கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உளி தாங்கும் கற்கள் -அத்தியாயம் 4

Rosie kajan

Moderator
Staff member
அத்தியாயம் 4
அப்பா ஒருபக்கமும் பெரியக்கா ஒருபக்கமுமாகத் விசாரிக்கத் திரிந்ததில் அண்ணாவும் 'தவளைப்பாய்ச்சல்' என்ற ஆனையிறவுச் சண்டைக்குப் போயுள்ளது நிச்சயமாகிற்று!

எங்கள் வீடோ கதி கலங்கிப்போனது! சாவி கொடுத்த பொம்மைகளானோம் நாம். சுவாசித்தோம், தாகம் தீர்த்துக்கொண்டோம், கிடைப்பதைக் கொறித்தோம். இருந்தும் இதிலெதையுமே உணர்ந்து செய்தோமில்லை.

நரக வேதனை என்பது இதுதானோ என்றுணர்ந்த வண்ணமே மணித்துளிகள் கடந்து போயின! அதைவிட ஒரு வேதனையோ, மனவுளைச்சலோ இருக்க முடியாதென்றே நினைத்தோம்.

வியாழன், வெள்ளி, சனி என்று அந்தக் கலக்கம் அதிகரித்துக் கொண்டே போனதேயொழிய சற்றும் குறையவில்லை. இருந்தும், எங்கள் ஒவ்வொருவரின் மனவாழத்திலும் அண்ணா எப்படியும் நல்லபடி வந்துவிடுவான் என்ற நம்பிக்கையிருந்தது.

கண்களில், கருத்தில் பட்ட கடவுளர் எல்லோருக்கும் இறைஞ்சல்கள் சளைக்காது அனுப்பினோம்; தகுதிக்கும் மீறிய நேர்த்திகள் வைத்தோம்.

சனிக்கிழமை மாலை தீசன் அண்ணாவும் அவரின் மனைவி ராசாத்தி அக்காவும் வந்திருந்தார்கள். அவர்கள் புங்குடுதீவிலிருந்து அமைதிப்படையின் அட்டூழியங்களுக்கு அஞ்சி,'சேத்து வச்ச சொத்துப் பத்துப் போனாலும் பரவாயில்ல, உயிரையும் மானத்தையுமேனும் காப்பாற்றுவம்' என்ற நோக்கில் அடித்துப் பிடித்துக்கொண்டு இடம் பெயர்ந்து வந்து எங்கள் வீட்டுக்கருகில் சிலமாதங்கள் இருந்துவிட்டு, இப்போது பாண்டியந்தாழ்வில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் எங்களுக்கும் குறுகியகாலப் பழக்கமேயென்றாலும் அது நெருக்கமான நட்பாகியிருந்தது.

அந்தத் தீசன் அண்ணாவின் ஒன்றுவிட்ட தம்பியும் இயக்க உறுப்பினர்தான்; பலவருடங்களாக இருப்பவர். பெரிய பொறுப்பாளர் என்றெல்லாம் சொல்வார்கள். அவரும் இந்தச் சண்டைக்குச் சென்றுள்ளதாகச் சொன்னார்கள். அந்த அண்ணாவுக்கு நேரடி உரித்தென்றால் ஒரு தங்கை மட்டும் தான். தாய் தந்தை இறந்துவிட்டார்கள். அந்த அக்காவை எங்களுக்கும் மிக நன்றாகவே தெரியும். அடிக்கடித் தீசன் அண்ணா வீட்டிலும் வந்து நிற்பார். தன் ஒரே சொந்தம் எந்த உயிர்ப்பங்கமும் இன்றி வந்துவிடவேண்டும் என்ற கலக்கத்தில் அந்த அக்கா இருப்பதாக தீசன் அண்ணாவின் மனைவி சொல்லிக் கலங்கினார். யார் தேறுதல் சொல்லவியலும்?

ஒத்த மனநிலையில் உள்ளோர் கலக்கத்தோடு கதைத்துக் கொண்டோம். ஒருவர் ஒருவருக்கு ஆறுதலும் தான். அம்மாவோ, எதையுமே கருத்தில் எடுக்கவில்லை; அழுதுகொண்டே இருந்தார்.

அதோடு, 'இந்தச் சண்டையில பெடியளுக்குத் தோல்வியாமே; சரியான இழப்புமாம்.' அப்படி இப்படி அடுத்தடுத்த நாளே பரவலாகக் கதைக்கவும் தொடங்கியிருந்தார்கள். நாங்கள் அந்த ரீதியில் எல்லாம் நினைத்தும் பார்க்கவில்லை. எங்கள் வீட்டுயிர் அங்கு சென்றிருக்கென்று உறுதியாகத் தெரிகையில் சும்மாவேனும் எதிர்மறையாக எண்ணிவிட முடியுமா என்ன?

"இந்தச் சனத்துக்கு ஒண்டு எண்டா ஒன்பது எண்டு கதைக்கிறதே வேலையாப் போச்சு!" என்று, கடக்க நினைத்துக் கழிந்தன மணித்துளிகள்.

அடுத்தநாள் ஞாயிறு...பொழுது மிகப் பாரமாக விடிந்தது போலிருந்தது. தொடர்ந்து மூன்று நாட்கள் சுமந்த வேதனையும் மனக்குழப்பமும் காரணமாகவும் இருக்கலாமே!

பல்லுத் துலக்குவது கூடக் கடினமாக இருந்தது; அவ்வளவு சோர்வு; காய்ச்சல் காரர் போலுணர்ந்தேன் நான்.

அதை அம்மாவிடமோ அக்காக்களிடமோ சொல்லவும் முடியவில்லை. அவர்களும் அப்படித்தான் இருந்தார்கள்.

வழமையாகக் காலையில் அடுப்பை மூட்டித் தேனீர் போடுவது அம்மாதான். கேற்றிலை அடுப்புச் சாம்பல் தொட்ட தேங்காய்த் தும்பால் நன்றாக துலக்கிக் கழுவித் தண்ணீர் கொதிக்க வைப்பார். சிலவேளைகளில் நல்ல விறகும் இராது. ஈர விறகு, சுள்ளி, தேங்காய் மட்டை என்று வைத்து, அப்பாவுக்கு நாலு ஏச்சுப் பேச்சும் கொடுத்துப் புறுபுறுத்தபடி அம்மா தேனீர் ஊற்றுவதைப் பார்க்கையில் பலவேளைகளில் சிரிப்பாக இருக்கும். அப்பாவே அதைக் கண்டுகொள்ளவதில்லை.

இந்த மூன்று நாட்களாக அம்மா தான் குசினிப் பக்கம் போவதே இல்லையே!

முகம் கழுவிய கையோடு குசினியை எட்டிப் பார்த்தேன். அடுப்பே பற்ற வைக்கவில்லை. வெளியே வந்தால் அப்பாவின் சைக்கிளைக் காணவில்லை. வெளியில் சென்றுவிட்டார் போலும். அம்மாவும் அக்காக்களும் முற்றத்தில் நின்றபடி பக்கத்து வீட்டு ஆட்களோடு இந்தச் சண்டையைப் பற்றித்தான் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.

பெரியக்காவின் காதில் குட்டி ரேடியோ! உள்ளங்கையினுள் அடக்கிவிடலாம்; யாரோ வவுனியாவுக்குப் போய்வருப்பவர்களிடம் சொல்லி வைத்து 500 ரூபாய்க்கு வாங்கியது. அதுவும் பெரியக்காவிற்குப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பெர்சரி காசில் அப்பா வாங்கிக் கொடுத்திருந்தார். இரு சின்ன பேட்டரிகளில் இயங்கும். எனக்குப் பாட்டுக்கு கேட்க ஆசையாக இருக்கும் . அக்கா தரமாட்டாள். பாட்டரி கிடைப்பது அரிதென்பதால் முக்கியச் செய்திகளுக்கு மட்டுமே அதைப் போடுவாள்.

நான் திரும்பவும் சமையல் அறைக்குள் வந்தேன். நாக்கெல்லாம் என்னவோ போலிருந்தது. தேநீர் குடித்தால் நன்றாக இருக்கும் போலிருக்கவே கேற்றிலை எடுத்தேன்.

'மினுக்க வேணுமோ! பச்... நல்லாத்தான் கிடக்கு!' சும்மா அலம்பிப் போட்டுத் தண்ணியை நிறைத்துக்கொண்டு வந்து அடுப்பில் வைத்தேன்.

அடுப்பில் ஒருநாளுமின்றிச் சாம்பல் நிறைந்து கிடந்தது. நின்றுகொண்டே சமைக்கும் வகையிலான அந்தச் சீமெந்து மேடையில் இரு அடுப்புகள் இருந்தன. எப்போதுமே நல்ல சுத்தமாக இருக்கும். மேலே ஒரு மூலையில் சின்ன உப்புப் பானை; பக்கத்தில் ஒரு போத்தலில் உப்புப் போட்டு தண்ணி விட்டிருக்கும்; மறுபக்கம் திருகாணியில் புட்டுப் பானை,இவ்வளவும் தான்.

இன்றோ, இரண்டு அடுப்பிலிருந்தும் வழிக்கப்பட்ட சாம்பல் முன்னால் ஒதுக்கிக் கிடந்தது. மற்றைய அடுப்பில் ஒரு மண்சட்டி; அதனுள் அகப்பை; திறந்து பார்த்தால் பருப்புக்கறி; மிளகாய்த்தூள் போட்டு வச்ச பருப்புக்கு கறி அப்படியே இருந்தது. சற்றுத் தள்ளி சோற்றுப்பானை ; கறுப்பரிசிச் சோறு தண்ணியும் ஊற்றாததில் பிசுபிசுத்த மணம் வந்தது.

நேற்றுக் காலையிலேயே சின்னக்கா சமைத்திருந்தாள். யாரும் சாப்பிடவில்லை. கண்கள் நிறைந்தன. ஒரு பருக்கையையும் வீச மாட்டார் அம்மா. இன்று?
 

Rosie kajan

Moderator
Staff member
அடைத்த துக்கத்தை விழுங்கிக்கொண்டே அடுப்புக்குக் கீழே விறகு போடும் பகுதியில் இருந்த பிடி கழன்ற சாம்பல் போடும் தாச்சியை எடுத்து சாம்பலை வளித்துப்போட்டு அந்தப் பகுதியைச் சுத்தப்படுத்திவிட்டுக் கையை அலம்பிவிட்டு வந்தேன்.

அடுப்பை மூட்ட வேண்டுமே! மண்ணெண்ணெய் ஊற்றிப் பற்ற வைக்கலாம், வெகு சுலபம் தான்;ஆனால் அந்த மண்ணெண்ணையில் இரண்டு நாட்களுக்கு விளக்கு எரிக்கலாமே, சிக்கன விளக்கு.

காய்ந்த தேங்காய் மட்டைகள் சிலதுகள் கிடைக்கவே அவற்றில் இரு துண்டுகளை பிய்த்தெடுத்து அதிலிருந்து தும்பைப் பிய்த்து வைத்தேன் . சிறு சுள்ளி விறகோடு அதைச் சேர்த்து அடுக்கிவிட்டு, பழைய கொப்பிப் பேப்பர் ஒன்றைக் கொளுத்தி நெருப்பு மூட்ட முயன்றேன்.

பெரும் பிரயத்தனத்தில் மெல்ல மெல்ல பற்றிய தீ நின்று எரியத் தொடங்கியது.

சிரட்டைகளை, அயர்ன் பண்ணத் தேவைப்படும் கரிக்காகச் சேர்த்து வைப்போம். இன்று, பாதிச் சிரட்டையை அடுப்புக்குள் வைத்து விட்டேன், தண்ணி விரைந்து கொதித்துவிட்டது.

'அப்பா வந்த பிறகு போடலாம், எங்களுக்கு இப்பப் போடுவம்' என்ற நினைவோடு, வெறும் தேனீரை ஊற்றி நால்வரின் கோப்பைகளையும் நிறைத்துவிட்டுச் சீனிப் போத்தலையும் எடுத்துக் பக்கத்தில் வைத்தேன். தொட்டுக் கொண்டுதான் குடிப்போம். எப்பவாவது ஒருநாள் பால் தேனீருக்குள் கலக்கித் தருவார் அம்மா.

'சரி அவையலையும் கூப்பிடுவம்' என்று நான் வெளியில் வர, எங்கள்வீட்டுப் படலையைத் திறந்து கொண்டு வந்தார் அந்த அண்ணா. தீசன் அண்ணாவின் வீட்டுக்குப் பக்கத்துவீட்டில் இருப்பவர்.

'என்ன விசயம்? இங்க ஏன் வாறார்? அதுவும் இவ்வளவு வேகமாக! ' மனதுள் கேள்விகளோடு அம்மா ஆட்கள் நின்ற இடம் நோக்கி நகர்ந்தேன் நான்.

அம்மா ஆட்களின் அருகில் வந்து நின்ற அந்த அண்ணா, அப்போதும் சைக்கிளை விட்டு இறங்கவில்லை; அப்படியே வட்டமடித்துத் திருப்பி, செல்வதற்குத் தயாராக நின்ற வண்ணம், "ஆன்ட்டி!" என்றழைத்துவிட்டு வேகவேகமாக மூச்செடுத்து விட்டார். அவ்வளவு வேகமாகச் சைக்கிளை மிதித்துக்கொண்டு வந்துள்ளார், ஏன்?

"என்ன தம்பி ? என்ன நடந்திட்டு?"

அம்மா கேட்டுக்கொண்டே அந்த அண்ணாவின் அருகில் செல்ல, "அது வந்து ஆன்ட்டி, தீசன் அண்ணாட தம்பி வீரமரணமாம்; இப்பத் தான் பொடி வந்திருக்கு." என்று, அந்த அண்ணா சொன்னதை எங்கள் வீட்டார் கற்பனையிலும் எதிர்பார்க்கவில்லை.

'வீரமரணம்', 'பொடி' மிக இயல்பாகப் புழக்கத்தில் இருந்த வார்த்தைகள் ஆகிப்போன காலம் தான் என்றாலும், நமக்கு நமக்கு என்று வந்தால் தானே அதன் வலியும் வேதனையும் முழுமையாகப் புரியும்.

சுளீரென்று வலித்தது. மறுநொடியே அந்த அக்காவின் முகம் தான் மனக்கண்ணில்! அவரின் ஒத்த உறவு அந்த அண்ணா தான்.

அடுத்தநொடி சைக்கிளில் மின்னலாகப் பறந்த அந்த அண்ணாவைப் போலவே எங்கள் கால்களும் பாண்டியன்தாழ்வு நோக்கி விரைந்தது.

"இந்த வயலுக்கால போய் விதானையார் வீதியால போகலாம் மா!" என்றபடி, எங்கள் வீட்டினருகில் இருந்த ஒழுங்கையால் திரும்பி ஓடினேன்.

"அம்மோய் நில்லுங்க, வந்து ஏறுங்க?" என்றபடி சைக்கிளோடு வந்தாள் பெரியக்கா.

"செவ்வந்தி என்னோட வாடி!" என்றபடி வந்த சின்னக்காவோடு நான் தொத்திக் கொண்டேன்.

அந்த அண்ணா வந்து செய்தி சொல்கையில் நேரில் சந்தித்திராவிட்டாலும் தீசன் அண்ணாவின் தம்பியின் மறைவு சகிக்க முடியாததாதாக இருந்தாலும் நொடிதான், என் மனதில் என் அண்ணன் வந்து நின்றான். 'அவனும் தானே போனவன்? ஐயோ!' நான் மனதுள் அலற, " என்ர பிள்ளை என்ன பாடோ!" அம்மா அழவே தொடங்கியிருந்தார்.

அக்காக்கள் ஒன்றும் கதைக்கவில்லை. சைக்கிளை மிக வேகமாக மிதிப்பதில் குறியாக இருந்தாலும் அவர்கள் கண்களிலும் கண்ணீரே!

அடுத்த ஐந்தாவது நிமிடம் அவர்கள் வீடு சென்றிருந்தோம். அவர்கள் அங்கு வந்து சிலமாதங்களே என்றதால் அயலில் அவ்வளவாகப் பழக்கமும் இல்லை. அதனால் அயலவர்கள் என்று பெரிதாக இல்லையென்றாலும் இயக்க அண்ணாமாரும், அக்காமாரும் நிறைந்து காணப்பட்டார்கள். கேட்டிலிருந்து உள்ளே கொஞ்சம் போக வேண்டும். ஓடினோம்.

வீட்டின் சிறு கூடத்தில் மூடிய பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. பார்த்ததும் தலைப்பக்கத்தைத் தெரிவிக்கும் வகையில் சந்தனக்குச்சி, விளக்கு!

எங்களைக் கண்டதும் அந்த அக்கா ஓவென்று குளறி அழுதார். அம்மா தலையில் அடித்துக்கொண்டு பெருங்குரலில் அழுதார்.

என்னால் அங்கு சிலநிமிடங்கள் கூட நிற்க முடியவில்லை .அழுதபடி நின்ற தீசன் அண்ணாவின் கடைசி மகனைத் தூக்கிக் கொண்டு வெளியில் வந்துவிட்டேன்.

அங்கு நடமாடிய இயக்க அண்ணாமார் முகங்கள் எல்லாம் பாறை போலிருந்தது. எனக்கோ அவர்களைக் கண்டதும் இனம் புரியாத ஒரு கோபம் தான் வந்திட்டு. அதை என்னவென்று வரையறுத்துச் சொல்வது? அவர்கள் ஒவ்வொருவரின் வீடுகளிலும் அம்மா, அப்பா, அக்கா, தங்கை, தம்பி என்று இருப்பார்கள் தானே? இவர்களை நினைத்து நினைத்து எப்படித் துடிதுடிப்பார்கள்? அந்தத் துயரத்தின், பிரிவின் வலி என்பது பட்டவருக்கு, ஒவ்வொரு கணமும் அனுபவிப்பவருக்கு மட்டுமே புரிந்ததொன்று. மற்றவர்களுக்கெல்லாம் அதொரு செய்தி! அதிகபட்சமாகக் கவலை அப்பிய முகத்தோடு ஆறுதலாகவோ, அங்கலாய்ப்பாகவோ, ஏன் ஆத்திரமாகவோ கோபமாகவோ சில பல வார்த்தைகளை விடுவதோடு அவர்கள் வேலை முடிந்துவிடும்.

'ஐயோ! இதெல்லாம் யாருக்கு?' வாய்விட்டுக் கத்த வேண்டும் போலிருந்தது.

அப்போது என்னருகில் வந்த ஒரு அண்ணா, என் அண்ணாவின் இயக்கத்துப் பெயர் சொல்லி, "நீங்க அவரிட தங்கச்சி தானே? ஒரு முறை கேம்புக்கு வந்திருக்கேக்கக் கண்டிருக்கிறன்." என்றார்.

அதைக் கேட்டுக்கொண்டே வந்த பெரியக்கா, "ஓமோம் தம்பி, அவன் எங்க நிக்கிறான் எண்டு தெரியுமா? சுகமா இருக்கிறானா?" படபடத்தார்.

அந்த அண்ணா கணம் யோசித்தது போலிருந்தாலும், "ஓமோம் அக்கா, நல்ல சுகமா இருக்கிறார். எங்களோட சண்டைக்கு வந்தவர், அதில சின்னக்காயம். மற்றப் படி சுகமாக இருக்கிறார்." என்றுவிட்டு, பட்டென்று வெளியில் சென்றுவிட்டார். பெரியக்கா கணமும் தாமதிக்காது ஓடிப் போய் அம்மாவின் காதில் சொல்லிவிட்டார். அம்மா முகத்தில் அப்படி ஒரு நிம்மதி!

என் நெஞ்சிலும் அதுவரை இருந்த அடைப்பு எடுபட்டது போலிருந்தது. திடீரென்று சூரியன் பளிச்சென்று எறித்தான். கசிந்தோடிய வியர்வையின் கசகசப்பை அப்போதுதான் உணர முடிந்தது.

"இப்படி என்ன அம்போ என்று தனிய விட்டுட்டுப் போய்ட்டியே ணா! எப்பிடி உனக்கு மனசு வந்திச்சு?"

உள்ளே அந்த அக்காவின் ஓலம் விடாதொலித்தது! இப்போது அவவுக்காகவே கண்ணீர் சுரந்தது.

என்ன ஆறுதல் சொல்வது? தெரியவே இல்லை.

எப்படித் தாங்குவார்? புரியவும் இல்லை.

'இந்தமுறை அண்ணாவை எப்பிடியும் துண்டு குடுக்க வைக்கவேணும்!' என்னுள் அந்த நினைவு பூதாகரமாக எழுந்தது. விடன் துடன் என்று அதைச் செய்துவிடவேண்டும் போன்றதொரு ஆவேசம்.

'இப்பவே அப்பாவையும் கூட்டிக்கொண்டு அண்ணாவைப் பார்க்கப் போனால் என்ன?' நான் நினைத்துக் கொண்டிருக்கையில் அப்பா வந்தார்.

வீட்டுக்குப் போயிருக்க, பக்கத்து வீட்டினர் விசயம் சொல்ல வந்திருந்தார் என்று எதிர்ப்பட்ட தீசன் அண்ணாவிடம் சொல்லி அவரின் கரத்தைப் பற்றியபடி ஆறுதல் சொல்லிவிட்டு, என் தலையில் மெல்ல வருடியபடி அங்கு கிடந்த இரும்புக் கதிரையில் சோர்வாக அமர்ந்தார் அப்பா.

"அப்பா அண்ணாக்குச் சின்னக்காயம் மட்டும் தானாம்; சுகமா நிக்கிறானாம்." பக்கத்தில் சென்று அமர்ந்தபடி சொன்னேன் நான்.

"ஆரு சொன்னது? எப்ப சொன்னவே? ஆரிட்ட சொன்னவே?" பதைபதைப்போடு கேட்டார் அப்பா.

மகிழ்வில் அவர் கண்கள் கலங்கிப் போனதையும் அவதானித்தேன். சரியான அமர்தலானவர். அவ்வளவையும் மனதுள் புதைத்து வைத்தபடி நடமாடியவர் இக்கணத்தில் சந்தோசத்தில் ஆடிப்போனார்.

ஒரு பத்து நிமிடமும் சென்றிராது, ஒரு இயக்க பஜரோ வந்து நின்றது. அதிலிருந்து ஒருவர் இறங்கி வாயிலில் நின்றவர்களிடம் எதையோ கேட்க, கொஞ்சம் முதல் அண்ணா சுகமாக நிக்கிறான் என்று சொன்ன அந்த அண்ணா எங்களைக் கை காட்டியபடி அவரை அழைத்துக் கொண்டு வந்தார்.
 
Top