கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

இன்று முதல் நந்தவனம்...அத்தியாயம் 7

Status
Not open for further replies.

sankariappan

Moderator
Staff member
அத்தியாயம்---7


சைந்தவியின் உள்ளம் பின்னோக்கிப் போனது. வாழ்க்கை அவளுக்கு அழகான தோட்டம் மாதிரி அமைந்தது. பூக்களின் வாசம் நெஞ்சு பூராவாக நிறைத்துக் கொண்டு அவளை துள்ளி குதிக்கச் செய்தது. அவளுக்கு துக்கம் தெரியாது. ஏழ்மை தெரியாது. பொறாமை புரியாது. வலி தெரியாது. அவள் உள்ளத்துக்குத் தெரிந்ததெல்லாம் மனிதர்கள் புடம் போட்ட தங்கமானவர்கள் என்பது தான். எல்லோரும் அம்மா மாதிரி அப்பா மாதிரி கனிவானவர்கள் என்று தான் நினைத்திருந்தாள். முதலில் நீ உன்னை நேசி என்று கற்றுக் கொடுத்த பெற்றோர்கள் அவளுக்குக் கிடைத்தது அவள் செய்த அதிர்ஷ்டம். மலர்கின்ற ஒவ்வொரு நாளும் கடவுள் நமக்கு கொடுத்த ஆசீர்வாதம் என்று சொல்வார்கள். தங்கை வாசவி அவளுக்கு நெருங்கிய தோழி. இருவருக்கும் இரண்டு வயது தான் வித்தியாசம். அழகு பல வடிவங்களில் காணப்படுகிறது. அதில் தன்னைத் தானே முதலில் நேசிப்பதும் தன்னம்பிக்கை கொள்வதும் தான் அழகின் வடிவம் என்று அம்மா சொல்வாள்.


“நம்மை முதலில் நேசிக்கக் கற்றுக் கொண்டால் தான் நாம் பிறருக்கு அதே நேசத்தை கொடுக்க முடியும். அப்படி செய்யாதவர்கள் தான் பிறரை காயப்படுத்துவார்கள்” என்று சொல்வாள் அம்மா புவனேஸ்வரி. அம்மா என்றால் அன்பு. அதிலும் அவள் அம்மா புவனா அழகின் இலக்கணம். மனதால் மட்டும அல்ல உடல் அழகாலும் தான். பிரம்மன் கூடுதல் சிரத்தை எடுத்து அவளை ஓவியம் போல் படைத்துவிட்டான் என்று அப்பா சொல்வார். செல்வராகவனின் பெருமை சில பேருக்கு பொறாமையை வரவழைக்கும். ரொம்பத் தான் அலட்றான் என்று சொல்வார்கள்.


“சொல்லிவிட்டுப் போகட்டும். எனக்கு கர்வம் இல்லை. மனநிறைவு. என்னைப் போல் கால் ஊனமானவனுக்கு கிடைத்த பொக்கிஷம்... கொண்டாட வேண்டாமா?” என்பார்.





செல்வராகவன் ஒரு விபத்தில் கால் இழந்த போது விரக்தியின் எல்லைக்கே போய்விட்டார். அவருக்கு வலது கால் முட்டிக்கு அடியில் சிதைந்து போய் எடுக்க வேண்டியதாகிவிட்டது. அப்போது அவருக்கு முப்பது வயது. சைந்தவி சின்னக் குழந்தை. வாசவி அம்மாவின் வயிற்றில் ஆறு மாதம். அம்மா தான் அப்பாவுக்கு தன்னம்பிக்கை கொடுத்து முன்னேற வைத்தாள். அவருக்கு ப்ராஸ்தடிக் லெக் அமைக்க ஏற்பாடு செய்தாள். சர்ஜரிக்குப் பின் புண் ஆறின பிறகு தான் அந்த செயற்கை காலை பொறுத்த முடியும். ஆறு மாதமாயிற்று புண் ஆறுவதற்கு. நிறை மாச கர்ப்பிணியாக இருந்தும் கை குழந்தையை வைத்துக் கொண்டும் அம்மா அப்பாவை கவனித்த விதம் பற்றி அப்பா சொல்லக் கேட்டிருக்கிறாள் சைந்தவி. அலுக்காமல் சொல்வார். திரும்பத் திரும்ப சொல்வார். “எனக்கு மரணம் ஒண்ணு தான் முடிவு என்று நான் நினைத்திருந்தேன். இல்லை உங்களுக்கு இனி தான் வாழ்க்கை என்று உன் அம்மா தெம்பூட்டினாள். சாவால்களை ஏற்று வாழ்ந்து காட்டணும் என்று சொல்வாள். அவள் பெண்களுக்கு ஒரு இலக்கணம். நான் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறேன் என்றால் நான் அடித்து சொல்வேன் த கிரெடிட் கோஸ் டு ஹர்..” என்பார்.


“அம்மா..உனக்கு கஷ்டமா இல்லையா? உலகை வெறுக்கவில்லையா? இப்படி ஆகிவிட்டதேன்னு மனம் சோர்வடையவில்லையா? ச்சே என்று தோன்றவில்லையா?” என்று சைந்தவி கேட்டிருக்கிறாள். அம்மா புன்முறுவலுடன் பதில் சொல்வாள். “இத்தனை நாள் அவருடன் வாழ்ந்தது பெரிய விஷயம் இல்லை சைந்தவி. இனி வாழ்வது தான் வாழ்க்கை என்று அன்று புரிந்து கொண்டேன். உன் அப்பாவுக்கு கால் ஊனமாவதற்கு முன் அவருடன் எந்த பெண்ணும் வாழ்ந்து விடலாம். கம்பீரமான நல்ல புருஷன். கை நிறைய சம்பாதிக்கும் புருஷன். முத்தாக இரண்டு குழந்தைகள். ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்கை அது. யாருக்கும் சாத்தியம். ஆனால் கால் ஓடிந்தபோது....வேலையும் போன போது...அவருடன் வாழ்வது தான் வாழ்க்கையின் சவால். அதை ஏற்றுக் கொண்டேன். சுய பச்சாதாபம் கூடாது. அவருக்கு கால் ஊனமானால் என்ன மனசு ஊனமாகக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். எப்படி எப்படியோ சமாளித்து ஒரு சின்னக் கம்பனியில் வேலை பார்த்துக் கொண்டு உங்களையும் வளர்த்தேன். அப்பாவையும் கவனித்துக் கொண்டேன். அது மலைப்பான விஷயம் தான். என்னுள் இருந்த தீ என்னை உந்தித் தள்ளியது. அப்பாவுக்கு கால் பொருத்தப்பட்டதும் அப்பா நடக்க ஆரம்பித்தார். பாங்கில் லோன் போட்டு அவர் ஆரம்பித்த தொழில் தான் கம்ப்யூட்டர் சென்ட்ர். அது பெரிதாக வளர்ந்தது. பணம் சம்பாதித்தார். மரியாதை வந்தது. நேர்மையாக இருந்தார். இரக்கம் காட்டினார். நிறைய பேருக்கு கல்வி உதவி செய்தார். வேறென்ன வேண்டும் சொல்?...”


“கிரேட் அம்மா. கடவுள் வைத்த அக்னி பரிட்சையில் டிஸ்டிங்ஷனில் தேறிட்டே. எனக்கு பெருமையா இருக்கு...”


வாசவியும் அவளுடன் சேர்ந்து அம்மாவை பாராட்டுவாள்.


“நான் சந்தித்த சவால்களும் வெற்றியும் எல்லோராலும் பாராட்டப்படுது. அது பெரிசில்லை என் குடும்பம் என்னை பாராட்றது தான் எனக்கு பிடிச்ச விஷயம்...அதுவும் அப்பா என்னை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவது பெருமையோ பெருமை..”


குருவி கூடு போல் அழகான அந்தக் குடும்பத்தை வேட்டை ஆடவே சில வேடர்கள் காத்திருந்தார்கள். நமக்கு எதிரிகளே இல்லை..நாம் யாருக்கும் கெடுதல் செய்யவே இல்லை என்று நம்பியிருந்த அந்தத் தம்பதிகளின் நம்பிக்கை பொய்த்தது. ஓகோ என்று ஜெயித்துவிட்ட செல்வராகவனை தோற்கடிக்க அந்தக் கூட்டம் செய்த சதிகள் எதுவும் பலிக்கவில்லை. ஆவேசம் கொன்ட அவர்கள் வீடு புகுந்து...அந்த பயங்கரம் நடந்த இரவை சைந்தவி மறக்க முடியாமல் இன்னமும் தின்டாடுகிறாள். நாளை நமதே இந்த நாளும் நமதே என்று கள்ளம் கபடமில்லாத அவர்கள் வாழ்க்கையில் அவர்கள் வெற்றியே அவர்களை வீழ்த்தியது. துப்பாக்கி கண்டு பிடித்தவன் மேல் சைந்தவி அன்று வெறித்தனமாக கோபப்பட்டாள். அவள் கண்முன்னேயே அவள் அப்பா, அம்மா, தங்கை துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தனர். ரத்த வெள்ளத்தில் அவர்கள் மிதந்த காட்சி அவள் அடிவயிற்றை கலக்கியது. அவள் தப்பித்துக் கொண்டது தெய்வ செயலா? அவளைப் பொறுத்த வரை கடவுளின் குரூர செயல். அவள் கடைக்கு போய்விட்டு திரும்புகிறாள்...வீடே மயானம் ஆகியிருந்தது.





போலிஸ் வந்தது...கைரேகை நிபுணர் வந்தார்...சொந்தங்கள் வந்தது. ஆனால் போன உயிர்கள் திரும்புமா என்ன? கோர்ட் கேஸ் என்று போயிற்று. அவளுக்கு அதுவரை வீட்டு நிர்வாகம் பற்றி ஒன்றும் தெரியாது. கடன் வாங்கியுள்ளார் செல்வராகவன் என்று பொய் சொல்லி சொந்தங்களும் போட்டி கம்பனிகளும் போலி கையெழுத்திட்ட பத்திரங்களைக் காட்டி எரிகிற வீட்டில் கிடைத்ததை சுருட்டுவது போல் பிடுங்கிச் சென்றனர்.





கார் போயிற்று. பங்களா போயிற்று. வங்கி சேமிப்பு போயிற்று. நகைகள் போயிற்று. நடுத் தெருவில் நின்றாள் சைந்தவி. ஏழ்மை என்பது எவ்வளவு கொடிது என்று அவளுக்குப் புரிந்தது. அதிலும் இளமையில் வறுமை. அவ்வை சொன்னது எவ்வளவு உண்மை!.


இவள் மேல் கொஞ்சம் பரிதாபப்பட்டு ஏதோ ஒரு தூரத்து சொந்தமான பெரியம்மா இவளை தன் வீட்டுக்கு கூட்டிப் போனாள். அவளுக்கே மூன்று பெண்கள்.


“சைந்தவி....ஏதாவது ஒரு வேலையை பார்த்துக் கொண்டு சீக்கிரம் போய்விடு. அது தான் உனக்கும் நல்லது எனக்கும் நல்லது.”


அவளுக்கு வீட்டு வேலை செய்து பழக்கமில்லை. மொட்டு போல் உட்கார்ந்திருந்தாள்....தண்ணீர் லாரி வந்தபோது அவளை குடத்தை எடுத்துக் கொண்டு போய் நீர் பிடித்து வரச் சொன்னாள் பெரியம்மா. பிளாஸ்டிக் குடம் எடுத்துக் கொண்டு அவள் ஓடினாள். பெரியம்மாவின் மகள் ரேணு இன்னும் இரண்டு குடம் எடுத்துக் கொண்டு வந்து வைத்தாள். அடித்து பிடித்து கூட்டத்தில் இடி வாங்கி கெட்ட வார்த்தை அர்ச்சனை வாங்கி பத்து குடம் எடுத்து வந்து அண்டாவில் ஊற்றினாள். அதற்குள் போட்டிருந்த சுடிதார் நனைந்து குளித்தது போல் ஆகிவிட்டது. கிரைண்டரில் மாவாட்டி வழித்து வைப்பது இமாலய சாதனை போல் இருந்தது. வேலைக்காரி பாத்திரம் விளக்கி விட்டுப் போவாள். அதற்குப் பின் விழும் பாத்திரங்களை விளக்குவது சைந்தவியின் வேலை. வீட்டை பெருக்குவது, துணி காயப்போடுவது, மடித்து வைப்பது, இஸ்திரி போட்டு வைப்பது அவள் வேலை. கல்லூரி போகும் பெரியம்மா பெண்கள் மூவரும் இவள் வந்தது தான் சாக்கு என்று ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடுவதில்லை. சமையலில் உதவுவது தான் பெரிய சாதனை. சட்னி அரைப்பது, காய் நறுக்குவது, சப்பாத்திக்கு பிசைவது என்று சுற்று வேலைகள் இருந்து கொண்டே இருக்கும். ரெஸ்ட் என்பது இல்லை. பாட்டு கேட்பது, மாலை வெளியே போவது என்ற சுவாரஸ்யமும் இல்லை. இரவில் அவள் கண்ணில் தேங்கி நீர் நிற்கும். அதற்கு மேல் அவள் அழததில்லை. பெரியப்பா என்ற மனிதர் அவளை சதா திட்டிக் கொண்டே இருப்பார். நக்கலாகப் பேசுவார்.


“எல்லோரும் கேக்றாங்க...என்ன குருமூர்த்தி உனக்கு மூணு பொட்டப் புள்ளங்க போதாதுன்னு நாலாவதா எங்கிருந்தோ ஒண்ணையும் கூட்டிட்டு வந்திருக்கே...ஆண்டி ஆகப் போறேங்கறாங்க. சைந்தவி ஏதாவது வேலை கிடச்சுதா இல்லையா? ஒரு மாசம் தான் டைம்.” என்று கெடு வைத்துவிட்டார். அவள் பெரியம்மாவிடம் கெஞ்சினாள். “நான் வெளியே போய்தானே வேலை தேட முடியும்? கொஞ்சம் பணமும் வெளியே போக அனுமதியும் கொடுத்தா நல்லாயிருக்கும்..” அவளுக்கு அவமானமாக இருந்தது. இப்படி யாரிடமோ கெஞ்சி கொண்டிக்கும் தன் அவல நிலையை வெறுத்தாள். பொறாமை பிடித்தவர்கள் செய்த கொடுமை செயலை எதிர்த்து கோர்ட்டுக்குப் போகக் கூட அவளுக்கு வக்கில்லை. தனியாகப் ஒரு பெண் மாட்டிக் கொண்டால் எப்படியெல்லாம் பயன்படுத்தி, பாடாய்ப்படுத்தி, அவளின் தனம்பிக்கையையே கொன்று போடுகிறார்கள்! தாயில்லா பிள்ளை பேச வாயில்லாப் பிள்ளை. தந்தையில்லா பிள்ளை கொடுமைப்படுத்த கிடைத்த கூடுதல் போனஸ் பாயின்ட். இன்னும் சொல்லப் போனால் விசா கிடைத்த மாதிரி. “அம்மா..எவ்வளவு நாள் இந்த சைந்தவி இங்கே இருக்கப் போறா? சாப்பாடு போட்டு துணிமணி வாங்கிக் கொடுத்து..ஒ மை காட் அப்பா ஓட்டாண்டியா ஆயிடுவா போலிருக்கே..” பெண்களின் வரி வரியான திட்டுகள்.


“அம்மா சீக்கிரம் அவளைக் கிளப்பு. அப்புறம் அவளுக்கும் நீங்க தான் கல்யாணம் காட்சின்னு பண்ணவேண்டியிருக்கும்..புத்திசாலியா இருந்துக்கோ..”


“கொஞ்சம் பொறுமையா இருங்களேன். எல்லாம் போவா. அவளுக்கு என்ன மானம் ரோஷம் இல்லேன்னு நினைக்கிறீங்களா.?”


மூன்று மகள்களும் அம்மாவிடம் சொல்வது அவளுக்கு காது கேட்டது. கேட்கவேண்டும் என்றே சொல்லப்பட்ட வார்த்தைகள் தான்.


அவளால் ஆவேசப்பட்டு கத்த முடியாது. இந்த முள் நிழலில் இருக்கும் தலையெழுத்து அவளுக்கு இருக்கும் போது அவள் அவமானங்களை விழுங்கித் தான் ஆகவேண்டும். நவீன சின்ட்ரெல்லா! எந்த ராஜகுமாரன் வந்து காப்பாத்தப் போறான்?





பகல் பத்து மணிக்கு முடிந்தவரை எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்த பின் அவள் வேலை தேட ஆரம்பித்தாள். திட்டிக் கொண்டே பெரியப்பா கொடுத்த பணத்தில் வேலைக்கு விண்ணப்பித்து நேர்காணலுக்கு போனாள். எல்லா இடத்திலும் தோல்வி தான். ஒரு ஜவுளிக் கடையில் ஐம்பதாயிரம் கேட்டார்கள். இரண்டு நாள் டைம். டெபொசிட் கொடுத்துவிட்டால் வேலையில் சேரலாம். ஜூஸ் கடையில் தாகத்துக்கு லைம் ஜூஸ் குடித்துக் கொண்டிருந்தாள் சைந்தவி. அவள் எங்கே போவாள் இவ்வளவு பணத்துக்கு? ஒரு ஜவுளிக் கடையில் சேல்ஸ் கேர்ள் வேலைகே இந்தப் பாடு. அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. திரும்ப பெரியம்மா வீட்டுக்குப் போகவே மனமில்லை. இப்படியே ஓடிவிடலாமா என்றிருந்தது. அந்த சமயம் ஒரு இளைஞன் ஜூஸ் குடிக்க வந்தான். அவனை அவள் கவனிக்கவில்லை. தன் துயரத்தில் மூழ்கி இருந்தாள். அவள் கண்களிலிருந்து முத்து முத்தாக நீர் அவள் அழகிய கன்னம் தாண்டி விழுந்து கொன்டிருந்தது. அங்கு போடப் பட்டிருந்த இருக்கை ஒன்றில் அவன் அமர்ந்தான். அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு வழியாக அவள் க்ளாசை மேடையில் வைத்து விட்டு பணம் கொடுத்துவிட்டு தெருவில் இறங்கினாள். ஷேர் ஆட்டோவில் போக காசிருக்கிறதா என்று பார்த்துக் கொன்டிருந்தாள். அவள் அருகே சர்ரென்று வந்து நின்றது ஒரு கார். அந்த இளைஞன் கீழே இறங்கினான்.


“மேடம்...நீங்க எங்கே போகணும்? நான் வேணா ட்ராப் பண்ணட்டுமா?” சைந்தவி அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவளுக்கு பேசக் கூட பிடிக்கலை. முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். அவன் விடவில்லை.


“மிஸ்..நீங்க ஜூஸ் கடையில் அழறத பார்த்தேன். உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் நான் செய்றேன்....தப்பா நினைக்கதீங்க. உங்களை பார்த்தா எனக்கு கஷ்டமா இருக்கு.”


அடுத்தவர் பரிதாபப்படும்படி இருக்கோமே என்று அவள் வெதும்பிப் போனாள். எப்படியிருந்தவள் இப்படி ஆகிவிட்டாளே!...அவள் மேலேயே அவளுக்குப் பரிதாபம் வந்தது..


“தேங்க்ஸ் மிஸ்டர். எனக்கு எந்த ஹெல்ப்பும் வேண்டாம்.”


“அப்படி சொல்லாதீங்க. உங்களுக்கு உதவி செய்தே ஆகவேண்டும் என்று என் உள் மனசு சொல்லுது..”


“அப்படியா...அதோ கண் தெரியாதவர் ஒருவர் ரோட் கிராஸ் பண்ண கஷ்டப்படறார். அவருக்கு உதவுங்க. பிச்சைகாரர்களுக்கு ஒரு வாய் சாப்பாடு வாங்கிக் கொடுங்க. உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும். ப்ளீஸ் என்னே தனியே விடுங்க...”


“இந்தாங்க..இது என் விசிடிங் கார்ட். என் பெயர் அசோக். ஏதாவது ஹெல்ப் வேணா என்னை தாராளமா கூப்பிடுங்க. ஒரு பொது இடத்தில் அமர்ந்து, கண்ணீர் வடிக்கும் நிலைமை உங்களுக்கு வந்திருக்கு என்றால்..அது பாமிலி ப்ராப்ளம் இல்லை. பாமிலி இல்லை என்கிற ப்ராப்ளமாகத் தான் இருக்கும்...”


எப்படி கண்டுபிடித்தான்? அவள் விக்கலுடன் விசும்பலுடன் நின்றாள்.


“கண்ணை துடைங்க. இப்ப போங்க. நிதானமா இருக்கும் போது கால் பண்ணுங்க...”


“கால் பண்ண என்னிடம் செல் போன் இல்லை..”


“வாங்க ஒண்ணு வாங்கித் தரேன்...”


“வேண்டாம்...இவ்வளவு தூரம் கேக்றீங்க சொல்றேன்...எனக்கு ஒரு வேலை கிடைச்சிருக்கு. அதுக்கு ஐப்பதாயிரம் கேக்றாங்க. நான் எங்கே போவேன் பணத்துக்கு?”


“நான் கொடுக்கிறேன்...கடனா எடுத்துக்குங்க.”


“தேங்க்ஸ். ஆனா எனக்கு இரக்கம் தேவையில்லை சார். அம்மா அப்பாவின் அன்பு தவிர மத்ததெல்லாம் கருணையின் அடிப்படையில் தான் வருது. எனக்கு பிச்சை பிடிக்காது. அது அன்புப் பிச்சையாக இருந்தாலும்...ஸாரி சார்...”


“நீங்க ரொம்ப கலங்கி இருக்கீங்க. நான் நல்லவன். என்னை நம்புங்க. உங்களுக்கு உதவி செய்வது ஒரு கடமை..ப்ளீஸ்...”


கையேந்தும் நிலைமை அதுவும் யாரிடமோ...துக்கம் தொண்டையை அடைத்தது. அவள் மனம் லேசாக அசைந்தது. வேறு வழி இல்லை. பெரியம்மா வீட்டார் துரத்துவதற்குள் அவள் போய் ஆகவேண்டும். வேலை இல்லாமல் தெருவில் பிச்சையா எடுக்க முடியும்? இளம் பெண் அதுவும் அழகி. எவ்வளவோ கழுகள் காத்திருக்கு..இவனே ஒரு கழுகோ என்னவோ?..அவள் சம்மதிப்பாள் என்று தெரிந்ததும் அவன்...


“நீங்க..வாங்க. வண்டியிலே ஏறுங்க. இதோ பாங்க பக்கத்திலே தான். பணம் வித்டிரா பண்ணித் தரேன். மெதுவா கொடுங்க...வாங்க..”


சாத்தானா....மனித தெய்வமா என்று அவளால் நிர்ணையிக்க முடியவில்லை. மனசு சொல்லிற்று போ என்று. அவள் வண்டியில் ஏறினாள். வங்கி முன் கார் நின்றது. அவளை அழைத்துக் கொண்டு போய் உட்கார வைத்தான். பணம் எடுக்க சிறிது நாழியாயிற்று.


“இந்தாங்க..இதில் அறுபதாயிரம் இருக்கு..”


“ஐம்பதாயிரம் போதும்...”


“வச்சுக்கோங்க. நல்ல உடை வாங்க வேண்டாமா? வீடு கீடு பார்க்கணும்னா சொல்லுங்க. பார்த்து தரேன். இந்தாங்க என் செல் போன் இது. வச்சுக்கோங்க. என் டேட்டா எல்லாம் அழிச்சிட்டு உங்களோடது போட்டுக்கோங்க. முதல்லே என் நம்பர் சேவ் பண்ணிக் கோங்க....” நம்பர் சேவ் பண்ணிக் கொடுத்தான்.


அவள் முகத்தில் லேசாக சிரிப்பு வந்தது.


“அப்பப்பா....ஒரு மில்லிமீட்டர் சிரிச்சிட்டீங்க. குட். வரேன். டேக் கேர்.”


“ஒரு நிமிஷம்..”


“சொல்லுங்க..”


“நாளை அந்த ஜவுளிக் கடையில் கொண்டு இதை கொடுக்கப் போறேன். நீங்களும் வந்தா நல்லாயிருக்கும். ஏதாவது வம்பு பண்றவங்களா இருந்தா?”


“என் மேல் நீங்க வைச்ச நம்பிக்கைக்கு நன்றி. கண்டிப்பா வரேன். ஜூஸ் கடையின் முன்னால் பத்து மணிக்கு வந்து நிற்பேன்..”


“தாங்யூ வெரி மச்..”


“அசோக்..”


“தாங்யூ வெரி மச் மிஸ்டர் அசோக்.”


“யூ ஆர் வெல்கம்..” அவன் போன பிறகு அவள் தைரியத்துடன் பெரியம்மா வீட்டில் நுழைந்தாள்.





மறுநாள் அவன் சொன்னபடி வந்து நின்றான். ஜவுளிக் கடையில் பணத்தை கொடுத்துவிட்டு அன்றே அவள் வேலையில் சேர அவன்


“பெஸ்ட் ஆப் லக். கங்ராட்ஸ்..” என்று சொல்லி கிளம்பினான். நல்ல உடை வாங்கினாள். பெரியம்மாவுக்கு ஒரு ஹான்ட் பாக் வாங்கினாள். கொடுத்தாள்.


“என்ன.. ஹான்ட் பாக்கில் எவ்வளவு பணம் வச்சிருக்கே? ஒரு லட்சமா?” என்று நக்கலாகக் கேட்டாள்.


“பெரியம்மா....எனக்கு வேலை கிடைச்சிருச்சு. ரெண்டு மாச சம்பளம் வாங்கினதும் உங்களுக்கு வேண்டிய பொருள் வாங்கி வரேன்.”


“ஒ......என்ன பெரிய உத்தியாகம்? கலெக்டர் வேலையா பார்க்கிறே? ஜவுளிக் கடையில் நாள் பூரா நிக்கும் விற்பனை பெண் வேலைக்கு எதுக்கு இவ்வளவு அலட்டல்? நீ ஒன்னும் வாங்கித் தரவேண்டாம். இனிமே திரும்பி வராமே இருந்தா சரி..”


அவள் சுள்ளென்று பதில் சொல்ல நினைத்தாள். வேண்டாம்..அவளுக்கு அடைக்கலம் கொடுத்த வீடு. அனாதையாக இருந்தபோது ஒதுங்க ஒரு கூரை கொடுத்து வீடு. நன்றி உணர்வு அவள் வாயை கட்டிப் போட்டது.
 
Status
Not open for further replies.
Top