கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

எதிர்மறை வினையெச்சம் அத்தியாயம் 4

Bhairavi

Member
எதிர்மறை வினையெச்சம்

அத்தியாயம் 4

ஆன்ட்டி ஹீரோ தோன்றிய வரலாற்றைக் கொஞ்சம் பார்க்கலாம்.

ஆரம்பகால ஆன்டிஹீரோ ஹோமரின் தெர்சைட்ஸ் என்ற கிளாசிக்கல் கிரேக்க நாடகம் , ரோமானிய நையாண்டி மற்றும் மறுமலர்ச்சி இலக்கியம் டான் குயிக்சோட் மற்றும் பிகாரெஸ்க் ரோக் போன்றவற்றிலும் இந்த கருத்து அடையாளம் காணப்பட்டுள்ளது .

ஆன்ட்டிஹீரோ என்ற சொல் முதன்முதலில் 1714 ஆம் ஆண்டிலேயே பயன்படுத்தப்பட்டது, 18 ஆம் நூற்றாண்டு, 199-200  போன்ற படைப்புகளில் வெளிவந்து, ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட பைரோனிக் ஹீரோக்களையும் உள்ளடக்கியதாக பரவலாகப் பயன்படுத்தப்பட்டது . (கவிஞர் பைரன் பிரபு- Lord Byron).

19 ஆம் நூற்றாண்டில் லிட்டரரி ரொமாண்டிஸம், கோதிக் டபுள் போன்ற
வடிவங்களை பிரபலப்படுத்த உதவியது என்றும் சொல்லலாம். ஆன்ட்டிஹீரோ இறுதியில் சமூக விமர்சகர்களின் ஒரு அங்கீகரிக்கப்பட்ட வடிவமாக மாறியது.

பாரம்பரிய ஹீரோ என்ற இலக்கணத்திலிருந்து ஒரு மாற்றமாக ஆன்ட்டிஹீரோ வெளிப்பட்ட இந்த செயல்முறையை நார்த்ரோப் ஃப்ரை கற்பனையான "புவியீர்ப்பு மையம்" என்று அழைத்தார்.

ஜமீன்தார் முறையில் இருந்து நகர்ப்புற ஜனநாயகத்திற்கு மக்கள் மாறியதைப் போன்றே இந்த நெறிமுறையும் ஏற்றுக்கொள்ளப் பட்டு புதிய இலக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்தது.

காவியத்திலிருந்து முரண்பாடான கதைகளுக்கு மாறியது.

இலக்கியத்தில் குறிப்பாகக் கதைகளில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஆன்ட்டிஹீரோ மற்றும் ஹீரோயினை மையப்படுத்திய கதைகள் பெருமளவு வரவேற்பைப் பெற்று விட்டதால், நமது தமிழ் நாவல்களிலும் இந்தப் பித்து இப்போது தலைக்கேறிவிட்டது.

ஒரு கதாபாத்திரம், கதாநாயகியையோ மற்ற பெண்களையோ கொடூரமான முறைகளில் துன்புறுத்தும் விதமாகப் படைக்கப்படும் போது அதையும் இன்றைய ரசிகர்கள் கைதட்டி மகிழ்ந்து ரசிக்கிறார்கள்.

இம்முறையில் வடிவமைக்கப்படும் பாத்திரம் வில்லன் தானே ஒழிய ஆன்ட்டிஹீரோ நிச்சயமாக இல்லை.

இன்னும் அலசுவோம்.

பைரவி



அத்தியாயம் 4


பிரசன்னாவும் விக்னேஷும் அவளது கெஸ்ட் ஹவுசை ஆக்கி வைத்திருந்த நிலைமையைக் கண்டு ரத்தக் கண்ணீர் வடித்தது மென்னிலாவின் இதயம். 'சரியான வானரங்களா இருக்கும் போல இருக்கே' என்று எரிச்சலானவள், பிரசன்னாவை ஒரே அடியில் வீழ்த்தி விட்டு விக்னேஷை விரட்டிக் கொண்டிருந்தாள்.

வெளியிலிருந்து வந்த பிரபாவிற்கும் அருவிக்கும், மென்னிலா ஏதோ தன் நண்பர்களோடு ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருப்பது போலத் தோன்றியது.

"இங்கு என்ன நடக்குது நிலா? யார் இவங்கல்லாம்?" என்று கேட்ட அமுல் பேபி பிரபாவின் குரலில் திகைத்துப்போய் திரும்பினாள் மென்னிலா.

'பார்ரா! இவளே ஒரு பெரிய ரவுடி ரங்கம்மானு நினைச்சா இவள மிரள வைக்கவும் ஒரு குட்டிசாத்தான் இருக்கு போலவே' என மனதுக்குள் அமுல் பேபியைக் கொஞ்சினான் விக்னேஷ்.

பிரபாவின் பின்னால் திருதிருவென விழித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள் அருவி. சுட்டெரிக்கும் பார்வையால் அருவியைத் துளைத்தவள் கண்களில் 'இவளை ஏன் இங்கே அழைத்து வந்தாய்?' என்ற கண்டிப்பு தெரிந்தது.

"எனக்கு வேற வழி தெரியலை. என்னால இவளை சமாளிக்க முடியல" என்பது போன்ற பரிதவிப்பு அருவியின் கண்களில்.

"நிலா.. நான் உன்கிட்ட கேட்டுகிட்டு இருந்தா நீ என்ன அருவிய பார்த்துகிட்டு இருக்கே? இங்க என்ன நடக்குது? என்னை விட்டுட்டு இந்த அங்கிள்ஸ் கூட கண்ணாமூச்சி விளையாடுறியா நீ? ஆமா யாரு இவங்க? உன் ப்ரண்ட்ஸா?" எனக் கேட்டது, இல்லை இல்லை கேள்விமழையாகப் பொழிந்தது அமுல் பேபி.

"இல்லையே பப்புக்குட்டி.. நாங்க கண்ணாமூச்சி விளையாடலையே! ஓடிப் பிடிச்சு விளையாடுறோம்" என்று குழந்தைக்குத் தக்கவாறு பதில் சொன்னவாறு அவளை உள்ளே அழைத்து வந்தாள் மென்னிலா.

நிலாவிடம் அடிவாங்கி, குப்புறக் கிடந்த பிரசன்னா, அருவியைப் பார்த்ததும் அசடு வழிந்து கொண்டு எழுந்து அமர்ந்தான். அவர்கள் இருவரையும் மென்னிலா பார்த்த பார்வையிலேயே குழந்தை முன்னால் எந்தப் பிரச்சனையும் வேண்டாம் என்ற உத்தரவு இருந்தது.

'யப்பா ராட்சசி கண்ணாலேயே நம்மளைக் கொலை பண்ணிடுவா போலயே' என்று வாய்க்குள்ளேயே புலம்பிய பிரசன்னா "ஹலோ பேபி" என்றவாறு பிரபாவிடம் கை நீட்டினான்.

அவனை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல் கடந்துசென்ற பிரபா, "நிலா வாசனை சூப்பரா இருக்கு, எனக்கும் பசிக்குது. வா சாப்பிடலாம்" என்று நேராகப் போய் டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டாள்.

வேறு வழியின்றி அவளைத் தொடர்ந்து சென்ற மென்னிலாவும் அருவியும் டைனிங் டேபிளில் அமர, தாங்கள் சமைத்து வைத்த நளபாகத்தை மூவருக்கும் பரிமாறிவிட்டு தாங்களும் உடன் அமர்ந்து உண்ண ஆரம்பித்திருந்தார்கள் விக்னேஷும் பிரசன்னாவும்.

"இவனை நாம கடத்திக் கொண்டுவந்து வச்சா அவன் கூட்டாளியையும் சேர்த்துக்கிட்டு நமக்கு விருந்தோம்பல் செஞ்சுகிட்டு இருக்கான்" என்று வியந்து போய் பிரசன்னாவை ஒரு ஹீரோ போல பாவித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அருவி.

அவளது பார்வையை உணர்ந்தாற்போல அவனும் கொஞ்சம் கெத்து காட்ட முயல.. மென்னிலாவின் வெட்டும் பார்வையில் கப்சிப்பென அடங்கியவனைக் கண்டு சிரிப்பு பீறிட்டது விக்னேஷிற்கு.

பிரபா வயிறு நிரம்ப உண்டதும் அவள் கையில் ஒரு பெரிய ஐஸ்கிரீம் டப்பாவை திணித்த மென்னிலா, அருவியிடம் அவளைப் பார்த்துக் கொள் என்று கண் காட்டிவிட்டு பிரசன்னாவையும் விக்னேஷையும் தன் கையாலேயே முன்னறைக்கு செல்லுமாறு சைகை செய்துவிட்டு முன்னால் நடந்தாள்.

'பெரிய மகாராணி.. இவ கை அசைச்சதும் உத்தரவு மகாராணினு இவ பின்னாடியே போகணுமா நான்! நெவர்!' என்று சட்டமாக நின்று கொண்டிருந்த விக்னேஷை நகர்த்த இயலாமல் வலுக்கட்டாயமாக நகர்த்திக் கொண்டு மென்னிலாவின் முன்னால் சென்று அமர்ந்தான் பிரசன்னா.

"சொல்லு. என் கம்பெனி முன்னாடி எதுக்காக அவ்வளவு நேரம் நின்னுகிட்டு இருந்த? அந்த மாறன் லூசு உங்களை எல்லாம் அனுப்பி வச்சானா? அவன் காதலை நான் ஏத்துக்கலைன்னு விதவிதமா டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சான். இப்ப ஆள் வச்சு வேவு பாக்கற அளவுக்கு போய்ட்டானா அந்த ரஸ்கல்! அதுவே ஒரு தண்டம், அதுக்கு இப்படி இரண்டு தடிமாடு சொந்தமா?" எனக் கேட்டாள் நிலா.

"ஐயோ மேடம்! இல்லை நீங்க தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க மேடம். மாறன் யாருன்னே எங்களுக்குத் தெரியாது. அவர் யாரு? உங்க லவ்வரா?" எனக் கேட்ட விக்னேஷ், மென்னிலாவின் தீப்பொறி பறக்கும் விழிகள் கண்டு அப்படியே தோசையைத் திருப்பிப் போட்டான்..

"சரி.. அது உங்க பெர்சனல். அத விடுங்க மேடம். இவன் பிரசன்னா. இவன் உங்க செகரட்ரி இல்ல அருவி.. அவங்களை ரொம்ப டீப்பா லவ் பண்றான். அது தான் அருவியைப் பார்க்கிறதுக்காக உங்க கம்பெனி முன்னாடி நின்னுகிட்டு இருந்தான். நீங்க ஏதோ தப்பா நினைச்சு உங்க குண்டாஸை ஏவி இவனை இங்கே தூக்கிட்டு வந்துட்டீங்க. எங்க மூஞ்சப் பார்த்தா உங்களுக்கு பேட் பாய்ஸ் மாதிரியா தெரியுது" என்று முகத்தை அப்பாவியாய் வைத்துக் கொண்டு வாய்க்கு வந்தபடி கதை சொல்லிக் கொண்டிருந்தான் விக்னேஷ்.

அவனை தீர்க்கமாக பார்த்தவள் பிரசன்னாவிடம் திரும்பி, "நீங்க சுத்துற பூவெல்லாம் என் காதுல வாங்கிக்கிட்டு இருப்பேன்னு நினைச்சிங்களா? அவ்வளவு மக்கா இருந்திருந்தா இப்படி ஒரு உயரத்தில் என்னால இருக்க முடியும்னு நினைக்கிறீங்களா?" எனக் கேட்டவள், "உன்னோட பேரு பிரசன்னா. நீ அந்த VV ஹார்ட்வேர் கம்பெனியில ஒன் ஆஃப் த பார்ட்னர் சரியா?. நீ ஒரு ஓட்டை மொபைலை கையில வச்சிருந்தா உன்னைப் பத்தின டீடெயில்ஸ் எல்லாம் என்னால எடுக்க முடியாது அப்டின்னு நினைச்சியா?
உங்க முகம் இருக்கே.. இந்த ஸோ கால்ட் பாவப்பட்ட அப்பாவி முகம் இது ஒன்னு போதும்! உன்னோட மெயில் ஐடி அதுல இருக்கற பிசினஸ் காண்ட்ராக்ட் டீட்டெய்ல்ஸ் மொதக்கொண்டு ஏ டு இஸட் ஹாக் செஞ்சு எடுத்திடுவேன்" என மென்னிலா சொல்லி ஒரு நொடி நிறுத்தவும் விக்னேஷூக்கே கொஞ்சம் தூக்கி வாரி போட்டது.

"பயப்படாதே ஹாக் செய்யற அளவுக்கெல்லாம் நீ ஒன்னும் ஒர்த் இல்ல. உன்னோட ஃபேஸ்புக் பக்கம் மட்டும் தான் பார்த்தேன். அந்த கவர்மெண்ட் பிராஜக்ட் ஒண்ணுக்காக நிறையபேர் நாக்கைத் தொங்கப் போட்டுக்கிட்டு நாயா அலையுறீங்களே.. அதை உங்களுக்குக் குடுக்கணும்னா என்னைக் கடத்தனும்னு எதாவது திட்டம் போட்டுக் குடுத்தானா அந்த கிறுக்கன்?" என்று சரியாக பாய்ண்டைப் பிடித்தாள் மென்னிலா.

'யமகாதகி' என்று ஒரே நேரத்தில் மனதுக்குளாக புலம்பிக் கொண்டார்கள் விக்னேஷும் பிரசன்னாவும்.

அதே நேரம் தன்னுடைய மொத்த ஐஸ்கிரீமின் டப்பாவையும் காலி பண்ணிவிட்டு அங்குவந்த பிரபா "நிலா எனக்கு இன்னொரு ஐஸ்க்ரீம் வேணும்" என்று அடம்பிடிக்கத் தொடங்கவும், நிலாவின் கவனம் அவள் புறம் திரும்பிய சில நொடிகளில் பிரசன்னாவை இழுத்துக் கொண்டு அங்கிருந்து ஜூட் விட்டான் விக்னேஷ்.

விக்னேஷூம் பிரசன்னாவும் கிளம்பிய சிறிது நேரத்தில் பரிவாரங்களோடு வந்து சேர்ந்தான் மைக்கேல் மதனகாமராஜன்.

"யோவ் உனக்கெல்லாம் கொஞ்சமாச்சும் அறிவிருக்கா? எவனாவது எதாவது ஓட்டை ஃபோனைக் கொண்டுவந்து குடுத்து மேடம் சொன்னாங்கன்னு என்ன சொன்னாலும் செய்வயா நீ? ஆளு வளர்ந்த அளவுக்கு அறிவு வளரலையே! உன்னைப் போய் கேர் டேக்கரா வச்சிருக்கேன்ல அதான். அருவி! இந்த ஆள் சீட்டை கிழிச்சுட்டு நல்ல க்ளவரான பொண்ணாப் பார்த்து இங்கே வேலைக்குப் போடு" என்றவளைக் கண்டு குய்யோமுய்யோவென கத்தி மண்டி போட்டு, முட்டி போட்டு அங்கப்பரதட்சணம் செய்து இல்லாத கோமாளித்தனங்கள் மொத்தமாய் குத்தகை எடுத்து மென்னிலாவையே நகைக்க வைத்துத் தன் வேலையைக் காப்பாற்றிக் கொண்டான் மைக்கேல்மதனகாமராஜன்.


திட்டு வாங்கி முடித்ததும்,
"மேடம்! ஸாரி.. டிஸ்டர்ப் பண்றதுக்கு.. ஒரே ஒரு டவுட்.. அன்னிக்கு ஒரு தியேட்டர் ஓனரை கடத்.. ஸாரி.. கொண்டு வந்து வச்சிருந்தோமே.. அது மாதிரியா இவங்க.. நமக்கு.. ஸாரி.. உங்களுக்கு எதுவும் இவங்க பணம் தர வேண்டி இருக்குதோ? நான் தான் சொதப்பிட்டேனோ?"என்று மைக்கேல் கேட்க,

கண்களில் ஒரு மைக்ரோசெகன்ட்டுக்கும் குறைவாகக் கோபத்தைக் காட்டிய மென்னிலா, "முதல்ல நாலு சென்டன்ஸ் பேசுறதுக்குள்ள நாலு சாரி சொல்றதைக் குறைக்கப் பாருங்க.. அப்புறம் கேள்வி கேளுங்க.. பதில் சொல்றேன்" என்று கூறியவள், அழகிலும் அழகாக ஒரு வசீகரப் புன்னகையை வீசிச் சென்றாள்.

'மேடம் இப்ப நம்மை பாராட்டினாங்களா, திட்டினாங்களா?' என்று புரியாமல் விழித்த மைக்கேல், 'அன்னைக்கு அந்த ஆளைத் தூக்கினப்ப நான் ஸ்மார்ட்டாத் தான் நடந்துக்கிட்டேன்.. நான் ஒண்ணும் காமெடி பீஸ் இல்லை.. டெரர் பீஸ் தான்' என்று தனக்குத் தானே கூறிக்கொண்டான்.

"சரி மைக்கேல்! பப்புமாவ ட்ராப் செஞ்சிடுங்க எனக்கு வேலை இருக்கு" என நகர்ந்த நிலாவை முகம் சுருக்கி அழுகையோடு பார்த்தாள் பிரபா.



அவளது முகத்தைக் காண்பதைத் தவிர்த்து விரைந்து வெளியேறினாள் நிலா.

பிரபாவையும் மென்னிலாவையும் மாறிமாறிப் பார்த்தவாறு எதுவும் செய்ய இயலாமல் மென்னிலாவின் பின்னால் விரைந்தாள் அருவி.

மென்னிலா காரை லாவகமாக செலுத்திக் கொண்டிருக்க, அவளையே வெகு நேரம் பார்த்த அருவி, இறுதியில், "நிலா நீ கொஞ்சம் சாஃப்ட்டா நடந்துக்கலாம் பேபிம்மாகிட்ட" என்றாள்.

"ஸ்வீட் ஹார்ட்.. அவளுக்கு வயிறு முட்ட சாப்பிட வச்சு அவளுக்கு பிடிச்ச ஐஸ்க்ரீம் வாங்கி குடுத்தாச்சு. இதுக்கு மேல எப்படி மென்மையா நடந்துக்கனும்?"

'ஏதோ நீயே சமைச்ச மாதிரி சொல்லாத நிலா' என சொல்லத்தான் நினைத்தாள். ஆனால் வார்த்தைகள் தான் தொண்டையைத் தாண்டுவேனா என தகராறு செய்தன.

"என்ன நான் சமைச்சு போட்டமாதிரி பீல் செய்யறேன்னு நினைக்கிறயா? இல்ல உன் ஆளு சமைச்சதுனு பெருமைபட்டுக்கிறயா?" என அவளைப் பார்த்து குறும்போடு கண்ணடித்தாள் நிலா.

"நி...நி..நிலா அப்டில்லாம் எதுவும் இல்ல. அவங்கல்லாம் யாருன்னே எனக்குத் தெ..த்..தெ.த்..தெரியாது."

"ரிலாக்ஸ் பேபி. உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா? ஏன் பதறுற? உனக்கு அவங்க யாரு என்னன்னெல்லாம் தெரியாது தான். ஆனாலும் அந்த சோளக்கதிருக்குச் சொக்கா போட்டது மாதிரி இருந்தவனைக் கொஞ்சமா உனக்குப் பிடிச்சிருக்கு தானே!"

"நிலா நான் சும்மா பார்த்தேன்.."

"ஓ சைட்டா? பார்த்து பத்திரமா இருந்துக்க அருவி. இல்ல எப்ப சங்கமம்னு வந்து நிப்பானுக." என எச்சரித்தவள், அதன் பின் தன் வேலையில் மூழ்கிப் போனாள்.

நிலாவிடம் திட்டு வாங்கியதில் அருவி தான் கேட்க வந்தது ஒன்றை மறந்துவிட்டாள். தன் வீட்டிற்குப் போனதும் தான் அவளுக்கு அது நினைவுக்கு வந்தது. 'ஏதோ தியேட்டர் ஓனர், கடத்தல்.. அப்படின்னு மைக்கேல் சொன்னாரே.. அது நமக்கே தெரியாதே.. நமக்குத் தெரியாமலேயே நிலா எதுவும் பெருசா பண்ணிக்கிட்டு இருக்காளா.. நாம தான் கவனிக்காம விடுறோமோ என்று ஒரு சஞ்சலம் புதிதாக வந்து அருவியின் மனதில் அமர்ந்தது.

"ஏன்டா பிரசன்னா! முகம் பயங்கரப் பிரகாசமா இருக்கேடா! அந்த லேடி அர்னால்ட்கிட்ட குத்து வாங்கினதுல அவ்வளவு மகிழ்ச்சியா உனக்கு" என அவனை வம்பிழுத்தான் விக்னேஷ்.

"அதை ஏன் நியாபகப்படுத்துற? மனுசனைக் கொஞ்ச நேரம் நிம்மதியா கனாக் காண விட மாட்டியே! வில்லன்டா நீ!"

"போதும் நீ கனவு கண்டதெல்லாம். அவளைக் கடத்திக்கிட்டு வரச் சொன்னா கடத்தப்பட்டு முழிச்சுட்டு இருந்திருக்கே.. இதுல கனவு வேற உனக்கு. இப்ப அந்த மோதிர வித்தைக்காரனுக்கு என்னடா பதில் சொல்றது?"

"டேய் விக்கி நான் ஒன்னு சொன்னா கேக்குறியா?"

"சொல்லித்தொலை.."

"அந்த பொண்ணு ரேஞ்ச்க்கு இவன்லாம் செட் ஆக மாட்டான் டா. முட்டி மோதி அவளை கட்டிக்கிட்டா கூட இவன் அவளுக்கு கூஜா தூக்க மட்டும் தான் ஆவான். அவ ரேஞ்ச்க்கு உன்னை மாதிரி ஒருத்தன் தான்டா சரியா இருக்கும்"

"அவ பி.ஏ.வை நீ கரெக்ட் செய்யறதுக்காக எதாவது சொல்லி என்னை அந்த ராட்சசி கிட்டக் கோர்த்து விட ப்ளான் போடுறியா? மவனே கொன்னுடுவேன். ப்ராஜக்ட்டைப் பிடிக்க என்ன செய்யலாம்னு வேற எதாவது யோசிடா" என பிரசன்னாவிடம் எரிந்து விழுந்தாலும் மனதோரத்தில் மெல்லிதாய் ஒரு மழைச்சாரல் அடிக்காமல் இல்லை விக்னேஷிற்கு.

நிலா அவன் கை சேருமா
அல்லது
ஆகாயத்தோடே நின்றுவிடுமா?


நிலாவிற்கும் விக்னேஷ் யார் என்பது தான் மனதைக் குடையும் கேள்வியாய் இருந்தது. யாரவன்? எப்படி அவளது கோட்டைக்குள் புகுந்து அரண்களைச் சிதைத்து சடுகுடு ஆடி உண்டு களித்து.. அதற்கு மேல் நினைக்கவே முடியவில்லை அவளால்.

அல்லது அவள் அவனது அந்த உற்சாகமும் தன்னம்பிக்கையும் கர்வமும் நிரம்பிய முகத்தை எதிர்கொள்ள விரும்பவில்லை.

எதற்காக வந்தான்? எதனால் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் சென்றான்? என்ன வேண்டும் அவனுக்கு? இந்தக் கேள்விகள் அவளது நித்திரையை பஸ்பமாக்கின.

தனக்கும் தன் சுற்றத்திற்குமான பாதுகாப்பைப் பலமடங்கு அதிகரித்தவள், பிரசன்னாவின் நடவடிக்கைகளை கவனிக்கவும் ஏற்பாடுகள் செய்த பின்பே நிம்மதியாக நித்ராதேவனின் கரங்களில் தஞ்சமடைந்தாள்.

தொடர்வாள் பைரவி.



 

Sspriya

Well-known member
பிரபா குட்டி யாருன்னு இன்னும் சொல்லலியே 🙄...
 
Top