கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

இன்று முதல் நந்தவனம்...அத்தியாயம் 1

Status
Not open for further replies.

sankariappan

Moderator
Staff member
இன்று முதல் நந்தவனம்

அத்தியாயம்—1





காரியாலயம் கிளம்ப நேரமாகிவிட்டது. சுமதி தன் பீரோவை திறந்தாள். நீல நிற காட்டன் புடவை மனதை கவர்ந்தது. அதில் குட்டி குட்டி மயில்கள் ஆடுவது போல் எம்பிராய்டரி போட்டிருந்தது. கையில் பச்சை ஜரிகை ஊடுருவியிருந்தது. அதே கலர் ஜாக்கெட். அதை ஆசையுடன் தடவிப் பார்த்தாள் சுமதி. இது பிரதாப் அவள் பிறந்த நாளுக்கு வாங்கிக் கொடுத்தது. அவன் அன்று கொடுத்த போது அவளுக்கு அது இருபதாவது பிறந்த நாள். அன்று அவள் எவ்வளவு மகிழ்ந்தாள்.!

அதெல்லாம் கனவாகிவிட்டது. பூந்தோட்டம் மலரின்றி இருப்பது போல் அவளும் இப்பொழுது மலர்ச்சியின்றி இருக்கிறாள். இன்று ஏனோ இந்தப் புடவையை கட்டிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. காரணம் அவளுக்கு இன்று இருபத்தி மூன்றாவது பிறந்த நாள். இன்று பிரதாப் வருவானா? சந்தேகம் தான். அவள் தன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளன்றும் அவன் வருவான் என்று நம்பிக் கொண்டிருக்கிறாள். இந்தப் புடவை கொடுத்த அன்று அவன் சொன்ன சொற்கள் அவளுள் கலந்து போயிருந்தது.

“உன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளன்றும் எங்கிருந்தாலும் ஒரு பரிசோடு இந்த கடற்கரை மணலில் வந்து நிற்பேன்.” அவள் மனம் அன்று ரெக்கை கட்டி பறந்தது. இன்று ரெக்கை இழந்த பறவை போல் தத்தி தத்தி நடக்கிறது. இந்த மூன்றாண்டுகளாக அவள் தன் பிறந்த நாளன்று வந்து ஏமாந்து போகிறாள்.

ஏமாந்து போகிறாள்.

“என்ன சுமதி...அந்தப் புடவையில் என்ன தான் இருக்கிறது? அப்படி நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கனவுக் கண்களுடன் நிக்றே?”

சைந்தவி கேட்கிறாள். என்ன பதில் சொல்வது.?

“சும்மா தான்....இது என் அம்மா கொடுத்தது. அதான் பீல் பண்ணிட்டு இருக்கேன்.” சுமதி பொய் சொல்லி வாய் மூடவில்லை அதற்குள் சைந்தவி குபுக்கென்று சிரித்தாள். அவளை பரிதாபமாகப் பார்த்தாள்.

“இன்னும் உன் துரோகி அம்மாவை நீ மறக்கலையா.? அந்த இரண்டு கழிசடைகளையும் நீ மறக்கணும் சுமதி. மனதை சுமை ஆக்கிக்கிட்டு இருக்கே. பேசாம ஒரு கல்யாணத்தை பண்ணிக்கோ. அப்ப தான் இந்த ராட்டுகளை நீ மறப்பே....புரியுதா?” சைந்தவி இப்படித்தான் எப்பொழுதும் கொஞ்சம் கூட பயமில்லாமல் கோபம் வந்தால் யாரை வேண்டுமானாலும் திட்டுவாள். ஆனால் அதில் ஒரு நியாயம் இருக்கும். கண்டபடி பேசாதே சைந்தவி என்று அவள் எச்சரித்திருக்கிறாள். அவள் கேட்டால் தானே! அம்மாவைப் பற்றியோ சித்தியைப் பற்றியோ அவள் இப்பொழுது நினைக்கவில்லை பிரதாப் பற்றி என்று சொன்னால் அவள் இன்னும் அதிகமாகத் திட்டுவாள். அந்த இன்னொரு துரோகியைப் பத்தி நினச்சே, உன்னைக் கொன்னுடுவேன் என்று மிரட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவளுக்கு அவ்வளவு காண்டு. எல்லாம் அவள் மேல் உள்ள பாசத்தால் தான் அப்படி கூறுகிறாள் என்று அவளுக்குத் தெரியும்.

“சரி சைந்தவி உத்தரவு. இப்ப கிளம்பலாமா? நீயும் அந்த துரோகி லிஸ்டில் சேர்ந்துடாதே. என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.” சுமதி புடவை மாற்றிக் கொண்டு வந்து சொல்லி முடித்தாள். அவளுக்குத் தெரியும் அப்படி நடக்காது என்று.

“நோ கண்ணீர் இஸ் அலௌட். சைந்தவி இருக்கும் இடத்தில் சூரியகாந்தி பூவாக மனம் மலரணும். முகாரி ராகம் கூடாது.”

“உத்தரவுன்னு சொல்லிட்டேனே. கிளம்பு. உன் பாஸ் ராஜரத்தினம் உனக்காக வழி மேல் விழி வைத்து காத்திட்டிருப்பார். அழகான செக்ரட்டரின்னா சும்மாவா?” ஏய்....என்று செல்லமாக திட்டிக் கொண்டே அவளும் கிளம்பினாள். இருவரும் வீட்டை பூட்டிக் கொண்டு அவரவர் ஸ்கூட்டியை கிளப்பினர். தெரு முனை தாண்டியதும் சைந்தவியின் ஸ்கூட்டி இடது பக்கம் திரும்பியது. சுமதியின் ஸ்கூட்டி வலது பக்கம் திரும்பியது. எதிர் எதிர் திசையில் அவர்கள் அலுவலகம் என்றாலும் ஒரே திசையில் தான் அவர்கள் நட்பு ஓடிக் கொண்டிருந்தது. இனிய நட்பு.



ஒரு பௌர்ணமி நாளில் தான் அவர்கள் சந்தித்துக் கொண்டார்கள். வானத்து நிலா அவர்களைப் பார்த்து சிரித்தும் அழுதும் ஆறுதல் சொல்லிய நாளது. சுமதியும் அதை அசைபோட்டுக் கொண்டிருந்தாள். சைந்தவியும் அதை அசை போட்டுக் கொண்டிருந்தாள். உறவுகள் துரத்திய அந்த நாளில் அவர்கள் உறவானார்கள். அது அன்று அந்த கடற்கரையில் தான் நடந்தது. என்ன முட்டாள்தனம்! இருவரும் தற்கொலை செய்து கொள்ளத் தான் கடற்கரைக்கு வந்தார்கள். கடல் அலைகளில் ஒரு நூறு அடி இடைவெளியில் இருவரும் சாவை எதிர்கொண்டு நுரை ததும்பிய அலைகளின் வேகத்துக்கு ஈடு கொடுத்து முன்னேறிக் கொண்டிருந்தார்கள். ஒரு பெரிய அலை வந்து இருவரையும் கரைக்கு புரட்டி கொண்டு வந்து சேர்த்தது. பக்கம் பக்கமாக ஒருவரை ஒருவர் பார்த்தபடி விழுந்து கிடந்தார்கள். இருவருக்கும் புரிந்தது. ஒ..நீ நம்ம கேஸ் தானா?

“நீங்க உங்க உடலை கடலுக்கு தானம் செய்ய வந்தீங்களா?” என்று சைந்தவி முதலில் கேட்டாள். மணலும் உப்பு நீரும் வாயிலும் உடலிலும் அப்பிக் கொண்டிருந்தது. பௌர்ணமி நிலா முழு அழகுடன் மேகத்தை துரத்திவிட்டு இவர்களை பார்த்துக் கொண்டிருந்தது. முட்டாள்கள்...அழகான முகங்களுக்கு தைரியமான மனசில்லையே! பாரதியின், மனதில் உறுதி வேண்டும் கவிதையை படித்திருக்க மாட்டார்களோ? சுத்த வேஸ்ட்.....என்று தாய் போல் நினைத்தது நிலவு. கடல் அலையை படு வேகமாக அடிக்க வைத்து முழு நிலவு இவர்களை கரைக்கு கொண்டு வந்திருப்பதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. இயற்கைக்கும் மனசுண்டு. சுமதி மெல்ல எழுந்தாள். உப்பு கரித்த உதட்டை துடைத்துக் கொண்டு சொன்னாள்.

“கடல் கூட நம்மை வேண்டாம்ன்னு சொல்லுது.”

சூடிதாரின் மேல் படித்திருந்த மணலை தட்டி விட்டுக் கொண்டிருந்த சைந்தவி சுமதியின் ஆடையில் படிந்திருந்த மணலையும் தட்டினாள்.

“நீ எதுக்கு தற்கொலை செய்ய வந்தே.?” என்றும் கேட்டாள்.

“எனக்கு யாருமில்லை. அன்பு செலுத்திய அம்மா, சித்தி என்னை வீட்டிலிருந்து துரத்திவிட்டார்கள்.” என்று சொன்னாள் சுமதி.

“நீ படிச்சிருக்கியா?”

“ஒரு பள்ளியில் டீச்சரா வொர்க் பண்றேன்.” என்றாள் சுமதி.

விழுந்து விழுந்து சிரித்தாள் சைந்தவி.

“எதுக்கு சிரிக்கிறே? டீச்சரா வொர்க் பண்ணறது அவ்வளவு ஜோக்கான விஷயமா? என் பள்ளிப் பிள்ளகைளுக்கு நான்னா உசிரு.”

“அப்ப.....நீங்க ஏன் மேடம் சாக வந்தீங்க? அம்மா துரத்தினா என்ன? உங்க பள்ளிப் பிள்ளைகளுக்கு அம்மாவா இருக்க வேண்டியது தானே? உங்களுக்கு உறவிருக்கு...வேலை இருக்கு...வாழ வழியிருக்கு..” சொன்ன சைந்தவியின் கையை பிடித்தாள் சுமதி.

சைந்தவி சுமதியின் கையை உதறிக் கொண்டு “நான் தான் சாகணும்.. எனக்கு உறவும் இல்லை....வேலையும் இல்லை...வீடும் இல்லை...நான் ஒரு பெலை நோக்கி ஓடினாள். “இரு அப்ப...நானும் வரேன்...” சுமதி அவளை நோக்கி ஓடினாள். சைந்தவி நின்றாள். கடலின் பேரிரைச்சலுக்கு நடுவே கத்தினாள். “நீ எதுக்கு சாவணும்.? நீ வாழ பணமிருக்கு...எனக்கு....”

சுமதி அவள் கையை பற்றிக் கொண்டு தர தரவென்று இழுத்துக் கொண்டு கரைக்கு வந்தாள். மணல் பரப்புக்கு அழைத்துச் சென்றாள்.

நிலா கடல் அலையில் தன் பிம்பத்தை ஆட வைத்து சந்தோஷப்பட்டது. அப்பாடா....ஒரு வழியாக அவர்கள் தப்பித்தார்கள்.

சாவு ஒரு கணம் தான்....ஆனால் அதோடு முடிந்ததா? நாளிதழில்..வார இதழில்...டி.வி செய்திகளில்...என்று இந்த இளம் பெண்களின் பெயர் அடிபட்டு நாறிக் கொண்டிருக்கும். மனித குலம் இருக்கும் வரை இவர்கள் சூர்ப்பநகையாக சித்தரிக்கப் படுவார்கள். நல்ல வேளை அவர்களுக்கு அறிவு வந்தது. வாழ்க வளமுடன்.

வாழ்த்தியது நிலவு. அலைகள் பொன்னொளி வீசியது.

“பார்...அந்த அலைகள் பொன்னொளியில் மினுக்குகிறது. நமக்கும் ஒரு எதிர்காலம் இருக்கும். சொல்லு....உன் பிரச்னை என்ன? உனக்கு நானிருக்கேன்.” என்றாள் சுமதி. இருவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்து தங்கள் கண்களில் ஒற்றிக் கொண்டார்கள்.

“என் பெயர் சைந்தவி. நான் பி.காம் கோல்ட் மெடலிஸ்ட். உன் பெயர் என்ன.?” இருவரும் மணலில் உட்கார்ந்தார்கள். காந்தி மகாத்மாவின் சிலை உள்ள கடற்கரை அது. உண்மை உள்ளங்கள் அங்கு வந்தடைந்தது கூட ஒரு சத்தியத்தின் ஒளி வீச்சோ?

“என் பெயர் சுமதி...என் அம்மா, என் சித்தி என்னை துரத்திவிட்டதுக்கு காரணம் இருக்கு....ஆனா...”

“சரி...அப்புறம் நிதானமா பேசிக்கலாம் சுமதி. நாம பிரெண்ட்ஸ்.” இருவரும் கை குலுக்கிக் கொண்டார்கள்.



இருபது வயதுப் பெண்கள் தற்கொலைக்கு முயன்றதுக்கு யார் காரணம்?----குடும்பமா? சமுதாயமா? அவர்கள் பலகீனமா? என்று பட்டி மன்றம் நடத்த இது நல்ல டாபிக் தான் என்றாலும் அதை எல்லாம் தாண்டி இதுக்கு காரணம் அன்பு இல்லாமை, என்பது தான் உண்மை. அவர்கள் செய்த தவறுகளை மன்னிக்க ஆளில்லை. சரி ஒ.கே நடந்தது நடந்துவிட்டது. புதிய வாழ்க்கை வாழுங்கள்...திருத்திக் கொண்டு மேலே மேலே போங்கள் என்று சொல்ல உற்றாருக்கும் மனசில்லை. சமுதாயத்துக்கும் இரக்கமில்லை. கை கழுவி விடும் மனோபாவம் இருக்கும் வரை தற்கொலைகள் வளர்ந்து கொண்டே தான் போகும். மேகங்கள் வானம் முழுக்க படர்ந்து சூரியனை மூடுவதில்லையா? அதற்காக சூரியனை யாராவது வெறுத்ததாக சரித்திரம் உண்டா? அது கொஞ்ச நேரம் தான். நிரந்தரம் இல்லை. வெளிச்சம் வந்துவிடும். சந்திரன் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை காணாமல் போவதில்லையா? அதற்காக யாராவது நிலவை வெறுத்து ஒதுக்கி இருக்கிறார்களா?

அது இயற்கை என்று சொல்லிக் கொள்கிறோம். இளம் பெண்களும் தவறு செய்ய சூழ்நிலை உருவாகும் போது மட்டும் அது இயற்கை இல்லை...குற்றம் என்று முத்திரை குத்துகுகிறோம். சுமதிக்கு நேர்ந்த இயற்கையான உணர்வு, இளம் வயதுக்கே உரிய காதல். அதில் வந்த ஏமாற்றம் தான் அவளை தற்கொலை வரை விரட்டி விட்டிருக்கிறது. சைந்தவிக்கு ஏற்பட்ட இயற்கை வலி வறுமை தான். ஐஸ்கிரீம் நழுவி உருகி விழ....வெறும் குச்சி தான் மிஞ்சியது. காதலித்தவன் விலகி ஓடிவிட சுமதி குற்றவாளி ஆக நிற்கிறாள். விவகாரம் பண்ணிய சமுதாயம் வசவுகளை வாரி வழங்க, அதை தாங்க முடியாமல், அவள் உறவுகள்----அவளை தாங்கி பிடித்து ஆறுதல் சொல்வதை விட்டு, அவளை விரட்டி அடித்தது. கௌரவத்தை காப்பாற்றிக் கொள்கிறார்களாம்!. சைந்தவியின் வறுமையை பயன்படுத்தி டீல் பேசி சிக்க வைத்தவன் அவளை பார்ட்டி ஒன்றில் எல்லோர் முன்னிலையிலும் அவமானப்ப படுத்தினான். சமுதாயம் காறித் துப்ப...குற்றம் புரிந்தவன் அவளை குற்றவாளி ஆக்கினான். மண்ணுக்குள் அமிழ்ந்து போக நினைத்தாள் சைந்தவி. கடலை நோக்கி ஓடினாள். தோற்றுப் போன இருவர், உறவுக்குள் உறவாக புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் இட்டார்கள்.



சுமதி பள்ளியை அடைந்து பள்ளி வளாகத்துக்குள் நடந்த போது---சின்னஞ் சிறு குழந்தைகள் ‘குட் மார்னிங் மிஸ்’ என்று ராகம் பாடின. மூன்று வருஷம் முந்தி அவள் ஒரு நொடியின் அவசர புத்தியால் சாகத் துணிந்தாள். அவளை கடல் கொண்டு விட்டிருந்தால்? இன்று அவள் இந்த இனிய ராகத்தை ரசித்திருக்க மாட்டாள். ‘தேங்க்ஸ் கடலே...உன் விரிந்த நீர் பரப்பில் எங்களை அழுத்தாமல் கரையில் சேர்த்து விட்டியே’ என்று அவள் நினைக்காத நாளில்லை. ராகவி டீச்சர் சுமதியை எதிர் கொண்டாள். அவள் இப்பொழுது தான் இங்கு பணியாற்றுகிறாள். வந்து இரண்டு மாதம் தான் ஆகிறது. அவள் படப்படப்புடன் சொன்னாள்.

“சுமதி டீச்சர்...நான் நன்றாகப் பாடம் சொல்லிக் கொண்டுகிறேனா என்று செக் பண்ண இன்று கரஸ்பான்டன்ட், மதர் ரோஸ்மேரியை அனுப்றாங்க. பயமா இருக்கு.”

“கவலைப்படாதே ராகவி...எனக்கும் முன்பு ரோஸ்மேரி மேடம் தான் செக் செய்தாங்க. அவங்க நல்ல மாதிரி. உனக்கு ஒ.கே சொல்லிடுவாங்க. பயப்படாதே. செக் பண்ண ஆள் இருக்குன்னு மறந்திட்டு இயல்பா வகுப்பை நடத்து. புரியுதா.? நோ டென்ஷன்...பெஸ்ட் ஆப் லக்.” என்று ராகவிக்கு தைரியம் ஊட்டினாள்

“தேங்க்ஸ் டீச்சர்...” மணி அடிக்க உள்ளே ஓடினாள் ராகவி. இந்த சோதனை நாள் அவளுக்கு நல்லபடியாக முடிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள் சுமதி. ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பிள்ளைகளுக்குத் தான் அவர்கள் சொல்லிக் கொடுகிறார்கள். ராகவி கணக்கு சொல்லிக் கொடுக்கும் டீச்சர். சுமதி தமிழ், கெமிஸ்ட்ரி சொல்லிக் கொடுக்கிறாள். இந்த வேலைக்கு இண்டர்வியூவுக்கு அவள் கிளம்பிய போது அம்மா சொன்னது அவளுக்கு நினைவுக்கு வந்தது.

“போயும் போயும் இந்த டீச்சர் வேலைக்கு போகத் தானா உன்னை இவ்வளவு தூரம் படிக்க வைத்தேன்.? பி.எட் முடித்ததும் எம்,எட் படிக்கச் சொன்னேன்...நீ இந்த ஏ.பி.சி.டி பசங்களுக்கு கத்துக் கொடுக்க போறேங்கரே. உனக்கு வேலை கிடைக்கக் கூடாதுன்னு வேண்டிக்கிறேன்.” என்று ஆசீர்வதித்தாள். “நீங்க சபிச்சா எனக்கு வேலை நிச்சயம் கிடைக்கும். பாருங்க வேலையோடு வரேன். சித்தி கேசரி செய்து வையுங்க.” என்று சொல்லிக் கொண்டே அவள் போனாள். வெற்றியுடன் திரும்பி வந்தாள். வீட்டில் கேசரி இல்லை. அவளுக்குப் பிடிக்காத பால் கோவா டைனிங் டேபிளில் உட்கார்ந்திருந்தது. “என்னம்மா இது? எனக்கு பிடிக்காததை செய்து வச்சிருக்கீங்க? சித்தி நீங்களாவது..” அவளை இடை மறித்து அம்மா சொன்னாள் அலட்சியமாக. பழி வாங்கும் குரல்.

“எனக்கு பிடிக்காத வேலையை நீ ஏத்துக்கிட்ட போது உனக்கு பிடிக்காத ஸ்வீட்டை நான் செய்தது எப்படி தப்பாகும்?” இது லாஜிக்காம். அம்மாவும் சித்தியும் ரொம்பவே மாறிவிட்டார்கள். முன்பெல்லாம் அவளுக்கு அப்படி செல்லம் கொடுத்தார்கள். தரையில் நடக்க விட்டதில்லை. அவள் சுருட்டை முடியும் ரோஜா கலரும், முக்கும் முழியும் கண்டு கண்டு ரசிப்பார்கள். பெருமையாகச் சொல்வார்கள். “எங்க சுமதியின் நிறம் யாருக்கு வரும்? எங்க சுமதியின் கெட்டிக்காரத்தனம் யாருக்கு வரும்?” சுமதி வானில் மிதந்த நாட்கள் அவை. படிப்பும் பட்டமும் இருந்தும் நிறைய சம்பாதிக்கும் வேலையில் சேராமல் இப்படி ஒன்றையணா வேலையில் இருக்கிறாளே என்று அவர்களுக்கு கோபம். அவளுக்கு பிடித்த வேலையை தானே அவள் செய்ய முடியும்?

அவளை பாராட்டி கைக்குலுக்க அன்று அவள் ஜன்னலருகே ஒரு உருவம் வந்தது. இருள் சூழ்ந்த வேளை. அம்மாவும் சித்தியும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். சுமதி படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு மேஜை விளக்கை அணைக்கப் போனாள்.

“சுமதி கண்ணு...” குரல் கேட்டு பயந்து கத்த வாயெடுத்தாள்.

“நான் தான் கத்தாதே. வசந்தா வந்திடப் போறா. உனக்கு வேலை கிடைச்சதாமே. சந்தோசம். கங்கிராட்ஸ்...” என்றது அந்த உருவம்.

“உன்னை யார் இங்கு வரச் சொன்னது? உன் மூஞ்சிலேயே விழிக்க நான் விரும்பலை. எதுக்கு வந்தே? போயிடு...இல்லே சித்தியை எழுப்புவேன். நீ இங்கு வருவது இதுவே கடைசியாக இருக்கட்டும்.”

அந்த உருவம் அழுது கொண்டே சென்றது.

இன்று நினைக்கிறாள் சுமதி “தப்பு பண்ணிட்டோமோ...”

 
Last edited by a moderator:
Status
Not open for further replies.
Top