கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

இன்று முதல் நந்தவனம்...அத்தியாயம் 12

Status
Not open for further replies.

sankariappan

Moderator
Staff member
அத்தியாயம் —12




சோகத்தை வார்த்தைகளில் கொட்டிவிடு. வெளிப்படுத்தப்படாத சோகம் நெஞ்சத்தை உடைத்து விடும்...இப்படி சொன்னது வில்லியம் ஷேக்ஸ்பியர். மனிதர்களின் ஆழ் மனதின் பலம், பலவீனத்தை எடை போட்டு சொல்லியிருக்கும் அற்புதமான வாசகம். தெருவில் தனியாக உட்கார்ந்து இருந்த சைந்தவி யாரிடமும் தன் துக்கத்தை வாய் விட்டு சொல்ல முடியவில்லை. அதை கேட்க யாருமில்லை. பாஸ்கரை போலீஸ் பிடித்துக் கொண்டு போய்விட்டது. அது வேறு அவளுக்கு குற்ற உணர்வாக இருந்தது. அவள் கையில் செல்போன் மட்டும் தான் இருந்தது. ஒரு பைசா கூட இல்லை. அக்கம் பக்கம் மனிதர்கள் விஷயம் தெரிந்து அவளை தூர நின்று வேடிக்கை பார்த்தார்கள். பெரியம்மா வீட்டுக்குப் போக முடியாது. கையில் காசில்லை. இருக்க இடமில்லை. வேலையில்லை. அவமானம் வேறு...எந்த பெண்ணுக்கும் ஏற்படக் கூடாத அவமானம் இது.





எப்படி பழி வாங்கி விட்டான் அந்த அசோக்? துரியோதனர்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். பாஞ்சாலிக்கு துணையாக ஐவர் இருந்தனர். குந்தி இருந்தாள். அவளுக்கு கடவுள் கூட இல்லை. த்ரௌபதி சபையில் அனைவரிடமும் வாதாடும் நிலையிலாவது இருந்தாள். அவளுக்கு அந்தக் கொடுப்பினை கூட இல்லை. எப்படியாவது காயப்படுதணும் என்று திரியும் அசோக் போன்றவர்கள் இருக்கும் இடத்தில் இனி அவள் நிம்மதியாக வாழத்தான் முடியுமா? எவ்வளவு தன்னம்பிக்கையோடு அவள் தன் வாழ்க்கையை ஆரம்பித்தாள்!. பெற்றோரை இழந்து...பெரியம்மா வீட்டில் அவமானப்பட்டு வெளியே வந்தபோது கூட அவள் தன் தைரியத்தை இழக்கவில்லை. இன்று இழந்தாள். வாய் விட்டு அழக்கூட முடியவில்லை. அப்பொழுதுதான் அவள் முடிவு செய்தாள் இனி எதற்கு வாழணும்? மானம் போன பின் ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை ஏது? விறுவிறுவென்று அவள் கடற்கரைக்குச் சென்றாள்.


முதலில் அங்கு உட்கார்ந்து ஓவென்று அழுதாள். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்று சொல்வார்கள். தெய்வமே கைவிட்ட போது...அவள் கடலை நோக்கி ஓடினாள். கடல் மாதா நீயே என்னை ஏற்றுக் கொள். அவளை அலை உள்ளிழுத்துக் கொண்டு போயிற்று.





தன் கதையை ராஜேஷுக்கு சொல்லிமுடித்த போது சைந்தவி கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது. சுமதியும் தற்கொலை செய்ய வந்தது, இருவரையும் கடல் மாதா கரையில் தூக்கி அடித்தது, அவர்கள் வாழ வேண்டும் என்று முடிவு பண்ணியது—எல்லாம் சொன்னாள் சைந்தவி.


“சுமதி ஏன் தற்கொலைக்கு முயற்சித்தாங்க?” என்று கேட்டான் ராஜேஷ். சுமதியின் கதையை சொன்னாள் சைந்தவி.





சுமதியும் ஒரு ராஜகுமாரி போல் வளர்ந்தாள். கேட்டது கிடைக்கும். சொன்னது நடக்கும். அம்மா வசந்தா சித்தி வேலம்மாள் இருவரும் அவள் மேல் உயிரையே வைத்திருந்தார்கள். அவள் நடக்க பூ போட்டார்கள். அவள் நன்கு படித்தாள். சுருள் முடியும்..கரு கரு கண்களும், சிவந்த மாந்தளிர் மேனியும் அவளை தனித்துக் காட்டியது. பாட்டி கமலத்தம்மாள் பேத்தி மேல் அவ்வளவு ப்ரியமாக இருந்தாள். மகள் வசந்தாவை விட அவளுக்கு பேத்தி தான் பிடிக்கும். அவள் சாகும் போது அவர்கள் வசித்து வந்த பூர்வீக வீட்டை பேத்தி சுமதிக்கு உயில் எழுதி வைத்துவிட்டுப் போவிட்டாள்.





சுமதி மேல் அவர்கள் தூரத்து சொந்தமான பிரதாப்புக்கு காதல் ஏற்பட்டது. அவன் அடிக்கடி வீட்டுக்கு வந்தான். அவர்களை நன்றாக பேசவும் பழகவும் அனுமதித்தாள் வசந்தா. அடிக்கடி வாசலில் வந்து நிற்கும் உருவத்தை அலட்சியம் செய்தாள் சுமதி. அந்த உருவம் அவளைப் பெற்ற அம்மா தான். வசந்தா அவளுக்கு அத்தை. அப்பா கூட பிறந்தவள். அவள் சொல்வாள்....


“இத பார் சுமதி அவளோடு பேசாதே. அவள் உன் அம்மா தான். ஆனால் கேடு கெட்டவள். உன்னை பெற்று போட்டுவிட்டு வீட்டை விட்டு. புருஷனை விட்டு வேறு யாரோ ஒருவனுடன் ஓடிவிட்டாள். அதனால் தான் அவளை உருவம் என்று சொல்கிறேன். அந்த உருவம் உன்னிடம் வந்து ஒட்டிக் கொள்ளப் பார்க்கிறது.” சின்ன வயதிலிருந்தே வசந்தா இப்படித்தான் சொல்லி வருகிறாள். சுமதி மூன்று மாதக் குழந்தையாக இருக்கும் போதே அவளை திருடிக் கொண்டு வந்துவிட்டாள் வசந்தா. வசந்தாவின் அண்ணன் வாசுவின் மகள் தான் சுமதி. சுமதியின் அம்மா லக்ஷ்மி தன் கணவன் வாசுவை விட்டு விட்டு கங்காதரன் என்ற ஒருவருடன் ஓடிவிட்டாள் என்று சுமதி கேள்விப்பட்டதிலிருந்து அவள் அம்மாவை வெறுத்தாள். அவமானம் தாங்கமால் வாசுதேவன் தற்கொலை செய்துகொண்டார் என்று வசந்தா சொன்னாள். அனாதையாக விடப்பட்ட மூன்று மாத கை குழந்தையான சுமதியை எடுத்துக் கொண்டு பட்டணம் வந்து சேர்த்தாள் வசந்தா. வசந்தாவின் கணவர் பூமிநாதன் வசந்தாவை காதலித்து கல்யாணம் பண்ணிக் கொண்டார். இருவரும் ஓடி போய் கல்யாணம் பண்ணிக் கொண்டார்கள். பத்து வருஷமாக குழந்தை இல்லை. வீட்டு வேலைக்கு வந்த வேலம்மாளை அவர் சேர்த்துக் கொண்டார். முறைப்படி கல்யாணம் ஆகவில்லை. அவர் மாரடைப்பால் இறந்து போக கிராமத்தை விட்டு கை குழந்தை சுமதியுடன் வசந்தாவும் வேலம்மாவும் பட்டணம் வந்து சேர்ந்தனர். கமலத்தம்மாளுக்கு வயதாகி விட்டதால்...மகன் வாசுவும் இறந்துவிட வேறு வழியில்லாமல் மகளுடன் வாழ ஆரம்பித்தார்.





இந்தக் குடும்பப் பின்னணி கொன்ட சுமதிக்கு வரன் அமைவது குதிரைக் கொம்பானது. ஆழகும் படிப்பும் இருந்தும் சுமதியின் பின்னணி அவளுக்கு எதிராக இருந்தது.


“அந்தக் குடும்பத்தில் சம்பந்தம் செய்து கொண்டால் அது நமக்கு கௌரவகுறைச்சல். அம்மாக்காரி ஓடி போயிட்டா. அப்பன் காரன் தற்கொலை பண்ணிக்கிட்டான். அத்தைக்காரி அம்மான்னு சொல்லிக்கிட்டு அவளை வளர்க்கிறா. அவளே ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டவ தான். பத்தாததுக்கு புருஷன் சேர்த்து வைச்சுக்கிட்ட பொண்ணை கூடவே வச்சிட்டிருக்கா. அந்தக் குடும்பம் வேண்டாம்..” பலரும் இந்த அபிப்பிராயத்துடன் பெண் எடுக்க தயங்கினர். சுமதி எந்த பாவமும் செய்யாமல் தண்டிக்கப் படுவது என்ன நியாயம்? யார் இதை எடுத்து சொல்லமுடியும்?





பிரதாப் சுமதியின் நல்ல குணத்தை கண்டு காதலித்தான்.


“நீ கவலை படாதே சுமதி. இந்த உலகமே எதிர்த்தாலும் நான் உன்னை கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன். இது சத்தியம்.”


என்றான். எப்படியாவது சுமதிக்கு கல்யாணம் ஆனால் சரி என்று எண்ணிய வசந்தா, பஞ்சையும் நெருப்பையும் ஒன்றாக பழக விட்டாள். பத்திக்கட்டுமே...ஏதாவது ஏடா கூடமாக நடந்தால் அதேயே சாக்காக வைத்து பிரதாப்பை வளைத்து போட்டு விடலாம் என்று அவளுக்கு எண்ணம். அது தான் அக்கா சரி என்று வேலம்மாள் தூபம் போட்டாள். இருவரும் என்றும் நேராகவே சிந்திக்க மாட்டார்கள்.





சுமதி வேலைக்குப் போக ஆரம்பித்தாள். பிரதாப் அவன் அம்மா வேந்தினி இல்லாத சமயம் சுமதியை பார்க்க வருவதும் பழகுவதும் அக்கம் பக்கத்துக்கு தெரிந்தது. யாரோ வேந்தினியிடம் சொல்லிவிட அவள் மகனை கடுமையாக எச்சரித்தாள்.


“பிரதாப்...நீ இனிமேல் அந்தப் பெண்ணோடு பழகுவதை நான் விரும்பலை. அந்தக் குடும்பம் அவப் பேர் எடுத்த குடும்பம். நாம் அங்கு போய் விழுந்தால் நம்மை குழியில் போட்டு அமுக்கி விடுவார்கள். வசந்தா லேசுபட்ட ஆள் கிடையாது. அந்த வேலம்மாள் வசந்தாவின் அல்லக்கை. சுமதி நல்ல பெண் தான். ஆனால் அவர்கள் குடும்பம் சரியில்லை. நீ அவளை சந்திக்காதே...”


“சரிம்மா...நீ சொன்ன பிறகு நான் ஏன் அவளை போய் பார்க்கிறேன்.” என்று மகன் வாக்கு கொடுத்ததும் வேந்தினி நிம்மதி பெருமூச்சு விட்டாள். ஆனால் பிரதாப் சுமதியை திருட்டுத்தனமாகப் போய் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். அக்கம் பக்கம் தெரிந்து விடக் கூடாது என்று இரவு பத்து மணிக்கு மேல் வந்தான்.


“பிரதாப்..ப்ளீஸ் இப்படி இரவில் வரவேண்டாமே. உங்க அம்மாவை கன்வின்ஸ் பண்ணி நீங்க என்னை வந்து பார்த்தால் நல்லது..”


“சுமதி....இரவும் பகலும் என் கண் முன் உன் முகமே தெரியுது. அம்மாவை எப்படியாவது நான் சரிகட்டிவிடுவேன். தங்கச்சி ஊர்மிளா கல்யாணம் முடியட்டும் அப்புறம் பார்...எந்த தடையும் இல்லை. அப்பா இறந்து ஆறு வருஷம் ஆச்சு. தங்கை கல்யாணம் முடிந்ததும் அம்மாவுக்கு நான் மட்டும் தான். என் பேச்சை தட்ட மாட்டாங்க.”


உறுதி மொழிகள் எப்பொழுதும் காதல் மயக்கத்தில் பிரமாதமாக வெளி வரும். சுமதி அதை நம்பினாள். அத்தை வசந்தாவை அவள் அம்மா என்று தான் கூப்பிடுவாள். அவள் சொல்வது தான் அவளுக்கு வேத வாக்கு. வசந்தா அவளிடம் சொன்னாள்.


“இதோ பார் சுமதி. உனக்கு நல்ல வரன் பார்த்திட்டு தான் இருக்கேன். எதுவும் அமையலை. எல்லாம் உன் அம்மாவின் ஓடுகாலி தனத்தால் தான். என்ன செய்வது?...பெரியவளாய் இருந்திட்டு இப்படி சொல்லக் கூடாது தான் ஆனாலும் சொல்றேன். பிரதாப் ரொம்ப நல்ல பையன். உன்னை உயிருக்கு உயிராக காதலிக்கிறான். எப்படியாவது அவனை தக்க வைத்துக் கொள். கந்தர்வ திருமணம் என்று கேள்விப் பட்டிருப்பியே...அது நடந்தால்.....நான் இருக்கேன்...வேந்தினியை சம்மதிக்க வைத்துவிடுவேன். பிரதாப்பை விட்டு விடாதே..”


வசந்தா சொல்வதை எப்போதும் தட்டமாட்டாள் சுமதி. ஆனால் இதற்கு அவள் சம்மதிக்கவில்லை.


“என்ன அம்மா பேசறீங்க? அதுக்கெல்லாம் நான் சம்மதிக்க மாட்டேன். எந்த தப்பான வழியிலும் நான் பிரதாப்பை அடைய விரும்பலை. அவன் என்னை காதலிப்பது உண்மை என்றால், இந்த மாதிரி கீழ்த்தரமான வகையில் அடைய ஆசைப்படக் கூடாது. அப்படிப்பட்ட கணவன் எனக்கு வேண்டாம். நான் கல்யாணம் ஆகாமலேயே இருந்துவிடுகிறேன்...”





சுமதியை சம்மதிக்க வைக்க முடியாது என்று உணர்ந்த பின் வசந்தா பிரதாப்பை கரைக்க ஆரம்பித்தாள். சுமதி வேலைக்கு போயிருக்கும் சமயம் அவனை கூப்பிட்டுப் பேசினாள்.


“பிரதாப்...என்னை நீ தப்பா நினைக்க கூடாது. நான் ஒரு யோசனை சொல்வேன்..நீ கேட்பாயா?”


“சொல்லுங்க...”


“நீ சுமதியை நிஜமாவே லவ் பண்றியா?”


“ஆமாம் ஆன்ட்டி. அதில் உங்களுக்கு என்ன சந்தேகம்? அவள் இல்லை என்றால் நான் இல்லை.”


“உங்கம்மா சம்மதிக்க மாட்டாங்களே.”


“எப்படியும் சம்மதிக்க வைப்பேன். நீங்க கவலை படாதீங்க ஆன்ட்டி.”


“உங்கம்மாவை எனக்கு நல்ல தெரியும். அவங்க இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டாங்க...அது உறுதி. குறுக்கு வழியில் தான் இதை சாதிக்க முடியும்”


“அப்படியா? என்ன சொல்றீங்க ஆன்ட்டி? ஓடிப் போய் கல்யாணம் கட்டிக்க சொல்றீங்களா?”


“அதெல்லாம் வேண்டாம். காதும் காதும் வச்ச மாதிரி....நீ ஒரு காரியம் பண்ணணும். அவளை கல்யாணத்துக்கு முன், முதலில் அவளை உன் மனைவி ஆக்கிக் கொள், புரியுதா நான் சொல்றது? கந்தர்வக் கல்யாணம். என்னடா கல்யாணத்துக்கு முன்னாலயே இப்படி நடதுக்கச் சொல்றேனேன்னு நினைக்காதே. சுமதியோட அம்மா வேறு ஒருத்தனோட ஓடி போனதாலும், அவள் அப்பா அதனால் தற்கொலை செய்துக்கிட்டதாலும்...சுமதிக்கு அழகும் குணமும் படிப்பும் இருந்தும் கல்யாணம் கை கூடலை. நீ அவளை அடைய இது தான் ஒரே வழி.”


பிரதாப் அப்பொழுது இருபத்தி மூன்று வயது வாலிபன். வயதில் சின்னவன் தான் என்றாலும் அவன் விவேகமாக சிந்தித்தான்.. சுமதியை அவன் கல்யாணம் செய்து கொள்ள விரும்பினான். ஆனால் இந்த மாதிரி நடந்து கொள்ள அவன் விரும்பவில்லை. ஏற்கனவே சுமதியின் அம்மாவால் ஏற்பட்ட கெட்ட பெயர் போதாது என்று சுமதிக்கும் கெட்ட பெயர் வந்தால்... அதுவும் அவனால் வந்தால்...அதை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியாது.


“அது சரிப்பட்டு வராது ஆன்ட்டி. என் தங்கை கல்யாணம் முடியட்டும். கண்டிப்பா நான் அம்மாவை கன்வின்ஸ் பண்ணி சுமதியை கை பிடிப்பேன். நீங்க கவலைப் படாதீங்க.” என்றான். வசந்தா, இப்படி ஒரு பையனா என்று எரிச்சல் பட்டாள். சுமதியை கல்யாணம் பண்ணிக் கொடுப்பது குதிரைக் கொம்பு போலிருக்கே என்று சஞ்சலம் அடைந்தாள்.


“ஏண்டி வேலு...பாரு இந்த இரண்டும் இப்படி சொல்லுதுக. இந்தக் காலத்து பிள்ளைங்க மாதிரியா இருக்குதுங்க. நானே சரின்னு சொல்லும் போது இதுகள் என்னமோ நேர்மை நியாயம்ன்னு பேசுதுங்க. அந்த பாங்க் வரன் சபேசன் ஒத்துக்கொள்வான் என்று நெனச்சேன். அவன் சரி என்று தான் சொன்னான். பிறகு இல்ல ஆன்ட்டி எனக்கு இப்ப கல்யாணம் இல்லன்னு சொல்லிட்டான். நான் விடலை. அவன் வீடு தேடித் போய் அவனை கரையா கரைச்சேன். யோசித்து சொல்றேன்னு சொன்னான். இன்னேவரை பதில் இல்லை. என்னதான் பண்ணறதுன்னே தெரியலை.”


“அக்கா...நான் ஒரு யோசனை சொல்றேன்.” என்றாள் வேலு.


“என்ன யோசனை சொல்லப் போறே? சுமதிக்கு என்ன வயசா ஆச்சு, எதுக்கு அவசரம்னு சொல்லுவே. அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. சாகிற நிலையில் இருக்கா. சுமதி கல்யாணத்தை பார்க்கணும்னு ஆசைப்படறா. அதான் இப்படி பறக்கேன். அது தெரியாதா உனக்கு?”


“அதுக்குத் தான் இந்த யோசனை அக்கா. ரெண்டு பேரையும் நம்ம கிராமத்துக்கு போகச் சொல்லுங்க. அங்கே வேந்தினியோட தங்கச்சி சுந்தரி உடம்பு சரியில்லாம கிடக்கிறா. அவளைப் பார்க்க வாங்கன்னு சொல்லு. பிரதாப்பும் அவள் சொந்தம் தானே?. சுமதிக்கு துணையா வரட்டும். கிராமமே அடுத்த கிராமத்திலே நடக்கிற ஜல்லிக் கட்டுக்கு போயிருக்கும். அவங்களை தனியா விட்டிடுவோம். அங்கே வச்சு பிரதாப் தப்பு பண்ணிட்டான்னு சொல்லுவோம். சுந்தரி சாட்சி. பொறவு வேந்தினி சம்மதிச்சு தானே ஆகணும்..”


“நல்ல யோசனையான்னு தெரியலை. ஏன்னா சுந்தரி வேந்தினியோட தங்கச்சி. அவங்களுக்குள்ளே பகை இருக்கு. ஆனா இந்த காரியத்துக்கு பொய் சாட்சி சொல்ல சம்மதிப்பாளான்னு எனக்கு டவுட்டா இருக்கு. என்ன இருந்தாலும் அக்கா பாசம் விடாதே.! ஆனா முயற்சி பண்ணலாம்.” என்றாள் வசந்தா. சுமதியிடம் அவள் சொன்னாள்.


“சுமதி...வேந்தினியோட தங்கச்சி சுந்தரிக்கு உடம்பு சரியில்லை. நாங்க போறோம்.” என்றாள். அங்கு போய் இருந்துகொண்டு


“சுமதி நீயும் புறப்பட்டு வா. துணைக்கு பிரதாப்பை கூட்டி வா.” பிரதாபுக்கு போன் பண்ணினாள். “பிரதாப்..உன் சித்தி சுந்தரிக்கு ரொம்ப உடம்பு முடியலை. உன்னை பார்க்கணும்னு சொல்றா. அம்மாக்கு தெரியாம நீ சுமதியை கூட்டிட்டு வா...சரியா?”


அவள் எதிர்பார்த்தது போல் இருவரும் வந்து சேர்ந்தனர். கூடவே சுமதிக்கு அவள் வாழ்க்கைக்கு சாவு மணியும் வந்தது.
 
Status
Not open for further replies.
Top