கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உளி தாங்கும் கற்கள் -அத்தியாயம் 5

Rosie kajan

Moderator
Staff member
அத்தியாயம் 5
அவர்கள் எங்களை நோக்கி வருவதைத் தன் பக்கத்தில் அமர்ந்திருந்தவருடன் கதைத்துக்கொண்டிருந்த அப்பா கவனிக்கவில்லை; அங்கு அருகில் நின்ற தீசன் அண்ணா கவனித்துவிட்டார் போலும்.

அவர்கள் எங்களை நெருங்க முதல் அவர்களை நோக்கிச் சென்றவரிடம், அந்த இயக்க அண்ணாவும் எங்களைக் காட்டியே எதுவோ சொல்லிக் கதைத்தார். மறுநொடி, தீசன் அண்ணா எங்களைத் திரும்பிப் பார்த்த பார்வையில் நெஞ்சு நின்றுவிட்டது என்றளவில் எனக்குக் கண்கள் இருண்டன.

தீசன் அண்ணாவின் முகம் காட்டிய வேதனை புரியாதளவு சிறுமி அல்லவே! விசுக்கென்று இருக்கையை விட்டெழுந்துவிட்டேன்.

இருந்தபோதும், 'சே! சும்மா சும்மா அதையும் இதையும் கற்பன பண்ணுறதே நம்மட வேலையாப் போச்சு! அதான் ஒண்டுமில்ல எண்டு சொன்னவே தானே? ஒருவேள அண்ணா பெரியாஸ்பத்திரில இருக்கிறானோ! காயம் எண்டாரே அந்த அண்ணா!' என்றெண்ணியபடி, அண்ணா நலமாக இருக்கிறான் என்று கூறியவரைத் தேடிய என் விழிகளில் அவர் தட்டுப்பட்டார் தான். ஆனால், என் பார்வை பட்டதும் சரேலென்று அங்கு நின்ற இன்னொரு அண்ணாவின் பின்னால் மறைந்து கொண்டார்.

மீண்டும் கலங்கிப் போனேன். எதுவோ சரியில்லை. "அப்பா!" நான் அழைக்க, எங்களை நோக்கி அவர்களை அழைத்து வந்த தீசன் அண்ணாவும், "ஐயா இப்பிடிக் கொஞ்சம் வாங்கவன்!" அப்பாவின் கரம் பற்றி எழுப்பினார்.

இதை உள்ளே அமர்ந்திருந்த பெரியக்கா கவனித்துவிட்டாள் போலும், ஓடி வந்தாள்.

"என்ன தீசன் அண்ணா! ஏதாவது பிரச்சினையா?" என்று அவள் கேட்க, அவரோ பதில் சொல்லவில்லை. பொங்கியெழும் வேதனையை அடக்கிக்கொண்டு, ஊற்றெடுக்கும் கண்ணீரை உள்ளிழுக்க முயன்றபடி முகம் பாறையாக நின்றார் அவர்.

"சொல்லுங்க தம்பி என்ன விசயம்?" என்ற அப்பாவின் பார்வையிலும் கலக்கம் தான். யாரோ சொல்லி அம்மாவும் சின்னக்காவும் பதறிக்கொண்டே ஓடி வந்தார்கள்.

"இல்ல ஐயா..." என்று அப்பாவின் கரத்தை இறுக்கப் பற்றிக் கொண்டார், அந்தப் புதிதாக வந்த இயக்க அண்ணா.

"உங்கட மகன் ..." என்றாரம்பித்து அண்ணாவின் இயக்கப் பெயரைச் சொல்லி, "வீரமரணம்! உங்கட வீட்ட 'பொடி' கொண்டு போக நீங்க இங்க எண்டதும் கூட்டிக்கொண்டு போக வந்தனான்." சொல்லிவிட்டு விழிகளைத் தாழ்த்திக் கொண்டார்.

என் தலையில் மட்டுமின்றி எங்கள் குடும்பத்தினர் தலைகளில் பெருமலையே பொரிந்து விழுந்திருந்தது.

தொம்மென்று சத்தம். அம்மா அப்படியே மயங்கி விழுந்திருந்தார். அதை பார்த்தும் நாங்கள் அசையவில்லை; அதிர்வு செயல்பட வைக்கவில்லை. செத்தவீட்டில் இருந்தவர்கள்தான் அம்மாவை ஓடிவந்து தூக்கினார்கள். அப்பாவை இயக்க அண்ணாக்கள் கை பிடித்து அழைத்துச் செல்லத் தொடங்கவும் நான் ஓடத் தொடங்கினேன்; என்னை முந்திக்கொண்டு அக்காக்கள் ஓடினார்கள்.

சைக்கிளில் வந்ததை மறந்தே போயிருந்தோம். அம்மாவையும் தான். விசர் பிடித்தவர்கள் போலோடினோம்.

மூச்சு வாங்கி நெஞ்சடைக்க, கண்ணைச் சுழற்றிக் கொண்டுவர வீட்டு கேட்டைப் பற்றிக்கொண்டு நான் நின்றுவிட்டேன். உள்ளே இயக்க அண்ணாக்களும் அக்காக்களும் நிறைந்து நிற்க, வந்த வேகத்தில் வீட்டினுள் செல்லும் எண்ணமே தொலைந்து போயிருந்தது.

நட்டநடுநிசியில், கொடும் வனாந்தரத்தில், பயங்கரமான மயானத்தில், வார்த்தைகளால் கதைத்துக்கொள்ளும் கொடும்பிசாசுகள் சூழ நிற்கும் பிரேமை என்னை மூச்சு விடவும் விடாது அழுத்திப் பிடித்துக்கொண்டது.

அக்காக்கள் குளறிக்கொண்டு உள்ளே பாய்ந்து செல்ல, நான் அப்படியே அந்தப் படலையோரமாகத் தொப்பென்று உட்கார்ந்து விட்டேன்.

"முடிஞ்சிட்டு! எல்லாம் முடிஞ்சிட்டு! இருந்த ஒரே அண்ணாவ எல்லாரும் சேர்ந்து கொண்டிட்டினம்! சந்தோசம் எல்லா? நீங்க எல்லாரும் நிம்மதியா பாதுகாப்பா சந்தோசமா இருங்க!” பைத்தியம் போலக் கதறினேன்.

சத்தியமாக , கண்ணில் பட்டவர் எல்லாருமே பச்சைத் துரோகிகள் போலுணர்ந்தேன்.

என்னைத் தொட்டுத் தூக்கியவரிடமிருந்து திமிறினேன்.

“செவ்வந்தி அழாதடி! உனக்கு எண்டாலும் அம்மா, அப்பா, அக்காக்கள் இருக்கீனமல்லோ? எனக்கு… இனி ஆருமே இல்ல.” சொல்லிக்கொண்டே என்னைக் கட்டிப் பிடித்துக் கதறினார், தீசன் அண்ணாவின் ஒன்றுவிட்ட தங்கை.

வாயடைக்க அவர் பிடியில் தொய்ந்து நின்றேன் நான். அழுது ஆர்ப்பாட்டம் செய்யாமல், தீசன் அண்ணாவின் மனைவியின் பிடியில் உள்ளே போய்க் கொண்டிருந்தார் அம்மா. நடை தள்ளாடித் தொய்ந்திருந்தது. தலையில் கட்டும் போட்டிருந்தார்.

“வா...உள்ள போவம்.” இழுத்துக்கொண்டுதான் சென்றார் அந்த அக்கா.

'தன் வீட்டுக் கூடத்தில் ஒரே உடன்பிறந்த உறவான தமையனின் உடல் என்று வந்திருந்த மூடிய பெட்டியிருக்கவே இங்கு ஓடி வந்திருக்கிறார்'

இழந்தவனுக்கு மட்டும் தானே அதன் வலி தெரியும்.

அந்தக்கணம், என்னைச் சுற்றி நின்றவர்கள் ஒவ்வொருவருமே இழப்பை, மரணத்தை எதிர்நோக்கி நிற்பவர்களாவே பார்வையில் பட்டார்கள். இல்லையேல் இங்கு நிற்க நியாயமேயில்லை. போர்க் காற்றுப் படாத இடம் நோக்கிப் போயிருப்பார்களே! கையாலாகாத மனம் குழறியழுதது.

"படுபாவிப் பயல்! வீட்டு நிலை தெரிஞ்சிருக்க இதில எல்லாம் தலைகொடுத்திருப்பானா? கத்தி எடுத்தவனுக்குக் கத்தியாலதான் சாவு! இந்தா எல்லாம் முடிஞ்சிட்டுப் பார்த்தியலே! உருப்படுற மனுசர் இதில எல்லாம் தலைகுடுப்பீனமா? வீடு கிழிஞ்சு கிடக்கு, நாட்டக் காப்பாத்தினமாமே! புதினமான கதையல்லோ இது! உருப்படாததுகள்! "

எங்கள் அம்மம்மா, என்பது வயது கடந்தவர் அழுதபடி என்னை முந்திச் சென்றார். அங்கு நின்ற இயக்க உறுப்பினர்கள் தள்ளி வழிவிட 'ச்சே!' என்றபடி முன்னேறினார்.

அங்கு கூடி நின்ற அயலவர்கள் மனத்தில் இப்படியும் ஓடியிருக்கலாம். காரணம், நகை காசு என்று போராட்டத்துக்கு எங்கள் பங்களிப்பு இதோவென்று கொடுத்துத் தம் வீட்டு இளம் வயதினரை கொழும்பு, வெளிநாடு என்று அனுப்பியவர்களே அங்கு அதிகமாக நின்றிருந்தார்கள். அப்போ ஆள்ப்பலத்துக்கு, இல்லாதவன் தானே அதிகமாக இருக்கிறான்.

கோபமும் கசப்பும் எகிறியது. குழுமி நின்ற இயக்க அண்ணா அக்காக்களைக் கண்ணீரோடு பார்த்தேன்.

'நாங்கள் மட்டுமே சபிக்கப்பட்டவர்கள். இதுதான் எங்களுக்கு. மீட்சி கிடைக்கவே கிடைக்காதா எண்ட ஏக்கமும். நிச்சயம் கிடைத்துவிடும் எண்ட துளி நம்பிக்கையும் தான் இந்த உடுப்பைப் போட்டுக்கொண்டு அத்தனை இழப்புகளையும் கடந்து செல்ல விடுகின்றதோ.' மனம் குழற, நாளை பெட்டிக்குள் போகத் தயாராக நிற்பவர்களைக் கடந்து என் அண்ணாவின் முகத்தையேனும் ஒருதடவை பார்த்துவிடவேண்டும் என்ற பேராவலில் முன்னேறினேன் நான்.

எங்கள் வீட்டில் கிடந்த ஒரே இருக்கையான அந்த மர வாங்கிலில் தீசன் அண்ணாவீட்டுக் கூடத்திலிருந்தது போன்றதொரு பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அங்கு தலைப்பக்கத்தில் சந்தனக்குச்சி புகைந்தது, இங்கு எதுவும் இல்லை, அதுதான் வித்தியாசம்.

அம்மா சுவரோடு அணைந்து வளைந்து தொய்ந்து அமர்ந்திருந்தார். தலை சுவரில் முட்டி நிற்க, பார்வையோ நிலத்தை வெறித்தபடி இருந்தது.

அப்பா கரமிரண்டையும் கட்டிக்கொண்டு கூனியபடி பக்கத்தில் நின்று கொண்டிருந்தார், அவர் பார்வை மூடியிருந்த பெட்டியை வெறித்தது.

அக்காக்கள் பெட்டியின் மீது விழுந்து அப்படியே கரங்களால் வளைத்துக்கொண்டு கதறிக் கொண்டிருந்தார்கள். பெரியக்காவின் தலை பெட்டியில் டொம் டொம்மென்று மோத, அருகில் நின்ற இயக்க அக்கா தன் கையைக் கொடுத்துத் தடுக்கப் பார்த்தார். என்னவோ ஆறுதல் சொன்னார் போலும், முணுமுணுப்பாகக் கேட்டது

"என்ர அண்ணான்ட முகம் எங்க?" வீரிட்டுக் கத்தினேன் நான். என்னை அணைத்துப் பிடித்திருந்த தீசன் அண்ணாவின் தங்கையின் பிடியிலிருந்து உதறி விடுவித்துக்கொண்டேன்.

எங்களின் சிறுகூடம் இயக்க அண்ணாக்கள், அக்காக்கள் நிறைந்து இன்னுமின்னும் சிறு இடமாகியிருந்தது. மூச்சு முட்டியது. அவர்கள் எல்லார் முகங்களும் பாறையென இறுக்கிக் கிடந்தாலும் விழிகளில் ஒரு பரிதாபம் மின்னியது. யாருக்கு வேண்டும் அந்தப் பரிதாபம்? தலை கிறுகிறுக்க எதிரில் நின்றவர்களைத் தள்ளிவிட்டேன்.

"இங்க என்ன நாடகம் நடத்துறீங்களோ? மூடின பெட்டியைக் கொண்டுவந்து வச்சிட்டு எங்கட அண்ணா செத்திட்டான் எண்டா நம்பீருவமே? போங்கோ! இங்க ஒரு விடுப்பும் இல்ல வெளிய போ! எல்லாரும்...போ!" பெருங்குரலில் கத்தினேன். அவர்களை பிடித்துத் தள்ளியபடிதான்.

தலை கொதித்தது. சத்தியமாக அங்கு நின்ற எல்லாரையும் அப்படியே நசுக்கிக் கொன்றுவிடும் ஆவேசமும் எழுந்தது. அது முடியாததால் என் மீதே ஏற்பட்ட கழிவிரக்கமும் சேர்ந்து என்னை மூர்க்கமாக்கியது.

என் சிறு கரங்களின் அடியையும் நான் வீசிய சொல்லம்புகளையும் வாங்கிக் கொண்டு இயந்திரமாக நின்றார்கள் இயக்க அண்ணா அக்காமார்கள்.

"அதுதானே? கொஞ்சமுதல் கேட்க சுகமா நிக்கிறான் எண்டெல்லா சொன்னவை? இப்ப வந்து சண்டை தொடங்கினதும் வீரமரணம் எண்டா? எதை உண்மை எண்டு நம்புறது? கெதியாப் பெட்டியத் திறந்து காட்டுங்க." பெரியக்கா ஓங்கிக் கத்தினாள்.

"ஓம் திறவுங்க!" சின்னக்காவும் சேர்ந்து திறக்க முயன்றாள்.

அம்மா விசுக்கென்று எழுந்தார். "ஒருக்கா என்ர பிள்ளேன்ட முகத்தைக் காட்டுங்கோவன்; என்ர அப்பன கடைசியா ஒருக்காப் பார்க்க விடுங்கோவன்! ஐயோ! எண்ட பிள்ளையைக் காட்டுங்க!" தீனமாக இறைஞ்சல் குரல் எலும்பினார்.

"அவையள் என்ன காட்டுறது? எல்லாரும் வெளில போங்கோ!"

பெரியக்கா கதறியபடி சொல்லிக்கொண்டே பெட்டியைத் திறக்க வழிதேடினார். ஆணியறைந்திருந்தார்கள்.

"பதினோராம் திகதி சண்டை ஆரம்பிச்சோன்ன வீரமரணம்; இண்டையோட நாலாவது நாள்; திறக்க எல்லாம் ஏலாது." ஒரு அண்ணா முன்னால் வந்து கண்டிப்போடு சொன்னார்.

"அதையென்ன நீங்க சொல்லுறது?" குசினிக்குள் ஓடிச்சென்று எங்களிடமிருந்த பெரிய கத்தியை எடுத்துக்கொண்டு திரும்பிய நான் சட்டென்று நின்றேன். அப்படித் திறக்க முனைந்தால் பார்த்துக் கொண்டா நிற்பார்கள்? ஆனால், 'திறக்க வேணும்; அண்ணா அதுக்க இருக்கிறது நீ இல்ல; நீ இல்லவே இல்ல அண்ணா; இவனுகள் கல்லையும் மண்ணையும் கொண்டு வந்து போட்டுட்டுப் பொய் சொல்லீனம்.'

கண்ணீர் வழிய வழிய கத்தியைப் பின்னால் மறைத்துக்கொண்டு மெல்ல நகர்ந்து பெரியக்காவுக்கும் சின்னக்காவுக்கும் இடையில் நின்று கொண்டேன்.

"அக்கா கத்தியால நெம்பித் திறப்பமா? பெட்டி மெல்லிசாக் கிடக்கு , திறந்திரும். அவங்கள் சத்தியமாப் பொய் சொல்லுறாங்கள். அண்ணாவை ஆமி பிடிச்சிட்டோ!" முணுமுணுத்தேன்.

சட்டென்று என்னைப் பார்த்தார்கள். நைசாகக் கத்தி பெரியக்கா கைக்குப் போனது. அதுவரை எங்களில் இருந்த பதற்றம் போயிருந்தது. திறந்து பார்த்துவிடவேண்டும் என்ற உறுதி வந்திருந்தது. என்ன செய்து போடுவார்கள் பார்ப்போமே.

மறுபுறம் சுற்றி வந்த நான் அப்படியே பெட்டியின் மீது கைவிரித்துத் தலை சாய்த்தேன். மறுபுறம் சின்னக்கா. அந்த மறைப்பில் பெரியக்கா திறக்கட்டும் என்றுதான் நினைத்தேன். ஆனாலும் நெஞ்சு வேக வேகமாகத் துடித்தது. ஒரு வேளை உண்மையில் உள்ளே கல்லும் மண்ணும் இல்லாமல் அண்ணாதானோ!

"ஐயோ! ஐயோ! ஐயோ!" என் தலையைப் போட்டு அடித்தேன். என்னை இழுத்துப் பிடித்தார் ஒரு இயக்க அக்கா.

"என்ன செய்யிறீங்க?" ஒரு அண்ணா கண்டுவிட்டார். அக்காக்களையும் இழுத்துவிட்டார்கள்.

கத்தி வைத்து நெம்பியதில் அந்த மரப்பெட்டி விளிம்பில் வெடிப்பு வந்திருந்தது. திமிறிய பெரியக்கா அதிலிருந்த பொலித்தீனை இழுக்க முயன்றாள். கொஞ்சமாக வெளியே வந்தது. ஏதோ நீல நிறத்திலும் பொலித்தீன் தெரிந்தது. அதுவரை இல்லாத ஒரு மணம் கசிந்தது.

"ஐயோ! அப்போ என்ர பிள்ளையைக் கூட்டிக் கட்டிக் கொண்டு வந்திங்களோ!"

அலறிய அம்மா மீண்டும் மயங்க, அப்பாவும் அருகில் நின்றவர்களும் பிடித்துக் கொண்டார்கள்.

பெரியக்கா ஆவேசத்தோடு சென்று வீட்டு நுழைவாயிலில் இருந்த ‘உயிர்த்த யேசு’ படத்தைக் கழட்டி சுழட்டி அடித்துடைத்தார் .

சின்னக்கா படத்தறைக்குள் புகுந்து அத்தனை சுவாமிப் படங்களை சிதறடித்தார்.

நான் அங்கே ஒரு மூலையில் அப்படியே முடங்கி விட்டேன்; கால்கள் சக்தி வடிந்து துவண்டுவிட்டன; மனமும் தான்; மயக்கம் வரும் போலிருந்தது .

'என்ர அண்ணா இந்தப் பெட்டிக்க சதைப் பிண்டமாக இருப்பானோ? அல்லது தலையில்லாது முண்டம் தனியா? சாகேக்க எங்கள நினைச்சிருப்பானா! அப்ப, அந்தக் கனவில பறவையா வந்தது அண்ணா தானோ?' மனம் சுழன்றடித்தது. அந்தப் பறவையின் மினுங்கிய கண்கள் நினைவிலாடியது. இப்போதும் அண்ணா எங்களைப் பார்த்துக்கொண்டிருப்பது போலொரு பிரேமையுண்டானது.

"அண்ணா! அண்ணா! ஐயோ என்ர அண்ணாவை எல்லாரும் சேர்ந்து கொண்டிட்டாங்களே!"

அலறிய என்னை, தீசன் அண்ணாவின் தங்கை வந்து இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டார்.

முகம் இறுக வந்த தீசன் அண்ணா தலைமாட்டில் சந்தனக் குச்சி கொளுத்தி வைத்தார்.

விசயமறிந்து பெரியக்காவின் சிநேகிதிகள் அழுதபடி வந்து அவளை பிடித்துக்கொள்ள, சின்னக்காவின் சிநேகிதிகள் வந்து அவளைத் தாங்கிக் கொண்டார்கள் .

துவண்டு கிடக்கும் உடலுக்கு முண்டு கொடுக்க இப்போதைக்கு ஆளிருந்தாலும் பிய்ந்து நார்நாராகிப் போன மனங்களுக்கு?

"எங்களை எல்லாம் ஏமாத்திப் போட்டான்!" மயக்கம் தெளிந்தெழுந்த அம்மா அலறினார்.

தான் உயிர்விடும் தருணம் பின்னால் வருபவர்களால் அந்தச் சண்டை வெற்றி பெறும் என்ற நப்பாசையில் உயிர் துறந்திருந்தானா என் அண்ணா? களைத்திருந்த என் மண்டைக்குள் வண்டின் குடைச்சல்.

அடுத்தடுத்துக்கடந்த மணித்துளிகளில் யார் யாரோவெல்லாம் வந்தார்கள். அப்பாவின் கையைப் பிடித்துக் குலுக்கி அனுதாபங்கள் சொன்னார்கள். அமைதியாய் அம்மாவின் அருகிலமர்ந்து அவரின் கதறலைக் கேட்டார்கள். எங்களுக்குப் பார்வையால் தம் அனுதாபத்தைத் தெரிவித்தார்கள்.

இதெல்லாம் உண்மையில் எனக்குத் தேவையாக இருக்கவில்லை. எங்களின் சொந்த உயிரே இல்லையாம் இவர்களின் அனுதாபங்கள் யாருக்கு வேணுமாம்? அதே கோபத்தோடு குமுறிக் கொண்டிருந்தேன் .

மரணிக்கும் தருவாயில் அண்ணாவின் மனநிலை என்னவாக இருந்திருக்கலாம் என்றதிலேயே என் எண்ணங்கள் சுழன்றடித்தது.

'எதிர்பார்க்காமல் செத்திருந்தா எங்கட நினைவெல்லாம் இருந்திருக்க நியாயமே இல்ல; தாங்க செய்யிற வேல தானே மனசில நிண்டிருக்கும்.' என்றெண்ணியெண்ணிக் கண்ணீர் உகுத்தினேன்.

கடுமையாகக் காயம் பட்டு உயிர் பிரியாது துடித்துக் கொண்டு கிடந்திருந்தால் நிச்சயம் எங்களைத்தான் நினைத்திருப்பான். எவ்வளவு வலியும் வேதனையும் அவனை மென்று திண்டிருக்கும் என்றெல்லாம் சுழன்ற என் சிந்தை, என்னைப் பல வயதுகள் முதிர்ந்தவள் போலுணர்த்தியது.

'உன்னத்தான் திரும்ப திரும்பக் கேட்டவன், வடிவாப் படிக்கச் சொன்வன்.'

சிலதினங்களுக்கு முன்னர் கடைசியாகச் சந்தித்துவிட்டு வந்த அக்காவும் அப்பாவும் சொன்னதே காதுகளில் ரீங்காரமிட்ட வண்ணமிருந்தது.

மதியம் கடந்து கொஞ்ச நேரத்தில் உடல்களை மக்கள் அஞ்சலிக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்கள். சாவி கொடுத்த பொம்மைகளாக நடந்தோம். அது பார்த்தால் எங்கள் வீட்டின் முன்னால் நின்ற 'எல்ப்' வாகனத்தில் ஏற்கனவே மூன்று பெட்டிகளிருந்தன. அண்ணாவின் பெட்டி போலவே.

சண்டைக்குப் போகின்றோம், திரும்பி வராதவனுக்கு இது என்று முன்னரே தெரிந்தும் இருக்குமே.

"அண்ணா" அலறினேன், அந்த அலறலுக்கு பயனே இல்லை என்று தெரிந்தே!

இந்த அத்தனை அழுகையும் மரண வேதனைத் துடிப்பும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட பெட்டிகளை ஒரு சேரப் பார்த்ததும் மொத்தமாக அடங்கி விட்டிருந்தது.

'செத்தவீடு' என்பதே எனக்குப் புதிது. நானறிய நான் காணும் முதல் செத்த வீடு, இருபதே வயதான என் அண்ணாவினுடையது. அது பார்த்தால் வரிசையாய் இத்தனை இளம் உயிர்கள்! மூடிய பெட்டிகளினுள்ளே இருப்பவரை வெளியேயுள்ள புகைப்படங்கள் அடையாளப்படுத்தின. அப்படியென்ன பாவப்பட்ட பிறப்பெடுத்தோம்?

அஞ்சலிக்கு வந்த ஒவ்வொருவரும் கண்ணீர் மல்க நின்றதை கருத்தின்றிப் பார்த்திருந்தேன்.

எங்களுக்கு யாழ்ப்பாணத்தில் அதுவரை சொந்த நிலம் இருக்கவில்லை. ஆனால், பாருங்கள் என் அண்ணா ஆறடி நிலத்தைக் கோப்பாயில் தனக்கென்று பிடித்துக் கொண்டான்; அதுவும் இருபதே வயதில்! எங்கள் அண்ணாவைப் போலவே, அங்கிருந்த பலரும் ஆறடி நிலத்தின் சொந்தக்காரர்கள் மட்டுமே என்பது அவர்களுக்காக வந்து நின்ற உற்றவர்களின் எளிமையான தோற்றத்திலிருந்தே தெரிந்தது.

அந்தப் பெட்டியில் பிடி மணல் போட்ட கணம் அதனுள் பாய்ந்து புதைந்துவிடமாட்டேனா என்றிருக்க பெரியக்கா பாயவே போய்விட்டாள்.

அலறல்களுக்கு மத்தியில் அடக்கமானது அந்தப் பெட்டி! நான் உயிரோடு இருக்கும் காலம் வரையில் இந்த இடம் என் கோவில் என்று நினைத்துக் கொண்டேன், அந்தக் கணத்தில்.

என்றென்றும் அங்கு வீசும் காற்று, சுதந்திரம் வேண்டியவர்களின் வாசத்துடன் தூய்மையாக இருக்கும் என்று பெரிதும் நம்பியது என்னுள்ளம்.

ஆயிரக்கணக்கில் பெயர்ப்பலகை நட்டு அமைதியோடு இருந்த 'கோப்பாய்த் துயிலும் இல்லம்' அடுத்து வந்த நாட்கள் பலதுகளில் எங்கள் பாதங்கள் நாடிய இடமாகி இருந்தது.

 
Top