கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

இரண்டாம் நிலவு ! - 2

இரண்டாம் நிலவு !

அத்தியாயம் - 2


வெளியே நின்று அழுதுக்கொண்டிருந்த சினாமிகாவை அணைத்து சமாதானம் செய்ய ஆரம்பித்தார் நிர்மலா.

"டாலி... அழாதடா. " என்றபடியே அவளை தன்னோடு அணைத்து முதுகை தடவிக் கொடுத்தார்.

"பாட்டி.. அப்பா ஏன் அழுதாரு. நான் என்ன தப்பா சொன்னேன். அன்னிக்கு பங்ஷனில் பாட்டியும் தாத்தாவும் தான் அப்படி சொன்னாங்க. அப்பா தான் அம்மாவை சரியா பாத்துக்கலன்னு சொல்லி அழுதாங்க. பார்க்கவே பாவமா இருந்தது. ஆனா இப்போ அதை சொன்னா அப்பாவும் அழறாங்க. யாரு மேல தப்பு பாட்டி... எனக்கு அம்மா இல்லாம போனதுக்கு யாரு காரணம். " என்றாள் அழுதபடியே.

"விதிதான் காரணம் டாலி. வேற யாரையும் குறை சொல்ல முடியாது. உன் அப்பாவுக்கு உன் அம்மா தான் உசுரு... அவன் இப்போ வாழ்றதே... உனக்காக தான். அப்படி இருக்கும் போது நீயே இப்படி பேசினா... அவனால எப்படி தாங்க முடியும். "

"அப்போ அந்த தாத்தா பாட்டி badடா... "

"அப்படியும் சொல்லிட முடியாது. பாவம் அவங்க பொண்ணு இப்போ இல்லை... உன்னை பார்த்துக்க அவங்க மருமகவிடலே... உன் அப்பாவும் என் பொண்ணை நான் பாத்துக்கறேன்னு சொல்லிட்டான். அங்க போறதையே நிறுத்திட்டான். உன்னை எப்பவாவது ஏதாவது விஷேசத்தில் பார்த்தா தான் உண்டுங்கற நிலை. அந்த ஆதங்கம் வேற மாதிரி வார்த்தையா வந்துடுது... என்ன பண்ண... "

"பாட்டி... எனக்கு புரியல... "

"நீ இன்னும் கொஞ்சம் வளர்ந்தா... தானாவே எல்லாம் புரியும் டாலி. அதுவரை யாரோட வார்த்தைகளையும் மனசில் ஏத்திக்காதே. அதை கேட்டுக்கிட்டு வந்து உன் அப்பாவை கஷ்டப்படுத்தாதே... அவன் பாவம். " என்று அறிவுருத்தினார் நிர்மலா.

அப்போது.... குளித்து தயாராகி அலுவலகம் செல்ல வெளியே வந்தான் சித்தார்த். அவனை கண்டதும் பாய்ந்து ஓடினாள் சினாமிகா. அவன் கால்களை கட்டிக்கொண்டு... "ஸாரிப்பா.. இனிமே இப்படி பேச மாட்டேன். " என்றாள் கண்களில் நீருடன்.

அவள் கலங்கிய கண்களை கண்டதும் அவன் நெஞ்சம் இளகியது. அவளை வாரி எடுத்து.... தன் மார்போடு அணைத்துக் கொண்டான். "இங்க பாரு டாலி.... யாரு என்னை பத்தி என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை.... ஆனா நீ என்னை தப்பா நினைக்காதே. அப்பா நல்லா தான் அம்மாவை பார்த்துக்கிட்டேன்.... ஆனா... " என்றவன் நிறுத்த...

"அப்பா... " என்றபடியே அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். "எனக்கு புரிஞ்சிடுச்சு ப்பா... பாட்டி புரிய வெச்சிட்டாங்க. இனிமே இப்படி பேச மாட்டேன். பிராமிஸ். நீங்க அழாதீங்க.... ஐ லவ் யூ ப்பா... " என்றாள்.
அவள் மனம் மாறி இருப்பதை உணர்ந்து சித்துவின் மனம் நிம்மதி அடைந்தது. அதற்குள் அவன் கைப்பேசி அடிக்க எடுத்துப்பார்த்தான். அலுவலகத்தில் உடன் பணிபுரியும் நண்பன் அழைத்திருக்க.... டாலியை கீழே இறக்கிவிட்டு.... " அப்பாவுக்கு டைமாகுது டாலி... ஈவினிங் பேசலாம். நீ அழாம சமத்தா இரு. பாட்டியை ரொம்ப தொல்லை பண்ணாதே. " என்று கூறி அவள் கன்னத்தில் முத்தமிட்டு... அவள் கேட்டிருந்த லாலி பப்பை நீட்டினான்.
"ஹாய்... வாங்கிட்டு வந்துட்டீங்களா அப்பா... " என்று கண்கள் விரிய கேட்டவள்... அவற்றை ஆசையாய் எடுத்துக்கொண்டாள். அவள் மகிழ்ச்சியில் அவன் மனமும் நிறைய... "ஓகே டாலி பேபி... பை.... " என்றவன் எழ முயல.. அவன் சட்டையை தன் பிஞ்சு விரல்களால் பிடித்து தன்னருகே இழுத்தாள் சினாமிகா.

"டாலி... டைமாகுது டா.. " என்றான் கெஞ்சலாக. அதை சற்றும் பொருட்படுத்தாதவள்... அவன் கன்னத்தில் தன் மகிழ்ச்சியின் சின்னமாக ஒற்றை முத்தத்தை பதித்தாள்.

"ஐ லவ் யூ ப்பா... " என்றிட.
மெல்லிய புன்னகையுடன்.. அவளிடம் இருந்து விடைப்பெற்றான் சித்தார்த். வாசல்வரை சென்று அவன் மின்தூக்கியில் மறையும் வரை பார்த்துக்கொண்டு இருந்தாள் டாலி. அவனோ கைப்பேசியில் பேசிய படியே சென்றதால் இவள் வாயில் வரை வந்து... பார்த்து நின்றதை கவனிக்க தவறினான்.

"அப்பாவுக்கு என் மேல இன்னும் கோவம் போகல பாட்டி... " என்று சோர்ந்த குரலில் சொன்னபடியே உள்ளே வந்தாள்.

"அப்படி எல்லாம் இல்லடா செல்லம்... அவன் வேலையில் மூழ்கிட்டான்... அதுதான் கவனிக்காம போறான். நீ எதையும் யோசிச்சி வருத்தப்படாதே... பாட்டி உனக்கு தோசை வார்த்து எடுத்து வரேன்... சாப்பிட்டு டீ.வி. பாரு. " என்று சமாதானமாக பேசிவிட்டு நகர்ந்தார் நிர்மலா.

அதன்பின் டீ.வி.யே கதி என்று அமர்ந்திருந்தாள் சினாமிகா. நிர்மலா தன் அன்றாட பணிகளை மெதுவாக செய்துக்கொண்டு இருந்தார். ஆளுக்கு ஒருபுறம்... தனித்தனி உலகம்... என்று கடந்தது. மாலை நேரத்தில் சங்கரின் மனைவியும் மகனும் வருவர்.. அவர்களோடு சிறிது நேரம் செலவிடுவர்... சங்கரின் மனைவி சினாமிகாவை பார்க்கு அழைப்பாள்.. ஆனால் அவள் செல்வதில்லை. அவளுக்கு சங்கரின் மனைவி யசோதா.. அவர் மகனிடம் மட்டும் அதிக அக்கறை காட்டுவதாக தோன்றும். அதனால் அவளோடு செல்ல மாட்டாள். வீட்டிலேயே சங்கரின் மகன் பிரியதர்ஷனுடன் விளையாடுவாள். ஒரு மணிநேரம் ஓடினால்... அவர்களும் அவர்கள் கூட்டிற்கு சென்றுவிடுவர்... மீண்டும் தனிமை என்னும் வெறுமை சினாமிகாவை சூழும். பள்ளி வேறு விடுமுறை... அதனால் பொழுது போவது எப்பதே பெரிய பாடாக இருந்தது.
பெரியவர்கள் மட்டும் அல்ல குழந்தைகளையும் இந்த ஸ்டெர்ஸ் ( stress ) என்னும் அரக்கன் பிடித்துக்கொள்கிறான். தனிமையும் வெறுமையும் அவர்களுக்கும் உண்டு. அவர்கள் தங்கள் மன உளைச்சலை காட்டும் விதமும் மாறுபடும். அதிகமாக குறும்பு செய்கிறார்கள் என்றால்... நம் கவனத்தை அவர்கள் மீது திருப்ப செய்கிறார்கள் என்று அர்த்தம். அதை செய்யாதே என்றால் அதை தான் செய்வர்... அதுவும் அதீத மன உளைச்சல் காரணமாக தான். அடம்பிடிப்பது.. தொடர்ச்சியாக அழுவது.. இப்படி தொடர்ச்சியாக ஏதாவது செய்துக்கொண்டே இருந்தால்.... நாம அவர்களோடு நேரம் செலவளித்தே ஆகவேண்டும். விளையாடலாம்... அப்படி இல்லை என்றாலும்... சற்றுநேரம் மடியில் அமர்த்தி... பேச்சுக்கொடுக்கலாம். நம் வேலை பளு மட்டுமே பெரிது என்று கருதாமல்... அவர்களோடு உரையாடுவோம்.

அன்று இரவு... நேரம் கழித்தே வந்தான் சித்தார்த். கதவை திறந்தார் நிர்மலா. உள்ளே நுழைந்தவன் பார்வையில் வாடிய மலராய் தெரிந்தாள் சோபாவில் அமர்ந்திருந்த சினாமிகா. அவள் இன்னும் உறங்காமல் இருப்பதை கண்டதும்.... பதறியபடியே அவளை நோக்கி ஓடினான் சித்தார்த்.

"டாலி.. நீ இன்னும் தூக்கல. மணி என்ன ஆகுது பார்த்தியா ? " என்று கேட்க.
"டாலி இன்னும் சாப்பிடல சித்து. " என்றார் நிர்மலா வருத்தமாக.

"ஓய்.. ஏன் இன்னும் சாப்பிடல. "

"நீங்க இன்னும் கோவமா இருக்கீங்க.... அதுதான் இன்னிக்கு போன் கூட பண்ணலே... "

"ஓ... மை காட்.. நான் போன் பண்ணவே இல்லல்லே.... ஸாரி டா.... அப்பாவுக்கு மீட்டிங் இருந்தது... அந்த டென்ஷனில் மறந்துட்டேன். மத்தபடி டாலி பேபி மேல கோபம் எல்லாம் இல்லை... அப்பா போய் டாலி மேல கோவப்படுவேனா. ஐ லவ் மை டியர் ஸ்வீட் டாலி.... அப்படி இருக்கும் போது... எப்படி கோபம் வரும். " என்றான் மென்னகையுடன்.

அவள் ஏதும் கூறாமல் அவனையே பார்க்க... "அப்பா போய் ரெப்ரெஷ் செஞ்சிக்கிட்டு வரேன்... இரண்டு பேரும் சேர்ந்தே சாப்பிடலாம். " என்று கூறி நெற்றியோடு நெற்றி முட்டிவிட்டு... எழுந்து குளியலறை நோக்கி சென்றான் சித்தார்த்.

"ம்ச்... டாலி ஏதோ கேட்டதை பேசிட்டா... அதுக்கு அவளை அழ வெச்சிட்டோமே... பாவம் குழந்தை இப்படி வாடிப்போயிட்டாளே.... அம்மா சொன்ன மாதிரியே... நாம சின்னதா கோவப்பட்டாக்கூட அவ ரொம்ப ஹர்ட் ஆகிடறா.... இனி மேல ஜாக்கரதையா ஹேண்டில் பண்ணனும். " என்று நினைத்த படியே முகம் கழுவினான்.

வெளியே வந்தவன் அவளோடு அமர்ந்து இரவு சாப்பிட்டான். அவளுக்கு கதை கூறி உறங்க வைத்தான். ஏற்கனவே இரவு வெகுநேரம் கடந்திருந்ததால் அவளும் சற்று நேரத்திலேயே உறங்கிவிட்டாள். அவளை நன்றாக படுக்கவைத்துவிட்டு தன்னறை நோக்கி நடந்தவனை நிறுத்தினார் நிர்மலா.

"உன்கிட்ட கொஞ்சம் பேசனும் சித்து. " என்றார்.

"என் கல்யாண விசயத்தை தவிர வேற எது வேணா பேசுங்கம்மா.... நான் கேட்கறேன். " என்றான் சித்து உறுதியாக.

"அதை தவிர உன்கிட்ட பேச எனக்கு எதுவும் இல்லையேப்பா... '

"அம்மா... ஏன்ம்மா நீங்களும் இப்படி தொல்லை பண்றீங்க. பொண்டாட்டி இல்லாம வாழ முடியாதா ? ஏன் ? நீங்க வாழலே... அப்பா இல்லாம எத்தனை கஷ்டப்பட்டு என்னை வளர்த்தீங்க... அது என்ன ஆம்பளைங்க மட்டும் பொண்டாட்டி சொத்தா கல்யாணம் பண்ணிக்கறது... பொண்ணுங்களை மட்டும் அப்படியே இருன்னு சொல்றது... இது எந்த வகையில் நியாயம். நீங்க எல்லாம் தியாகியா வாழலாம்... நாங்க அப்படி வாழக்கூடாதா. ? எங்க காதல் அன்பு இதெல்லாம் புனிதம் இல்லையா ? " அவன் குரலில் அத்தனை கடுமை.

"பொண்ணோ பையனோ... இரண்டு பேருக்கும் துணை வேணும் சித்து. எங்க காலத்தில் நிறைய விதிமுறைகள்... இப்போ காலம் கொஞ்சம் கொஞ்சமா அந்த விதிமுறைகளை தளர்த்தி... மாற்றத்தை ஏத்துக்க தயாராகிட்டு இருக்கு. அதனால பொதுவா எதுவும் பேசாதே. நான் உன்னை பத்தின கவலையில் மட்டுமே இதை பேசல... டாலிக்கு அம்மாவோட அன்பும் பாதுகாப்பும் அக்கறையும் தேவை அதை புரிஞ்சிக்கோ. எங்க காலத்தில் சொந்த பந்தம் பக்கத்தில் இருந்தாங்க.... ஏதாவதுன்னா உதவிக்கு ஆள் இருக்கும். அது போக நம்பிக்கை நிறைந்த மனுசங்க எங்களை சுத்தி இருந்தாங்க... ஆனா இப்போ நிலமை அப்படியா இருக்கு... தெரிஞ்சவங்களே... துரோகம் பண்ணறாங்க. அப்படி இருக்கும் போது... எனக்கு அப்புறம் அவளை யாரு பார்த்துப்பா சொல்லு. நான் உன்னை வளர்த்தேன்.... ஆனா நான் மட்டுமே உன்னை வளர்த்துடலே.... அக்கம்பக்கம் இருந்தவங்க... உன் பாட்டி தாத்தா.. மாமா அத்தை சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மான்னு நம்மை சுத்தியும் தெரிஞ்சவங்க இருந்தாங்க. சொந்தத்தில் ஆயிரம் பிக்கல் பிடுங்கல் இருந்திருக்கலாம்... ஆனா புள்ளைகளை நம்பிக்கையா விட்டுட்டு போக முடிச்சிது. மூஞ்சை காட்டினாலும்.... பத்திரமா பாத்துக்கிட்டாங்க. உன் பொண்ணை யாரை நம்பி விட்டுட்டு போவே ? சொல்லு ? அதை சொன்னா.... நான் இனிமே உன் கல்யாணத்தை பத்தி பேசல.... " என்ற நிர்மலாவின் குரலும் சற்று ஓங்கியே ஒலித்தது.

இத்தனை ஆண்டுகளில் அவர் குரல் உயர்த்தி பேசியதை அவன் கண்டதே இல்லை... இப்போது சற்று விக்கித்து நின்றான். அவனிடம் மௌனம் நீடிக்க... "சித்து... தனிமையோட வெறுமை இப்போ உனக்கு புரியாது... நாளைக்கு டாலி வளர்ந்து கல்யாணமாகி போயிட்டா.... உன் வாழ்க்கையே சூன்யமா தெரியும். உன்னை வளர்க்கும் போது எனக்கு தெரியாத தனிமை இப்போ தெரியுது... உன் அப்பா இல்லையே... இருந்திருந்தா... என்னை கண்ணுக்குள்ள வெச்சி பார்த்திருப்பாறேன்னு..... நான் அழாத இரவே கிடையாது. அதுக்காக நீ என்னை நல்லா பாத்துக்கலேன்னு அர்த்தம் இல்லை... இது... ஒரு உணர்வு. அதை அனுபவிக்கறவங்களால மட்டுமே உணர முடியும். சில விசயங்கள் எல்லாம் நம்ம துணையோட மட்டும் தான் பகிர்ந்துக்க முடியும். இது இளமையில் தெரியாது... ஏன்னா... வேலை ... குழந்தை வளர்ப்புன்னு நகர்ந்திடும். எல்லா கடமையும் முடிஞ்சி... ஸ்ப்பான்னா உட்காரும் போது.... ஒரு வலி வரும்... அந்த வலியை நீ அனுபவிக்க வேண்டான்னு நான் ஆசைப்படறேன். நீ பையனா இருக்கறதால மட்டும் இதை சொல்லலே... நீ எனக்கு பொண்ணா இருந்திருந்தாலும் இதை தான் சொல்லுவேன். உடலுக்கு துணை தேவையில்லை.... ஆனா மனசுக்கு வேணும். கல்யாணங்கறதை உடல் சார்ந்த விசயமா பார்க்காம.... மனம் சார்ந்த விசயமா பார்த்தா... இது உனக்கு புரியும். " என்று நிறுத்தினார் நிர்மலா.

அவனிடம் பதில் இல்லை. சிந்தனையில் மூழ்கினான் ஆயிரம் கேள்விகள் அவனுள். நிர்மலா கூறியது ஒருபுறம் சரியாக தெரிந்தாலும்.... தன் காதலும்.. அதற்கு சாட்சியாக உள்ள மகளையும் விட்டுக்கொடுக்க அவன் மனம் முன் வரவில்லை. மீண்டும் புதிதாக ஒரு காதலை கொடுக்கவோ... பெறவோ அது தயாராக இல்லை. லல்லி விட்டுச்சென்ற இடத்தை நிரப்ப வேண்டி... யாருக்கோ அந்த வாய்ப்புக்கொடுக்க மறுக்கிறது மனம். அதுவும் நியாயம் தானே... காதலித்து மணம்புரிந்து கொண்டவன்... ஐந்தாண்டு காலம் தவமிருந்து பெற்றான் மகளை... மகள் பிறந்த நொடியில் உயிர் நீத்தாள் காதல் மனைவி. பிறந்த மகளை நினைத்து மகிழவும் முடியாமல்.... விட்டுச்சென்ற காதலியை நினைத்து அழவும் முடியாமல் அவன் பட்ட வேதனை... அவன் மனம் மட்டுமே அறியும். அதோ இதோ என்று ஆறு ஆண்டுகள் முழுதாக முடிந்துவிட்டது.... சினாமிகாவின் மூன்று வயதில் ஆரம்பித்த அவன் மறுமண பேச்சு இன்னும் முடிவுக்கு வராமல் இழுத்தடிக்கிறது.

கண்களில் நிறைந்த வலியோடு தன் தாயை நிமிர்ந்து பார்த்தான். கனிவோடு அவன் அருகே அமர்ந்தார் நிர்மலா. அவன் தலையை கோதிபடியே.... "பயப்படாதே சித்து... எல்லாம் நல்லதா நடக்கும்ன்னு நம்பு... நல்லதே நடக்கும். "

"அம்மா... டாலி.. இதை தப்பா புரிஞ்சிக்கிட்டா... வரும் பொண்ணுக்கும் அவளுக்கும் ஒத்துப்போகலன்னா ? நடுவில் நான் தான் தவிக்கனும். அதுவும் இல்லாம... லல்லி இருந்த இடத்தில் எப்படிம்மா... இன்னோரு பொண்ணை பார்ப்பேன். ? " என்று கேட்டபடியே அவர் மடியில் சாய்ந்தான் சித்தார்த்.

"சித்து... ஒரு விசயத்தை செய்யற வரை பயம் இருக்கும். அந்த பயம் இருந்தா தான் நாம சரியான முடிவை எடுக்க முடியும். அதனால பயம் நல்லது தான். நீ பயத்தோட இரு... நான் பொண்ணு தேட ஆரம்பிக்கறேன்... உன் பயத்தை தெளிப்படுத்தற மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சா... நீ கல்யாணம் பண்ணிக்கோ... இந்த பொண்ணை தான் நீ கட்டிக்கனும்ன்னு நான் கட்டாயப்படுத்த மாட்டேன். " என்றார்.

அவரின் மன அமைதிக்காக அப்போதைக்கு அதற்கு சம்மதித்தான். "சரிம்மா... பாருங்க. ஆனா எனக்கு பிடிக்கலைன்னா நீங்க கட்டாயப்படுத்த கூடாது. ஓகே வா.... " என்று கேட்டான்.

அவன் சூது பெற்றவருக்கு தெரியாத என்ன ? அவரும் புன்னகையுடன் அதற்கு சம்மதித்தான். "அம்மா.. எல்லாம் முடிவாகும் வரை டாலிக்கு எதுவும் தெரிய வேண்டாம். "

"சரிப்பா... நான் எதுவும் சொல்லலே... "

"சரிம்மா... நீங்க போய் தூங்குங்க. நேரமாகிடுச்சு... " என்றபடியே அவரை அனுப்பி வைத்தான். அவரும் அவன் சம்மதித்ததே போதும்... இனி எப்படியாவது அவன் வாழ்க்கை நலமாக அமைத்துக்கொடுத்தால் போதும்... தன் பயணத்தை முடித்து... இத்தனிமையின் கொடுமையில் இருந்து விடுப்பட்டு... தன் கணவரோடு சேர்ந்துவிடலாம் என்று நினைத்தபடியே டாலியுடன் உறங்கச் சென்றார். அவனும் பெருமூச்சை இழுத்துவிட்டு... அப்படியே கண்களை மூடினான்.


நிலா வரும்.......
 
Top