கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

எதிர்மறை வினையெச்சம் அத்தியாயம் 15

Bhairavi

Member
எதிர்மறை வினையெச்சம்

அத்தியாயம் 15


தன்னுடைய ஹேண்ட் பேக்கை அந்த சிறிய பயணத்திற்கு தயார் செய்து கொண்டிருந்தாள் மென்னிலா. கடைசியாக எப்போது காரில் நீண்ட பயணம் போனோம் என்று யோசித்தாள். எப்பொழுதும் பணி நிமித்தமான பயணங்கள் தான். வேலைகளை அவசரமாக முடித்துவிட்டு ஏர்போர்ட்டுக்கு டாக்ஸியில் ஓடுவது, இல்லை என்றால் மகாபலிபுரம், முட்டுக்காடு என்று ஏதாவது ஒரு ரிசார்ட்டுக்கு பிசினஸ் மீட்டிங் போவது. போகும் வழியில் பிசினஸ் கால், துணைக்கு பி.ஏ. இப்படித்தான் அவளது பயணங்கள் நகரும். பெரும்பாலான நாட்களில் அருவி இருப்பாள். வேறு ஏதாவது ஒரு உதவியாளர்.


விக்னேஷுடன் செல்வது கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருந்தது. விக்னேஷின் அணுகு முறை சட்டென்று சில மாற்றங்கள் தோன்றியிருப்பதை அவளும் கவனித்து விட்டாள். அவன் பார்வை மாறியிருக்கிறது. முன்பெல்லாம் என்னை பொறி வைத்து பிடிக்கப் போகும் எலி போல பார்த்துக் கொண்டிருப்பான். இல்லை சோதனை எலி. என்னைப் பிடித்து அந்த மாறனிடம் கொடுப்பது என்ற சிந்தனை ஓடும். இப்போது கொஞ்சம் நின்று நிதானமாக பார்க்கிறான். ஒரு நிமிடம் கூடுதலாக என் முகத்தை கவனிக்கிறான். ஏன்?

இதையெல்லாம் யாரிடம் விவாதிப்பது என்பது அவளுக்குத் தெரியவில்லை. அருவி தான் நிலாவிடம் கருத்துக் கேட்டு பழக்கம். மாற்றி நடந்ததில்லை. பிரசன்னா விஷயத்தில் மட்டும் கேட்காமல் முடிவு செய்துவிட்டாள். பிரபாவைப் பார்த்துக் கொள்ளும் பாட்டியை வேண்டுமானால் கேட்கலாம்.

அருவியும் நிலாவும் தனியாக ஒரு வீட்டில் தங்கியிருக்க, பாதுகாப்பு கருதி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பிரபாவை அதே ஏரியாவில் சற்று ஒதுக்குப்புறமான ஒரு அப்பார்ட்மெண்டில் குடி வைத்திருந்தாள் மென்னிலா. அவளைப் பார்த்துக் கொள்ள ஒரு பாட்டி, ஏதேனும் உதவி தேவையெனில் ஒரு டிரைவர் இருவரை நியமித்திருந்தார். அவ்வப்போது யார் கவனத்தையும் கவறாமல் நிலாவும் அங்கு போய் தங்குவதுண்டு.


நிலா பிரபாவைக் கொஞ்சுவதைப் பார்த்துவிட்டு அந்தப் பாட்டி, "அது அந்த வயசுல நடக்க வேண்டாமா? இப்ப என்ன உனக்கு 27, 28 வயசு இருக்குமா? 20 வயசுல கல்யாணம் பண்ணி இருந்தேன்னா இந்நேரம் உனக்கும் இப்படி ஒரு குழந்தை இருக்கும்.. ஏன் பாப்பா.. நீ இருக்கிற அழகுக்கு பள்ளிக்கூடம், காலேசு படிக்கும்போதே நிறைய பேரு. லவ் பண்றேன்னு பின்னாடி சுத்தி இருப்பானே? உனக்கு யார் மேலயும் ஒரு 'இது' வரலையா?" என்று கேட்பாள் பாட்டி.

"என்ன பாட்டி? ரொம்ப மாடர்னா இருக்கீங்க போல இருக்கு! உங்க தலைமுறைக்காரங்களுக்கு காதல் கீதல்லாம் பிடிக்காதே.. நீங்க என்ன லவ் பண்ணலையான்னு கேக்குறீங்க?" என்று சிரித்துக் கொள்வாள் நிலா.

"உன் வீட்டு விவகாரம் எனக்கு தெரியாது தாயி. இருந்தாலும் இப்படி ஒத்தக் கோழியா நீ அலையிறது மனசுக்கு கஷ்டமா இருக்கு.. ஊரான் புள்ளை மேலேயே எம்புட்டு பாசம் வச்சிருக்க.. சீக்கிரம் கல்யாணம் பண்ணுத்தா" என்பாள் பாட்டி.


நிலவாகக் குளிர்ந்த நிலா இந்த வார்த்தையைக் கேட்டவுடன் வள் என்று விழுவாள். "இப்படியே பேசிக்கிட்டு இருந்தீங்கன்னா வேலையை விட்டு தூக்கிடுவேன்" என்பாள். இருந்தாலும் வாரம் ஒரு முறையாவது கல்யாணப் பேச்சை எடுக்காமல் இருக்க மாட்டாள் பாட்டி.

"நீங்க என்ன எங்க அப்பா அம்மா அனுப்பி வைத்த கையாளா? அவங்க எதுவும் என் மனச மாத்த சொல்லி காசு கொடுத்து அனுப்பி இருக்காங்களா" என்று குற்றம் சாட்டினாள் நிலா.

"இங்கே அப்பார்ட்மெண்ட்ல உள்ளவங்க எல்லாம் கொஞ்சம் தப்பா பேசுறாங்க பாப்பா.. உனக்கு ஏதோ தப்பான வழியில் பிறந்த குழந்தை மாதிரியும் அதனால நீ திருட்டுத்தனமா வளக்குற மாதிரியும் பேச்சு அடிப்படுது. அது குழந்தை காதுல விழுந்துட்டா எவ்வளவு சங்கடம்?" என்று ஒரு முறை பாட்டி வாயை விட்டு விட, ருத்ர தாண்டவம் ஆடிவிட்டாள் நிலா.

"எவன் அப்படி பேசுவான்? நான் நினைச்சா இந்த மொத்த அப்பார்ட்மெண்டையும் வேலைக்கு வாங்கி அவ்வளவு பேரையும் துரத்திட்டு பிரபாவை மட்டும் இங்க தங்க வைப்பேன்.. மத்தவங்களை பேச விட்டு நீங்க கேட்டுக்கிட்டா இருந்தீங்க? இல்ல உங்களுக்கே அந்த மாதிரி ஒரு தப்பான எண்ணம் இருக்கா? இந்தப் பேச்சு இனிமே பேசுறதா இருந்தா வேலையை விட்டு நின்னுக்கங்க" என்று கூறிவிட்டாள்.

பாட்டி அதிர்ந்தே போனார். "இல்லம்மா இல்லம்மா" என்று அவர் கூற, "இல்ல! ஒரு வாரம் நீங்க கட்டாய லீவு எடுத்துட்டு உங்க ஊருக்குப் போயிட்டு வாங்க.. வரும்போது இந்த பேச்சே இருக்கக் கூடாது" என்று வம்படியாக பாட்டியை அனுப்பி வைத்தார். பாட்டிக்கு இந்த வேலையும் நிலா தரும் சம்பளமும் மிக முக்கியம். அதை வைத்து தான் அவளது குடும்ப வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வயதிலும் வேலை பார்த்து பேரன் பேத்திகளைப் படிக்க வைக்கிறார் பாட்டி.

"இல்லடா இல்லடா! ஒன்னும் சொல்ல மாட்டேன் டா பாப்பா" என்ற அவர் எவ்வளவோ கெஞ்சியும் கேட்காமல் சம்பளத்துடன் ஒரு வார விடுப்பு கொடுத்து அனுப்பி விட்டாள் நிலா. அந்த ஒரு வாரமும் யார் என்று நினைத்தால் என்று பிரபாவைத் தன் அப்பார்ட்மெண்டிலேயே வைத்துக் கொண்டாள்.


அமைதியாக இருந்த நிலாவின் மனதில் பாட்டி முன்பு பேசிய வார்த்தைகள் தற்சமயம் எப்போது நினைவுக்கு வந்தது. தெளிந்த குளத்தில் கல்லை எரிந்தது போல் சலனத்தை உண்டு செய்தது. எல்லாரும் இதே மாதிரி பேசுகிறார்கள் ஒருவேளை அது உண்மை இருக்குமோ என்று கடந்த சில நாட்களாகத்தான் தோன்றியது. அதன் பின் அம்மா அப்பாவின் மேல் அவளுக்கு இருந்த கோபமும் கொஞ்சம் குறைந்தது. மாறன் விடாமல் லவ் டார்ச்சர் கொடுக்கவும் பேசாமல் அவனையே திருமணம் செய்து கொண்டால் என்ன? தன் குறிக்கோளாக தான் நினைப்பது பணமும் அதிகாரமும். அது அவனிடமும் இருக்கிறது. அவன் வழியில் போகட்டும். நான் என் வழியில் போகிறேன். இன்று என் வேலையில் எழும் சிற்சில பிரச்சனைகள் போட்டிகளை அவனின் அரசியல் பலத்தால் சாதித்துக் கொண்டால் என்று ஒரு நாள் திடீரென்று தோன்றியது. மாறனைப் பற்றிய பைல் ஒன்று அவளது மேஜையில் எப்போதும் இருந்தது. அதை எடுத்துப் பார்த்தாள்.

விக்னேஷ் இன்னும் தன்னிடம் நிறைய மறைக்கிறான். தன்னை வைத்து ஏதோ காரியம் சாதிக்க முயல்கிறான். இருந்தும் ஏன் என் வழக்கமான நடவடிக்கைகளை அவன் மேல் எடுப்பதில்லை அவனை ஆடவிட்டு வேடிக்கை பார்க்கிறேன் என்று நினைத்தாள். இருவரும் இருப்பது கிட்டத்தட்ட ஒரே மாதிரியான துறை. என்னை காலி செய்துவிட்டு முன்னேற நினைத்தாலும் நினைப்பான். அதனால் அவன் பக்கம் என் மனம் சாயக்கூடாது என்று இறுதியாக தனக்கே சொல்லிக் கொண்டாள்.


வெண்பாவிடம் பிரபாவின் நலனைப் பற்றி ஒரு முறை விசாரித்து விட்டு, ஆந்திராவை நோக்கிய அந்த சிறிய பயணத்தைத் துவங்கினாள் மென்னிலா. தன்னிடம் சொல்லாமல் விக்னேஷும் நிலாவும் பக்கத்துக்கு கிளம்புவதை மோப்பம் பிடித்து விட்ட மாறன், அவர்களை பின்தொடர இரண்டு வாகனங்களை ஏற்பாடு செய்தான்.

"அப்புறம் என்ன சொல்றாரு மிஸ்டர் கனகசபாபதி?" நிலாவின் சிந்தனை வலையை விக்னேஷன் குரல் கலைத்தது.

"வாட்?!' என்று எரிச்சலுடன் கேட்டாள் நிலா.

"இல்ல உங்க அப்பா கிட்ட எதுவும் பேசினீங்களா? கடைசியா பேசி எவ்வளவு நாளாச்சு?" அப்படின்னு கேட்டேன் என்று விக்னேஷ் கூற,

"என் அப்பா அம்மாவைப் பத்தி உனக்கு என்ன அக்கறை? அதை எப்படி விசாரிச்ச..?* என்றாள் நிலா.

"இங்க பாரு.. என்னேட ஆன் கோயிங் ப்ராஜெக்ட் இப்ப நீ தான்" என்று விக்னேஷ் கூற, அதிர்ச்சியுடன் பார்த்தாள் நிலா.

"அதாவது மாறனுக்காக நான் எடுத்துகிட்ட ப்ராஜெக்ட். அதனால் உன்னை பத்தின ஃபுல் டீடெயில்ஸ் என் விரல் நுனில இருக்கு.. நான் ஸ்கெட்ச் போட்டது தமிழ்நாட்டோட கவர்மெண்ட் ஆபீஸஸ்க்கு கம்ப்யூட்டர் சப்ளை பண்ணக்கூடிய மிகப்பெரிய பிராஜெக்ட். அதுக்காக மாறனைப் பார்த்தேன்.. அவன் உன் மேல ஆசை பட்டதுனால உன்னை விசாரிக்க ஆரம்பிச்சேன். குரு நித்யானந்தா, சாரி சத்யானந்தா சொல்லி இருக்காரு.. நீயும் என்னை மாதிரி தானே பெர்ஃபக்ஷனிஸ்ட்?" என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஏதேதோ உளறினான்.


நிலாவின் அதிர்ச்சிப் பார்வை இப்போது ஒரு ஏளனப் பார்வையாக மாறியது. 'இவன் ஏன் சம்பந்தமில்லாமல் நிறைய பேசிட்டு வந்தடா வண்டில வந்து ஏறுறான்' என்று நினைத்தவள் ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்தவாறு இருக்க, என்ன சத்தத்தையே காணும் என்று அவளைத் திரும்பிப் பார்த்த விக்னேஷ், பிடிபட்டுவிட்ட பாவனையில்,

"சரி சரி இப்ப போற வேலையைப் பத்திப் பேசுவோம்.. சந்திரபாபு நாயுடு திருப்பதி லட்டுக்கு பதிலா ஜாங்கிரிய போட சொன்னாரே அதே மாதிரி இப்ப ஜெகன்மோகன் ரெட்டி பேப்பருக்கு நிறைய கம்ப்யூட்டரைஸ் பண்றார்.. இதுக்கும் ஹார்டுவேர் சப்ளை பண்ற காண்ட்ராக்ட்டை வாங்கத் தான் நாம போறோம்.. இதுல உன்னை எதுக்கு கூட்டிட்டு போறோம்? சாஃப்ட்வேர்ல புலி.. அதனால உனக்கும் ஐயோ பாவம் ஒரு வாய்ப்பு வாங்கிக் கொடுப்போம்னு தான்" என்று விக்னேஷ் வாய்க்கு வந்ததை உளற, நிலாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

ஒருவேளை சைலன்டா நம்ம முறைக்கிறாளோ என்று விக்னேஷ் திரும்பிப் பார்க்க, இவன் பேசுவதை காதிலேயே வாங்காததுபோல் தன் அலைபேசியில் யாருக்கோ அழைத்து, "இங்க பாருங்க.. அந்த பிரசன்னா பயலை சும்மா ஒரு ரூம்ல போட்டு அடைச்சு வைக்க சொன்னேன்ல.. அவனைத் தலைகீழாக கட்டித் தொங்க விடுங்க.. திருப்பி நான் சொன்ன பிறகு கீழே இறக்கினா போதும்" என்றாள்.


விளையாட்டுக்குச் சொல்கிறாளா இல்லை உண்மையாகப் பேசுகிறாளா என்று விக்னேஷ் ஒரு நிமிடம் அவளைப் பார்க்க, அந்த நொடியில் கவனச் சிதறலால் அவன் கையிலிருந்து கார் கட்டுப்பாட்டை இழந்து இடது பக்கமாகத் தடுமாறிச் சென்றது. அதே கணத்தில் மிகச் சரியாக ஒரு மினி லாரி ஒன்று அவர்களைக் கடந்து சென்று பிரேக்கிட்டு நின்றது.

விக்னேஷ் இடதுபுறம் தெரிந்த சர்வீஸ் ரோட்டுக்குள் அவனது காரை நிறுத்தி பிரேக் போட, நிலாவுக்கும் விக்னேஷுக்கும் சற்று முன் நடந்ததை தெள்ளத் தெளிவாக புரிந்தது. நிலாவின் அலைபேசி பேச்சில் விக்னேஷ் கவனம் சிதறாவிட்டால் அந்த மினி லாரி இவர்களது காரை சர்வ நிச்சயமாக இடித்திருக்கும். விக்னேஷின் முப்பது லட்ச ரூபாய் கார் பார்க்கத்தான் பளபள. ஆனால் அந்த லாரியின் கனத்திற்கும் எடைக்கும் முன்னால் அது நெளிந்து போயிருக்கும்.

அந்த ஒரு மினி லாரி மட்டுமில்லை, இவர்களுக்கு ஒரு நூறு அடிக்கு முன்னால் இன்னொரு மினி லாரியும் சென்று கொண்டிருந்தது. அதுவும் இப்போது ஓரமாக நிறுத்தப்பட்டு இருப்பதையும் மென்னிலா கவனித்தாள்.

மீண்டும் அலைபேசியை எடுத்து, "ரெண்டு மினி லாரி. முன்னால ஒன்னு; பின்னாடி ஒன்னு.. இவ்வளவு நேரமா ஃபாலோ பண்ணிட்டு வந்திருக்கு கவனிச்சீங்களா?" என்று கேட்க, "எஸ் மேடம்!" என்றனர் அதற்கு பின்னால் 100 அடி இவர்களது வாகனத்தைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது இவ்வளவு செக்யூரிட்டி ஆபிஸர்கள்.

அந்த கார் சற்று ஓரமாக நிற்க நிலாவிடம் பேசிய செக்யூரிட்டி ஆபீசர் இறங்கிக் கொண்டபின், கார் தொடர்ந்து மினி லாரிகள் புறமாகச் சென்றன.

மைக்கேல் மதன காமராஜன் போல் இல்லாமல் இந்த ஆபீசர்கள் மிடுக்குடனும் அதிக உடல் பலத்துடனும் இருந்தனர். அவர்களது அனுபவம் உடல் மொழியிலேயே தெரிந்தது. 'அனேகமா ரிட்டையர்டு ஆர்மி ஆபீசர்களாக இருப்பாங்க' என்று நினைத்துக் கொண்டான் விக்னேஷ்.

அவனது முகத்தில் ஈயாடவில்லை. இவ்வளவு நடந்திருக்கிறது. நான் ஏன் கவனிக்காமல் தத்துப்பித்து என்று உளறிக் கொண்டே வந்தேன், இதைக் கூட பார்க்க முடியாமல்.. என்ன இது? என்று தன் மேல் அதிகக் கோபம் கொண்டான் விக்னேஷ்.

விக்னேஷ் என்ற ஒரு ஆள் சீனில் இல்லவே இல்லை என்பது போல் இருந்தது நிலாவின் உடல்மொழி. "சிட்டி தாண்டி 100 கிலோமீட்டர் வரைக்கும் ஃபாலோ பண்ண விட்டு, அவங்க என்னை இடிச்ச பிறகுதான் நீங்க சீனுக்குள்ள வருவீங்களா? நான் அவங்களை 50 கிலோமீட்டர் முன்னாடியே பாத்துட்டேன்" என்றாள் தன் பாதுகாப்பு அதிகாரியிடம்.

"சாரி மேடம்!" என்றார் அந்த செக்யூரிட்டி ஆபிசர். தொடர்ந்து அவர்கள் ஏதேதோ 'கோட் வேர்டில்' பேசிக்கொள்ள விக்னேஷுக்கு நெற்றியில் முத்து முத்தாக வியர்வைத் துளிகள் பூத்தன.

"மேடம்! இஃப்யூ டோன்ட் மைண்ட்.. நான் உங்க கார்ல வரட்டுமா?" என்று அந்த செக்யூரிட்டி ஆபீசர் கேட்க,

"ஏன் பயமா இருக்கா? என்னோட வந்தா எதுவும் ஆபத்துல நான் உங்களைக் காப்பாத்துவேன்னு நினைக்கிறீங்களா" என்று முகத்தில் அடித்தாற் போல் கேட்டாள் நிலா. அவன் பதில் எதுவும் கூறாமல் இருக்கவும், "அந்த ரெண்டு லாரியும் ஆந்திராவைப் பார்க்கப் போகட்டும் விக்னேஷ்.. வண்டியைத் திருப்புங்க, நாம மறுபடியும் சென்னைக்குப் போகலாம்" என்று டிரைவரிடம் கூறுவதைப் போல சாதாரணமாகக் கூறிவிட்டு, காரில் ஏறி அமர்ந்து கொண்டாள் நிலா.


விக்னேஷுக்கு மாறி பல்பு வாங்குவதைப் போல் இருந்தது.. "அங்க.. முக்கியமான அப்பாயிண்ட்மெண்ட்.." என்று அவன் இழுக்க,

"அங்க அப்பாயின்மென்ட்டும் இல்ல ஒரு டேஷும் இல்லைன்னு எனக்கு தெரியும்.. ஒழுங்கா ஏறி உக்காருங்க" என்றாள் நிலா. அவளின் கணீர் குரலில் மறுத்துப் பேச முடியாத விக்னேஷ், தானும் ஏறி அமர்ந்து காரைத்திருப்ப,

நீ கெட்டவனாக இருந்தால் உன் அப்பா என்று அவனுடைய கார் டேஷ் போர்டில் ஒட்டியிருந்த ஸ்டிக்கர் அவனைப் பார்த்து சிரித்தது. 'உன்னை விட மோசம் டா இந்த நிலா' என்று அதிலிருந்து நரியின் முகம் கூறியது. நிலாவை அவன் முதன் முதலில் ஒரு ஹோட்டலில் பார்த்த அன்று, அவள் நான்கு மொக்கை பீசுகளை வாங்கு என்று வாங்கிக் கொண்டிருந்தாள். அன்றும் அதே வாசகம் கொண்ட டி-ஷர்டைத் தான் விக்னேஷ் அணிந்திருந்தான்.

வீட்டுக்குப் போனவுடன் அதைத் தலையைச் சுற்றித் தூர எரிய வேண்டும், இனிமேல் நிலா முன்னால் அதைப் போடவே கூடாது என்று நினைத்துக் கொண்டான் விக்னேஷ். அவன் ரொம்ப நேரம் எதுவுமே பேசாமல் வரவும், "உங்களுக்கு ஆந்திராவுல ஒரு வேலையும் இன்னிக்கு இல்லன்னு எனக்கு தெரியும்.. போன வாரமே நீங்க போன வேலை முடிஞ்சிடுச்சு, இன்னைக்கு அந்த மாறன் எனக்கு எதிரா பெரிய பிளான் போட்டுருக்கான்.. அதுல இருந்து என்னை காப்பாத்த தான் ஊருக்கு வெளியே கூட்டிட்டு வந்தீங்கன்னு எனக்கு தெரியும்.. உங்க இன்டென்ஷன். நியாயமானது தான்.. பாராட்டுறேன்.பட், சாரி! இந்த தடவை எனக்கு உங்க உதவி தேவைப்படலை.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்" என்று சொல்லிவிட்டு கண்ணை மூடினாள் நிலா.


அப்படியே கண்ணை மூடியவாக்கிலேயே, "அப்புறம் ஏன் உன் கூட வந்தேன்னு யோசிக்கிறியா? எனக்கு இன்னிக்கி வேற வேலை எதுவும் இல்லை.. கொஞ்சம் என்டர்டைன்மென்ட் வேணும்னு தோணுச்சு. அதான் வந்தேன்" என்றாள்.

சில சமயம் நீ என்கிறாள், சில சமயம் நீ சொல்கிறாள் இதற்கு என்ன அர்த்தம் என்று விக்னேஷ் யோசிக்க, அந்த செக்யூரிட்டி ஆபிசர் ஜாகிங் செய்வது போல் ஓடி மொட்டை வெயிலில் அந்த மினி லாரி நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கி ஓடினார். அவருடைய உதவியாளர்களான மற்ற இரு செக்யூரிட்டி ஆபிஸர்கள் இவர்கள் வண்டியை இடிக்க வந்த லாரி டிரைவரைப் பிடித்து தர்ம அடி அடித்துக் கொண்டிருந்தனர். எந்தக் கவலையையும் இன்றி நிலா கண் மூட, விக்னேஷ் தன் ஃபோனையும் ரோட்டையும் மாறிமாறிப் பார்த்தவாறு காரை பதற்றத்துடன் செலுத்தினான்.


தொடர்வாள்,

பைரவி.


இந்த அத்தியாயத்தை எழுதியவர் டாக்டர். அகிலாண்டபாரதி. சென்ற அத்தியாயம் எழுதியது திருமதி. ராஜலட்சுமி நாராயணஸ்வாமி. இந்த ரிலே கதையை எழுதும் ஐந்து ரைட்டர்களில் மூன்று பேர் பெயர்களை நாங்கள் சொல்லி விட்டோம். இன்னும் இருவர் தான் பாக்கி. அந்த இரண்டு பேர்களில் ஒருத்தர் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர். மற்றவர் சங்கமம் தளத்திற்குப் புதியவர். யாரென்று யோசித்துக் கொண்டே இருங்கள். விரைவில் கதையை முடிக்க முயற்சி செய்கிறோம்.
 
Top