கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உயிர் 2

Rhea Moorthy

Moderator
Staff member
'கபிலன் எடுத்துக் கொண்டு சென்ற வாட்ச் எப்படி நம்ம பேக்குக்குள்ள வந்தது?!' என்று அதியனுக்குக் குழப்பமாக இருந்தது.

'ஒருவேள நம்ம அம்மா தம்பிக்குத் தெரியாம எடுத்து பேக்குக்குள்ள போட்டிருப்பாங்களோ?!' என்று யோசித்தவன், அப்படித்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வந்துவிட்டான்.

கபிலன் இதற்கு முன் ஏடாகூடமாக ஏதாவது பிரச்சனை செய்யும் போதெல்லாம், அம்மா இப்படிதான் அமைதியாக அதியனுக்குச் சாதகமான வேலையைச் செய்து விடுவார்.

ஆதலால் இதுவும் தன் அம்மாவின் லீலைகளில் ஒன்று என்று நினைத்த அதியன் மேற்கொண்டு யோசிக்காமல் அந்த வாட்சை எடுத்து தன் கையில் கட்டிக் கொண்டு வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.

யதேட்சையாய் அந்த வாட்ச்சை பார்த்த தீட்சண்யா, "ஹேய் வாட்ச் சூப்பரா இருக்கு, எங்கடா வாங்கின?" என்றாள்.

"இது என்னோடது இல்லடி, யாரோ ரயில்வே ஸ்டேஷன்ல மிஸ் பண்ணிட்டு போயிட்டாங்க. ஸ்மார்ட் வாட்ச் மாடல் இது, ஸோ ஏதாவது சிம் கூட கண்டிப்பா கனெக்ட் ஆகி இருக்கும். யாராவது இந்த வாட்ச்க்கு போன் போட்டா, திருப்பி கொண்டுபோய் கொடுக்கலாம்னு எடுத்துட்டு வந்தேன்" என்றான் அதியன்.

"பாக்குறதுக்கு ரொம்ப அழகா இருக்குடா.. நான் கொஞ்ச நேரம் இத கட்டிக்கட்டுமா?" என்று ஆசையுடன் கேட்டாள் அவள்.

காதலி கேட்கும் போது எவனாவது மாட்டேன்னு சொல்வானா? அப்படிச் சொன்னால் அவனுக்குக் காதல் உலகத்தில் மோட்சம்தான் கிட்டுமா?..

"இந்தாடி செல்லம்.." என்று பெரிய தர்ம பிரபு போல, தன் கையிலிருந்ததைக் கழற்றி, அவள் கையில் தானே கட்டியும் விட்டான்.

அப்போது அவனுடைய அம்மாவின் திருவுருவம் அவன் முன் வந்து, 'ஏன்டா.. இந்த வாட்ச்க்காகத்தான காலையில உன் தம்பி கூட, தெரு நாய விடக் கேவலமா சண்டை போட்ட? அவன் எடுத்துப் போட்டதும் ஏதோ என் மானம் போச்சு மரியாதை போச்சுனு அந்த கத்து கத்தின.. இப்ப எங்கடா போச்சு உன் மானமும் மரியாதையும்?' என்று கேட்பதைப் போல இருந்தது.

அதற்கு அவன் மனசாட்சியோ, 'ஏம்மா, அந்த மலைக் குரங்கும் என் மான் குட்டியும் ஒண்ணாம்மா? அவளோட கையப் பாருங்க, அந்த வாட்ச்ச அவ கையில கட்டினதுக்கு அப்புறம்தான் அந்த வாட்ச்சுக்கே ஒரு அழகு வந்திருக்கு..' என்றான்.

காதல் பித்தால் அதியன் பிதற்றினாலும் அவன் கூற்றிலிருந்த அர்த்தம் உண்மைதான். அந்த கருப்புக் கலர் வாட்ச் அவளின் பால்வண்ண நிறக் கைகளோடு பாந்தமாகப் பொருந்தி அமர்ந்திருந்தது.

"உருட்டி வைத்த
ஒய்ட் பாரஸ்ட் கேக்கினை,
டார்க் சாக்லெட் ஒன்று
கட்டிப் பிடித்திருக்கிறதே..
அடடா ஆச்சர்யக்குறி!!"
என்று அதியன் கேனத்தனமாக கவிதை சொல்லிக் கொண்டிருந்த பொழுது அவன் முதுகில் சுளீர் என்று ஒரு அடி விழுந்தது.

"அம்மா.." என்று அலறிக்கொண்டே எழுந்து நின்றவன், பின்னால் அவனுடைய ஆருயிர்த் தோழன் தீபக் நின்றிருந்தான்.

"பிசாசே.. பிசாசு மாதிரி ஏன்டா பின்னாடி இருந்து அடிச்சு பயமுறுத்தற?" என்றான்.

அதைக்கேட்ட தீபக் வாயை மூடிச் சிரிக்க, "உங்களுக்கெல்லாம் வாய்னு ஒண்ண கடவுள் கொடுத்திருக்கவே கூடாது. எதுக்கு அதை யூஸ் பண்ணனுமோ அதுக்கு அதை எவனும் யூஸ் பண்ணுறது கிடையாது.. எதுக்கெல்லாம் யூஸ் பண்ண கூடாதோ, அதுக்கெல்லாம் கட்டாயமா யூஸ் பண்றீங்க.." என்றான் அதியன்.

"ஏன்டா பேசமாட்ட? இவ்வளவு நேரமா க்ளைமேக்ஸ் சீன்ல ஹீரோவ தேடி வர்ர ஹீரோயின் மாதிரி, உன் பேரைக் கத்தி கத்தி ஏலம் விட்டுட்டு இருந்தேன். ஊரே என்னைத்தான் வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்தது, உன்னத் தவிற.." என்று செல்லமாய் முறைத்துப் பார்த்தான் தீபக்.

அசடு வழியும் முகத்தோடு, "அப்படியா செய்தேன்?" என்றான் அதியன்.

"அப்படித்தான்டா அரலூசே, உன்ன கரெக்ட் பண்ணனும்னு மாசக்கணக்கா சீன் போட்ட எவளுமே நான் விட்ட ஏலத்துல உன்ன எடுக்கல தெரியுமா? எப்ப நீ தீட்சுக்கு மட்டும் ஸ்பெஷல் இம்பார்ட்டன்ஸ் கொடுக்க ஆரம்பிச்சியோ, அப்பவே உன் கெத்து புட்டுக்கிச்சு..

நேர்ந்து விட்ட ஆட்டுக்குட்டி மாதிரி அவ முகத்தையே பே.. ன்னு பாத்துகிட்டு இருக்காம, காலாகாலத்துல டீம் ஹெட்டோட ரூமுக்கு போ. அந்த மனுஷன் ரொம்ப நேரமா உன்னை வலைவீசி தேடிகிட்டு இருக்கார்" என்றான் தீபக்.

"அந்த ஆளுக்கு இப்ப என்ன வேணுமாம்? பொண்ணு கிண்ணுனு‌ ஏதாவது பெத்து வச்சிருக்காரா? நான் வேகமா போய் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போறதுக்கு?" என்றான் அதியன் கேலியாக.

"பொண்ணெல்லாம் இல்ல, ஒரேயொரு பொண்டாட்டிதான் வச்சிருக்காரு. பாவம் மனுஷன் அதைக் கட்டிக்கிட்டு பல வருஷமா கஷ்டப்படுறதா கேள்விப்பட்டேன், நீ வேணா கொஞ்ச நாள் அந்த அம்மாவோட குடும்பம் நடத்திப் பாக்குறியா?" என்று நமட்டுச் சிரிப்போடு கேட்டான் தீபக்.

அவனை முறைத்த அதியன், "அதுக்கு பதிலா, இதோ இந்த பக்கமா உக்காந்து இருக்கற இந்த ரத்தக் காட்டேரிகிட்ட வேணும்னாலும் என்னைப் பிடிச்சு கொடுத்துரு, உனக்கு புண்ணியமா போகும்.." என்றான்.

அதுவரையில் நண்பர்களின் அரட்டையை ஜாலியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தீட்சண்யா படாரென்று எழுந்து வந்தாள்..

"என்ன பார்த்தா உனக்கு ரத்தக் காட்டேரி மாதிரியாடா இருக்கு?" என்றவள் அதியனை முறைக்க, அவனோ வெட்கமின்றி‌ சிரித்தான்.

"உன்ன.." என்று பரபரத்தவள் தன் கைக்கெட்டிய தூரத்திலிருந்த ஒரு பெரிய சைஸ் ஃபைலை எடுத்து அதியனை ஆசை தீர மொத்தினாள்.

இருவருக்குள்ளும் சண்டை வந்ததும் தீபக், "நல்லா போடு தீட்சு, ஐயோ பாவம்னு இவன் கூட நீ பேசுற, ஆனா இவனுக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா உன்னையே இப்படி திட்டுவான்? நீ எதிர்ல இருக்கும் போதே இப்படி பேசுறானே, நீ இல்லாதப்போ என்னெல்லாம் பேசி இருப்பானோ?" என்று எரியும் நெருப்பில் அழகாக எண்ணெய்யை வார்த்தான்.

"ஏன்டா ஏத்திவிடுற?.." என்று அதியன் தீபக்கை அடிக்க,

"என் சிஸ்டருக்காக நான் பேசக்கூடாதா? சரியான ஆணாதிக்க வாதியா இருக்கடா மச்சான். எம்மா தீட்சு, இதுக்கு மேலயும் இவன் உனக்கு வேணுமா?.." என்று, ஆரம்பிக்கும் முன்னாலேயே அதியனின் வாழ்க்கையை முடித்து வைக்கப் பார்த்தான் தீபக்.

தீட்சுவும் அவனோடு சேர்ந்து கொண்டு, "வேண்டாம், எனக்கு நீயே ஒரு நல்ல மாப்பிள்ளையா பாருண்ணா, அடுத்த முகூர்த்தத்திலயே கல்யாணம் வச்சிடலாம்.." என்று ஒத்து ஊதினாள்.

'காதலிக்கிறாயா என்று கேட்டால் இல்லை என்று‌ மறுத்துவிடு, ஆனால் பேச்சு மட்டும் என்னைச் சுற்றியே பேசு.. இம்சையடி உன்னால்..' என்று நினைத்துக் கொண்ட அதியன் குறும்பாய்,

"வேண்டாம்னா போங்க, நான் இவனோட அப்பத்தாவையே கல்யாணம் பண்ணிக்குறேன். விவரம் தெரிஞ்ச வயசுல இருந்து என்ன கட்டிக்கிறியா பேரான்டினு அந்த ஆச்சி ஆசையா கேக்கும்.." என வேண்டுமென்றே அவள் முன்பு ரசனையோடு சொல்லிக் காண்பித்தான்.

அதியன் மீண்டும்‌ மீண்டும் தன்னைச் சீண்டுவதால் தீட்சுவின் கண்கள் கோபத்தில் சிவக்கத் துவங்கிட இடையில் நுழைந்தான் தீபக்.

"ஆன்ட்டி ஹீரோவ கேள்விப் பட்டிருக்கேன், பாட்டி ஹீரோவ இங்கதான்டா பாக்குறேன். இவன் என்ன சொல்றான்னு உனக்கு புரியுதா தீட்சு?.. உன்னை விட எங்க பாட்டியே பரவாயில்லைனு சொல்றான்.." என்று என்றும் இல்லாமல் இன்று பாயிண்ட் பாயிண்டாக பேசினான்.

"டேய் டேய்.. உனக்கு நான் என்னடா துரோகம் பண்ணினேன்? நல்லா போய்க்கிட்டு இருக்கற என் வாழ்க்கையில கும்மியடிக்க பாக்குறயா?

அவன் பேச்சை கேட்காதடா தீட்சு செல்லம்.. நான் சும்மா விளையாட்டுக்குத்தான் அப்படி சொன்னேன்.. அந்த நாய்க்கு ஆள் கிடைக்கலன்ற பொறாமைல, நான் பேசுறதையே எனக்கு ஆப்போசிட்டா டைவர்ட் பண்ணி விடுறான் பேபி.." என்றான் அதியன்.

"அவன் எப்படிப் பேசி இருந்தாலும், நீ அவங்க பாட்டியோட என்ன கம்பேர் பண்ணி பேசிட்ட இல்ல? போடா நான் உன்கிட்ட இனிமே பேசவே மாட்டேன். போய் எந்தக் கிழவியவாச்சும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இரு, உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் என் பரிபூரண ஆசிகள் உண்டு.." என்று முறைத்துக் கொண்டு நின்றாள் தீட்சண்யா.

"நீ புத்திசாலிப் பொண்ணு, இந்த பைத்தியக்காரத்தனமான பேச்சுக்கெல்லாம் மனசு வருத்தப்படலாமா? இப்போ இந்த நிமிஷம் நீ மட்டும் உம்னு ஒரு வார்த்தை சொல்லு, இந்த இடத்துலயே தாலி கட்டி தூக்கிட்டு போறேன் நானு.." என்று கோல் போட முயன்றான்.

அவளோ சாதுரியமாய், "நீ கெழவிக்கே வாக்கப்பட்டுக்கோ, போடா.." என்றாள்.

இரண்டு பேர் சண்டையையும் டேபிள் மேல் சாய்ந்து நின்றபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த தீபக், "சொல்ல மறந்துடேன்டா, நம்ம டீம் ஹெட் உன்னை உடனடியா ரூமுக்கு வரச் சொன்னாருனு சொன்னேன்ல. அதுல ஒரு சின்ன விஷயத்தை சொல்ல மறந்துட்டேன்..

நீ இன்னும் ரெண்டு நிமிஷத்துல அங்க போகலைனா அவரு ஆங்ரி பேர்ட் மூஞ்சியோட இங்க வந்திடுவேன்னு சொல்லச் சொன்னாரு.

நல்ல புள்ளையா மும்பைல கலெக்ட் பண்ணின டீட்டெய்ல்ஸ் எல்லாம் எடுத்துப் போய் நீயே அவரு கையில கொடுத்துட்டு, உனக்காக அவர் மனப்பாடம் பண்ணி வச்சிருக்கிற வசவெல்லாம் வாங்கிட்டு வந்துடு ராசா.. போ போ.." என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விட்டுச் செல்லும் தன் உயிர் நண்பனைப் பார்த்து, 'ஆதிவாசிப் பயலே.. எதைச் சொல்ல வந்தானோ அதைச் சொல்லாம, ஏக்குமாக்கா பேசி எவ்வளவு பெரிய வேலை பார்த்து வச்சிட்டான்? இப்ப நான் என் செல்லக் குட்டிய எப்படி சமாதானப் படுத்துவேன்? முதல்ல அந்த ஆங்கிரி பேர்டு வாயன சாமாளிப்போம், அதுக்கு பிறகு செல்லக் குட்டிய பார்ப்போம்..' என்று பொறுப்பாக ஃபைல்களை அள்ளிக் கொண்டு டீம் ஹெட் ரூமுக்குச் சென்றான் அதியன்.

அதன் பிறகு அதியனுக்கு நிற்கக்கூட நேரமில்லாமல் போனதால் ஆபீஸ் வேலையிலேயே முழுவதுமாய் மூழ்கிவிட்டான். இடையில் தன் காதலியைப் பற்றியோ, தம்பியைப் பற்றியோ வாட்ச்சைப் பற்றியோ யோசிக்கக் கூட நேரம் வாய்க்கவில்லை அவனுக்கு.

காலையில் எந்த அளவிற்குப் பரபரப்பாக ஆரம்பிக்கின்றதோ, அதே அளவு பரபரப்போடு முடிவதுதான் ஐடி வேலை. ஒரு ரெண்டு நிமிஷம் அங்கிட்டு இங்கிட்டு போக முடியாது..

அதியனும் அவனுடைய நண்பர்களும் ஆபீஸிலிருந்து கிளம்பும் போதும், மிச்சமிருக்கின்ற வேலைகளை வீட்டில் போய் முடிக்க வேண்டும் என்ற அவசரத்தோடு கிளம்பினார்கள்.

மனிதர்களுக்கென்று சில நல்ல குணங்கள் உண்டு, வழக்கமான பொருட்கள் எல்லாம் நியாபகம் வைத்து எடுத்துக் கொள்கிற நாம், புதிதாக கைக்கு வந்த பொருளை மட்டும் மறந்து விட்டுட்டுச் செல்வோம்.

அதியனும் அதே குளத்தில் ஊறிய மட்டைதான்... அவன் தன் காதலிக்கு காலையில் வாட்ச் கொடுத்ததை, சுத்தமாக மறந்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டான்.

வீட்டில் கபிலன், என்றைக்கும் இல்லாமல் இன்று நல்ல பையனாக அமைதியாய் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்தான்.

'இந்த கொரில்லா இப்படி இருக்க வாய்ப்பே இல்லையே!!.. ப்ரெண்ட்ஸோட ஏதாவது சண்டை போட்டுட்டு வந்திருப்பான் போல..' என்று அதியனும் கண்டு கொள்ளாமல் தங்களுடைய அறைக்குச் சென்றுவிட்டான்.

அலுப்பு தீரக் குளித்து விட்டுச் சாப்பிட வந்தமர்ந்தான் அதியன். நால்வரும் வேலைக்குச் செல்வதால் அவர்களின் வீட்டில், இரவு உணவாய் எப்போதும் ஏதாவதொரு வெரைட்டி தோசை அல்லது உப்புமாவே இடம்பிடித்து இருக்கும்.

உப்புமா என்றால் இரண்டு பிள்ளைகளுக்கும் தொண்டைக்குக் கீழே இறங்காது என்பதனால், அவர்களுக்கு மட்டும் கிரகலட்சுமி ஆளுக்கொரு ஆம்லேட் போட்டுக் கொடுப்பார்.

எப்பவும் முதல் ஆம்லெட் தனக்குத்தான் வேண்டும் என்று அடம்பிடிக்கும் கபிலன், இன்று ஆம்லேட் டைனிங் டேபிளுக்கு வந்த பிறகும் எந்தச் சத்தமும் இல்லாமல் அமர்ந்திருந்தான்.

'உயிரே போனாலும் சோத்துல கெட்டியா‌ இருப்பான், இப்ப என்ன இவ்ளோ அமைதியா இருக்கான்? இந்தக் கொடூர மிருகம் ஒரே நாள்ல இப்படி குணம் மாறுறதுக்கு சான்ஸே இல்லையே?!.. தலையில அடிபட்டு பழசெல்லாம் மறந்துட்டானா?' என்று யோசித்த கொண்டிருந்த அதியனுக்கு, அப்போதுதான் காலையில் நடந்த கூத்து நினைவு வந்தது.

'அம்மா நிச்சயமா கபிலனுக்குத் தெரியாமத்தான் வாட்ச்ச என்னோட ஆபீஸ் பேக்ல போட்டிருப்பாங்க. அதான் பய அப்செட்டா இருக்கானா?.. வாட்ச்ச நான் வேற தீட்சண்யாட்ட கொடுத்து விட்டுட்டேன்.

எப்படிப் பார்த்தாலும் இப்ப வாட்ச் வீட்டுல இல்ல. இதுதான் சான்ஸ்.. இவனை நல்லா வச்சு செய்யனும்' என்ற முடிவுக்கு வந்த அதியன், அமைதியாக உப்புமாவை முழுங்கிட்டு இருந்த கபிலனிடம்,

"டேய், அந்த வாட்ச் எங்கடா?" என்றான்.

லேசாய்‌ திடுக்கிட்ட கபிலன், "வாட்ச் நம்மளோட பெட்ரூம்ல இருக்கு, இல்ல இல்ல.. அப்பா அம்மாவோட பெட்ரூம்ல இருக்கு.." என்று தடுமாற்றத்துடன் உளறினான்.

'பயபுள்ள இப்படி பச்சையா பொய் சொல்றானே?!'

"அதோட ஓனர் அதைக் கேட்டு போன் பண்ணாரு, நீ இப்பவே போய் அதை எடுத்துட்டு வா. நாளைக்கு காலையில ஆபீஸ் போற வழியில நான் திருப்பிக் கொடுத்துடுறேன்னு சொல்லிருக்கேன்" என்றான் அதியன்.

"சாப்பிட்டுகிட்டு இருக்கேன்ல, சாப்பிட்டு முடுச்சுட்டு போறேன்" என்றான் கபிலன்.

"இங்கிருந்து பெட்ரூம் ஒன்னும் ஒரு கிலோ மீட்டர் தூரம் கிடையாது, நீ போயிட்டு வர்றதுக்குள்ள உன் உப்புமாவை யாரும் திருடப் போறதும் கிடையாது. ஒழுங்காப் போய் எடுத்துட்டு வா.." என்றான் அதியன்.

வசமாக மாட்டிக் கொண்டதால் தற்போதைக்குத் தப்பிப்பதற்காக கபிலன், "அம்மா பாரும்மா.. உன் புள்ளை என்ன சாப்பிடக் கூட விடமாட்டேங்கிறான்" என்று கத்தினான்.

அம்மா ஏற்கனவே தன் பக்கம் இருக்கிறார் என்ற நினைப்பில், "அம்மா இங்க வாங்கமா, என் வாட்ச்ச இவன் தொலைச்சுட்டான், வந்து இவன என்னன்னு கேளுங்கம்மா.." என்று அதியனும் கத்த,

சமையலறையிலிருந்து வேர்க்க விறுவிறுக்க வேகமாக வந்த கிரகலட்சுமி, "என்னடா வேணும் உங்க ரெண்டு பேருக்கும்?" என்றார்.

இருவரும் தங்களுடைய கம்ப்ளெயின்ட்டை மறுபடியும் அம்மாவிடம் ரீப்ளே செய்தனர்.

பிள்ளைகளைப் பெற்று வளர்த்த அம்மாவுக்குத் தெரியாதா, எந்தப் பிள்ளை எப்போது எப்படி நடந்து கொள்ளும் என்று?! கபிலன் வாட்ச் பெட்ரூமில் இருப்பதாய் பொய் சொல்கிறான் என்று ஒரே பார்வையில் கண்டுபிடித்துவிட்டார்.

தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை என்று கூட பார்க்காமல் கபிலனுடைய காதைப் பிடித்துத் திருகியவர், "அவன் தான் காலையிலயே படுச்சுப் படுச்சு சொன்னான்ல? இது வேற ஒருத்தரோட வாட்ச்சு, இதை பத்திரமா திருப்பி கொடுக்கனும்னு. பெரிய ராஜா தேசிங்கு மாதிரி பேசிட்டு இப்ப தொலைச்சுட்டு வந்து நிக்கிற?" என்று திட்டினார்.

கபிலனோ காதைக் கவ்வியிருக்கும் தன் அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு, "ஸ்ஆ.. வலிக்குதுமா.. விடுங்கம்மா.. வலிக்குதுமா.. காலைல வீட்ல இருந்து கிளம்புற வரைக்கும் வாட்ச் என்கிட்டதான் இருந்துச்சு. அதுக்கு அப்புறம் எங்க போச்சுன்னு எனக்கு சத்தியமா தெரியலைமா" என்று உண்மையைச் சொன்னான்.

"வாட்ச்சு தானா‌ உன்ன விட்டு ஓடிப்போகுமா? தொலைச்சிட்டேன்னு உண்மைய‌ ஒத்துக்க, இனிமேலாவது அண்ணன் பேச்சைக் கேட்டு நடக்கப் பழகு" என்று சொல்லி விட்டு, மறுபடியும் சமையலறைக்குள் சென்று விட்டார் கிரகலட்சுமி.

இப்போதும் தன் அம்மா நடிப்பதாகவே மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்த அதியன், 'வாரே வா.. எங்கம்மாவுக்குள்ள ஒரு மகாநடிகை சாவித்திரி உறங்கிட்டு இருக்குறது, இத்தன நாளா எனக்குத் தெரியாம போயிடுச்சே?!..' என்று மெச்சிக் கொண்டான்.

கிரகலட்சுமி கிச்சனிலிருந்து இன்னொரு ஆம்லேட்டை எடுத்துக்கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைத்தார்.

முதலாவதையும் இரண்டாவதையும் ஒருசேர தன் கையில் எடுத்துக் கொண்ட கபிலன், "அதான் என்னை அடிச்சுடீங்கள்ல, இனி நீங்க வேற நான் வேற.." என்று ஆம்லேட் தட்டோடு தூரமாகப் போய் அமர்ந்து கொண்டான்.

"அவனுக்கு வேற வேலை இல்லை.. நீ இருடா அதியா, உனக்கு நான் இன்னொன்னு போட்டுக் கொண்டு வர்றேன்.." என்று மீண்டும் சமையலறைக்குச் சென்றார் கிரகலட்சுமி.

அடுத்து ஐந்து நிமிடத்தில் வெளியில் சென்றிருந்த அப்பா தணிகாசலம் வரவும், வீடே அமைதியாகி விட்டது.

அதியனின் அப்பா தணிகாசலம் ரொம்பவும் நேர்மையானவர், அதை விடவும் ரொம்ப கோபக்காரர். அதனால் இந்தப் பிள்ளைகள் செல்லம் கொஞ்சுவதும் சேட்டை செய்வதும் அம்மாவிடம் மட்டுமே..

அப்பாவே ஏதாவது கேள்வி கேட்டாலும், ஒற்றை வரியில் அதற்குப் பதில் சொல்வதோடு இவர்களின் எல்லை நின்றுவிடும்..

இருவரது முகம் பார்த்தே வீட்டின் சூழ்நிலையைப் புரிந்து கொண்ட தணிகாசலம் கொஞ்சம் டெர்ரரான குரலில், "என்ன பிரச்சனை?.." என்று கேட்டார்.

'கபிலன் கொஞ்சம் ஓட்டவாய், பயத்தில் எதையாவது உளறிக் கொட்டி விட்டான் என்றால் அப்பாவுக்குக் கோபம் வந்து விடும். சிறு பிள்ளை இல்லை, காலேஜில் சேர்ந்துவிட்டான் என்றும் பார்க்காமல் செமத்தியாகக் கபிலனை வெளாசிவிடுவார்.

பாவம் என்னால் தேவையில்லாமல் அவன் அடிவாங்கிக் கொண்டிருப்பான்..' என்று நினைத்த அதியன் மற்றவர்கள் வாய் திறக்கும் முன்பு முந்திக் கொண்டான்.

"அது ஒன்னுமில்லப்பா, என் ப்ரெண்டோட வாட்ச் எங்கிட்ட இருந்தது. அது இப்ப தொலைஞ்சிருச்சு, நம்ம வீட்டுகுள்ளதான் எங்கயாவது கிடக்கும், நான் தேடி கண்டுபிடிச்சுக்குறேன்.." என்று சுருக்கமாகத் தன் பேச்சை முடித்துக் கொண்டான்.

"உன் ப்ரெண்டோட வாட்ச் எதுக்கு நம்ம வீட்டுக்கு வந்தது?" என்று உறுமினார்.

"நான்தான்.." என்று திணறினான் அதியன்.

"இது என்ன புது பழக்கம் அதியா? அடுத்தவங்க பொருளை வாங்கி வீடு வரைக்கும் கொண்டு வர்றதெல்லாம் இருக்கக்கூடாதுனு சொல்லி இருக்கேன்ல?" என்று கோபத்துடன் கேட்கவும்,

"ஸாரிப்பா" என்றான் அதியன்.

"நீ ஆயிரம் நல்லது செஞ்சாலும், ஒரு கெட்ட பேர் வந்தா அத்தனை நல்லதும் அடிபட்டுப் போயிடும். உனக்கான கௌரவத்த நீதான் காப்பாத்தி வச்சுக்கனும், புரியுதா?" என்றார்.

எவ்வளவு விளக்கினாலும் என் தரப்பு நியாயம் அப்பாவின் கோர்ட்டில் சபை ஏறாது என்று சிறு வயதிலிருந்தே தெரிந்தவனாதலால், "புரியுதுப்பா.." எனும் ஒற்றைச் சொல்லோடு வாதத்தை முடித்துவிட்டான் அதியன்.

"ம்.. அந்த வாட்ச் கிடைச்சதும் உடனே சம்பந்தப்பட்ட ஆளு கையில ஒப்படைச்சிரு. கிடைக்கலனா அதே மாதிரி இன்னொரு வாட்ச் வாங்கித் தந்திட்டு வந்திடு.."

"சரிங்கப்பா.."

"செய்யாத தப்புக்கும் குத்தம் சொல்ற உலகம் இது. என் புள்ள எங்க பேனாலும் நல்லா இருக்கனும்னுதான் இவ்வளவு சொல்றேன், பார்த்து நடந்துக்க.." என்றார்.

இதுதான் தணிகாசலம், அவர் வார்த்தையில் எவ்வளவு கோபம் இருந்தாலும் அது அத்தனையிலும் தன் பிள்ளைகளின் நலனே பிரதிபலிக்கும்.

அது புரிந்த பிள்ளைகளாதலால் அப்பாவின் மீதிருக்கும் மரியாதை குறையாமல் நடந்து கொண்டனர் இருவரும்.

அவர்கள் இருவரின் உரையாடலில் எந்த வார்த்தையிலும் கபிலனின் பெயர் அடிபடவே இல்லை என்றாலும், தணிகாசலத்திற்கு நன்றாகத் தெரியும் இது சின்னவனின் வேலை தான் என்று..

கொஞ்சம் கோபமும் அழுத்தமும் நிறைந்த பார்வையோடு கபிலனைப் பார்த்து, "அடுத்தவங்க பொருளை எடுத்து இப்படித்தான் பொறுப்பில்லாம தொலைக்கிறதா?" என்று கோபமாகவே கேட்டார்.

கபிலனுக்கும் உள்ளத்தினுள் ஏற்கனவே கொஞ்சம் குற்ற உணர்ச்சி உறுத்திக் கொண்டிருந்ததால் சற்று தன்மையான குரலில், "தெரியாம தொலைச்சுட்டேன்ப்பா, எப்ப தொலைச்சேன்னு எனக்கே தெரியலை. நானே வாட்ச்ச தேடி எடுக்குறேன்.." என்று சமாதானமாகப் பேச முயன்றான்.

இந்த அளவிற்குத் தெளிவு இருந்தாலே போதும் என்ற நினைப்போடு தணிகாசலமும் இரவு உணவில் ஐக்கியமாகிவிட்டார். அப்பாவின் ஆளுமை அந்த இடத்தில் நிறையத் துவங்கியதும், பிள்ளைகள் இருவரும் தங்களின் அறையை நோக்கி நகரத் துவங்கினர்.

அறைக்குள் சென்றதும் கபிலன் சற்றே சங்கோஜமாக, "அண்ணா அப்பா தூங்கினதுக்கு அப்புறம் வாட்ச்ச தேடுறேன், ப்ளீஸ் கோச்சுக்காத.." என்று சமாதான உடன்படிக்கையில், இரண்டாம் நிலை ஒப்பந்தத்தைக் களத்தில் இறக்கினான்.

அதியனுக்கும் அவ்வப்போது கபிலனின் ஆதரவு தேவைப்படுவதால், இல்லாத பிரச்சனைக்கு இவ்வளவு அழுத்தம் கொடுக்க வேண்டாமென்று, இப்போதைக்கு இறங்கிப் போகும் முடிவிற்கு வந்து விட்டான்.

"ஒன்னும் அவசரம் இல்லடா, நாளைக்கு திருப்பிக் கொடுக்கணும்னு பொய்தான் சொன்னேன். இன்னும் வாட்ச்ச தேடி யாரும் வரல, ரெண்டு பேரும் பொறுமையா சன்டே தேடிக்குவோம்.

அப்பவும் கிடைக்கலனா அப்பா சொன்ன மாதிரி நான் புது வாட்ச் வாங்கிக்கிறேன். நீ போய் உன் வேலையப் பாரு.." என்றதும், கபிலனும் சற்றே ஆசுவாசமாகத் தன் செல்போனில் மூழ்கினான்.

அதியன் தன் அலுவலக வேலைகளை எல்லாம் ஒன்பது மணிக்குப் பின் தான் ஆரம்பிப்பான். அந்த அமைதியான சூழ்நிலையில், அவனுக்கு பிற விஷயங்களில் கவனம் சிதறாமல் இருக்கும். ஆதலால், வேலைகளுக்கு மட்டும் அப்படி ஒரு ஷெடியூல் வைத்துக் கொண்டான்.

அதனால், இப்போது கைவசம் இருக்கும் நேரத்தை உருப்படியாக தன்னவளை சமாதானப் படுத்துவதற்காகச் செலவிடலாம் என்று யோசித்தவன், "ஹாய் செல்லக்குட்டி, காலையில நான் பேசினதை எல்லாம் மனசுல வச்சுக்காதடி தங்கம்" என்றொரு குறுஞ்செய்தியைத் தட்டிவிட்டான்.

'என்ன பதில் சொல்வாளோ? என் இனிய வேதாளத்தை முருங்கை மரத்திலிருந்து இறக்க நான் என்ன பாடு பட வேண்டுமோ?!' என்று அதியன் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அவள் இவனுக்கு ஸ்வீட் ஷாக் கொடுத்தாள்.

சரியாக இரண்டு நிமிடங்கள் கழித்து, "சாரிடா.." என்ற குறுஞ்செய்தி அவன் சேட் பாக்சில் வந்து விழுந்தது.

'என்ன அதிசயம் இது? நான் கேட்க வேண்டிய மன்னிப்பை என் செல்லம் கேக்குதே? ஒரு வேளை நான் பாட்டியக் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்னதால பயந்துட்டாளோ?' என்று யோசித்துக் கொண்டே,

"எதுக்குடி செல்லம் ஸாரி" என்றான்.

"நான் வேணும்னு பண்ணலடா தெரியாம நடந்துடுச்சு, உண்மையிலேயே எப்ப நடந்ததுன்னு கூட எனக்குத் தெரியலைடா" என்று பதில் செய்தியை அனுப்பினாள் தீட்சண்யா.

'இவ எதப் பத்தி பேசறா?..' என்று தலையைச் சொறிந்தவன்,

திடீரென்று ஞாபகம் வந்தவனாக, "வாட்ச்சுக்கு என்னாச்சு?" என்றொரு குறுஞ் செய்தியை அனுப்பினான்.

அவள், "ஐ ஏம் ஸாரி அதி" என்றே பதில் அனுப்பினாள்.

அந்த ஸாரியை அடுத்து இரண்டு கண்ணீர் விடும் ஸ்மைலிகள் தெரிய, இவன் மனம் சக்கரையாகக் கரைந்து போனது.

"ஏய், ஒன்னும் பிரச்சனை இல்லடி. அது நான் கண்டெடுத்த வாட்ச்தான், யாராவது கேட்டா நான் புதுசா வாங்கிக் கொடுத்துக்குறேன். அதுக்காக நீ கவலைப் பட்டுட்டு இருக்காத" என்று தன் காதலியின் மனதைத் தேற்ற முழு மூச்சாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தான் அதியன்.

அதன் பிறகு அவளிடமிருந்து எந்த குறுஞ்செய்தியும் வரவில்லை. ஒருவேளை அழுது கொண்டிருப்பாளோ என்ற சந்தேகம் வர, அவசரமாக அவள் எண்ணிற்குத் தொடர்பு கொண்டான் அதியன்.

அவன் நினைத்தது சரி தான், உரிமை இல்லாத ஒரு பொருளை அதுவும் திருப்பி ஒப்படைக்க வேண்டிய பொருளை, வலுக்கட்டாயமாக இன்னொருவரிடம் இருந்து எடுத்து தொலைத்ததை தீட்சண்யாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..

கொஞ்சம் கரகரப்பான குரலில், "ஹலோ" என்றதுமே அதியன் உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளைக் கொட்ட ஆரம்பித்தான்.

"ஏய் நீ என்ன லூசாடி? சாதாரண வாட்ச்சுக்குப் போய் இப்படி ஃபீல் பண்ணிட்டு இருக்க?" என்று கத்தினான்.

"இல்ல அதி, நீ காலையிலயே சொன்ன, அது இன்னொருத்தங்க வாட்ச்சுனு.. நான் தான் விளையாட்டா எடுத்து தொலைச்சிட்டேன். நாளைக்கே அதுக்கு உரியவங்க யாராவது வந்து கேட்டா, உன் பேருதான கெட்டுப் போகும்? ஐ ஏம் சாரிடா" என்றாள்.

"அப்படியெல்லாம் யாரும் வரமாட்டாங்க அப்படியே வந்தாலும் நான் சமாளிச்சுப்பேன். உனக்காக இது கூட செய்ய மாட்டேனாடி?" என்று தன்னையும் அறியாமல் தன் மனதை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான் அதியன்.

அவ்வப்போது அவனையறியாமல் வெளிப்படுத்தும் இதுபோன்ற அக்கறையான வார்த்தைகளில், நெகிழ்ந்து போகும் அவள் உள்ளம்.. இப்போதும் அப்படி தான், அவன் உனக்காக என்றுரைத்த ஒற்றை வார்த்தையிலேயே தேங்கி நின்றது அவள் மனம்.

பெண் மனதின் ஆழம் புரியாத மன்னவனோ, இன்னும் அவள் அழுது கொண்டிருக்கிறாள் என்று எண்ணி, அடுத்தகட்ட ஆப்ரேஷனுக்கு தயாரானான்.

"நீ கால கட் பண்ணுடி, நான் கிளம்பி உன் ஹாஸ்டலுக்கு வரேன். இன்னும் பத்து நிமிஷத்துல உன் ஹாஸ்டல் கேட் முன்னாடி நிப்பேன்" என்று சொன்னதும் அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

"ஐயையோ மணி பத்தரையாகப் போகுது, இந்நேரத்துல நீ இங்க வந்தா எல்லாரும் என்ன நினைப்பாங்க? நீ ஒன்னும் வர வேண்டாம்" என்று படபடவென பொரிந்தாள்.

"அதெல்லாம் எனக்குத் தெரியாது, நீ எதுக்கு இப்ப அழுத? எப்பவும் தைரியமாக இருக்குற பொண்ணு இப்படி திடீர்னு அழுதா, எனக்கு எவ்வளவு சங்கடமாக இருக்கு தெரியுமா? நான் கிளம்பிட்டேன், இப்ப வந்திடுவேன்" என்று வீம்பாக நின்றான் அதியன்.

தீட்சண்யா அவனைத் தாஜா செய்யும் நோக்கோடு, "ஏய் விளையாடாதடா, எனக்கு பயமா இருக்கு. எங்க வார்டன் ரொம்ப ஸ்ட்ரிக்ட், உன்ன இங்க பார்த்த அடுத்த நிமிஷமே என் அப்பாவுக்கு போன் பண்ணி போட்டு கொடுத்துடுவாங்க.

நீ வேணும்னா நாளைக்கு காலையில ஆபீஸ்க்கு சீக்கிரமா வாயேன். ரொம்ப இல்ல, ஒரு பத்து நிமிஷத்துக்கு முன்னாடியே வந்துரு, நாம ரெண்டு பேரும் ஆபீஸ்க்கு எதிர்ல இருக்குற காபி ஷாப்ல மீட் பண்ணலாம்" என்றாள்.

அதியனுக்கு அவளோடு சேர்ந்து அந்த காபி ஷாப்பிற்குச் செல்ல வேண்டும் என்பது நெடுநாள் கனவு, எத்தனை முறை கேட்டாலும் மறுத்து வந்தவள் இன்று தானாக இறங்கி வந்திருக்கிறாள்..

எல்லாம் அந்த வாட்ச்சால் தானே?.. பழம் கனிந்து தன் மடியில் விழுந்ததாக நினைத்து சந்தோஷத்தில் கூத்தாடியது அவன் உள்ளம்.

"சரிடி செல்லம், சீக்கிரமா வரப் பார்க்கிறேன். நீ கண்டதையும் நினைச்சு மனசைப் போட்டுக் குழப்பிக்காம, நிம்மதியா படுத்துத் தூங்குடி. வாட்ச் பிரச்சனைய‌ நான் பாத்துக்குறேன்" என்றான்.

"ம் சரிடா குட் நைட்" என்று அத்தோடு தொலைபேசி உரையாடலை முடித்துக் கொண்டாள்.

தன்னவள் காட்டும் திடீர் நெருக்கத்தால், தித்திப்பாகத் திகட்டும் கனவுகளோடு நின்றிருந்தவன் எதிரில் வந்து நின்றான் கபிலன்.

 
Top