கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆயிரம் காலத்துப் பயிர் 7

Rajalakshmi Narayanasamy

Moderator
Staff member

இரண்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன சென்னைக்கு சென்று. சிவா சொன்ன பெண்களோடு தங்கியவள் அதன் பின் என்ன செய்வது என புரியாமல் முழித்தாள்.


அவளோடு தங்கி இருந்த இரு பெண்களுமே தனியாக சென்னைக்கு வந்து வேலை தேடி அடைந்தவர்கள் தான் என்பது அவளுக்கு நம்பிக்கையூட்டும் விஷயமாக இருந்தது. இவ்வளவு பெரிய சென்னையில் தனக்கு ஒரு வேலை கிடைக்காமலா போய்விடும் என்ற எண்ணமும், தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையும் போட்டியிட தனது அறைத் தோழிகளிடமே வேலை தேடுவது பற்றிய அடிப்படை தகவல்கள், சென்னைக்குள் சுற்றும் போது இருக்க வேண்டிய முன்னெச்சரிக்கை, அலுவலகங்களைத் தேடி கண்டறிவது, நேர்முகத் தேர்விற்கான நுணுக்கங்கள் என பலவற்றை பலப்பல கேள்விகள் கேட்டு அறிந்து கொண்டாள்.


தனி ஒருத்தியாக ஒவ்வொரு கம்பெனியாக ஒவ்வொரு ஏரியாவாக வேலை தேடி அலைந்து திரிந்தாள்.


கேம்பஸில் கிடைத்த வேலையை வேண்டாம் என சொல்லிவிட்டு சூரியதேவனின் பிரியத்திற்குரிய சென்னையில் அலைவது மீண்டும் பெண்னென பொத்தி வைத்தவர்களின் மீதே கோபத்தைத் தூண்டியது.


ஆனாலும் சிவா தன் தந்தையிடம் பேசி அவரது கருத்தை மாற்றியது போல தான் முதலிலேயே செய்யவில்லையே., தன் திறமையின்மையே அனைத்திற்கும் காரணம், அதன் பலனைத் தானே அனுபவிக்க வேண்டுமென உறுதிசெய்து கொண்டாள். இன்னும் தீவிரமாய் வேலை தேடி அலைந்தாள்.


தினம் தினம் ஆயிரக்கணக்கானோர் பிழைப்புத் தேடி வந்து வந்தோர் எல்லாம் ஏதேனும் ஓர் வேலை கிடைத்து மகிழ்வோடு வாழ வழிவகுக்கும் சென்னைப் பட்டினம் செண்பாவையும் கை விடவில்லை.


அவளது படிப்பிற்கும் தகுதிக்கும் ஏற்ற ஒரு வேலையில் சேர்ந்துகொண்டாள். "வேலைக்குச் சேர்ந்து விட்டேன்" என்று மகிழ்வோடு தந்தையோடும் தாயோடும் பகிர்ந்து கொண்டாள்.


வேலை தேடும் போது ஏற்பட்ட அலுப்பு, சலிப்பு, துயரங்கள்,அவமானங்கள், ஏமாற்றங்களெல்லாம் வேலை கிடைத்ததும் கானல் நீராய் மறைந்து மகிழ்ச்சி நிறைந்தது அவளது இதயத்தில். மனித உணர்வுகளே அப்படித்தான் அவை நம்மைக் கடக்கும் போது மொத்தமாய் நம்மை அதனுள் அடக்கிக் கொண்டு வேறொரு உணர்வே எழாதபடி, அதற்குள்ளேயே அமிழ்ந்து போகச் செய்யும்.


இன்பத்தில் திளைக்கும் போது துன்பமே காணாததைப் போல மனம் குதூகளிக்கும். துன்பத்தில் துவலும் போது இன்பமென்றால் என்னவென மனம் தவிக்கும். அந்த உணர்வுச் சுழலுக்குள் சிக்கிக் கொள்ளாதவர்களே இல்லை எனலாம்.


தனக்கு வந்த துன்பமெல்லாம் மறைந்து இன்பத்தின் முதல் படியில் நின்றவள் அதன் பின் சுதாரித்து வேலையில் கவனத்தைச் செலுத்தினாள்.


படிப்பு முடிந்து வீட்டிலேயே காலத்தைக் கழித்திருந்தவளுக்கு அந்த கார்ப்பரேட் சூழல், புது மனிதர்கள், அவர்களது நாகரீக பழக்கவழக்கம் என அனைத்தையும் பழகவே நாட்கள் வேகமாக நகர்ந்தது.


கிராமத்தில் இருந்து வந்திருந்தவளின் பேச்சுவழக்கை கிண்டல் செய்வதையே பெரும் பொழுதுபோக்காக கொண்டிருந்தார்கள் சக பணியாளர்கள்.


அனைத்தையும் சிரித்தபடி ஏற்றுக் கொண்டு அவ்வப்போது பதிலடி கொடுத்து, அந்தச் சூழலில் அவர்களது நாகரீகத்தில் தன்னை விரைவிலேயே பொருத்திக் கொண்டாள் செண்பகவல்லி.


அதன் பின் கடுமையான உழைப்பு, தான் சேர்ந்த இடத்தில் படிப்படியான முன்னேற்றம் என்று அவளது துறையில் குறிப்பிடத்தகுந்த அளவு முன்னேறி விட்டாள் எனலாம்.


இந்த இரண்டு ஆண்டுகளில் தினம் தினம் தாயாரோடும் வாரத்தில் சில நாட்கள் தந்தையோடும் 10 நாட்களுக்கு ஒரு முறை என்ற வீதத்தில் வீடியோ காலில் அண்ணனுடனும் தொடர்ந்து பேசினாள்.


ஆனால் எந்த ஒரு பண்டிகைக்கும் விடுமுறைக்கு அவளை "ஊருக்கு வா" என்று ராகவனும் அழைக்கவில்லை, அவளும் செல்லவில்லை. அவளுக்கு கொடுத்த சுதந்திரத்தை முழுமையாக முழுமனதோடு கொடுத்திருந்தார் ராகவன்.


இடையில் ஒருமுறை அவளது அண்ணன் செண்பகராஜன் முதல் முறையாக வெளிநாட்டிலிருந்து மூன்றாண்டுகள் கழித்து, ஒரு மாத கால விடுமுறையில் வந்திருந்த போது கூட அண்ணனைப் பார்க்கவென ஊர்ப் பக்கம் செல்லவில்லை செண்பகவல்லி.


செண்பகராஜன் தான் சென்னைக்கு வந்து தனது கல்லூரி நண்பனுடன் தங்கி இருந்து தங்கையோடு நேரம் செலவழித்து விட்டு சென்றான்.


அவளுக்கும் அண்ணனோடு இருக்க மிகவும் விருப்பம் என்றாலும் போராடி கிடைத்த வேலையும் அந்த வேலையில் அப்போது நடந்து கொண்டிருந்த மிக முக்கியமான பிராஜக்ட்டும், அதில் அவளது பங்கும் அவளுக்கு மிக முக்கியமானதாக பட்டது.


அந்த ப்ராஜெக்ட் வெற்றி பெற்றால் அவளுக்கு ஒரு ப்ரகாசமான எதிர்காலம் காத்திருந்தது. அண்ணனைப் போல வெளிநாடுகளுக்குச் செல்லலாம் என்ற வாய்ப்பு அங்குமிங்கும் நகரவிடாமல் அதிலேயே கவனம் வைக்கச் செய்தது.


அவளது மனநிலை புரிந்து செண்பக ராஜனும் தங்கையின் வழிக்கே வந்து அவளோடு அளவளாவி விட்டுச் சென்றிருந்தான்.


தங்கை திருமணம் தற்பொழுது வேண்டாம் என்று தள்ளிப்போட்டு இருந்தாலும் அண்ணனின் ஜாதகத்தில் ஓராண்டுக்குள் திருமணம் செய்து வைத்தே ஆக வேண்டும் என்று சொல்லிவிட்டார் ஜோசியக்காரர்.


"இவனுக்கு கட்டம் சரியில்லை அப்டிங்கறதுக்காக எல்லாம் என்னோட மக விருப்பத்திற்கு மாறாக என்னால எதுவுஞ்செய்ய முடியாது" என்று கூறிய ராகவன் "இப்ப இவனுக்கு கல்யாணம் செஞ்சு வச்சே ஆகணும் அப்படின்னா அவன் செஞ்சுக்கட்டும். அவனோட சுதந்திரத்தில் நான் தலையிட மாட்டேன். அதே நேரம் செண்பாவோட சுதந்திரத்திலும் தலையிட மாட்டேன்" என்றார்.


அவனது விருப்பம் என்று சொல்லிவிட்டாலும் நல்ல பெண்ணாக பார்க்க வேண்டுமே மகன் என பரிதவிப்பாக இருந்தது பெற்றவர்களுக்கு.


வந்ததே ஒரு மாத விடுமுறையில். மீண்டும் திரும்பிச் சென்றால் திருமணத்திற்கு தான் வரமுடியும் என்ற இக்கட்டான சூழலில், தந்தையிடமே சரணடைந்தான் செண்பகராஜன்.


"அப்பா இத்தன வருசத்துல வராத காதலோ கத்தரிக்காயோ இனிமே எனக்கு வரப் போறது இல்ல. நீங்களே எனக்கு ஏத்த மாதிரி ஒரு நல்ல பொண்ணா பாத்துட்டு சொல்லுங்க"


"ராஜா, உனக்கு ஏத்த மாதிரி நீதான் பார்க்கனும். நான் பார்த்தா அது எனக்கு ஏத்த மாதிரி தான் இருக்கும். அப்பறம் உங்க அம்மாகிட்ட இடி வாங்க முடியாது" என கேலி செய்தார் ராகவன்.


"கெழவனனுக்கு நெனப்ப பாத்தியா" என கொமட்டில் இடித்துவிட்டுச் சென்றார் பாக்யா.


கொலைவெறியோடு முறைத்த மகனைக் கண்டு சமாதானப்படுத்தும் விதமாக சிரித்தவர், "பொண்ணு பாக்குறதெல்லாம் முன்ன மாதிரி சுலபமான வேலை இல்லடா, ரொம்ப டிமாண்ட் தெரியுமா? அதுவும் பையன பெத்தவங்க பாடு ரொம்ப திண்டாட்டம் டா ராஜா" என்றார்.


ஏதும் சொல்லாமல் மீண்டும் முறைத்தவனை எப்படி சமாளிப்பது என தடுமாறியவர், தன் பிரியத்திற்குரிய மாப்பிள்ளையான சிவா-விடமே இதற்கும் தீர்வு தேடுவோம் என அவனை அழைத்தார்.
 
Top