அத்தியாயம்—10
இயற்கைக்கு ஒரு திறமை உண்டு. துயரத்தின் பிடியில் மனிதன் விழும்போது அது நிறைய கற்றுக்கொடுக்கும். தண்ணீர் எப்படி பாத்திரத்திற்கு ஏற்ப வடிவம் கொள்கிறதோ அப்படித்தான் துயரம் வரும் போது அதற்கேற்ப மனம் உருக் கொள்கிறது.
அந்தக் கடிதம் கண்டவுடன் சைந்தவி உடைந்து போய் உட்கார்ந்த சில நிமிடங்களிலேயே அவளுள் ஒரு வெளிச்சம் பரவியது. ஒட்டிக் கொண்டிருந்த நிழல்கள் கூட ஓடி மறைந்து கொண்டிருந்தது.
“நீ எனக்கு சேவகம் செய்ய கடமைபட்டிருக்க. ஆனால் பெருந்தன்மையுடன் உன்னை என் ராணி மாதிரி நடத்துவேன்னு சொல்றேன்...பாஸ்கரை விடு. உஷார்...நீ சம்மதிக்கவில்லை என்றால் ராவணன் செய்ததை செய்வேன் ..” இது தான் வாசகம். இது அசோக்கின் திருவிளையாடல் என்று அவளுக்கு தெளிவாகத் தெரிந்தது. அந்த வீடே அவளுக்கு சிறைச் சாலை போல் தோன்றியது. இவன் மூலமாக வந்தது பின் வேறு எப்படி இருக்கும்?. மனம் நடுங்கியது. உடல் நடுங்கியது. கண்கள் இருண்டது. அம்மா...என்று வாய்விட்டு அரற்றினாள். புலம்பினாள். எனக்கேன் இந்த நிலைமை? பேசாமல் அவமானப்பட்டுக் கொண்டாவது பெரியம்மா வீட்டில் இருந்திருக்கலாமோ? ஒரு நல்ல வேலை கிடைக்கும்வரை அங்கேயே கெஞ்சிக் கேட்டு இருந்திருக்கலாமோ? அருள் கூர்ந்து உதவி செய்தான் என்று இவனை நம்பி வந்தது முட்டாள்தனமோ? எப்படி இவனை நம்பத் தோன்றியது? அந்த நேரம் வாழ்வில் அவள் பட்ட முதல் அவமானங்கள் பெரியம்மா வீட்டில் தான். அந்த வீட்டு மனிதர்கள் தவிர உலகில் எல்லோரும் தங்கக் கம்பிகள். உதவி செய்ய கருணை உள்ளத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தான் அவள் அரைகுறை அனுபவம் அவளுக்கு கற்றுக் கொடுத்தது. இப்பொழுது அப்படியில்லை என்று புரிந்தது. பலவித விசித்திர குணங்கள் உடையவர்கள் நாடெங்கும் ஊரெங்கும் இருக்கிறார்கள் என்று புரிந்தது. கொதிக்கும் பாத்திரத்தில் இருந்து அடுப்புக்குள் விழுந்துவிட்டாள் என்பது தான் உண்மை.
எல்லா தெய்வங்களையும் ஒரு முறை நன்றாக திட்டிவிட்டு எழுந்தாள். வீழ்வேன் என்று நினைத்தாயோ அசோக்? அவளுடன் அவள் மனமும் எழுந்து கொண்டது. கடமைப்பட்டிருக்கேனாம்...பணத்தை கொடுத்து என்னை விலக்கு வாங்க நினைக்கும் இவன் மனதில் காதல் எப்படி வந்திருக்கும்.? காமம் தான் குடியேறி இருக்கிறது. காதலுக்கு கருணை காட்டத் தான் தெரியும் காமத்துக்கு தான் சிறை பிடிக்கும் எண்ணம் வரும். அப்பா முன்பு ஒரு முறை சொல்லியிருக்கிறார்---அவள் ஒட்டப்பந்தயத்தில் தோற்று அழுத போது “எதுக்கு வருத்தம் குட்டிம்மா? சூரியனைப் பாரத்து உன் முகத்தை திருப்பு. நிழல்கள் உன் பின்னால் ஓடிவிடும். ஒரு சின்ன சூரிய ரேகை எல்லா நிழல்களையும் துரத்திவிடும்.. வெற்றி பெற என்ன செய்யவேண்டும் என்று யோசி. போராடு..” உண்மை தான். அந்த வரிகளின் அர்த்தம் அவளுக்கு இன்று நன்கு புரிந்தது. அவள் மனக் கதவு திறந்து கொண்டது.
அவள் கண்ணீரை துடைத்துக் கொண்டாள். சொந்தங்கள் வேலியாக இல்லை என்றால் என்ன கெட்டுப் போச்சு? துயரத்தை அனுபவித்த அறிஞர்களின் பொன் மொழிகளை தனக்கு கிடைத்த வேலியாக அவள் பயன்படுத்திக் கொள்வாள். எஸ்..போராடு சைந்தவி...
“நீ ஒரு பெண்ணாக இருப்பதால் மனிதர்கள் உன்னிடம் தங்கள் எண்ணங்களை திணிப்பார்கள். எல்லைகளை வகுப்பார்கள். எப்படி உடை உடுத்தவேண்டும் என்று சொல்வார்கள். எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று பாடம் எடுப்பார்கள். நீ யாரை பார்க்கவேண்டும், நீ எங்கே போக வேண்டும் என்று கோடு போடுவார்கள். அப்படி வரையறுக்கும் மனிதர்களின் தீர்ப்புக்குள் இருக்கும் நிழலில் நீ வாழாதே...” இதை சொன்னது யார்? பிரபல திரைப்பட நடிகர் அம்பிதாப் பச்சன். அவள் இதை படித்திருக்கிறாள். அது இப்பொழுது அவளுக்கு ஞாபகம் வந்தது. எப்படிப்பட்ட வார்த்தைகள்! உயிரூட்டும் வார்த்தைகள். அசோக் யார் அவளுக்கு கட்டளை இட? பணம் கொடுத்ததற்காக அவளையே குத்தகைக்கு எடுதுவிட்டதாக அர்த்தமா? அவள் ஜடமா? அவளால் இப்பொழுது பணத்தை தரமுடியாமல் இருக்கலாம். அதற்காக எப்பொழுதும் கொடுக்காமலா இருக்கப் போகிறாள்? அவள் மனதை வளைக்க திட்டமிடுகிறானா? உடம்பை கையகப்படுத்த திட்டமிட்டிருக்கானா? அசோக் உன் பிடியில் நான் சிக்கமாட்டேன். நான் என் சுதந்திரத்தை இழக்க மாட்டேன். சைந்தவிக்குள் தைரியம் கொழுந்து விட்டு எரிந்தது. அவள் சாதாரண பெண்ணில்லை. அக்னிப் பெண். திரௌபதி நெருப்பில் இருந்து பிறந்தவள். அந்தக் கதை என்ன உணர்த்துகிறது? எல்லா பெண்களுக்குள்ளும் ஒரு நெருப்பு எரிய வேண்டும் என்று சொல்கிறது. சைந்தவி தீமையை பொசுக்குவாள். பொசுங்கிப் போகமாட்டாள். எப்படி? அவள் சிந்தித்தாள். அவள் வழக்காடு மன்ற கண்ணகி ஆகத் தயாரானாள்.
அசோகிற்கு போன் செய்தாள். அவன் உடனே எடுத்தான். கெஞ்சப் போகிறாள் என்று காது குளிர கேட்க தயாரானான்.
“அசோக்...உங்க கூட நான் பேசலாமா?”
“என்ன பேசப்போறே? பாஸ்கருடன் இனி பழகமாட்டேன்னு காம்ரமைஸ் பண்ணப் போறியா? கன்சிடர் பண்றேன்” அவன் குரலில் ஒரு பெருமிதம். ஜெயித்துவிட்டேன் என்ற சந்தோசம்.
“இல்லே..என் பெண்மைக்கு ஆபத்துன்னு நீ பயமுறுத்தி இருக்கே. எனக்கு உன்னை நினச்சா பாவமா இருக்கு.”
அவன் முகம் சுருங்கியது. என்ன சொல்கிறாள் இவள்? அனாதையாக இருக்கும் போதே இவ்வளவு திமிரா? “என்ன உளறுகிறே?”
“பென்மைன்னா பலகீனம் உள்ள இனம்னு நீ நினச்சா அதுக்கு நான் பொறுப்பில்லை. என் பெண்மையை மதிக்கணும். அந்த தகுதி எனக்கு இருக்கு. நான் மென்மையான பெண். அதே சமயம் போர்குணம் கொண்டவள். உன்னால் என்ன கட்டாயப்படுத்த முடியாது. உன் பணத்தை நான் கண்டிப்பாக கொடுத்துவிடுவேன். அதுக்கு விலையா என் சுதந்திரத்தை நீ கேட்காதே. என்னை அடக்க நினைக்காதே..”
அவன் வெலவெலத்துப் போனான். இந்த பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை. “அப்ப பின் விளைவுகளை நீ சந்திக்க தயாரா இருக்கே. அது மோசமா இருக்கும் சைந்தவி..”
“நான் ஒன்றும் பறவை இல்லை. நீ என்னை வலையில் சிறை பிடிக்க. நான் நாணயமான பெண். சதையும் ரத்தமும் உள்ள உணர்வுள்ள மனுஷி. அதை நான் வலியுறுத்தி சொல்றேன். அசோக் உன் எல்லைகளை நீ புரிந்து கொள்.” போனை வைத்துவிட்டாள். அவன் பதில் பேசத் தெரியாமல் நின்றான். தன் கோழைத்தனம் தெரிய, அவன் செய்கையின் அசிங்கம் அவனுக்கே தெரிந்தது. ஆனால் அதை ஒப்புக் கொள்ள அவன் தயாராக இல்லை. துரியோதனர்கள் சாவதில்லை. அவர்கள் யுகம் தோறும் பிறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பெண்மையை அவமானப்படுத்த திட்டம் தீட்டிக் கொண்டே தான் இருக்கிறார்கள். “ஒரு பொம்பள அவளுக்கு இவ்வளவு திமிரா? பணத்துக்கும் மசியலை. செஞ்ச உதவிக்கும் மசியலை. காட்டிய பெருந்தன்மைக்கும் அர்த்தமில்லை. இவளுக்கு தான் பெரிய அழகி என்ற திமிர்!” அசோக் உள்ளம் உறங்கும் எரிமலை ஆயிற்று. சைந்தவி போர் குணமா உனக்கு? நான் யாருன்னு காட்டறேன். நரி போல் திட்டமிடத் தொடங்கினான். நல்ல சந்தர்பத்துக்காக காத்திருந்தான். அவன் காதல் பழி வாங்கும் உணர்வா மாறிக் கொண்டிருந்தது. இது ஏதும் அறியாமல் சைந்தவி தொடர்ந்து பாஸ்கருடன் பழகி வந்தாள்.
“பாஸ்கர் அண்ணா...அசோக் எனக்கு எச்சரிக்கை கடிதம் எழுதி கதவுக்கு அடியில் போட்டுவிட்டுப் போனான்..” என்று காட்டினாள்.
“சைந்தவி...நான் வேணா இனி வராம இருக்கட்டுமா? உன்னை அவன் நாசம் செய்துடுவானோன்னு பயமா இருக்கு..”
“அதெல்லாம் அவனால் ஒன்னும் பண்ண முடியாது அண்ணா. அக்கம் பக்கம் எல்லாம் என் நிலைமை புரிஞ்சவங்க. எனக்கு ஒண்ணுன்னா ஓடி வருவாங்க. நீங்க கவலை படாதீங்க அண்ணா.”
அவனுக்கு பயமாகத் தான் இருந்தது. பண பலமும் ஆள் பலமும் உள்ளவன். என்னவேனா செய்வான். பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டால் அவனை ஒதுங்கிப் போ என்று கட்டளை இடலாம். சைந்தவி என்ற மலர் கருகிவிடக் கூடாதே என்று பயந்தான். பாவம் சின்னப் பெண். உலகத்தின் கெட்ட முகம் அவளுக்குத் தெரியாது. எப்படி அவளை காப்பாற்றுவது என்று அவனுக்குத் தெரியவில்லை.
“ஏனண்ணா ஒரு மாதிரியா இருக்கீங்க?”
“எல்லாம் உன்னை பற்றிய பயம் தான் சைந்தவி. இந்த அண்ணன் ஒரு கையாலாகாதவனா இருக்கேனே...”
“அய்யோ அண்ணா. நான் ஒரு போடு போட்டதும் அவன் பயந்திட்டான். அவன் என்னுடன் பேசி இருபது நாள் ஆறது. அவன் இனி என் வழிக்கு வரமாட்டான். கவலையை விடு.”
சைந்தவிக்கு எந்த பயமும் இல்லை. மனிதர்கள் எந்த அளவுக்கு போவார்கள் என்று அவளுக்கு தெரியாத நிலையில் அவள் தன் வீரத்தை மெச்சிக் கொண்டாள். அவள் உள்ளம் தைரியத்தை இழக்கவில்லை. சின்ட்ரெல்லா நிரூபிக்கவில்லையா ஒரு ஜோடி செருப்புகள் அவள் வாழ்க்கையை மாற்றும் என்று! அழகாகவும் பயந்தாங்குள்ளியாகவும் இருப்பதை விட திடமா இருப்பதே பெண்மைக்கு அழகு என்று அப்பா சொல்லியிருக்கார். “யாராவது தன்னை பாராட்டுகிறார்களா என்று அதற்காக ஏங்கி கவனிப்புக்கு காத்திருப்பது எப்படி இருக்கும் தெரியுமா? வாழ்க்கையை ஒரு வெயிட்டிங் ரூம் ஆக்கிவிடும். அப்படி ஒரு பெண் கழிப்பது பரிதாபமானது சைந்தவி. நீ நீயாக இருக்க உன்னை செம்மை படுத்திக் கொள்.” என்று அம்மா சொல்லியிருக்கிறாள். அவள் தோழி ஒரு முறை சொன்னாள்
“நிஜமான மகாராணிகள் தங்கள் கிரீடத்தை ஒருவருக்கு ஒருவர் சூட்டிக் கொள்வார்கள். நாம் அப்படித்தான் செய்ய வேண்டும்.”
இந்த எண்ணங்களுடன் வளர்ந்த அவளை அடிமையாக வைத்திருக்க முடியுமா?. ஒரு தரம் அதற்கு இடம் கொடுத்துவிட்டால் அவள் காலமெல்லாம் அடிமையாக இருக்க வேன்டியது தான். அவளுக்கு வாழ்க்கை சவாலாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. இளமைக்கு போராடத் தெரியும். அனுபவத்துக்கு தான் ஆபத்துகள் தெரியும்.
சைந்தவி ஒரு புதிய பாடலை பாடிக் கொன்டிருக்கும் போது அவன் வந்தான். அவன் முகத்தில் திமிர் இல்லை. தவறு செய்துவிட்ட குழந்தை போல் தலையை தொங்கப்போட்டுக் கொன்டிருந்தான்.
“என்னை மன்னித்துவிடு சைந்தவி. நான் நல்ல யோசிச்சுப் பார்த்தேன். உன்னை ரொம்ப கேவலமாக ட்ரீட் பண்ணிவிட்டேன். உன் கோபம் நியாயமானது. என்னை மன்னிப்பாயா?”
அசோக் இந்தளவு இறங்கி வருவான் என்று அவள் நினைக்கவில்லை. மாலை நேரம். ஜன்னல் வழியே இதமான காற்றும் மெல்லிய பூ வாசனையும் வந்து கொண்டிருந்தது. இரவை நோக்கி வேகமாக போய்கொண்டிருந்தது வானம். அவள் அன்று சந்தோஷமாக இருந்தாள். கடையில் அவளோட ஈடுபாட்டான வேலை திறமைக்கு பாராட்டாக போனஸ் கொடுத்திருந்தார்கள். ஐயாயிரம் ரூபாய்.
“அசோக்..இந்தாங்க..”
“என்னது?”
“ஐயாயிரம் ருபாய். உங்க கடனை கழிக்க ஆரம்பித்துவிட்டேன்.”
அவன் வாங்கி எண்ணிப் பார்த்தான். பிறகு அவளிடமே கொடுத்தான். ”வாங்கிக் கொள்...எனக்கு அவசரமில்லை. மொத்தமாகக் கொடு. எங்கே போய்விடப் போகிறாய்? இந்தா..”
“இல்லே. நீங்க வச்சுக்கோங்க. மீதி பணத்தை இப்படி கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்திடறேன்..”
“இல்லை சைந்தவி. சொன்னாக் கேளு. வாங்கிக் கொள்..”
அவன் கொடுக்க அவள் தயக்கத்துடன் பெற்றுக் கொண்டாள்.
“இது சரியில்லை அசோக்..ப்ளீஸ் வாங்கிக்கோங்க...”
அவன் அவள் அருகே வந்து அழுத்தமாக அவள் உதட்டில் முத்தமிட்டான். அவள் அதிர்ச்சியடைந்தாள். அவன் விலகிக் கொண்டு
“ஸாரி சைந்தவி....நான் உணர்ச்சி வேகத்தில் அப்படி பண்ணிவிட்டேன். என்னை மன்னித்து விடு.” அவன் ஓடிவிட்டான். அவள் இன்னும் அந்த தகாத செயலின் தாக்கத்திலிருந்து விடுபடவில்லை. ச்சே....ராஸ்கல் எப்படி நடந்து கொள்கிறான்? அவனை நன்றாக வாங்கு வாங்கு என்று வாங்காமல் விட்டேனே....நான் ஒரு முட்டாள்..என் அனுமதி இல்லாமல் என்னை எப்படி முத்தமிடலாம்? நான் சரி சொல்லவேயில்லயே!