கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

இதம் தரும் அனுராகமே - 17

Mrithula Ashwin

Moderator
Staff member

அத்தியாயம் - 17

அவள், தன் வருங்கால வாழ்க்கையை அவனோடு பிணைத்துக் கொள்ள, தான் போடும் அச்சாரமாய் எண்ணி, மூன்றெழுத்து காதல் மந்திரத்தை ஓத, அவனோ, செயலிழந்து, செய்வதறியாதத் திகைப்பில், சட்டென உணர்வு இழந்து தரையில் விழுந்தான்.

"அமோர், அமோர் எழுந்திருங்க..." என்று அவன் கண்ணத்தைத் தட்டி, அவனை சுயத்திற்கு கொண்டு வர முயன்றாள். அந்த நொடி, தான் மருத்துவம் படித்து, பட்டம் பெற்ற ஒரு பெண் என்ற நினைப்பு, நிச்சயம் அவளுக்கு இருக்கவில்லை.

"மது, ப்ளீஸ்.... மது என்னாச்சு... " என்று அவள் கூச்சலிட்டது, தோட்டத்தில் அமர்ந்து, தன் கைபேசியில், கேம் விளையாடிக் கொண்டிருந்த ரிஷிக்கு கேட்க, அவசரமாக உள்ளே வந்தான்.

வந்ததும், உடனே, தன் கைக்குட்டையை எடுத்து தண்ணீரில் நனைத்து, மதுவின் முகத்தில் துடைத்தான். அப்போதும் அவன் அசைவின்றி கிடக்க, ரிஷி, "என்னாச்சு அனு??"

"தெரியல ரிஷி... பேசிட்டே இருக்கும் போது, மயங்கி விழுந்துட்டாரு... வாங்க ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போகலாம்.."

"அனு.. முதல்ல பதறாம இரு... சாதாரண மயக்கத்துக்கு ஹாஸ்பிடல் போணுமா?" என்கவும், அவள் விழித்தாள்.

"என்ன ரிஷி இப்படி சொல்றீங்க... சாதாரண மயக்கமா? மூக்குகிட்ட, விரல் வெச்சு பார்த்தேன், மூச்சு தெரியல.. எனக்கு பயமா இருக்கு... உங்க கார்ல ஹாஸ்பிடல் போயிடலாம் வாங்க" என்று மேலும் படபடக்க, ரிஷி ஒரு மாதிரி பார்த்தான்.

"நீ படிச்ச டாக்டர் தானா? டென்ஷன் ஆகாம இரு... மூக்குகிட்ட, வெச்சு பார்த்தேன், காதுகிட்ட பார்த்தேன் ன்னு பினாத்திட்டு இருக்க? பல்ஸ் செக் பண்ணியா? கழுத்துல துடிப்பு செக் பண்ணியா? பேசிக் திங்ஸ் ஆராயாமா போலாம், போலாம்னு துடிக்கற?!!"

"...."

"எனக்கு தெரிஞ்சு அவனுக்கு ஒன்னுமில்ல... இதெல்லாம் நீ தான் சொல்லணும், நான் சொல்லிட்டு இருக்கேன்... அந்தளவுக்கா இந்த காதல் உன்னை யோசிக்க விடாம செஞ்சிருக்கு?"

"அதில்ல ரிஷி"

"ஸ்டாப் இட் அனு.. முதல்ல அவனை தூக்க ஹெல்ப் பண்ணு.. ரூமுக்கு கொண்டுப் போகலாம்.. அப்புறம் யோசிக்கலாம்... மயக்கம் கொஞ்ச நேரத்துல தெளியல அப்படின்னா, ஹாஸ்பிடல் அட்மிட் பண்ணலாம்.. இப்ப வா... அவனோட அம்மா வர நேரமாச்சு.. அவங்களை பதட்டமடைய வைக்க வேணாம்.." என்று அறிவுரை சொல்லி, இருவரும் சேர்ந்து, அவனை கைதாங்களாக தூக்கிச் சென்று கட்டிலில் கிடத்தினர்.

"பாவி... இவன் இந்த கனம் இருந்துட்டு, என்னை கிண்டல் பண்ணான்.. எழுந்துக்கட்டும் வெச்சுக்கறேன்.." என்று தனக்கு தானே பேச, அனு நிமிர்ந்துப் பார்த்தாலும் ஏதும் கேட்கவில்லை.

பின்பு, ரிஷியே விவரம் கூறினான். இருவரும் கீழே விழுந்து செய்த சேட்டைகளை. அதை கேட்டு, மெல்லிய புன்னகையை மட்டுமே உதிர்த்தாள்.

ரிஷி, "இதுவே காதலுக்கு முன் இருந்த அனுவாக இருந்தா, இத்தனை நேரம் என்னென்ன கவுண்டர் (counter) கொடுத்திருப்பான்னு எனக்கு தெரியும்.." என்கவும், அவள் மௌனத்தைப் பதிலாகத் தந்தாள்.

"அனு, டாக்டர்களுக்கு இயல்பாவே உணர்ச்சிகளை கண்ட்ரோல் பண்ணி, நிதர்சனத்தோட சிந்திக்க வரும்.. அவங்க அதுக்கு படிக்கும் போதேப் பழகியிருப்பாங்க.. ஆனா நீ இன்னிக்கு அப்படி நடந்துக்கலை.. "

"அது கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டேன் ரிஷி.. ஆனா நீங்க சொல்ற மாதிரி, உணர்ச்சிகளை எப்பவுமே அடக்கி வைக்க, நாங்க ஒன்னும் முற்றும் துறந்த முனிவர்கள் இல்ல.. எங்களுக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க, மனசுக்கு பிடிச்சவங்களுக்கு பிரச்சனை, கஷ்டம் வந்தா, நாங்களும் உணர்ச்சிவசப்படுவோம்"

"ரொம்பப் பொங்காத... உன் உணர்ச்சிவசத்தைக் கட்டுப்படுத்து.." என்று ரிஷி கூறவும், அனு மொத்தப் பற்களையும் காட்டிப் புன்னகைக்க,

"ஐயே... பார்த்து பல்லுக் கொட்டிடப் போகுது" என்று இருவரும் மாறி மாறி சூழ்நிலையை இலகுவாக்க முயற்சிக்க, வீட்டின் கீழ்ப்பகுதியில், அபிராமியின் குரல் ஒலித்தது.

அதில், ரிஷியும் அனுவும் என்ன பதில் உரைப்பது எனப் புரியாமல் தடுமாறிப் போயினர்.

"அனு நீ இங்க இரு.. நான் கீழே போய் ஆன்ட்டி கிட்ட ஒரு மாறி நிலமையை எடுத்து சொல்லி, புரிய வைக்கிறேன்.. நான் சொன்னதுக்கபுறம் நீ வா.." என்று சொன்னவனை,

"இல்ல ரிஷி அது சரி வராது.. நான் கீழே போய் பேசறேன் நீங்க இங்க வெய்ட் பண்ணுங்க.." என அவள் கூற, ரிஷி அதற்கு ஒத்துக்கொள்ளாமல், தானே அபிராமியிடம் சென்றான்.

அவளும் எதுவும் செய்வதற்கு இல்லாமல், மதுவின் மீது பார்வையைப் பதித்து, அதே அறையில் மீண்டும் அமர்ந்துவிட்டாள்.

அந்த அறையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவளை, அங்கே இருந்த மேஜையில் வைக்கப்பட்டிருந்த, ஒரு ஜோடியின் காதல் உணர்வை எடுத்துக் காட்டும் பொம்மையும், அலங்கரிக்கப்பட்ட(??) டைரியும், வெகுவாக கவர்ந்து இழுத்தது.

அதன் அருகில் சென்ற பின் தான், அந்த டைரி அலங்காரம் எப்படிப்பட்டது என்று ஒழுங்காக அவளுக்கு தெளிவுக் கிடைத்தது.

அதைக் கண்டதும், ஒரு பக்கம், பேராவல் எழுந்தாலும், மறுபக்கம், மனம் சுணக்கம் கொண்டது அனுராகவிற்கு.

அந்த டையிரியின் முகப்பு பக்கத்தில், (அட்டை படம்), முதன்மையாக, ஒரு பெண்ணோவியம் வரையப்பட்டிருக்க, ஓரத்தில், ஒரு ஆடவன், தன்னை மறந்து அவளை ரசித்து, லயித்து பார்திருப்பதுப் போல வடிக்கப்பட்டிருந்தது.

அதனைப் பார்த்து, அதன் நேர்த்தியில், அழகில், தத்ரூபமானக் காட்சியில், அனு மெச்சினாலும், அந்த பெண் உருவம் அவளுக்கு எட்டிக்காயாக கசந்தது. அந்த பெண் வேறு யாருமல்ல, ப்ரியா தான்.

டையிரியின் பக்கங்களை அவள் திருப்பி வாசிக்கலானாள்.

★★★
கண்ணே, உன்னை போலவே,
உன் பெயரும் அழகு தான்
எந்நாளும் என் பிரியமானவள்
நீதான் எனக் குறிக்கின்றதே
உன் பெயர்... காரணப்பெயர்.
★★★
ஓராயிரம் கவலை மனதில் இருந்தாலும்
என்னவளின் புன்னகை முகம் காண
சூரியனை கண்ட பனிதுளியாய்
என்னை உருகவைப்பது,
காதலின் விந்தையோ!!!?
★★★
உன்னை பற்றி வெண்பா தீட்ட நினைத்து
வரிகளை சிந்தித்தேன்....
ஆனால் எழுத்தாணி எடுத்ததும்
உன் சித்திர பிரதிமை வடிவம் பெற்றது...
அக்கணம், அஃதே நான் உணர்ந்தேன்..
என்னுள் ஆழமாய் பதிந்த காரிகை நீ!!!
★★★

இந்த கவிதையின் எதிர் பக்கத்தில், கல்யாண கோலத்தில், பொன் தாலிப்பூட்டி, அழகின் பிரதிப்பிம்பமாய் ப்ரியாவை வரைந்திருந்தான் மதுகரன். ஆனால் அனுவிற்கு அச்சித்திரத்தை ஜீரணிக்க முடியவில்லை.
இருந்தாலும் அடுத்த பக்கத்தை திருப்பினாள் அதில் மேலும் சில கவிதைகள் எழுத்தப்பட்டிருந்தது.
★★★
சுற்றம் மறந்தேன்..
நட்பை மறந்தேன்.. ஏன்
என்னையே மறந்தேன்..
ஆனால் உன்னை மட்டும்
என்றுமே மறக்க மாட்டேன்..
ஏனென்றால் மறவா வரம் பெற்றுவிட்டேன்
உன்னை நேசிப்பதால்...
★★★
நயணங்களில் கதை பேசும் உன்னை
வாழ்நாள் முழுவதும் காதல் கொண்டேன்!
அவ்விழிகள் என்னும் சாகரத்தில்
இன்பமாக மூழ்கிறேனடி என் கண்ணே!
என்னை கொள்ளையடித்த உன் மைவிழி
பார்வையில் முழுதும் தொலைகிறேன் நான்!!!
காலம் மாறினாலும், உன் விழியசைவில்
காதல் கொண்டு, ஆயுள் கைதியாக
வாழ வேண்டும் கண்ணே!!!
★★★
அவன் எழுதியக் கவிதைகளை அனு வாசிக்க, வாசிக்க, அவளால் அவன் காதலை எண்ணி வியாக்காமல் இருக்க முடியவில்லை. போற்றதற்குரியக் காதலானாலும், தவறான ஆளிடம் காதலைக் கொடுத்து காயம் வாங்கிவிட்டானே என்கிற ஆதங்கமும் அவளுக்கு ஏற்பட்டது.

இத்தனை நேரம், தன் காதலை எண்ணி, சந்தோஷமாக கவிதைகளை எழுதியவன், அடுத்தடுத்த பக்கங்களில் அதற்கு நேர் எதிராக தோல்வியை தழுவிய வெண்பாக்களை தீட்டியிருந்தான்.
★★★
வாராது வந்த மாமணியாக,
குடங்கொண்டு ஊற்றும்
கோடை மழையைப் போல நீ இல்லாத
வெறுமை வாழ்வில், உன் நினைவலைகள்
கூட என் மனதின் பாலைவனச்சோலையடி கண்ணே!!
ஆனால் அச்சோலை வரமா? சாபமா?
★★★
உன்னை காதலித்தேன் உன்னை கரம்
பிடித்து வாழ்க்கை முழுவதும் என்னோடு
வருவாய் என நினைத்து..
இன்று உணர்கிறேன் என் நினைப்பு
கானல் நீர் போல பொய்த்து போனது என்று...
★★★
அன்று ..
தினமும் என் விழிகள்
நித்திரா தேவியை சபித்தது
உன்னை விழி திறந்து காண
விடாமல் என்னை ஆட்கொள்வதால்...

இன்று ...
நித்திரா தேவி என்னை விட்டு
வெகு தூரம் சென்றுவிட்டாள்
உன்னை என் விழிகளில் இருத்திவிட்டு...
★★★

அனு, அந்த டைரியை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். மது படுக்கையிலிருந்து எழும்பிய ஓசை கூட அவளை எட்டவில்லை..

மது, கண் விழித்து, அவன் எதிரே, நிற்கும் அனுவைக் கண்டு, "ஏய்" என்று கத்தத் தொடங்க, அப்போது, அறையின் உள்ளே, அவசரமாக வந்த அபிராமி, "யப்பா மது, என்னாச்சு உனக்கு..? உனக்கு என்ன பண்ணுது மது?" என்று விசனத்துடன், கண்களில் இருந்து தாரை தாரையாக வழியும் கண்ணீரோடும் வாஞ்சையாக தலையை தடவி, விசாரித்தார்.

அதில் சுயம் பெற்ற அனு, "அத்தை அவருக்கு ஒன்னுமில்ல.. ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடும்.. பயப்படாதீங்க" என்று ஆதூரத்துடன் அபிராமியிடம் திரும்பி கூறினாள்.

அதே நேரம், அவள் கையில் வைத்திருந்த டைரி, மதுவின் கவனத்தை ஈர்த்து, அவனைப் பதட்டம் ஆட்கொண்டது.

திடீரென, அவன் முகத்தில் முத்து முத்தாக வியர்வை பூத்தது. பற்கள் தந்தியடிக்க, உதடுகள் வறட்சியாக காணப்பட, சுவாசிக்க கஷ்டப்படும் விதமாக, நெஞ்சுக்கூடு வேகமாக ஏறி இறங்கியது. சட்டென, அவன் உடல் தூக்கிபோட, கைகால்கள் நடுங்கியது.

இதை உடனடியாக கவனித்த அனு, அவன் அருகில் சென்று, "மது மது இங்க பாருங்க.. உங்களுக்கு என்ன பண்ணுது... என்னாச்சு.. ஒன்னுமில்ல.. காம் டௌன்.." என ஆறுதலாக பேச, அதை கவனிக்கும் நிலையில் அவன் இல்லையே..

இப்போதும் அவன் மூர்ச்சை அடைந்தான். அபிராமி, "மது என்று பெருங்குரல் கொடுக்க, ரிஷிக்கும், அனுவிற்கு, பிரச்சனை பெரிதோ என்ற சந்தேகத்தைக் கொடுத்தது. அனு இன்னமும் தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்று எண்ணினாள். உடனே, ஹாஸ்பிடலுக்கு, செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து, ரிஷியிடம் கூறி ஏற்பாடு செய்தாள்.

ரிஷியும் ஒத்துக்கொண்டு, தன் காரிலேயே செல்லலாம் என்று, அனு, அபிராமி, மதுகரன் மூவரையும் என்று கூட்டிச் சென்றான்.

அங்கே மருத்துவமனையில், பொது மருத்துவம் நிபுணர், ராமலிங்கம், (அனுவின் தந்தை) அங்கே இருக்க, மதுவின் மூர்ச்சைக்கான காரணத்தையும், அவனையும் ஆராய்ந்தார்.

பின், அனுவை மட்டும், தனியே அழைத்து, "நீ எதுக்கு இப்ப வந்த? அதுவும் ஒரு பேஷண்ட் கூட? பேஷண்ட் கூட வந்தவங்க, அம்மாவோட தோழி அபிராமி தானே..? அவங்களுக்கும் உனக்கும் என்ன தொடர்பு?"

"அப்பா வெய்ட்!! ஏன் இவ்ளோ கேள்வி? ஆமா அபிராமி ஆன்ட்டி தான். அவங்க பையன் மதுகரன்.. ரிஷியோட ஃப்ரெண்ட்.. எனக்கு ஆல்ரெடி அவங்களை தெரியும்.. இன்னிக்கு அவங்க வீட்டுக்கு ரிஷியோட போயிருந்தேன்.. அப்ப.. அப்ப.. ரெண்டு தடவை மதுகரன் மயக்கம் போட்டு விழுந்துட்டாரு.. அதான் இங்க கூட்டிட்டு வந்தேன்.."

"ம்ம்ம்" என்று அவளை யோசனையுடன் ஆராய்ந்தார் பெற்ற தந்தையாக!!

"அப்பா.. மதுக்கு என்ன ப்ரோப்ளம்..? அவருக்கு எப்படி இருக்கு?" என்று கேட்கவும், ராமலிங்கம் அவளையே உற்று நோக்கினார்.

"அப்பா.." என்றாள் அழுத்தமாக.. அவருடைய பதிலுக்கு காத்திருப்பதாகவும் உறுதியாக நின்றாள்.

"ரிப்போர்ட் வரட்டும்.. இப்போதைக்கு ட்ரிப்ஸ் செலுத்த சொல்லிருக்கேன்.. கொஞ்ச நேரம் கழிச்சு, MRI (magnetic resonance imaging) எடுக்க சொல்லிருக்கேன்.. பார்ப்போம்" என்றார் கேள்விக்கு பதிலாக.

"தேங்க்ஸ் அப்பா" என்றாள் புன்னகையுடன்.

அதற்கு எதுவும் பிரதிபலிக்காமல், "சரி நீ வீட்டுக்கு கிளம்பு.... ரிப்போர்ட்ஸ் வந்ததும் சொல்றேன்"

"இல்ல அப்பா நான் இங்கேயே இருக்கேன்.. அவருக்கு என்னனு தெரிஞ்சுகிட்டுக் கிளம்பறேன்.." என்றாள் அவளும்.

"என்னாச்சு உனக்கு..? நம்ம செயல்முறை என்ன? ரிப்போர்ட்ஸ் வர டைமிங் தெரிஞ்சும் பேசற?" என்ற அவரின் வினாவுக்கு, அவள் திருத்திருவென விழித்தாள்.
 

Deepa

Active member
1st
அருமையான பதிவு
மதுவுக்கு என்ன பிரச்சினை இருக்கும்.
 
Top