கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

எதிர்மறை வினையெச்சம் அத்தியாயம் 3

Bhairavi

Member
எதிர்மறை வினையெச்சம்

அத்தியாயம் 3

ஆன்ட்டி ஹீரோயின் பற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். பொன்னியின் செல்வனில் கல்கி படைத்த நந்தினி கதாபாத்திரம் ஆன்ட்டி ஹீரோயினுக்கு மிகச்சிறந்த எடுத்துக் காட்டு.

தனது அழகை ஆயுதமாக்கிக் கொண்டு ஆண்களை வீழ்த்தித் தன் இஷ்டப்படி ஆட்டி வைத்துத் தான் நினைத்ததைச் சாதித்த அற்புதமான பாத்திரமாகத் தான் நந்தினியை, கல்கி படைத்திருந்தார். மனதில் வன்மத்தை விஷமாக ஒளித்து வைத்துக் கொண்டு சமயத்தில் விஷத்தைக் கக்கித் தன் பழியைத் தீர்த்துக் கொண்ட நாகமாக மிக அழகாகச் சித்தரிக்கப் பட்டிருந்த ஆன்ட்டி ஹீரோயின் கதாப்பாத்திரம் நந்தினி.

பூங்குழலி கூட ஒருவிதத்தில் ஆன்ட்டி ஹீரோயின் தான். பொன்னியின் செல்வன் மீது அளவற்ற காதலை மனதில் ஒளித்து வைத்துக் கொண்டு தடுமாறும் பாத்திரம். மனதில் குழப்பங்களுடன் திரியும் யதார்த்தமான ஆன்ட்டி ஹீரோயின்.

அதே கதையின் ஆதித்த கரிகாலன் கூட ஆன்ட்டி ஹீரோ தான். யார் தான் ஹீரோ என்று யோசித்தால் அருள்மொழி வர்மர் மற்றும் சேந்தன் அமுதன் இருவரும் அப்பழுக்கற்ற ஹீரோக்கள். எல்லோருக்கும் பிடித்த வந்தியத்தேவனைக் கூடப் பெண்களிடம் தடுமாறுபவனாகத் தான் கல்கி காட்டியிருக்கிறார். ஆனாலும் யதார்த்தமான, எளிதில் தடுமாறும் மனிதனாகக் காட்டியிருப்பதால் நம் எல்லோருக்கும் பிடித்த கதாப்பாத்திரமாக அது அமைந்து விட்டது.

அடுத்ததாக படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி சரியான ஆன்ட்டி ஹீரோயின்.
தளபதி படத்தில் வரும் சூப்பர் ஸ்டாரின் பாத்திரம் ஆன்ட்டி ஹீரோ கதாபாத்திரம் தான். நமது சூப்பர் ஸ்டாரும் நிறைய ஆன்ட்டி ஹீரோ பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்.

"ஆன்ட்டி ஹீரோ அல்லது ஆன்ட்டி ஹீரோயின் என்பது ஒரு கதையில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஆகும். அவர் வழக்கமாக கதாநாயகர்களின் குணநலன்களாக இருக்கும் வீர குணங்கள் மற்றும் இலட்சியவாதம், தைரியம் மற்றும் ஒழுக்கம் போன்ற பண்புகளைக் கொண்டிருப்பதில்லை. சில சமயங்களில் ஆன்ட்டி ஹீரோக்கள் தார்மீக ரீதியாக சரி எனத் தோன்றும் செயல்களைச் செய்தாலும், அது எப்போதும் சரியான காரணங்களுக்காக அல்லாது, பெரும்பாலும் சுயநலத்திற்காகவோ அல்லது வழக்கமான நெறிமுறைகளை மீறும் வழிகளிலோ செயல்படும்."

மேலே கொடுக்கப்பட்டுள்ளது விக்கிப்பீடியா தரும் விளக்கம்.

இன்னும் அலசுவோம்..


அத்தியாயம் 3

என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்வதற்குள் பிரசன்னா கடத்தப்பட்டான்.
'பாவி, பாவி, மென்னிலான்னு பேரு எவன்டா வச்சான் இந்தப் பொண்ணுக்கு? நிலாவும் இல்லை; நட்சத்திரமும் இல்லை. இவ ஏதோ சுட்டெரிக்கும் சூரியனா இல்ல இருக்கா! இல்ல இல்ல.. எரிமலைக் குழம்பா தகிக்கிறா!

பாவி விக்கி, நீ நல்லா இருப்பியா? யாரோ ஒரு டெரர் பார்ட்டி கிட்டே என்னை மாட்டி விட்டுட்டியே? பிரசன்னா..! சங்கு தான்டா உனக்கு இன்னைக்கு.. வாழ்க்கைல இன்னைக்குத் தான்.. அதுவும் இப்பத் தான் ஒரு பொண்ணைப் பாத்துக் காதல் அருவியாக் கொட்டுச்சு மனசுல.. அதுக்குள்ள சாகப் போறேனே! எப்படிக் கொல்லப் போறாளோ? கத்தி வச்சு சதக், சதக்கா? இல்லை ஹைடெக்கா ஏதாவது மெதட்ல இருக்குமோ? விக்கி, எங்கேடா இருக்கே? உனக்கு இருக்கறது ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணுன்னு நான் ஒரு ஃப்ரண்ட் தானேடா? சீக்கிரமா வாடா..

ஒழுங்கா அப்பா சொன்ன மாதிரி ஃபாரின் கம்பெனி வேலைக்குப் போய் டன் டன்னா டாலர் சம்பாதிச்சிருக்கலாம். இப்போ முதுகில் டின் டின்னாக் கட்டி அடிக்கப் போறாங்களே! டேய் கருங் குரங்கு, கறுப்பு கோட்ஸில்லா, இப்படி வாயில் துணியை அடைச்சு வைச்சு என்னால வாய் விட்டுக் கூடப் புலம்ப முடியலையே! மனசுக்குள்ளயே புலம்பிப் பைத்தியம் பிடிக்கப் போகுதே? ' என்று டிசைன் டிசைனாகப் புலம்பிக் கொண்டிருந்தான்.

அவனுடைய புலம்பல்கள் கோவிட் கேஸ்களின் எண்ணிக்கை போல கிடுகிடுவென்று ஏறி உச்சத்தைத் தொடும் போது, சரியாக அவன் பயணித்த வண்டி ஏதோ இடத்தில் நின்றது. பிரசன்னாவைக் கீழே இறக்கி, அவன் வாயிலிருந்த துணியை மட்டும் எடுத்தான் மாமிச மலை நம்பர் ஒன்.

ஆளரவம் இல்லாத தனியிடத்தில் ஒற்றைப் பனைமரமாக ஒய்யாரமாகச் சிரித்து நின்றது அந்த கெஸ்ட் ஹவுஸ். கதவைத் திறந்து பிரசன்னாவைத் தள்ளினான் கறுப்பு உடை அணிந்த அந்த அடியாள், அதாவது மாமிச மலை நம்பர் டூ.

"என்ன பாஸ், டெஸ்டினேஷன் அரைவ்டா?
ரொம்பப் பசிக்குது பாஸ். காலையில் பிரேக் ஃபாஸ்ட் கூடச் சாப்பிடலை? ஏதாவது பர்கர், பிட்சா ஆர்டர் பண்ணறீங்களா? கூடவே டயட் கோக், சாக்கோலாவா கேக் அப்படியே கொஞ்சம் ஃபிரெஞ்சு ஃப்ரை இப்போதைக்குப் போதும். அடுத்து மீதி ஐட்டமெல்லாம் யோசிச்சுக் கொஞ்ச நேரத்தில் சொல்லறேன்" என்ற பிரசன்னாவை அந்த அல்லக்கை பார்த்த பார்வையில் சோளத்தைச் சுட்டு விடலாம்.

"சரி பாஸ்! பரவாயில்லை. அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன். இட்லி, வடை, பொங்கல், தோசை மாதிரி நம்ப தேஸி ஐட்டம் கூட எனக்கு ஓகே தான். ஆனா இதோ பின்னால் என் ஃப்ரண்ட் வருவானே? அவன் தான் கொஞ்சம் தகராறு செய்வான்" என்றவனை முறைத்தபடி,

"வாயை மூடிக்கிட்டு உள்ளே போ. கொஞ்ச நேரத்தில் எங்க மேடம் வந்ததும் செமத்தியா விருந்து குடுப்பாங்க. இப்பவே ரொம்பப் பேசினேன்னா, அப்புறம் கத்தறதுக்குக் கூட ஒடம்பில தெம்பு இருக்காது" என்று எச்சரித்து விட்டு உள்ளே தள்ளிக் கதவைச் சாத்தினான் முதல் கிங்கரன்.

"விக்கி, சீக்கிரம் வாடா. ஹீரோ மாதிரி வந்து என்னைக் காப்பாத்து ப்ளீஸ். நாளைக்கு நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணோட ஒத்த ராசாடா நான்! அந்த மென்னிலா என் மென்னியைப் பிடிச்சுக் கடிச்சு அடிச்சுத் துவைச்சுக் காயப் போடறதுக்குள்ள வந்துட்டேன்னா நல்லாருக்கும். காப்பாத்த முடியலைன்னாலும் அட்லீஸ்ட் அடியையாவது ஆளுக்குப் பாதி ஷேர் பண்ணிக்கலாமே!" என்று வாய் ஓயாமல் புலம்பிக் கொண்டிருந்தான்.

அவனுடைய புலம்பல் யார் காதில் விழ வேண்டுமோ, அவன் ஒய்யாரமாகத் தனது கார் சீட்டில் சாய்ந்து கொண்டு,

"ஹே இது பொல்லாத உலகம்
நீ ரொம்ப ஷார்ப்-ஆ இரு
யாருக்கும் யார் என்ன கொறச்சல்
நீ கொஞ்சம் மாஸ்-ஆ இரு

அவன் ரைட்-ன்பா ப்ரோ
இவன் தப்பு-ன்பா ப்ரோ
இத எல்லாத்தயும் கேட்டாக்கா
ஹவ் வில் யூ க்ரோ

உன்ன கிங்க்-ன்பா ப்ரோ
உட்டா காட்-ன்பா ப்ரோ
அப்றம் சங்கூத போறான்னு
ஹவ் வில் யூ நோ

உன் ரூட்-அ நீ போடு
உன் மேட்ச்-அ நீ ஆடு
அட ஆறு பாலும் சிக்ஸ்சர் அடிடா"

என்று தீவிரமாகப் பாடிக் கொண்டே, தாளம் போட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய கைபேசி தொடர்ந்து சிணுங்கிக் கொண்டிருந்ததை கவனிக்காமல் அலட்சியமாக உட்கார்ந்திருந்தான். மீண்டும் மீண்டும் குதித்து அசைந்து நடனமாடிக் கொண்டிருந்த கைபேசியைக் கையில் எடுத்துப் பேசிவிட்டு விருட்டென்று வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
***


" நிஜமாகவே இந்த மொபைல் தான் அவன் கிட்டே இருந்ததா?" என்று நூற்றிப் பதினெட்டாவது தடவையாக அருவியிடம் கேட்ட நிலா, நம்பிக்கை இல்லாமல் தன் கையில் இருந்ததைப் பார்த்தாள். அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டிய அந்தப் பழைய மொபைலைத் திருப்பித் திருப்பிப் பார்த்தாள். பழைய கால டப்பா மாடல் நோக்கியா ஃபோன். பாவம், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இன்னமும் உழைத்துக் கொண்டிருந்தது. அதனுடைய கால் ஹிஸ்டரியில் சமீபத்தில் பேசிய ஒரே ஒரு எண்ணைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

"இதைத்தான் அவன் கையிலிருந்து நம்ப ஸெக்யூரிட்டி பிடுங்கினாரு. நான் பாத்தேன்" என்று அருவியும் நூற்றுப் பதினெட்டாம் தடவையாகத் தனது பதிலைச் சொன்னாள். தலையைப் பிய்த்துக் கொண்ட மென்னிலா, தனக்கு மனதிற்கு மிகவும் நெருக்கமான மார்வல் ஸீரிஸ் ரோக்கின் பச்சை நிறச் சிலையை வெறித்துப் பார்த்தாள்.

ரோக் தான் அவளுக்குப் பிடித்த கேரக்டர். ரோகைப் போலவே தன்னைச் சீண்டுபவர்களைப் பூண்டோடு அழிக்க ஆசை கொண்டவள் மென்னிலா. எதிராளியின் திட்டங்களை முன்னாலேயே அறிந்து கொண்டு அவற்றைத் திட்டமிட்டவர்களுக்கு எதிராகவே திருப்பி விடக் கூடிய உள்ளுணர்வு தனக்கு இருப்பதாக நம்புபவள். அந்த உள்ளுணர்வு சொன்னதால் தான் இப்போது தன் அலுவலக வாசலில் காரில் உட்கார்ந்து கொண்டு நோட்டம் விட்டுக் கொண்டிருந்தவனைப் பிடித்துத் தனது கெஸ்ட் ஹவுஸுக்கு அனுப்பியிருக்கிறாள்.

"அந்த வழுக்கைத் தலை அங்கிள்களை ஹெச். ஆர். டிபார்ட்மெண்ட்டுக்கு அனுப்பிட்டியா அருவி? "

"அனுப்பியாச்சு நிலா. ஹெச். ஆர். ஹெட் உன் கிட்ட ஏதோ பேசணும்னாங்க. "

"அப்படியா! இதோ பேசறேன்" என்ற நிலா உடனே இன்டர்காம் பட்டனை அழுத்தினாள்.

"என்ன நாலு பேர் கிட்டயும் தேவையான ஃபார்மாலிட்டீஸ் முடிச்சாச்சா? நாலு பேரையும் தனித்தனியா வேற வேற எடத்தில், அதுவும் கஷ்டமான ப்ராஜெக்டாப் பாத்து அலாட் பண்ணு. கொஞ்சம் தலையைத் தட்டி உக்காத்தி வச்சாத் தான் மண்டைக்குள்ள உறைஞ்சு போயிருக்கற ஆட்டிட்யூட் மசாலா கரைஞ்சு வெளியே போகும். அது வரைக்கும் கடுமையான உபசரிப்பே நடக்கட்டும்" என்று சொல்லி விட்டு, அடுத்துச் செய்ய வேண்டிய வேலையில் கவனத்தைத் திருப்பினாள்.

என்ன தான் பெண்களையே தனது நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்தாலும் அவ்வப்போது தனக்குத் தொல்லை தரும் ஆண்களைத் தனக்குக் கீழே வேலைக்கு வைத்து அதிகாரம் செலுத்தி அவர்களை அடக்குவது மென்னிலாவுக்குப் பிடித்தமான செயல்.

அடுத்து மீண்டும் அந்தக் கைபேசியை
எடுத்து அதில் இருந்த அந்த ஒரே ஒரு எண்ணை அழுத்தினாள்.

"வான் நிலா நிலா அல்ல – உன் வாலிபம் நிலா….

தேன் நிலா எனும் நிலா – என் தேவியின் நிலா

நீயில்லாத நாளெல்லாம் – நான் தேய்ந்த வெண்ணிலா"

என்ற பாடல் சத்தமாக ஒலிக்க, எரிச்சலுடன் அந்தக் கைபேசியைத் தனது மேசையில் எறிந்தாள். அதற்கு பாதிப்பு எதுவும் ஆகாமல் கவனமாக அதைத் தாங்கிய அருவி, காதலிக்காகப் பறித்த பூவைக் காதலன் கையில் ஏந்தி நின்றது போல அதே அக்கறையுடன் தாங்கி நின்றாள்.

"எல்லாம் இந்த மாறனோட அடியாட்களாத் தான் இருக்கணும். பணத்திமிரு!" என்று கொந்தளித்த மென்னிலாவின் முகத்தில் மாறனின் பெயரை உச்சரித்த அருவருப்பு பளிச்சென்று தெரிந்தது.

"கோபத்தை அடக்கிக்கோ நிலா. கோபத்தில் நீ தப்பு செய்ய சான்ஸ் இருக்கு. இப்போதைக்கு இந்த மொபைல் ஒண்ணு தான் நம்ப கையில சிக்கியிருக்கு. அதை நாம் இழந்துரக் கூடாது " என்றாள் அருவி.

"என் கூடவே இருக்கறதாலயோ என்னவோ, நீயும் வரவர புத்திசாலியாயிட்டே வர்றே அருவி" என்று அவளைப் பாராட்டி விட்டு, மென்னிலா கெஸ்ட் ஹவுஸுக்குக் கிளம்பினாள்.

"நானும் வரவா நிலா? " என்று மெதுவாகக் கேட்டாள் அருவி. யானையைக் காப்பாற்றக் கிளம்பிய சுண்டெலியின் குரல் போலத் தான் இருந்தது அவள் குரலும்.

அவளுக்குக் கையைக் காட்டி, 'வேண்டாம்' என்று மறுத்து விட்டு நிலா கிளம்ப, சரியாக அதே நேரத்தில் அந்த ஆதி காலக் கைபேசி ஆடி ஆடி அழைத்தது. கொம்பேறி மூக்கனாகவே மாறி, கையில் அதை எடுத்து ஆன் செய்தாள் அந்தக் காளியின் மறு அவதாரம்.

"உனக்கு என்ன அவ்வளவு திமிர்? எங்கிட்டயே மோதறியா? இரு, வந்து வச்சுக்கறேன் கச்சேரியை" என்று கத்தினாள் நிலா.

"மேடம், மேடம் நீங்க தானா மேடம். ஸாரி மேடம். நீங்க சொன்னபடி எல்லாம் செஞ்சுடறேன் மேடம்" என்றான் அவளுடைய கெஸ்ட் ஹவுஸ் மேனேஜர் கம் ப்யூன் கம் அட்டென்டன்ட் கம் எடுபிடியான அந்த ஆல் இன் ஆல் ஊழியன்,மைக்கேல் மதன காமராஜன். நிஜமாகவே அது தான் அவனுடைய பேர். சரியான சினிமாப் பைத்தியமான அவனுடைய அம்மா, அந்தப் படம் பார்த்துக் கொண்டிருந்த போது தியேட்டரிலேயே பிறந்ததால் வைத்த காரணப்பெயர்.

ஒரு நிமிடம் குழம்பிப் போனாள் மென்னிலா. 'இந்த ஃபோனில் இவன் எப்படிப் பேசறான்? ' என்று வியந்து குழம்பி நின்றாள். உடனே சுதாரித்துக் கொண்டு அவனைக் கேட்பதற்குள், அழைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. அதன் பிறகு மீண்டும் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. அதே கோபத்துடன் கிளம்பியுள்ளது, தனது மஹிந்திரா XUV 700 ஐ கெஸ்ட் ஹவுஸை நோக்கி விரட்டினாள்.

அங்கே கெஸ்ட் ஹவுஸில் நுழைந்தவளோ தன் கண் முன்னே விரிந்த காட்சிகளைக் கண்டு அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

சிறிது நேரத்திற்கு முன்..

தங்களுடைய திட்டம் சொதப்பினால் பிரசன்னாவிற்கு உதவும் மாற்றுத் திட்டத்தோடு, சற்று தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே மொபைலிலும் அவனிடம் பேசினான் விக்னேஷ்.

பிரசன்னாவின் மொபைல் அவனிடமிருந்து பறிக்கப்பட்டதையும், அவனுடைய காரோடு அவன் கடத்தப்பட்டதையும் பார்த்து விட்டான்.
உடனே கிளம்பாமல் பிரசன்னாவின் மொபைல் அழைப்பை ஏற்று, நிலா பாடலைப் போட்டு மென்னிலாவிற்கு எரிச்சல் மூட்டி விட்டு, பிரசன்னாவின் காரில் இருந்த ஜிபிஎஸ் உதவியுடன் கெஸ்ட் ஹவுஸில் நுழைந்து விட்டான் விக்னேஷ். கார் சாவியை ஸ்டைலாகச் சுழற்றிக் கொண்டு உள்ளே நுழைந்தவனை மைக்கேல் மதன காமராஜன் தடுத்து விட்டான்.

"ஹலோ மிஸ்டர். மேனேஜர் (இதிலேயே மைக்கேல் குளிர்ந்து போனான்) . முக்கியமான மீட்டிங் இருக்குன்னு மேடம் தான் இந்த அட்ரஸ் கொடுத்து வரச் சொன்னாங்க" என்று சொல்ல, மைக்கேல் நம்ப முடியாமல் பார்த்தான். மேனேஜர் என்று கூப்பிட்ட ஒன்றைத் தவிர, விக்னேஷின் நடவடிக்கைகள் மைக்கேலுக்கு நம்பகமாக இல்லை. மென்னிலா மேடத்தை நினைத்தால் உடம்பு நடுங்கியது.

"என்ன நம்பிக்கை இல்லையா? மேடமைக் கூப்பிடறேன். அவங்களே சொல்லுவாங்க" என்று சொல்லி, பிரசன்னாவின் நம்பருக்கு அழைப்பு விட்டான். ஸ்பீக்கர் ஆனில் போட்டான்.

மென்னிலா, தான் கடத்தியவனின் நண்பன் என்று நினைத்துக் கோபத்தில் கத்திக் குவிக்க, அதைத் தவறாகப் புரிந்து கொண்ட மைக்கேல் உளறிக் கொட்ட, அவன் பேசி முடித்ததும் அழைப்பைத் துண்டித்து மொபைலையும் ஆஃப் செய்து விட்டான் விக்கி.

"முக்கியமான மீட்டிங் இது. இரகசியமா நடக்கப் போகுது. தேவையில்லாத ஆளுங்களை அனுப்பிடச் சொன்னாங்க மேடம். நீங்களும் வெளியே சுத்திட்டு நிதானமாக வாங்க" என்று சொல்ல நமது மைக்கேல் மதன காமராஜனும் சந்தோஷமாகக் கிளம்பினான்.

இத்தனை அமர்க்களங்களையும் நடத்திய நாயகன் தான் வரவேற்பறையில் மென்னிலாவுக்கு தரிசனம் தந்தான்.

வரவேற்பறையில் ஒருத்தன் தன் மேல் ஒரு டவலை தாவணி போலச் சுற்றிக் கொண்டு, "சாமி, ஓ சாமி" என்று ராஷ்மிகாவாக ஆடிக் கொண்டிருக்க, இன்னொருத்தன் ஒரு தோளை மட்டும் குலுக்கி, அல்லு அர்ஜுனின் லேட்டஸ்ட் டிரென்டான ,'தோள் தூக்கி ஸ்டெப்'பைப் போட்டுக் கொண்டு "ஸ்ரீ வள்ளி" என்று சித் ஸ்ரீராமுடன் கொஞ்சம் கூடப் பொருந்தாத குரலில், காதுக்கு நாராசமாகப் பாடிக் கொண்டிருந்தான். இரண்டு பேருடைய பாடல்களும் காற்றில் கலந்து அந்த அறையே "புஷ்பா, புஷ்பா" என்று புலம்பி அழுது கொண்டிருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் இந்தப் பாடல்களும், ஆட்டமும் தொடர்ந்தால் கெஸ்ட் ஹவுஸில் இருக்கும் சாமான்கள் அனைத்தும் தற்கொலை செய்து கொள்வது நிச்சயம்.

"நிறுத்துங்கடா உங்க கண்றாவி டிராமாவை" என்று மென்னிலா கத்திய கத்தலில் அந்தக் கட்டிடமே அதிர்ந்தாலும், ஆட்டம் நின்றதால் நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

" நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
நெருப்பாய் எரிகிறது? " என்று அடுத்த பாடலை மீண்டும் ஒருத்தன் ஆரம்பிக்க, அடுத்தவன் வந்து அவன் வாயைப் பொத்தினான்.

"போதும்டா மச்சான். தங்கச்சி ரொம்பக் கோபமா இருக்கு" என்பவனைப் பார்த்து முறைத்தபடி நிலா,

"யாருக்கு யாரு தங்கச்சி? என்ன விளையாடறீங்களா? நீ தானே எங்க ஆஃபீஸ் வாசலில் காரில் இருந்தவன்? இன்னொருத்தன் எப்படி இங்கே வந்தான்? ஸெக்யூரிட்டி, ஸெக்யூரிட்டி! எங்கே போய்த் தொலைஞ்சீங்க எல்லாரும்? " என்று கத்தியும் யாரும் வரவில்லை.

"அவங்க எல்லோருக்கும் லீவு கொடுத்து அனுப்பியாச்சு" என்று வந்த பதிலில் இன்னும் அதிர்ந்து போனாள் மென்னிலா.

"ஐயோ என்னோட ஆம்லெட் " என்று கிச்சனுக்குள் ஒருத்தன் ஓட, சமையலறையில் இருந்து ஏதோ தீயும் வாடை வந்தது. சமையலறைக்குள் எட்டிப் பார்த்த நிலாவிற்குத் தலை சுற்றியது.

ஃப்ரிஜ் வாயைப் பிளந்து கொண்டு பாவமாகத் திறந்து கிடந்தது. வெங்காயத் தோல், இஞ்சி, பச்சை மிளகாய் என்று மேடை முழுவதும் சாமான்கள் மாடர்ன் ஆர்ட்டாகச் சிதறிக் கிடந்தன. பிரிக்கப்பட்ட சீஸ் பேக்கெட், மூடியைத் தொலைத்து விட்டுத் திறந்து கிடந்த உப்பு, மிளகுத்தூள் டப்பாக்கள், மேடையில் சிந்தியிருந்த தக்காளி சாஸ் என்று அலங்கோலமாகக் கிடந்த அந்த சமையலறையின் கண்கொள்ளாக் காட்சி, நான்கு சோம்பேறி பேச்சிலர்களின் அறையுடன் போட்டி போட்டது.

சிறுத்தை போலச் சீறிக் கொண்டு வந்த அந்தப் பெண், புள்ளிமான் போல நடுநடுங்கிப் போனாள். உணர்ச்சிப் பெருக்கால் அழுகையே வந்துவிட்டது. கண்களில் இருந்து கண்ணீர் எட்டிப் பார்த்ததில் கண்கள் கலங்கின.

"ஏற்கனவே சென்னையில் மழை பெஞ்சா வெள்ளம் வந்துருது. நீ வேற அழ ஆரம்பிச்சுடாதே தங்கச்சி " என்றவன் பாசத்துடன் ஒரு டிஷ்யூவை அவளிடம் நீட்டினான்.

"ஸ்டாப், ஸ்டாப். நானாவது அழறதாவது. ஸ்டாப் திஸ் நான் சென்ஸ். திஸ் இஸ் தி லிமிட். ஸ்டாப் இட் ஐ ஸே" என்று கத்தி விட்டு, டிஷ்யூவுடன் வந்தவனை ஓங்கி ஓர் அறை விட்டாள் மென்னிலா.

"ஐயோ, நான் செத்தேன். என் எதிர்கால வைஃப் கல்யாணத்துக்கு முன்னாலேயே விதவை ஆயிட்டாளே!" என்று கன்னத்தைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்தான் அவன். அடுத்தவனை அறைவதற்குள் அவன் சமையலறையில் இருந்து ஹாலுக்கு ஓட, மென்னிலா அவனைத் துரத்திக் கொண்டு ஓடினாள். அங்கிருந்த ஒரு சேரைத் தூக்கி அவன் மேல் குறிபார்த்து எறிய, அதற்குள் அவன் சுதாரித்து நகர, சேர் பலத்த சத்தத்துடன் தரையில் மோதி விழுந்தது.

"நிலா! என்ன நடக்குது இங்கே?" என்று இடி போல ஒரு குரல் முழங்க, இரண்டு பேரும் வாசலை நோக்கினார்கள்.

இடுப்பில் கை வைத்துக் கொண்டு ஒரு க்யூட்டான, ஸ்வீட்டான சின்னப் பாப்பா, தனது முட்டைக் கண்களை உருட்டிக் கொண்டு கோபத்துடன் நிலாவைப் பார்த்தது. அதனுடைய குண்டு குண்டுக் கன்னங்கள் கோபத்தில் சிவந்து ஆப்பிள் பழங்களாக இருந்தன. ஆறு வயதிருக்கலாம் அந்த பேபிக்கு. அதற்கு இப்படி இடி போன்ற குரலா? அந்தக் குழந்தைக்குப் பின்னால் திருதிருவென்று முழித்துக் கொண்டு அருவி நின்று கொண்டிருந்தாள்.

...பைரவி தொடர்....வாள்

வீசு…...வாள்.







































 
Top