கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உயிர் 5

Rhea Moorthy

Moderator
Staff member
தன்னோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கும் இந்த தீய சக்தி, அடுத்து என்ன செய்யக் காத்திருக்கிறதோ என்ற அச்சத்தோடு, வண்டி ஓட்டிக்கொண்டிருந்தான் அதியன்.

மனதின் அளவுக்கதிகமான அலைப்புறுதல்களால் அதியன் சாலையில் கவனம் வைக்க மறந்து போனான். அந்நேரம் பார்த்து, அவனுக்குப் பின்னால் வந்த லாரி அவன் பைக்கினை இடிக்க, பொம்மை போல பத்தடி தூரம் தூக்கி எறியப்பட்டான் அதியன்.

மைக்ரோ வினாடிப் பொழுதிற்குள் பைக்கிலிருந்து விலகி அந்தரத்தில் பறந்து கொண்டிருந்தவனைச் சுற்றிலும், அந்த வாட்ச் ஆட்டோமேட்டிக்காக ஒரு மாய வளையத்தை உருவாக்கியிருந்தது.

கண்ணாடி போல் காற்றடைக்கப்பட்ட பலூனில் மிதந்து கொண்டிருந்த அதியனுக்கு, தன்னைச் சுற்றி நடக்கும் எதுவும் மனதில் பதியவில்லை.

அடுத்தடுத்த நடந்த துஷ்ட சம்பவங்களால் முறையாய் செயல்படும் திறமையை இழந்த அதியனின் மூளை, நிகழ்வது அத்தனையையும் கனவு போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

மெதுவாக அவனைத் தரையிறக்கிய அந்தக் கண்ணாடி பலூன், அதியனின் பாதங்கள் தரையைத் தொட்ட அடுத்த நொடி மாயமாய் மறைந்து போனது. அதியனோ மரண பயத்தையே கடந்து விட்ட நிலையில் உயிர் உறைந்தபடி நின்றிருந்தான்.

அவனை இடித்துத் தள்ளிய லாரி டிரைவருக்கோ ஏறிய போதையெல்லாம் இறங்கிப் போயிருந்தது.

'இன்னையோட என் வாழ்க்கையே முடிஞ்சுச்சு..' என்று கையைப் பிசைந்தபடி லாரிக்கு அடியில் சிக்கியிருந்த பைக்கையும், அதனோடு இருந்த ஆளையும் தேடிக் கொண்டிருந்தார்.

அவர் கண்ணுக்கு எட்டிய பகுதியெல்லாம் தேடியும் அவன் கிடைக்காததால், 'டயருக்கு அடியில நசுங்கிட்டானா?..' என்ற அச்சத்தோடு தலையைச் சொரிந்து கொண்டு இருந்தவர் முன்னால், முழு உருவமாய் வந்து நின்றான் அதியன்.

'பைக் லாரிக்கடியில அப்பளமா நொறுங்கிக் கிடக்கு, அத ஓட்டிட்டு வந்தவன் என்னடான்னா அன்ன நடை நடந்துட்டு வர்றான்?!..' என்று அதிசயித்த லாரி டிரைவருக்கு, நெஞ்சு வலி வராதது ஒன்று தான் குறை..

'தண்ணியடித்து விட்டு லாரியை ஓட்டியதால் தவறு தன் பக்கம் இருக்கிறது.. எதிரில் இருப்பவன் போலீஸ், கேஸ், கோர்ட் என்று எதைப் பற்றி பேசப் போகிறானோ?..' என்ற அச்சத்தோடு பேய் முழி முழித்துக் கொண்டிருந்தார் லாரி டிரைவர்.

ஆனால் அதியனோ அமைதியாய், "நீங்க உங்க லாரிய எடுத்துட்டு கிளம்புங்கண்ணா, நான் என் பைக்க எடுத்துக்குறேன்.." என்று கூறிவிட்டான்.

நான் போன பிறகு போலீஸைக் கூப்பிடுவானோ என்று பயந்த லாரி டிரைவர் தலையைச் சொறிந்து கொண்டே, "தம்பி தூக்க கலக்கத்தில தெரியாம இடிச்சிட்டேன், உங்களுக்கு ஒன்னுமில்லையே?.." என்று தன்னை அறியாமல் சமாதானம் பேசிக் கொண்டிருந்தார்.

அதியனோ தன் மனதில், 'இங்கு நடந்த சம்பவத்தை இதுவரை எவரும் பார்க்க வில்லை, லாரி டிரைவரும் சரியாகக் கவனிக்கவில்லை. இதற்குப் பிறகும் எவரும் கவனிக்க கூடாது.. விரைவில் நான் இங்கிருந்து புறப்பட வேண்டும்..' என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

லாரி டிரைவரோ இன்னும் அதியனை நம்பாமல், "தம்பி பைக் சுக்கு நூறா உடைஞ்சிடுச்சுப்பா, இத எப்படி நீ எடுத்துட்டு போவ?.. என் கையில அஞ்சாயிரம் பணம் இருக்கு, வேணும்னா அத வச்சு" என்று இழுத்தார்.

"அதையெல்லாம் நான் பார்த்துக்குறேன், நீங்க சீக்கிரமா இங்கிருந்து கிளம்புங்க.." என்று எரிச்சலுடன் அவரை விரட்டுவதிலேயே குறியாக இருந்தான் அதியன்.

'இதுக்கு மேல ஏதாவது பேசினா இவன் கோபத்துல எதாவது சொல்லிடுவான்.. நாம வேற குடிச்சிருக்கோம், சூதானமா இடத்த காலி பண்றதுதான் உத்தமம்..' என்ற மனநிலையில் இருந்த டிரைவர், விட்டால் போதுமெனச் சிட்டாய் பறந்துவிட்டார்.

அதியன் மேற்கொண்டு செய்வதறியாது நொறுங்கிக் கிடந்த பைக்கின் அருகில் சென்று அமர்ந்தான்.

இறைவன் மனிதனுக்கு அளித்த மிகப்பெரிய வரம் மரணம்..

பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை என்று எது மனிதனைப் பிடித்து ஆட்டினாலும், அவன் ஒரு முறை மரணம் எனும் போதி மரத்தினைத் தழுவி விட்டால், அவன் மனதில் மீதமிருக்கும் வாழ்வினைப் பற்றிய கண்ணோட்டமே வேறு மாதிரி மாறியிருக்கும்.

அதியனும் அப்படி ஒரு போதி மரத்தடியில்தான் வந்தமர்ந்து இருக்கிறான்..

நேற்றிலிருந்து பேய் பிசாசு எனப் பலவித எண்ணங்களால் தறிகெட்டுத் திரிந்து கொண்டிருந்த அவன் மனது, இப்போது ஒரு நிலையான கோட்டிற்கு வந்திருந்தது.

'வேறு ஏதோ ஒரு அபரிமிதமான சத்தி, தன் உடலோடு வலுக்கட்டாயமாக இணைந்து கொண்டது. இனி அதனோடு தான் என் வாழ்க்கை மொத்தமும் நகர இருக்கின்றது..' என்ற உண்மையை அனுபவப் பூர்வமாக உணர்ந்திருந்த அதியன்,

'இதற்கு மேல் இங்கே அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தால் எவர் கண்ணிலாவது என் பைக் படக்கூடும்.. சாலையில் ஆள் நடமாட்டம் ஆரம்பிக்கும் முன்பாக இவ்விடத்தை விட்டு நான் காலி செய்ய வேண்டும்..' என்று நினைத்தவன், நொறுங்கிக் கிடந்த பைக்கின் பாகங்களை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து ஓரமாகப் போட ஆரம்பித்தான்.

ஐந்தாறு பாகங்களை எடுத்து ஓரமாகப் போட்டதும், அவன் கையில் இருந்த வாட்ச் ஆட்டோமேட்டிக்காக கீழே இறங்கியது.

'ஆத்தி, அதுவா இறங்கிப் போவுதே?! இப்போது என்ன செய்ய காத்திருக்குனு தெரியலியே..' என்று நெஞ்சைப் பிடித்தபடி, அதியன் அதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

உடைந்து கிடந்த பைக்கின் பாகங்களுக்கு மேல் பாம்பு போல் ஊர்ந்து சென்றது அந்த வாட்ச்..

வாட்ச் தீண்டிச் சென்ற அனைத்து பாகங்களும், நீல நிறமாக உருமாறிக் கொண்டிருந்தது. ஒன்றன் பின் ஒன்றாக உடைந்த அடையாளமின்றி பைக் மீண்டும் உருப்பெற ஆரம்பிக்க, அதியன் முற்றும் பித்தான நிலையில் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்..

ஒற்றை வினாடிக்குள் ஒட்டு மொத்த பைக்கும் ஒன்றிணைந்து விட, ஒரு முழு பைக் அவன் முன் நின்றது.

'இதுகிட்ட இருந்து தப்பிச்சு ஒடவும் முடியாது, எங்கேயும் போய் ஒளியவும் முடியாது. தப்பிக்க நினைச்சு நான் விரல அசைச்சா போதும், அதுவே என்ன தூக்கி பைக் மேல உக்கார வைக்கும்..' என்ற எதார்த்தத்தை அதியன் ஏற்கனவே உணர்ந்திருந்ததனால், அமைதியாய் அதில் ஏறி அமரந்தான்.

அவன் எதுவும் செய்யாமலேயே பைக் தானாக ஓட ஆரம்பித்தது..

நிகழ்வது அத்தனையையும் வேடிக்கை பார்க்கும் வெறும் பார்வையாளனாக அவன் அமர்ந்திருக்க, அது மிகச் சரியாக அவன் வீட்டிற்கே அவனைக் கொண்டு வந்து இறக்கி விட்டது.

மற்றவர்களுக்குத்தான் அது பைக்.. அவனுக்குத் தெரியுமே அது வேறு ஒரு சக்தியால் கட்டுப்பட்டு இருக்கிறது என்று..

அதனால் வீட்டிற்கு வலது புறத்தில் வராண்டா போலிருந்த ஒரு ஒதுக்குப்புறமான இடத்திற்கு பைக்கைத் தள்ளிக் கொண்டு சென்றான் அதியன்.

அங்கே வீட்டிற்கும் காம்பவுண்ட் சுவற்றிற்கும் இடைப்பட்ட சந்தில், யாரும் பார்க்க முடியாத ஓரிடத்தில் வண்டியை நிறுத்தினான்.

அவன் எதிர்பாத்தது போலவே வண்டியை நிறுத்தியதும், வாட்ச் பைக்கிலிருந்து தனியாகப் பிரிந்து வந்தது.

அடுத்த நொடியே பைக் பழையபடி தனித்தனி பாகங்களாக கழன்று விழுந்தது.

ஒரு பெருமூச்சுடன் அனைத்தையும் ஜீரணித்துக் கொண்ட அதியன், உதிரி பாகங்களாய் கிடக்கும் தன் ஆசை பைக்கினை மூன்று கோணிப் பைகளால் மூடி வைத்தான்.

வீட்டிற்குள் சென்றவன் எவரிடமும் எதுவும் பேசாமல், எந்திர கதியாகத் தயாராகி, விரைந்து அலுவலகத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தான்.

அவன் மனம் சொல்ல முடியாத அளவு குழப்பங்களைச் சுமந்திருந்தது..

வந்ததிலிருந்து அவன் முகமே சரியில்லை என்று உணர்ந்திருந்த கிரகலட்சுமி, "இப்போ எதையும் கேட்க வேண்டாம்டா. அவனுக்கு ஆபீஸ்ல எதாவது பிரச்சனையா இருக்கும். என்னவா இருந்தாலும் ரெண்டு நாள்ல சரியாகிடுவான், அவன கொஞ்சம் விட்டுப் பிடிப்போம்டா" என்றார்‌ கபிலனிடம்.

கபிலன் எப்பவும் போல துடுக்குத்தனமாய், "அவனுக்கு என்னம்மா பிரச்சனை இருக்கப் போகுது? அப்பாட்ட மாட்டி விட நல்ல சான்ஸ் கிடைச்சது, மிஸ் பண்ண வச்சுடீங்களே.." என்றான்.

அவனை முறைத்த கிரகலட்சுமி, "அவனப்பத்தி கோள் மூட்டிட்டே இருக்காம, காலேஜ்க்கு கிளம்புற வழியப் பாரு.." என்று கோபமாகச் சொல்லவும், வாயை‌ மூடிக்கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றான் கபிலன்.

அதியனோ தன் அறையினில், "இதோட எப்படி நான் ஆபீஸ்க்கு போறது?.." என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில், யதேட்சையாய் தீபக் அவனுக்கு போன் போட்டான்.

தீபக், "டேய் மச்சான், நேத்து ப்ராஜக்ட்ல ஒரு பிரச்சனை.. நீ எனக்காக இன்னிக்கி கொஞ்சம் சீக்கிரமா ஆபீஸ் வர்றியா" என்றான்.

அதியன், "ம்.. ஆனா‌ என் வண்டிய ஒர்க் ஷாப்ல விடனும், நீ வந்து என்ன பிக்கப் பண்ணிக்கோடா" என்றான்.

"ஃபைவ் மினிட்ஸ்ல, உன் பக்கத்து தெரு பஸ் ஸ்டாப்க்கு வந்து நிப்பேன் மச்சி.." என்றான் தீபக்.

அதியனும் அவசர அவசரமாய் தயாராகிவிட்டு, "அம்மா நான் ஆபீஸ் கிளம்பறேன்" என்று தன் குரலை மட்டும் கிச்சனுக்கு அனுப்பினான்.

"சாப்பிடலையாடா அதியா" என்றார் கிரகலட்சுமி.

"லேட்டாயிருச்சுமா, நான் எங்க கேன்டீன்ல பாத்துக்குறேன், பீளீஸ் மா.." என்று அம்மாவின் நாடியைப் பிடித்து ஆட்டி, செல்லம் கொஞ்சிவிட்டு கிளம்பிவிட்டான்.

அவன் புறப்பட்டுச் சென்ற கொஞ்ச நேரத்தில் கபிலன், "அம்மா.. இங்க ஓடிவாங்க.." என்று கதறிய கதறல், வீடே அதிரும் படி ஒலித்தது.

கிரகலட்சுமி என்னவோ ஏதோவென்று அலறியடித்து கபிலனிடம் வர, வீட்டிற்கும் காம்பவுண்டிற்கும் இடைபட்டச் சின்ன சந்தினைச் சுட்டிக் காட்டினான் கபிலன்.

அங்கே காயலான் கடை இரும்பு குவியலைப் போல எதுவோ கொட்டிக் கிடந்ததைப் பார்த்து கிரகலட்சுமி, "இது என்னடா, இப்படி கிடக்கு?" என்றார்.

"என்ன கேட்டா? உங்க அரும புள்ளைய‌ கூப்பிட்டு கேளுங்க.."

"இவன் வேற.." என்று முணங்கியபடியே, கொட்டிக் கிடந்த அந்த இரும்புகளிலிருந்து கைக்கு கிடைத்த ஒன்றை எடுத்துப் பார்த்தார்.

பாதி நெளிந்திருந்த நெம்பர் ப்ளேட், 'நான் தான் உங்க பையனோட பைக்..' என்று பல்லைக் காட்டியது.

கிரகலட்சுமி உச்சகட்ட அதிர்ச்சியோடு, "டேய், இது நம்ம அதியனோட பைக்குடா" என்றார்.

அவருக்கு மட்டுமல்ல, கபிலனின் முகமும் அப்பட்டமாக தன் பங்கு அதிர்ச்சியினை வெளிப்படுத்தி இருந்தது.

கபிலன், "என்னம்மா இது இப்படி கிடக்கு?" என்றான்‌

"நீ உடனே அதியனுக்கு போன் பண்ணுடா.." என்று அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார் கிரகலட்சுமி.

கபிலன் சாதுர்யமாய் அம்மாவின் எண்ணிலிருந்து அதியனுக்கு அழைப்பு விடுத்தான்..

வீட்டிலிருந்து கால் வந்ததைப் பார்த்ததுமே அதியன், 'ஓ.. வீட்டுல உண்மை தெரிஞ்சிடுச்சா? அதுக்குள்ள அம்மாவுக்கு இது தெரிய சான்ஸ் இல்லையே?

நாமதான் நல்ல மறைவான இடத்துல பைக்க கொண்டு போய் நிறுத்தி இருந்தோமே? கண்டிப்பா இது அந்த பய வேலையாத்தான் இருக்கும்..

அ‌வன சாயங்காலம் வீட்டுக்குப் போய் பார்த்துக்கலாம்..' என்று போனைக் கட் பண்ணி விட்டான்.

அங்கே அம்மாவும் பிள்ளையும் மாத்திமாத்தி போன் பண்ணவும், அதியன் ஃபோனை சுவிட்ச் ஆப் செய்து விட்டான்.

கபிலனுக்கு தன் அண்ணின் திருவிளையாடல்கள் அத்தனையும் அத்துப்படி என்பதால், முதல் வேலையாக அதியனின் நண்பன் தீபக்கிற்கு கால் போட்டான்..

"சொல்லுடா‌‌ மாப்ள.."

"அண்ணா, எங்கண்ணன வீட்ல காணும். ஆபீஸ்க்கு அதுக்குள்ள கிளம்பிட்டானானு டவுட்டா இருந்துச்சு, அதான் உங்ககிட்ட கேட்கலாம்னு கால் பண்ணேன்.."

"ஆமாடா, இன்னிக்கி எங்களுக்கு கொஞ்சம் ஹெவி வொர்க் இருக்கு. அதான் உங்க அண்ணன பிக்கப் பண்ண வந்துட்டு இருக்கேன்."

"பிக்கப்பா? ஏன் அவனோட பைக் என்ன ஆச்சு?.."

"அவன் பைக்க ஏதோ ஷெட்ல போடணும்னு சொன்னான், ஏன் உங்கிட்ட சொல்லலையா?"

"யாருட்டயுமே சொல்லலையே, என்னாச்சு?"

"தெரியலியே, பயபுள்ள எங்கயாவது கொண்டு போய் வசமா விட்டுட்டான் போல. என்ன பிரச்சனைனு எனக்குத் தெரியல, எதுக்கும் நீயும் அப்பாவும் பைக்க தொடாதீங்க. அவன் வரட்டும், நான் என்ன ஆச்சுனு‌ கேட்டு சொல்றேன்டா.."

"ஓகேண்ணா, நான் போன் பண்ண விஷயத்த என் அண்ணன்ட்ட சொல்லாதீங்க, திட்டுவான். டைம் பார்த்து நானே அவன்கிட்ட பேசிக்குறேன் அண்ணா" என்று போனை கட் பண்ணியவன்,

அம்மாவிடம், "உங்க செல்லப்புள்ள தீபக் அண்ணாகூடத்தான் ஊர் சுத்த போயிருக்கான், சாயங்காலம் அவன் வீட்டுக்கு வந்தா வாசப்படியிலயே நிக்க வச்சு நறுக்குனு நாலு கேள்வி கேளுங்கம்மா. இப்ப நீங்க விட்டுப்‌புடிக்கலாம்னு நினைச்சா, நாளைக்கி அவன்‌ ஒரு பொண்ண கூட்டிட்டு வந்து நின்னாலும் நிப்பான்.

தப்பு செஞ்சா அம்மா திட்டுவாங்கன்ற நினைப்பு இல்லனா, அவனுக்கு குளிர் விட்டு போயிடும். அவன சும்மா விடக்கூடாதும்மா நாம.." என்று அடுத்தடுத்த திட்டங்களை எடுத்துக் கொடுத்தான்.

"அதானடா, நீ சொன்ன மாதிரி ஆபீஸ் டைம்ல எதுவும் பேச வேண்டாம். சாயங்காலம் அந்த நாய் வரட்டும், பலம்மா ஒரு பூசைய போட்டு விடுறேன்.." என்று சொல்லிவிட்டுச் சென்றார் கிரகலட்சுமி..

கபிலனும் கிரகலட்சுமியும் சேர்ந்து வாய் வலிக்கும் வரை அதியனைத் திட்டித் தீர்த்தாலும், அவர்களின் மனம் ஆறவில்லை..

சில்லுச் சில்லாய் சிதறிக்கிடக்கும் பைக் துண்டுகளைப் பார்த்ததிலிருந்து கிரகலட்சுமிக்கு வேலையே ஓடவில்லை..

'அவன் வண்டிய எங்கேயாவது கொண்டு போய் இடிச்சாருந்தாக் கூட இப்படி அப்பளமா நொறுங்காதே? இல்ல ஏதாவது ரௌடிப் பசங்க வண்டிய அடிச்சு நொறுக்கிட்டாங்களா?

இவன்தான் யாரு வம்பு தும்புக்கும் போக மாட்டானே? என்னதான் நடந்திருக்கும்?' என்று ஏகப்பட்ட கேள்விகள் அவர் மூளைக்குள் குடைந்து கொண்டிருந்து.

'எதுவானாலும்‌ இன்று இரவு அவனிடம் பேசி ஒரு முடிவு கட்ட வேண்டும்..' என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு ஸ்கூலுக்கு புறப்படத் தயாரானார்.

அங்கே அதியன் தீபக்கிற்காக பஸ்டாப்பில் கால்கடுக்க காத்திருந்தான்.

தன் காரில் வந்த தீபக், அதியனை பிக்கப் பண்ணிக்கொண்டான்.

காரில் ஏறியதிலிருந்து அதியன் அமைதியாகவே வருவதைக் கண்டு, 'வீட்ல பைக் ரிப்பேர் பத்தி இவன் எதுவும் சொல்லாம வந்திருக்கான், அப்டினா கண்டிப்பா ஏதாவது பெரிய பிரச்சனையாத்தான் இருக்கும். இத வச்சு இன்னைக்கு உன்ன ஒரு வழியாக்குறேன் நண்பா..' என்று தன்னாலானதைச் செய்யத் தயாரானான் தீபக்.

"என்னடா உம்முனு உக்காந்திருக்க?"

"ஒண்ணுமில்லடா, கொஞ்சம் தலைவலியா‌ இருக்கு, அதான்.."

"சரி, வண்டிக்கு என்னாச்சு?" என்று மெதுவாய் அதியனின் வாயைக் கிளறினான்..

"அதான் சொன்னேன்லடா, சின்ன ரிப்பேர் ஷெட்ல போடனும்னு.." என்று விட்டேற்றியாய் பதில் சொன்னான் இவன்.

"உண்மையிலயே சின்ன ரிப்பேர்தானா? இல்ல வண்டியவே சின்னா பின்னமாக்கி வச்சிருக்கியா?"

அதியன் தீபக்கின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியாகிவிட, பயத்தில் வாய் குழறித் தள்ளியது..

"உனக்கு எப்படிடா அது தெரிஞ்சது?"

தீபக் தன் முகத்தைக் கொஞ்சம் பெருமையாய் நிமிர்த்திக் கொண்டு, "உங்கூட சின்ன வயசுல இருந்து குப்ப கொட்டுறேன், உன் முகர கட்டைய பார்த்து இதை கூட கண்டுபிடிக்கலனா நம்ம நட்புக்கு அசிங்கம்ல?" என்றான்.

"டேய்‌ தீபக், நான் ரொம்ப பெரிய பிரச்சனையில மாட்டிக்கிட்டேன்டா.. இந்த வாட்ச் என்னென்னமோ பண்ணுது, எனக்கு பயமா இருக்குடா.." என்று இவ்வளவு நேரமாய் தன் மனதில் அடக்கி வைத்திருந்த உணர்வுகளை எல்லாம் நண்பனின் தோள் மேல் கொட்டினான்.

"அப்படி என்னடா‌ பண்ணுது?"

"நான் இத எங்க எப்போ எப்படி வச்சிட்டு வந்தாலும், இது திரும்ப என் கைக்கே வந்து தொலைக்கிதுடா.." என்றான் அதியன்.

அதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்த தீபக், "எது? இந்த வாட்சா? நீ தூக்கி எறிஞ்சாலும் உன்கிட்டயே வருதாக்கும்? போன ஜென்மத்துல ஹட்ச் டாக்கா பிறந்திருக்கும் போல.. கதை சூப்பர்டா, அப்புறம்?.." என்று சிறு குழந்தை பாட்டியிடம் கதை கேட்பதைப் போல ஆர்வம் பொங்கக் கேட்டான்..

நண்பன் தன்னை கலாய்ப்பது புரிந்த அதியன் சற்று கோபத்தோடு, "டேய் பரதேசி, நிஜமாத்தாண்டா சொல்லிட்டு இருக்கேன். என் பேச்சை நம்பமாட்டியா?" என்று அழாத குறையாக தன் நண்பனை நம்ப வைக்க முயன்று கொண்டிருந்தான்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த தீபக், "இந்த வாட்ச்தான உன்ன ஃபாலோ பண்ணுதுனு சொன்ன?" என்று அவன் கையிலிருந்த வாட்ச்சைப் வாங்கி முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்தான்.

"ஆமா..." என்றான் அதியன் அப்பாவியாய்.

அவன் எதிர்பாராத நேரத்தில் தீபக் அதை காரிலிருந்து வெளியே தூக்கி எறிய, "அட பைத்தியக்கார நாயே.." என்பதைப் போல அதியன் தீபக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

"வாட்ச் கூடவே வரும்னு சொன்ன, எங்கடா வருது? நடந்து வருதா, ஓடி வருதா, இல்ல கால் டாக்ஸி ஏதாவது பிடிச்சு வருதா?" என்று அதீத அறிவுப் பூர்வமாய் பேசிக்கொண்டிருந்தான் தீபக்.

"வரும்போது பாத்துக்க.." என்ற அதியன் முதல் வேலையாய், தனக்கு சீட் பெல்ட்டை போட்டு அமர்ந்து கொண்டான்.

"டேய், ஓவரா பண்ணாதடா" என்று தீபக் சொல்லிக் கொண்டிருக்கையில், அவன் மூக்கைத் தொடுமளவு இடைவெளியில், அந்த வாட்ச் தீபக்கின் முன்னால் பறந்து வந்து நின்றது.

'அம்மே..' என்று அலறியபடி தீபக் சடன் ப்ரேக் போட்டு காரை நிறுத்தினான்.

வினாடி பொழுதிற்குள் பயத்தில் அவன் உடல் முழுவதும் குப்பென்று வேர்க்க, படபடப்பில் தன்னைச் சுற்றி என்ன நடந்ததென்றே புரிவில்லை..

அந்தரத்தில் நின்றிருந்த வாட்ச் மெதுவாக நகர்ந்து அதியனின் கையில் தானாய் கட்டிக்கொண்டது.

அவர்கள் காருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த கார்க்காரன், "டேய் பொறம்போக்கு, வீட்ல சொல்லிட்டு வந்துட்டயா? வண்டி ஓட்டத் தெரியுதோ இல்லையோ, வக்கனையா ஒரு கார வாங்கிட்டு வந்து எங்க உயிர எடுக்க வேண்டியது.. எல் போர்ட் வச்சு ஓட்டித் தொலைடா நாயே.." என்று சகட்டு மேனிக்கு கத்தி விட்டுச் செல்ல,

அதெல்லாம் காதில் கூட வாங்காமல் செத்த பிணம் போல நெஞ்சில் கைவைத்துக் கொண்டு, இமைக்கவும் மறந்த நிலையில் அமர்ந்திருந்தான் தீபக்.

'அப்போ இவன் சொன்னது எல்லாம் உண்மையா?.. வாட்ச் எப்படி பறக்குது?..' என்று வாட்ச்சையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதியன் அசிரத்தையாய், "நான் தான் சொன்னேன்லடா.. ஏன்டா இப்படி பண்ணின? இனிமே நீ வண்டிய ஓட்டாத, கண்டிப்பா எங்கேயாவது கொண்டுபோய் இடிச்சு தள்ளிருவ, நானே ஓட்டுறேன்" என்றான் அதியன்.

தீபக்கிற்கு இப்போது அதியன் பைக் ஏன் ரிப்பேர் ஆனது என்று விளங்கிவிட்டது. ஆதலால் அமைதியாய் சீட்டை மாற்றிக் கொண்டான்.

அதியன் காரை பீச் பக்கமாய் ஓட்டிக் கொண்டு சென்றான்.

அது ஒதுக்குபுறமான பீச் என்பதாலும், இன்று வாரக்கடைசி இல்லை என்பதாலும் மணற் பரப்பில் ஆட்கள் யாருமே இல்லை.

அதியன் ஆரம்பம் முதல் இன்று காலை வரை நிகழ்ந்தது அனைத்தையும் தீபக்கிற்கு விளக்கிக் கூறினான்.

"எங்க, அந்த வாட்ச்ச குடு.." என்றான் தீபக்.

அடிமனதில் சற்று முன் நடந்த சம்பவங்கள் ஞாபகம் வந்து பயம் காட்டினாலும், 'அப்படி என்னதான் இந்த வாட்ச்ல இருக்கு?..' என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அவனுக்கு அதிகமாக இருந்தது.

அதியன் அந்த வாட்ச்சை கொடுக்கவும், அதை வாங்கி கைக்கு கிடைத்த பட்டன்களை எல்லாம் அழுத்திப் பார்த்தான் தீபக்.

"என்னடா பண்ற?"

"இல்ல மச்சி, நான் பென் டென் ஃபேன். இந்த வாட்ச்சும் பார்க்க வித்தியாசமா இருக்குறதால, இதுக்குள்ள இருந்தும் ஏலியன் மாதிரி ஏதாவது வருதான்னு பார்த்தேன்" என்றான் தீபக்.

"உன் தல.." என்று தீபக்கின் பின்னந் தலையில் தட்டினான் அதியன்.

"அதுக்கில்லடா, என் ப்ரெண்டும் அவென்ஜெர்ஸ் மாதிரி ஒரு சூப்பர்‌ ஹீரோவா ஆனா எனக்கு பெருமைதானடா?" என்ற தீபக் அவ்வளவு துயரத்திலும் நண்பனை கலாய்க்க மறக்கவில்லை..

"எனக்கென்னமோ இது பேய் வாட்ச் மாதிரி தெரியுதுடா.. இது யாரையாவது பழி வாங்க வந்திருக்குமோ? இல்ல போன ஜென்மத்துல இந்த வாட்ச்ச கட்டி இருந்த ஆள, நான் கொலை பண்ணிட்டேனோ?

ஒருவேள இது என் வாட்ச்சா இருந்து, என்ன யாராவது கொன்னுருப்பாங்களோ? என்ன நடந்ததுனே தெரியலையேடா.. ஏன் இது என்னையே குறி வச்சு விரட்டிட்டு வருது?" என்றான் அதியன்.

"இருக்கலாம் மச்சி, அப்படி எதுவும் இல்லனா அடுத்த மாசமே அமெரிக்கப் படை வந்து உன்ன அலேக்கா அள்ளிட்டு போகப் போவுது பாரு.." என்று அசராமல் பீதியைக் கிளப்பினான் தீபக்.

"அதுவரைக்கும் இது என்ன உயிரோட வச்சிருக்குமாடா?" என்றவனின் கண்களில் நிஜமான உயிர் பயம் தேங்கி நின்றது.

தீபக், "சே.. சே.. அப்படியெல்லாம் எதுவும் ஆகாதுடா. அப்படி உன்ன கொல்லனும்னு நினைச்சிருந்தா, நீ ஆக்ஸிடெண்ட்ல மாட்டினதும் வாட்ச் உன்னப் புடிச்சு லாரிக்கு அடியில தள்ளி விட்டிருக்குமே தவிர, காப்பாத்தி இருக்காது டா. இது என்னமோ வேற மேட்டறா இருக்குது‌.."

"இல்லடா, இது டேன்ஜர்தான்.. கண்டிப்பா என்னை ஏதாவது பண்ணிடும்‌.." என்றான் அதியன்.

நண்பனின் சோர்வான முகத்தைப் பார்க்கப் பொறுக்காமல், "வேணும்னா வா நாம ரெண்டு பேரும் சண்டை போடுவோம், இது என்ன பண்ணுதுன்னு பார்க்கலாம்" என்று தீபக் சண்டை போடத் தயார் நிலையில் நின்று கொண்டான்.

அதியன் அதற்கு விருப்பம் இல்லாதவனைப் போல அமைதியாய் நின்றிருந்தான்.

தீபக் எந்தக் காலத்திலோ கற்றிருந்த கராத்தே ஞாபகத்தில், ஸ்டைலாக நின்று கொண்டு, அசால்ட்டாகக் காலைத் தூக்கி அதியன் முதுகில் அடி விழும்படியாகச் சுழற்றினான்.

அத்தனையும் அதியன் பார்த்து கொண்டிருந்தானே தவிர சிறிதும் நகரவில்லை..

ஆனால் அவன் கையிலிருந்த அந்த வாட்ச், தீபக் காலைத் தூக்கியதுமே ஆட்டோமேட்டிக்காக வேலை செய்ய ஆரம்பித்திருந்தது..

அந்த வாட்ச் அதியனின் வலது கையைச் சுற்றி ஒரு இரும்பு க்ளவுஸ் போல உருமாறி அதியனின் மணிக்கட்டு வரைக்கும் பூட்டிக் கொண்டது.

பைக்கோ வினாடிப் பொழுதில் தீபக்கின் காலைப் பிடித்து மேலே தூக்கி, அவனை கறிக்கடை ஆடு போலத் தலைகீழாக தொங்க விட்டுவிட்டது..

"அடப்பாவிப் பயலே.. என்ன கீழ இறக்கி விடுடா.." என்று தீபக் அலறிட, அதியனின் கையோ அவன் கட்டுப்பாட்டிலேயே இல்லை..

எவ்வளவு முயன்றும் கை தன் கட்டுப்பாட்டில் வராமல் போக, தன்னுடைய நண்பனைக் காப்பாற்ற வேண்டுமென்ற படபடப்பில், "டேய் தீபக்.. தப்பிச்சு ஓடுடா.. தப்பிச்சு போ.." என்று கத்தினான்.

தீபக், "அடேய் நீ விட்டாத்தானடா நான் ஓட.." என்று அலறினான்.

"என்னால முடியலையேடா.." என்றவன் தன் வலது கையை, இடது கையால் வலு கொண்ட மட்டும் அடித்துப் பார்த்தான்.

அந்த அடிக்கெல்லாம்‌ அவனின் வலது கை இம்மிகூட‌ அசையவே இல்லை..

தீபக் அழுவதைப் போல பாவமாய், "யப்பா வாட்ச்சு.. நான் தான் உன் ஆள அடிக்கவே இல்லையேய்யா. அப்புறம் ஏன்யா என்ன அறுக்க போற ஆடு மாதிரி இப்படி தலைகீழா கட்டித் தொங்க விட்டிருக்க? ஒரே ஒரு தடவ என்ன கீழ இறக்கி விடு, அதுக்கப்புறம் பாரு என் ராஜ தந்திரத்தை.." என்று அந்த வாட்ச்சிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தான்.

ஆனால் அவன் கதறல் அந்த வாட்ச்சிடம் எடுபடவே இல்லை.

நிமிடங்கள் நீள, அதியன் தன் மனதை தானே சமநிலைப் படுத்தி கொண்டு, "இவன் என் ப்ரண்டு, இவனால எனக்கு எந்த ஆபத்தும் இல்லை.. அவனை விடு, அவன விடு.." என்று தானும் பேச ஆரம்பித்தான்.

அதியன் பேச ஆரம்பித்த சில நொடிகளுக்குப் பிறகு அவனது வலது கையில் லேசாக உணர்ச்சி வரத் துவங்கியது.

விரலின் பிடிமானம் மெல்ல தளர்வடைய, அதன் பிடியிலிருந்த தீபக் பொத்தென்று கீழே விழுந்தான்..

விழுந்தவன் பயந்து போய் தன்னிச்சையாய் சில அடிகள் தள்ளிப் போக, அதியன் தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்துவிட்டான்.

நண்பன் அமர்ந்திருக்கும் நிலை தீபக்கின் மனதைப் பிசைய, "மச்சான் எனக்கு ஒண்ணுமில்லடா, லைட்டா பயந்துட்டேன்டா.. மத்தபடி எனக்கு ஒண்ணுமில்லடா.." என்று தூரத்திலிருந்தே இவனை அவன் ஆறுதல் படுத்திக் கொண்டிருக்க,

அதியனோ, "இல்லடா.. இது சரியா வராது. நீயே கண்கூடா பார்த்துட்டேல?

இந்த வாட்ச்ச வச்சுகிட்டு நான் எப்படி வீட்டுக்கோ ஆபீஸ்க்கோ போக முடியும்? எதார்த்தமா யாராவது திட்டுனா கூட இது பாட்டுக்கு தலைகீழா கட்டி தொங்க விட்டுரும் போல..

எங்கப்பா வேற ஒரு நாளைக்கு நூறு முறை என்னைத் திட்டுவாரு, நான் இப்ப என்னடா பண்ணட்டும்?.." என்று நொந்து போன குரலில் கேட்டான் அதியன்.

திபக், "ஆமாடா உங்க அப்பா வேற வேஷ்டி கட்டுற ஆளு, அவரை இப்படி தலைகீழா கட்டி தொங்க விட்டா ஷேம்ஷேமா போயிரும்.." என்றான் சீரியஸ்ஸான முகத்தோடு..

அவன் குறும்பு பேச்சால் தானும் சிரித்த அதியன், "இப்படியே கோக்குமாக்கா பேசிக்கிட்டு இருந்தனா, உன்னக் குத்திக் கொன்றுவேன்டா.." என்று கை நீட்டி மிரட்டினான்.

திட்டிக் கொண்டிருந்தவன் கையிலிருந்து நல்ல கூர்மையோடு ஒரு நீளமான கத்தி படக்கென்று வெளியில் வந்து, தீபக்கின் வயிற்றுக்கு ஒரு இஞ்ச் இடைவெளியில் நின்றது.

நொடிப் பொழுதில் இருவரின் விழிகளும் அச்சத்தில் விரிந்து நிற்க, தீபக்தான் முதலில் சுதாரித்து எழுந்தான்..

"அட கொலைகாரப் பாவி, வாய் வார்த்தையா சொல்லுறனு பார்த்தா, நிஜமாவே என்னக் கொல்லனும்னு நினைச்சுட்டு இருந்தியாடா.. உன் சங்காத்தமே வேண்டாம்டா சாமி" என்று கையெடுத்துக் கும்பிட்ட தீபக், அப்படியே தெறித்து ஓடினான்.

"டேய் நில்லுடா.. நில்லுடா.." என்று அவன் பின்னாலேயே ஓடினான் அதியன்.

தீபக் திரும்பி அவனைப் பார்த்து, "உனக்கு மனசாட்சியே இல்லையாடா? கொஞ்சம் விட்டிருந்தா என் குடலை உருவி உன் கழுத்துக்கு மாலையா போட்டிருப்ப..

நீயாவது தீட்சுவ கரெக்ட் பண்ணி காதல் கத்திரிக்கானு லைஃப என்ஜாய் பண்ணிட்ட‌. நான் இன்னும் எதையும் பார்க்காத அக்மார்க் கன்னிப் பையன்டா.. என்ன போய் சாகடிக்கப் பார்த்தியே, உனக்கு நான் என்னடா கெடுதல் பண்ணினேன்?

ஆளைவிடுடா ஐயா, உன் வழிக்கே நான் வரல.." என்று சொல்லி விட்டு திரும்பியவனின் முகத்திற்கு முன்னால் வந்து நின்று கொண்டது வாட்ச்..

'நான் விட்டாத்தான மவனே நீ போவ..' என்பதைப் போல அது அந்தரத்தில் ஆட, தீபக் செய்வதறியாது அதியனைத் திரும்பிப் பார்த்தான்.

அவனோ நமட்டுச் சிரிப்போடு நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.‌.

அவனை முறைத்த தீபக், மேற்கொண்டு நகர முடியாமல் தள்ளி போகப் பார்க்க, வாட்ச் அவனை நகர விடாமல் முன்னால் வந்து நின்றது.

தீபக் வேறு வழியில்லாமல் திரும்பி அதியனிடமே சென்றான்.

"என்னடா அவ்வளவு அவசரமா போன, இப்ப ஏன் திரும்பி வந்துட்ட‌‌. அப்ப நீ போகலையா?" என்று சீண்டினான்.

"நல்லா வாயில வந்திரும், பேசாம இருக்கியா? எல்லாரும் ஆளை வச்சு மிரட்டுவாங்க, நீ என்னடான்னா வாட்ச்ச வச்சு மிரட்டுறியா? இப்ப நான் உனக்கு என்ன பண்ணனும்னு சொல்லித் தொலை.." என்றான் சலிப்புடன்.

அவன் தோளில் கை போட்டுக் கொண்ட அதியன், "ஏன்டா கோச்சுக்குற? எனக்கு நீ இப்ப எதுவும் பண்ண வேண்டாம்டா, வா நாம அப்படியே கடல் ஓரத்தில ஒரு வாக் போயிட்டு வரலாம்‌.

மனசாவது கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும். காலையில இருந்து அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சியா பார்த்து, என் மனசு ரொம்ப பாரமா இருக்குடா.." என்றான்.

'அந்த வாட்ச் கூட கொஞ்ச நேரம் இருந்த நமக்கே இப்படினா, அவனுக்கு எப்படி இருககும்?..' என்று சூழ்நிலையையும் எதார்த்தத்தையும் உணர்ந்த தீபக் மறுத்துப் பேசாமல் அவனுடன் சென்றான்.

இருவரும் அந்தக் கடற்கரை மணலில் கால் புதையப் புதைய நடந்தார்கள்.

இரண்டு‌ மணி‌ நேரம் நடந்த பிறகு, கால் வலி எடுக்கவும் ஒரு இடத்தில் அமர்ந்தார்கள். நண்பனின் அமைதி தீபக் மனதை பிசைந்தது.

"அதியா, இந்த வாட்சப் பார்த்து நீ பயப்படத் தேவையில்லடா.. இது உனக்கு நல்லதுதான் செய்யுது, உன் கூட இருக்குறவங்களைத்தான் குழி தோண்டி புதைக்கப் பார்க்குது.

இந்த வாட்சும் உன்னை விட்டுப் போற மாதிரி தெரியல. அதனால நீ அது கூட குடும்பம் நடத்தப் பழகுடா..

மோர் ஓவர், உன் கைக்கு அந்த வாட்ச் ரொம்ப பாந்தமா பொருந்தி இருக்கு பாரு.. உங்க இரண்டு பேருக்கும் அப்படி ஒரு பொருத்தம் போ..

என்ன மட்டும் ரிலீஸ் பண்ணுடா, எங்கியாவது போய் பானிபூரி‌ கடை‌ போட்டாவது பொழச்சுக்குறேன்.." என்றான் தீபக்.

எதுவும் பேசாத அதியன், அமைதியாய் கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்..


 
Top