கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உயிர் உருகும் சத்தம் - 6

காலை உணவு முடிந்ததும் அனைவரும் கோவிலுக்கு செல்ல தயாராயினர்.

சிவராமன் "எல்லாம் சரியாய் எடுத்து வச்சிட்டோமான்னு ஒருதடவைக்கு ரெண்டு தடவை பார்த்துகோங்கம்மா " என்று மருமகள்களை பார்த்து சொல்ல,

"எல்லாம் ரெடி மாமா.. பூவும் பழங்களும் தான் வைக்கணும்.. அத வசந்தா கார்ல வச்சிடலாம்" என்றபடியே பூக்கூடைகளை எடுத்துவர காவ்யாவும் மித்ராவும் வாங்கிக்கொண்டனர்.

குடும்பத்தில் அனைவரும் எங்காவது சென்றால் ப்ரவீணும் மித்ராவும் அரவிந்தன் காரில் ஏறிக்கொண்டு காவ்யாவையும் சேர்த்துக்கொள்வர்.

"மாமா, அத்தை நீங்க ரெண்டு பெரும் அந்த கார்ல வாங்க ப்ளீஸ் .. இந்த தாத்தா பெரியப்பா அப்பா எல்லாம் ஒரே போர்.. கார்ல சாமி பாட்டு இல்லனா சிவாஜி, எம்.ஜி.ஆர். பாட்டைப்போட்டு எங்களை ஒருவழி ஆக்கிடுவாங்க...நாங்க அத்தான் கூட உங்க கார்ல வரோம்” என்று ஏறிக்கொண்டு ஏ.ர்.ரஹ்மான் பாடல்களை அலற வைத்துக்கொண்டு வருவார்கள்.

அரவிந்தனுக்கும் காவ்யாக்கும் கூட அதுதான் விருப்பம். பிரவீண் முன் சீட்டில் அமர்ந்துகொள்ள காவ்யாவும் மித்ராவும் பின் சீட்டில் அமர்ந்து கொள்வார்கள். அரவிந்தன் முகமெல்லாம் சிரிப்பாக அவ்வப்போது ரியர் வ்யூ மிரரில் காவ்யாவை பார்த்தபடியே ஸ்டைலாக காரை ஓட்டிக்கொண்டு வருவான். காவ்யா வெட்கமும் பயமுமாய் சிரித்தபடி வர மித்ரா அவளை கிண்டலடித்துக்கொண்டு வர அது ஒரு மாதிரி சுகமான அனுபவம் அவர்கள் இருவருக்கும்.

இன்றும் ப்ரவீணும் மித்ராவும் அதைத்தான் கேட்பார்கள் என்று நினைத்து சுகுமாரன் மகனிடம் கார் சாவியை கொடுக்க, "இல்லப்பா.. எனக்கு இன்னும் ஜெட்லாக் போகல.. நீங்களே டிரைவ் பண்ணுங்க, சாரி பிரவீண் " என்றான்.

சற்றே ஏமாற்றமாக இருந்தாலும் "பாவம் அத்தான்.. நேற்று காலையில்தான் வந்து இறங்கியிருக்கிறார்.. அதற்குள் இப்படி இழுத்தடிக்கிறார்கள் இந்த தாத்தாவும் பாட்டியும்" என்று வருத்தப்பட்டுக்கொண்டாள் காவ்யா.

சுகுமாரன் அவர்கள் வந்த வண்டியை எடுக்க வசந்தாவும் தாத்தா பாட்டியும் அந்த காரில் ஏறிக்கொண்டனர். இன்னும் இரண்டு பெரிய SUVல் மீதியுள்ள அனைவரும் ஏறிக்கொள்ள கார்கள் அனைத்தும் கிளம்பின.

தஞ்சாவூரிலிருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையிலிருந்து 5 கிமீ தொலைவில் இருந்தது அவர்களது குலதெய்வம் கோவில். ஏற்கனவே செய்திருந்த ஏற்பாட்டின்படி பூசாரி எல்லாம் தயாராக வைத்திருக்க பெண்கள் மளமளவென்று பொங்கல் வைக்க ஏற்பாடு செய்தனர். காவ்யா சிவகாமியுடன் சேர்ந்து பூஜை வேலைகளை செய்தாலும் அரவிந்தின் மீதே அவள் பார்வை முழுதும் இருந்தது. எல்லோர் முன்னனிலையிலும் சாதாரணமாக இருப்பவன் காவ்யாவை நேருக்குநேர் பார்க்கும்போது மட்டும் கண்கள் சிமிட்டுவதும், எதாவது குறும்பாய் பேசுவதும் என இருப்பவன் இப்போது அமைதியாய் இருப்பது போல பட்டது அவளுக்கு. அவன் மிகவும் களைப்பாக இருக்கிறான் என்று அவளையே சமாதானப்படுத்திக்கொண்டாலும் எதோ தவறாகவே பட்டது.

பொங்கல் வைத்து முடித்து சாமி கும்பிடும்போது அரவிந்தின் நண்பன் பாலாஜியின் குடும்பம் காரில் வந்து இறங்கியது.

பாலாஜி சிறுவயதிலிருந்தே அரவிந்தின் நண்பன். இருவரும் தஞ்சாவூரில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஒன்றாகவே படித்தனர். அவன் ஹாஸ்டல் என்பதால் அடிக்கடி அரவிந்தின் வீட்டிற்கு வருவான். அரவிந்தன் டெல்லியில் என்ஜினீரிங் படிக்கும்போது பாலாஜி தஞ்சாவூரிலிலேயே என்ஜினீரிங் படித்ததால் அடிக்கடி வீட்டிற்கு வந்து அரவிந்தன் இல்லாத குறையை போக்குவான். பின்னர் இருவரும் அமெரிக்காவில் ஒரே நகரத்தில் இருந்த கல்லூரிகளில் படித்ததால் சேர்ந்தே அபார்ட்மெண்ட் எடுத்து தங்கி இருந்தனர். சென்னையிலும் அவர்கள் கம்பெனிகள் அருகருகே இருந்ததால் ஒரே வீட்டில் தங்கியிருந்தனர். அரவிந்தன் மட்டும் வேலை விஷயமாக அமெரிக்கா செல்ல, தனியாகிப்போனான் பாலாஜி. இதோ இன்று அரவிந்த் அமெரிக்காவில் இருந்து வந்திருப்பதால் பாலாஜி அவனை பார்ப்பதெற்கென்று வெள்ளி அன்றே கிளம்பி திருச்சிக்கு அவன் வீட்டிற்க்கு வந்துவிட்டு ஞாயிறு அன்று தஞ்சாவூர் வருவதாக சொல்லியிருந்தான். அரவிந்தன் தான் தஞ்சாவூருக்கு பதிலாக நேராக கோவிலுக்கு வரசொல்லியிருந்தான். அவனுக்கு காவ்யா வீட்டு ஆட்களும் நன்கு பழக்கம் தான். பாலாஜியோடு அவனது பெற்றோரும் வந்திருந்தனர். இரு குடும்பங்களுக்கிடையே நலம் விசாரிப்புகள் எல்லாம் முடிந்ததும் பூஜையை ஆரம்பித்தனர்.

அவர்களது குலதெய்வம் ஸ்ரீ பங்காரு காமாட்சி அம்மன் மஞ்சள் நிற பட்டுபுடவையில் மலர்ந்த முகத்தோடு அருள் பாலிக்க, பெரியவர்கள் முதல் சிறியவர் வரை அம்பாளை மனமுருக வழிபட்டனர். அனைவரும் கண்கள் மூடி பிராத்திக்க, அரவிந்தன் தன் எதிரே நின்றிருந்த காவ்யாவை அன்பொழுக பார்த்தான். எவ்வளவு சிரத்தையோடும் நம்பிக்கையோடும் கண்களை மூடி பிராத்திக்கிறாள். அவளது பிராத்தனை என்னவென்று எனக்கு தெரியாதா? கடவுளே எந்த காலத்திலும் அவள் மனம் பாடுபடும்படி எதுவும் நடக்கக்கூடாது. எல்லாம் நன்மையில் முடியவேண்டும். அவளுக்கு எதையும் தாங்கும் பலத்தை கொடுக்க வேண்டும். அவள்மீது எனக்குள்ள காதல் அவள் வாழ்வை அழித்துவிடக்கூடாது.

அரவிந்தனுக்கு பெரிதாய் கடவுள் பக்தி இல்லையென்றாலும் அம்மாவுக்காக அவள் எந்த கோவிலுக்கு கூப்பிட்டாலும் வருவான். ஆனால் அவனுக்காகவென்று அவன் பெரிதாய் எதுவும் வேண்டிக்கொண்டதில்லை. அவன் வாழ்வில் எல்லாமே அவன் விருப்பப்படியே தான் நடந்துள்ளது என்பதால் அவன் கடவுளை மனமுறுகி வேண்டுவதற்கான தேவையும் இருந்ததில்லை.

ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை. அவன் மனம் முழுதும் குழப்பமும் தன் முடிவினால் மொத்த குடும்பத்தின் நிம்மதியும் பறிபோய்விடுமோ என்ற பயமும் அவனை பாடாய் படுத்தியதால் கடவுளை மனமுருகி வேண்டினான்.

மணி மதியம் இரண்டை தொட்டிருந்தது. கோவிலை ஒட்டிய கூடத்தில் மத்தியசாப்பாடு தயாராகி பரிமாறப்பட்டது. அனைவரும் கூடத்தில் போட்டிருந்த டேபிளை சுற்றி உட்கார வேலையாட்களுடன் வீட்டுப்பெண்களும் பறிமாறினர்.

அரவிந்தன் அருகே பாலாஜி உட்கார காவ்யாவும் அம்மா சித்தியுடன் பரிமாற ஆரம்பித்தாள். அரவிந்தனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே பரிமாறியவளை நிமிர்ந்தே பார்க்காமல் சாப்பாட்டையே அளந்து கொண்டிருந்தான் அரவிந்த்.

இதை கவனித்த பாலாஜி "டேய் மச்சான்.. இதெல்லாம் ரொம்ப ஓவர்டா.. அவளை பாக்கவே பாவமா இருக்கு" என்று கிசுகிசுத்தான்.

"டேய்.. பேசாம சாப்பிடு " என்றவன் பெயருக்கு எதோ சாப்பிட்டுவிட்டு எழுந்தான். தூரத்தில் இருந்த தண்ணீர் பைப்பில் கை கழுவிவிட்டு திரும்பியவன்

கையில் துண்டோடு காவ்யா நிற்பதை கண்டு திடுக்கிட்டான்.

" ஹே காவ்யா நீ என் இதெல்லாம் .." என்றவனை

"அத்தான் ப்ளீஸ் நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள்.

"என்னடா.. " என்றான் சுரத்தே இல்லாமல்..

"அத்தான் நீங்க வந்ததிலிருந்து பாக்குறேன். என்ன அவாய்ட் பண்ணிட்டே இருக்கீங்க.. அத .. அத என்னால தாங்க முடியல.. நான் ஏதாவது தப்பு பண்ணிருந்தா என்ன மன்னிடுச்சுங்க.. ஆனா என்கிட்ட முன்ன மாதிரி பேசுங்க ப்ளீஸ் " என்றபடியே கண்களில் தரைதாரையாக கண்ணீர் வழிய மெதுவாக கிசுகிசுத்தாள்..

அவளது கண்ணீரைக்கண்டதும் ஆடிப்போய்விட்டான் அரவிந்தன். "ஹே லூசு பொண்ணே.. நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்.. கொஞ்சம் டயர்டா இருக்கு.. அதான்.. ப்ளீஸ் இந்த மாதிரி அழாத.. ரொம்ப கஷ்டமா இருக்கு " என்றான்.

"இது போதும் அத்தான்.. சாரி உங்கள கஷ்டப்படுத்துனதுக்கு.. " என்றபடியே கண்களை யாருமறியாமல் துடைத்துக்கொண்டே நகர்ந்தாள்.

தூரத்தில் இருந்து இதை பார்த்துக்கொண்டிருந்த பாலாஜி அரவிந்த் அருகில் வந்தான். கைகளை கழுவிக்கொண்டே,

"டேய் .. என்னடா யோசிச்சி வச்சிருக்க? ஆனா நீ என்ன சொன்னாலும் ரியாக்சன் ரொம்ப பயங்கரமாதான் இருக்கும். என்னால நெனைச்சே பார்க்க முடியல .. நீ வேணும்னா இன்னொரு வாட்டி அவங்ககிட்ட பேசி பாரேன் " என்றான்.

"டேய்.. நான் எவ்வளோ பேசி பார்த்துட்டேன். அவங்க ரொம்ப பிடிவாதமா இருக்காங்க.. அவ்வளவு தாண்டா என் லைப்.. இந்த மேட்டர்ல மேல பேச எதுவும் இல்ல. இன்னிக்கு வீட்டுக்கு போனதும் எல்லாரையும் உட்கார வச்சி சொல்லிடப்போறேன்" என்றான் அரவிந்த்.

"என்னனு சொல்ல போற? அவங்க சொன்ன அதே காரணமா?"

"அதே காரணத்தை சொன்னா அவங்கள காட்டிகுடுத்த மாதிரி ஆகிடாதா? நா வேற ஒண்ணுதான் சொல்ல போறேன்" என்றான்.

"என்னோவோ போ.. உன் வாழ்க்கைல காவ்யா இல்லன்னு ஆகிடிச்சி.. இனி நீ என்ன சொன்னா என்ன ?" என்று விரக்தியாய் சொல்லிவிட்டு அரவிந்தை பார்த்தவன் அதிர்ச்சியானான்.

கண்கள் குளமாக எங்கோ வெறித்து பார்த்துக்கொண்டிருந்தவனை

"சாரிடா மச்சான்.. அதே அளவு வேதனை உனக்கும் இருக்கும்ங்கறத மறந்துடுறேன்..” என்றான்.

"இட் ஐஸ் ஓகே மச்சான்.. லைப் ஹாஸ் டு மூவ் ஆன்.. " என்றபடியே காவேரிக்கரையோரமிருந்த அந்த மண்டபத்தில் வந்து இருவரும் அமர்ந்தனர்.

பாலாஜியின் போன் அடிக்க "மதுதான்டா பேசுறா.. பேசிட்டு வந்துடுறேன்" என்று சென்றான்.

பாலாஜியின் ஆள் என்று தெரிந்ததும் "அப்போ நீ இப்போதைக்கு வந்த மாதிரிதான்" என்று சொல்லிக்கொண்டே ஹெட்போனை காதில் மாட்டி அவனுக்கு பிடித்த மெலடி பாடல்களை பாடவிட்டான்
 
Top