அத்தியாயம்---6
அய்யோடா..என்ன இது வானவில் தரையில் இறங்கிவிட்டதா? பல வண்ண சூடிதார்கள் மெருகூட்ட செந்தமிழ் கல்லூரிப் பெண்கள் பூத்து குலுங்கிக் கொண்டிருந்தனர். கல்லூரி முன் ஸ்கூட்டியும் காரும் வந்து குவிந்தது. அதிலிருந்து தேவதைகள் சின்னக் காலெடுத்து ‘நடையா இது நடையா’ என்று பாடும் படி நடந்து வந்தனர். பலர் ஸ்டுடென்ட் பஸ்ஸில் வந்து இறங்கினர். இளம் பெண்கள் என்றாலே உயிரோட்டம் தான். சுமதி பிரத்தியேகமாக உடை அணிந்திருந்தாள். புதிய புடவை. விசிறி போல் அடியில் ப்ளீட்ஸ் அவள் நடக்கும் போது அழகூட்டியது. க்ளோஸ் நெக் காலருடன் உள்ள ஜாகெட் அவளுக்கு கம்பீரம் சேர்த்தது. சைந்தவி தான் இந்த புடவையை செலக்ட் பண்ணினாள். எலுமிச்சை நிற புடவை. டார்க் நீலத்தில் தெளித்துவிட்ட குட்டிப் பூக்கள். ரோஜா நிறத்தில் பெரிய பூக்கள். இரு வகை பூக்கள்.
“ஏய்...சுமதி. இதை நீ கட்டிக்கிட்டே காலேஜ் ப்ரோபசர் லுக் வந்திடும்.
கலக்கு செல்லம். முடியை தூக்கி கட்டி புது மாதிரி கொண்டை போடறேன். கொண்டை பின்னால் உன் நீள முடியும் இடுப்பு வரை தொங்கும். உன் சுருள் முடிக்கு இந்த கெட்டப் அட்டகாசமா இருக்கும்.” என்றாள். செருப்பு முதல் கொண்டு தேர்ந்தேடுத்துக் கொடுத்தாள். புது ஆசிரியை என்ற கூச்சத்துடன் அவள் நடந்து வந்து கொண்டிருக்கும் போது மூடை கெடுப்பதற்கென்றே எதிரே ஓடி வந்தான் தேவராஜன். “நோ சான்ஸ். அட்டகாசமா இருக்கீங்க மேடம்.
நீங்களே மாணவி மாதிரி தான் இருக்கீங்க. எம்.ஏ படிக்கும் ஸ்டுடென்ட்...வாங்க ஸ்டாப் ரூம் காட்டறேன்..” சிரித்து சிரித்து அவன் பேசியபடி அவளுடன் அவன் வந்தது அவளுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அட்டை மாதிரி எதுக்கு ஒட்டிக்கிட்டு வரான்?
“நானே போய்க்கிறேன் சார்...”
“நீ புதுசு. உனக்கு வழி தெரியாது..” மாணவிகளின் வணக்கம் பெற்றுக் கொண்டே நடந்தான். எப்ப ஸ்டாப் ரூம் வரும் என்று அவள் கூச்சத்துடன் நடந்தாள். ஸ்டாப் ரூமில் மற்ற ஆசிரியைகள் இருந்தனர். அவர்களை அறிமுகப்படுத்தினான்.
“இது மிஸ் சுமதி. பி.ஏ ஸ்டுடென்ட்ஸ் லெக்சரர்.”
அனைவரும் வணக்கம் சொன்னார்கள்.
“ஒ.கே...ஐ வில் டேக் லீவ்..” காதலியை பிரிவது போல் அர்த்தமுள்ள புன்னகையை கொட்டிவிட்டுச் சென்றான். ச்சே..எப்படி அட்வான்டேஜ் எடுதுக்கறான் இவன்?. எனக்கு அவன் ஸ்பெஷல் என்று மற்றவர் நம்புகிற மாதிரி பண்றான். சப்பென்று அறைய வேண்டும் போலிருந்தது அவளுக்கு .”ஒ.கே சார். தேங்க்ஸ்.” என்று அவளும் சிரிக்க வேண்டியதாகிவிட்டது. கட்டாய சம்பிரதாயங்கள்!
“மாலதி.....நீ வந்து ஜாயின் பண்ணபோது சார் ஸ்டாப் ரூம் வரை வந்தாரா என்ன.?” என்று ஒரு மாதிரி குரலில் கூறினாள் மைதிலி.
“இல்லையே...ஒரு வேளை இந்த காலேஜ் ஐஸ்வரியா ராய் நானா இல்லை போலிருக்கு. என்னய ப்யூன் மன்னார் தான் கொண்டு வந்து விட்டான். பெரிய இடம் போலிருக்கு..” ஓரக் கண்ணால் சுமதியை பார்த்தாள். அவர்கள் சிரித்தார்கள். அடுத்து ராதா என்ற ஆசிரியை சொன்னாள். கேலியில் இறங்கினார்கள்.
“சொல்லியிருந்தா பூமாலை வாங்கி வந்திருப்பேன்..”
“சும்மா இருங்க. சுமதி மிஸ்....நீங்க தப்பா நினைக்காதீங்க. இவங்க நான் புதுசா வந்த போது இப்படித்தான் கேலி பண்ணினாங்க. ராகிங், மாணவிகள் தான் பண்ணுவாங்க. இந்த காலேஜ் வித்தியாசமானது. புது லெக்சரருக்கும் ராகிங் உண்டு. போகப் போக சரியாயிடும்..” என்று இதமாகப் பேசினாள் ஷீலா. அவள் கிருஸ்துவ மதத்தை சேர்த்தவள் என்று தோன்றியது. அவள் மேல் ஒரு நன்றி பார்வை பார்த்த சுமதி புன்னகையுடன் சொன்னாள்.
“வரவேற்பு எப்படி இருந்தால் என்ன?. எல்லாம் நட்பா எடுத்துக்கணும்னு தான் நான் மாணவிகளுக்குச் சொல்வேன். அதுவே தான் எனக்கும். கிளாட் டு மீட் யூ ஆல்..” என்று அனைவரிடமும் கை குலுக்கினாள் சுமதி. அவள் யாரிடமும் விரோதம் பாராட்ட தயாராக இல்லை. அவர்கள் எந்த அர்த்தத்தில் சொன்னாலும் சரி தான் அதை நல்ல விதமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தாள்.
மணி அடித்ததும் முதல் நாள் முதல் வகுப்புக்குள் நுழைந்தாள் சுமதி.
அவர்களை விட அவள் ஆரேழு வயது பெரியவள். மாணவிகள் அவளை எப்படி வரவேற்பார்களோ என்று ஒரு சின்ன கலக்கம் அவளுக்கு இருந்தது. குழந்தைகளோடு பழகிப் பழகி அவளுக்கு புன்சிரிப்பு முகத்தில் ஒட்டிக் கொண்டிருந்தது.
“மிஸ்..நீங்க ரொம்ப அழகாயிருக்கீங்க..” என்று ஒரு மாணவி எழுந்து சொன்னாள். அவள் தன் பேர் அக்க்ஷயா என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள். “தேங்க்ஸ் அக்க்ஷயா. நான் அழகா இருப்பது முக்கியம் இல்லை. நான் அழகா கிளாஸ் எடுக்கிறேனா என்பது தான் முக்கியம்.”
அழகுற சொல்லிவிட்டு அவள் மாணவிகளிடம் சகஜமாக உரையாடினாள். அவர்கள் பெயர்களை கேட்டுக் கொண்டாள். அவர்களின் ஹாபீஸ் கேட்டுக் கொண்டாள். அவர்களுக்கு தமிழ் பிடிக்குமா என்று விசாரித்தாள். அதற்கு ஒரு மாணவி சொன்னாள்.
“தமிழ் செய்யுள் எல்லாம் புரிந்து கொள்வதற்கு கடினமா இருக்கு மேடம். அது ஏன்? அந்த காலத்து கவிஞர்கள் ஏன் இப்படி எழுதினார்கள்.?”
“நல்ல கேள்வி ஹேமா. அந்த காலத்தில் நிலவிய தமிழ் அது. கொஞ்சம் கொஞ்சமாக வடமொழி சம்ஸ்கிருத மொழி என்று கலப்படம் வந்த பின் நாம் இப்பொழுது பேசும் தமிழ் நடை பெற்றிருக்கிறோம். அடுத்த தலைமுறைக்கு அதிக ஆங்கில கலப்பு வரின் நம் கவிதைகள் அவர்களுக்கு கடினமாகத் தோன்றும். கால சுழற்சியில் மாற்றங்கள் வரத்தான் செய்யும். சங்கத் தமிழ் கடினமாக இருந்தாலும் அதன் பொருள் புரிந்து கொண்டால் ரசிக்கும்படி இருக்கும். சங்கத் தமிழ் பாடல்களை தொகுத்து வழங்கிய உ.வே..சாமிநாத அய்யர் அவர்களுக்கு நாம் மிகவும் கடமைபட்டிருக்கிறோம்.”
செந்தமிழ் கல்லூரியில் அவளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கும் பணி மிகவும் பிடித்தது. தமிழ் மொழியின் மேல் அவள் அளவற்ற காதல் கொண்டிருந்தாள். அவர்களுக்கு ஒரு அற்புதமான அகநானுறு பாடலுக்கு விளக்கம் சொன்னாள்.
“அன்னைக்கு
அறிவிப் பேங்கொல் அறியலங் கொல்லென
இருபாற் பட்ட சூழ்ச்சி ஒருபால்
சேர்ந்தன்று வாழி தோழி யாக்கை
இன்னுயிர் கழிவ தாயினும் நின் மகள்
ஆய்மலர் உண்கட் பசலை
காம நோயெனச் செப்பா தீமே”
இது ஒரு அருமையான அகநாநூற்றுப் பாடல். ஒரு தாயின் தவிப்பும் ஒரு மகளின் தவிப்பும் ஒருங்கே சொல்லும் அழகிய பாடல். மகள் ஒரு இளைஞனைக் காதலிக்கிறாள். பல இடையூறுகள் வந்து அவனை இப்பொழுது சந்திக்க முடியாமல் தவிக்கிறாள். பிரிவு அவளை வாட்டுகிறது. அந்தத் துயரால் அவள் சரியாகச் சாப்பிடாமல் தூங்காமல் மெலிகிறாள். தாயின் மனம் கேட்குமா? என் மகளுக்கு என்ன நோயோ என்று கவலைப்படுகிறாள். அன்னையின் கவலை கண்டு மகள் தனக்கு எந்த நோயும் இல்லை. காதல் படுத்தும் பாடு தான் பயம் வேண்டாம் என்று சொல்லி விடலாம் என்று நினைக்கிறாள் ஒரு சமயம். இன்னொரு சமயம் சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறாள். இரண்டு எண்ணங்களுக்கும் இடையே ஊசலாடுகிறது அவள் மனம். இறுதியில் அவள் ஒரு முடிவுக்கு வருகிறாள். என் உயிரே போனாலும் சரி என் மெலிவுக்குக் காரணம் காதல் நோய் தான் என்பதை மட்டும் சொல்லிவிடாதே தோழி என்று கேட்டுக் கொள்கிறாள். பெற்ற தாயிடம் தன் காதல் நோயைப் பற்றி சொல்லக் கூசும் ஒரு பெண்ணின் மனதை உணர்ந்து ஆண்பாற் புலவர் கபிலர் பாடிய பட்டு இது. ஒரு தாயின் தவிப்பையும் கோடிட்டுக் காட்டுகிறார். அன்றாட வாழ்வியல் நுட்பம் இது. இந்தக் காலத்துக்கும் இது பொருந்தும் இல்லையா? பிரசவ காலத்தில் அம்மா வீட்டுக்கு வரும் மனைவி கணவனை பிரிந்து இருப்பதால் தினம் போன் பண்ணிக் கொண்டு இருப்பதில்லையா? அந்தக் காலத்தில் போன் கிடையாது. ஆனால் உணர்வுகள் ஒன்று தானே!
புலவர்கள் பாட்டு எழுதுவது அவர்கள் புத்திசாலிகள் என்று காட்டுவதற்காக இல்லை. அவர்களுக்கு மனித மனங்களின் உணர்சிக் குவியலுக்குள் முத்துக்கள் எடுக்கும் அபூர்வ திறன் உண்டு. அது தான் அவர்கள பாட்டெழுதக் காரணம். அவர்கள் காற்றோடும் பேசுவார்கள். கடலோடும் பேசுவார்கள். ஏன் பல்லியோடும் பேசுவார்கள். காதலன் வரும் நாளை எண்ணிக் கொண்டிருக்கிறாள் காதலி. அவன் திரும்பி வருவதாக கூறிச் சென்ற பருவம் வந்துவிட்டது. அவன் பிரிந்து சென்ற நாட்களைச் சுவரில் குறித்து வைத்து அவற்றை நோக்கி நோக்கி கண்ணீர் விட்டபடி படுக்கையில் கிடக்கிறாள். அப்பொழுது பல்லி கவுளி அடிக்கிறது. அவள் பல்லியிடம் வேண்டுகிறாள். “பல்லி உனக்கு புண்ணியாமகப் போகட்டும், என் காதலர்க்கு ஒரு தீமையும் வரக்கூடாது என்று நல்ல திசையில் நல்லன சொல்லு...” என பயப்படுகிறாள். இது நாம் அன்றாடம் வாழ்க்கையில் காணும் இயல்பான விஷயம் தான். பல்லி எந்தப் பக்கம் விழுகிறது என்பதற்கு ஜோஸ்யம் பார்க்கும் பழக்கம் இன்றும் காணலாம். அந்தப் பாடலும் அகநானூறில் உள்ளது. அந்த சமயம் எங்கிருந்தோ பல்லி கவுளி அடிக்க மாணவிகள் ஒ என்று ஆரவாரமிட்டார்கள். வகுப்பு கலகலப்பாக மாறியது. மாணவிகளுக்கு சுமதியை மிகவும் பிடித்துவிட்டது.
“தமிழ் இலக்கியம் போர் என்று நினைத்திருந்தோம். எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கு. சுமதி மேம் நன்றாக சொல்லிக் கொடுக்றாங்க. நான் இனி அவங்க கிளாஸ் மிஸ் பண்ண மாட்டேன்.” மாணவிகள் இப்படி ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொண்டுபோவதை மாலதி கேட்டாள். அவளுள் பொறாமை மூண்டது.
“பல்லிக் கதையும் கழுதைக் கதையும் சொல்லி லைக்ஸ் வாங்கியவங்களுக்கு நாம என்ன போடணும்?” என்று சுமதி ஸ்டாப் ரூமில் நுழையும்போது கூறினாள் மாலதி.
“ஷேர் போட முடியுமா என்ன? டிஸ்லைக் போடுங்க..” என்று ஒத்து ஊதினாள் மைதிலி மிஸ். சுமதி புன்சிரிப்புடன் சொன்னாள்.
“நீங்க டிஸ்லைக் போடுவது எனக்கில்லை. இளங்கீரனார் என்ற சங்கப் புலவருக்கு....உங்களைத் தான் சங்கப் பாடலை ரசிக்கத் தெரியவில்லை என்று சொல்லிவிடுவார்கள். எனக்கென்ன?” என்று தோளைக் குலுக்கினாள் அவள்.
“இப்ப சுமதி மிஸ் சொன்னதுக்கு நான் லைக் போடறேன்..” என்றாள் ஷீலா. காக்கா..காக்கா என்று மற்ற இருவர் சத்தம் போட்டு சொல்லிச் சிரித்தனர். “மனுஷனா இருக்கறதுக்கு காகமா இருக்கறது மேல்..”
பேச்சு அத்துடன் நின்றது. சுமதி வீட்டுக்குப் போகும் போது நினைத்தாள். முன்பெல்லாம் யாராவது கேலி செய்தால் அழுதுவிடுவாள். பதில் சொல்லத் தெரியாமல் முழிப்பாள். காலம் கடந்த பிறகு ச்சே இப்படி சொல்லியிருக்கலாமே....அப்படி சொல்லியிருக்கலாமே என்று குழப்பிக் கொள்வாள்.. இப்பொழுது அவள் பட்டென்று பதில் சொல்லத் தெரிந்து கொண்டாள். அதுவும் அவர்கள் காயப்படாமல்...உலகத்தை பேஸ் பண்ண தெரிந்து கொண்டாள். அடிபடும் போது நடக்கும் நல்ல விஷயம் இது தான். மனம் உரம் பெற்றுவிடுகிறது.
மாலை தோழிகள் இருவரும் வீட்டுக்கு வந்தடைந்த போது இருவருமே மனம் சோர்வுற்று இருந்தார்கள். பூரியும் கிழங்கும் செய்தவுடன் சைந்தவி சொன்னாள்.
“சுமதி நான் ஒரு பிளேட் ராஜேஷுக்கு கொடுத்து விட்டு வருகிறேன்.”
“அட...இது என்ன புது பழக்கம்? நான் கொடுக்கிறேன் என்று சொன்னால் கூட அதெல்லாம் வேண்டாம். ஒரு டிஸ்டன்ஸ் இருப்பது நல்லதுன்னு தடுப்பே...இப்ப என்ன கரிசனம்?”
“இலே சுமதி நான் தான் அவன் உணர்ச்சி வசப்பட காரணமா இருந்தேன். விளையாட்டுன்னு நினச்சு உன்னைப் போகவிடாமல் தடுத்தேன். அது எவ்வளவு பெரிய விபரீதத்தில் முடிஞ்சுது பார்த்தியா? என்னால் தானே நாலு வருஷமா வராத பிட்ஸ் இப்ப வந்திடுச்சு. அதான் பிராயச்சித்தம்...” சுமதியின் பதிலுக்கு காத்திராமல் தட்டுடன் கிழே இறங்கிப் போய்விட்டாள். கனகம் மாமி தன் தங்கை மகளுக்கு குழந்தை பிறந்திருக்கு என்று திண்டிவனம் சென்றிருக்கிறார்கள். வர நாலு நாள் ஆகும். சொல்லிவிட்டுத் தான் போனார்கள். புள்ளையை பார்த்துக்கோங்க ராசாத்திகளா என்றாள்.
“ஹலோ...ராஜேஷ்..” என்று கதவு தட்டினாள் சைந்தவி. ஒரு நிமிஷம் சத்தமே இல்லை. சைந்தவி பயந்துவிட்டாள். ஒரு வேளை விழுந்து கிடக்கிறானோ? படபடவென்று தட்டினாள்.
“பொம்பளைங்களுக்கு பொறுமை வேண்டும். பூ போன்ற கைகள் இப்படி இடி மாதிரி தட்டக் கூடாது. பெல் அடிக்கனும்னு தோணலையா?” என்றபடி கதவு திறந்தான் ராஜேஷ்.
“அப்பாடா...பயந்தே போனேன். அதெப்படி தட்டுவது பொம்பளை தான்னு தெரியும்?”
“கை புண்ணுக்கு கண்ணாடி தேவையா? உன்னை விட்டால் யார் இப்படி தட்டுவாங்க?”
“நான் பயந்தேன் தெரியுமா?”
“விழுந்து கிடப்பேன்னு பயமா? பரவயில்லையே என் மேலே கூட ஒரு ஜீவன் அக்கறை காட்டுதே. திருந்திட்ட போலிருக்கு..”
“நீ இன்னும் அந்த சம்பவத்தை மறக்கலையா ராஜேஷ்?. ரொம்ப ஸாரி. எத்தனை தரம் சொல்றது? நூறு தரம்? ஆயிரம் தரம்?”
“ஒரே தரம் போதும். ஆனால் அது உள்ளத்திலிருந்து வந்ததா இருக்கணும்...அப்படித் தெரியலையே..” அவளை ஆராய்வது போல் பார்த்தான். “சரி நம்பறேன். ஆமா என்ன இந்தப் பக்கம்.?”
“நாங்க பூரி போட்டோம். உனக்கு கொடுக்கலாம்னு வந்தேன்.” பிளேட்டை நீட்டினாள். அவன் வாங்காமல் அவளைப் பார்த்தான்.
“இதில் ஏதாவது விஷமத்தனம் இருக்கான்னு யோசிக்கிறேன்..”
“எதுவும் இல்லை. அன்போடு கொண்டு வந்திருக்கேன்..”
“அப்படியா? தேங்க்ஸ். ஆனா எனக்கு இரக்கம் தேவையில்லை சைந்தவி. அம்மவோட அன்பு தவிர மத்ததெல்லாம் கருணையின் அடிப்படியில் தான் வருகிறது. எனக்கு பிச்சை பிடிக்காது சைந்தவி. அது அன்புப் பிச்சை என்றாலும்..”
சைந்தவி அழுது விட்டாள். அவள் அசோக்கிடம் சொன்ன அதே வார்த்தை. அசோக் அவளை ஏமாற்றிய விதம், அவள் உணர்வுகளோடு விளையாடிய விதம், அவளை தற்கொலை வரை கொண்டு போன விதம் அவளுக்கு குபுக்கென்று ஞாபகம் வந்தது.
“ஸாரி சைந்தவி..உன்னை காயப்படுத்த நான் சொல்லலை. நான் அனுபவிச்ச வலிகளால் வந்து விழுந்த வார்த்தைகள்...ஸாரி..”
“அதுக்கு அழலை ராஜேஷ். அந்த துரோகி அசோக் பத்தி நினச்சேன்.”
“யாரிடமாவது நாம் மனசு விட்டுப் பேசினால் சுகமாக இருக்கும். என்னிடம் சொல்லாம்னா சொல்லு...”
“பூரி ஆறிப் போகப் போவுது. முதல்லே சாப்பிடுங்க...”
அவள் சொல்ல ஆரம்பித்தாள். சொல்லச் சொல்ல அவள் பாரம் இறங்கியது. சுமதியிடம் ஏற்கனவே சொல்லியது தான்.....