கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உளி தாங்கும் கற்கள் -அத்தியாயம் 1 & 2

Status
Not open for further replies.

Rosie kajan

Moderator
Staff member
"என்னதான் எண்டாலும் முதல் நம்மட நம்மட வீடு, அதுக்குப் பிறகுதான் மற்றது எல்லாம்." என்று அக்கா சொல்கையில் கண்டிப்புக் கலந்த எச்சரிக்கை மிகையாகவே இருக்கும்.

அம்மாவைப் பார்த்த என் கண்களும் நிறைந்து போயின. அதுவரை இருந்த பசியென்ற உணர்வே அற்றுப் போய், அண்ணா எப்பவும் உயிரோட சுகமாக இருக்க வேண்டும் என்று கடவுள் என்று சுட்டப்படும் எல்லாரிடமும் மன்றாடி வேண்டத் தொடங்கிவிட்டது, என்னுள்ளம்.

'அண்ணா கெதியாத் துண்டு குடுத்திட்டு இயக்கத்தை விட்டுட்டு வந்திர வேணும்.' என்றுதான் முதலில் விரும்பி வேண்டியது மனம். அடுத்தோ, 'என்ன பாடு பட்டெண்டாலும் அண்ணாக்கு வெளிநாடு போகக் கிடைக்கோணும்.' என்றும் வேண்டிக்கொண்டது.

"பச்! அம்மா அழாதேங்க! தம்பியக் கண்டனாங்க." என்றாள் பெரியக்கா. அப்பா தான் ஏதோ யோசனையில் இருந்தார். எதுவும் சொல்லவில்லை.

"பேந்தென்ன? அத முதல் சொல்ல வேண்டியது தானே? இங்க நாங்க அந்தரிச்சுப் போய் இருக்கிறது விளங்கேல்லையா? அப்பவும் நானும் வாறன் என்றனான், ஆயிரம் சாட்டுச் சொல்லி, விட்டுட்டுப் போனனீங்க தானே? நானும் வந்திருக்க என்ர பிள்ளயப் பாத்திருப்பனே!"

அப்பாவைப் பார்த்துக் கோபமாகத் தொடங்கிவிட்டு," பிள்ள நல்லா இருக்கிறானா?" அக்காவிடமே கேட்டார், அம்மா.

"இருக்கிறான் மா ; சுன்னாகத்தில முதல் இருந்த கேம்பில இல்ல; வேற கேம்புக்கு மாறிட்டான் எண்டு சொன்னாங்கள். அது எங்க இருக்கு எண்டு கேட்டம். 'போனாலும் சந்திக்கிறதுக்குச் சந்தர்ப்பம் கிடைக்காது, முக்கிய வேலையாப் போயிருக்கீனம்' எண்டு சொல்லிப் போட்டீனம். வழமையா நிக்கிற பெடியலும் இல்ல. பிறகு அங்கயே நிண்டு 'தூரத்தில இருந்து வந்திருக்கிறம் சந்திச்சுக் கனகாலம்' எண்டெல்லாம் சொல்லத்தான் காம்ப் எங்க இருக்கு எண்டு சொன்னாங்கள். அது சரியா உள்ள போக வேணும்; அதான் நல்லா நேரம் போயிட்டு." என்றாள் பெரியக்கா.

"ஓ! அப்ப இனி அங்க தான் இருப்பானா?" அம்மா.

"இல்லப் போல! நாங்க அதையெல்லாம் கேட்கேல்லம்மா. ஒரு ரெண்டு நிமிசம் கூடக் கதைக்கேல்ல. கேம்புக்க இருந்து வெளில வந்துதான் கதைச்சவன். 'முக்கிய அலுவலா இங்க வந்து நிக்கிறன், உள்ள எல்லாம் கூப்பிடேலாது.' எண்டிட்டு, எங்கள அதில நிக்கவும் விடேல்ல. 'கனநேரம் இங்க நிக்கேலாது, போயிட்டு வாங்க.' எண்டு சொல்லீட்டான். ஆளின்ர முகமே சரியில்ல. களை களை எண்டு களைச்சு ..." என்று சொல்லும்போதே அக்காவின் கண்கள் கலங்கி இருந்தன. முழுதும் சொல்லி முடிக்காது நிறுத்திவிட்டாள். அழுகையை அடக்கிக் கட்டுப்படுத்துகின்றாள் என்று அப்படியே தெரிந்தது. அவளும் அண்ணாவும் நெருங்கிய நண்பர்கள் போல. சிலவேளைகளில் சண்டைபோட்டு அடிபடுவார்கள் தான்; என்றாலும் இருவரும் பே ஒட்டு!

"பிள்ளைக்கு வருத்தம் எதுமோ? போன முறை காயம் பட்டதில முதுகுக்க எடுக்க ஏலாம குண்டு இருக்கு எண்டவன் தானே? அதுதான் என்னவும் எதுவுமோ!" கலங்கிப்போய் அம்மா கேக்க, "அப்பிடி எல்லாம் ஒண்டும் இல்லம்மா, சும்மா இருங்கோ!" அதட்டலாகச் சொன்னாள், பெரியக்கா.

அம்மா அப்பாவையும் அதட்டுவது என்றால் அவள் மட்டும் தான் . சின்னக்காவையும் அதட்டுவாள் தான். "நீ கம்பஸ் போனோன்ன இந்த வீட்டுக்குப் பெரிய முதலாளி இல்ல; எனக்குக் கதை சொல்ல வராத அக்கா" என்று திரும்பிச் சொல்லிவிடுவாள், சின்னக்கா.

நான் தான் யார் என்ன சொன்னாலும் வாயை மூடிக்கொண்டு கேட்பேன். வீணாக அடியும் நறுக்கென்ற குட்டும் வாங்குவதை விட வாயை மூடிக்கொண்டு நிற்பதென்பது எவ்வளவோ மேல் தானே?

"வருத்தமும் இல்ல எண்டா ...அடிபாட்டுக்கு ஏதும் போகப் போறானோ?"

கேவலும் ஏக்கமும் பயமுமாக அம்மா கேட்கையில் என் நெஞ்சுக்குள் சுள்ளென்று குளிர் பரவியது.

ஏற்கனவே அண்ணா காயம் பட்ட போதெல்லாம் எங்களுக்குச் சொல்லவில்லை. சுகம் வந்த பின்னர் சிலநாட்கள் விடுமுறை என்று வீடு வரும் போதுதான் சொல்லுவான். ஆனாலும், இரண்டு தடவைகள் அவனின் சிநேகிதன் கதிரவன் அண்ணா வந்து சொல்லி, பெரியாஸ்பத்திரியில் அண்ணா இருக்கும் பொழுது போய்ப் பார்த்தோம்.

ஐயோ! அதை நினைத்தாலே எனக்குத் தலை சுற்றியது.

என் அண்ணா நல்ல உயரம், ஆறடிக்கும் மேல! அவன் அப்படி வளர்ந்தது கூட எங்களுக்குத் தெரியாது. பதினாறு வயதில் எங்களைவிட்டுப் பிரிந்து போகையில் அப்படிப் பெரிய உயரம் இல்லை. அதோடு நல்ல கறுவல் தான், ஆனால், வடிவானவன். அதிலும் தலை மயிரை இழுத்து இழுத்து பம்மென்று அவ்வளவு வடிவாக வைத்திருப்பான். சிலவேளைகளில் என் அண்ணா எங்களை எல்லாம் உதறிவிட்டு இயக்கத்துக்குப் போய்விட்டான் என்பதையே என்னால் நம்ப முடியாமல் இருக்கும்.

'கடவுளே! மாதாவே! அந்தோனியாரே! முருகா! பிள்ளையாரப்பா! யேசப்பா! உலகத்திலுள்ள எல்லாக் கடவுள்களையும் கும்பிடுறன், என்ர அண்ணா சண்டைக்கெல்லாம் போகக் கூடாது! உங்களால மட்டும் தான் அவன வீட்ட கூட்டிக்கொண்டு வர ஏலும்! '

மனம் தன்பாட்டில் முணுமுணுக்க, நானும் அம்மாவுக்குப் பக்கத்தில் சென்றமர்ந்து விட்டேன்.

கொஞ்சநேரம் யாருமே கதைக்கவில்லை. அதிலிருந்து அப்பா, பெரியக்கா ஆட்களுக்கும், அண்ணா சண்டைக்குப் போகப் போகின்றான் என்ற கருத்தே என்பது புரிந்து போயிற்று.

"என்ர பிள்ளயைப் பெத்துப் பதினாறு வருசங்கள் எவ்வளவு எல்லாம் பாடுபட்டு வளர்த்தன்? இப்ப என்னடா எண்டா ஒவ்வொருநாளும் இப்பிடிக் கிடந்து வேதனைப்படுற மாதிரிப் போச்சே!" அம்மாவின் புலம்பல்.

" நாசமாப் போற அறுவான்கள்! அமைதிப்பட எண்டு நாடுவிட்டு நாடு வந்திட்டுப் பிள்ள பிடிப்படையா மாறினதாலத்தானே என்ர மகன் இயக்கத்துக்குப் போனவன்? இல்லையோ, அவன் கடைசிவரை என்ன விட்டுட்டுப் போயிரான்." அழுதார் அம்மா. அதைப்பார்த்திருந்த எங்கள் மனங்கள் வலித்தது. அம்மா சொல்வதுதான் உண்மையும். அந்த நேரம் சாதாரணதரப் பரீட்சைக்கு என்று வலு மும்முரமாகத் தயாராகிக் கொண்டிருந்தான், அண்ணா.

"வீட்டு நிலை தெரிஞ்சவன் அவன். வெளியில தலைக்காட்ட முடியாமல் வீட்டுக்க முடக்கிப் போட்டாங்கள். 'அக்காவும் தங்கச்சிகளும் வெளில போய் வர நான் இப்பிடி வீட்டுக்க இருக்க வேண்டிக்கிடக்கே! பே விசர் வருதம்மா!' எண்டு சொல்லுறவன் என்ர பிள்ள. அப்பவும் ஒருக்காவா ரெண்டு தரமா? மூண்டு முறையல்லோ பிடிச்சிக்கொண்டு போனவங்கள். 'டியூஷனுக்குப் போனவன், சின்னப்பிள்ள விட்டிருங்க!' எண்டு இந்தியன் ஆமிண்ட காலில விழுந்தல்லோ அசோகா ஹோட்டலடியில இருந்து அவனக் கூட்டிக் கொண்டு வந்தனான். 'நீங்க ஏனம்மா கண்டவன் காலிலும் விழ வேணும்?" எண்டு என்ர பிள்ள கேட்ட போதே எனக்கு விளங்கி இருக்க, என்ர பிள்ளய வெளியிலயே விட்டிருக்க மாட்டன். யார் கையைக் காலைப் பிடிச்சாயிலும் வெளிநாட்டுக்கு எங்கயும் அனுப்பி இருப்பனே! பள்ளிக்கூடத்துக்குப் போனவன் அப்பிடியே போயிருவான் எண்டு கண்டனா என்ன? கடவுளே உனக்குக் கண்ணே இல்லயா?" அம்மாவின் அழுகை வலுக்க, விசுக்கென்று எழுந்தார் அப்பா.

"இங்க பாருங்க கமலா, நடந்ததத் திரும்ப திரும்பச் சொல்லி இப்படி அழுது என்ன வரப் போகுது சொல்லுங்க பார்ப்பம்? அதெல்லாம் ஒண்டுமில்ல, 'முக்கிய அலுவலாப் போகப் போறன், போயிட்டு வந்தோன்ன வீட்ட வாறன்' எண்டு தான் சொன்னவன். உங்கள எல்லாம் கேட்டவன். செவ்வந்தி உன்னத்தான் திரும்ப திரும்பக் கேட்டவன்." என்று அம்மாவை அதட்டிக்கொண்டு ஆரம்பித்துக் குரல் தணியச் சொல்லிவிட்டுக் கிணற்றடி நோக்கி நகர்ந்து விட்டார்.

"நான் பெத்த வயிறு எரிய எரியக் கதைக்கிறது உங்களுக்குக் கரைச்சலா இருக்கா என்ன? நீங்க ஒழுங்கா நாலு காசு சேர்த்திருக்க மற்றச் சனங்கள் போல நாமளும் அவனக் கொழும்புக்கோ இந்தியாவுக்கோ அனுப்பி இருக்கலாமே! மூண்டு வேளையும் தின்னவே இங்க வக்கில்ல, அதில வெளியில அனுப்புறது எல்லாம் எப்பிடி? கடவுளே! காசில்லாதவனுக்குத்தான் எல்லாத் துன்பமுமா?"

அப்பாவைச் சீறிய வேகத்தில் அம்மா தலையில் அடித்துக் கொண்டு அழ, பெரியக்கா ஓடி வந்து அம்மாவை அணைத்துப் பிடித்துத் தடுத்தார்.

"இங்க பாருங்கம்மா, இப்பிடி அழுது ஒரு பிரயோசனமும் இல்ல; அவன் சண்டைக்கே போனாலும் சுகமா வருவான் எண்டு நம்புவம் அம்மா; வந்திருவான்; இப்படி அழுது அழுது உங்களுக்குத்தான் வருத்தம் வந்திரும்." என்ற பெரியக்காவோடு சின்னக்காவும் சேர்ந்து அம்மாவை ஆறுதல் படுத்த முனைந்தார்கள்.

அன்றிரவு, புத்தம் புது மாவில் அவித்த அரிசிமாப் பிட்டும் முட்டைப் பொரியலும் சீந்துவார் யாருமின்றிக் கிடந்து காய்ந்தது, எங்கள் வீட்டில்.
 
Status
Not open for further replies.
Top