கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

இன்று முதல் நந்தவனம்...அத்தியாயம் 11

Status
Not open for further replies.

sankariappan

Moderator
Staff member
அத்தியாயம்—11

மறு நாள் அவள் வேலைக்குப் போன போது அவளிடம் விஜி சொன்னாள். “சைந்தவி...ஏதோ சிலரை வேலை நீக்கம் செய்யப் போறாங்களாம். பேசிக்கிட்டாங்க...புதுசா சேர்ந்தது நீயும் நானும் தான். எனக்கு பயமா இருக்குடி..”


திக்கென்று உணர்ந்தாள் சைந்தவி. நேற்று தான் போனஸ் என்று கொடுத்தார்கள். கண்டிப்பாக தன்னை வேலை நீக்கம் செய்ய மாட்டார்கள் என்று தைரியமானாள். வாடிக்கையாளர்கள் வர ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு துணிகளை காட்ட ஆரம்பித்தாள். பிற்பகல் மூன்று மணிக்கு கடையில் பரபரப்பு ஏற்பட்டது. கும்பலாக வந்த ஒரு கூட்டம் ஒரே கலரில் ஷர்ட் வேண்டும் என்று கேட்டார்கள். அந்த செக்க்ஷன் மாடியில் என்று அவள் சொன்னாள். நீங்க வந்து காட்டுங்க என்று வற்புறுத்தினார்கள்.


“போம்மா...வியாபாரம் ஆகணுமில்லே...” என்று மேனேஜர் சொல்ல வேறு வழி இல்லாமல் அவள் போனாள். அந்தக் கூட்டம் ஷர்ட் செலக்ட் பண்ணுவதற்குள் அவளை ஒரு வழி பண்ணிவிட்டார்கள். அடுத்து ஒரு ஸ்டைலான பெண்மணி வந்தாள். பத்து புடைவைகள் எடுத்துவிட்டு, அவளை புடவையை கொண்டு காரில் வைக்கச் சொன்னாள். இதுவரை அவள் அப்படி செய்ததில்லை. மானேஜர் திட்டுவாரே என்று பல்லை கடித்துக் கொண்டு போய் புடவை பார்சலை காரில் வைக்கச் சென்றாள். அங்கு அமர்ந்திருந்த டிரைவர் அவளைப் பார்த்து “என்ன பாப்பா...நல்ல வேலை செய்யறேன்னு போனஸ் எல்லாம் கொடுத்தாங்க போலிருக்கு. என்னைக் கட்டிக்ரியா? ஜோரா வாழலாம்”


என்று பல் காட்டினான்.


“நான்சென்ஸ்....கதவை திறங்க நான் வச்சிட்டுப் போறேன்.”


“இரும்மா..இன்னும் எஜமானி வரலையே. அதுவரை பேசிட்டு இருப்போம். இவ்வளவு அழகா இருக்கியே. சினிமாவிலே நடிச்சா லட்சக் கணக்கிலே சம்பாதிக்கலாமே..” அவள் மௌனமாக இருந்தாள். அந்த குண்டு பூசணிக்காய் வந்தவுடன் புடவைகளை ஒப்படைத்துவிட்டு திரும்பினாள். என்ன இன்று இப்படி நடக்கிறது?. இப்படி எல்லாம் நடந்ததே இல்லையே. அவள் வேலை முடிந்து வீட்டுக்குப் போகும் போது மேனேஜர் சொன்னார்.


“இத பாரும்மா..நீ இங்கு சேர உனக்கு பணம் கொடுத்த அசோக் தம்பியின் பணத்தை நீ உடனடியா கொடுத்திடணும். இல்லை உனக்கு வேலை இல்லை...”


“என்ன சார் சொல்றீங்க?. அவர் நேத்து தான் வந்திட்டுப் போனார். எனக்கு பணத்துக்கு அவசரமில்லன்னு சொன்னாரே..அவர் தான் என்னை வேலையில் சேர்த்துவிட்டார் என்பது உண்மை தான். ஆனால் உங்களை எல்லாம் தெரியாது என்று அப்போ சொன்னாரே. எனக்கு பக்க பலமாக வந்தார் அவ்வளவுதான். உங்களுக்கு அவருக்கும் என்ன சம்பந்தம்?”


“உன்னை நல்ல பெண் என்று நினைத்து தான் வேலையில் சேர்த்தோம். அவரிடம் நீ தப்பான உறவு வச்சிருக்கேன்னு தகவல் வருது. அதனாலே அது இல்லன்னு நீ ப்ரூப் பண்ணனும்னா, உடனே அவரிடம் வாங்கிய பணத்தை கொடுத்துவிடு. இல்லை அவருக்கும் உனக்கும் உறவு வேறு மாதிரி இருக்குன்னு....”


“எனக்கு ஒரு வாரம் டைம் கொடுங்க....நான் எப்படியாவது பணத்தை கொடுத்திடறேன். வீணா என் மேலே தப்பான பழியை போடாதீங்க.”


“நீ பொம்பளப் புள்ள. உன் வாழ்க்கையை கெடுக்க வேண்டாம்னு தான் உன்னை தனியா கூப்பிட்டு சொல்றேன். பணத்தை கட்டிவிடு.”

சைந்தவி பாஸ்கரிடம் இது பற்றி சொன்னாள்.


“அந்த மேனஜருக்கு எப்படி தெரிந்தது நான் அசோக்கிடம் பணம் வாங்கியது? எனக்கு ஒண்ணுமே புரியலை. என்ன பாவம் செய்தேனோ இப்படி இக்கட்டில் மாட்டிகிட்டேன். நான் செய்த ஒரே தவறு அந்த அசோக்கிடம் கடன் வாங்கியது தான். ஒரு வாரத்தில் கொடுகிறேன்னு வீராப்பா சொல்லிட்டு வந்திட்டேன். என்ன செய்யறதுன்னு தெரியலை பாஸ்கர் அண்ணா அறுபதாயிரதுக்கு நான் எங்கே போவேன்? .”


“நீ கவலைப் படாதே சைந்தவி. என் நண்பன் ஒருவனிடம் நான் கடன் வாங்கித் தருகிறேன். எனக்கு இரண்டு நாள் டைம் கொடு.”


சொன்னபடி அவன் இரண்டே நாளில் பணத்துடன் வந்தான்.


“இந்தா சைந்தவி. அவன் முகத்தில் விட்டேறிந்துவிடு...போன் போட்டு வரச் சொல். நீ கொடுக்கும் போது சாட்சியா நான் இருக்கணும். இல்லை கொடுக்கவேயில்லன்னு சொன்னாலும் சொல்லிடுவான்.”


அவள் போன் போட்டு சொல்ல அசோக் வந்தான்.


“சார்....இந்தாங்க உங்க பணம். மொத்தமா கொடுக்கணும்னு சொன்னீங்க. கொடுத்திட்டேன். இதோட நம்ம டீல் முடிஞ்சு போச்சு.”


“என்ன இது? எதுக்கு இந்த அவசரம்? சைந்தவி உன் மேல் நான் உயிரையே வச்சிருக்கேன். உன்னிடம் நான் இப்படி ஈட்டிக்காரன் மாதிரி கேட்பேனா? உனக்கு நெருக்கடி கொடுப்பேனா? ”


“மிஸ்டர் அசோக்...நான் தான் பணம் கொடுத்தேன். என் தங்கச்சிக்காக நான் எதுவேணா செய்வேன். நீங்க வாங்கிக்கிட்டு போங்க. இனிமே அவளை தொந்தரவு பண்ணாதீங்க. புரியுதுங்களா?” என்றான் பாஸ்கரன். இது கேட்டு அசோக் கொதித்தான்.


அசோக் பணத்தை பெற்றுக் கொண்டான். அவன் கண்ணில் நீர் வந்தது. “சைந்தவி என்னால் உனக்கு கஷ்டம் வருவதை நான் விரும்பலை. நீ நல்லா இருக்கணும். நான் வரேன்..”


“அப்பாடா. ஒழிந்தான். கவலைப் படாதே சைந்தவி..”


“அண்ணா..உங்களுக்கு ஏது இவ்வளவு பணம்?”


“என்னிடமிருந்த தங்க மோதிரத்தை விற்று கொண்டு வந்தேன்.”


நெகிழ்ந்து போனாள் சைந்தவி. பேச முடியாமல் திணறினாள்.


“உடன் பிறந்தா தான் தங்கையா சைந்தவி?. உனக்கு ஒரு அண்ணன் இருந்தால் உன் கஷ்டம் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பானா?”


“ஆண்டவன் என் மேல் கருணை வச்சு உங்களை எனக்கு அனுப்பி இருக்கார். நான் உங்க கடனை அடைச்சிடுவேன் அண்ணா.”


“இது கடன் இல்லை கிப்ட்..” என்று சொல்லிவிட்டுப் போனான் அவன்.

அதன் பிறகு சைந்தவியின் பாதையில் அசோக் வரவில்லை. இரண்டு மாதம் நிம்மதியாகப் போயிற்று. பிறகு ஒரு நாள் அவன் வந்தான்.


“சைந்தவி..எனக்கு நிச்சயதார்த்தம். கண்டிப்பா நீயும் பாஸ்கரும் வரணும். ப்ளீஸ்..மாட்டேன்னு சொல்லிடாதே...”


பத்திரிகை வைத்துவிட்டுப் போனான். நிச்யதார்த்தத்தையே பெரிய ஹோட்டலில் வைத்திருந்தான். பிரபல பாடகர் இசை கச்சேரி வேறு. பாஸ்கரிடம் அவள் சொன்னாள். “அண்ணா இதுக்கு போணுமா என்ன? எனக்கு இஷ்டமில்லை. பெரிய மனிதர்கள் கூடி இருப்பார்கள். நல்ல உடை கூட இல்லை. நான் போகலை வாழ்த்து அனுப்பிவிடுகிறேன்.”


“நாம போணும் சைந்தவி. அப்ப தான் அவனுக்கு நோஸ்கட் கொடுத்த மாதிரி இருக்கும். நீ எந்த உடை உடுத்தினாலும் அந்த உடை ரிச்சா தெரியும். நாம் கண்டிப்பா போறோம். அதான் அவன் கடனை அடச்சாச்சே.” பாஸ்கர் சொல்ல சொல்ல சைந்தவிக்கும் அது சரி என்று பட்டது. ஆமாம் போலாம் என்று தோன்றியது.

நிச்சயதார்த்த விழா கிராண்டாக நடந்து கொண்டிருந்தது. பணக்கார பிரமுகர்கள் வந்திருந்தனர். அவளும் பாஸ்கரும் வந்த போது அசோக் ஒடி வந்து வரவேற்றான். அவன் முகம் மலர்ந்திருந்தது.


“வாங்க..வாங்க. நீங்க வந்தது தான் எனக்கு பெருமையாக இருக்கு.”


அவர்களை முதல் வரிசையில் உட்கார வைத்தான். அவர்களுக்கு தனியாக உபசாரம் வர்வேற்பு நடந்தது.

சடங்குகள் நடந்தது. அசோக்கின் அம்மாவோ அப்பாவோ இந்த விழாவுக்கு வர முடியாமல் அமெரிக்காவில் மாட்டிக் கொண்டார்களாம். பனி மூட்டம் காரணமாக ப்ளேன் குறித்த நேரத்தில் கிளம்பவில்லையாம். விழாவை நிப்பாட்ட வேண்டாம். எல்லா ஏற்பாடும் செய்துவிட்டபின் அது நிற்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களாம். மைக் மூலம் அதை உற்றார் ஒருவர் தெரிவித்தார். மாலையும் கழுத்துமாக மணப்பெண் மேடைக்கு வந்தாள். அசோக்கும் வந்து அமர்ந்தான். அசோக் மைக்கில் பேசினான். “நான் மிகவும் கொடுத்து வைத்தவன். அழகும் அறிவும் கொன்ட அருமையான பெண்ணின் கை பிடிக்கப் போறேன். வசந்தி நீ பேசு. உனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம் என்று சொல்லு.”


வசந்தி எழுந்தாள். அவள் பேசப் பேச சைந்தவி அதிர்ச்சி அடைந்தாள்.


“நான் இந்தக் கல்யாணத்துக்கு முதலில் சம்மதிக்கவில்லை. காரணம் யாரோ ஒரு பெண்ணுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாக எனக்கு தகவல் கிடைத்தது. அப்படியெல்லாம் இல்லை என்று அசோக் நிருபித்துக் காட்டினார். அப்புறம் தான் சம்மதித்தேன்.”


கூடத்தில் சலசலப்பு. இவ்வளவு வெளிப்படையாக சொல்கிறாளே மாப்பிள்ளை கோபித்துக் கொள்ள மாட்டாரா என்று பலரும் நினைத்தனர். அவள் தொடர்ந்தாள்.


“அவர் கோபித்துக் கொள்வாரோ என்று நீங்க கவலைப் படறீங்களா?


அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். தவறாக பயன்படுத்தப்பட்டார் என்பது தான் உண்மை. அவர் ஒரு பெண்ணின் மேல் பரிதாபப்பட்டார். அவளுக்கு வேலை வேண்டும்..ஆனால் அதற்கு அவள் ஐம்பதாயிரம் கொடுக்க வேண்டும். அவள் அவரிடம் பணம் கேட்டாள். “நீங்க சும்மா கொடுக்கவேண்டாம் ஒரு இரவு நான் உங்களுக்கு மனைவியா இருக்கேன்..” என்று கேட்டுக் கொண்டாள். அவர் அதற்கு சம்மதிக்கவில்லை. கடனா தரேன்னு சொன்னார். பணத்தை பெற்றுக் கொன்ட அவள் அவருக்கு ஒரு முத்தம் கொடுத்தாள். மனசு மாறினால் வாங்க காத்திருக்கேன்னு சொன்னாள். அவ்வளவுதான். வேறு ஒன்றும் நடக்கவில்லை. அதற்கான வீடியோ ஆதாரம் இதோ. பேரதிர்ச்சி அடைந்தாள் சைந்தவி. அசோக் அவளுக்கு பணம் கொடுப்பதும் அவள் வாங்கிக் கொள்வதும். பின் அழுத்தமாக முத்தம் கொடுப்பதும்...மனசு மாறினால் வாங்க காத்திருக்கேன் என்பது வரை வீடியோவில் பதிவாகி முடிவடைந்து விட்டது. அந்தக் குரல் அவளுடையது இல்லை. இப்பொழுது அந்த வீடியோ திரையில் ஒளிர்ந்தது. நிச்சயதார்த்தத்தைப் பார்க்க அமைக்கப் பட்ட பெரிய திரையில் மீண்டும் மீண்டும் காட்டப்பட்டது. அவனாக பணத்தை வாங்கிக் கொண்டு வேண்டாம் என்று சொல்லி கொடுக்கும் போது வீடியோ எடுத்திருக்கான். பிறகு அவன் அவள் எதிர்பாராத சமயம் அழுத்தமாக முத்தம் கொடுத்தது பதிவாகி இருந்தது. பின் அவள் பேசியதாக வந்தது அவள் குரல் இல்லை. மனசு மாறினால் வங்க காத்திருக்கேன்னு யாரையோ வைத்து பதிவு பண்ணி இருக்கிறான். அவன் சடாரென்று உத்தமன் போல் ஓடிவிட்டது எல்லாம் வீடியோ சொல்லிற்று. உறைந்து போனாள். அவள் ரத்தம் கொதித்தது. அவன் முத்தம் கொடுத்தது இதுக்குத்தானா? தந்திரமாக படம் எடுத்து தனக்கு சாதகமான பதிலை பதிவு பண்ணி...பழி வாங்கிட்டானே....


“அவள் ஒரு கால் கேர்ள். இவரை வைத்து சம்பாதிக்கலாம் என்று நினைத்திருந்தாள். அவர் அதற்கு மசியவில்லை இந்த உண்மை தெரிந்ததும் நான் இவரை திருமணம் செய்ய சம்மதித்துவிட்டேன் நான் எடுத்த முடிவு சரிதானே? எனக்கு பெருமையாக இருக்கு. இப்படிப்பட்ட உத்தமர் என் கணவராகப் போகிறார்.” அவள் சொல்லி முடித்ததும் பலரும் கைதட்டி வெல் டன் அசோக்....என்று கத்தினர். அடுத்து நடந்தது எல்லாம் கனவு மாதிரி இருந்தது. பாஸ்கர் ஆவேசத்துடன் மேடைக்கு சென்று மைக்கை பிடுங்கி சொன்னான். “இது அபாண்டம். இந்த அசோக் ஒரு ப்ராட். என் தங்கை சைந்தவி கால் கேர்ள் இல்லை. கெட்ட எண்ணத்தோடு தான் அவளோடு பழகினான் அவன். பணத்தை கொடுக்கச் சொல்லி டார்சர் செய்தான்.”


அதற்கு மேல் அவனை யாரும் பேசவிடவில்லை. மேடையில் ஏறி சிலர் அவனை தள்ளினார்கள்.. “தங்கை என்று சொல்லிக் கொண்டு இவர் அப்பெண்ணிடம் கள்ளத் தொடர்பு வைத்திருந்தார். அதை கண்டித்த அசோக்கை இவர் பழி வாங்கவே இப்படி சொல்கிறார்..” என்று மைக் மனிதர் சொல்ல, ஆவேசமாக பாஸ்கர் அவரை தாக்க, கலாட்டாவாகி போலீஸ் வந்து பாஸ்கரை பிடித்துக் கொண்டு போயிற்று. சைந்தவி அதிர்ச்சியில் நின்றாள்.


“எதுக்கு அவரை பிடித்துக் கொண்டு போறீங்க? அவர் எந்த தவறும் செய்யவில்லை..அவரை விடுங்க..” என்று சைந்தவி போலீசிடம் வாதாடினாள். “மேடம் அவரை இதுக்காக மட்டும் நாங்க அரெஸ்ட் பண்ணவில்லை. அவர் புக் ஷாப்பிலிருந்து புக் பப்ளிஷ் பண்ண ஒரு எழுத்தாளர் கொடுத்த பணத்தை கையாடி இருக்கார்...அதுக்காக தான் கைதி செய்கிறோம்..” என்றனர். சைந்தவி வாயடைத்து நின்றாள். அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று புரிந்தது. அவள் மன்றாடியது பார்த்து கூட்டம் சொன்னது.


“இவ தான் அந்த கால் கேர்ள் போலிருக்கு. அதான் இவனுக்கு வக்காலத்து வாங்கறா. இவளைப் போல் உள்ளவங்க பெரிய மனுஷங்க கிட்டே பணம் கறக்க எப்படியெல்லாம் நூதனமா ப்ளான் போடுறாங்க....ச்சே....நீங்க இவனை பிடிச்சிட்டுப் போங்க சார்..”


“கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம நிக்கறா பாருங்க..”


“அழகா இருந்தா இப்படிப்பட்ட கேவலமான முறையில் தான் சம்பாதிக்கணுமா? உன் குட்டை மேடையில் போட்டு உடைத்தது ரொம்ப சரி. எப்படியெல்லாம் பிளான் போடறாங்க.”


“இதை விட தூக்கு போட்டுக்கிட்டு சாகலாம்.”


“வெட்கம் கெட்டவள். கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம பங்ஷனுக்கு


வந்திட்டா பாருங்க...நிச்சயதார்த்தத்தை நிறுத்த வந்திருப்பா..”


பாஸ்கரை போலீஸ் இழுத்துக் கொண்டு போக. சைந்தவி திக்பிரமித்து நிற்க, அங்கே அசோக் வந்தான்.


“எல்லோரும் அந்தப் பெண்ணை பழி சொல்லாதீங்க. இனிமேலாவது அவள் திருந்தி வாழ வழி விடுங்க. பாவம் ஏதோ தவறு செய்துவிட்டாள். இப்படிப்பட்டவங்க இருக்கறது சமுதாயத்துக்கு தெரியணும்ன்னு தான் இதை வெளிச்சம் போட்டுக் காட்டினேன். மத்தபடி அவளை தண்டிக்க இல்லை. நீ போம்மா....இனியாவது பெரிய மனிதர்கள் வாழ்க்கையில் விளையாடாதீங்க. அனைவரும் அமைதியா அமருங்க. நிச்சயதார்த்தம் நடக்கட்டும். அனைவரும் அமர்ந்தனர். ஏழை சொல் என்று அம்பலம் ஏறிற்று?


ஒரு சிலர் அவளைப் பார்த்து “இன்னும் ஏம்மா நின்னுட்டிருக்கே? அதான் உன் சாயம் வெளுத்துப் போச்சே. தூ...மானம் கெட்ட ஜென்மங்கள்..” என்று விட்டுப் போனார்கள். சைந்தவி பண பலத்தின் முன் தோற்றுப் போனாள். அவள் உள்ளம் வெடித்து சிதறியது.


சாக்கடையில் கல் எறிந்த கதை ஆகிவிட்டது. அவள் செய்த ஒரே தவறு இவன் நல்லவன் என்று எண்ணி அவன் கொடுத்த பணம் பெற்றுக் கொண்டது தான். அவள் மெளனமாக கண்ணீர் வடித்துக் கொண்டு நிற்பதை திருப்தியுடன் பார்த்தான் அசோக். அவளை வாசல் வரை தொடர்ந்து சென்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னான். “ஸாரி சிஸ்டர். நான் உன் வீட்டுக்கு வந்து போவதை யாரோ பெண் வீட்டாரிடம் சொல்லிவிட்டார்கள். எனக்கு வேறு வழி தெரியலை...” உதட்டை பிதுக்கி ஸ்டைலாக சொன்னான் அவன்.


பெரியம்மாவும் அவள் குடும்பமும் அங்கு நின்று கொண்டிருந்தது. அவள் வருவதை பார்த்து பெரியம்மா சொன்னாள்.


“வேலை கிடைச்சுதுன்னு சொன்னியேடி. இது தான் அந்த வேலையா? இப்படி மானதை வாங்கிட்டியே. சீ....இது ஒரு பிழைப்பா? போ எங்காவது சாவுடி.” என்று விட்டுப் போனாள். அவள் பெண்கள் வாய்க்கு வந்தபடி பேசினர். பெரியப்பா “உன்னை செருப்பால் அடிக்கணும். அப்படி அடிச்சா செருப்புக்குத் தான் அசிங்கம். நீ இன்னும் உயிரோடு இருக்கணுமா?” என்று விட்டுப் போனார்.


“நான் தான் அவர்களை இன்வைட் பண்ணியிருந்தேன். நீ அவமானப் படுவதை அவர்கள் பார்க்கவேண்டாமா?” என்றான் கேடி அசோக்.


கடை முதலாளி வந்து சொன்னார். “அழகை வச்சு சம்பாதிக்க நெனச்சியே. பரிதாபம். நல்ல வேளை இந்தத் தம்பி உன்னை போலீஸில் மாட்டிவிடலை. என்னைக் கேட்டா சிறைச் சாலையே இந்த அவமானத்தை விட தேவலை. இப்படிப்பட்ட பிழைப்பு பிழைக்கணுமா?.” என்றார்.

கிழிந்த நாராய் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். அங்கு அவள் சாமான்கள் எல்லாம் வெளியில் தாறுமாறாகக் கிடந்தது. வீட்டில் ஒரு பெரிய பூட்டு தொங்கியது. அவள் திடுமென்று உணர்ந்தாள். ஓனருக்கு போன் செய்தாள். “சார்...வீடு பூட்டியிருக்கு. சாமானெல்லாம் வெளியே கிடக்கு...என்ன விஷயம் சார்?” அவள் குரலே நடுங்கியது.


“ஸாரிம்மா...வேசிக்கெல்லாம் வீடு கொடுக்கறதில்லை...நீ வேறு இடம் பார்த்துக்கோ..” சைந்தவி அழகூட சக்தி இல்லாமல் நின்றாள். எல்லாமே அசோக் திட்டமிட்டு செய்திருக்கிறான். அவன் காதலை நிராகரித்ததுக்காக மட்டுமல்ல பாஸ்கரோடு அவள் பழகக் கூடாது என்று சொன்னதை மதிக்காமல் இருந்ததுக்காக..
 
Status
Not open for further replies.
Top