கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

இன்று முதல் நந்தவனம்...அத்தியாயம் 13

Status
Not open for further replies.

sankariappan

Moderator
Staff member
அத்தியாயம் - 13





அக்கா தங்கை பாசம் என்பது சில வீடுகளில் கல்யாணம் ஆகும் மட்டும் தான். அந்த ரகம் தான் வேந்தினியும் சுந்தரியும். அக்கா வேந்தினியிடம் சுந்தரிக்கு எப்போதும் ஒரு பொறாமை உண்டு. அவள் கணவன் பெரிய இடம். பணம் கொழிக்கும் வீடு. ஆண் குழந்தை ஒன்றும் பெண் குழந்தை ஒன்றும் என்று சீரும் சிறப்புமாக வாழ்கிறாள். சுந்தரிக்கு அப்படியில்லை. கணவன் குடிகாரன். நல்ல வேலையில்லை. அவளும் வேலை பார்க்கவில்லை. சொத்தையும் நல்ல வேலையையும் தொலைத்துவிட்டு சுந்தரியை போட்டு அடிப்பதும் உதைப்பதும் தான் அவன் வாடிக்கை. அக்காவிடம் தஞ்சம் புகுந்தாள். வேந்தினியின் கணவர் உயிரோடு இருக்கும்போது அவள் கணவருக்கு நல்ல வேறு வேலை வாங்கிக் கொடுத்தார். அங்கே பணம் கையாடிவிட்டு ஓடிவிட்டார். மீண்டும் வந்து திருந்தி வாழ்வதாக சொன்னார். தங்கையின் கண்ணீர் துடைப்பதற்காக வேந்தினி சிபாரிசு செய்ய மறுபடியும் ஒரு வேலை வாங்கிக் கொடுத்தார். அதையும் அவன் தக்க வைத்துக் கொள்ளவில்லை. இப்படி போராடிக் கொண்டிருந்தாள் சுந்தரி. மீண்டும் வேலை வாங்கித் தர அவள் கேட்ட போது வேந்தினி கடுமையாக பேசிவிட்டாள். “இனிமே என்னிடம் வந்து உன் புருஷனுக்கு வேலை வாங்கித் தரச் சொல்லி கேட்காதே சுந்தரி. போதும். எல்லா இடத்திலும் குடித்தும் பணம் கையாடியும் எங்களுக்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்திட்டார். வேலை கேட்டு என் வீட்டு வாசலில் வந்து நிக்காதே. எனக்கு வெறுத்துப் போச்சு..உன் பாடு அவர் பாடு..”


அக்கா கை கழுவி விட்டாள் என்று தெரிந்தது. சுந்தரி அதிர்ச்சி அடைந்தாள். அன்று ஏற்பட்ட பகை இன்று வரை தொடர்கிறது. பதினைந்து வருஷம் ஆகிவிட்டது. அவர்களிடையே பேச்சு வார்த்தை இல்லை. எனவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அக்காவுக்கு பிடிக்காத வரனை அவள் தலையில் கட்ட சுமதி பழி வாங்க சம்மதிப்பாள் என்று கணக்கு போட்டனர் வசந்தாவும் வேலுவும்.


“எங்க அக்கா பெரிய பணக்காரி. புருஷன் செத்தும் அவள் திமிர் அடங்கலை. என்னை எப்படியிருக்கேன்னு ஒரு வார்த்தை கூட கேக்கலை. எனக்கு குழந்தைகள் இல்லை. அதனால் அவள் என்னை எவ்வளவு அவமானப் படுத்தியிருக்கா தெரியுமா வசந்தா? நம்ம சுமதிக்கு என்ன குறைச்சல்? லட்டு மாதிரி இருக்கா? அவளை மகன் பிரதாப்புக்கு கட்டி வைக்க மனசு வருதா அவளுக்கு? மகன் காதலிக்கும் போது அவன் வாழ்க்கை நல்லாயிருக்கணும்னு அவளுக்கு தோணுதா? அவள் கண்டிப்பா சம்மதிக்க மாட்டா. நீ சொல்ற பிளான் தான் வொர்க் அவுட் ஆகும். கவலைப் படாதே நான் உனக்கு இந்த உதவி கூட செய்ய மாட்டேனா?” என்று சம்மதித்துவிட்டாள் சுந்தரி. பழி தீர்க்கும் எண்ணம் அவளுக்குள் தீயாக ஓடியது. அவள் மானம் போகட்டும் என்று கருவிக் கொண்டாள். ஆகா...என்ன ஒரு அறிய சந்தர்ப்பம்!





அப்பாவியாக சுமதியும் பிரதாப்பும் வர...வசந்தாவும் வேலுவும் ஏதோ அவசர வேலை என்று ஊருக்குப் போய்விட...சுந்தரி உடம்பு சரியில்லை நாடகத்தை ஆடி, அவர்கள் ரெண்டு நாளில் திரும்பி வரும் வரை துணைக்கு இருவரும் இருக்க வேண்டிக் கொண்டாள்.


“கிராமத்து காத்தும்..வயல் வெளியும்...தென்னந் தோப்பும் சுற்றிப் பார்த்துவிட்டு வாங்க..” என்று வற்புறுத்தி அனுப்பி வைத்தாள் சுந்தரி.


இரவு அவர்களை ஒரே அறையில் படுக்க வைத்தாள். அதாவது ஹாலில் ஆளுக்கு ஒரு மூலையில் படுங்கள் மற்ற இடங்களில் காத்து வரவில்லை என்று சொல்லி சம்மதிக்க வைத்தாள். மறுநாள் பால் ஊத்தும் பெண் மரகதம் வந்ததும். வேண்டுமென்றே அவளை ஹாலுக்கு வரவழைத்து பாலை பெற்றுக் கொண்டாள்.


“என்னம்மா இது அநியாயமா இருக்கு. உங்க அக்கா மகன் இப்படி சுமதி அம்மா படுத்திருக்கும் இடத்திலே படுத்திருக்காரு? நீங்க ஒன்னும் சொல்லலையா?”


“சொன்னேன்...அவன் சொன்னான். பட்டணத்தில் இதெல்லாம் சகஜம் சித்தி. கண்டுகாதீங்கன்னு..”


“அப்படியா சங்கதி?”





சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்று சொன்னால்....வசந்தாவும் வேலுவும் நினைத்தது நடந்தது. கிராமத்தில் சுமதியின் பேர் கெட்டது. ஊரில் வேந்தினியின் உற்றார் உறவினருக்கு செய்தியை பரப்பிவிட்டனர் வசந்தாவும் வேலுவும்.


“மதனி...ஊர் சிரிச்சுப் போச்சு. நீங்க கல்யாணத்துக்கு சம்மதிக்கணும். வேறு வழி இல்லை.” என்று வேந்தினிக்கு போன் செய்தாள் வசந்தா. நேரில் பேச பயம். சுந்தரி எல்லோரிடமும் விஷயத்தை சொல்லிவிட காட்டு தீ போல் உறவினர்கள் இடையே செய்தி பரவியது.. ஆவேசமானாள் வேந்தினி. பிடிவாதமாக மறுத்தாள். இதற்கு இடையில் பாட்டி கமலம் இறந்துவிட...அவள் பேத்திக்கு தான் வீடு என்று எழுதி வைத்துவிட்டு உயிரை விட்டாள். உயிலைப் பார்த்து திடுக்கிட்டனர் வசந்தாவும் வேலுவும். சுமதியிடம் நைசாகப் பேசி வீட்டை தன் பெயருக்கு மாற்றிக் கொண்டாள் வசந்தா. அதன் பிறகு அவளுக்கு சுமதி மேல் உள்ள பாசம் போய்விட்டது.





வேந்தினி கல்யாணத்துக்கு மறுக்கவே...அடுத்த அஸ்தரத்தை விட்டாள் வசந்தா. “சுமதி மாசமாக இருக்கிறாள். அவள் வயிற்றில் வளரும் பிள்ளைக்கு பிரதாப் தான் காரணம். மரியாதையாக அவனை தாலி கட்டச் சொல்லுங்கள்...” சண்டை....ஏச்சு பேச்சு...அக்கம் பக்கம் மக்களின் கடுமையான விமர்சனங்கள்---என்று அந்த பகுதியே நாறிப் போனது. சுமதிக்கு ஒன்றும் புரியவில்லை. “அம்மா..நான் எங்கே மாசமாயிருக்கேன்? பிரதாப்பும் நானும் தொட்டுக் கொள்ளக் கூட இல்லை..எதுக்கு இப்படி அபாண்டமா பேசறாங்க?”


“எல்லாம் அந்த வேந்தினியின் வேலை சுமதி. உன் பெயரை கெடுக்கணும். நீ யாருக்கோ பிள்ளை உண்டாகியிருக்கேன்னு பொய் சொல்றா. அப்ப தான் பிரதாப் உன் பக்கம் வரமாட்டான். திட்டமிட்ட சதி...ரொம்ப அவமானமா இருக்கு. ஏண்டி சுமதி எதுக்கு நீ ஹாலில் அவனோடு படுத்தே? உனக்கு மானம் என்பதே இல்லையா?”


சுமதி திடுக்கிட்டாள். எந்த திருட்டுத்தனமும் தெரியாமல் அப்பாவியாக இருந்த அவளுக்கு அம்மாவின் குற்றசாட்டு மனதை உடைத்தது. வசந்தா செய்த சதியை உணராத அவள் தன் மேல தான் தவறோ என்று அவமானதுக்கு ஆளானாள்.


“ஸாரிம்மா...எனக்கு தெரியாது..இப்படியெல்லாம் பேசுவாங்கன்னு. சுந்தரி அத்தை சொன்னாங்க...ஹாலில் நல்ல காத்து வரும். சும்மா அங்கே படுங்க...நான் தான் இருக்கேனே வீட்டிலே...ஒருத்தரும் ஒன்னும் சொல்ல மாட்டங்கன்னு..”


“உடனே நீ பல்லை காட்டிகிட்டு போய் படுத்தியா? சுமதி அது கிராமம். அங்கே போய் நீ பட்டணத்து நாகரிகத்தை காட்டினா ஜனங்க சும்மா இருப்பாங்களா? பாரு நீ மாசமா இருக்கேன்னு பட்டம் கட்டிட்டாங்க...யாரு கண்டா நீங்க இரண்டு பெரும் ஒழுக்கமா தான் இருந்தீங்களா? எனக்கே சந்தேகமா இருக்கு. பஞ்சும் நெருப்பும்..”


“அம்மா போதும். என்னை என்னன்னு நினச்சீங்க? இப்படி என் மேல் சந்தேகப்பட உங்களுக்கு எப்படி மனசு வருது?. இந்தக் கேவலமான காரியத்தை நீங்க செய்யச் சொன்னபோது என்ன சொன்னேன்?. அந்த மாதிரி சீப்பா நடந்துக்க மாட்டோம்னு சொன்னேனே. என்னை போய் சந்தேகப்படறீங்களே?” முதல் முதாலாக அவளுக்கு வசந்தா மேல் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.


“சீ..நீங்கள்ளாம் மனுஷங்க தானா? ஊர் அசிங்கமா பேசினா, நீங்க பார்த்துக்கிட்டு சும்மா இருக்கீங்க. என் அம்மாவா இருந்தா இப்படி என்னை விட்டுக் கொடுப்பாங்களா.?” என்றும் கேட்டாள்.


“உன் அம்மா தானே...ரொம்ப உத்தமி அவள். அவள் புத்தி தானே உனக்கும் வரும்...உனக்கு சாமர்த்தியம் இருந்தா அவனை பார்த்து பேசி கல்யாணத்தை முடி. இவ்வளவு கெட்ட பெயர் வாங்கிய பிறகு உன்னை யார் கல்யாணம் பண்ணிப்பாங்க?”





சுமதிக்கு உலகமே வசந்தாவும் வேலுவும் தான். அவர்களே இப்படி கேவலமாக பேசிய பின் அவள் யாரிடம் போய் தன் துக்கம் சொல்வாள்? “பேசாமே பிரதாப் காலில் விழுந்து உன்னை கட்டிக்கச் சொல்.” என்று வேலு அவளுக்கு அட்வைஸ் பண்ணினாள்.





சுமதி தெருவில் நடந்தாள். அவளைப் பார்த்து ஜாடை மாடையாக அவள் காதுபட ஏளனம் செய்தார்கள். அவள் கடைக்குப் போய்விட்டு வந்த போது எதிரே பிரதாப் வந்தான். அவனைக் கண்டதும் அழுதுவிட்டாள். அவனிடம் சொன்னாள்.


“பிரதாப்... இப்பெல்லாம் உன்னை பார்க்கவே முடியலை. என்னை மட்டமா பேசறாங்க பிரதாப். உன் அம்மாவிடம் எடுத்து சொல்லு. நாம் இருவரும் எந்த தவறும் பண்ணவில்லை என்று. இவ்வளவு நடந்த பிறகு நீ என்னை கல்யாணம் பண்ணிக் கொள்வது தான் நியாயம்...ப்ளீஸ் பிரதாப்.”


அவன் வேகமாக நடக்க ஆரம்பித்தான். அவளை திரும்பிக் கூட பார்க்கவில்லை. அவன் முகம் கொடுத்து பேசாதது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. எந்த தவறும் செய்யாமல் தன்னை இந்த சமுகம் தான் தண்டிக்கிறது என்றால் இவன் வேறு பேசாமல் தண்டிக்கிறானே! அவள் அவன் பின்னோடு ஓடினாள்.


“என் பின்னால் வராதே. யாராவது பார்த்தால் எனக்கு அவமானம்.” கடுமையாகச் சொல்லி வேகமாக நடந்தான்.


“நில்லு பிரதாப்...பிரதாப்...நீ என்னை நிஜமாக நேசிக்றேன்னா...எனக்கு பதில் சொல்லிட்டுப் போ. எனக்கு ஒரு வழி சொல்லு. நீ என்னை கல்யாணம் பண்ணிக் கொண்டால் எல்லோர் வாயும் அடைந்து போகும்....பேசிய வாய்கள் கூசிப் போகும்.”


“சுமதி..உன்னை நான் நிஜமாத்தான் நேசிச்சேன். ஆனா நீ இப்படி எனக்கு துரோகம் செய்வேன்னு நான் நினைக்கலை.”


“துரோகமா? நான் என்ன துரோகம் செஞ்சேன்?”


“உன்னை ஏதுக்க நான் தயார். ஆனால் உன் வயிற்றில் வளரும் பிள்ளையை நான் எப்படி ஏத்துக்க முடியும்? எவ்வளவு பெரிய துரோகம்? கடைசியில் என் அம்மா சொன்னது சரிதான். நூலைப் போல சேலை தாயைப் போல் பிள்ளை. எவனோட பிள்ளையை சுமந்துக்கிட்டு என் கிட்டே தாலி கட்டச் சொல்றே? உனக்கே அசிங்கமா இல்லை? இனிமே உனக்கும் எனக்கும் ஏதுமில்லை.”


ஆணி அடித்தது போல் அங்கேயே நின்றுவிட்டாள் சுமதி.





வீட்டுக்கு வந்த சுமதி யாரிடமும் பேசாமல் இருட்டில் உட்கார்ந்து அழுதாள். அழுகை என்றால்..கண்ணீர் இல்லாத அழுகை. அவளை வசந்தாவோ வேலுவோ வந்து சமாதானப்படுத்தவில்லை. அவள் அறை மாடியில் இருந்தது. இருண்ட வானத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். நட்சத்திரங்களோ நிலவோ இல்லாத அம்மாவாசை வானம் அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்லும்? கூடச் சேர்ந்து அழுதது. சரி...கொஞ்ச நாளில் அம்மா சமாதானம் ஆகிவிடுவாள் என்று மனதை தேற்றிக் கொண்டு படுத்தாள் சுமதி.





மறுநாள் பலபலவென்று விடியும் வரை தூங்கி விட்டாள் சுமதி. அவள் எழுந்து கொண்டதும் பழக்க தோஷம் காரணமாக


“வேலு...பல் தேச்சிட்டேன் காப்பி கொண்டு வாங்களேன்..” என்று குரல் கொடுத்தாள். பதினைந்து நிமிடம் ஆயிற்று, வேலு வரவில்லை. என்னாச்சு? கீழே இறங்கி வந்தாள். வீட்டில் ஒரு சாமான் இல்லை. அம்மா...வேலு சித்தி அவள் கத்திக் கொண்டே அடுப்படிக்கு சென்றாள். அங்கும் எந்த சாம்மானும் இல்லை. வீட்டை காலி பண்ணிவிட்டு போனது மாதிரி துப்பரவாக இருந்தது. சொரேரென்று மனசுள் ஒரு பள்ளம் விழுந்தது. இதயம் வாய் வழியே வந்துவிடும் போல் இருந்தது. சொல்லாமல் கொள்ளாமல் இருவரும் எங்கு போனார்கள்? சினிமாவில் வருவது போல் யாரேனும் கடத்திக் கொண்டு போய்விட்டார்களா? வேந்தினி அத்தை பழி வாங்குவதற்காக இப்படி பட்ட வேலைய செய்திருப்பார்களோ?


அவள் அலை பாய்ந்து கொண்டிருக்கும் போது அவள் முகம் பார்க்கும் கண்ணாடி ஸ்டாண்ட் அருகில் ஒரு தாள் படபடத்தது. அவசரமாக் எடுத்தாள். கடத்தல்காரர்கள் பணம் கேட்டு மிரட்டுகிறார்களோ? எடுத்து படித்தாள். அவள் தலை சுற்றியது.


“சுமதி கண்ணே....உன்னை சீரும் சிறப்புமாக வளர்த்தோம். செல்லம் கொடுத்தோம். வேணும்கறதை எல்லாம் வாங்கிக் கொடுத்தோம். உன்னை விட்டு போறதுக்கு கஷ்டமா இருக்கு. உள்ளம் துடிக்குது. வேறு வழி இல்லை. சுமதி...காலமெல்லாம் நாங்கள் கஷ்டப்பட்டிட்டோம்....ஊர் உலகம் எங்களை அவமானப்படுதிக்கிட்டே இருந்தது. என கணவருடன் அந்தக் காலத்தில் நான் ஓடி வந்தது,. பெற்றோரை, கூடப் பிறந்தவர்களை பிரிந்தது, என் கணவர் இன்னொரு பெண்ணை சேரத்துக்கிட்டது...எல்லாம் ஊர் பழிக்கு மேலும் மேலும் தீனி ஆயிற்று. உன் அம்மா ஓடிப் போனதும் என்னை மாதிரி நீ கஷ்டப்படவேண்டாம்னு தான் உன்னை எடுத்து வளர்த்தோம். இப்ப நீயும் பழி சுமந்து நிக்கறே. வளரத்த கடா மார்பில் பாய்ந்து விட்டது. இதுக்கு மேல் தாங்க முடியலை. நாங்க மும்பை போறோம். உன்னை வளர்த்ததுக்கு ப்ரதியா இந்த வீட்டை விற்று பணம் எடுத்துக்கிட்டோம்.. நீ படிச்சிருக்கே...வேலை பார்க்கிறே...உனக்கு தைரியத்தையும் உன் காலில் நீ நிற்க தகுதியும் கொடுத்திருக்கோம். நீ உன் பாட்டை பார்துப்பேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. வாழ்க வளமுடன்... அன்புடன் அம்மா..சித்தி.





கடிதத்தை படித்துவிட்டு ஒ வென்று அழவேண்டும் போல் இருந்தது. ஆனால் தொண்டைகுழியை யாரோ தைத்துவிட்டது போல் மூடிக் கொண்டது. நெருப்பில் பூவை போட்டது போல் அவள் துடித்தாள். நம்பியதற்கும் பாசம் வைத்ததுக்கும் இது தானா பரிசு? பத்து மணி அடித்ததும் சுயநினைவுக்கு வந்தாள். குளித்து முடித்து...நல்லவேளை அவள் உடைகள் காணாமல் போகவில்லை.... கைக்கு வந்த சுடிதாரை உடுத்திக் கொண்டு, செருப்பில் கால் நுழைத்து வாசலை திறக்கப் போனாள். கதவு வெளிப் பக்கம் பூட்டியிருந்தது. இது என்ன கொடுமை? அவளை பூட்டி விட்டா போனார்கள்? அவள் கதவை படபடவென்று தட்ட நினைத்தபோது அது திறந்து கொண்டது. அங்கே அவள் அம்மா லக்ஷ்மி நின்று கொண்டிருந்தாள்.
 
Status
Not open for further replies.
Top