கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உயிரோடு (சு)வாசமாய்…சேதுபதி விசுவநாதன்

siteadmin

Administrator
Staff member
தலைப்பு: உயிரோடு (சு)வாசமாய்…


"என்ன மாமா? வயலுக்கு தண்ணி மாத்த போறீங்களா?" என்று சிவநாதனை பார்த்து கேட்டான் ரகு.


"ஆமா மாப்ள.வலுசபசங்களுக்கு காலையிலயும் என்னை மாதிரி வயசானவங்களுக்கு நட்டமத்தியாணத்தில தான நேரம் தராங்க" என்று அலுப்பாய் சொன்னார்.


"நீங்க தான் மவன படிக்க வச்சு வெளியூர்ல செட்டில் பண்ணிட்டு இப்போ வந்து குத்துது கொடையுதுன்னா? அவன் இருந்தா பண்ணிருப்பான்ல. இதுல அத்தைய வேற அங்க அனுப்பி வச்சு இருக்கீங்க" என்றான் ரகு.


"மாமனுக்கு அத்தை இருந்தா கொழுந்தியா கையாள சாப்பாடு கிடைக்குமா? என்ன மாமா நான் சொல்றது?" என்ற ஜீவாவிடம்,


"உங்க அத்தை இருந்தா மட்டும் பயமா? மாப்ள என்னைக்குமே நான் இந்த ஊரு மைனர்தான்யா. போ.. போ.." என்றார் சிவநாதன்.


ரகு, "அவன் கெடக்குறான் மாமா. சாப்டீங்களா?"..


"இல்ல மாப்ள.இன்னும் சமைக்கல. சாயங்காலம் சாப்டுக்கலாம். கிழவி இருந்தா சாப்டுங்கனு தொல்லை பண்ணிருப்பா. வேலைய பாக்க முடியாது. சரி மாப்ள. நான் போயி வேலைய பாக்கறேன்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.


"ஏன்டா உனக்கு வேலையே இல்லையா.அவர போயி வம்பிழுக்கற"என்று கடித்தான் ரகு.


"நீ சும்மா இரு மாப்ள. அவன் வம்பிழுத்தது சரி. அந்த ஆளு பண்ண விசயத்த கேட்டா நீயே மதிக்கமாட்ட அந்த மனுசன" என சொன்னான் கோபி...


"என்ன மச்சே சொல்ற? என்ன பண்றாரு" என்று ஆவலுடன் கேட்டான் ஜீவா.


"அந்தாளுக்கு வயசானாலும் இன்னும் ஆசை கொறையல. சேலைவாசம் கேட்குது மாப்ள" என்றான்.


"மச்சே. உனக்கு ஏதோ அறைகுறையா தெரிஞ்சுட்டு பேசுற. இதெல்லாம் சரியில்ல.தப்பு மச்சே" ரகு கண்டித்தும் கோபி கேட்கவில்லை.


"இவனொருத்தன்... அவர ஏதோ லெஜெண்ட் மாதிரி பேசுவான். நீ சொல்லு மச்சே" என்றான் ஜீவா.


"ஏற்கனவே இந்தாளு தலவாசல்ல உக்கார்ந்து அத்தபுள்ள கொழுந்தியா மருமகன்னு வம்பிழுத்துட்டு இருப்பாரு. எப்ப கஞ்சி ஊத்துவ. பேசாம உன்னைய கட்டி இருக்கலாம். இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்டுகிட்டுருப்பாரு. இப்ப பொண்டாட்டி வேற ஊருல இல்ல" கோபி இழுக்கும்போது,


"மச்சே என்ன சொல்ற. சஸ்பென்ஸ் வைக்காம சீக்கிரம் சொல்லு மச்சே. ஏதாவது???" என்று இழுத்தான்.


"நேத்து சுமதி ஏதோ விசயமா அவரு வீட்டுக்கு போயிருக்கா. கூட என் வீட்டுகாரியும் போயிருக்கா.அப்ப இந்தாளு அவரு பொண்டாட்டி புடவைய விரிச்சுபோட்டு மேலபோத்தி கட்டிபுடுச்சுட்டு தூங்குனாராம்" என்றான்.


"அட மச்சே. இவ்வளவு தானா விசயம். நான் கூட ஏதாவது சம்பவம்னு நினைச்சேன். உப்புசப்பு இல்லாம பண்ணிட்டியே மச்சே" என்று சலிப்புடன் ஜீவா சொல்ல, முறைத்தான் ரகு.


"யோவ் மச்சே.இதெல்லாம் உனக்கு தேவையில்லாத விசயம். உன் இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்காத. சொன்னா கேளு" ரகு கடிக்க,


"ஏற்கனவே அந்தாளு ஒரு மாதிரி பேசுவாரு.இப்பவேற கிழவி ஊருல இல்ல.அதுக்குன்னு சேலைய கூடவா? ஆளு ஒரு மார்க்கமா தான் இருக்காரு" என்று சொல்ல,


"வீட்ட பூட்டி வச்சிக்கனும் மச்சே. பொண்டாட்டி வேற தனியா தான் இருப்பா" என்று சொல்லி இருவரும் சத்தமாக சிரித்தனர்.


எதுவும் பேசாமல் விறுவிறுவென்று வீட்டை நோக்கி போனான் ரகு.


"டேய்.. டேய்.. நில்லுடா..." என்று கத்திக்கொண்டு பின்னால் ஓடினார்கள்.


வீட்டுக்குள் நுழைந்தவனை தடுத்து "டேய் மாப்ள. உனக்கு என்ன பிரச்சினை. அந்த மனுசன சொன்னா உனக்கு எதுக்கு கோவம் வருது" என்று கோபமாக கேட்டான் கோபி.


"நீ அவரபத்தி பேசுனதால கோவப்படல. பேசற விசயம் தான் மச்சே தப்பு. இதுக்கு மேல பேசுனா நல்லா இருக்காது" என்று கத்தினான் ரகு.


"டேய் பைத்தியமாட நீ. அவரு உன் பொண்டாட்டியோட அண்ணன். பாத்து பேசு" என்று சொன்னவுடன் ரகுவின் கைகள் ஜீவாவின் கன்னத்தில் பதிந்தது.


இருவருக்குமே அதிர்ச்சி. என்ன செய்வது என்று தெரியாமல் ஸ்தம்பித்து நின்றார்கள்.


இருவரின் கையையும் பிடித்து இழுத்துக்கொண்டு தனது அறைக்குள் சென்றபோது பேரதிர்ச்சியில் உறைந்தார்கள்.


சில நிமிடங்கள் அந்த அறைக்குள் கடிகாரத்தின் நொடிமுள் சுழலும் சப்தம் மட்டுமே கேட்டது.


அப்பேரமைதியை ரகு உடைத்தான். "என்ன மச்சே பாக்குற? நானும் அவர மாதிரி பொண்டாட்டி சேலைய விரிச்சுபோட்டு தூங்குறன்னு பாக்கறயா? இல்ல பொடவையில வாசம் புடிக்கறவன்னு கேவலமா நினைக்கிறயா?" என்று கேட்கும்போது கோபியால் பதில் பேசமுடியவில்லை.


"மச்சே இந்த சேலை உங்க வீட்டுக்கு விருந்துக்கு வந்த அப்போ எடுத்து கொடுத்தது. இது எங்க கல்யாணம் முகூர்த்த புடவ. இது சாந்திமுகூர்த்த புடவ" என்று ஒவ்வொரு புடவை பற்றியும் சொன்னான்.


அவன் சொல்லும் போது முகத்தில் மகிழ்ச்சியும் உதட்டில் வெறுமையும் விழிகளில் நீரையும் பார்த்தார்கள் இருவரும்.


"ரகு என்ன ஆச்சுடா. ஃபீல் பணணாதடா. சாரிடா" என்றான் ஜீவா.


"மாப்ள"


"மச்சே நீ அடிக்கடி சொல்லுவியே. என் தங்கச்சிக்கு கொடுத்து வச்சது அவ்வளவு தான்.சீக்கரமே சாமிகிட்ட போயிட்டா. நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்க மாப்ளனு"என்று ரகு சொல்லும் போது கோபியால் உணர முடிந்தது. அவன் பெரிதாக தன்னை வார்த்தைகளால் குத்தபோகிறான் என்று.


"எனக்கு உன் தங்கச்சி புடவ வாசம் இன்னும் என் உடம்புகுள்ள ஏறிகிட்டே இருக்குது மச்சே. அப்புறம் எப்படி இன்னாரு பொண்ண பாக்க முடியும்" என்றான்.


"ஏன்டா ஜீவா. இனி உன் வீட்டுக்கு வந்தாலும் பொண்டாட்டிய ரூம்க்குள்ள வச்சு பூட்டிட்டு தான வந்து என்கிட்ட பேசுவ. நான் தான் சேலைய கூட விட்டுவைக்கலயே" என்று சொன்னவுடன் ஜீவா சட்டென்று ரகுவின் காலில் விழுந்தான்.


"டேய் போதும்டா. கொல்லாதடா. முடியல என்னால" என்று கதறினான்.


"மாப்ள என்னடா இதெல்லாம். இதுல என்னடா சந்தோஷம் கெடச்சிட போகுது" என்று எல்லாவற்றையும் பார்த்த கோபி புரியாமல் கேட்டான்.


"மச்சே நம்ம வாழ்க்கையில கடைசி வரைக்கும் நம்ம கூட இருப்பான்னு ஒருத்தி வந்து இருக்கும் போது அவள முழுசா மனசுக்குள்ள வச்சு இருக்கும் போது அவ இனிமே இல்லைன்னு நினைக்கும் எவ்வளவு வலிக்கும் தெரியுமா? செத்து போலாம்னு இருக்கும். அதோட வலி நரகத்த விட கொடுமையானது" என்றான்.


"எத்தனையோ பேரு இன்னாரு கல்யாணம் பண்ணிக்க சொல்லும் போது எனக்குள்ளயும் சரின்னு தோணும். அப்படியே ரூம்க்குள்ள வரும்போது அவளோட ஒவ்வொரு துணியும் என்னய பாத்து கேள்வி கேட்கும். அப்படியே குற்ற உணர்ச்சில துடிச்சு போவேன் மச்சே."


"அவ கூட வெறும் ரெண்டு வருசம் தான் வாழ்ந்தேன். என்னாலையே அவ நெனப்ப மறக்க முடியாம இப்படி பண்ணிட்டு இருக்கேன். மாமா 50 வருசம் அத்தை கூட ஒன்னா வாழ்ந்தவரு. அவர பத்தி தெரியுமா உங்களுக்கு"


"அவருக்கு கல்யாணம் ஆகி 10 வருசம் குழந்தை இல்ல.எத்தனையோ பேரு இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொல்லிருக்காங்க. ஆனா வாழ்வோ சாவோ அவளோட மட்டும் தான்னு வாழ்ந்தவரு. ஒருநாள் கூட தன் பொண்டாட்டிய பிரியாம வாழ்ந்தவரு மனசு தீடீர்னு அவங்க இல்லாம அந்த வீட்டுக்குள்ள இருந்தா எப்படி மச்சே இருக்கும்?"



"மாப்ள அப்படி நினைச்சு பாக்கலடா நான். மன்னிச்சிடு மாப்ள" என்று வருத்தமாக சொன்னான் கோபி.


"சேலைய கட்டிபுடுச்சு தூங்கறது அவ உடம்புவாசம் அதுக்குள்ள இருக்கும்னு இல்ல மச்சே. தன்னோட உசுருக்குள்ள துடிச்சுட்டு இருக்க அன்பால பைத்தியமாகி சாகாம இருக்க சந்தோஷத்துக்காகவும் ஆறுதலுக்காகவும் புடிக்கற வாசம் அது"


"தனக்கு முன்னாடி தன்னோட பொண்டாட்டி செத்துபோன ஆம்பளைங்க நிலைமைய போயி பாரு. அவங்க சொல்வாங்க வாழ்க்கை யோட நரகத்த" என்று அழுதுகொண்டே சொன்னான் ரகு.


"டேய் அதுல இந்த அளவுக்கு வலி இருக்கும்னு சத்தியமா எங்களுக்கு தெரியாதுடா.அவரு கிண்டல் பேச்சு தான்டா அப்படி திங் பண்ண வச்சுச்சு" என்றான் ஜீவா.


"ஏன்டா!! உன் கொழுந்தியாள நீ கேட்டதில்லயா இந்த மாதிரி. கிண்டல் கேலிபேச்சுங்கறது வேறடா.அது இயல்பு. மாமன் கொஞ்சம் அதிகமா பேசுவார். ஆனா அவரு அத்த மேல வச்சு இருக்க பாசம் நம்ம வயசு ஆளுங்களுக்கு தெரியாதுடா. போயி பெரியப்பா கிட்ட கேட்டுபாரு. சொல்லுவாரு" என்றான்.


"இத்தன நாளு நீ என் தங்கச்சிய நினைச்சுட்டு தான் இன்னொரு கல்யாணம் வேணாம்னு சொல்றனு நினைச்சேன். ஆனா நீ அவகூட வாழ்ந்துட்டு இருக்கறதால தான் வேணாம்னு சொல்றனு இப்ப தான் மாப்ள புரியுது" கண்ணீருடன் சொன்னான் கோபி.


"அவபோன வலியில தனியா கதறி அழும்போது பீரோவுல இருந்து தீடீர்னு ஒரு புடவை என்மேல விழுந்துச்சு. அன்னைக்கு அத புடிச்சிட்டு அழும்போது அது கொடுத்த சுகம். அஞ்சு வருசமா மாறாம அப்படியே இருக்கு.ஆயுசு முழுவதும் தனிமை என்ன சுடாது மச்சே. நான் சந்தோஷமா இருக்கேன்" என்று முகம மலர அவன் சொன்னபோது கர்வத்தை கண்டார்கள் இருவரும்.



"ரகு நீ இனிமே அவரபத்தி பேசவே மாட்டோம்டா. நாங்க வீட்டுக்கு போறோம். மச்சே நாம போலாம்" என்று ஜீவா சொல்ல இருவரும் கிளம்பி சென்றார்கள்.



எதிரே சிவநாதனை கண்ட கோபி, "ஏனுங்க. இனிமே நீங்க போயி எப்ப சாப்டறது. நம்ம வீட்டுல இன்னைக்கு விருந்து சாப்டலாம் வாங்க" என்று அழைக்க,


"என் பொண்டாட்டி இல்லாம எந்த வீட்டிலயும் கை நனைக்க மாட்டேன் தம்பி. அவ ஊருல இருந்து வந்த உடனே கட்டாயம் வீட்டுக்கு விருந்துக்கு வரேன்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சிவநாதன்.


அவர் பொண்டாட்டி மேல வச்ச பாசத்தை இப்போது இவர்கள் உணர்ந்தார்கள்.


"மச்சே சம்சாரம் போன சகலமும் போச்சுன்னு சொல்றது சரிதான் மச்சே" என்றான் ஜீவா.


"ஆம்பள வெளிய மட்டும் தான் மாப்ள அதிகாரம் பண்ணிட்டு இருக்கோம். உள்ளுக்குள்ள அல்லிராணி ராஜ்ஜியம் தான்டோய்" என்று சொல்லி சிரிக்கும் போது அதன் அர்த்தத்தை உணர்ந்தான் ஜீவா.



முற்றும்....


(எழுத்து: சேதுபதி விசுவநாதன்)
 
Top