கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

இன்று முதல் நந்தவனம்...அத்தியாயம் 5

Status
Not open for further replies.

sankariappan

Moderator
Staff member
அத்தியாயம்—5

இள நீல பூப் போட்ட புடவையில் சுமதி தேவதை போல் இருந்தாள். பள்ளியில் அவள் நுழைந்தது தான் தாமதம் பிள்ளைகள் அவளைப் பார்த்து ‘குட் மார்னிங் மிஸ்’ என்று விஷ் பண்ணினார்கள். குழந்தை முகங்களைப் பார்க்கும் போது மனசு வானவில் ஆகிவிடுகிறது. கள்ளமற்ற உள்ளத்தின் பிரதிபலிப்பாக அவர்கள் முகம் அன்றலர்ந்த புதுப் பூ போல் இருந்தது. அவர்கள் ஆடி ஓடி பறைவகள் போல் மைதானம் எங்கும் திரிவதைப் பார்க்க பரவசமாக இருந்தது. அவளும் இது போல் திரிந்தவள் தான். அம்மாவுக்கும் சித்திக்கும் அவள் மகா செல்லம். அவள் சிணுங்கினாள் என்றால் இருவரும் தத்தம் வேலையை போட்டுவிட்டு ஓடி வருவார்கள். பலூன் என்பாள் ஒரு நாள். சாக்லேட் என்பாள்...கேக் என்பாள்...வேலம்மா சித்தி ஓடிப் போய் வாங்கி வருவாள். அவள் நடை பயின்றபோது தூர நின்று கைதட்டி ஆரவாரித்தது அந்த இருவர் தான். கடைசியில் அவளை நட்றாட்டில் விடு விட்டுப் போனார்கள். மாடியில் தூங்கி கொண்டிருந்த போது வீட்டை பூட்டிப் போட்டுவிட்டு ஓடியதும் அவர்கள தான். இருபது வயதில் அவள் வேண்டாதவளாக ஆகிவிட்டாள். இது தானா உலகம்! நல்லவேளை சைந்தவி கிடைத்தாள். இல்லாவிட்டால் அவள் போன இடம் புல் முளைத்திருக்கும். சந்தோஷமாக இருந்தது. வெற்றி அவளை நாடி வருகிறது. இருட்டை துப்பிவிட்டுப் பார்த்தால் அழகான வாழ்கையின் அர்த்தம் புரியும். மணி அடித்ததும் புறாக்களாய் சிந்தி இருந்த குழந்தைகள் வகுப்புக்குப் போக லைனில் நின்றார்கள். சுமதி “நீராடும் கடலுடுத்த..” என்று தமிழ் தாய் வாழ்த்து பாடி முடித்ததும், அவரவர் வகுப்புக்குச் சென்றனர்.

வகுப்புகள் முடிந்த இடைவேளையில் சுமதி தலைமை ஆசிரியையைப் போய் பார்த்தாள். முக மலர்ச்சியுடன் வரவேற்ற அந்தம்மாள் “என்ன சுமதி? என்ன முடிவு பண்ணியிருக்கே?” என்று கேட்டார். சுமதி பதில் சொல்லும் முன் அந்த தேவராஜன் வந்துவிட்டான். “என்ன முடிவு பண்ணுவாங்க? எஸ் தான். சரிதானே.?” என்றான். இல்லை என்று சொல்ல வேண்டும் போல் சுமதிக்குப் பரபரத்தது. பிறகு அவள் இவனுக்காகவெல்லாம் பயந்து கொண்டு பின் வாங்கக் கூடாது என்று மிடுக்குடன் சொன்னாள்.
“எதுக்கு எஸ் சொல்றேன்னு நீங்க தெருஞ்சுகணும் மிஸ்டர் தேவராஜன். என்னோட திறமையை நான் பயன்படுத்திக்கப் போறேன். பறவைகள் பாடாவிட்டால் காடு சத்தமில்லாமல் அமானுஷமாக இருக்கும். இனிமையாக பாடினா அது எல்லோருக்கும் கேட்கும். காட்டின் அழகு கூடும். நான் ஒரு மாற்றதுக்கு ஒப்புக் கொள்கிறேன் என்றால் அது நான் தீர்மானித்த மாற்றமாகத் தான் இருக்கும். என் முடிவு என் கையில் தான். அடுத்தவரை ப்ளீஸ் பண்ண நான் முடிவு எடுக்க மாட்டேன்.” இந்த ஆணித்தரமான பதிலால் அவன் திகைத்து நின்றான். அவள் சாதாரண பெண்ணில்லை. அவள் அழகு அவள் அறிவில் இருக்கிறது. உடல் அழகை விட அது பன்மடங்கு ஜொலிக்கிறது என்று அவன் புரிந்து கொண்டான். அவள் மேல் அவனுக்கிருந்த அலட்சியம் குறைந்தது. “வெல் செட் மேடம்.”
என்று முணுமுணுத்தான்.
“ரொம்ப சந்தோசம் சுமதி. அப்ப நீ அடுத்த வாரம் போய் ஜாயின் பண்ணிக்கோ. அதுக்குள்ளே முறைப்படி உன்னை ரீலீஸ் பண்ணிடறேன். சந்தோஷமா தேவராஜ்? நீ தான் சுமதி வரணும்னு ரொம்ப ஆர்வமா இருந்தே. ஒ.கே பெஸ்ட் ஆப் லக்.”
“தேங்யூ மேம்..வகுப்புக்கு நேரமாச்சு நான் கிளம்பறேன். ஸீ யூ மிஸ்டர் தேவராஜ்..” சொல்லிவிட்டு சுமதி வெரான்டாவை கடந்து சென்று கொண்டிருந்தாள். தேவராஜ் பின்னாலேயே வந்தான்.
“நில்லுங்க மிஸ்..ஒரு நிமிஷம்.?”
“என்னாச்சு? சொல்லுங்க...”
“ஏன் என்னை வெறுப்போடு பார்க்கிறீங்க? நீங்க என்னை ஏதோ தப்பா புருஞ்சுக்கிட்டீங்க. ஸாரி..உங்களை கஷ்டப்படுத்தியிருந்தா..”
சுமதி இத எதிர்பார்க்கவில்லை. மென்று விழுங்கினாள்.
“உங்க மேல் எனக்கு என்ன கோபம்?..அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. என் மன நிலையை சொன்னேன்.”
“என் கையிலே ஒரு பூச்செண்டு இருந்தா உங்களுக்கு இப்ப கொடுப்பேன், நீங்க சொன்ன புத்திசாலியான பதிலுக்காக..” அவன் சிரித்து சொல்லிவிட்டுப் போனான். அவன் சொன்னது அவளுக்கு ஒரு மலர்ச்சியை கொடுத்தது என்னவோ உண்மை தான். ஆனால் அவன் ஏதோ டபாய்க்கிறான் என்று தோன்றாமல் இல்லை. இப்படித்தானே ஐஸ் வைத்து வைத்து அவளை கவிழ்த்தான் பிரதாப்.
ஒரு அறிஞர் சொன்னாராம் “உன்னுடைய இதயம் நொறுங்காம நீ பார்துக்கணும்னா....உனக்கு இதயமே இல்லன்னு நீ நினைச்சுக்கனும்.”
ரொம்ப சுலபமா சொல்லிட்டாரு. வகுப்புக்குள் நுழைந்ததும் அவள் எல்லாவற்றையும் மறந்து பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தாள்.

சைந்தவி அலுவலகத்துக்குள் நுழைந்ததும் அவள் ரவிச்சந்திரனை தான் எதிர் கொண்டாள். அவன் தான் பாஸின் காபினுக்குள் இருந்தான். “கம் இன் மிஸ் சைந்தவி...” அவள் பதில் வணக்கத்தை கூட எதிர்பாராமல், கம்பனி விஷயங்களை பேச ஆரம்பித்தான். இரண்டு மூன்று பைலைக் கொடுத்து சரி பார்க்கச் சொன்னான். மூணு ஸ்டேட்மென்ட் டிக்டேட் பண்ணினான்.
“சைந்தவி...கேன் ஐ கால் யூ லைக் தட்?...”
“தாராளமா சார்..மிஸ் எல்லாம் எதுக்கு?”
“ஒ.கே பைன். எனக்கு இதெல்லாம் லஞ்ச் பிரேக்குக்குள் ரெடியாகனும். கெட் டு வொர்க்...ப்ளீஸ்...”
“சூர் சார்...” சைந்தவி உடனே தன் கம்ப்யூட்டர் காபினுக்குள் புதைந்து போனாள். மட மடவென்று காரியத்தில் இறங்கினாள். மதிய நேரத்துக்கு ஐந்து நிமிடம் இருக்கையில் அவள் முடித்துவிட்டாள். அதை எடுத்துக் கொண்டு ரவிச்சந்திரன் காபினுக்குள் சென்று ஒப்படைத்தாள். “குட்...” என்று அவன் பாராட்டினான்.
“சார்..உங்க கிட்டே நான் ஒண்ணு கேக்கலாமா?”
“எஸ் கேளு...”
“பெரிய பாஸ் ஏன் வரலை? அவர் அமெரிக்கா போக இன்னும் ஒரு மாதம் இருக்கில்லே.” என்று கேட்டாள்.
“உண்மை தான். ஆனால் அதற்கான ஏற்பாடெல்லாம் செய்ய வேண்டாமா? அதான் பிசியா இருக்கார்...என் முகத்தில் தான் இனி நீங்க முழிக்கணும். வேறு வழி இல்லை..” பெரிய ஜோக் சொன்னது போல் அவன் சிரித்தான். இதில் சிரிக்க என்னடா இருக்கு முண்டம்.....என்று நினைத்துக் கொண்டாள் சைந்தவி.
“என்ன...எதுக்கு சிரிக்கிறே? முண்டம்னு திட்றியா..திட்டு திட்டு. புது பாஸ் உனக்கு பழகணும் இல்லையா? அப்புறம் பாரு....அவர் வரவே வேண்டாம்னு நினைப்பே....என் கேரக்டர் அப்படி...”
விட்டால் தன் புகழ் பாடியே அறுத்துவிடுவான் என்று எண்ணிய சைந்தவி “நான் சாப்பிடப் போறேன் சார்..” என்றாள்.
“வெயிட் சைந்தவி. நமக்கு லஞ்ச் வந்திடும்..”
“என்ன..நமக்கா?. எனக்கு நான் கொண்டு வந்திருக்கேன் சார்..”
“இனிமே கொண்டு வராதே. என் கூட தான் நீ சாப்பிடணும். அப்பாவே சொல்லிட்டாரு. வேணா கேட்டுப் பார்த்துக்கோ. இது ரிக்வெஸ்ட் இல்லை ஆர்டர்...” அவன் ராஜரத்தினத்துக்கு போன் செய்து அவளிடம் கொடுத்தான். “பேசு..” ரிங் போயிற்று. அவர் தான் பேசினார்.
“என்னடா ரவி?”
“சார்..நான் சைந்தவி பேசறேன்.”
“ஒ..நீயாம்மா. சொல்லும்மா...”
“சார்..நான் லஞ்ச கொண்டு வந்திருக்கேன். உங்க சன்...”
“உன் கிட்டே சொல் மறந்திட்டேன்ம்மா. அவன் பாவம் அவன் தங்கச்சி, அம்மா எல்லாம் விட்டிட்டு என்னிடம் வந்திட்டான். ரொம்ப பீல் பண்றான். அதான் அவனுக்கு தனிமையா இருக்கும்னு நான் தான் இந்த ஐடியா கொடுத்தேன். ப்ளீஸ் எனக்காக ஒத்துக்கோ சைந்தவி. உனக்கும் சேர்த்து லஞ்ச அனுப்பியாச்சு...ஒ.கே..”
நாட் ஒ.கே என்று அவள் சொல்ல வாய்யெடுத்தாள். அதற்குள் லைன் கட் ஆகிவிட்டது. அவள் ரவியை கோபமாகப் பார்த்தாள்.
“உன் கோபம் கூட அழகா இருக்கு. நான் என்ன உன்னை முழுங்கிடவாப் போறேன்? ரொம்ப பிகு பண்ணாதே. வீ ஆர் ப்ரெண்ட்ஸ். ஒ. கே. நீ சைவம் தானே? நான் சைவம். எல்லாம் காய்கறி சமையல் தான். இஸ் இட் ஒ.கே?”
எதுவுமே ஒ.கே இல்லை என்று கத்தவேண்டும் போல் இருந்தது. சரி இது எதுவரை போகுது என்று பார்ப்போம். இவன் லட்சணம் தெரிந்துவிடும். அப்ப கழன்று கொள்ளலாம். என்று முடிவு பண்ணி “ரெஸ்ட் ரூம் போய் வரேன் சார்..’ என்று வெளியே வந்தாள் அவள்.
காந்தா என்ற காரியதரசியிடம் சொன்னாள் சைந்தவி.
“காந்தா அக்கா...பாஸ் என்னை அவருடன் சாப்பிடச் சொல்கிறார். எனக்கு கூச்சமா இருக்கு. பிடிக்கவும் இல்லை..” என்றாள்.
“இதில் என்ன இருக்கு சைந்தவி. ஏதாவது ஏறு மாறா நடந்தா ஒரு குரல் கொடு எல்லா ஸ்டாப்யையும் திரட்டி கூட்டி வந்திடறேன்.”
அவள் அப்படி சொன்னது சைந்தவிக்கு ஒரு பலத்தைக் கொடுத்தது.

சாப்பிட உட்கார்ந்தார்கள். பெரிய காரியர். திறந்தான் ரவி. வாசனை கம்மென்று வந்தது. “வீட்டில் பெண்கள் யாரும் இல்லை. சமையல் செய்வது பர்வதம் மாமி தான். ரொம்ப நல்ல சமைப்பாங்க. வீட்டோட இருக்காங்க.” என்று விளக்கம் கொடுத்தான் அவன்
“முட்டைக் கோஸ் கறி. பருப்புருண்டை மோர்குழம்பு. உருளைக்கிழங்கு பொடிமாஸ். ரசம் அப்பளம். ஒரு புடி புடிக்கலாம் வா சைந்தவி. பாயசம் வைத்திருக்கலாம். நான் சொல்ல மறந்துவிட்டேன். நீ முதல் முதல் சாப்பிட வந்திருக்கும்போது..”
“பரவாயில்லை சார். எதுக்கு பாயாசம்? உங்களுக்கு தனியா சாப்பிட பிடிக்காதுன்னு தான் நான் வந்தேன். எது இருந்தாலும் எனக்கு ஒ.கே.”
இலை போட்டு நீர் தெளித்து பியூன் பரிமாறிவிட்டுப் போனான்.
உண்மையில் சாப்பாடு மிக ருசியாக இருந்தது. அவள் சமைப்பாள் தான் சுமதியும் நல்ல சமைப்பாள் தான். ஆனாலும் இந்த தேர்ந்த ருசி அதில் இருக்காது. மோர்குழம்பின் ருசி அவளை சுண்டி இழுத்தது. இன்னொரு தரம் போட்டு சாப்பிடலாம் என்று நாக்கு கேட்டது. புத்தி ‘ஏய்...அலையாதே. ஒ.சி சாப்பாடு மேலே என்ன ஆசை?’ என்று கட்டுப்படுத்தியது. அவள் புத்தி சொன்னதை கேட்டாள்.
“இன்னும் கொஞ்சம் கறி போட்டுக்கோ சைந்தவி..”என்று சொல்லி அள்ளி வைத்தான். ‘போதும் போதும் என்று அவள் தடுத்தாள். சாப்பாடு முடிந்தது. நாக்கு சப்புக் கொட்டியது. அதுவும் மோர் சாதத்துக்கு வைக்கப்பட்ட இஞ்சி ஊறுகாய் எக்கச்சக்க டேஸ்ட்.
“எப்படியிருந்தது சாப்பாடு? ஜோரா இல்லே?”
“ஆமா சார்....உங்க பர்வதம் அம்மாளுக்கு வைர மோதிரம் பண்ணிப் போடுங்க. இந்த சமையலில் அன்பும் கலந்திருக்கு. அதான் ருசி.”
என்றாள் அவள். இதை கேட்டதும் ஒரு மாதிரி ஆகிவிட்டான் அவன். “என்னாச்சு? டல்லடிக்கிறீங்க?”
அவன் கண்கள் கலங்கி உதடு கடித்து தலை குனிந்தான்.
“சார்..என்ன? நீங்க இப்படி...யாருக்காவது உடம்பு சரியில்லையா?”
“அதெல்லாமில்லை. நான் அதிர்ஷ்டக்கட்டை. என் விதியை நினைத்து என் மேல் எனக்கே இரக்கம் வருது...சாரி உன்னை..”
“பரவாயில்லை. உங்களுக்கு ஏதாவது சொல்லனும்னா என் கிட்டே நீங்க சொல்லலாம். என்னால் முடிந்த அளவு ஆறுதலா இருப்பேன்.”
“அப்படியா..அப்ப ஒரு வேண்டுகோள்.”
“சொல்லுங்க சார்..”
“கண்டிப்பா செய்யணும். அப்ப தான் சொல்வேன்.’
அவனைப் பார்த்தால் பாவமாக இருந்தது. முப்பது வயதில் இத்தனாம் பெரிய அள்...குழந்தை போல் கெஞ்சும் போது..பாவமாக இருந்தது.
“கண்டிப்பா..” என்று உறுதி மொழி அவள் வாயிலிருந்து குதித்து வந்துவிட்டது. சொன்னதுமே அவள் அதற்காக வருத்தப்பட்டாள்.
“ஒண்ணுமில்லை. இந்த ஏழை மனசுக்கு கொஞ்சம் அன்பென்னும் பணம் தேவை. தினமும் என் கூட சாப்பிட்டால் போதும். நான் கெட்டவன் இல்லை சைந்தவி. என் தோழியாய் நீ இருப்பாயா.?”
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. இவ்வளவு சீக்கிரம் அவன் அவளை தோழியாக அங்கீகரித்துக் கொண்டது அவளுக்கு சங்கடமாக இருந்தது. மனதின் ஓரத்தில் ஒரு பயம் வந்தது. ராஜரத்தினம் ஏன் போனார்? இவன் ஏன் வந்தான்? தலையை பிச்சுக்கலாம் போல் இருந்தது. “மாட்டேன்னு சொல்லிடாதே சைந்தவி. எனக்கு ஒரு அம்மா தேவை. ஒரு பெண்ணின் அன்பு தான் எனக்கு ஆறுதல் தரும்.” அவன் அவள் கைகளை பிடித்துக் கொண்டான்.
“சரி..” என்றாள். அவள் சொல்லி முடித்ததும் அவளுள் அலாரம் அடித்தது. முட்டாள் அதற்குள் அந்த அசோக்கின் அயோக்கியத்தனம் உனக்கு மறந்துவிட்டதா? இவன் இன்னொரு அசோக்காக இருந்தால்?
 
Status
Not open for further replies.
Top