கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

இரண்டாம் நிலவு ! - 1

இரண்டாம் நிலவு !

அத்தியாயம் - 1

"அப்பா.... எழுந்திரிங்க.... டைமாச்சு.... பார்க்குக்கு போகனும்.... " என்ற சினாமிகாவின் குரல் கேட்டு கண் விழித்தான் சித்தார்த்.

"குட்மார்னிங் மை டியர்... பேபி டால்... " என்றவன் அவளை தன்னோடு நெஞ்சில் சாய்த்துக்கொண்டு மீண்டும் தன் உறக்கத்தை தொடர முயல.....

"அப்பா... என்னை பார்க்குக்கு கூட்டிக்கிட்டு போங்க... இல்லன்னா நானே போயிடுவேன். அப்புறம் தனியா ஏன் போனன்னு... என்னை திட்டக்கூடாது. " என்று சிறிய மிரட்டல் விடுக்க.

"இன்னிக்கு ஒருநாள் தூங்கிக்கறேன் டாலி.. அப்பாவுக்கு ரொம்ப டயர்டா இருக்கு... நேத்து லேட் நைட் வரைக்கும் வொர்க் இருந்துச்சுடா... பிளீஸ்.. " என்று கெஞ்சினான்.

"நோ வே... லேட் நைட் ஏன் வேலை பார்க்கனும். யூ ஆர் டூ... பேட்... நீங்க உங்க பிராமிஸை காப்பாத்த மாட்டேங்கறீங்க. எப்ப கேட்டாலும்.... வேலை... வேலை.. ன்னு சொல்றீங்க. பாட்டியும் கை வலிக்குது கால் வலிக்குதுன்னு சொல்றாங்க... என்னோட விளையாட மாட்டேங்கறாங்க.... போங்க நீங்க எல்லாம்... வேஸ்ட். I hate both of you. " என்று காட்டு கத்து கத்திவிட்டு தன்னறைக்கு சென்று கதவை படார்ரென அறைந்து சாத்தினாள்.

"ம்ச்.... இவளோட தினமும் போராட முடியல. " என்ற சலிப்புடன் எழுந்தான் சித்தார்த்.
குளியலறை சென்று முகம் கழுவி வந்தான். கண்ணாடியில் தன் முகம் காண... எதிர் சுவற்றில் புகைப்படமாய் தொங்கிக் கொண்டிருந்த அவன் மனைவியின் பிம்பம் கண்ணாடியில் தெரிந்தது.

"உனக்கென்னன்னு நீ பாட்டுக்கு போயிட்டியே.... நியாயமா லல்லி... உன்னை விட இவளுக்கு அதிக கோவம் வருது. என்னால சமாளிக்க முடியல.... தனியா வெளிய விடவும் பயமா இருக்கு. சின்ன சின்ன குழந்தைகளை கூட விட்டு வைக்க மாட்டேங்கறாங்க... ஏழு வயசு குழந்தைக்கு எப்படி பதினெழு வயசு பொண்ணுக்கு தெரிய வேண்டிய செய்திகளை சொல்றதுன்னு எனக்கு புரியல.... பயமா இருக்கு லல்லி... ரொம்ப பயமா இருக்கு. அம்மாவாலையும் முடியல.... அவங்க ரெஸ்ட் எடுக்க வேண்டிய வயசுல..... இப்படி எங்களுக்கு வடிச்சுப்போட்டுக்கிட்டு இருக்காங்க. ஏன் டி என்னை இப்படி தனியா விட்டுட்டு போனே.... காதலிக்கும் போது... என்னவெல்லாம் பேசினே... நான் சாகும் வரை... நீ என் நிழலா இருப்பேன்னு சொன்னியேடி.... இப்படி.... " என்று அவன் மனம் கதற... கண்கள் நீரை வடித்தது.

"சித்து... டாலி... கோவமா போய் கதவை சாத்திக்கிட்டு திறக்க மாட்டேங்கறா.... வந்து சமாதானம் செய் கண்ணா... " என்று பயந்த படியே வந்து கூறினார் சித்தார்த்தின் தாய் நிர்மலா.

"வரேன் அம்மா... " என்றபடியே டாலியின் ( செல்ல பெயர் ) அறை நோக்கி போனான் சித்து.

"டாலி... கதவை திறடா. அப்பா ரெடி. நாம கிளம்பலாம் வா... " என்றபடியே கதவை தட்ட...

"ஒண்ணும் வேணாம். நீங்க உங்க வேலையை பாருங்க. என்னை ஹாஸ்டலில் சேர்த்திடுங்க... நான் தனியாவே இருந்துக்கறேன். " என்று அழுத படியே பேசினாள் சினாமிகா.

"அப்படி எல்லாம் பேசாதே பட்டு.... அப்பா வாழ்றதே உனக்காக தானே... என் செல்லம் இல்ல... வாடா... ஏதோ.. ஒருநாள் அலுப்பில் தூங்கிட்டேன்... அதுக்கு போய் அப்பாவை விட்டுட்டு போறேன்னு சொல்றது நியாயமா சொல்லு.... " என்று கெஞ்சாத குறையாக பேசினான் சித்து.

"அப்போ... ஏன் எப்ப பார்த்தாலும் என்னை கோவப்பட வைக்கறீங்க.... காலையில் கொஞ்ச நேரம் தான் என்னோட இருக்கீங்க... அதுக்கு அப்புறம் நைட் கூட நான் தூங்கினதுக்கு அப்புறம் தான் வரீங்க... இதுக்கு நான் ஏன் இங்க இருக்கனும்... ஹாஸ்டலில் இருந்தா கூட... என் ஃபிரன்ஸோட ஜாலியா இருப்பேன். இந்த பாட்டியும் என்னோட விளையாட வர மாட்டேங்கறாங்க... நீங்க... தனியா எங்கையும் போய் விளையாட கூடாதுன்னு சொல்றீங்க... நான் தனியா என்ன தான் பண்ணறதாம். "

"நல்லா பேசற டாலி... ஆனா அப்பாவோட நிலமையை மட்டும் புரிஞ்சிக்க மாட்டேங்கறே.... இப்போ நீ கோவத்தை விட்டுட்டு வரலைன்னா... நஷ்டம் உனக்கு தான். இன்னும் அரை மணிநேரத்தில் நான் ஆபீஸ் கிளம்பற டைம் வந்திடும்.... நான் கிளம்பிடுவேன். " என்றவன் குரலில் சிறிய எச்சரிக்கை தெரிய.. எங்கே தனக்கு கிடைக்கும் சிறிய நேரமும் இன்று கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில்.... சட்டென கதவை திறந்து வெளியே வந்தாள் சினாமிகா.
அவள் முகம் வாடி இருக்க... தன் முகத்தில் புன்னகையுடன் அவளை தூக்கினான் சித்தார்த்.

"அப்ப்பா... கொஞ்ச நேரத்தில் எத்தனை கோபம் வருது என் செல்லத்துக்கு... முகம் பாரு.. எப்படி சிவந்து போச்சு... " என்றபடியே அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

"ம்ஹும்... எல்லாம் உங்களால தான்... " என்றவள் முகத்தை வெட்ட.. அந்த அழகில் மயங்கிய சித்தார்த்... " டாலி குட்டி பால் குடிச்சாச்சா இல்லையா ? " என்று கேட்டான்.

"குடிச்சாச்சு... குடிச்சாச்சு... பார்க்குக்கு போகலாம்... டைமாகுது. " என்றாள் பட்டும் படாமலும்.

"ஓகே... " என்றபடியே அவளை அழைத்துக்கொண்டு அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும்.. சிறுவர் விளையாட்டு மைதானத்திற்கு சென்றான் சித்தார்த்.

"ஹாய் சித்து.. " என்று வரவேற்றது சங்கரின் குரல்.

"ஹாய் டா.. என்ன ஜாக்கிங்கா... ? " என்ற கேள்வியுடன் அவனை நெருங்கினான் சித்தார்த்.

"ம்.. ஆமாம். டாலி பேபி குட்மார்னிங்.. " என்றான் சினாமிகாவை பார்த்து.

"கால் மீ சினாமிகா... டாலின்னு என் அப்பா மட்டும் தான் கூப்பிடனும். " என்று முறைப்புடன் கூறியவள்...
"அப்பா நான் ஊஞ்சல் ஆடப்போறேன். " என்றபடியே ஊஞ்சலை நோக்கிப் போனாள்.

"அப்படியே அவ அம்மாவின் குணம். இல்லடா சித்து... " என்று சங்கர் கேட்க. ஆமாம் என்று தலையை மட்டும் அசைத்துவிட்டு... அங்கே போடப்பட்டிருந்த சிமின்ட் பெஞ்சில் அமர்ந்தான் சித்தார்த்.

அவனருகே அமர்ந்தான் சங்கர். "நான் சொன்னதை பத்தி யோசிச்சியா சித்து. " என்றவன் கேட்க... சட்டென திருப்பிய சித்துவின் கண்கள் கோவை பழம் போல சிவந்து தன் கோபத்தை காட்டியது.

"ஏன் டா கோவப்படறே... கொஞ்சம் பிராக்கிடிக்கலா யோசிச்சி பாரேன். சரியா வரும். நீயும் ஹயர் லெவல் போகப்போக... சினாமிகாவிற்காக செலவிடற நேரம் குறையுது... இதுக்கு மேல தான் அவளோட முக்கியமான காலம் வரும் சித்து. இந்த நேரத்தில் அவளுக்கு யாரோட சப்போட்டாவது கட்டாயம் தேவை. உன் அம்மா இப்பவே முடியாம இருக்காங்க.... அவங்களால இதுக்கு மேலையும் கஷ்டப்பட முடியாது. வேலைக்காரி வெச்ச... செட்டாகலே... சினாமிகாவை கொஞ்ச நாள் ஹாஸ்டலில் விட்ட... அதுவும் செட்டாகலே.... நீ இல்லாம அவளும்... அவ இல்லாம நீயும் இருக்க முடியாம... தவிச்சிப்போயிட்டீங்க. அதுக்கு தான் சொல்றேன். புரிஞ்சிக்கோ.... " என்று அக்கறையுடன் கூறும் நண்பன் மேல் அதற்கு மேல் கோபத்தை கட்டுவது மூடத்தனம் என்று அமைதியானான்.
அவன் அமைதி சங்கரின் மனதில் வேதனையை விதைத்தது. "நான் சொல்றது ஒருநாள் உனக்கு புரியும் சித்து... ஆனா அப்போ காலம் கடந்திருக்கும்.... இதுதான் சரியான நேரம்... தயவுசெய்து தவறவிட்டுடாதே.... உனக்கு துணை தேவையில்லாம இருக்கலாம்... ஆனா உன் பொண்ணுக்கும் அம்மாவுக்கும் கட்டாயம் ஒரு துணை தேவை. யோசிச்சி சொல்லு. " என்றுவிட்டு சித்துவின் தோளில் தட்டிவிட்டு நகர்ந்தான் சங்கர்.
சித்து தன் நினைவில் மூழ்கினான். அவனை அறியாமல் கண்கள் கசிந்தது. அதை யாரும் அறியாமல் துடைத்தவன்... நிமிர்ந்து தன் மகளை நோக்க... அவளுடன் யாரோ பேசிக்கொண்டு இருப்பதை அறிந்து... வேகமாக அங்கே சென்றான்.

"ஹலோ யாரு நீங்க ? என் பொண்ணுக்கிட்ட உங்களுக்கு என்ன பேச்சு ? " என்றவன் கடுங்குரல் கேட்டு அங்கிருந்த அனைவருமே திரும்பி பார்த்தனர்.

எதிரே நின்றிருந்த நபரோ.... "சார் தப்பா எடுத்துக்காதீங்க... அதோ அது என் பையன்... அவன் ஸீ - ஸா விளையாட ஆசைப்பட்டான்... பேலன்ஸ் பண்ண நீ வரியான்னு கேட்க வந்தேன். அவ்வளவு தான். " என்றான் அவன் மென்னகையுடன்.
தன் தந்தையை யாரோ கடுமையாக பேசுவதை கேட்டு அங்கே வந்த அவரின் மகன்... "என்னாச்சுப்பா ? " என்று கேட்டு அவனை கட்டிக்கொள்ள.. அப்போதுதான் சித்தார்த்தின் மனம் தெளிவடைந்தது.

தன் மகன் முன் தனக்கு நடந்த அவமதிப்பை சட்டை செய்யாமல்.... "ஒண்ணுமில்ல ஹரி.. அங்கிளோட பர்மிஸன் இல்லாம பாப்பா கிட்ட பேசினேன் இல்லையா.. அதுதான் அங்கிளுக்கு லேசா கோவம். இப்போ உன்னோட யாராவது பேசினா அம்மா கோவப்படுவாங்க இல்ல.. அந்த மாதிரி. ஸோ.. யூ டோன்ட் வொரி... போய் விளையாடு. " என்று அனுப்பி வைத்தவன் சித்தார்த்தை பார்த்து புன்னகையுடன்... "ஸாரி.. சார். " என்றபடியே நகர்ந்தான்.

சற்று நேரத்தில் தன் படபடப்பால் ஒருவரை அவமானப்படுத்திவிட்டதை நினைத்து வருந்தினான் சித்தார்த். ஆனாலும் காலம் அப்படி தானே மாறிவிட்டது. பிள்ளைகளிடம் யார் பேசினாலும்.. பெற்றோரின் வயிற்றில் புளியை கரைக்கிறது. சமுதாய மாற்றத்தால்... மழலைகள் தம் மழலையின் இனிமைகளை இழந்துக்கொண்டு இருப்பது.... கொடுமையிலும் கொடுமை.

"டாலி விளையாடினது போதும்... வா போகலாம். " என்ற சித்துவின் கரங்களை பற்றிக்கொண்டாள் சினாமிகா.

"அப்பா... எனக்கு லாலிப்பாப் வேணும். " என்றாள்.
மணியை பார்த்தான்... இன்னும் அரைமணியில் அவன் அலுவலகத்தில் இருக்க வேண்டும். "டாலி.. அப்பா சாயந்தரம் வரும்போது வாங்கிக்கிட்டு வரேன். இப்போ நேரமில்லை. " என்றவனை நிமிர்ந்து பார்த்து ஒருமுறை முறைத்தவள்....

"சாயந்திரம்ன்னு சொல்லாதீங்க... நடு இராத்திரின்னு சொல்லுங்க. ஒரு லாலிப்பாப்புக்காக நான் நடு இராத்திரி வரை காத்திருக்கனுமா ?. " என்று பொரிந்துவிட்டு.... ஓட்டமாக தங்கள் குடியிருப்பு அமைந்திருந்த பகுதி ( பிளாக் ) நோக்கி ஓடினாள் சினாமிகா.

"இவளுக்கு சினாமிகான்னு பேரு வெச்சேன்... கோவமே படக்கூடாதுன்னு.. ஆனா இவ... ஆனா ஊனா கோவப்படறா.... எல்லாம் ஜெனிடிக்கல் டிபஃக்ட்.... " என்று முணுமுணுத்தவன்.... அருகே இருந்த கடை நோக்கி எட்டு வைத்தான். கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வருவதற்குள்.... ஆயிரம் முறை அவள் பாதுகாப்பாக இல்லம் சென்றிருப்பாளா... ? என்ற பயம் அவனை பிடுங்கித் திண்றது.

இல்லம் வந்து அவள் கோபத்தோடு சோபாவில் அமர்ந்து டீ.வி. சேனலை மாற்றி மாற்றி தன் ஏமாற்றத்தை காட்டிக்கொண்டிருந்தை பார்த்து... ஒருபுறம் நிம்மதியும்... மறுபுறம் கோபமும் எழுந்தது.

"எதுக்கு உனக்கு இத்தனை கோபம் வருது டாலி... பப்ளிக் பிளேஸில் கூட இப்படி தான் பிஹேவ் பண்ணுவியா ? " என்று கேட்க.

"ஒரு லாலிப்பாப்புக்காக நைட் வரை காத்திருக்க என்னால முடியாது.... " பதிலுக்கு அவளும் கத்த...
நிர்மலா வந்து... "சித்து கத்தாதப்பா... சின்ன பிள்ள.. அதுவும் தாயில்லா பிள்ள.... நீயும் அதட்டி பேசினா.... அது.... மனசு விட்டுப்போயிடும்... " என்றிட.

"ஆமாம் எப்ப பார்த்தாலும் இதை சொல்லியே என் வாயை அடைங்க. இவளை எதுவும் சொல்லாதீங்க. வீட்டுல தான் அடாவடி பண்ணறான்னு விட்டா வெளிய போனாலும் காட்டு கத்து கத்தறா... அதுவும் இல்லாம என் கையை உதரிட்டு... ஓடி வந்துட்டா... ஏதாவது ஆனா என்ன பண்ணறது. அவ தான் பொறுப்பே இல்லாம விட்டுட்டு போயிட்டா.... இவளாவது அதை உணர்ந்து.. அடக்கமா இருக்கலாம் இல்ல..... "

"அம்மாவை ஒழுங்கா பார்த்துக்காம நீங்க தான் தப்பு பண்ணிட்டீங்க... நீங்க ஒழுங்கா பார்த்துக்கிட்டு இருந்திருந்தா.... எனக்கும் அம்மா இருந்திருப்பாங்க. " என்று சினாமிகா கூற.... உடைந்துவிட்டான் சித்தார்த்.
லல்லியின் பெற்றோர் விழா ஒன்றில் இப்படி கூறியதை கேட்டு.... சினாமிகாவும் அதை நம்பத்தொடங்கிவிட்டதை உணர்ந்து நொந்துப் போனான். அவன் கண்கள் கலங்கி அறை உள்ளே போக.... சினாமிகா முகம் வாடிப்போனது.

"ஐய்யோ.. ஏதோ தப்பா சொல்லிட்டோம் போலையே.... அப்பா அழுதுக்கிட்டே போறாறே.... " என்று தோன்ற... எழுந்து சித்தார்த்தின் அறை நோக்கி ஓடினாள்.

"அப்பா.... அப்பா... ஸாரிப்பா... தெரியாம சொல்லிட்டேன். தாத்தா பாட்டி சொன்னாங்க... அதை நான் சொன்னது தப்புன்னா.... ஸாரிப்பா.... வெரி வெரி ஸாரிப்பா.... பிளீஸ்ப்பா... அழாதீங்க... கதவை திறங்கப்பா... " என்று வாய் ஓயாமல் கூறிய படியே கதவை தடிக்கொண்டு இருந்தாள் சினாமிகா.
அங்கே சித்தார்த்தோ.... "நீ இப்படி சொல்லுவேன்னு நான் எதிர்பார்க்கல டாலி.... என் காதலோட அடையாளம் நீ... நீயே இப்படி சொல்லிட்டையே.... யாரு வேணா எது வேணா சொல்லலாம்... ஆனா நீ... இப்படி சொல்லி இருக்க கூடாது. " என்று அழுதபடியே ஸ்சவரில் நீரை திறந்துவிட்டு நின்றான்.


நிலா வரும்......
 

sankariappan

Moderator
Staff member
டாலியின் கோபம் சித்தார்த்தின் பரிதவிப்பு எல்லாம் நல்ல சொல்லி அசத்திட்டீங்க.
 
Top