கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உயிர் உருகும் சத்தம் - 7

" காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே

கண்ணீர் வழியுதடி கண்ணே!

கண்ணுக்குள் நீ தான்

கண்ணீரில் நீ தான்

கண் மூடி பார்த்தால்

நெஞ்சுக்குள் நீதான்

என்னானதோ ஏதானதோ

சொல் சொல்"

சில்லென்று மாலை நேர காற்று காவேரியின் ஈரத்தை தொட்டு வீச இனிய பாடல் தந்த இனிய நினைவுகளுடன் கண்கள் மூடி கிடந்தவன் அருகில் யாரோ வருவதையறிந்து கண் திறந்து பார்த்தான். பிரவீண் தான் நின்றிருந்தான்.

"அத்தான்.. இங்கதான் இருக்கீங்களா..அத்தை உங்கள வரசொன்னாங்க.. பலராம் மாமா வந்துருக்காங்க.. உங்கள பார்க்கணுமுன்னு சொன்னாங்க" என்றான்.

"ஓ.. அப்படியா? இதோ வரேன்..பாலாஜிய பாத்தியா?" என்றான்.

"அவர் இன்னும் போன்ல தான் இருக்கார் " என்று சிரித்தான்.

இவனும் சிரித்துவிட்டு பெரியவர்கள் அனைவரும் அமர்ந்து பேசிகொண்டுருந்த கூடத்திற்கு வந்தான்.

பலராமன் சிவகாமியின் அண்ணன். அவர்கள் ஊரும் பக்கத்தில் ஒரு கிராமம்தான். அரவிந்தை பார்த்ததும் " தம்பி, எப்படி இருக்கப்பா? அமெரிக்கா எப்படி இருக்கு? " என்று முகம் மலர கேட்க,

"நல்லா இருக்கேன் பெரியப்பா.. நீங்க எப்படி இருக்கீங்க?" என்றான்.

"நான் என்னப்பா ஒண்டிக்கட்டை .. ஏதோ ஓடுது " என்றார்.

சிவகாமி வாடிய முகத்துடன் நிற்க அமிர்தம் அம்மாள் சொன்னார்.

"தனியா இருந்து ஏன் கஷ்டப்படணும்.. இங்க நம்ம வீட்டோட வாப்பான்னா நீ தான் கேட்க மாட்டேங்குற.." என்றாள்.

"இருக்கட்டும் அத்தை.. அதான் அப்பப்ப வந்து போய்ட்டுதானே இருக்கேன்.. ஊர்ல விவசாயம் நடக்குது.. நம்மள நம்பி ஒரு பத்து குடும்பம் பொழைக்குது.. அத ஏன் கெடுப்பானேன் " என்றார் சிரித்துக்கொண்டே.

அண்ணனின் கைகளை வாஞ்சையோடு சிவகாமி பற்றிக்கொள்ள

"அது தவிர, தங்கச்சிய நல்லா எடத்துல குடுத்துருக்கேன்.. அவளை ஒரு குறை இல்லாம பாத்துக்கிறீங்க.. எனக்கு வேற என்ன வேணும்.. அடுத்து நம்ம காவ்யாகுட்டி கல்யாணம்தான்.. அதையும் பாத்துட்டேன்னா நிம்மதியா கண்ணை மூடிடுவேன் " என்றார்.

சட்டென்று சிவகாமி கண்கள் கலங்க மணிமாறன் "என்ன மச்சான் நீங்க.. ஏதேதோ பேசிகிட்டு.. காவ்யா கல்யாணத்த நீங்கதான் முன்னாடி நின்னு நடத்தணும்.. அதுக்கு அப்புறமும் நம்ம வீட்ல எவ்வளவு விசேஷம் இருக்கு .. எல்லாத்திலயும் நீங்க தான் முன்னாடி நிக்கணும்.. இப்படி பேசுறீங்களே.. பாருங்க உங்க தங்கச்சிய? " என்று கடிந்து கொண்டார்.

அனைவரும் ஒருநிமிடம் என்ன பேசுவதென்றே தெரியாமல் அமைதி காக்க, சுகுமாரன் தான் அமைதியினை கலைத்தார்.

"அப்பறம், விவசாயம்லாம் எப்படி அண்ணே போகுது நம்ம ஊர்ல? " என்று பேச்சை மாற்றினார்.

"எங்க தம்பி.. முன்னமாதிரி பருவத்துல மழை பெய்யறதில .. நெறய குடும்பங்கள் சிட்டி பக்கம் போய்ட்டாங்க.. விவசாயத்த விடக்கூடாதுன்னு ஏதோ என்னால முடிஞ்சத செய்யுறேன்" என்றார்.

பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்க பிரவீண் மித்ராவையும் காவ்யாவையும் அருகில் இருந்த மாந்தோப்புக்கு இழுத்துக்கொண்டு போனான்.

அதற்குள் போன் பேசி முடித்துவிட்டு பாலாஜி வரவும் "வாடா.. பசங்க தனியா தோப்புக்குள்ள போறாங்க" என்றபடியே அவனையும் கூட்டிக்கொண்டு அவர்களை பின்தொடர்ந்தான் அரவிந்த்.

குழந்தைகள் போவதற்காகவே காத்திருந்த மாதிரி அமிர்தம் அம்மாள் ஆரம்பித்தாள். "மாப்பிள்ளையும் வசந்தாவும் அரவிந்த் கல்யாண விஷயமா என்ன முடிவு பண்ணிருக்கீங்க.. இந்த கார்த்திகை வந்தா அவனுக்கு 29 ஆரம்பிச்சுடும். எங்க எல்லாருக்கும் மனசுல ஒரு ஆசை இருக்கு.. அது என்னன்னு வசந்தா உங்ககிட்ட சொல்லிருப்பா.. அதப்பத்தி உங்க அபிப்பிராயம் என்ன? அரவிந்தக்கு அதுல இஷ்டமா? காவ்யா சரின்னுதான் சொல்லுவானு நாங்க எல்லாம் நினைக்கிறோம்.. இவ்ளோ நாளா அவங்க படிப்பு கெட்டு போயிடக்கூடாதுன்னு நாம எதையும் வெளிப்படையா பேசல.. இப்போ அவங்களுக்கு கல்யாண வயசு வந்துடுச்சி.. யோசிச்சி சொல்லுங்க " என்றார் கணவனையும் பார்த்துக்கொண்டே.

காலையில் மகன் சொன்னது நினைவுக்கு வர வசந்தா "எங்களுக்கும் அந்த ஆசை இருக்கும்மா.. நாங்க இன்னும் அரவிந்த் கிட்ட அத பத்தி பேசல.. பேசிட்டு எங்க முடிவை சொல்றோம்.. அண்ணே அண்ணிக்கெல்லாம் ஓகே தானே" என்று கேட்டாள்.

"என்னம்மா இப்படி கேக்குற.. அரவிந்த் மாதிரி மாப்பிள்ளைய நாங்க எங்க போய் தேடுவோம்.. சொந்தத்துக்குள்ள ஜாதகமும் பாக்க அவசியம் இல்ல .. இல்லப்பா?" என்று மணிமாறனும் சொல்ல,

"ஆமாம்பா.. மொதல்ல என் பேரப்பிள்ளைங்ககிட்ட கேளுங்க..அவங்களுக்கு சம்மதம்ன்னா முடிசிடலாம்." என்றார் தாத்தா.

"ஒண்ணு மண்ணா வளந்தவங்க.. வேண்டாம்னா சொல்லப்போறாங்க.. அப்போ சீக்கிரமாவே கல்யாணசாப்பாடு போடப்போறீங்க " என்று பாலாஜியின் அப்பா சொல்ல எல்லோரும் சிரிக்க அந்த இருவர் மட்டும் ஒருவரையொருவர் சலனமின்றி பார்த்துக்கொண்டனர்.

"டேய்.. அங்க நம்மள தேட போறாங்கடா.. இப்போ எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த?" என்று பிரவீணை கடிந்தவள் அவர்கள் பின்னாடியே அரவிந்தும் பாலாஜியும் வருவதை பார்த்ததும் முகம் மலர்ந்தாள் காவ்யா.

இதை கவனித்த மித்ரா கிண்டலாக " ஆமா .. ஆமா .. அம்மா பெரியம்மாலாம் திட்டுவாங்க.. வாக்கா.. போலாம் " என்றாள்.

"ஹே இருடி.. இந்த மரத்துல மாங்கா சூப்பரா இருக்கும். அத்தானை பறிச்சு தரச்சொல்லலாம்" என்றாள்.

"ஹ்ம்ம்.. ஓகே ஓகே " என்றவள்

"அத்தான்.. இந்த மாங்காவை பறிச்சு தரீங்களா?" என்றாள்.

அவர்களை பார்த்து முறுவலித்தவன் "இது யாரு குடுத்த ஐடியா.. காவ்யா மேடமா?" என்றபடியே கொஞ்சமாய் எம்பி கொத்தாக இருந்த மாங்காய்களை பறித்தான்..

"வாவ் சூப்பர் அத்தான்" என்றபடியே கீழே விழுந்த மாங்காய்களை எடுத்துக்கொண்டு "அக்கா நாங்க அந்த பைப்புல வாஷ் பண்ணிட்டு வந்துடுறோம் " என்று ஓடினர்.

காவ்யாவும் அரவிந்தனும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைக்க வராத போனை ஆன் செய்தபடி.. " ஆமாம் .. நான் பாலாஜிதான் பேசுறேன் சொல்லுங்க " என்றபடியே நகர்ந்தான் பாலாஜி.

கைகளில் இருந்த தூசியை தட்டியவன் ஏதோ சுள்ளென்று வலிக்க "ஆ.." என்று கத்தியே விட்டான்.

"என்னாச்சு அத்தான்?" என்று பதறியவளிடம் "ம்ம் ஒண்ணுமில்லடா.. மரத்துல இருந்து சின்ன வுட் பீஸ் குத்தியிருக்கு.. வேற ஒண்ணுமில்ல " என்றான்.

"கைய காட்டுங்க..ப்ளீஸ் " என்றவள் அவனது நடுவிரலில் குத்தியிருந்த அந்த சிறிய மரத்துணுக்கை கவனமாக எடுத்துவிட்டு "இப்போ ஓகே வா அத்தான்" என்று நிமிர்ந்தவளின் கண்கள் கலங்கியிருந்தன.

அவளது மைபூசிய அழகிய விழிகள் தனக்காக கலங்குவதைப்பார்த்ததும் அப்படியே அவளை அணைத்து அவள் கண்களில் முத்தமிட்டு "எனக்கு ஒன்றுமில்லையடி கண்ணே.. நீ இருக்கும்போது எனக்கு எதுவும் ஆகாது" என்று சொல்ல வேண்டும்போல் இருந்தது அவனுக்கு. ஆனால் அவன் கைகள் தான் கட்டிப்போட்டுவிடப்பட்டனவே.

" காவ்யா.. எனக்கு ஒண்ணும் இல்லடா.. இதுக்கு போய் குழந்தையாட்டம் அழுதுகிட்டு .. " என்றான்.

''இல்ல அத்தான் .. இப்போல்லாம் உங்களுக்கு ஏதாவதுன்னா என்னால தாங்கவே முடியல " என்றவள் அவனை காதலோடு பார்த்துவிட்டு அவனது அந்த மரத்துணுக்கு குத்திய விரலில் சட்டென்று முத்தமிட்டாள்.

மொத்த உடலும் சிலிர்க்க ஆச்சர்யத்தில் உறைந்து போனான் அரவிந்த். அவனிடம் பேசவே தயங்கும் காவ்யாவா இது என்றிருந்தது அவனுக்கு.. அவளுக்கு தன்மேலுள்ள அளவிலா காதல் பன்மடங்கு பெருகியிருந்தததை உணர்ந்தான். அவன்தானே அந்த நம்பிக்கையை அவளுக்கு தந்துவிட்டிருந்தான்.. அதுவும் போனமுறை அவளுக்கு அச்சாரம் தருவதைபோல் அழுத்தமாக கன்னத்தில் முத்தம் கொடுத்து நான் பெரியவர்களிடம் பேசுகிறேன் என்று சொல்லி.. எல்லாமே நான் தான்.. இப்போது இது எதுவுமே நடக்க போவதில்லை என்று சொல்லப்போகிறவனும் நானே..

அவன் பலவிதமாய் யோசித்துக்கொண்டிருக்கும்போதே பாலாஜி அவனை உலுக்கினான். "டேய் .. டேய்.. மச்சான் அவளை என்னடா பண்ண? இவ்ளோ வெட்கப்பட்டுட்டே போறா" என்றான்.

வெட்கத்துடன் அவனை திரும்பிப்பார்த்துக்கொண்டே மித்ரா ப்ரவீனுடன் கூடத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் காவ்யா.

"ஒண்ணும் இல்லடா .. அவ.. அவ என்ன ரொம்ப லவ் பண்றா மச்சான்.. எப்படி டீல் பண்ணப்போறேன்னு தெரியல " என்றான்.

"சரி விடு.. பாத்துக்கலாம்.. நானும் உன்கூட தாத்தா வீட்டுக்கு வரேன்.. எப்படியும் புதன் கிழமைதான் நான் சென்னைக்கு போகணும் " என்றான்.

"தேங்க்ஸ் டா.. " என்றவன் நண்பனை கட்டிக்கொண்டான்.

சற்றே இருட்ட தொடங்கியவுடன் அனைவரும் கோவிலில் இருந்து புறப்பட்டனர். பலராமன் தான் வந்த புல்லட்டில் தன் ஊருக்கு கிளம்ப , பாலாஜியின் பெற்றோர் அவர்கள் காரில் திருச்சிக்கு கிளம்பினர். பாலாஜி அரவிந்தின் காரை ஓட்ட அரவிந்த் அவன் அருகில் உட்கார்ந்து கொண்டான். சுகுமாரனும் வசந்தாவும் பின் சீட்டில் உட்கார்ந்தனர். வந்தவர்கள் அனைவரும் மற்ற இரு கார்களில் ஏற கார்கள் கிளம்பின.
 
Top