கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உனைத் தானே அழைத்தேனே! 13

Puvana Chandrasekaran

Moderator
Staff member
உனைத் தானே அழைத்தேனே!

அத்தியாயம் 13

புதிய காலை விடிந்தது. புள்ளினங்கள் பூபாளம் பாடி கதிரவனை வரவேற்றன. இருள் அரக்கனைக் கதிரவனின் கதிர்கள், கூரம்புகளாகத் துளைத்து விரட்டியடிக்க, வெளிச்சப் புடவையை பூமித் தாய் அணிந்து கொண்டு எழிலுடன் சிரித்தாள்.

விசுவநாதன் எழுந்து அருவியில் சென்று உடல் களைப்புத் தீர நீராடி வந்து, காலை உணவாக, திண்ணன் அளித்த பழங்கள், வேகவைத்த கிழங்குகள் இவற்றுடன் தேனுடன் கலந்த தினை மாவையும் வயிறார உண்டு எழுந்தான்.

திண்ணனும், அவர்கள் இனத்தைச் சேர்ந்த சில முதியவர்களும் வந்து நாயக்கரின் எதிரே அமர்ந்தார்கள்.
திண்ணன் தொண்டையை லேசாக செருமியபடி பேச ஆரம்பித்தார்.

"அரசே, தாங்கள் கூறிய அனைத்து விஷயங்களையும், எங்கள் இனத்துப் பெரியவர்களுடன் கலந்து பேசி விட்டேன்.
நமது நாட்டிற்கு ஒரு ஆபத்து என்றால் தயக்கமின்றிக் கிளம்ப வேண்டியது எங்கள் கடமை.

எங்கள் இனத்தில் இளம்பருவத்தில் இருக்கும் இளைஞர்கள் அனைவரும் வந்து உங்கள் படையில் சேர்ந்து பயிற்சி பெறத் தயாராக இருக்கிறார்கள். மலைப்பகுதியில் வாழ்வதால் நித்தமும் காட்டு விலங்குகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் அபாயம் இங்கு நிலவுகிறது. அதற்காகவே இங்கு நிறையப் பயிற்சி நாங்கள் ஏற்கனவே கொடுத்து வருகிறோம்.

குறுவாள் எறிவது, வில்வித்தை, வளரி ஏற்றம், களரி, சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைகள் மற்றும் செங்குத்தான பாறைகளில் ஏறுவது, வேகமாக ஓடும் நீரில் நீந்துவது, யானைகளை அடக்குவது இவற்றைத் தவிர அடிப்படைத் தேவையான மருத்துவப் பயிற்சி, மூலிகை மருந்துகள் தயாரிப்பது என்று அனைத்திலும் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் தான்.

இருந்தாலும் குதிரை சவாரி, வால் சண்டை, பதுங்கியிருந்து தாக்குவது, ஒற்று வேலை இவற்றை நீங்கள் கற்றுக் கொடுத்தால் விரைவில் கற்றுக் கொள்வார்கள். அதில் எந்த ஐயமுமில்லை. இங்கிருக்கும் தகுதி வாய்ந்த ஒவ்வொரு வீரனையும் தேர்ந்தெடுத்து அனுப்ப நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் அரசர் எங்களைத் தவறாக எண்ண வேண்டாம். அரசருக்கு ஒரே ஒரு நிபந்தனை மட்டும் வைக்கிறோம்" என்று சொல்லி விட்டு அரசரின் முகத்தையே பார்த்தார் திண்ணன்.

" என்ன நிபந்தனை? தயங்காமல் கூறுங்கள். பயம் தேவையில்லை"

"அது வந்து, அரசே...., எங்கள் இனப் பெண் ஒருத்தியை நீங்கள் திருமணம் செய்து கொண்டு உங்களுடைய ராணியாக்கிக் கொள்ள வேண்டும். நீங்கள் அரண்மனைக்குச் சென்று உங்கள் பெற்றோருடன் கலந்து ஆலோசித்த பிறகு உங்களுடைய முடிவைக் கூறலாம். அவசரமில்லை" என்று சொல்லி விட்டுத் தலையைக் குனிந்து கொண்டார்.

சத்தம் போட்டுச் சிரித்தான் விசுவநாத நாயக்கன்.

" இதைச் சொல்வதற்கு என்ன தயக்கம்? உங்கள் மன இச்சையை என்னிடம் கூறிவிட்டீர்கள். இதென்ன தவறு?
பெற்றோரிடம் கலந்து பேச வேண்டிய அவசியம் இல்லை. நியாயமான என்னுடைய எந்தச் செயலுக்கும் எனது பெற்றோர் குறுக்கே வரமாட்டார்கள். என் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை அப்படி. உங்கள் இனப் பெண் தான் எனக்கு மனைவியாகப் போகிறாள் என்பது நித்தமும் நான் தொழும் அந்தக் கதிர்வேலவன் போட்டு வைத்திருக்கும் திட்டம். ஆனானப்பட்ட ஆண்டவனே வேட்டுவக் குலப் பெண்ணைத் தனது காதல் மனைவியாக ஏற்றுக் கொண்டான். மனிதப்பிறவியான நான் எம்மாத்திரம்! "

"எங்கள் இனத்தில் திருமண வயதில் இருக்கும் கன்னிப் பெண்களை உங்கள் முன் நிறுத்தி வைக்கிறேன். நீங்களே உங்களுக்குப் பிடித்த பெண்ணைத் தேர்வு செய்யுங்கள்"

"மன்னிக்கவும் பெரியோர்களே! பெண்கள் சுயம்வரம் நடத்தி மணாளனைத் தேர்ந்தெடுக்கும் தேசம் நம்முடையது. பெண்களை தெய்வங்களாகப் போற்றும் சமுதாயம் நம்முடையது. நான் தேர்வு செய்து சொல்லுங்கள், கடைவீதியில் விற்கப்படும் பொருட்களா? உங்கள் இனப் பெண்களின் விருப்பத்தைக் கேளுங்கள். என்னுடன் அழைத்துச் செல்கிறேன்.

அச்சம் கொள்ள வேண்டாம். உங்கள் பெண், என் மாளிகையில் அரசியாக முழு மரியாதையுடன் வரவேற்கப்படுவாள். மக்களின் அன்பும், மரியாதையும் அளவில்லாமல் கிடைக்கும். எனக்கு இதுவரை மணம் ஆகவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். அரச பரம்பரை தானே இவன்? நிறையப் பெண்களை மணம் புரிந்து கொண்டு அந்தப்புரத்தில் அழகுப் பதுமைகளாக அடைத்து வைப்பான் என்று எண்ண வேண்டாம்.

உங்கள் பெண் மட்டுமே எனது மனைவி. இந்த விஷயத்தில் என்னப்பன் முருகனைக் கூட நான் பின்பற்றப் போவதில்லை. மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீராமர் போல ஏக பத்தினி விரதனாகத் தான் வாழப் போகிறேன். எனவே உங்கள் குலப் பெண்ணின் வயிற்றில் உதிக்கும் வாரிசு தான் எனக்குப் பிறகு அரியணையில் அமரப் போகிறது. நாட்டை ஆளப்போவது அவன் அல்லது அவள் தான். இது நிச்சயம்" என்று சிரித்த முகத்துடன் உறுதியாகச் சொன்ன அரசனை அனைவருக்கும் பிடித்திருந்தது. மனம் நெகிழ்ந்து நின்றார்கள்.

மகிழ்ந்து போன மலை ஜாதி மக்கள் தங்கள் இனப்பெண்களில் திருமண வயதில் இருந்தவர்களை அழைத்து அவர்களின் விருப்பத்தைக் கேட்டார்கள். பெரும்பான்மையான பெண்கள் பயந்து பின்வாங்கினார்கள். துணிச்சலுடன் முன்வந்தது குறிஞ்சி என்ற பெண் மட்டுமே.

அவளும் ஆண்களைக் கண்டதும் நாணத்துடன் தலை குனியும் பெண்ணாக இல்லாமல், நிமிர்ந்து நின்று எதிரில் நிற்பவரை எடை போடும் தெளிவான நேர் பார்வை கொண்ட பெண் தான்.

"எனக்கு மனதில் ஒரே ஒரு சந்தேகம். அரசரிடம் நேரடியாகக் கேட்க வேண்டும் " என்று குறிஞ்சி சொல்ல, அனைவரும் அவளை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.

"துடுக்குத்தனமாகப் பேசாதே குறிஞ்சி. அரசரிடம் பேசும் போது குரலில் பணிவு இருக்க வேண்டாமா?" என்று கடிந்து கொண்டார் திண்ணன்.

" உன்னுடைய துணிச்சலை மெச்சுகிறேன் பெண்ணே! என்ன சந்தேகமானாலும் கேட்கலாம். பதிலளிக்க நான் தயார் " என்று நாயக்கன் பதிலளிக்க, மூத்தோரால் குறுக்கே பேச முடியவில்லை.

"எங்கள் இனப் பெண்ணை மணமுடித்து அரசியாக்கி அழைத்துப் போக நீங்கள் சம்மதம் தந்திருப்பது மகிழ்ச்சியே! ஆனால், அந்தப் பெண்ணை அழகுப் பதுமையாக்கி அந்தப்புரத்தில் பூட்டி வைக்கப் போகிறீர்களா? உங்கள் ஆணைப்படி நடக்கும் இயந்திரமாக்கி இன்புறப் போகிறீர்களா? இல்லை என்றால் சுதந்திரமாக செயல்பட அனுமதி தருவீர்களா? அரசியலிலும், நிர்வாகத்திலும் தலையிட அனுமதி தருவீர்களா? " என்று குறிஞ்சி கேட்க, அசந்து போனான் அரசன்.

" இச்சைப்படி செயல்படலாம் பெண்ணே! ஆனால் அரசியலிலும், நிர்வாகத்திலும் தலையிட்டுக் கருத்துகளைச் சொல்வதற்கு முன்பு அவற்றிலிருக்கும் செயல்முறைகளையும், சூட்சுமங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். முறையாக அனைத்தையும் கற்றுக் கொண்டு நிச்சயமாகத் தலையிடலாம். ஆனால் ஆணவம் மட்டும் கூடாது. அரசவையில் இருக்கும் சான்றோரையும் மதிக்கும் பண்பு வேண்டும். நாணல் போல் வளையவும் தெரியவேண்டும்.ஆலமரம் போல வேரூன்றி உறுதியாக நிற்கவும் தெரியவேண்டும்" என்று குறிஞ்சிக்குத் தேவையான பதிலை, விசுவநாத நாயக்கன் தெளிவாக எடுத்துச் சொல்ல, முதன்முறையாக அவனுடைய வசனத்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த குறிஞ்சி நாணித் தலைகுனிந்தாள்.

வீர, தீர மங்கையாக யாருக்கும் அஞ்சாத பெண்சிங்கமாக நின்று போரில் பலரையும் வென்ற மதுரையரசி மீனாட்சி முதன்முதலில் சொக்கநாதரைப் போர்க்களத்தில் நேரில் சந்தித்தபோது நாணித் தலைகுனிந்தது போலத் தான் இருந்தது குறிஞ்சியின் செயலும்.

வெட்கத்துடன் தலைகுனிந்து நின்றாலும் எண்ணியதைச் சாதித்து விட்டாள் அந்த மங்கை. தனது துணிச்சலாலும், சுதந்திர வேட்கையாலும் விசுவநாத நாயக்கனின் மனதை வென்று விட்டாள் அந்த மலைஜாதிப் பெண். வீர,தீரத்தில் அங்கயற்கண்ணியையும், குறும்புத்தனத்தில் வள்ளியையும் நினைவுபடுத்தி விட்டாள்.

"என்னுடன் அரண்மனைக்கு வரத் தயாரா அரசியாரே?" என்று விசுவநாதன் கேட்க, அரசனுடைய சம்மதத்தைப் புரிந்து கொண்ட மலை ஜாதி மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.

உடனடியாகத் திருமணம் நடந்தது. காட்டு மலர்களால் ஆன மாலைகளை அணிந்த மணமக்கள் அருகருகே நின்றனர். பெண்கள் குலவையிட, வன தேவதையின் கோயிலில் மாலை மாற்றி மணம் புரிந்து கொண்டார்கள்.

மலை வாழ் மக்களின் ஆசைகளையும், அன்பையும் ஒருசேரப் பெற்ற அரசன், புதிய அரசியைத் தன்னுடன் புரவியில் ஏற்றிக் கொண்டு தனது நகரத்திற்குக் கிளம்பினான்.

"அரசே, வீரத்தில் சிறந்த இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து ஒரு குழுவாக இரண்டே நாட்களில் உங்களிடம் அனுப்புகிறோம். வீரபாகு என்கிற இளைஞனின் தலைமையில் திறமையான இளைஞரின் குழு உங்களை வந்து சந்திக்கும். உங்களுடைய ஆணையை ஏற்று நாட்டைக் காக்கும் பணியைச் செவ்வனே செய்யும் அந்தக் குழு" என்று உறுதி சொல்லி விடை கொடுத்தார் திண்ணன்.

தன்னுடன் வந்த வீரர்களை சற்று நேரம் முன்னரே அரண்மனைக்கு அனுப்பி விட்டார். பெற்றோரிடம், தன்னுடைய திடீர் திருமணம் பற்றிய தகவலை எடுத்துக் கூறுவதற்காகவே அந்த ஏற்பாடு.

அரசியுடன் அரண்மனையில் மன்னன் நுழைய, மங்கலவாத்தியங்கள் முழங்கின. ஆலம் சுற்றி வாழ்த்துப் பாடல்களைப் பாடினார்கள். மலர்களைத் தூவி சேடிப்பெண்கள் வரவேற்றனர். அரசனின் பெற்றோரும் குறிஞ்சியை அன்புடன் வரவேற்று ஆசிகளை அள்ளி வழங்கினர்.

பெரிய மாளிகை, சுவர்களில் வண்ண ஓவியங்கள், அலங்கார விளக்குகள், பிரம்மாண்டமான அறைகள், ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த பூத் தொட்டிகள், ஒவ்வொரு அறை வாசலிலும் ஆயுதம் தாங்கிய காவலர், குற்றேவல் செய்ய எண்ணற்ற சேடிப்பெண்கள் இவற்றை எல்லாம் பார்த்து முதலில் குறிஞ்சி மிரண்டு தான் போனாள்.

அரசியை அந்தப்புரத்திற்கு அழைத்துச் சென்ற சேடிப்பெண்கள் வெதுவெதுப்பான நீரில் நீராட வைத்தனர். அருவியில் அதிகாலையில் குளித்து எழுந்து வரும் குறிஞ்சிக்கு இங்கு நீராழி மண்டபத்தில் வாசனை திரவியங்கள், மஞ்சள், சந்தனம் கலந்து ரோஜா இதழ்கள் தடவப்பட்ட நீரில் குளித்தது புதிய அனுபவமாக இருந்தாலும் இன்பமாகத் தான் இருந்தது.

குளித்து முடித்து வந்தவளுக்குப் பட்டாடைகள் அணிவித்து விலைமதிப்பற்ற நகைகளை அணிவித்து அலங்காரம் செய்தார்கள்.

அறையில் இருந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்த குறிஞ்சியால் தன் விழிகளையே நம்பமுடியவில்லை. அப்படி மாறிப் போயிருந்தாள்.

அரசன், புதிய அரசியுடன் அரண்மனை உப்பரிகையில் நின்று பொதுமக்களுக்கு தரிசனம் தந்தான். கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பல்வேறு இடங்களில் அன்னதானம் நடத்தப்பட்டது. ஏழைகளுக்கு ஆடைகளும், பணமுடிப்பும் அன்பளிப்பாக அளிக்கப்பட்டன. அனைவரும் மணமக்களை வாழ்த்தி ஆசிகளை வழங்கினர். பாளையம் முழுவதும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான். விழாக்கோலம் பூண்ட நகரில் வீடுகளில் தோரணங்கள் கட்டியும், அகல் விளக்குகளை ஏற்றியும், இனிப்புப் பண்டங்களைச் சமைத்தும் மக்கள் கோலாகலமாக அரசரின் திருமணத்தைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

புதிய மணமக்கள் இரவு தனித்து விடப்பட்டனர். உள்ளங்கள் ஏற்கனவே இணைந்து விட்டதால் உடல்கள் இணையக் காலதாமதமும் ஏற்படவில்லை. மகிழ்ச்சியுடன் இல்லறத்தைத் தொடங்கினர் இருவரும்.

குறிஞ்சி, தான் ஆசைப்பட்டபடியே அரசியல், அரண்மனை நிர்வாகம் இரண்டையும் பெரியோர் பலரின் அறிவுரைகளைப் பெற்று அவர்களுடைய வழிகாட்டுதலுடன் சிறப்பாகக் கற்றுத் தேர்ந்தாள். தமிழ் மொழியிலும் தேர்ச்சி பெற ஆசிரியர்களின் உதவியுடன் தமிழ் இலக்கியத்தைக் கற்றுக் கொண்டாள். தற்காப்புக் கலைகள் பல ஏற்கனவே தெரிந்திருந்தாலும் வாட் சண்டை, குதிரையேற்றம், யானையேற்றம் அனைத்திலும் தேர்ச்சி பெற்றாள்.

அவளுக்கு இயற்கையாகவே இருந்த ஆர்வமும், அறிவுத்திறனும் அவளை நல்லதொரு வீராங்கனையாக உருவாக உதவி செய்தன. ஏற்கனவே அறிவாளியாக இருந்தவளின் புத்தி, கத்தி முனையாகத் தீட்டப்பட்டது.

மதுரையிலோ ஆங்கிலேயர் கை ஓங்க ஆரம்பித்து, கோயில்களில் பொக்கிஷங்கள் குறைவது, மறைவதும் அதிகரிக்க ஆரம்பித்தது. கப்பல்களில் ஏற்றப்பட்ட ஏராளமான பாரம்பரிய நகைகள், விலைமதிப்பற்ற இரத்தினங்கள் நாட்டை விட்டு வெளியேறிப் போகத் தொடங்கின. தமிழக வரலாற்றில் இருள் சூழ ஆரம்பித்தது.

வானவில் அழகி

ஊதா நிறப் பூக்கள் கொண்டு
உனை உல்லாசமாய் அர்ச்சித்தேன்!

கருநீல மலர்களால் மாலை கட்டிச்
சூட்டினேன் உந்தனுக்கு!

நீல வானத்தில் நிலவாய் நீ
நித்திரை கலைத்தாயே!

பசுமையான உன் நினைவுகள்
பரவசம் தருகின்றனவே!

மஞ்சள் முகத்தில் குறுநகை
மரகதமணி மாலை போல் அழகு!

இளஞ்சிவப்புக் கன்னங்களில்
நாணம் வந்து வர்ணம் பூச!

சிவந்த உன் இதழ்களும்
சிந்தை தனைக் கவருதடீ!

ஊதா கருநீலம் நீலம் பச்சை
மஞ்சள் இளஞ்சிவப்பு சிவப்பு
அத்தனை வர்ணங்களும்
குழைத்து எழிலுடன் தீட்டிய
வானவில் பேரழகி நீதானடீ!

தொடரும்,

புவனா சந்திரசேகரன்
 
Last edited:
Top