கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

இதம் தரும் அனுராகமே - 14

Mrithula Ashwin

Moderator
Staff member
அத்தியாயம் - 14

மதுகரன், யார் வீடு என்று தெரிந்து உடனே கிளம்ப எத்தனிக்கும் சமயம், சரியாக ப்ரியா வந்து இடைமறிக்க, வாய்த்தது வாய்ப்பு என்று அவளை திட்டிக் கிழித்து தோரணம் கட்டியத்தில், இத்தனை வருடம் தன் மனதில் அழுத்திக் கொண்டிருந்த பாரத்தை சிறிதளவு இறக்கி வைத்தான்.

அவன் ஆவேசமாக சீறியதில் இருந்த நியாயம், ப்ரியாவிற்கு நான்கரை வருடங்களுக்கு முன்பே புரிந்திருந்தால், அவள் வாழ்க்கையும் திசை மாறியிருக்காது, மதுகரனுக்கும் காதலால் அவமானமும், வருத்தமும் எஞ்சியிருக்காது.

ப்ரியா, "என்ன இது புதுசா கோபம், வீரப்பெல்லாம் என்கிட்ட காமிக்கிற.. உனக்கு மறந்துப் போச்சா? லவ் சொல்றதுக்கு நாய்(!) மாதிரி என் பின்னாலேயே சுத்தின?! நான் கேட்டதெல்லாம் செஞ்ச.. அன்னிக்கு ஒரு நாள் லேட்டா என்னை பார்க்க வந்தேன்னு நான் உனக்கு கொடுத்த தண்டனையை ஒரு சொல் மாறாம பண்ண? இப்ப சீற ஆரம்பிச்சுட்ட?"

"அப்ப உன்னை காதலிச்சேன்டி.. உன்னை அளவுக்கு அதிகமா நேசிச்சேன். என்னை நம்பி காலம் பூராவும் என்னோட சேர்ந்து வாழப் போற பொண்ணு.. எனக்காக எதையும் செய்வ.. என்னை எனக்காக நேசிக்கிற ன்னு நினைச்சேன். எனக்கு பிடிச்சவ.. என் உயிரிலும் மேலானவ.. நீ எதுக்காகவும் வருத்தப்படக் கூடாது.. ஏங்கக் கூடாது ன்னு நினைச்சேன்டி.. எனக்காக தான், என்னை பார்க்க முடியலன்னு தான் கோபப்படறேன்னு சந்தோஷமா, அன்னிக்கு ஈவினிங், அந்த 9°c குளிர்ல, குளிர்கால உடை இல்லாம வெறும் சட்டை பேண்ட் போட்டுட்டு நின்னேன்.."

"...."

"உன் குணம் எனக்கு அன்னிக்கும் தெளிவா புரியல.. அதுக்கு அடுத்த நாள், ஹைப்போதெர்மியா (hypothermia) தாக்கிச் செத்துப் போயிருப்பேன்டி.. எவனோ ஒரு புண்ணியவான் எமர்ஜென்சின்னு ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டுப் போனான். உனக்கு என் நிலைமை தெரிஞ்சு ஹாஸ்பிடல் வந்து என்னைப் பார்த்தியா சொல்லு.. என்ன பண்ண?"

"..."

"சொல்லுடி.. அப்படியே மரம் மாதிரி நின்னா, யாராவது அவார்டும் லட்சக்கணக்கில் பணமும் தரேன்னு சொன்னாங்களா??"

"மது திஸ் இஸ் தி லிமிட்.. என் வீட்டுக்கு வந்து என்னையே கேவலமா பேசறியா? என்ன புது பணமும் பகட்டும் பேசுதோ? இப்ப கூட, என் அப்பா கிட்ட சொல்லி, உன்னை உரு தெரியாம அழிக்க முடியும்.." என்று ப்ரியா மிரட்டவும், மதுகரன் கடகடவென சிரித்தான்.

"இது தான் நீ.. இவ்ளோ நேரம் நீ பேசினது எல்லாம் ட்ராமா ன்னு இங்க இருக்கிற எல்லாருக்கும் தெரிஞ்சுப் போச்சு.. என்னமோ அப்படியே உருகின.. லண்டன்ல நீ போட்ட ஆட்டமெல்லாம் சொன்னேன் ன்னு வெச்சுக்கோ.. அவ்ளோதான் ஃபினிஷ். டப்பா டான்ஸ் ஆடிடும்.. வந்துட்டா பெருசா கசிந்துருகி மன்றாடி காதல் வரம் கேட்க... இன்னும் ஏதோ சொன்னியே.. ஹான் என்னை உருத் தெரியாம அழிப்பேன்னு ஏதோ புருடா விட்டியேமா.. எங்க செஞ்சி காமி பார்ப்போம்.. இந்த வெத்து மிரட்டலுக்கு எல்லாம் நடுநடுங்கிப் போக வேற ஆளைப் பாரு.."

"ஏய்"

"ஷ்.. உன்னை அழிக்க நான் வரணும்னு அவசியமே இல்ல மை எக்ஸ் டியர்.. உன் கோபமும், அகங்காரமும், திமிரும் மட்டுமே போதும்.. ஆனா என்னை பொறுத்த வரைக்கும் நீ எப்பவோ அழிஞ்சிட்ட.. இப்பவே வெறும் ஜடம் தான் நீ.. உயிரோடு இருந்தும் நோ யூஸ்.. இன் சிம்பிள் டெர்ம்ஸ் நீ ஒரு பிணம்." என்றவன், ப்ரியாவையும், அவள் தந்தை முரளிதரனையும், ஈனப் பார்வைப் பார்த்தவன்,

நேரே லதாவிடம் வந்து, "என்னை மன்னிச்சிடுங்க.. என்னால என்னைக் கட்டுப்படுத்திக்க முடியல.. பெத்த தாய் முன்னாடி, பொண்ணை பேசினதுக்கு தான் நான் மன்னிப்புக் கேட்டேன். ஆனா நான் பேசினது உண்மை, சத்தியம் ன்னு உங்களுக்கும் புரியும் நம்பறேன்" என்றவன், வாயிலை நோக்கி நடந்தான்.

வெளியேறும் முன், ப்ரியாவை திரும்பிப் பார்த்து, "இன்னொரு தடவை என் கண்ணு முன்னாடி வந்திராத.. என் வீட்டு வாசப்படி மிதிக்கக் கூட உனக்கு அருகதை இல்லை. மீறினால் விளைவுகள் மோசமா இருக்கும்" என்று எச்சரித்து நகர்ந்தவனை இப்போது மறித்தார் அபிராமி.

அவனோ, அவரை தீர்க்கமாக நோக்கி, அவர் கையைப் பிடித்து இழுத்துப் போவதுத் தெரியாத வண்ணம் கூட்டிச் சென்றான்.

வாயிலில் நின்றுக் கொண்டிருந்த அனுராகா பக்கம் ஒரு கணம் ஆழ்ந்தப் பார்வையை வீசிவிட்டு நகர்ந்தான். அந்த பார்வைக்கு என்ன அர்த்தம் என்று அவளுக்கு விளங்கவில்லை.

அதன் பிறகு விழா வீடு களையிழந்து போக, வந்தவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் வெளியே சென்றனர். யாரும் யாரையும் உபசரித்து வழியனுப்பத் தோன்றாமல் ஆளுக்கு ஒரு பக்கம் உள்ளேப் போனார்கள்.

ப்ரியா, தன் அறையில் கூண்டு புலியின் பழிவெறியில் உலாத்திக் கொண்டிருந்தாள். தன்னை ஒருவன் இவ்வளவு கீழ்த்தரமாகப் பேசிவிட்டானே?! அவனை என்ன செய்தால் தகும்!! என்று யோசித்தாள்.

இப்போதும், தான் செய்ததுக் குற்றமல்ல.. அவன் இழிவாக பேசியதுத் தான் தண்டனைக்குரியது என்பவளை என்ன செய்ய முடியும்? சொல்லித் திருந்தவில்லை என்றால், பட்டாவதுத் திருந்த வேண்டும்.. ப்ரியா எந்த ரகத்தில் சேர்த்தி?

தாயை வீட்டிற்கு அழைத்துச் சென்ற மதுகரன், நேரே பொறியத் தொடங்கிவிட்டான்.

"ஏன் அம்மா இப்படி செஞ்சீங்க? கடைசியில நீங்களும் என்னை வெச்சு விளையாடறீங்க!! அப்படி தானே!"

"... மது இல்லய்யா"

"வேணாம்மா.. உங்களை விசாரிச்சு எனக்கு ஒன்னும் ஆகப் போறதில்லை.. ஆனா நீங்களும் என்னை ஏமாத்த நினைச்சது என்னால தாங்க முடியல.. யாரை நான் இனிமே பார்க்கக்கூடாது ன்னு நினைச்சேனோ அவளையே எதிர்கொள்ள வெச்சுட்டீங்க"

"நான் சொல்றதை கொஞ்சம் கேளுப்பா"

"என்னமா சொல்லப் போறீங்க.. உங்களுக்கு தெரியாதுன்னா? அவளை எவ்வளவு நேசிச்சேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்.. அவளை என்னோட லைஃப் பார்ட்னரா அங்கீகரிக்க, நீங்க இல்லாமலேயே லண்டன்ல கல்யாணம் பண்ணிக்க நினைச்சது எவ்வளவு பெரிய மடத்தனம் ன்னு இன்னிக்கு வரைக்கும் உள்ளுக்குள்ள குமைஞ்சுட்டு இருக்கேன்.. அவளோட துரோகம் எனக்கு எவ்வளவு பெரிய அடி, வலின்னு என்னை சுத்தி இருக்கும் யாருக்குமே புரியல ன்னு செய்கையால் சொல்லும் போது, எனக்கு சம்மட்டியால் அடிச்ச மாதிரி இருக்கு" என்று தன் தலை முடியை இருகையால் பிடித்துக் கொண்டு மண்டியிட்டுத் தரையில் அமர்ந்தான்.

அதில் பதறிப்போய் அவன் அருகிலேயே உட்கார்ந்த அபிராமியை அவன் ஏறெடுத்தும் பார்க்காமல் அதே நிலையில் இருந்தான்.

"இல்லப்பா மது.. உன்னை புரிஞ்சுக்காம அம்மா இல்ல.. உனக்கு ஒரு நல்லது நடக்காதா ன்னு தான் அம்மா ஒவ்வொரு செயலையும் செய்யறேன்.."

"இல்ல. தெரியாம தான் கேட்கிறேன்... என்ன நல்லது செய்ய, என்னை அவளோட வீட்டுக்கு சொல்லாம கூட்டிப் போனீங்க..?"

"அதில்லை மது.. உன் மனசுல இன்னும் ப்ரியா தான் இருக்காளா ன்னு தெரிஞ்சுக்கத் தான் கூட்டிப் போனேன். அப்படி அவளை இன்னமும் நீ விரும்பினா, எதுவாயிருந்தாலும், அம்மா கல்யாணம் பண்ணி வெச்சுடலாம் ன்னு நினைச்சேன்"

"என்னை இவ்வளவு கேவலமா நினைக்கிறீங்களா? என்னை ஏமாத்திட்டுப் போனவளை நினைச்சு என் வாழ்க்கையைக் கெடுத்துப்பேன் ன்னு நீங்க எப்படி நினைக்கலாம்.. இதுக்கு மேல உங்ககிட்ட பேச எனக்கு ஒன்னுமே இல்லம்மா.." என்றவன் எழுந்து விறுவிறுவென தன் அறைக்குச் சென்று ஓங்கிக் கதவை மூடினான். அதில், அபிராமி இமை வழிந்தக் கண்ணீரோடு அவன் அறையையே நோக்கி நின்றார்.

அதன் பிறகு அன்றைய நாள் முழுவதும், மதுகரன் வெளியே வரவேயில்லை. சந்தோஷமாக தொடங்கிய நாள், கண்ணீரோடும், வருத்தத்துடனும், வேதனையுடனும் முடிவுபெற்றது.

அபிராமி, தன் மகன் இந்தளவு கோபம் கொள்வான் என்றுக் கிஞ்சித்தும் நினைக்கவில்லை. அதுவும் அவன் ஓங்கி அறைந்த கதவுக்குப் பின், மகன் எவ்வளவு மனம் வருத்தப்படுவான் என்று எண்ணி, வெளியே அவரும் வியாகூலம் அடைந்தார்.

ஆனால் அவனை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. தனியாக இருக்கும் போது, பல பிரச்சனைகளை தீர்க்க, யோசனை வரும், பல தவறுகளை திருத்திக் கொள்ள வழிவகுக்கும் என்று எண்ணி, அவனாக மனம் மாறி வரட்டும் என்று அமைதி காத்தார்.

ஆனால் ஒன்றை மட்டும் செய்ய தவறவில்லை அன்னையாக. மகன் வயிற்றை வாடவிடாமல் பார்த்துக் கொண்டார்.

மறுநாள் காலை, 10 மணி ஆகியும் மதுகரன் தன் அறையிலிருந்து கீழே இறங்கி வரவில்லை என்றதும், அபிராமி கவலையுடன் தவிக்க ஆரம்பித்தார்.

வரவேற்பறையில், அவன் அறையை நோட்டம் விட்டுக் கொண்டே, நடைப்பயின்றுக் கொண்டிருந்தார்.

அங்கே, "ஹாய் அம்மா" என்று குரல் கேட்க, திரும்பி பார்த்து சற்றே முகம் மலர்ந்தார்.

"அட ரிஷி வாப்பா எப்படியிருக்க? அப்பா தங்கச்சி நல்லா இருக்காங்களா?"

"நான் நல்லா இருக்கேன்.. அப்பா சூப்பரா இருக்காரு.. அந்த குட்டி ராட்சசிக்கு என்ன குறை..? ஜாலியா புருஷனோட லைஃப் என்ஜாய் பண்ணிட்டு இருக்கா"

"சே என் செல்லத்தை ராட்சசி ன்னு சொல்லாத" அபிராமி அவ்வாறு கூற,

"உங்களுக்கு எத்தனை செல்லம் இருக்காங்க எனக்கு இப்பவே தெரிஞ்சாகனும்.."

"அப்படின்னா?"

"ம்ம்ம்.. அனு அனு ன்னு ஒரு பொண்ணு உங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்காளாம்.. அவ சொன்னா.. செல்லம் தங்கம் ன்னு அவளை சொன்னீங்க ன்னு பூரிச்சுப் போய் ரெண்டு சுத்து வெயிட் ஏறிட்டா" என்கவும், அபிராமி சிரித்தார்.

பின்பு, "ஆமா அனுவை உனக்கு எப்படி தெரியும்..?"

"என் அப்பாவும், அவ அப்பாவும் சேர்ந்து தானே ஹாஸ்பிடல் தொடங்கினாங்க. நாங்க சின்ன வயசுல இருந்தே அறிமுகமானவங்க.. இப்ப நான் நிர்வாகம் பார்த்துக்கறேன். அவ டாக்டர்.."

"அருமையான பொண்ணு ப்பா" அபிராமி கூறவும், ரிஷி ஆமோதித்தான்.

"சரி உங்க புள்ளை எங்க..? என்னை ஆஃபீஸ் வர சொன்னான். நான் அங்கே வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்.. அப்புறம் அவனோட பி.ஏ அவன் லீவ் ன்னு சொன்னாங்க.. அதான் வீட்டுக்கே வந்துட்டேன்" என்றுக் காரணம் கற்பித்தான்.

அபிராமி முகம் வருதத்தைத் தத்தெடுத்துக் கொண்டது. "என்னம்மா என்னாச்சு.. ஏன் முகம் மாறுது" என்று அவன் கேட்டது தான் தாமதம்.. அவர் அத்தனையும் ஒன்று விடாமல் ஒப்பித்து விட்டார்.

அவனால் மதுகரனின் மனநிலையை புரிந்துக் கொள்ள முடிந்தது.

அபிராமி, "நான் இப்படியாகும் ன்னு நினைச்சு பார்க்கலை ப்பா.. ப்ரியாவை தான் அவனுக்கு பிடிச்சிருக்கு ன்னா அவளையே கல்யாணம் பண்ணி வெச்சுடலாம் ன்னு தான் யோசனை செஞ்சேன். ஒன்னு அவளை பார்த்ததும், அவளோட நடவடிக்கைப் பார்த்து, வேறப் பெண் கூடக் கல்யாணத்துக்கு சம்மதிப்பான் ன்னு நினைச்சேன். ஏன்னா, ப்ரியா அவன்கிட்ட பேசி சீண்டிப் பார்ப்பாள் என்று எனக்கு நிச்சயம். அவளிடம் சவால் விட்டு திருமணம் செஞ்சுப்பான் ன்னு தான் அவனை கூட்டிப் போனேன். இன்னொரு பக்கம், அவளே ஒருவேளை திருந்தி, மதுகரனை இன்னமும் மனசுல நினைச்சிருப்பாளோ ன்னு எனக்கு ஒரு சந்தேகம். இவனுக்கும் அவ தான் வேணும்னு சொல்லிருந்தா, சரி ன்னு சொல்லிருப்பேன். இதெல்லாம் யோசிச்சு தான் பண்ணேன்" என்று காரணம் கூற, ரிஷி ஆழ்ந்த பெருமூச்சை வெளியிட்டான்.

பிறகு, "அம்மா உங்க பையனைப் பத்தி அவ்வளவு தான் புரிஞ்சு வெச்சிருக்கீங்களா? யோசிச்சுப் பாருங்க.. அவனுக்கு ரோஷமும், வீரியமும் இல்லாமயா அவன் இவ்வளவு உழைச்சு, தலைநிமிர்ந்து நிக்கிறான்.. தன்னை கேலிப் பேசினவங்க முன்ன, தாழ்த்தி பேசினவங்க முன்ன இப்ப நிமிர்ந்து நின்னு, அவங்க மூஞ்சியில கரி பூசியிருக்கானே.. இந்த நிலைமைக்கு வர, அவன் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கான் ன்னு எனக்கு தெரியும் ம்மா.."

"..."

"சரி விடுங்க.. நான் பார்த்துக்கறேன்.. நீங்க கவலைப்படாதீங்க.. எங்க அவன்?" என்று கேட்டதும், தாயார், அவன் அறையில் இருப்பதை உரைத்தார்.

ரிஷி எழுந்து, மேலேறினான். செல்லும் போதே, அவன் யாருக்கோ போனில் அழைத்தான்.

"ம்ம்ம்.. ஆமா.. நான் பேசிட்டு சொல்றேன்.. பார்ப்போம். எப்படி இருக்கான்னு.."

"..."

"தெரியல.. நேத்து போய் ரூம்ல அடைஞ்சவன் தான்... இன்னும் வெளியே வரலையாம்.. உனக்கு போன் பண்றேன்.. நீயும் வா.."

"..."

"நான் அம்மாகிட்ட பேசிக்கிறேன்.. மே பீ.. உன் ஹெல்ப் தேவைப்படலாம்.. அதுக்கு தான்"

"..."

"வில் ஹோப் பார் தி பெஸ்ட் டா.. ஓகே பை" என்று அழைப்பைத் துண்டித்தவன், நேரே போய் கதவைத் தட்டினான்.

அங்கே எதிர்புறம் எந்த பதிலுமில்லை. சற்றுப் பொறுத்தவன், மீண்டும் தட்டினான். இம்முறை, "டேய் மச்சான், ரிஷி வந்திருக்கேன் டா.. கதவைத் திறடா"

"டேய் மது.. என்ன டா சின்ன பசங்க மாதிரி, கதவை அடைச்சிட்டு உட்கார்ந்துட்டா, எல்லாம் சரியா போயிடுமா.. பேசலாம் டா.. உன் ஃபீலிங்ஸ் எனக்கு புரியுது டா.. இனிமே அந்த பஜாரியை நீ மீட் பண்ண வேணாம்.. எனக்கு தெரியும் டா.. அவ தான்டா எல்லாத்துக்கும் காரணம்.. கதவை திறந்து உன் திரு முகத்தை எனக்கு காமி டா.." இப்போதும் கதவை திறப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை..

மீண்டும் ரிஷி, "டேய் கதவை உடைச்சிட்டு உள்ள வர அளவுக்கு எனக்கு ஸ்டீல் பாடி இல்ல மச்சான்.. நீயே கதவை நல்ல பிள்ளையா திறந்துடுவியாம்.." என்க, தற்போது தான், அறையில் அசைவு தெரிந்தது அவனுக்கு.

ரிஷி, மெல்லமாக தட்டிக் கொண்டே, கதவின் மேல் சாய்ந்து நின்று.. கிட்டத்தட்ட, பல்லி போல, கதவோடு ஒட்டி நின்று, உள்ளே அசைவை, சத்தத்தை அவதானித்திருந்தான்.

"மச்சான் லவ் யூ டா.. ப்ளீஸ் ஓபன் தி டோர் டா" என்று இம்முறை விசனத்துடன் ரிஷி தட்ட, கதவு படாரென்று திறந்தது.


அதில், ரிஷி, கதவோடு உள்ளே சென்று, மதுகரன் மேலேயே மோதினான். மொத்தத்தில், மதுகரன் மல்லாக்க தரையில் விழ, அவன் மீது ரிஷி விழுந்தான்.
 

SudhaSri

Moderator
Staff member
கடைசில என்னது அது😀😀😀😀😂😂😂

சீரியஸான எபிசோட் ல இப்படி ஒரு என்ட்🤪🤪🤪
 

Deepa

Active member
அருமையான பதிவு
பிரியா என்ன பெண் நீ
ரிஷி 👌😄😄😄
 

Padma

Active member
அம்மா எட்டடிக்கு யோசிச்சா பையன் பதினாறடிக்கு கோபபடறான் :cry::cry:
மதுவும் ரிஷியும் ஒருத்தர் மேல ஒருத்தரா விழுந்து கிடக்கறதை அனு பார்ப்பாளோ 😂😂😂
 
Top