கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உயிர் உருகும் சத்தம் - 3

அந்த பெரிய ஹாலில் மாட்டப்பட்டிருந்த அந்த கால பெரிய பர்மா கடிகாரம் மணி காலை எட்டு எனக்காட்டியது..

பூஜைக்கு வாங்கிய பூக்களை ஒரு பெரிய கூடையில் அடுக்கிக்கொண்டிருந்த காவ்யா மற்றும் மித்ராவிடம் அமிர்தம் அம்மாள்,

“கண்ணுகளா.. அத்தைக்கு போன் போட்டு எங்க வந்துட்டு இருக்காங்கன்னு கேளுங்கடா" என்றார்.

மித்ரா ”பாட்டி, நாங்க ரெண்டு பேரும் காலையிலிருந்து எவ்ளோ வேல பாத்துட்டு இருக்கோம்.. இந்த பிரவீண் சும்மா தான் இருக்கான்..அவனை கால் பண்ண சொல்லுங்க..” என்று தன் தம்பியை வம்புக்கு இழுத்தாள்.

மும்முரமாக பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த 15 வயது பிரவீண்.

"பாட்டி.. காவ்யா அக்காதான் வேல பாக்குறா.. இவ சும்மா ஸீன் போட்டுட்டு தான் இருக்கா.. “ என்று மித்ராவை சீண்ட..

“ஓகே.. ஓகே.. ரெண்டு பேரும் பண்ண வேண்டாம்.. பாட்டி, அத்தைக்கு நான் கால் பண்றேன்” என்றுவிட்டு காவ்யா எழுந்து மானாக துள்ளி அவளது அறைக்கு சென்றாள்..

மனம் எல்லாம் பரபரக்க அத்தை எண்ணை டயல் செய்தாள். அரவிந்த் வந்ததிலிருந்து வீட்டில் அனைவரும் போனில் பேசிவிட்டார்கள்.. அவளுக்கு தான் என்ன பேசுவது என்று தெரியாமல் நழுவி விட்டாள்.. இப்போது அத்தை பேச சொல்லிவிடுவாளோ என்று ஒரு பக்கம் பதட்டமாகவும் இருந்தது.

'மயங்கினேன் சொல்ல தயங்கினேன்.. உன்னை விரும்பினேன் உயிரே ..தினம் தினம் உந்தன் தரிசனம் பெற தவிக்குதே மனமே'

ஜெயச்சந்திரனும் சுசீலாவும் கார் ஸ்பீக்கரில் உருகிக்கொண்டிருக்க வசந்தாவின் போன் அடித்தது..காவ்யா என்ற பெயரை பார்த்ததும் வசந்தா புன்னைகையோடு

“காவ்யா தான் பேசுறாள்..” என்றுவிட்டு

“சொல்லு கண்ணு.. “ என்று வாஞ்சையோடு கேட்டாள்.

எதிர்முனையில் காவ்யா "ஒண்ணுமில்ல அத்தை .. பாட்டி நீங்க வர இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்ன்னு கேட்க சொன்னாங்க.." என்றாள்.

ப்ளூடூத்தில் அவளது அமுத குரல் கார் முழுதும் கேட்க அரவிந்தின் இதயத்தில் ஆயிரம் ரோஜாக்கள் ஒன்றாய் பூப்பதாய் உணர்ந்தான்.

“நாங்க இன்னும் பத்து நிமிஷத்துல வீட்டுக்கு வந்துடுவோம்.. பாட்டிகிட்ட சொல்லிடு டா” முகமெல்லாம் பூரிப்பாய் சொல்லி வைத்தாள்.

அரவிந்த் அம்மாவின் மலர்ந்த முகத்தை பார்த்தவனாய் ‘இந்த அம்மாவுக்குத்தான் காவ்யா மீதும் தன் குடும்பத்தார் மீதும் எவ்வளவு பாசம்.. நான் தான் அம்மாவின் ஆசையை நிறைவேற்ற முடியாத பாவியாகிவிட்டேன் என்று தன்னையே நொந்து கொண்டான்.

அரவிந்த் மீண்டும் பழைய நினைவுகளில் மூழ்கினான்..

மித்ரா அன்று தனக்காக காவ்யா விரதம் இருக்கிறாள் என்று சொன்னதும் கொஞ்சம் வியந்தான்.

அப்போது எட்டாவது படித்துக்கொண்டிருந்த மித்ரா தயங்கியவாறே,

“அத்தான் ப்ளீஸ் நீங்க யார்கிட்டயும் சொல்லாதீங்க.. அக்கா என்ன திட்டுவா.. நீங்க ஸ்டான்போர்ட் யூனிவர்சிட்டில படிக்கறது தான் உங்க ஆம்பிஷன்னு அத்தை போன தடவை வந்தப்போ சொல்லிட்டு இருந்தாங்க.. நீங்க அதுக்கு அப்ளை பண்ணியிருக்கீங்கன்னும் சொன்னாங்க.. அன்னிலேர்ந்து காவ்யா அக்கா நம்ம புன்னைநல்லூர் மாரியம்மனை வேண்டிக்கிட்டு விரதம் இருக்கா.. டெய்லி ஒரு தடவை மட்டும் தான் சாப்பிடுவா.. நான் வெஜ் எதுவும் சாப்பிடமாட்டா..' என்றாள்.

அவளது அன்பில் கண்கள் ஈரமாக “எத்தனை நாள் இப்படி இருக்கா.. “ என்று கேட்டான்.

“இப்போ ஒன் மன்த்தா .. ஆனா.. அக்கா பாவம் அத்தான்.. பெரியம்மா அம்மா பாட்டின்னு இவங்களுக்கு தெரியாம விரதம் இருக்கறது ரொம்ப கஷ்டம்.. கேள்வி கேட்டு தொளச்சி எடுப்பாங்க.. அக்கா எப்படியோ மேனேஜ் பண்ணறா.." என்றாள்.

கண்கள் சட்டென்று ஈரம் கசிய “என்கிட்ட சொன்னதுக்கு தேங்க்ஸ் மித்ரா... நான் யார் கிட்டயும் சொல்லல.. நீயும் காவ்யாட்ட சொல்லாத” என்று விட்டு நகர்ந்தவனை

“அத்தான்.. ஒரு நிமிஷம்.. அக்காக்கு உங்கள ரொம்ப பிடிக்கும். எங்கிட்ட எப்போ பாத்தாலும் உங்கள பத்தி தான் பேசுவா.. ஐ திங்க் ஷி ஐஸ் இன் லவ் வித் யு” என்றாள்.

சட்டென்று அதைக்கேட்டதும் உடல் சிலிர்க்க வெட்கம் முகத்தில் படர அதை மறைப்பதற்காக “அடிங் .. வயசுக்கு ஏத்த மாதிரியா பேசுற.. உன்ன..” என்று போலியாய் அடிக்க ஓடி வ, குடுவென சிரித்துக்கொண்டே உள்ளே ஓடினாள் மித்ரா.

சில நாட்களாகவே அம்மாவும் பாட்டியும் ஜாடைமாடையாக இவர்கள் இருவரின் திருமணம் பற்றி பேசுவது இவன் காதுகளில் விழுந்தாலும் படிப்பு மற்றும் வேலை என்றிருந்ததால் அரவிந்த் அதை அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் இந்த முறை எல்லாமே அவனுக்கு புதிதாய் தெரிந்தது. அதுவும் காவ்யாவும் தன்னை விரும்புகிறாள் என்று புரிந்தபோது அவனுக்கு இனியெல்லாம் சுகமே என்று தோன்றியது.

மறுநாள் தஞ்சாவூர் கிளம்பும்முன் அவளை தனியாக சந்தித்து எப்படியாவது பேசவேண்டும் என்று அவளை அங்கும் இங்குமாய் தேடினான். ஹும்ஹும் .. அவள் கண்ணில் படவேயில்லை..

அன்று மாலை மொட்டைமாடியில் சில்லென்று காற்று வீச காதில் ஹெட் போன் மாட்டியபடி அவனுக்கு மிகவும் பிடித்த ரஹ்மான் இசையை ரசித்து கேட்டுக்கொண்டிருந்தான்.

"முன்பே வா என் அன்பே வா.. பூப்பூவாய் பூப்போம் வா" கண்களை மூடி ரசித்துக்கொண்டிருந்தவன் மிக அருகில் மல்லிகை பூ வாசம் உணர்ந்து மெதுவாய் கண்கள் திறந்தான்.

எதிரில் அவன் மதியம் முதல் தேடிக்கொண்டிருந்த அவன் தேவதை நீல நிற சல்வாரில் மெல்லிய புன்னைகையோடு நின்றிருந்தாள்.

"அத்தான்.. கீழ உங்கள மாமாவும் அத்தையும் கூப்டாங்க" என்றாள் அவன் கண்களை நேருக்குநேர் பார்க்காமலேயே.

"ஹே.. என்ன சொன்ன ? "

"மாமாவும் அத்தையும் உங்கள கீழ வரசொன்னாங்க.."

" இல்ல என்ன எப்படி கூப்பிட்ட?"

"அது வந்து .. அத்தான் ன்னு.. பாட்டிதான் எங்க மூணு பேரையும் உங்கள அத்தான்னுதான் கூப்பிடணும்னு சொன்னாங்க .. “ என்றாள் வெட்கத்துடன்..

"பாட்டி பல வருஷமா சொல்லிட்டு தான் இருக்காங்க.. மித்ராவும் ப்ரவீணும் அப்படித்தானே கூப்பிடுறாங்க.. ஆனா நீ அப்படி கூப்பிட மாட்டியே? இப்போ திடீர்ன்னு என்ன? " என்று குறும்பாய் சிரித்தான்.

அவனுக்கு பதில் சொல்லாமல் தரையை பார்த்தபடியே கையை விரித்து அவன் முன்னே நீட்டினாள்.. "விபூதி எடுத்துக்கோங்க.. நானும் சித்தியும் கோவிலுக்கு போயிருந்தோம்.. அப்பறம் உங்களுக்கு ஒரு குட் நியூஸ்..மாமா இப்போதான் உங்க ஈமெயில் செக் பண்ணாங்களாம்.. உங்களுக்கு ஸ்டான்போர்ட்ல அட்மிஷன் கிடைச்சிடிச்சி.. அதுவும் நீங்க அப்ளை பண்ண அதே கோர்ஸ்க்கு.. விசாக்கு அப்ளை பண்ணசொல்லி ஈமெயில் வந்திருக்காம்" என்று முகமெல்லாம் பூரிப்பாய் சொன்னாள்..

தான் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தியை தன் மனதுக்கு பிடித்த தேவதையே சொல்லியபோது ஒரு நிமிடம் என்ன செய்கிறோம் என்று தெரியாமல்,

"ரியலி? ஓ மை காட்..தேங்க்ஸ் பார் தி ஹாப்பி நியூஸ் காவ்யா.. யு நோ ஹௌ ஹாப்பி ஐ ஆம்" என்று சட்டென்று மெலிதாய் அவளை அணைத்துக்கொண்டான்.

இதை சற்றும் எதிர்பாராத காவ்யா முகமெல்லாம் சிவக்க சற்றே பின் வாங்கினாள். உடனடியாக தன்னிலை உணர்ந்தவன்,

"காவ்யா.. சாரி டா.. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.. இப்போ நீயும் ஹாப்பி தானே.. உன்னோட அம்மன் உன் விரதத்துக்கு பதில் சொல்லிட்டா இல்ல" என்றபடியே விபூதியை வைத்துக்கொண்டான்.

தன் விரத விஷயம் அவனுக்கு தெரிந்துவிட்டது அவளுக்கு இன்னும் படபடப்பை தந்தது.

"நீயும் என்னோட USக்கு வந்துடுறியா?" என்று அவள் கண்களை பார்த்த கேட்டவனை "அத்தான்..??" என்றாள் அவன் கேள்வி புரியாமல்.

உடனே சுதாரித்துக்கொண்டு "இல்ல நீயும் B.E. முடிச்சதும் M.S படிக்க அங்க வரியா.. நான் அப்ளை பண்றேன்" என்றான்.

"இல்ல அத்தான் அப்பா அங்கெல்லாம் அனுப்ப மாட்டாரு" என்று குழந்தையாய் சொன்ன காவ்யாவின் குழந்தைத்தனத்தை வெகுவாக ரசித்தான்.

"சரி அத்தான்.. நான் கீழ போறேன்.. நீங்க வாங்க" என்றபடியே கீழே ஓடிவிட்டாள்.

அவள் போனபிறகும் அவனை சுற்றி அடித்த மல்லியின் வாசமும் சில்லென்ற காற்றும் அவனை "முன்பே வா " பாடலை மீண்டும் கேட்க தோன்றியது.

அன்று அரவிந்த் அவன் வாழ்க்கையில் அவன் நினைத்த எல்லாமே கிடைத்ததாக உணர்ந்தான். அவனுக்கு தெரியுமா அது அவன் நினைத்த அளவு சுலபம் அல்ல என்று.
 
Top