அத்தியாயம் 6
"உங்களுக்கு என்ன விசரே பிடிச்சிட்டு? அவனே இல்லயாம், அவன்ட பெயரால வார இந்த அரிசியும் பருப்பும் என்னத்துக்காம்? ஐயோ! ஐயோ! என்ட பிள்ளேண்ட உயிருக்கு விலை இந்த அரிசியும் பருப்புமா?"
அப்பா கொண்டு வந்து வைத்த சாமான்களோடிருந்த பையைத் தூக்கி வீசினார் அம்மா .
"உங்களால இந்தக் குடும்பத்தக் கொண்டு நடத்த முடியாதோ பேசாமப் பிச்சை எடுத்தாலும் பரவாயில்ல, இப்பிடி என்ர பிள்ளேண்ட பேரால வார அரிசியும் பருப்பும் இந்த வீட்டுக்க வரக்கூடாது சொல்லீட்டன்!" உச்சக்குரலில் கத்தினார்.
"எனக்கில்ல, உனக்குத்தான் விசர் பிடிச்சிருக்கு?" அப்பாவின் குரல் அதற்கும் மேலாக உயர்ந்தொலித்தது.
தன்னை மறந்த கோபத்தில் மட்டுமே அவர் அம்மாவை இப்படி ஒருமையில் விளிப்பார், எங்களையும் தான்.
படித்துக்கொண்டிருந்த பெரியக்கா பட்டென்று எழுந்தாள்.
"இப்ப ஆரு நம்மட பிள்ளேண்ட உயிருக்கு இது விலையெண்டு சொன்னது?" கேட்டபடி அம்மாவை நெருங்கினார் அப்பா.
"பின்ன? இவ்வளவு நாளும் இப்பிடி ஏதாவது இந்த வீட்டுக்க வந்ததா? இப்ப என்ன புதுசா? அப்ப, இது எல்லாம் தான் என்ர மகனிண்ட உயிருக்கு விலையோ? ஆர் சொல்ல வேணும் சொல்லுங்கோ? 'இனி நீங்க மாவீரர் குடும்பம், நல்ல சலுகைகள் கிடைக்கும்; கொழும்புக்குப் போறதுக்குப் பாஸ் கிடைக்கும்' அது இது எண்டு அண்டைக்கு அந்த மூணாம் வீட்டுப் புவனா சொல்லேல்லையா? இந்த வீட்டுக்குப் பாஸ் தாறன் எண்டு வந்தாலும் என்ன கருமத்துக்காம்? கொழும்புக்குக்குப் போய்ப் பிச்சை எடுக்கவோ! அந்தப் புவனா வீட்டில மூண்டு ஆம்பிளப் பிள்ளைகள், மூண்டும் வெளிநாடு. இங்க என்ர பிள்ள இருவது வயசில ஆளே இல்ல; அதுக்கு அரிசி பருப்பும் இந்த வீட்டு வாடகைக்காசு 260 உம் தான் விலை!"
கழுத்துநரம்புகள் விடைக்க, ஓங்கிக் கத்திய அம்மா ஓவென்று கதறி அழுதார்.
"ஒத்த சத்துக்குப் பிரயோசனமில்லாத சனத்திண்ட அலட்டலை எல்லாம் காதில போட்டுக்கொண்டு வீட்டு நிம்மதியக் கெடுக்காத சொல்லீட்டன். அரிசி சாமானை இப்பிடியா வீசுவ?" அப்பா கோபத்தில் கையோங்கிக் கொண்டு சென்றார்.
அண்ணாவின் இழப்பின் பின்னர் வீட்டில் அடிக்கடி இப்படித்தான் நடக்கின்றது. படித்துக்கொண்டிருந்த நானும் எழுந்து விட்டேன். கிணற்றடியில் உடுப்புத் தோய்த்துக்கொண்டிருந்த சின்னக்கா அப்பிடியே சோப் நுரையோடு ஓடி வந்தாள்.
பெரியக்கா ஓடிப்போய் அப்பாவைப் தடுத்துப் பிடித்தாள்.
"ஐயோ அப்பா, நீங்க முதல் பேசாம இங்கால வாங்க." அப்பாவை வெளியில் இழுத்துச் சென்றாள்.
சற்று முன்னர் அப்பா வாங்கி வந்த மாவீரர் நிவாரண அரிசி மணிகள் கூடத்தில் சிதறிக் கிடந்தன, எங்களின் மன உணர்வுகள் போலவே!
"இப்பிடியே விடிஞ்சா பொழுதுபட்டா உங்கட அம்மா ஒப்பாரியோட இருந்தா இந்த வீட்டில மனுசர் நிம்மதியா இருக்கேலாது எண்டு சொல்லு! வீட்டுக்கு வரவே பயமா இருக்கு, நரகமாகிட்டு! இவா இப்பிடி கூத்தாடினா மட்டும் என்ன நடந்திருமாம்? அவன் வந்திருவானா? நடந்தது எதுவும் மாறாது. அதோட, இங்க எதுவும் அவாவுக்கு மட்டும் இல்ல எண்டும் சொல்லு." சீறியபடி, சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டார் அப்பா.
அம்மாவின் கையில் இருந்த சில்வர் செம்பு கூடத்துக்கு வந்தது, நங்கென்று. அதனுள் இருந்த தண்ணியும் சிதறிக்கிடந்த அரிசியோடு சேர்ந்துகொண்டு எங்களைப் பரிதாபமாய்ப் பார்த்து நின்றன. அப்பாதான் உள்ளே நுழைகையில் "கமலம் குடிக்கத் தண்ணி கொஞ்சம் தாங்க!" என்றபடி வந்தார்.
"இஞ்ச என்ட பெத்த வயிறு கொதிக்குது! முழுசாப் பிள்ளையப் பறிகொடுத்திட்டு வயிற்றுப்பாட்டுக்கு இறைஞ்சிக் கொண்டு வாறார், வெட்கம் கெட்ட மனுசன். நீங்களும் ஏன்டி இருக்கிறீங்க? போங்க! போங்கடி...போய் நாட்டக் காப்பாத்துங்க!"
விசுக்கென்று நகர்ந்த அம்மா சின்ன அறைக்குள் சென்று நிலத்தில் சுருண்டுவிட்டார். தீனமான அழுகை ஒலிமட்டும் கசிந்தபடியிருந்தது.
இந்த இரண்டு மாதத்தில் அம்மாவின் தோற்றம், நடவடிக்கை எல்லாமே நிறையவுமே மாறியிருந்தது. 'அம்மாவுக்குப் விசர் பிடிச்சிருமோ!' என் மனதுள் திருப்ப திரும்ப இதே சிந்தனைதான் ஓடியது.
நாங்கள் இருக்கும் இந்த வீட்டின் வாடகை 260 ரூபாய். அதை இனி வீட்டின் உரிமையாளருக்குச் செலுத்தத் தேவையில்லை என்று ஒரு இயக்க அண்ணா வந்து சொன்னார். போராளி , மாவீரர் குடும்பங்களின் வசதி நிலையைப் பார்த்து இப்பிடியான சிறு சிறு உதவிகளை அமுல்படுத்தியிருந்தார்கள். அதோடு, மாதம் மாதம் நிவாரணமாக அரிசி, பருப்பு, கோதுமை மா இப்படியான பொருட்கள் கொஞ்சமும் வழங்கினார்கள். அதைக் கேட்ட தருணத்திலிருந்து தொடங்கிய பிரச்சினை தான் இன்னும் ஓயவில்லை.
இப்பிடித்தான் அண்ணா இயக்கம் என்று சென்ற புதிதிலும் வீடு தடுமாறித் தத்தளித்து நின்றது. பிறகு, கொஞ்சநாள் செல்ல செல்ல கொஞ்சமேனும் வழமைக்குத் திரும்பவில்லையா? அப்படியே கொஞ்சக் காலம் சென்றால் சரியாகலாம் என்றெல்லாம் நினைக்கவும் முடியவில்லை.
விருப்பம் உண்டோ இல்லையோ பகல் முழுவதும் நாங்கள் மூவரும் படிப்பு என்று வெளியில் சென்றுவிட்டாள் தனித்திருக்கும் அம்மா வீட்டு வேலைகளைச் செய்வதற்காகக் கூட நேரம் செலவளிக்காது அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார். பெரும்பாலும் வீட்டுவேலைகளை எல்லாம் பெரியக்காத்தான் பார்த்துக் கொள்கின்றாள்.
“இப்பிடியும் நடக்கலாம் எண்டெல்லாம் நினைச்சிராத ஒண்டு நடந்திட்டு. அவ்வளவு சுகமா, அவன் நம்மளோட இல்ல எண்டு நினைச்சிட்டுக் கடந்து போக முடியாதுதான். துண்டு குடுத்திட்டு வாடா எண்டு கேட்க கேட்க எவ்வளவு உறுதியா இருந்தான். அப்ப எல்லாம் என்ன நினைச்சம்? சரி, அங்க இருந்தாலும் சுகமா இருக்கட்டும் எண்டுதானே?" நிதானமாகச் சொன்ன பெரியக்கா, " இப்ப, இவ்வளவுக்கும் பிறகும் அந்தப் பெட்டிக்க இருந்தது அவன் தான் எண்டு யாரு சொன்னாலும் என்ர மனம் முழுசா அதை நம்பேல்ல.”
கண்ணீரோடு நிற்கும் எங்களுக்குச் சொல்வதுபோல் சொன்னாலும் அம்மாவுக்கும் கேட்கட்டும் என்று உரத்தே சொன்னாள்.
மறுநொடி, விசுக்கென்று எழுந்து வந்து நின்றார் அம்மா.
"உனக்கு விசரா பிள்ளை? சிதறிப்போன என்ர குஞ்சன அப்பிடியே அள்ளிக் கட்டிக்கொண்டு வந்து தரேல்லையா? இப்ப என்ன நீ எங்கயோ உயிரோட இருக்கிறான் எண்ட மாதிரிச் சொல்லுற? அவன் இந்தப் பாழாப் போன உலகத்த விட்டுப் போய்ட்டான்! ஐயோ! என்ர பிள்ள காயம்பட்டுகிடக்கேக்க என்ன பாடு பட்டிருப்பான்? பார்த்துப் பார்த்து வளர்த்த பிள்ள இப்பிடி அழுகி அநியாயமாப் போய்ட்டானே! "
தலையில் படீர் படீர் என்று அடித்தழுதார் அம்மா.
வெட்கமே இல்லாமல் சாரி சாரியாகக் கண்ணீர் விட்டுத் தொலைத்தன விழிகள். சத்தியமாக இந்த உலகமே எனக்குப் பிடிக்கவில்லை. 'பேசாமல் ஒரு பெரிய குண்டாப் போட்டுக் கொன்னுட்டா எல்லாம் முடிஞ்சிருமே' என்றுதான் நினைத்துக்கொண்டது, என்னுள்ளம்.
"ஐயோ அம்மோய்! சொன்னதையே சொல்லி சொல்லி இப்பிடிக் குழறிக் கதறி என்ன பிரயோசனம் சொல்லுங்க? சரி, அவன் உயிரோட இல்ல எண்டே வச்சுக் கொண்டாலும் அன்றைக்குப் பார்த்தீங்க தானே, நானுற்றிச் சொச்சப் பேர் மா! கொஞ்சம் அதை யோசியுங்க. நாம இதை எப்பிடியும் சகிக்கத்தான் வேணும். மறக்கவே முடியாத துக்கம் தான், முதல் ஏன் மறப்பான்? அத நினைவில வச்சிக்கொண்டே வைராக்கியத்தோடு நிமிர்ந்து நிக்க வேணும். கண்ணீர் விட்டு ஒரு பிரயோசனம் இல்லம்மா!" என்று தீர்க்கமாகச் சொன்ன அக்காகாவும் வாய்விட்டே அழத் தொடங்கி விட்டார்.
"உங்களை ஆரு நிமிர்ந்து நிக்க வேணாம் என்றது? அவனச் சுமந்து பெத்தவள் நான்; என்னை ஆரும் ஒண்ணும் சொல்ல வர வேணாம்; உங்கப்பரும் நீங்களும் தாராளமாச் சந்தோசமா இருங்க; சமையுங்கோ, சாப்பிடுங்கோ, உடுங்கோ படுங்கோ என்னவும் செய்யுங்கடி என்னவும் செய்யுங்க!"
அழுகையோடு சொல்லிவிட்டு, "என்ர பிள்ள தான் ஒண்டையுமே அனுபவிக்காமப் போய்ட்டான்; இருந்த காலத்திலும் ஆணான சாப்பாடும் இல்ல, ஒண்டுமில்ல. ஐயோ! ஐயோ!” விடாது குழறி அழுதார்.
சின்னக்கா அப்பிடியே வெளிவாயிலோரம் அமர்ந்துவிட்டாள். அவள் கொஞ்ச நாட்களாக அவ்வளவாகக் கதைப்பதும் இல்லை. இல்லையோ, என்னை வெருட்டி உருட்டி ஒரு வழி பண்ணுவாளே! என்னவோ ஒதுங்கி ஒதுங்கிப் போவதுமாதிரி எனக்குத் தெரிந்தது. அண்ணாவின் இழப்பைக் கொஞ்சமேனும் ஏற்றுக்கொண்டுவிடத்தானே போராடுகின்றோம். அதில் தான் அவளும் இருக்கின்றாள் போலும்.
கண்ணீரோடு நகர்ந்த நான் அம்மாவையும் பெரியக்காவையும் விலத்திச் சென்று சின்னக்காவுக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டேன். அவள் திரும்பியும் பார்க்கவில்லை. கையில் இருந்த சோப் நுரை அப்பிடியே காய்ந்து கொண்டிருக்க, அவள் கண்கள் முன்னால் உயரமாக வளர்ந்து நின்ற பப்பாளி மரத்தில் நிலைத்திருந்தது. அதில் பழுத்திருந்த பெரிய பப்பாப் பழமொன்றை இரண்டு அணில்கள் போட்டி போட்டுக்கொண்டு உண்டு கொண்டிருந்தன. சாதாரண நாட்களாக இருக்க எப்போ எப்போ என்று பார்த்திருந்து இலேசாகப் பழுக்க ஆரம்பிக்கவே பிடுங்கி விடுவோம். இப்போ தான் வீடே தலைகீழே!
எப்பவும் கூட்டிப் பெருக்கி இருக்கும் வீட்டின் பின்புறம் குப்பைகள் நிறைந்து கிடக்க, பார்க்கவே அரியண்டமாக இருந்தது.
"என்ன தான் வந்தாலும் நிமிர்ந்து நின்று எதிர்கொள்ளவேணும்." அடிக்கடி பெரியக்கா இதைச் சொல்லுவாள். அப்பிடியொரு கட்டத்தில் நிற்பதாலோ என்னவோ என் காதுகளில் இது ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.
"இப்பிடியே இருந்தால் சரிவராது." என்றபடி வந்த பெரியக்கா, "செவ்வந்தி நீ படிச்சிட்டியா? இல்லாட்டிப் படிச்சிட்டுப் பின்னுக்கும் முன்னுக்கும் கூட்டி விடுறியா? நான் சமைக்கிறன்." என்றுவிட்டு நகர்ந்து, கூடத்தில் கொட்டிக்கிடந்த அரிசியைக் கைகளால் கூட்டி அள்ள முனைந்தாள்.
"சரிக்கா!" என்று எழுந்த என்பார்வை கிணற்றடியில் ஒரு ஓரமாகப் பெரிய வாளியில் நிறைந்து கிடந்த உடுப்புகளில் பட்டு மெல்லச் சின்னக்கா புறம் நகர்ந்தது.
"படிக்க வேணும், எனக்கு ஒண்டுக்கும் நேரமில்லை." என்று சொல்லி, தன் உடுப்புகளையும் அம்மாவைக் கொண்டு துவைக்க வைப்பவள் இவள். இன்று, அம்மாவின் அவ்வளவு உடுப்புகளையும் எடுத்துவந்து தோய்க்கப் போட்டிருக்கிறாள். அம்மாதான் அதையெல்லாம் கவனிப்பதே இல்லையே!
" சின்னக்கா!" மெல்லக் கூப்பிட்டேன்
"திரும்பிப் பார்த்தாள். இவ்வளவையும் ஒண்டாத் தோய்க்கப் போறியா? மழை வரும் போலவும் கிடக்கே, நான் கொஞ்சத்தைத் தோய்க்கவா? உனக்குப் படிக்க ஒண்டும் இல்லையாக்கா?"
"பச்! நான் தானே தோய்க்கப் போட்டன்? நானே செய்யிறன், நீ உன்ர வேலையப் பார்!"
வெடுக்கென்று சொல்லிவிட்டு எழுந்து செல்பவளை நான் பார்த்து நிற்பது போலவே சமையலறை யன்னலில் நின்று பெரியக்காவும் பார்த்து நின்றாள்.
வீட்டில் ஒவ்வொருவருமே கண்ணாடிப் பாத்திரங்கள் ஆகிவிட்டோம் என்பது தெள்ள தெளிவாகத் தெரிந்தது. 'சிதறிச் சின்னாபின்னமாகி விடுமோ!' என்னுள்ளத்தில் திடீரென்று இப்படித்தான் தோன்றிற்று! அந்நினைவே விழிகளைக் கலங்கடித்து மறைக்க, துடைத்துக்கொண்டே மெல்ல நகர்ந்த நான் அங்கு ஒரு ஓரமாக இருந்த ஈர்க்குத் தடியை எடுத்தேன்.
ஈர்க்குகள் எல்லாம் தேய்ந்து முறிந்து கால்வாசியாகி இருந்தது அது. 'புதிதாக ஒண்டு வாங்கக் கிடைத்தால்...' மனதில் எண்ணமோட, 'வீடு கிடக்கிற கிடைக்கு அது ஒண்டுதான் வேணும்!' மறுகணம் என்னையே நான் கடிந்து கொண்டே, பின்புறத்தைக் கூட்டத் தொடங்கினேன்.
"கூட்டி எல்லாத்தையும் அந்த மூலையில ஒதுக்குச் செவ்வந்தி; நெருப்பு வச்சி விடுவம்." என்றாள், சமையலறைக்குள் இருந்தபடியே பெரியக்கா. எங்கள் வீட்டின் மீது பதிந்துவிட்ட மாறாத் துயரையும் கொளுத்திவிட முடிந்தால் என்றது போலிருந்தது அவள் சொன்னது.
பின்புறத்தைக் கூட்டி நெருப்பு வைத்துவிட்டு முன்புறம் சென்றேன்.
சிறு முற்றம் தான்; அதில் மூலையில் ஒரு முருங்கை மரம், அது அப்பிடியே வளர்ந்து வீட்டுக் கூரைக்கும் மேலாக சடைத்துக் கிடந்தது; வஞ்சனையே இல்லாது காய்கள், இலை, பூ என்று சிலிர்த்து நிற்கும்.
மறு மூலையில் ஒரு இளம் தென்னை மரம். நடுவில் ஒரே ஒரு தேக்கு மரம். கொட்டாங்காய் என்று அதன் பழம் அதனுள் உள்ள விதை என்று அடிபட்டு உண்போம்.
பெரியக்கா நிறைய குரோட்டன்கள் வைத்திருந்தாள். செவ்வந்தி, நந்தியாவட்டை, வாடாமல்லி எனப் பூக்கன்றுகளும் நின்றன. இப்போதெல்லாம் அக்கறையாகப் பார்த்துத் தண்ணிவிடவில்லை என்றாலும் பெய்யும் மழையிலேயே செழித்து நின்றன. அடுத்த வீட்டு மதிலோடு 'ட' படையில் பெரிய பங்கர். இதில் கூட்ட என்ன இருக்கு?
அங்கங்கே இடையில் கிடந்த குப்பைகளைக் கூட்டி அள்ளிச் சென்று பின்புறம் எரிவதில் கொட்டிவிட்டு நேரம் பார்த்தேன். எங்களின் உணர்வுகள் போலவே கடிகாரத்தின் முட்களுக்கும் சக்தியில்லைபோல! இப்போதெல்லாம் அவை அனுங்கிக் கொண்டே நகர்வது போலிருந்தது. இனி என்ன செய்வம்?
எனக்கும் படிக்க எல்லாம் மனமில்லை. அவ்வளவு விரும்பி, எல்லாருக்கும் ஒழித்து மறைத்து வாசிக்கும் கதைப்புத்தகங்களே கசந்தன.
என்னவோ ஒரு நொடியும் சும்மா இருக்காது வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும் போலிருக்கவே வீட்டு வேலைகளைச் சரி செய்வோமே என்ற முடிவுக்கு வந்தேன்.
எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுச் செய்யும் அம்மாதான் முடங்கிவிட்டாரே!
உருமாறி கிடந்த வீட்டை நேராக்க வேண்டுமென்ற அவா, பெரியக்காவிடமிருந்து என்னிடமும் கடந்திருந்தது என்றுதான் நினைக்கின்றேன். வீட்டைச் சுற்றிவந்தேன். வீட்டில் வரவேற்பறையும் முன் வராண்டாவும் சிவப்புநிறச் சீமெந்துத் தரை; பிழிந்த தேங்காய்ப் பூவால் அடிக்கடி அதை பொலிஷ் பண்ணுவோம். இப்போ இரண்டு மாதங்களாகத்தான் ஒன்றுமே இல்லையே!
சமைலறையை எட்டிப் பார்த்தேன். "அக்கா நான் ஏதாவது செய்து தரட்டுமா? வெங்காயம் உரிச்சுத் தரட்டா?"
"அதெல்லாம் நான் செய்திட்டன், நீ உன்ர வேலைகளைப் பார்!" என்றுவிட்டு என்னைத் திரும்பிப் பார்த்தாள், பெரியக்கா.
"செவ்வந்தி, உனக்கு ஏலும் எண்டா வீட்ட வடிவா ஒழுங்குபடுத்திக் கூட்டி விடடி; நீ தொடங்கு நானும் வாறன்; சின்ன அறையில பார் உடுப்பெல்லாம் அப்பிடியே கொடியில தொங்குது; ஊத்த உடுப்புகள அந்தா அவள் தோய்க்க எடுத்திட்டாள்; மிச்சதுகள மடிச்சு வச்சு ..." சொல்லி முடிக்க முதலே,
"நானே அதைத்தான் யோசிச்சனான் அக்கா; பிழிஞ்ச தேங்காய் பூவையும் வீசிராதீங்க, நிலத்தையும் பொலிஷ் பண்ணி விடுவம்." என்றபடி திரும்ப, " ஒருத்தருக்கும் மனம் நல்லா இல்ல; இதில வீடும் கிடக்கிற கிடைக்குக் கொஞ்சநாளில விசருகளாத்தான் திரிய வேணும்." முணுமுணுத்தபடி அவள் சமையலில் கவனமாக, நான் வீட்டை ஒழுங்குபடுத்தத் தொடங்கிவிட்டேன்.
சின்ன அறையில் கண்டபடி கொடியில் தொங்கிக் கொண்டிருந்த உடுப்புகளை மடிக்கையில் சுவர் ஓரமாக நிலத்தில் படுத்திருந்த அம்மாவில் பார்வை பட்டுப் பட்டு வந்தது. தலைக்குக் கையை அணைவாகக் கொடுத்துச் சுவர்ப்பக்கமாகத் திரும்பிக் கிடந்தார்.
நான் நிற்பது தெரிந்தும் திரும்பவில்லை.
“அம்மா எழும்பி முழுகுங்கோவன்; வடிச்ச கஞ்சி இருக்கு சீயாக்காவும் அவிச்சுக் கிடக்கு.” மெல்ல அவரின் தோளில் தட்டினேன்.
விசுக்கென்று எழுந்தமர்ந்தார்.
"கொப்பரும் பிள்ளைகளுமாகச் சேர்ந்து கொண்டு ஏன்டி ஆட்டம் போடுறீங்க? போனவன் போய்ட்டான் இனி என்ன எண்டு ஆட்டம் போடுறீங்களோ? வீடு துப்பரவாக்கீனமாம், விசர் பிடிச்சிருமாம் எண்டுகொண்டு கூட்டுறதும் மினுக்குறதும் சமையல் சாப்பாடு எண்டு வலு கலாதியாத்தான் இருக்கிறீங்க போல? உங்களுக்கு என்னடி உங்களுக்கு என்ன? செத்துப் போனது என்ர மகன் தான்? ஐயோ! ஐயோ! என்ர ராசா... நீ யாருக்காகடா செத்தனி? பார், சுத்தி எல்லாருமே ரெண்டு நாள் மூக்கைச் சிந்திப்போட்டு இப்பச் சந்தோசமா இருக்க, நான் மட்டும் பிள்ளயக் குடுத்திட்டு இப்பிடிக் கிடந்து உத்தரிக்க வேணுமா? ஐயோ! ஐயோ !"
அம்மாவின் ஓலத்தில் பக்கத்து வீட்டு ஆட்களே ஓடிவந்தார்கள்.