கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உயிர் 10

Rhea Moorthy

Moderator
Staff member
அடுத்த இரண்டு நாட்களிலேயே, 'அதியனிடம் ஏதோ சூப்பர் ஹீரோ சக்தி இருக்கிறது!..' என்ற செய்தி நாடு முழுவதும் காட்டுத்தீ போலப் பரவிற்று.

அவனைத் தெரிந்தவர்கள் அனைவரும் அவனோடு சோஷியல் மீடியா மூலம் பேச முற்பட்டார்கள், ஆனால் அவனுக்கு அதற்கான‌ அனுமதி தரப்படவில்லை..

டிவி சேனல்கள் அனைத்தும் டிஆர்பிக்காக அதியனைப் பற்றி அவன் படித்த ஸ்கூல், வசித்த வீதி, வேலை செய்த ஆபீஸ் என்று தேடித்தேடி பேட்டி எடுத்துத் தள்ளியது. தெருக் கோடியிலிருக்கும் பெட்டிக் கடையில் நின்று, அவன் கடலைமிட்டாய் சாப்பிட்டது கூட முக்கியச் செய்தி ரேஞ்சிற்குப் பில்டப் கொடுத்துப் பேசப்பட்டது.

இரவு நேர கூர்க்காகூட, 'அதியனைத் தனக்கு நன்றாகத் தெரியும்' என்று கெத்து காட்டிப் பேசிட, கிரகலட்சுமிக்கும் தணிகாச்சலத்திற்கும், 'தங்கள் பிள்ளைக்குக் குறைந்த நேரத்தில் இவ்வளவு பெரிய புகழ் வருவது சரியா?' என்று பயம் வந்தது..

அதியின் போன் எந்நேரமும் அணைத்து வைக்கும் படியே இருந்தது. அது அவனுக்கும் தீட்சுவுக்குமிடையே மிகப்பெரிய பள்ளத்தினை உருவாக்கி விட்டிருந்தது..

ஆனாலும் அவன் சும்மா இருக்கவில்லை, இக்காலத்து இளைஞன் இல்லையா? கிடைக்கும் கேப்பில் எல்லாம் கெடா வெட்டிக் கொண்டு இருந்தான்.

ஆரம்பம்‌ முதலே அவனுக்கு ஆதரவு தரும்‌ டிஜிபியும் இந்த வயதுக் கோளாறு விஷயங்களைப் பெரிது படுத்த விரும்பாததால், அதியனை இதில் மட்டும் யாரும் கட்டுப்படுத்தவில்லை.

அனைத்தும் சுமூகமாகப் போய்க் கொண்டிருந்த வேளையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் திடீரென நெருப்பு பரவுவதாக அரசுக்கு அவசர தகவல் வந்தது.

நெருப்பின் வேகமும் உக்கிரமும் அபரிமிதமாக இருந்த காரணத்தால், அரை மணி நேரத்திற்குள்ளேயே பல சதுர கிலோமீட்டர் அளவிற்கு நெருப்பு பரவிவிட்டது. காட்டுப்பகுதி என்பதால் தீயணைப்பு வீரர்கள் உள்ளே புகுந்து நெருப்பை அணைக்க இயலாது..

ஆரம்பப் பகுதியில் இருக்கும் சின்னக்காடு மட்டுமே இப்பொழுது ஆபத்திற்குள் சிக்கியிருக்கிறது. இதேபோல நெருப்பு தொடர்ந்து பரவினால் சில கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் பெரிய காடும் நெருப்பின் கரங்களுக்குச் சென்றுவிடும்.

அப்பகுதியில் ஏகப்பட்ட மலைவாழ் மக்கள் ஆங்காங்கே கிராமம் அமைத்து வாழ்ந்து கொண்டு இருப்பது தெரிந்த முதலமைச்சர், என்ன செய்வது என்று தெரியாமல் குருட்டு நம்பிக்கையோடு அதியனிடமும் விஷயத்தைப் போட்டு வைத்தார்.

அவனும் அவனுக்கென டிஜிபி உருவாக்கிய குழுவும் ஹெலிகாப்டர் உதவியோடு விரைந்து அவ்விடத்திற்குச் சென்றனர். கண் எதிரே ஒரு பெருங்காடு பற்றிக்கொண்டு எரிவதைப் பார்த்த அதியன், அதன் பிரம்மாண்ட கோரத் தாண்டவத்தைக் கண்டு ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தான்.

அதியனை உலுக்கிய‌ ஃபாரஸ்ட் ஆபீசர், "இந்த இடத்தில தண்ணி ரொம்ப குறைவு. வடக்கு பக்கமா இருக்குற அந்த கருப்பு மலைக்கு பின்னால ஒரு சின்ன ஆறு ஓடுது, அதுல நீர்வரத்து இப்போ நல்லா இருக்குது.

அந்தத் தண்ணிய இந்தப் பக்கம் இழுத்துப் பாய்ச்சினா ஓரளவுக்கு நம்மால நெருப்பை கட்டுப்படுத்த முடியும். ஆனா அது அவ்வளவு சுலபமில்லை..

எப்படியாவது நாம பெரிய காட்டுக்கு நெருப்பு பரவாம தடுக்கனும், நம்மளை மீறி நெருப்பு பரவிட்டா இந்த வருஷத்தோட மிகப்பெரிய சேதாரம் இதுவா தான் இருக்கும். உங்களால அந்த மலைக்கு பின்னால இருக்கிற தண்ணிய இங்கே கொண்டு வர்ற மாதிரி ஏதாவது செய்ய முடியுமா?" என்றார்.

அவர் கைகாட்டிய திசையில் திரும்பிப் பார்த்த அதியன் இன்னும் மிரண்டு போனான், காரணம் அந்த மலையே கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.

'அந்த மலைக்குப் பின்னால் ஓடும் சின்னஞ்சிறு ஆற்றிலிருந்து எப்படி இந்த நெருப்பை அணைக்குமளவு தண்ணீரைக் கொண்டு வருவது? இந்த சின்னஞ்சிறிய வாட்ச் எவ்வளவு தண்ணீரை அள்ளி வரும்? இது எடுத்து வரும் நீரை கொண்டு எப்போது நெருப்பை அணைத்து, என்றைக்கு மலைவாழ் மக்களைப் பாதுகாப்பது?' என்று புரியாமல் குழம்பினான்..

முடியாது என்று தெரிந்த பிறகும், முயற்சிக்காமல் இருப்பதே மூடத்தனம் இல்லையா.. ஆதலால் ஒரு முறை முயற்சி செய்து பார்க்க முடிவெடுத்தான் அதியன்.

தன் வாட்ச்சிடம், "இங்க பாரேன், இந்த இடம் முழுக்க நெருப்பா இருக்கு. இது கொஞ்ச நேரத்துல நிறைய பேரோட உயிர குடிக்க போகுது. நீ எப்படியாவது இத கட்டுப்படுத்த ட்ரை பண்ணு" என்று உத்தர விட்டான்.

அதியனின்‌ கையிலிருந்து வாட்ச் கீழே இறங்கியது. அத்தனைபேரும்‌ அது ஒரு ரோபோட் போலத் தனியாகச் செயல்படுவதைக் கண்டு தமது வேலையை நிறுத்தி விட்டு அதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.

வாட்ச் உருவத்திலிருந்து, ஒரு உருண்டை பந்து போல மாறியது. அடுத்து பெரிய பலூன் போல கொஞ்சம் கொஞ்சமாக விரிந்தது. மரம், செடி, நெருப்பு, பாறை என்று அனைத்தின் மேலும் பாகுபாடின்றி விரவிப் பரவிய‌ அது, நெருப்பு படர்ந்திருக்கும் பகுதி முழுவதையும் மூடியபிறகே அடங்கியது.

பத்து நிமிடத்தில் அந்தப் பகுதி முழுவதிலும் படர்ந்து விரிந்து நிற்கும் அதனை, அங்கிருந்தவர்கள்‌ அனைவரும் வாயில் ஈ நுழைவது கூடத் தெரியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

கூட்டத்தில் யாரோ ஒருவர், "ஒருவேள ஆக்ஸிஜன கட்டுப்படுத்தி நெருப்ப அணைக்குதா?" என்று அறிவுப்பூர்வமாய் ஒரு கேள்வியைக் கேட்டார்.

'அப்படித்தான் இருக்குமோ?!' என்று அனைவருமே தங்களுக்குள் சலசலக்க, எண்ணி ஐந்தே நிமிடத்தில் ஆக்ஸிஜன் இன்றி ஒட்டு மொத்த நெருப்பும் அணைந்து போனது.

அதன் பிறகு அந்த வாட்ச் பறந்து சென்று அதியன் சொன்ன ஆற்றிலிருந்து நீரைக் கொண்டு வந்து, கனன்று கொண்டிருந்த கங்குகள் அனைத்தையும் அணைத்து விட்டது.

நொடிப்பொழுதில் மிகப்பெரிய சேதாரம் தடுத்து நிறுத்தப்பட்டதைக் கண்டு அனைவரும் உற்சாகக் கூச்சலிட்டு தத்தமது மகிழ்ச்சியைப் பகிர, அதியனுக்கும் தன் வாட்ச்சை நினைத்து பெருமை தலை தூக்கலாயிற்று.

வாட்ச் தன் பழைய உருவத்திற்குத் திரும்பிட, வந்திருந்த அதிகாரிகளுள் ஒருவர் அதியனைப் பாராட்டி, "உண்மையிலேயே இதை நாங்க எதிர்பாரக்கல மிஸ்டர் அதியமான். இந்த மாதிரி கிரிட்டிகலான இடத்தில உருவாகிற காட்டு தீ, சில சமயம் மாசக்கணக்கா எரியும்.

போதுமான வசதி இல்லாத இந்தக் காடு கண்டிப்பா தீக்கு இறையாகப் போகுது, காட்டுல இருக்கிற அற்புத தாவரங்களும், அழகான விலங்குகளும் இன்னியோட கரிக்கட்டையாகப் போகுதுனு நினைச்சேன். கடவுள் புண்ணியத்துல நீ காப்பாத்திட்ட, ரொம்ப நன்றிப்பா" என்று நெகிழ்ச்சியோடு‌ நன்றி சொன்னார்.

செய்தி முதலமைச்சருக்கு விரைந்து தெரிவிக்கப்பட, நாலா திசைகளிலிருந்தும் அதியனுக்குப் பாராட்டுகள் வந்து குவிந்த வண்ணமிருந்தது. வெகு விரைவிலேயே அவனைப் பற்றிய தகவல் பாரதப் பிரதமருக்கும் கசிய, அவரே நேரடியாக அதியனுக்குத் தொடர்பு கொண்டு தன் பாராட்டினைத் தெரிவித்தார்.

சோதனைகளையும்‌ பயிற்சிகளையும் தாண்டியதொரு பலமான ஆயுதமாய் அதியன் இந்திய அரசாங்கத்தின் பார்வைக்குத் தெரியத் துவங்கினான். அப்படியே ஒரு வாரம் நகர்ந்தது.

அந்த நேரம்தான் புனித யாத்திரைக்குப் பெயர் பெற்ற கேதர்நாத் மலைப் பகுதியில் இரண்டாம் முறையாக வெள்ள அபாயம் உருவானது. வெளிநாட்டிலிருந்தும் வெளி மாநிலத்திலிருந்தும், எண்ணற்ற மக்கள் கடவுளைத் தரிசிக்க வந்திருந்தார்கள்.

'பரம்பொருளானவனைக் கண்ணால் கண்டால் போதும், பிறவிப் பயனை அடைந்து விடுவோம்' என்பது போல் பக்தி பரவசத்தோடு மக்கள் கோவிலைச் சுற்றி உலவிக் கொண்டிருந்தனர்.

ராணுவத்தினருக்கோ எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகளே நிறைந்து தெரிந்தது. அவர்கள் அத்தனை பேரையும் அப்புறப்படுத்துவது அவ்வளவு சுலபமில்லை என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

கரடுமுரடாக ஏற்ற இரக்கத்தோடு ஒழுங்கில்லாமல் இருந்த அப்பகுதியில், சாதாரணமாக நடக்கவே சிரமப்பட்டும் மக்கள் இப்போது மிகப் பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாய் ராணுவத்தினர் நினைத்து அஞ்சினர்.

நல்லவேளையாக இம்முறை இரு பெரும்‌ மலைச்சரிவுகளுக்கு இடையில் வெள்ளம் வரப்போகிறதென்ற செய்தி முன்கூட்டியே அரசுக்குத் தெரிந்துவிட்டது.

ஆனால் மழையும் பனிப் பாதையுமான அவ்விடத்திலிருந்து ஆயிரக்கணக்கான மக்களை,‌ எவ்வாறு ஐந்து மணி நேர அவகாசத்தில் வெளியேற்றுவது எனும் கேள்விக்குத்தான் அவர்களிடம் பதில் இல்லை.

மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், முடிந்த அளவு வேகமாய் சுற்று வட்டார பகுதியில் இருந்தவர்களை அப்புறப் படுத்தும் நோக்கோடு ராணுவத்தைக் குவித்து வைத்திருந்தது அரசு.

அவர்களும்‌ தங்களால் முடிந்த அளவிற்கு அதி விரைவாக அங்கிருந்து மக்களை அப்புறப்படுத்தி, அருகில் இருக்கும் உயரமான மலைகளை நோக்கி அனுப்பிக் கொண்டே இருந்தனர்.

ஒரு பாதி மக்கள் ஒரு புறம்‌ நகர்ந்தாலும், மறு பாதி மக்களை மலையேற்றப் பாதை வழியே விரைவாகப் பயணப்படுத்துவது ராணுவத்தினருக்கு வெகு சிரமமாக இருந்தது.

பெரும்பாலும் வயதானவர்களே இருக்க, சாதாரணமாய் நடக்கச் சிரமப் படுபவர்களின் பாதங்களை ஊசி முனைக் கற்கள் வேறு பதம் பார்த்தது. அதை எல்லாம் பொருட்படுத்தாது அந்தக் கடவுளின் நாமத்தை உயிர் உருக உச்சரித்தபடியே, ராணுவத்தினரின் உத்தரவிற்குக் கட்டுப்பட்டு விரைந்து நடந்தது மக்கள் கூட்டம்‌.

வானத்தில் ஓட்டை விழுந்ததைப் போலப் பேரிரைச்சலோடு பொழியத் துவங்கி விட்டது மழை. காற்றும் மேகங்களும் வருண தேவனுக்கு உதவிட, எதிர் பார்த்ததை விடவும் வேகமாக நீரின் வரத்து அதிகரிக்கத் துவங்கியது.

பாதிக்கும் மேற்பட்டோர் நடு வழியில் மாட்டிக் கொண்டனர். இதில் குழந்தைகள் வேறு ஊசித் தூரலால் உடல் சிலிர்த்து நடுங்கியதில் பயந்து அழத் தொடங்கிவிட்டனர்.

எதிர்பார்த்ததை விடவும் மழையின் கோரம் அதிகரித்து அப்பகுதி முழுவதையும் தன் ஆட்சிக்குள் அடக்க முயன்றிருந்த நேரம், ஆபத்பாண்டவனாய் அதியன் அங்கு விமானத்தில் வந்திறங்கினான்.

அந்த இடத்தில் இறங்கியதும், அன்று போலவே இன்றும் வாட்ச்சின் ஒரு பகுதியை லென்ஸ் போல உருமாற்றி விட்டான். அவன் கண்களிலிருந்த லென்ஸிற்கு மனிதர்கள் சிக்கிக் கொண்டு இருக்கும் இடத்தையெல்லாம் குறிப்பிட்டுக் காட்டும்படி‌ கோரிக்கை விடுத்தான்.

அடுத்த கணமே ஒவ்வொரு உயிரும் எங்கெங்கே, எப்படிச் சிக்கியிருக்கிறது என்பது வரை அவன் கண்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. தயார் நிலையிலிருந்த ஒரு ஹெலிகாப்டரில் அவன் ஏறிக் கொள்ள, அவனைப் பின் தொடர்ந்து பத்துப் பதினைந்து ஹெலிகாப்டர்கள் படையெடுத்துப் பறக்க ஆரம்பித்தது.

ஒரு அப்பா, தன் இரண்டு பெண் குழந்தைகளையும் தோள் மேல் உட்கார வைத்துக் கொண்டு, கழுத்தளவுத் தண்ணீரில் மனைவியையும் கைவிடாமல் தள்ளாடியபடி நடந்து சென்று கொண்டிருந்தார்..

அப்பாவின் கழுத்து வரை தண்ணீர் வந்து விட்டதாலும், மழையின் குளிராலும் அந்தக் குழந்தைகள் இரண்டும் கதறி அழுதது.

வயதானவர்கள் சிலர் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, ஒருவரோடு ஒருவர் கரம் கோர்த்து நடக்கையில், ஒருவர் வழுக்கி விழ அத்தனை பேரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

பேய் மழை மானுடர்கள் மேல் இரக்கம் கொண்டு தன் அளவைச் சுருக்க மாட்டேன் என்று அடம் பிடித்தது. மீட்புப் படையினர் நுழைய முடியாத அளவிற்கு, சில கட்டிடங்களின் அமைப்பு இருக்க, எங்கு பார்த்தாலும் மரண ஓலம் மட்டுமே ஒலித்தது.

அதியின் கையிலிருந்த வாட்ச் இப்போதும் க்ளவுஸ் போல உருமாறிட, அதனிலிருந்து சிறு சிறு நூல் போல உறுதிமிக்க இழை ஒன்று பிரிந்து பாய்ந்தது. ஆங்காங்கே நீரில் தத்தளிக்கும் அத்தனை உயிர்களையும், மைக்ரோ செகண்டுக்குள் வெளியே தூக்கிய நூலிழை, அவர்களைப் பத்திரமாய் தங்களுக்குப் பின்னால் வந்த ஹெலிகாப்டருக்குள் இறக்கி விட்டது..

முதல் ஹெலிகாப்டரில் ஆட்கள் நிறைந்ததும் அது, வரிசையிலிருந்து பிரிந்து பறக்க, அடுத்த ஹெலிகாப்டரை நிரப்ப ஆரம்பித்தது வாட்ச்.

பதினைந்து ஹெலிகாப்டர்களும் மக்களைக் கூட்டி வரவும் இறக்கி விடவும், என்று பரபரவென்று வேலைப் பார்க்க எண்ணி அரை மணி நேரத்தில் வெள்ளத்தில் சிக்கிய அத்தனை பேரும் மீட்கப்பட்டனர்.

அதியனும் அவன் வாட்ச்சும் பெரும்பான்மையான வேலைகளைச் செய்து விட்டதால், மீட்புப் பணிக்காக வந்த ராணுவ வீரர்கள் காப்பாற்றப்பட்ட மக்களை ஊருக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த குடிலில், உணவு போர்வை சகிதம் பத்திரப் படுத்தி வைத்தனர்.

காயம்பட்டு வந்தவர்கள் அனைவருக்கும் உடனுக்குடன் மருத்துவ சேவைகள் செய்யப்பட, கூடவே அவர்களோடு வந்த மற்ற நபர்களைப் பற்றிய கணக்கெடுப்பும் புயல் வேகத்தில் நிகழ்ந்தேறியது.

ஆயிரக்கணக்கில் உயிர்ச் சேதம் நிகழ்ந்திருக்க வேண்டிய நேரத்தில், எண்ணி பத்தே பத்து பேர் மட்டுமே தொலைந்து போனதாய், ஆர்மி ஆபீசர்கள் எழுதிய‌ கணக்கு அத்தனை பேரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் அதியனை ஆர்மி ஆட்களே மலைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தனர். தப்பிப் பிழைத்த மக்கள் பாதுகாப்பாக விமானம் மூலம் பாதுகாப்பாகப் பக்கத்து ஊர்களுக்கு அனுப்பப் பட்டனர்..

இதுவரை உள்நாட்டிற்குள் மூடி மறைத்து வைக்கப்பட்டிருந்த அத்தனை உண்மைகளும், இன்று உலக மக்கள் முன்பாக பகிரங்கமாய் வெளியாகிவிட்டது. இனி வல்லரசுகளின் பார்வையிலிருந்து அதியனையும் அவன் வாட்ச்சையும் ஒளித்து வைக்க முடியாது என்று அரசாங்கத்திற்கும் புரிந்து போனது.

வேலையை முடித்துவிட்டு சென்னைக்குத் திரும்பி வந்து இறங்கியவனை, தமிழகத்தின் எல்லா உயர்மட்ட அதிகாரிகளும் பாராட்டி வரவேற்றார்கள். முதலமைச்சர் அவனை நேரடியாக தன் இல்லத்திற்கே அழைத்துப் பாராட்டினார்.

பிரதம மந்திரி அவனையும் அவன் வாட்ச்சையும் பார்ப்பதற்காகவே ஒரு நாள் விருந்துக்கு அழைத்திருந்தார். இந்தியாவின் புகழ்பெற்ற நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் என்று அத்தனை பேரும் சோசியல் மீடியாக்களில் அதியனின் புகழைத்தான் பாடிக் கொண்டிருந்தனர்.

ஒரே நாளில் ஊர் போற்றும் செலபிரிட்டியாக மாறிவிட்ட அதியைக்‌ கையிலேயே பிடிக்க முடியவில்லை. அவன் இதுவரை கனவில் கூட நினைத்துப் பார்க்காதது எல்லாம், இப்பொழுது நிஜமாக நடந்து கொண்டிருந்தது.

அவனுக்கே தான் ஒரு மாய லோகத்தில் இருப்பது போன்ற மிதப்பு உருவாகத் துவங்கியது. சோஷியல் மீடியாவில் அவனது ஒரு ரிப்ளைக்கு அத்தனை மதிப்பு உருவாகியது.

ஒரு முறை அவனை நேரில் பார்த்து, அவனோடு சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்ள விரும்புபவர்களின் எண்ணிக்கை லட்சங்களைக் கடந்து கோடிகளை நெருங்கிக் கொண்டிருந்தது.

அவனைப் பற்றி தெரியாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, உலகத்தின் பார்வையில் அதியன் ஒரு சூப்பர் மேனாக அரிதாரம் பூசிக் கொள்ள ஆரம்பித்தான்.

அடுத்த நான்கு நாட்களுக்குப் பிறகு காஷ்மீர் பகுதியில் இராணுவ வீரர்கள் சென்ற வண்டி ஒன்று பனிச் சரிவில் சரிந்து மூழ்கி விட, யாரையும் கேட்காமல் அதியன் வீட்டுக்கு போன் போடும் அளவுக்கு அவன் பெரும்புள்ளியாய் மாறிவிட்டான்.

அங்கு சென்று, அரை விநாடிப் பொழுதில் அத்தனை பேரையும் அதியன் உயிருடன் காப்பாற்றி, வாகனத்தையும் ஆயுதங்களையும் மீட்டு எடுத்து வந்தான். அடுத்தடுத்து இதுவே தொடர்கதையாக, உயிர் சேதாரத்தைக் குறைக்கும்‌ அதியனுக்கு இன்று உலகச் சந்தையில் ஏக கிராக்கி..

முழுதாய் பதினைந்து நாட்கள் கழித்து தீட்சண்யாவிடம் பேச நேரம் கிடைத்தது. அளவில்லாதப் புகழைச் சுமந்து கொண்டிருக்கும் மனம் அத்தனையையும் துளி மிச்சம் இல்லாமல் தன் காதலியின் மடியில் இறக்கி வைக்க ஏங்கியது..

அவள் அழைப்பை எடுத்ததுமே, "தீட்சு, செல்லம்.." என்று உயிர் உருக அழைத்தான்.

"பத்திரமா வந்துட்டியா அதி?" என்றாள் பாதி தூக்கத்தில் எழுந்திருந்த பேதை.

"ம் வந்துட்டேன்டி, நீ தூங்கிட்டியா? வேணும்னா காலையில பேசவா?"

"வேணாம், பகல் டைம்ல யாராவது உன்ன எங்கேயாவது கூட்டிட்டுப் போயிடுறாங்க. இப்பவே நாலு வார்த்தை பேசிடு" என்று ஏங்கும் ஏக்கத்தை அவனால் அங்கிருந்தே உணர முடிந்தது.

"சாரிடி, முன்ன மாதிரி அடிக்கடி என்னால உங்கூட பேச முடியல.." என்று காதலியின் அருகாமைக்காக அவனுமே தவித்தான்.

"நீ பக்கத்துல இல்லாமயே என்னால இப்ப ஓரளவுக்கு சிச்சுவேஷன சமாளிக்க முடியுது அதி" என்று பிதற்றினாள்.

"ஏன்டி அப்படி என்ன சிச்சுவேஷன் உனக்கு வந்துச்சு?"

"ஒண்ணுமில்ல, சும்மா சொல்லனும்னு தோணுச்சு, அதான் சொன்னேன்.."

"தீட்சு இன்னிக்கி என்ன எத்தனை பேர் பாராட்டினாங்க தெரியுமா? பிரதம மந்திரி என்ன அவரோட வீட்டுக்கே கூப்பிட்டு பாராட்டினார்டி.. தோனி கூட போன்ல பேசுவேன்னு நான் கனவுல கூட நினைச்சு பாக்கல, என்ன எவ்வளவு புகழ்ந்தார் தெரியுமா?

ரஜினி, கமல் கூட போன் பண்ணினாங்கடி. அடுத்து அம்பானி வீட்டுல இருந்து லஞ்ச்க்கு இன்விடேஷன் வந்திருக்கு. அவங்க என்ன டிஷ் எல்லாம் சமைப்பாங்கனு இப்ப இருந்தே யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்.

கேதார்நாத்துல நான் செஞ்ச உதவிக்கு பரிசா அந்த ஸ்டேட் கவர்மென்ட், அங்கேயே எனக்கு ஒரு பெரிய வீடு கட்டிக் கொடுத்து கௌரவிச்சிருக்கு. நம்ம பிரதம மந்திரி என்ன பாராட்டி ஏதோ விருது கொடுத்த போறதா அரசல் புரசலா பேசிக்கிறாங்க.

நம்ம முதலமைச்சர் வீட்டுக்குப் போனேன், அப்பதான் தெரிஞ்சது அவரு வீட்டுக்கு இருந்த பாதுகாப்பு ஆட்களை விட என்னோட வீட்டுக்கு அதிகமான ஆட்களை நிறுத்தி வச்சிருக்காங்கனு. ஊரையே நான்தான் காப்பாத்துறேன், எனக்கு இவ்வளோ பாதுகாப்பாம்? கேக்குறதுக்கே காமெடியா இல்ல?

எப்பவும் என்ன சுத்தி பத்து பேர் நிக்கிறாங்க, இவ்வளவு ஆளுங்களுக்கு நடுவுல நடக்க, சாப்பிட, தூங்கனு இருக்குறது ஒருமாதிரி ஃபீல் ஆகுதுடி. என்ன நானே பாத்துக்குவேன் சார்னு‌ எவ்வளவு சொன்னாலும் பிஎம் கேட்க மாட்டேங்கிறாரு.

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் விஷயம் தெரிஞ்சு போச்சுனு அவரு பயப்படுறாரு. அவங்க இது ஏதோ புதுவித ஆயுதம்னு நினைச்சு என்னப் பத்தி ரகசியமா விசாரிக்கிறாங்களாம்.

அயர்மேன் படத்த அண்ணாந்து பார்த்த பயலுக இருக்குற ஊர்ல, நிஜமாவே ஒரு ஆளு அப்படி சூப்பர் பவரோட இருக்குறது அவனுங்களுக்கு கடுப்பா இருக்குது போல‌..

எது எப்படியோ, இனிமே ஐயாவுக்கு போற இடத்துல எல்லாம் ஓவர் மவுசுதான். அநேகமா இன்னும் ஒரு மாசத்துல மெரினா பீச்சுல எனக்கு சிலை வச்சாலும் வைப்பானுங்க போல.." என்று அடுக்கிக் கொண்டே சென்றவன் அப்போதுதான் அவள் இதுவரை பதில் பேசவில்லை என்பதைக் கவனித்தான்.

"தீட்சு.. ஏய் தீட்சு.. லைன்ல இருக்கியாடி?" என்று அழைத்துப் பார்த்தான்.

அவள் இல்லை..

'வழக்கம் போல பேசிக்கிட்டே தூங்கிட்டா போல' என்று நினைத்த அதியன் நேரத்தைப் பார்த்தான், மணி மூன்றே முக்கால் என்று காட்டியது.

அடுத்த நாள் அதிகாலையிலேயே ஆசையோடு தன் காதலிக்கு அழைப்பு விடுத்தான், அவள் எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. வேறு யாருக்கும் அழைத்து அவளைப் பற்றி விசாரிக்க முடியாது, அதற்கு அவனுக்கு அனுமதி தரப்படவில்லை.

அவன் வீட்டு தொலைபேசி எண் வெளியில் தெரிவது பாதுகாப்பில்லை என்பதால், அரசாங்கம் அவனது செயல்பாடுகளை முடக்கி வைத்திருந்தது.

'என்னாச்சு இவளுக்கு? நேத்து ராத்திரி பேச ஆரம்பிக்கும்போது நல்லாத்தானே இருந்தா? தூக்கத்துல மொபைல போட்டு உடைச்சுட்டாளா?' என்று அவளைப் பற்றிய சிந்தனையே அவனின் அணுவெல்லாம் ஓடியது.

சிறுபிள்ளை போல அன்றைய பகல் பொழுது முழுவதும் திரும்பத் திரும்ப அவளுக்குத் தொடர்பு கொண்டவன், ஒரு கட்டத்தில் கடுப்பாகிப் போனான்.

இறுதியாய் அன்றைய தினத்தின் இரவில் அவளது எண்ணிற்குத் தொடர்பு கிடைக்க, "ஏய் எங்கடி போன?" என்று பதற்றத்தில் செய்வதறியாது கத்தினான்.

"கொஞ்சம் வேலை இருந்துச்சு" என்றாள் களைத்துப் போன குரலில்.

"மொபைல சார்ஜ் போட‌ முடியாத அளவுக்கு அப்படி என்ன வேலைடி? பேசாம நீ ஜாப்ப ரிசைன் பண்ணிடு தீட்சு. இன்னும் பத்து நாள்ல ஆவணி மாசம் பொறந்திடும், எங்க அம்மா உங்க வீட்டுக்கு வந்து பேசிடுவாங்க, அதுக்கப்புறம் எப்படியும் நீ வேலைய விட்டுட்டு இங்க தான வரணும்?

உங்கப்பன் பொண்ணு குடுக்க மாட்டேன் சொன்னா ஒரு பெரிய கலவரத்தையே உண்டாக்கி உன்ன தூக்கிடுவேன். ஆனா என்ன மாதிரி ஒரு ஆள கண்டிப்பா உங்க வீட்டுல வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க.." என்று பேசிக் கொண்டே செல்ல

தீட்சண்யா, "அதி நான் அப்புறம் பேசுறேன்" என்று அவன் பதில் சொல்லும் முன்பாகவே தொடர்பினை துண்டித்து விட்டாள்.

அவன் அழைப்புக்காகக் கோடிக்கணக்கான பேர் காத்துக் கொண்டிருக்க, அவன் காதலியோ அவன் அழைப்பினை ஒரு பொருட்டாகக் கூட மதியாமல் தொடர்பினைத் துண்டித்தது அவனின் இதயத்தில் குத்தீட்டியாய் குத்திக்கொண்டு நின்றது.

"போடி, இனிமே உனக்கு கால் பண்ணவே மாட்டேன், நீயே என்ன தேடி வா.." என்று வீராப்போடு அவனும் முறுக்கிக் கொண்டான்.

செய்வதற்கு எதுவுமில்லாமல் இரண்டு நாட்கள் வெறுமனே வீட்டைச் சுற்றி வந்து கொண்டிருந்த அதியனுக்கு மூன்றாம் நாள் மூச்சு முட்ட ஆரம்பித்தது.

அவள் எண்ணுக்கு அவனே தொடர்பு கொண்டு, "தீட்சு என்ன பண்ற?" என்றான்.

"கொஞ்சம் வேலை இருக்கு அதி, அப்புறமா பேசுறேன்" என்றாள்.

"என்னவிட வேலை உனக்கு முக்கியமாடி?" என்று முதல் முறையாய் தன் ஆற்றாமையை அவளிடம் காட்டினான்.

"உனக்கு உன் வேலை முக்கியமா இருக்கும்போது எனக்கு என் வேலை முக்கியமா இருக்கக் கூடாதா?" என்று அவளும் பதிலுக்குப் பதில் தந்தாள்.

"ஓ, இதுக்குத்தான் மேடம் இவ்வளவு கோபமா இருக்கீங்களா? என்னோட மதிப்பு உனக்கு தெரியலைடி, அதான் இப்படி பேசுற. என்னோட பவர் என்ன? எத்தனை உயிர்கள எப்படி எல்லாம் காப்பாத்தி இருக்கேன்னு பக்கத்துல இருந்து பார்த்திருந்தா நீ இப்படி பேச மாட்ட.."

தீட்சண்யா, "சரி அதி, எனக்கு வேலை இருக்கு நான் போறேன், பாய்" என்றாள்.

"என்னடி? அதுக்குள்ள என் காதல் உனக்கு புளிச்சுப் போயிடுச்சா?" என்று பொசசிவ்னஸின் தாக்கத்தில் பொங்கினான்.

"அதான் சொன்னேன்லடா, வேலை இருக்கு. அப்புறம்‌ பேசுறேன், பாய்"

"ஏன் இப்படி எல்லாம் பேசுற தீட்சு? நான் எவ்வளவு ஆசையா உன் கூட பேசலாம்னு நினைச்சு போன் பண்ணினேன் தெரியுமா? உனக்கு என் அருமை எப்பவுமே தெரிய மாட்டேங்குதுடி.

என் இடத்துல வேற எவனாவது இருந்திருந்தா இந்நேரம் மொத்தமா உன்ன கைகழுவிட்டு, ஏதாவது ஹிந்தி நடிகையோட ஊர்‌ சுத்திக்கிட்டு இருந்திருப்பான்.

ஆனா நான்? இந்தப் பொண்ணு ரொம்ப நல்லவ. நான் அவளத்தான் கல்யாணம் பண்ணுவேன்மானு வீட்ல சண்ட போட்டு உன்னையே சுத்திகிட்டு வர்றேன். எனக்கு இது தேவைதான்" என்றான்.

தீட்சண்யா, "ரொம்ப சந்தோஷம், என்ன விட்டுட்டு வேற‌ யாரையாவது போய் புடிச்சுக்க. நானாவது நிம்மதியா இருப்பேன்.." என்றாள்.

அவளது வார்த்தைகளைக் கேட்டு அதியனுக்கு அடக்க முடியாத அளவிற்குக் கோபம் வர, "அவ்வளவு இளக்காரமா போயிட்டேனாடி நான்? இனி உனக்கு போன் போடவே மாட்டேன், என் அருமைய நீயும் நல்லாத் தெரிஞ்சுக்க.

என் அப்பாயின்ட் மெண்டுக்காக எவ்வளவு பெரிய ஆளெல்லாம் என் வீட்டு வாசல்ல வெய்ட் பண்றாங்கனு உனக்கு தெரியல.. நான் அவங்கள எல்லாம் விட்டுட்டு, மானே தேனேனு உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்ல. தப்பு எம்மேலதான்" என்று திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தான் அதி.

தீட்சு, "போதும் அதி, எனக்கு தலை வலிக்குது. வச்சிடுறேன்.." என்று சிரத்தையின்றி காலைக் கட் செய்துவிட்டாள்.

வெற்றி மேல் வெற்றி கண்டு விண்ணைத் தொட்ட அதியனுக்கு, காதலியின் பாராமுகம் காலை வாரியதைப் போன்றதொரு அடிவாங்கிய உணர்வைத் தந்தது. முதன் முறையாக உடலும் மனமும் துவண்டு விழுந்தான் அதியன்..

 
Top