய் உட்கார வச்சு வரிசையா ஆட்களை கூப்பிட்டு உங்கள காட்டினால் உங்களுக்கு எப்படி இருக்குமோ அப்படித் தான் அவளை வர்றவங்க போறவங்க கிட்ட எல்லாம் இதான் பொண்ணு பொண்ணுன்னு காட்டும் போது இருக்கும்' அப்படின்னு சொன்னாரு மாப்பிள.


அதுக்கப்புறம் தான் நானே யோசிச்சேன். அது வரை வீடு தேடி வர்றவங்கள கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு நினைச்சேனே தவிர, வீட்டிலேயே இருக்கிற பிள்ளைய நோகடிக்கக் கூடாதுங்கறத மறந்துட்டேன்.


சிவா தான் தெளிவா விளக்கி சொன்னாப்ல, அவன் சொன்னதுக்கு அப்புறம் தான் உன்னை எவ்வளவு நோகடிச்சி இருக்கேன்னு புரியுது, அப்பாவை இந்த ஒரு தடவை மன்னிச்சுடுடா. இனிமே உன் மனசு நோகற மாதிரி எதுவும் செய்ய மாட்டேன்" என்றார் ராகவன்.


"என்னப்பா நீங்க மன்னிப்பு எல்லாம் கேட்டுக்கிட்டு, நான் என்ன யாரோவா? உங்களுக்கு இல்லாத உரிமையா? நீங்க என்ன செஞ்சாலும் என் நல்லதுக்காகத் தான் செய்வீங்கன்னு எனக்குத் தெரியும்பா" என்றவள் சிறிது யோசித்துப் பின் ஒரு சிறு மௌனத்திற்குப் பின் தனது பேச்சைத் தொடர்ந்தாள்,


"ஆனா, அவங்க சொன்ன மாதிரி வர்றவங்க போறவங்ககிட்ட எல்லாம் என்னை கொலு பொம்மை மாதிரி அலங்கரித்து காட்டுறது எனக்கு பிடிக்கல பா. என்ன தான் நீங்க என்ன அன்பா வளர்த்து இருந்தாலும், படிச்சு முடிச்ச உடனே கல்யாணம் பண்ணி என்னை தள்ளிவிடப் பார்க்கிறீங்களோ அப்படின்னு தான் ரொம்ப தோணுச்சு பா. எனக்குன்னு ஒரு மனசு இருக்கு, அதுல சில ஆசைகள் கனவுகள் எல்லாம் இருக்கும். அதைப் பத்தி கேட்கலைன்னா கூட பரவாயில்லை. ஆனால் என்னை ஒரு மனுஷியாகவே நடத்தலையே! இதே அண்ணனா இருந்தா அவன் விருப்பத்தைக் கேட்டு எல்லாம் செஞ்சு இருப்பீங்க இல்ல? என்ன இருந்தாலும் ஆம்பளப் பிள்ளைன்னா ஒரு மாதிரி, பொம்பள பிள்ளைனா ஒரு மாதிரி தானே பா?


பொம்பளைப் பிள்ளையா பிறந்த ஒரே காரணத்துக்காக என்னோட வாழ்க்கை, என் கையில இல்லாம முதல்ல அப்பா கையில அதுக்கப்புறம் கல்யாணம் செஞ்சதும் வரப்போற கணவர் கையில அப்புறம் குழந்தைகள் கையில் மாறிகிட்டே இருக்கனுமா? அப்படின்னு எல்லாம் யோசிச்சேன் பா. அதான் ரொம்ப வருத்தமா இருந்தது. வேற ஒன்னும் இல்ல பா" என்றாள் செண்பா


அவர் மகள் தினமும் அலங்கரித்துக் கொண்டு நிற்கவேண்டியதை மட்டும் எண்ணி இவ்வளவு கவலைப்படுகிறாளே என்று எண்ணி இருந்தவர், ஆண்-பெண் குழந்தை வளர்ப்பு, பெண்ணுக்கு ஒரு நீதி ஆணுக்கு ஒரு நீதி என என்னென்னமோ யோசித்து குமைந்து போய் இருக்கிறாள் என்பதை அப்போதுதான் உணர்ந்தார் ராகவன்.


"என்ன பாப்பா நீ? நீ வேற அண்ணன் வேறென்னு நான் எப்பயாவது பிரிச்சுப் பாத்திருக்கேனா? ஆம்பள பிள்ளை, பொம்பள பிள்ளைனு வேறுபாடு காட்டி இருக்கலாம். ஆனா ரெண்டு பேரையும் ஒன்று போல தானே நான் வளர்த்தேன். அப்புறம் ஏன் உனக்கு இப்படி எல்லாம் தோணுது?" என்று ஒரு வேகத்தில் கேட்டுவிட்டார்.


"அதுக்கான பதில் உங்க கிட்ட தான் இருக்கு அப்பா. அண்ணன் படிச்சு முடிச்சதும் கேம்பஸ்ல செலக்ட் ஆன கம்பெனிக்கு வேலைக்கு போனான். அதுக்கப்புறம் ஒரு வெளிநாட்டு கம்பெனியில் வேலை கிடைச்சிருக்குன்னு அங்க கிளம்பி போயிட்டான். நம்ம நாட்டுக்கு வந்தே ரெண்டு வருஷம் ஆகுது. ஆனா அவனை போகாதன்னு ஊர்லயே வீட்டிலேயே எங்க கூடவே இருந்து இங்கயே ஏதாவது வேலை பாரு அப்படின்னு நீங்க தடை செய்யலையே அப்பா? என்னை தானே அப்படி தடுக்குறீங்க" எனக் கேட்டாள் செண்பா.


ராகவனுக்கு எப்போதும் 'தான் தன் பிள்ளைகளிடம் வேறுபாடு காட்டுவதில்லை' என்ற கர்வம் உண்டு. இப்போது அந்த கர்வத்தின் மீது விழுந்த பேரிடியாக இருந்தது செண்பாவின் கேள்விகள்.


நாடும் சமூகமும் இருக்கும் சூழலில் தனது ஒரே அன்பு மகளை வெளியே சமூகத்தில் தனியே நடமாட விட்டு அவளது பாதுகாப்பிற்கு குந்தகம் வந்து விடுமோ என்று அஞ்சி அவளை எங்கும் விடாமல் கைக்குள் பொத்தி வைத்திருந்தார் ராகவன்.


ஆனால் ஆண் பிள்ளைக்கு அப்படி எல்லாம் யோசிக்கவில்லையே? என்னதான் சீர்கெட்ட சமூகமாக இருந்தாலும் ஆண் பிள்ளைக்கு ஒன்றும் ஆகாது அவன் சமாளித்து விடுவான் என்று அவன் மீது வைத்த நம்பிக்கை தானே அவனை வெளிநாடு வரை அனுப்பக் காரணம்.


தன் மகளும் எது வந்தாலும் சமாளிப்பாள் என்ற நம்பிக்கையை வைத்திருந்தால் செண்பாவை அனுப்பி இருப்பார் அல்லவா?


மகளின் கேள்வியிலேயே தன்னுடைய பெரிய தவறை உணர்ந்தவர் அதை உடனே திருத்திக் கொள்ள முன் வந்தார்.


"சரிடா இப்போ நீ சொல்லு, நான் எதுவுமே சொல்லல உன்ன. எதுக்குமே நான் கட்டாயப்படுத்த மாட்டேன். உன்னுடைய விருப்பம் தான். இப்ப நீ என்ன செய்ய நினைக்கிறாயோ அதை சொல்லு" எனக் கேட்டார் ராகவன்.


"எனக்கு வேலைக்குப் போகணும். என் கையால நானே சம்பளம் வாங்கி அதுல உங்களுக்கு அம்மாவுக்கு அண்ணனுக்கு எல்லாம் உங்களுக்கு பிடித்ததை வாங்கிக் கொடுக்கணும். எல்லாத்துக்கும் உங்க கையை எதிர்பார்த்து இருக்காமல் என் தேவைக்கு நான் சம்பாதிக்கணும்" என்று கண்களில் கனவு மிதக்கக் கேட்டாள் செண்பா


"சரிடா, உன் இஷ்டம் நீ எவ்வளவு நாள் வேலை பார்க்கணும்னு நினைக்கிறாயோ பாரு, நீ எப்ப மாப்பிள்ளை பார்க்க சொல்றியே அப்பத் தான் நான் பார்ப்பேன். அதுவரைக்கும் எந்த கவலையும் இல்லாமல் சந்தோசமா உன் இஷ்டத்துக்கு இரு" என்றார் ராகவன்.


மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போனாள் செண்பா. எப்படி இப்படி ஒரு மாற்றம் தனது தந்தையிடம் ஏற்பட்டது என்று எண்ணி எண்ணி வியந்தாள் பெண்ணவள்.


'அது தான் அவரே சொன்னாரே சிவாவினால் என்று. அவருடன் பழகிய சில நாட்களிலேயே அவரின் மனதை வென்று சரியானது எது என்று சரியான முறையில் எடுத்து சொல்லியிருக்கிறாரே' என்று மேலும் சீவாவின் மீதான அபிப்பிராயம் கூடியது செண்பாவிற்கு.


இருவரும் பேசிக்கொண்டது கூட இல்லை. அவ்வப்போது சிறு புன்னகையும் ஒரு தலையசைப்பும் தான் அவர்கள் இருவருக்குமான அதிகபட்ச உரையாடல்.


அப்படி இருக்கும் போது தன் மனம் ஒ உணர்ந்து, தனக்காக தன் தந்தையிடமும் பேசி இருக்கிறானே என்று சிவாவின் மீது பெரும் மதிப்பு வந்தது செண்பாவிற்கு.


அது வெறும் மதிப்பும் மரியாதையும் மட்டும் தானா? அதைத் தாண்டி வேறு எந்த உணர்வும் இல்லையா என்று கேட்டால் அவளுக்கே பதில் தெரியாது.


சொல்லாமலே அவளுடைய உணர்வுகளை படிக்கும் சிவாவிற்கு தெரிந்து இருக்குமோ என்னவோ?


தன் மகளிடம் பேசி தெளிவு பெற்றவர் மீண்டும் சிவாவிற்கு அழைத்தார்.

"மாப்ள செண்பாகிட்ட பேசிட்டேன் என்று அவளிடம் பேசியதைப் பற்றி கூறியவர் அவளது பயத்தையும் கேள்விகளையும் கூட அவனிடன் கூறினார்.


உங்க பொண்ணுக்கு தைரியம் வளரனும்னு, தன்னம்பிக்கையோட இருக்கணும்னு நீங்க ஆசைப்படறீங்க இல்லையா மாமா? நாங்க முதல் முதல்ல வந்தப்போ பக்கத்துல இருக்கிற கடைக்கு அனுப்பினப்போ அப்பாகிட்ட அது தான் சொன்னீங்க.


ஆனா உங்க மகளுக்கு உங்க ஊர்ல இருக்கிற கடையும், உங்க சொந்த காடும் எப்படி தன்னம்பிக்கையும் தைரியமும் கொடுக்கும்னு நினைக்கிறீங்க மாமா? அதுவும் அவளுக்கு வீடு மாதிரி தானே? சொந்த வீட்டிலயே இருக்கறதுக்கு யாருக்காவது தைரியம் தேவைப்படுமா என்ன?


அவ வாழ்க்கைய அவளே சிறப்பா அமைச்சிக்கனும்னா அவள உங்க கைக்குள்ள பொத்தி வைக்காம வெளியில அனுப்பணும். அப்போ தான் நீங்க எதிர்பார்க்கிற தைரியம் தன்னம்பிக்கை எல்லாம் அவளுக்கு வரும்.


நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க மாமா, எனக்கு நம்பிக்கை இருக்கு செண்பா நிச்சயம் எல்லா பிரச்சனைகளையும் சமாளிப்பா. அவளுக்குன்னு இருக்கிற சிறகுகளை கட்டி வைக்காமல் இருந்தாலே போதும் அந்த சிறகுகள் அழகா விரிஞ்சு அவளைப் பறக்க வைக்கும்".


"இருந்தாலும் மாப்பிள சென்னையில எனக்கு சொந்தக்காரங்க யாரும் இல்ல. அங்க மகளை எங்க தங்க வைக்கிறது? எப்படி வேலைக்கு அனுப்புறது அப்டின்னு தான் ஒன்னும் புரியல" என்றார் ராகவன்.


"இப்பத் தான அவள சுதந்திரமா விடுங்கன்னு சொன்னேன். அதுக்குள்ள அவளுக்கு வீடு புடிச்சு, சகல விதமான வசதிகளையும் செய்து கொடுத்து குடித்தனம் வச்சிட்டு வந்து விடுவீங்க போல. மாப்பிள்ளை இல்லாமலே தனிக்குடித்தனம் அனுப்ப பார்க்கிறீர்களா உங்க மகள?" என கேலி செய்தான் சிவா.


"பிறகு என்னதான் செய்றது நீங்க தான் சொல்லுங்களேன்"


"எனக்கு நல்லா தெரிஞ்ச பொண்ணுங்க நம்ம செண்பா வயசு தான் இருக்கும். சென்னையில ஒரு இடத்தில வீடு எடுத்து தங்கி இருந்து வேலை பார்க்குறாங்க. இப்ப தான் படிச்சு முடிச்சுட்டு வேலை தேடி போய் வேலையும் கிடைத்து தங்குவதற்கு ஒரு இடமும் கண்டுபிடிச்சுட்டாங்க. அவங்க கிட்ட சொல்லி வைக்கிறேன். செண்பாவுக்கும் அவங்க மொபைல் நம்பர் கொடுக்கிறேன்.

சென்னைக்கு போனதும் அவங்க வந்து அவளை கூட்டிட்டு போய் தங்களோட தங்க வச்சுப்பாங்க. ஆனா வேலை எல்லாம் செண்பாவா தான் தேடணும்".


"சரி மாப்ள சரி மாப்ள" என்று அவனிடம் மகிழ்வாக பேசி அலைபேசியை அனைத்தாலும், உண்மையில் மகளைத் தனியாக அத்தாம் பெரிய பட்டணத்திற்கு அனுப்ப ரொம்பவுமே பயமாகத் தான் இருந்தது ராகவனுக்கு.


அவள் வேலை பார்க்க என்று வெளியூர் கிளம்பும் போதும் அவன் வந்து அவள் எதிரே நின்று அவளது மனதை சலனப்படுத்த விரும்பவில்லை சிவா. 'சின்னப் பெண் தானே அவள் ஆசை தீர அலைந்து திரிந்து வேலை பார்த்து விட்டு வரட்டும். அதன் பின் அவளுக்கு விருப்பம் இருந்தால் தான் திருமணம்' என்பதில் உறுதியாக இருந்தான் சிவா.


தான் எதிர்பார்த்த ஆசைப்பட்ட சுதந்திரம், கைக்கு எட்டாத நிலவென நினைத்திருந்த கனவு எல்லாம் நிஜமாக அதை நம்ப முடியாத ஆச்சரியத்தோடு சென்னைக்குப் பயணமானாள் செண்பகவல்லி.


..
 
Top