கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உனைத் தானே அழைத்தேனே! 12

Puvana Chandrasekaran

Moderator
Staff member
உனைத் தானே அழைத்தேனே!

அத்தியாயம் 12

முடிவெடுத்தவுடனேயே செயலில் இறங்கினான் விசுவநாத நாயக்கன்.
" ஒன்றே செய், நன்றே செய், நன்றும் இன்றே செய், இன்றும் இன்னே செய்" என்பது தமிழறிஞர் அருளிய மொழி அல்லவா?

இரண்டு மெய்க்காவல் வீரர்களை மட்டும் உடன் அழைத்துக் கொண்டு, எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், எளிமையான ஆடை, அணிகலன்களை அணிந்து கொண்டு விசுவநாதன் கிளம்பி விட்டான்.

வன மங்கை, பேரெழில் தோற்றத்துடன் இருகைகளை நீட்டி அவர்களை வரவேற்றாள். மேலே ஏற ஏற மரங்களின் அடர்த்தி கூடியிருந்ததால், கதிரவனின் கதிர்கள் உள்ளே நுழையமுடியாத இருண்ட கானகத்தில் அவர்கள் முன்னேறினார்கள்.

வானரங்கள் கனிகொடுத்து மந்திகளோடு கொஞ்சிக் கொண்டிருந்தன. மந்திகள் சிந்தும் கனிகளுக்காக வான்கவிகள் கெஞ்சிக் கொண்டிருந்தன. கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைத்துக் கொண்டிருக்க, சித்தர்கள் வந்து சித்துவிளையாட்டுகளைக் காட்டி மகிழ்வித்தனர்.

தேன் போன்று இனிமையான நீர் ஒழுகும் அருவி எழும்பி வானைத் தொட்டு வழிகிறது. அந்த ஈரத்தால் ஆயிரம் கரங்களைக் கொண்ட கதிரவனின் தேர்க்காலும், தேரை இழுக்கும் பரிகளின் கால்களும் வழுக்குகிற நிலைமை. குற்றாலக் குறவஞ்சி வரிகள் இந்தக் கானகத்துக்கும் சிறப்பாகப் பொருந்தும் படியான இயற்கைக் காட்சிகள்.

வண்டுகளின் ரீங்காரம், பறவைகளின் சிறகுகள் படபடக்கும் ஓசை, காட்டுப் பூக்களின் வித்தியாசமான சுகந்தம், கண்ணைக் கவரும் வண்ணங்களில் அசைந்தாடும் சிறிய, பெரிய மலர்களின் அழகு, மலர்களைச் சுற்றி வந்த வண்ணத்துப்பூச்சிகளின் ஊர்வலம் என்று எங்கும் காணப்பட்ட அழகியல் அற்புதமாக இருந்தது.

ஏற்றத்தில் புரவிகள் களைத்துப் போனதால், புரவிகளில் இருந்து குதித்து இறங்கினார்கள் மூவரும். விசுவநாதன், அங்கிருந்து மேலே நடந்தே செல்ல முடிவு செய்தான்.

" குதிரைகளை இங்கே ஏதாவது மரத்தடியில் விட்டு விட்டு நடந்து
செல்லலாமா வீரர்களே? "

"ஆம் அரசே, அதுவே நல்லது. ஆனால், தற்போது குதிரைகள் மிகவும் களைப்புற்றுள்ளன. அது மட்டுமல்லாமல் தாகத்தால் தவிப்பது போலவும் எனக்குத் தோன்றுகிறது. அருகில் ஏதாவது நீர்நிலை இருந்தால், தண்ணீர் காட்டி விட்டு நடக்கலாம்" என்று ஒரு வீரன் பதிலளித்தான்.

" அதுவும் சரிதான். சற்றுத் தொலைவில் தான் அருவி இருக்கவேண்டும். கொல்லென்று நீர் விழும் சத்தம் மென்மையாகக் கேட்கிறது. ஈரக் காற்றின் மணமும் நிச்சயமாக அருவி அருகில் எங்கோ இருப்பதை எடுத்துச் சொல்கிறது. அருவி இருக்கும் இடத்தை அடைந்து குதிரைகளை நீர் அருந்த வைக்கலாம். நடக்க ஆரம்பித்தார்கள்.

அருவி நீர், வெள்ளி இழைகளாக மின்னி உயரத்தில் இருந்து கீழே விழுந்து கொண்டிருந்த அழகான காட்சியைக் கண்டு இரசித்தார்கள். பாறைகளில் மோதிய நீர் அங்கே குளமாகத் தேங்கிப் பின் அங்கிருந்து சிறிய ஓடையாக ஓடிக் கொண்டிருந்தது. இரண்டு கைகளிலும் நீரை அள்ளிப் பருகி, அந்த மூலிகைகள் கலந்த நீரின் சுவையை அனுபவித்துப் புத்துணர்ச்சி பெற்ற பிறகு குதிரைகளையும் நீர் அருந்தச் செய்தனர்.

அங்கிருந்து அவர்கள் கிளம்பும் சமயத்தில் தான் விசுவநாதனின் பார்வை, உயரத்தில் இருந்த ஒரு பாறையின் மீது பட்டது. சற்றே உயரத்தில் இருந்த அந்தப் பாறையில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தது நிழலோவியமாகத் தெரிந்தது.

"எதற்காக இந்தப் பெண் தனியாக இவ்வளவு உயரத்தில் நின்று கொண்டிருக்கிறாள்? தெரியவில்லையே?" கவலையுடன் விசுவநாதன், தனது வீரர்களிடம் சொல்லிக் கொண்டிருந்த போது அந்தப் பெண் திடீரென அங்கிருந்து கீழே குதித்து விட்டாள்.

" அய்யோ " என்று அலறியபடி விசுவநாதன், தன் வீரர்களிடம் சைகை காணவில்லை, அந்தப் பெண் விழுந்த இடத்தை நோக்கி வேகமாக நீந்த ஆரம்பித்தான். விழுந்த வேகத்தில் மயங்கியிருந்த அந்தப் பெண்ணை ஒரு கையில் பிடித்தபடி, இழுத்துக் கரைக்குக் கொண்டு வந்துவிட்டான்.

தண்ணீரில் இருந்து வெளியே எடுத்து கரையில் போட்ட போது தான் அவர்கள் கவனித்தார்கள். அந்தப் பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள்.
தலையில் வேறு அடிபட்டு இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

பதைபதைத்துப் போனார்கள். "இவள் மலைஜாதிப் பெண்ணாகத் தான் இருக்க வேண்டும். இவளுக்கு உடனே சிகிச்சை தர வேண்டியது அவசியம். இவளை உடனே இவளுடைய மக்களிடம் சேர்க்க வேண்டும்" என்று வீரர்களிடம் கூறிய விசுவநாதன், அந்தப் பெண்ணைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு மேலே நடக்க ஆரம்பித்தான்.

கடவுளின் அருளால் மலைஜாதி மக்களின் கிராமத்துக்குப் போகும் வழி உடனே தெரிந்துவிட்டது. வேறு சில கிராமவாசிகள் வழியிலேயே கிடைத்துவிட, அந்தப் பெண்ணை மலைவாழ் கிராமத்துக்கு விரைவில் சேர்த்து விட்டார்கள். அங்கிருந்த மருத்துவரை அழைத்து, உடனுக்குடன் சிகிச்சையையும் ஆரம்பித்துவிட்டார்கள்.

அரசர் வந்திருப்பதை அறிந்த மலைஜாதி மக்களின் தலைவர் ஓடோடி வந்தார். கைகளைக் கூப்பி அரசரை வரவேற்றார்.

"எங்கள் இடத்திற்குத் தாங்கள் வருகை தந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம் அரசரே! தூதனுப்பியிருந்தால் நானே வந்து உங்களை சந்தித்திருப்பேனே? இவ்வளவு சிரமம் எதற்கு?" என்று பணிவுடன் பேசினார் அந்தத் தலைவர் திண்ணன்.

"முக்கியமான விஷயம் தங்களிடம் பேச வேண்டியிருக்கிறது. அதற்காகத் தான் நேரில் வந்தேன். அது தான் முறையும் கூட" என்றான் விசுவநாதன்.

"நீங்களே வந்ததும் இல்லாமல் எங்கள் இனப் பெண்ணைக் காப்பாற்றி வேறு அழைத்து வந்திருக்கிறீர்களா? நீங்கள் செய்திருப்பது மகத்தான உதவி. அதற்கே நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் ."

"நீங்கள் அனைவரும் என்னுடைய நாட்டின் குடிமக்கள். உங்களைக் காப்பாற்ற வேண்டியது எனது கடமை அல்லவா? நான் எனது கடமையைத் தான் செய்தேன். அதற்காக நன்றி கூறத் தேவையில்லை. யார் அந்தப் பெண்? நிறைமாத கர்ப்பிணியான அவள் ஏன் தற்கொலை செய்து கொண்டாள்? இந்த நிலையில் அவளைத் தனியாக விடலாமா? , உறவினர் கவனிக்கவில்லையா?" என்று அக்கறையுடன் கேள்விகளை அடுக்கினான் அரசன்.

"நீங்கள் கேட்கும் அனைத்துக் கேள்விகளும் நியாயமானவையே? அவளையும் சரியாக கவனித்துக் கொள்ளாதது எங்களுடைய தவறு தான். அந்தப் பெண் மனநிலை பிறந்தவள்.
சில மாதங்களுக்கு முன்பு வரை நன்றாகத் தான் இருந்தாள். திருமணமாகித் தன் கணவனுடன் இனிமையான இல்லறத்தில் நாட்களைக் கழித்த அந்தப் பெண் கருவுற்ற செய்தி தெரிந்ததும் உற்றார், உறவினர் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். கருவுற்ற பெண்ணைத் தலைமேல் வைத்துக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். அப்போது தான் அவர்களுடைய இன்பத்திற்கு பங்கம் விளைவிப்பது போல அந்தச் செயல் நடந்தது.

வனத்தில் தேன் சேகரிக்கச் சென்ற அவளது கணவன் , வனவிலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தான். காதல் கணவனின் உயிரற்ற உடலைக் கண்ட உடனேயே அவளது சித்தம் கலங்கி விட்டது. அன்றிலிருந்து இப்படித்தான் அங்குமிங்கும் திரிகிறாள். இன்று எப்படியோ மற்றவர்கள் கண்களிலிருந்து தப்பி அருவிப்பக்கம் சென்றிருக்கிறாள்" என்று அந்த அபலைப் பெண்ணின் கதையைச் சொல்லி முடித்தார் திண்ணன்.

அதற்குள் அந்தப் பைத்தியக்காரப் பிச்சிக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் வெளியே வந்து விட்டார்.

"தலைக்கு காயத்துக்கு மருந்து போட்டுக் கட்டி விட்டேன். ஆனால் விழுந்த அதிர்ச்சியில் அந்தப் பெண்ணுக்குப் பேறுகால வலி ஆரம்பித்து விட்டது. எனது மனைவி அவளுக்குப் பிரசவம் பார்த்துக் கொண்டிருக்கிறாள்" என்று சொன்னார்.

சிறிது நேரத்தில் அந்தக் குடிலில் இருந்து வெளியே வந்த மருத்துவச்சி, அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும், குழந்தையை ஈன்ற தாய் இறந்துவிட்டதாகவும் தெரிவித்தாள்.
அனைவரும் துயரத்தில் மூழ்கினர். ஆனாலும் அந்தக் குழந்தையை நல்ல முறையில் வளர்க்கப் போவதாக திண்ணன் உறுதியளித்தார்.

தங்கள் கிராமத்தில் ஒரு பெண் உயிர் இழந்ததால் அங்கு வசித்தவர்கள் அந்த துயரத்தில் மூழ்கினர். அரசனுக்கும், உடன் வந்த வீரர்களுக்கும் எளிமையான உணவு வழங்கப்பட்டது. சிறிது நேரம் இளைப்பாறிய பின்னர் மீண்டும் பேச உட்கார்ந்தார்கள்.

"அரசே, தாங்கள் வந்த நோக்கத்தை இப்பொழுது என்னிடம் சொல்லலாமே?" என்றார் திண்ணன்.

"மதுரையில் ஆங்கிலேயரின் கை ஓங்க ஆரம்பித்து விட்டது. நிர்வாகத்தில் தலையிட ஆரம்பித்து விட்டார்கள். அவர்களுக்குப் படை பலம் இருக்கிறது. நவீன ஆயுதங்களையும் வைத்திருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நமது நாட்டை அடிமைப்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். நமது கோயில்களைக் கைப்பற்றிக் கொண்டுள்ள நகைகளையும் மெல்ல மெல்லத் தங்களுடைய நாட்டிற்கு அனுப்பிய இரகசியத் தகவல் கிடைத்தது.

என்னுடைய பாளையத்தில் இருக்கும் கோயில்களையும், மக்களையும் இந்த வெளிநாட்டு ஆணவக்காரர்களிடம் இருந்து எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நானும், எனது அமைச்சர்களும் கலந்து ஆலோசித்து ஒரு முக்கியமான முடிவெடுத்திருக்கிறோம். வலுவான ஒரு புரட்சிப் படையை இரகசியமாகத் திரட்டி, தீவிரப் பயிற்சி அளிக்கப் போகிறோம். அதற்குத் தான் உங்களுடைய உதவி தேவை " என்று சொல்லி நிறுத்தினான் விசுவநாத நாயக்கன்.

"நல்ல முடிவு தானே அரசே! நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று ஆணையிடுங்கள். உங்கள் கட்டளையை சிரமேல் ஏற்று நடக்க வேண்டியது எங்களுடைய கடமை" என்றார் திண்ணன்.

" உங்கள் பகுதியில் உள்ள இளைஞர்களின் துணிச்சலும் , வீரமும், திறமையும் கொண்ட இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உங்களால் முடிந்த அளவு தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொடுத்து, எங்களிடம் அனுப்பினால், நாங்களும் அவர்களுக்குத் தீவிரப் பயிற்சி அளித்துப் புரட்சிப் படையில் அவர்களையும் சேர்த்துக் கொள்வோம். பழைய கால மன்னர்களிடம் இருந்த மெய்க்காவல் படை போல இந்தப் படையும் ஒரு சிறந்த தனிப்படையாக உருவாகும்.

உயிரைக் கொடுத்துக் காக்கும் உறுதிமொழி எடுத்துக் கொண்டு, தங்களை முழுமையாக நாட்டுப் பணிக்கு அர்ப்பணித்துக் கொள்ள அவர்கள் தயாராக இருக்க வேண்டும். முக்கியமாக நமது கலாச்சாரச் சின்னங்களான கோயில்களையும், கோயில் பொக்கிஷங்களையும் பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டு அவர்கள் பணிபுரிய வேண்டும் " என்று சொல்லி முடித்தார் விசுவநாத நாயக்கன்.

"அரசே, இது மிகப்பெரிய விஷயம். ஆனாலும் நல்ல விஷயம். நாட்டின் பாதுகாப்பையும், நாட்டு மக்களின் நலத்தையும், கோயில்களை அந்நியர் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு தாங்கள் தொடங்கியுள்ள இந்த நற்செயலுக்கு எங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய ஆர்வமாக இருக்கிறோம். காலையில் முடிவைத் தரலாமா? இன்று இரவு நீங்களும் உங்களது வீரர்களும் இங்கேயே தங்கி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்" என்று வேண்டினார் திண்ணன். அரசனும் அவருடைய முடிவை ஏற்றுக் கொண்டான்.

அன்றைய இரவு ஒரு குடிலில் முடிந்த அளவு வசதிகளைச் செய்து தந்தார்கள். இனிமையான அந்த இயற்கைச் சூழலில் குளிர்காற்று தாலாட்ட, நிம்மதியாக உறங்கினான் விசுவநாதன்.

கிராமத் தலைவர் திண்ணனின் மனதில் ஒரு திட்டம் உருவானது. அவருக்குள் உருவாகியிருந்த ஒரு நீண்ட நாள் ஆசையை இந்தத் தருணத்தில் உயிர்ப்பிக்க நினைத்தார். அதிலும் தவறில்லையே ! அந்தத் திட்டத்தைப் பற்றித் தான் தனது மக்களுடன் கலந்தாலோசிக்க எண்ணினார்.

அடுத்த நாள் விடியல் அவனுக்கு எத்தனை புதிய சவால்களை அள்ளி வழங்கப் போகிறதோ என்பது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவனுடைய வாழ்க்கையின் முக்கியமான திருப்பங்களைக் கூட அந்த மலைஜாதி கிராம மக்கள் தான் தீர்மானிக்கப் போகிறார்களோ என்று அவன் நிச்சயமாக அந்தத் தருணத்தில் உணர்ந்திருக்கவில்லை.


என்னவனே! மன்னவனே!

என்னவனே!மன்னவனே!
உன் காதல் நிலவாக
என் மன வானில்
உலாவ வேண்டாம்!
வளர்ந்து வரும் நிலவு
முழுமை அடைந்ததும்
தேய ஆரம்பிக்கிறதே!

விண்மீனாக வேண்டாம்!
ஆங்காங்கே சிதறிவிடும்
அபாயம் உண்டு!
தொலைவும் அதிகம்!

சுட்டெரிக்கும் கதிரவனாகவே
என்றும் நீ இருக்க வேண்டும்!
குளிர்காலக் கதிரவன் போல
காதல் பார்வை தர வேண்டும்!

சீற்றத்துடன் நீ பார்த்தெனைச்
சுட்டெரிக்க வந்தாலும்
ஏற்றிடுவேன் என்மனதில்
சீற்றம் உனக்கு அழகென்று!
கனிவான பார்வையுடன்
குளிர்விப்பேன் நான் உனையே!

செந்தணலாய் உன் காதல்
எனை அணைத்து இன்பம் தர
சூயரியகாந்தியாக நான்
மலர்ந்திருப்பேன் உன் வரவில்!

தொடரும்,

புவனா சந்திரசேகரன்.

 
Top