கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

இன்று முதல் நந்தவனம்...அத்தியாயம் 3

Status
Not open for further replies.

siteadmin

Administrator
Staff member
அத்தியாயம் 3

அந்த மாலை நேர குளுமையில் சுமதி தலைமை ஆசிரியருடன் பேசிக் கொண்டிருக்கும் போது மூக்கை நுழைத்த இளைஞனை பார்த்து சங்கோஜப் பட்டாள். இவன் யார் கட்டளை இடுவது போல் சொல்கிறான்? குறுக்கே வந்து அதிகாரம் பண்ணுகிறான்?.

“திஸ் இஸ் மிஸ்டர் தேவராஜன். செந்தமிழ் கல்லூரியின் தலைமை ஆசிரியர். நான் உன்னை பற்றி சொல்லியிருந்தேன்...அதான் அவரே நேரில் வந்திருக்கார்....பை த வே..தேவராஜ் நான் பேசியதை...”

“கேட்டுக் கொண்டு தான் வந்தேன். நல்ல சாயிஸ் மேடம். மிஸ் சுமதி நீங்க உடனே வந்து ஜாயின் பண்ணிக்கணும். உங்கள மாதிரி ஒருத்தருக்காகத் தான் நாங்க காத்திட்டிருக்கோம்.”

எடுத்தவுடனேயே சுமதிக்கு அவனைப் பிடிக்கவேயில்லை. எதானல் என்று அவளால் சொல்ல முடியவில்லை. அதிகாரம் செய்பவனாய்....அடுத்தவர் உணர்வுக்கு மதிப்பு கொடுக்காதவனாய் அவனைப் பற்றி ஒரு அவசர அபிப்பிராயம் அவளுக்கு வந்தது. அவளுக்கு விருப்பமா என்று அவன் கேட்க நினைக்கவேயில்லை.

“என்ன சுமதி? இவரைப் பார்த்து பயந்திட்டியா? வெரி நைஸ் மேன்.

உனக்கு விருப்பம் இருக்கான்னு தான் நான் முதலில் கேட்க...”

“மேடம்...குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பது எனக்கு ரொம்ப பிடித்த விஷயம். அதான் யோசிக்கிறேன்...” என்றாள் பட்டென்று.

“குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேற ஆள் கிடைப்பாங்க மிஸ் சுமதி. நீங்க அவசியம் எங்க கல்லூரியின் லெக்சரர் போஸ்டை ஏத்துக்கணும். ப்ளீஸ்....உங்களைப் பத்தி மேடம் நிறைய சொல்லி இருக்காங்க. அதான் வற்புறுத்தி சொல்றேன்...”

“நான் யோசித்து சொல்றேன் மேடம். எனக்கு அவகாசம் கொடுங்க.”

“சரி நாளைக்கு ஈவினிங் சொல்லிடுங்க...”

“தேவராஜ்....அவளுக்கு இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்க. ஒரு வாரம் எடுத்துக்க சுமதி...நீ போகலாம்.”

அப்பாடா என்று எழுந்து கொண்டாள் சுமதி. அவனின் பார்வை அவளை துரத்தியது. எதுக்கு இப்படி கழுகு மாதிரி பார்க்கிறான் என்றே தெரியலையே. இந்த போஸ்ட் வேண்டவே வேண்டாம்னு சொல்லிட வேண்டியது தான். இங்கே தான் பாதுகாப்பா இருக்கு. போதும் பிரதாப் கிட்டே ஏமாந்தது போதும். அவமானப் பட்டது போதும். இன்னுமோர் பிரதாப் என் வாழ்க்கையில் வேண்டாம். இவனை எப்படி ராஜேஸ்வரி அம்மாள் சகித்துக் கொள்கிறார்கள்? எண்ணிய படியே அவள் வெளியேறினாள்.

அவள் ஸ்கூட்டியை கிளப்பும் போது அவன் ஓடி வந்தான்.

“நீங்க கண்டிப்பா எங்க கல்லூரியில் சேரணும்...” மூச்சிரைக்க சொல்லிவிட்டு அவன் தன் காரை ஸ்டார்ட் பண்ணிக் கொண்டு போனான். போகும் போது அவன் பார்த்த பார்வை அவளுக்கு பயத்தை கொடுத்தது. அது மரியாதையான பார்வை மாதிரி தெரியவில்லை. ஊடுருவும் பார்வை போல் பட்டது. ப்பா...அந்த வேலை வேண்டவே வேண்டாம். சுமதி வீட்டுக்கு வந்த பத்தாவது நிமிடம் சைந்தவி வந்து சேர்ந்தாள். அவள் முகத்திலும் ஒரு பரபரப்பு இருந்தது. இருவருக்கும் பறிமாறிக் கொள்ள விஷயம் இருக்கிறது.



சைந்தவி ஆபிஸ் விட்டு கிளம்பும் போது பாஸ் ராஜரத்தினம் கூப்பிட்டதாக ப்யூன் ஆறுமுகம் வந்து சொன்னான். சைந்தவி பாஸ்சின் காபினுக்குள் கதவு தட்டி கம் இன் கேட்ட பிறகு நுழைந்தாள். பாஸ் முகம் மலர்ச்சியாக இருந்தது. ஆச்சர்யமாக இருந்தது. ஒரே மகன் அருண் அடிபட்டுக்கொன்ட இந்த ஒரு வருஷமாக அவர் முகத்தில் சிரிப்பை பார்க்க முடிந்ததில்லை.

“உக்கார் சைந்தவி. ஒரு குட் நியூஸ்.” என்றார்.

“என்ன சார்? பையனை கல்யாணம் பண்ண யாராவது சம்மதிச்சிட்டாங்களா? உங்க முகத்திலே சிரிப்பு பொங்குது.”

“ஒருத்தரோட துக்கம் இன்னொருத்தரோட சந்தோஷமா மாறுது. அதான் விதி போலும். நான் எதிர்பார்க்கவே இல்லை..”

“தத்துவம் பேசறீங்க...சந்தோஷம்னு சொல்றீங்க....ஒண்ணுமே புரியலையே பாஸ். உங்களுக்கு இன்னொரு மகன் பிறந்திருக்கா?”

சைந்தவி விளையாட்டாக கேட்டாள். அவர் ஏறிட்டு சொன்னார்.

“எப்படி சைந்தவி கரெக்டா சொல்லிட்டே?”

“சார்..என்ன சொல்றீங்க..நிஜமாவா?”

“ஆமா சைந்தவி...எனக்கு மகன் கிடைச்ச சந்தோஷத்தில் இருக்கேன்.’

“புதிர் போடாதீங்க சார்...விஷயத்தை சொல்லுங்க...”

அவர் சொல்ல வாயெடுத்த போது “நான் சொல்றேன்...” என்றபடி உள்ளே நுழைந்தான் ஒரு இளைஞன். பார்க்க அட்டகாசமாக இருந்தான். ஸ்டைலு ஸ்டைலு தான் என்று இளம் பெண்கள் பார்த்தால் பாடிவிடுவார்கள். அவ்வளவு மார்டர்ன்..

“என் பெயர் ரவிச்சந்திரன். எங்க அம்மா என்னை உங்க பாஸ் ராஜரத்தினத்துக்கு தத்து கொடுக்க சம்மதிச்சிட்டங்க . ஸோ அவரோட மூத்த மகன் நான். ஏன்னா அவரோட மகனோட நான் வயதில் பெரியவன். இனிமே உங்களுக்கு நான் தான் பாஸ். அப்பா தம்பியை கூட்டிக்கிட்டு அமெரிக்கா போறார். தம்பிக்கு ட்ரீட்மெண்ட் பண்ண..” பொரிந்து தள்ளினான்.

இந்த செய்தியை ஜீரணிக்க அவளால் முடியவில்லை. ராஜரத்தினம் மிகவும் நல்ல மாதிரி. அவரிடம் வேலை பார்த்தது ஒரு தந்தையிடம் வேலை பார்த்த மாதிரி சுலபமாக இருந்தது. இந்த ஸ்டைல் மன்னனிடம் வேலை பார்த்தால் எப்படி இருக்குமோ? அவன் பார்வையும் பேச்சும், அதிகாரம் செய்யும் வர்க்கம் நான், என்றல்லவா சொல்கிறது. கடவுளே அவ்வளவு தானா என் அலுவலக வாழ்க்கை. வேறு வேலை தேட வேண்டியது தானா? பாதுகாப்பாக இருந்த சூழ்நிலை போய்விடும் போலிருக்கே. அவளுக்கு அழுகை வந்தது.

“சைந்தவி...என்ன அப்படி பார்க்கறே? இவனைப் பார்த்து நீ பயப்பட வேண்டாம். பெர்பெக்ட் ஜென்டில்மேன். அவன் வாழ்க்கையில் ஒரு சோகம். அதை மறக்கத் தான் இங்கு வந்தான். என் அதிர்ஷ்டம். ரவி இது சைந்தவி. எக்ஸலென்ட் எம்ப்ளாயி. நம் கம்பெனிக்கு பெரிய அஸட். நீ பாராட்டுவே பார்.”

“சார்....நீங்க எப்ப அமெரிக்கா போகணும்?”

“ஒரு மாசம் ஆகும்மா. விசா...அது இதுன்னு இருக்கு....”

அப்பாடா என்று அவர்களுக்குத் தெரியாமல் பெருமூச்சு விட்டாள் சைந்தவி. அதற்குள் வேறு அலுவலகத்தில் வேலை வாங்கிப் போய்விடலாம். ஏனோ இவனைப் பிடிக்கவே இல்லை. பழைய நினைவுகள் வந்து அவளை தொந்தரவு செய்தது. அந்த அசோக்கின் நினைவு வந்தது. நிம்மதியை கெடுத்து அவளை தற்கொலை வரை கொண்டு போன கிராதகன். அவள் விடை பெற்று ஸ்கூட்டியை ஸ்டார்ட் பண்ண நினைத்தபோது அவன் வந்தான்.

“என்ன மிஸ் சைந்தவி? நான் வந்தது உங்களுக்கு பிடிக்கலையா?”

“பிடிக்கலை.” முகத்துக்கு நேரே சொன்னாள்.

“ஏன்? நான் என்ன பூதமா....பேயா பிசாசா?”

“எனக்கு எதுக்கு அந்த ஆராய்ச்சியெல்லாம்?. நான் அடுத்த மாதம் இங்கு இருக்க மாட்டேன். இந்த கம்பனியை விட்டா வேறு கம்பெனியா இல்லை?” அவள் கிளம்பி சர்ரென்று தெருவில் இறங்கிப் போனாள். இவளுக்கு என் மேல் என்ன கோபம்? வேடிக்கையா இருக்கே என்று அவன் நினைத்துக் கொண்டான். பெண்களே புதிர் தான். “ஸீ யூ. நீங்க இங்கு தான் இருப்பீங்க..” என்று கையசைத்தான்.



சைந்தவி உள்ளே நுழைந்ததும் சுமதி ஓடிச் சென்று அவளைக் கட்டிக் கொண்டாள். வெடித்துக் கொண்டு வந்தது வார்த்தைகள்.

“இரு மொதல்லே காபி கொண்டு வரேன். உன் கிட்டே நிறைய பேசணும் சைந்தவி...” உள்ளே ஓடி காப்பி தயாரித்து கொண்டு வந்தாள். இருவரும் சூடான காப்பியை குடித்ததும் சற்று ஆசுவாசமானார்கள். சைந்தவி சொன்னாள்.

“எனக்கும் உன்னிடம் ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி சொல்லணும். ஒரு புது குழப்பம் சுமதி. என் பாஸ் அமெரிக்கா போறார். மகனின் ட்ரீட்மெண்ட்டுக்காக அங்கே போறார்.”
“அப்படியா? அப்ப யார் இன்சார்ஜ்?”

“ரவிச்சந்திரன் என்று தன் மகனை தனக்கு பதிலாக அலுவலகத்தை பார்த்துக்கச் சொல்லி விட்டுட்டுப் போறார். அவன் தான் இனிமே எனக்கு பாஸாம். சுமதி அவன் பார்வையே சரியில்லை...”

“அவருக்கு ஒரு மகன் தானே?”

“தத்தெடுத்துக்கப் போறாராம். நாட்டிலே என்னென்ன அதிசயங்கள் எல்லாம் நடக்குது பார். எனக்கு ஒரே எரிச்சலா இருக்கு. இது நாள் வரை எல்லாம் அமைதியா போயிட்டிருந்தது...பயமா இருக்கு சுமதி..”

“நமக்குள்ளே என்ன ஒத்துமை பார்? எனக்கும் கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு நியூசன்ஸ் தான். மேம் என்னை கூப்பிட்டு அனுப்பினார்.

நான் எம்.எட் முடிச்சிட்டேன் இல்லையா? அதான் அவங்க கிளையான செந்தமிழ் கல்லூரியில் லெக்சரராக பதவி ஏற்கச் சொல்றார்...பள்ளிப் பிள்ளைகளுக்கு வேறு ஆள் போட்டுக்கலாம்..நீ அங்கு தான் பொருத்தமானவள் அப்படின்னு சொல்றார்..”

“வாவ்...செம ட்விஸ்ட் இது. நல்ல சந்தர்ப்பம். லக்கி யூ. இதில் என்ன குழப்பம் சுமதி? அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டும் போது..”

“அவசரப்பட்டு மகிழ்ச்சி அடையாதேடி.. தேவராஜன் என்ற அந்தக் கல்லூரியின் தலைமை ஆசிரியர் நேரே வந்து.....சேர்ந்துக்கோங்க மிஸ் சுமதின்னு கெஞ்சல். எனக்கு அவன் பார்வையே பிடிக்கலை. எவ்வளவோ பேர் என்னைவிட தகுதி உள்ளவங்க இருக்காங்க. என்னை எதுக்கு கெஞ்சறான்.? சம்திங் ராங்கா இருக்கு.....மேம் நல்ல மாதிரி. பாதுகாப்பா உணர்ந்தேன். இப்ப அந்த கம்பர்ட் சோனை விட்டு போகப் பிடிக்கலை...இருவருக்கும் ஒரே சிக்கல்..ஒரே நேரத்தில்...”

கதவு தட்டும் ஓசை கேட்டது. கனகம் ஆன்ட்டி தான். அவங்க தான் பெல் அடிக்காமல் கதவை தட்டுவாங்க. சுமதி கதவு திறந்தாள்.

“பொண்டுகளா...நான் கோவிலுக்குப் போயிட்டு வரேன். இன்னிக்கு பிரதோஷம். வர நாழி ஆகும். என் மகன் வந்தால் சாவியை கொடுக்க முடியுமா.? என்ன நான் போகட்டா? பத்திரமா இருங்க..யார்ன்னு கேட்டுக்கிட்டு கதவு திறக்கணும். புரியுதா.? காலம் கெட்டு கெடக்கு...”

“கவலைப் படாதீங்க ஆன்ட்டி. யார் வந்தாலும் இந்த பேய்களை பார்த்து ஓடிடுவாங்க.” என்று சிரித்தாள் சைந்தவி. கனகம் சிரித்தாள்.

“அது என்னவோ உண்மை தான்..” என்று அவள் சொல்லவும் ஆன்ட்டி நீங்க ரொம்ப மோசம்...என்று கனகத்தை தோளில் தட்டினாள் சுமதி.

“சரிடி..முதல்லே சாப்பிடலாம். பசிக்குது. தோசை மாவு இருக்கில்லே. காலையில் அரைச்ச சட்டினி இருக்கு. நான் வார்க்கிறேன். நீ முதல்லே சாப்பிடு.” சுமதி அடுப்படிக்குச் சென்றாள். முறுகலான தோசைகளை இருவரும் சாப்பிட்டு முடித்து அடுப்படியை சுத்தம் செய்துவிட்டு வீட்டை பூட்டிக் கொண்டு மாடிக்கு சென்றனர். மாலை மங்கிவிட்டது. காற்று வீசலாமா வேண்டாமா என்று யோசித்து யோசித்து போனால் போகிறது என்று கொஞ்சம் புழுக்கத்தை போக்கியது. மங்கலாக நட்சத்திரங்கள் உலகை பார்க்க துடித்துக் கொண்டு முளைத்திருந்தது. அவர்கள் நின்றபடி தெருவைப் பார்த்தார்கள். அவர்கள் வீடு மெயின் ரோட்டில் இல்லை. சந்தின் மூணாவது வீடு. அங்கிருந்து பார்த்தால் ஜனங்கள் அங்கும் இங்கும் அவசர கதியில் விருட் விருட்டென்று போவது தெரிந்தது. இருவருக்கும் இந்த ஜனக் கூட்டத்தை வேடிக்கை பார்க்கப் பிடிக்கும்.

“கங்கை அம்மன் கோவிலுக்கு கனகம் ஆன்ட்டி போயிருக்காங்க. என்ன வேண்டிக்குவாங்க?” என்றாள் சுமதி.

“வேறென்ன...அவங்க பேக் மகனுக்கு கல்யாணம் ஆகணும்னு வேண்டிப்பாங்க. அந்த முசுடை யார் கல்யாணம் பண்ணிப்பா.?”

“பாவம்டி அவன்...சாது தான். அசட்டு பிசட்டென்று கத்துவான். நேத்து கிழே குழாயில் நல்ல தண்ணி வந்த சமயம் குடத்துடன் போனேனா..வெடுக்கென்று என் குடத்தை பிடுங்கினான். நான் கத்த வாய் எடுத்தேன். அது என்ன சொல்லிச்சு தெரியுமா? நீங்க போங்க நான் உங்களுக்கு இந்த ரெண்டு குடம் தண்ணி பிடிச்சு எடுத்து வரேன் அப்படின்னுச்சு...எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு....பீல் ஆயிடுச்சு.” என்று சுமதி சொன்னதும் சைந்தவி கைதட்டினாள்.

“ஏய்..அவன் உன்னை லவ் பண்றான்டி....கங்கிராட்ஸ்...”

“சீ வாயை மூடு. எனக்கு ஆண்கள் என்றாலே அலர்ஜி. எந்த பாம்பு எந்த புத்திலே இருக்கோ? எனக்கு கல்யாணமே வேண்டாம். இப்படியே உன்னோடு இருந்து விட்டாலே போதும். நீ விரட்டி விட மாட்டியே.?”

“எனக்கும் தான் அலர்ஜி. நமக்கு நேர்ந்த அனுபவம் அப்படி. நாம இப்படியே ஒண்ணா ஆயுசு பரியந்தம் இருப்போம்..” என்றாள் சைந்தவி. பிறகு இருவரும் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்கள்.

“சரி..அந்த ரவிச்சந்திரனை எப்படி சமாளிக்கப் போறே?” என்று கேட்டாள் சுமதி. சைந்தவி முகத்தில் சிரிப்பு போயிற்று.

“எங்க பாஸ் இன்னும் ஒரு மாசம் இருக்கப் போறார். அதுக்குள்ளே வேறு வேலைக்கு முயற்சி பண்ணப் போறேன்..”

இப்பொழுது சுமதி சிரித்தாள். “லூசா நீ?....அங்கே ரவிச்சந்திரன் போல் ஒரு ஜெயச்சந்திரன் இருக்க மாட்டான்னு என்ன நிச்சயம்? இருந்தால் என்ன செய்வாய்? உன் வேலையில் ஆண்கள் இருக்கத் தான் செய்வார்கள். உன் நல்ல காலம் ராஜரத்தினம் சார் நல்லவராக இருந்தார். உன்னை மகள் போல் நினைத்தார். எல்லா வயசானவங்களும் அப்படி இருக்க மாட்டாங்க...பாத்திர சூடுக்கு பயந்து அடுப்பு சூட்டில் விழுந்து விடக் கூடாது இல்லையா.?”

“அதுவும் சரிதான். ஆமாம் நீ என்ன செய்யப் போறே? பள்ளி வேலையை விட்டிட்டு கல்லூரி வேலையில் சேரப் போறியா? இல்லை...எது உன் சாய்ஸ் சுமதி?..”

“நான் பள்ளி வேலையில் தான் கன்டினியூ பண்ணப் போறேன்..”

இருவருக்கும் கசப்பான கடந்த காலம் மறந்தாப் போகும்.? அவர்கள் மனசில் ஆண்கள் எல்லோரும் இருட்டானவர்கள். இடம் கிடைத்தால் மடத்தை புடுங்குபவர்கள். மயக்கப் பார்ப்பார்கள். சொள்ளு கேஸ்கள். ஸ்திரமில்லாதவர்கள். அப்படித்தான் அவர்களுக்கு கிடைத்த அனுபவம் சொல்லிற்று. அவர்கள் இருவருக்கும் பிடித்த பாடல்

“எத்தனை பெண் படைத்தான். எல்லோருக்கும் கண் படைத்தான்.

அத்தனை கண்களிலும் ஆசை எனும் விஷம் கொடுத்தான்..

அதை ஊரெங்கும் தூவி விட்டான்..உள்ளத்திலே பூசிவிட்டான்..”

விஷப் பார்வைகள் என்பது எவ்வளவு உண்மை!



இருவரும் கசப்பான கடந்த காலத்தை நினைக்கும் போது மௌனமாகிவிடுவார்கள். இருவருக்குள்ளும் நடக்கும் போராட்டம் லேசில் போகாமல் அட்டை போல் சிறிது நேரம் ஒட்டிக் கொள்ளும். அவர்கள் சிரித்துக் கொண்டும் ஜாலியாக கலாய்த்துக் கொண்டும் இருந்தாலும் உள்ளுக்குள் புரையோடிய புண்ணாக அந்த சம்பவங்கள் இருளை பூசிக் கொண்டு பூதம் போல் கொஞ்ச நேரம் உட்கார்ந்து கொள்ளும். சூ என்று காக்கையை விரட்டுவது போல் விரட்ட முடியவில்லை. ஆறுதல் எனும் கட்டுப் போட்டுக் கொள்வார்கள்.

இன்றும் அப்படித்தான். இடரான சம்பவ பள்ளங்களில் விழுந்து தத்தளித்தார்கள். சுமதி சைந்தவியை பார்த்தாள். சைந்தவி சுமதியை பார்த்தாள். இருவர் கண்களிலும் கண்ணீர் மின்னியது.

“அழாதேடி...”

“நீ அழாதேடி...”

மனசை அயர்ன் பண்ணிக் கொண்டு சிரிப்பார்கள்.

“ஏய்...சைந்து...அங்கே பார்..நம்ம தோஸ்து..”

கனகம் மகன் ராஜேஷ் வந்து கொண்டிருந்தான். வீடு பூட்டிக் கிடக்கிறதே...”ஏய்...நான் கிழே போய் சாவி கொடுத்திட்டு வரேண்டி..”

சுமதி இறங்கப் போனாள். சைந்தவி தடுத்தாள்.

“அவன் திண்டாடட்டும். பிறகு கொண்டு போய் கொடுக்கலாம்.”

“அது சரி..கொஞ்சம் இளிச்ச வாய் ஆண் என்றால் உனக்கு கலாய்க்கத் தோணுது இல்லே. பாவம்டி..”

“எனக்கு புரிஞ்சு போச்சு..நீ அவனை லவ் பண்றே...”

இவர்கள் இப்படி சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது அவன் கிழே கதவை இடி போல் தட்டிக் கொண்டிருந்தான்.

“அம்மா...அம்மா...அம்மா..” சுமதி இறங்க தொடங்க சைந்தவி அவளை இழுக்க...இவள் உதறிக் கொண்டு போக முயற்சிக்க அவள் தடுக்க...என்று நேரம் போய்க் கொண்டிருந்தது. பிறகு சத்தமே இல்லை. “என்னாச்சு?” சுமதி பயந்தாள். “அவன் மேலே வருவான் பார். பரவாயில்லையே புத்திசாலி தான் போலிருக்கே...அவனுக்கு அறுபது மார்க் கொடுக்கிறேன். பர்ஸ்ட் கிளாசில் பாஸ் பண்ணிட்டான். வருவான் பார்..பார்..”

“சீ போடி..உனக்கு இரக்கமே இல்லை. எப்பவும் விளையாட்டு தான்.” சுமதி கிழே போனாள். சைந்தவி வானில் உதித்திருந்த நிலவை வேடிக்கைப் பார்த்தபடி நின்றாள். “மங்கியதோர் நிலவினிலே கனவினிலே கண்டேன்..வயது பதினாறு இருக்கும். இள வயது மங்கை..” என்று அவள் வாய் முணுமுணுத்தது. அசோக் குரல் நன்றாக இருக்கும். இந்தப் பாட்டை அவன் பாடி முடித்தவுடன் “நீங்க ரொம்ப நல்ல பாடறீங்க. யாரை நினைத்து பாடினீங்க? உங்க காதலியா?” என்று கேட்டாள். “ஆமாம்..அது நீதான்..” அழகாக லவ் ப்ரோபோஸ் பண்ணத் தெரிந்த அவனுக்கு அசிங்கமாக ஏமாற்றவும் தெரிந்தது தான் அவளால் ஜீரணிக்க முடியவில்லை. அவள் இந்த நினைவுகளில் இனிப்பும் கசப்புமாக மனம் கசிந்த போது...சுமதியின் குரல் ஓங்கி ஒலித்தது. “அய்யோ..யாரவது வாங்களேன்..வாங்களேன்..”

சைந்தவி இதயம் ஒரு கனம் நின்று போனது. என்னாச்சு?

 
Status
Not open for further replies.
Top