கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

இன்று முதல் நந்தவனம்...அத்தியாயம் 9

Status
Not open for further replies.

sankariappan

Moderator
Staff member
அத்தியாயம்---9


நாம் ஒரு பெரிய கண்டத்திலிருந்து தப்பிக்கிறோம் என்றால் அது நல்ல விஷயம். ஆனால் அந்த கண்டத்திலிருந்து தப்பிக்கணும் என்ற அறிவு இல்லாமல் போவது விதி. அப்படியொரு விதியின் புதை குழியில் சைந்தவி மாட்டிக் கொண்டிருந்தது அவளுக்கே தெரியவில்லை. அசோக் கோபித்துக் கொண்டு போனதும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அவள். அவனின் அடிமை இல்லை என்று எடுத்துச் சொன்னது அவனுக்கு உரைத்திருக்கும் என்றே நினைத்தாள். நான் யார் கூட பேசவேண்டும் யார் என் வீட்டுக்கு வரவேண்டும் என்று முடிவு பண்ண அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது? காசு கொடுத்துவிட்டான் என்பதற்காக இவன் சொல்லியபடி ஆடவேண்டும் என்று அர்த்தமில்லையே? நியாயம் தான். ஆனால் அசோக் அதை அநியாயமாக நினைத்தான். தன் நண்பனிடம் பொருமினான்.


“தெருவிலே கிடந்து சீரழிய வேண்டியவளுக்கு நான் வாழ்வு கொடுத்தேன். எப்படி திமிரா பேசறா பார்த்தியா தீபக்?”


“விடுடா...ஏதோ சின்னப் பொண்ணு...”


“அவளா சின்னப் பொண்ணு? அவ லேசுபட்டவ இல்லை. அந்த பக்கி


பரதேசி பாஸ்கரை அவ லவ் பண்றாடா. அவனும் அவன் மூஞ்சியும். கேட்டா அவன் சகோதரன் மாதிரியாம்...எனக்கு பத்திக்கிட்டு வருது..”


“ஏய்...நீ ஏன்டா தப்பாவே எடுத்துக்கணும்? பாவம் குடும்பத்தையே தொலைத்து விட்டு இருக்கா. அவன் அவளுக்கு ஆறுதலா இருக்கான். அவ்வளவு தான். எனக்கென்னமோ அவ அவனை காதலிக்கலைன்னு தோணுது. வீணா மனசை போட்டு உழப்பிக்காதே...”


“இவ்வளவு தூரம் சொல்றே. சரி இந்த ஒரு தரம் விடறேன். மன்னிக்கிறேன். அடுத்த முறை..”


“நீ அவளை நேசிக்கறதா சொன்னியா?”


“இல்லே...”
“ஏன்?”


“சொல்ல பயமாயிருக்கு. அவள் முடியாதுன்னு சொல்லிட்டா, என்னாலே தாங்க முடியாது.”


“உன் மேலே உனக்கு நம்பிக்கை இல்லையா? சொல்லத் தான் நினைக்கிறேன்னு இழுத்துக்கிட்டு இருந்தா அப்புறம் அவ உனக்கு கிடைக்காம போயிடுவா...சொல்லிடு..சரியா?”


தீபக் சொன்னது மாதிரி சொல்லிவிட வேண்டியது தான் என்று அசோக் அவள் வீட்டுக்குச் சென்றான்.


“வாங்க வாங்க..” என்று முக மலர்ச்சியுடன் வரவேற்றாள் சைந்தவி.


“இன்னிக்கு நான் ஆப்பம் செஞ்சிருக்கேன். நல்லா வந்திருக்கு..”


தட்டில் கொண்டு வந்து வைத்தாள். அவனுக்கு மனசுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ரசித்துச் சாப்பிட்டான்.


“ரொம்ப நல்லாயிருக்கு சைந்தவி. நீ இவ்வளவு நல்ல சமைப்பேன்னு நான் நினைக்கவே இல்லை. உனக்கு புருஷனா வரவன் கொடுத்து வச்சிருக்கணும்.” என்று சொல்லிவிட்டு அவள் முகத்தைப் பார்த்தான்.


“நான் கல்யாணமே செய்து கொள்ளப் போவதில்லை அசோக். இப்படியே நிம்மதியா இருந்திடப்போறேன். எனக்கு பாஸ்கரின் அன்பும் உங்க பாதுகாப்பும் போதும்.”


“சைந்தவி..உளறாதே. நான் உன்னை நேசிக்கிறேன். உன்னை கல்யாணம் செய்து கொள்ள விரும்பறேன். காலமெல்லாம் உன் கூட வாழ ஆசையாயிருக்கு..” அவள் அவனை நம்பாமல் ஏறிட்டாள்.


“நான் சொல்வதில் உனக்கு நம்பிக்கை இல்லையா?”


“அசோக்....நீங்க எங்கே நான் எங்கே? மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். உங்க வீட்டிலே உங்களுக்கு பெரிய இடத்திலே பொண்ணு பார்ப்பாங்க. இந்த அனாதையை கண்டிப்பா ஏதுக்க மாட்டாங்க. உங்களுக்கு பொருத்தமான இடம் பாருங்க அசோக்.”


“அது பத்தி நீ கவலைபடவேண்டாம் சைந்தவி. அவங்களை சம்மதிக்க வைப்பது என் பொறுப்பு. உன் எண்ணத்தை சொல்லு..என் எண்ணத்தை சொல்லட்டுமா?”


“என்ன?”


“பாடிவிடட்டுமா? ‘மங்கியதோர் நிலவினிலே கனவினிலே கண்டேன்.


வயது பதினாறு இருக்கும் இள வயது மங்கை..” என்று அவன் பாடிய போது சைந்தவியின் உள்ளம் நெகிழ்ந்தது. எவ்வளவு அழகான குரல்!


“இந்தப் பாடல் பாடும் போது எனக்கு உன் நினைவு தான வரும். என் இதய ராணி நீ. உன்னை அவ்வளோ நேசிக்கிறேன்.”


“நான் அதுக்கு தகுதி இல்லை அசோக். உங்க பெற்றோர் அனுமதிக்க மாட்டாங்க. அப்புறம் என்னால் ஏமாற்றத்தை தாங்க முடியாது.


எப்ப எங்க அம்மா, அப்பா, தங்கை எல்லாம் அநியாயமாக சுட்டுக் கொலப்பட்டார்களோ அன்றே எனக்கு ஆசைப்படும் யோக்கியதை இல்லாம போச்சு. கிடச்ச வாழ்க்கையை ஏத்துக் கொள்வது தான் எனக்கான நியதி...முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படக் கூடாது..”


“நீ ரொம்ப விரக்தியிலே பேசறே....உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. நீ ஆசைப்படலாம்...சொந்தம் கொண்டாடலாம்....”


“எதுக்கு வீண் பேச்சு? அசோக்...நீங்க எனக்கு செய்த உதவியை நான் என்றும் மறக்கமாட்டேன்...நன்றியோடு இருப்பேன்...”


“சரி விடு...நான் உன்னை வெளியே கூட்டிப் போக ஆசைப்படறேன். என்னுடன் இப்ப நீ வரணும்.”


“அய்யோ வேண்டாம். முதலாளி கூட தொழிலாளி ஒன்னா உலா வரமுடியுமா? என் இடத்தில நான் இருப்பது தான் எனக்கு மரியாதை.


நீங்க இங்கே என் சமையலை ரசித்து சாப்பிட்டதே உங்க பெருந்தன்மையை காட்டுது...உங்க கடனை அடைக்க முடியலையேன்னு இருக்கு. கொஞ்சம் டைம் கொடுங்க. நல்ல வேலைக்கு விண்ணப்பிச்சிருக்கேன். கிடைச்சதும் எப்படியாவது தந்திடுவேன். அது வரை கொஞ்சம் கருணை காட்டுங்க..”


“ஸாரி....அன்று ஏதோ கோபத்திலே கேட்டுட்டேன். தப்பா நினைக்காதே. தைரியமா இரு. நான் அவசரப்படுத்த மாட்டேன். உன் பதிலை எதிர்பார்க்கிறேன்.”


“என்ன பதில்?...”


“அதான் சொன்னேனே, உன்னை காதலிக்கிறேன்னு..”


அவள் சிரித்தாள். அவனை தீர்கமாகப் பார்த்தாள்.


“என் கிட்டே அப்படி என்ன இருக்கு நீங்க காதலிக்கறதுக்கு? அப்படி ஒன்னும் பெரிய அழகி இல்லை. பணமோ அந்தஸ்தோ இல்லை. மனுஷாள் கிடையாது. தோத்துப் போன..”


“நீ என் இதய தாமரை. உன் அழகு உனக்குத் தெரியலை. உலக அழகி எல்லாம் உன்னிடம் பிச்சை வாங்க வேண்டும். எனக்கு ஆச்சர்யமாக இருக்கு. என் கடைக் கண் பார்வை படாதான்னு ஏங்கிக்


கொண்டிருக்கும் பெண்கள் எத்தனை பேர் தெரியுமா? நான் சுண்டு விரலை அசைச்சா போதும் நூறு பெண்கள் ஓடி வருவார்கள். உனக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைச்சிருக்கு. உனக்கு என் அருமை தெரியலை. உன் நல்ல பதிலுக்காக காத்திருப்பேன் சைந்தவி..”


“காத்திருக்க வேண்டாம் யுவர் ஹைநெஸ்...இந்த ஏழை சின்ட்ரெல்லா உங்களுக்கு பொருத்தமானவள் இல்லை...”


“அதை நீ சொல்லாதே. நான் முடிவு பண்ணவேண்டும்...இப்பதைக்கு பை...நீ என்னவளே...அதில் மாற்றம் இல்லை..”


அவன் விலையுயர்ந்த கார் சீறிக் கொண்டு போனதில் அவன் கோபம் தெரிந்தது. என்னடா இது தலை வேதனை என்று நினைத்துக் கொண்டாள் அவள். அவன் பாடிய மங்கியதோர் நிலவினிலே பாட்டு அவளுக்குள் ஒரு இனிய உணர்வை ஏற்படுத்தியது உண்மை.





மறுநாள் வந்த பாஸ்கரனிடம் அது பற்றி புலம்பினாள்.


“பாஸ்கர்..அந்த அசோக் என்னை ரொம்ப வற்புறுத்றான். எவ்வளவு சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டேங்கறான். எனக்கந்த தகுதி இல்லேன்னு சொல்லிட்டேன். அவனுக்கு கோபம்.”


பாஸ்கர் அவள் கொடுத்த காபியை குடித்தபடி சொன்னான்.


“உன் முடிவை சொல்லிட்டே இல்லே. விடு. இதை பற்றி நீ உன்னை குழப்பிக்காதே. பொண்ணுன்னா பலரும் ப்ரோபோஸ் பண்ணத் தான் செய்வாங்க. சீக்கிரமே புரிஞ்சுப்பார். சைந்தவி...புத்தக திருவிழா நடக்கிறது. எங்க ஸ்டால் புத்தகங்கள் அங்கு வரும். நீ திருவிழாவுக்கு வருவியா?”


“கண்டிப்பா. இந்த முறை வெளிவந்த சிறந்த நாவல் எது உங்க ஸ்டாலில்.? எனக்கும் படிக்க பிடிக்கும்.”


“சித்திரசேனை அவர்கள் எழுதிய “நிலாக் கால நினைவுகள்” தான் ஹை லைட். அவங்க ரொம்ப நல்ல எழுதுறாங்க..”


புத்தகங்களைப் பற்றி, அதன் ஆசிரியர்கள பற்றி, இலக்கியம் கவிதை என்று பேசிக் கொண்டே போனதில் பொழுது போனதே தெரியவில்லை அவர்களுக்கு.


“அண்ணா...உங்க கல்யாணம் எப்ப?” என்று சீண்டினாள் சைந்தவி.


“எனக்கா? மாலையோடு ஆயிரம் பெண்கள் வரிசையில் நிக்றாங்க. யாரை தெரிந்தேடுப்பதுன்னு தான் தெரியலை. போ சைந்தவி. என் பொழப்பை நடத்துவதே பெரிய பாடு. இதில் இன்னொரு துணையா? எப்பவும் கட்டை பிரமச்சாரி தான்..” என்றான் சிரித்தபடி.


“இதில் ஒன்னும் ஹாஸ்யம் இல்லை அண்ணா. காலா காலத்தில் ஒரு துனையை தேடிக்கோங்க. நான் வேணா உங்களுக்கு பொண்ணு பார்க்கட்டுமா? நல்ல சூப்பரான பொண்ணு பார்த்து எங்க அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.


“ஆகா மங்கள மேளம் கொட்டி முழங்க மணமகள் வந்தாள் தங்கத் தேரிலே


ஆகா மல்லிகை பூவினும் மெல்லிய மாது மயங்கி விட்டாளே உன் பேரிலே..கல்யாண ஊர்வலம் உல்லாசம் ஆயிரம்..”


சைந்தவி பாட ஆரம்பித்ததும் பாஸ்கர் விழுந்து விழுந்து சிரித்தான்.


அவன் சிரித்ததில் புரை ஏறிக் கொண்டது. சைந்தவி அவன் தலையை தட்டிவிட்டாள். ஜக்கில் இருந்த தண்ணீரை கப்பில் ஊற்றி கொடுத்தாள். அவன் தலையை தட்டும் போது அருகில் நிற்கவேண்டியதாகிவிட்டது. அந்த நேரம் பார்த்து அசோக் வந்து நின்றான். மணி இரவு பத்து. உள்ளே வந்தவன்


“இரவு பத்து மணிக்கு தனியா இருக்கும் பொண்ணு வீட்டில் உனக்கு என்னடா வேலை? என்ன சிரிப்பு? அக்கம் பக்கம் என்ன நினைக்க மாட்டாங்க? உன்னால் அந்தப் பெண்ணுக்கு கெட்ட பெயர் வரும். அறிவில்லை உனக்கு? கொஞ்சம் கூட இங்கிதம் தெரியலை..”


பாஸ்கர் எழுந்து கொண்டான். உண்மை தான் இரவு பத்து மணி ஆகிவிட்டது தெரியாமல் அரட்டை அடித்துக் கொண்டு இருப்பது சைந்தவிக்கு நல்லதில்லை. அவள் தனியாக இருக்கிறாள், யாரும் பெரியவர்கள் இல்லை என்பதை எனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு விட்டேனா? மனதில் ஏற்பட்ட குற்ற உணர்வுடன் அவன் ‘


“ஸாரி சார்...பேச்சு வாக்கில் டைம் மறந்துவிட்டது. தப்பு தான்.. எந்த தப்பானா நோக்கமும் இல்லை. பட்...சைந்தவிக்கு இது நல்லதில்லை. எனக்கும் புரியுது. இனிமே அப்படி நடக்காது. ஸாரி சைந்தவி..” அவன் சொல்லிவிட்டு வேகமாக சென்றுவிட்டான். சைந்தவி வாயடைத்து நின்றாள்.


“நீ அவனிடம் இவ்வளவு நெருக்கமாக பழகுவது எனக்குப் பிடிக்கலை சைந்தவி. உன்னை கண்டிக்க பெரியவர்கள் யாரும் வீட்டில் இல்லை. இனிமே இப்படி ராத்திரி நேரத்தில் யாருடனும் கெக்கே பிக்கேன்னு பேசிட்டு நிக்காதே. புரியுதா? அந்த பரதேசியின் நட்பை விட்டுவிடு. நான் வரேன்.”


அதிகாரமான தொனியில் கடுமையாகப் பேசிவிட்டு அசோக் சென்றுவிட்டான். சைந்தவிக்கு கோபம் வந்தது. இவன் யார் நம்மை இப்படி ஆட்டுவிக்க? இரவு இவ்வளவு நேரம் பாஸ்கர் அண்ணாவோடு பேசியது தப்பு என்றால் இவன் மட்டும் இரவு நேரத்தில் திடும் என்று வந்து நிற்கலாமா? காதலிக்கிறானாம்...அடக்கி வைக்க ஆசைப்படுகிறான் என்பது தான் உண்மையோ? காதல்னா என்னன்னு தெரியாம காதல் பாட்டுப் பாடி காதலிக்கிறேன்னு சொல்றானே.





அன்று இரவு சைந்தவி படுக்கையில் படுத்து அழுதாள். அம்மா அப்பா ஏன் இருவரும் எனக்கு இல்லாமல் போகணும்? அவளுக்கு பாதுகாப்பு யார்? தங்கையாவது உயிருடன் இருந்திருக்கலாம். தன்னிரக்கம் கூடாதுன்னு அவள் எவ்வளவோ கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாலும் அவளையும் அறியாமல் இன்று சுயபச்சாதபத்தால் ஏங்கி அழதாள். தானே தன்னை தேற்றிக் கொண்டு அவள் உறங்க ஆரம்பித்த சமயம் கிழக்கு வெளுக்க ஆரம்பித்துவிட்டது.





கடையில் அவளுக்கு அன்று ஒன்றும் ஓடவில்லை. வாடிக்கயாளர்கள் சொல்வதை அவள் காதில் வாங்காமல் நேற்றைய சம்பவத்தையே நினைத்துக் கொண்டிருக்க, அவர்கள் அவள் சரியாக கவனிக்கவில்லை என்று மனேஜரிடம் புகார் சொன்னார்கள்.


“ஏன்மா..ஒழுங்கா வேலையை பார்க்கறதானா பாரு இல்லை வேலையை விட்டு தூக்கிடுவேன். இங்கே வந்து கனா கண்டுட்டு இருக்கியா? போ..போ...இனிமே உன்னைப் பற்றி புகார் வரக் கூடாது.”


“ஸாரி சார்...ஏதோ தெரியாம..” முணுமுணுத்து விட்டு அகன்றாள். அவ்வளவு பேர் முன்னிலையிலும் திட்டியது அவளுக்கு அவமானமாக இருந்தது. செல்லமாக வளர்ந்து, சுடு சொல்லே கேட்டறியாத அவளுக்கு இந்த நிலை அதிகம் தான். ஒரு பக்கம் அசோக்கின் அதிகாரம். இன்னொரு பக்கம் தனிமை ஆதரவின்மை. இதற்கிடையில் பாஸ்கர் அண்ணாவின் அன்பு. அது ஒன்று தான்


அவளுக்கு ஆறுதலான விஷயமாக இருந்தது.



வீட்டுக்கு வந்தாள். வேலை முடிந்து வர பத்தாகிவிட்டது. அவள் காலடியில் ஒரு கவர் இடறியது. இது எப்படி வந்தது? ஒ..யாரோ இதை கதவின் இடுக்கு வழியாக தள்ளிவிட்டிருக்க வேண்டும். என்ன கவர் இது? அவசரமாக பிரித்துப் பார்த்தாள். இரெண்டே வரி தான். அவள் ஈரக் குலையே நடுங்கியது. அப்படியே தரையில் சரிந்து உட்கார்ந்துவிட்டாள். எல்லாமே இருட்டாக தெரிந்தது.
 
Status
Not open for further replies.
Top