கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

எதிர்மறை வினையெச்சம் அத்தியாயம் 5

Bhairavi

Member
எதிர்மறை வினையெச்சம்

அத்தியாயம் 5

ஆன்ட்டி ஹீரோ பற்றிய தகவல்கள்

ஹக்கிள்பெர்ரி ஃபின் (1884) 'அமெரிக்க நர்சரியின் முதல் ஆன்ட்டி ஹீரோ' என்று அழைக்கப்படுகிறார்.

20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஃபிரான்ஸ் காஃப்காவின் தி மெட்டாமார்போசிஸ், ஜீன் -பால் சார்த்தரின் லா நௌஸி (1938) போன்ற படைப்புகளில் ஆன்டிஹீரோ பாத்திரம் முக்கியத்துவம் பெற்றது. 'L'Étranger (1942) ('தி ஸ்ட்ரேஞ்சர்' என்பதன் ஃபிரஞ்சு) போன்ற படைப்புகளில் உள்ள கதாநாயகன் ஒரு முடிவெடுக்க முடியாத குழப்பவாதியாக இருக்கிறார். அவர் தனது வாழ்க்கையில் வேறுபட்ட சிந்தனை, கோபம், மற்றும் அந்நியப்படுதல் ஆகியவற்றால் வர்ணிக்கப் படுகிறார்.

1950களில் மற்றும் 1960களின் நடுப்பகுதி வரை அமெரிக்க இலக்கியத்தில் ஆன்ட்டி ஹீரோ ஒரு அந்நியமான நபராக நுழைந்தார். 1950கள் மற்றும் 1960களின் அமெரிக்க ஆன்ட்டி ஹீரோ பொதுவாக அவரது பிரெஞ்ச் சக வீரரை விட அதிக செயல்திறன் கொண்டவர். 1950களின் 'கோபமான இளைஞர்களின்' படைப்புகளில் ஆன்டிஹீரோவின் பிரிட்டிஷ் பதிப்பு வெளிப்பட்டது .

இது போன்றே உலகின் பல நாடுகளிலும் பிரபலமான ஆன்ட்டி ஹீரோ கதாபாத்திரம், கோபமானவராகவும் வேறுபட்ட குணங்களைக் கொண்டவராகவும் தான் சித்தரிக்கப் பட்டார்.

ஆன்ட்டி ஹீரோ கொஞ்சம் எதிர்மறையான குணங்களைக் கொண்ட ஹீரோ தானே தவிர வில்லன் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டாக சமீபத்தில் வந்த நெற்றிக்கண் படத்தில் பெண்களைக் கடத்திச் துன்புறுத்தும் டாக்டரின் கதாபாத்திரம், வில்லன் தானே ஒழிய அவர் ஆன்ட்டி ஹீரோ அல்ல.

இன்னும் அலசுவோம்.

-பைரவி


அத்தியாயம் 5



தான் அன்று அலுவலக வாசல் குப்பைத் தொட்டியில் வீசிய அதே டெடி பியர் பொம்மை. அதன் கழுத்தில் 'Marry me?' என்று எழுதிய ஒரு அட்டை. அதை நீட்டிப் பிடித்துக் கொண்டு தன் முன் மண்டியிட்டு பிரசன்னா நிற்பதாக அருவி இனியதொரு கனவினைக் கண்டு கொண்டிருந்த அந்த அதிகாலையில் அவளது ஃபோன் அழைத்தது.

'நிலா டாடி' என்றிருந்த அழைப்பை தூக்கக்கலக்கத்தில் ஏற்ற அருவி, "ஹலோ!" என்க,

"அருவி நல்லா இருக்கியா மா?" என்றவர் அடுத்து அவள் பேச சந்தர்ப்பம் கொடுக்காமல்,

"நீ இருக்கிற தைரியத்துல தானேம்மா என் பொண்ணை அங்கே விட்டுட்டு நாங்க இங்க நிம்மதியா இருக்கோம்? நீயும் பெரிய பெரிய விஷயங்களை என்கிட்ட இருந்து மறைக்கிறியே.. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்மா!" என்றார் மென்னிலாவின் அப்பா கனகசபாபதி.

"ஐயோ அங்கிள்! நான் உங்ககிட்ட எதுவும் மறைக்கலையே? ஏன் அங்கிள் பெரிய வார்த்தை எல்லாம் பேசறீங்க?" என்று தூக்கம் விலகாத குரலில் அருவி கூற,

"சாரிம்மா! தூக்கத்துல டிஸ்டர்ப் பண்ணிட்டேன் போல.. நீயே சின்னப் பொண்ணு.. நிலாவோட அதிரடியை எங்களாலேயே சமாளிக்க முடியாதப்ப நீ என்ன பண்ணுவ.. பாவம்" என்றார் நிலாவின் அப்பா.

"என்ன மறைக்கிறேன்.. முடிஞ்ச அளவு எல்லாம் சொல்லிக்கிட்டு தான் இருக்கேன் அங்கிள்" என்று அருவி பாவம் போலக் கேட்டாள்.

"என் பொண்ணு என்னை முதல் முதல்ல அப்பான்னு கூப்பிடும்போது அவ்வளவு சந்தோஷப்பட்டேன்.. பிளஸ் டூ ல மாவட்டத்தில் முதல் மார்க்னு சொன்னப்ப பெருமையா இருந்துச்சு.. டாப் காலேஜ், டாப் மார்க்.. படிக்கும்போதே கேம்பஸ்ல வேலைன்னு அவ முன்னேறும் போதெல்லாம் எனக்கு பெருமை அதிகமாகிக்கிட்டே போச்சு.. வேலைக்கு சேர்ந்த இரண்டே வருஷத்துல ஸ்டார்ட்அப் கம்பெனி ஆரம்பிக்கப் போறேன்பா.. இதுவரைக்கும் நான் சேத்து வச்ச காசே போதும்னு அவ சொன்னப்ப, நம்மகிட்ட இல்லாத காசா.. உனக்கு ஆசையா இருந்தா எது வேணா பண்ணும்மா.. வேலையை விடுறதுக்காக யோசிக்காதே அப்படின்னு என்கரேஜ் பண்ணேன்.. ஆனால் ஸ்டார்ட்அப் கம்பெனியா இருந்தது இரண்டே வருஷத்துல ரொம்ப பெருசா வளர்ந்தப்ப மனசுல லேசா சஞ்சலம் வந்துச்சு.. அடுத்து அவ போற பாதைகள் எதுவும் எனக்கும் ஆன்ட்டிக்கும் சரியாவே படலை.. அதை எடுத்துச் சொன்னப்ப எங்களோட சண்டை போட்டு பேசவே மாட்டேன்னு சொல்லிட்டுப் போயிட்டா.. இருந்தாலும் பெத்த மனசு கேட்கல.. உன் மூலமாவும் ஃபிரண்ட்ஸ் மூலமாகவும் அவளைப் பத்தி விசாரிச்சுட்டே தான் இருக்கோம்.. இப்பப் பாரு, ஒரு அரசியல்வாதி வீட்ல இருந்து பொண்ணு கேட்டு வந்து நிக்கிறாங்க.. பையன் ஃபோட்டோவை காமிக்கிறாங்க, பாத்தா உலகமகா ரவுடி மாதிரி இருக்கான்.. நமக்குன்னு ஒரு தொழிலோ, சின்ன வேலையோ இருந்து, ஒரு குடும்பம்னும் இருந்தாத் தான் சந்தோஷம்னு நினைக்கிற மிடில் க்ளாஸ் நாங்க.. அதை
விட்டுட்டு கல்யாணம் ஆகாத சின்னப் பொண்ணு ஈசிஆர் ரோட்ல பீச் ஹவுஸ் வாங்குறதும், அதைத் திடீர்னு இப்ப வித்துட்டு வேற வாங்கப் போறான்னு சொல்றதும் நல்லாவா இருக்கு.. பயமா இருக்கும்மா.. ஏதாவது நெகட்டிவா நடந்திடுமோன்னு தோணிட்டே இருக்கு" என்று தன் மனதில் இருப்பதையெல்லாம் சிறுபெண் என்றும் பாராமல் அருவியிடம் கொட்டினார் கனகசபாபதி.

தூக்கம் மொத்தமாகக் கலைந்து போனவளாக எழுந்து அமர்ந்தாள் அருவி. "என்ன அங்கிள் சொல்றீங்க? பீச் கெஸ்ட் ஹவுஸை விக்கப் போறாளா? எவ்வளவு பார்த்து பார்த்து வாங்கினா அதை? எனக்கே இந்த விஷயம் தெரியாதே.. உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது.." என்று அருவி கேட்க,

"அதெல்லாம் அப்புறம் சொல்றேன்.. இப்படி தடா புடான்னு நினைச்ச உடனே வாங்குறதும் சரியில்ல.. விக்கிறதும் சரியில்ல.. அவகிட்ட கொஞ்சம் சொல்லி வைம்மா.. நீ பக்கத்திலேயே இருக்குற.. உனக்கே தெரியாமப் பண்றான்னா என்னத்த சொல்ல.. நீ ஃப்ரெஷ் ஆகி காபி ஏதாவது சாப்பிடும்மா.. நான் வேற உன்னை டிஸ்டர்ப் பண்ணிட்டே இருக்கேன்" என்றபடி அழைப்பைத் துண்டித்தார் நிலாவின் அப்பா.

அருவிக்கு தூக்கம் சுத்தமாகப் பறந்து போனது. பிரசன்னாவும் அவளது நினைவலைகளில் இருந்து தற்காலிகமாக விடுப்பு வாங்கிக்கொண்டு சென்றுவிட்டான். அவளைப் பொறுத்தவரை நிலா ஒரு புரியாத புதிர். இருந்தாலும் அவள் என்ன சொன்னாலும் அருவி கேட்பாள். நிலா சொல்வதே இவளுக்கு வேதவாக்கு, அவள் செய்வது தான் சரி.

அப்படி ஒரு பிரியம் நிலாவின் மேல்.. எந்த விஷயத்தையும் அருவியுடன் கலந்தாலோசிப்பது இல்லை என்றாலும் அருவிக்குத் தெரியுமாறு தான் நிலா செய்வாள். ஆனால் ஈசிஆரில் இருக்கும் வீட்டை விற்கப் போவதைப் பற்றி எதுவுமே தெரியாது. ஒருவேளை ஏதும் தப்பான தகவல் கிடைத்து கனகசபாபதி தவறாகச் சொல்கிறாரோ என்றும் நினைத்தாள் அருவி.

அன்றைய நாள் முழுவதும் நிலா ஏதாவது சொல்கிறாளா என்று அவள் முகத்தை முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். "அவ்வளவு அழகாவா இருக்கேன்?" என்றாள் நிலா திடீரென்று.

அருவி என்ன சொல்வதென்று தெரியாமல் பேந்தப் பேந்த விழிக்க, "இல்ல.. அடிக்கடி என் முகத்தையே திரும்பித் திரும்பிப் பார்க்கிறியே.. எதுவும் சொல்லனுமா?" என்று கேட்டாள் நிலா.

"இல்ல.. அது வந்து.. ஒன்னும் இல்ல.. நீ ஏதோ சொல்ல வர்ற மா..திரி தெரிஞ்சுச்சு" என்று அசடு வழிந்தாள் அருவி.

"இப்படியே அசடு வழிஞ்சேன்னா உன்னை ஈசியா ஏமாத்திடுவாங்க.. புரிஞ்சுதா? நான் ஒன்னும் சொல்ல வரல உன்கிட்ட.. ஒழுங்கா வேலையப் பாரு"

அருவியின் நினைவு மழை நேரத்து மின்னல் போல் வந்து வந்து போனது பிரசன்னாவுக்கு. அவனுடைய ஃபோன் இன்னமும் நிலாவின் வசமே இருந்ததால் புதிய ஃபோன் வாங்கி அதில் தேவையான செயலிகளை தரவிறக்கம் செய்து விட்டு சோம்பலாக ஃபேஸ்புக்கை புரட்டிக் கொண்டிருந்தான். அப்போது அவன் கண்களில் அந்தப் புகைப்படம் தென்பட்டது. இரவு வெகு நேரமாக வேலை பார்த்துவிட்டு தூங்கிக்கொண்டிருந்த விக்னேஷை உலுக்கி எழுப்பினான்.

"டேய் எந்திரி டா! இந்த ஃபோட்டோவைப் பாரு.. இது தானே நாம நேத்து போன கெஸ்ட் ஹவுஸ்? அது அந்த மென்னிலாவோட சொந்த ப்ராப்பர்ட்டி தானே? அது விற்பனைக்குன்னு போட்டுருக்குடா!"

"யாரு எதை வித்தா என்ன? வாங்கினா என்ன? படுடா பேசாம!" என்று விக்னேஷ் புரண்டு படுக்க,

"எனக்கு லஞ்ச் சாப்பிடவேண்டிய டயம் வந்துடுச்சு.. இப்ப என்ன படுக்கிறது.. நேத்து நாம போயிட்டு வந்த வீடு அதுக்குள்ள விற்பனைக்குன்னு விளம்பரம் வருது.. என்ன ஏதுன்னு விசாரிக்காம இப்படி படுத்திருக்கே? அருவியோட நம்பர் இருந்தா கேக்கலாமே…" என்று பிரசன்னா பரபரக்க,

"அட! இதான் மேட்டரா.. அருவிப் பொண்ணோட ஃபோன் நம்பர் வாங்குறதுக்குத் தான் இவ்வளவு ஆர்வத்தைக் காட்டுறியா நீ? என் மொபைல்ல 'மென்னிலா செக்ரிடரி'னு சேவ் பண்ணி இருக்கும்.. எடுத்துக்கோ போ!" என்றபடி தன் உறக்கத்தை விட்ட இடத்தில் இருந்துதொடர முயன்றான் விக்னேஷ்.

"டேய்! அவ்வளவு நல்லவனா டா நீ? காதலுக்கு உதவி எல்லாம் பண்ற..! எப்ப இருந்து இப்படி மாறினே? ஒருவேளை உனக்கும் ஏதாச்சும் பத்திக்கிச்சா" என்று பிரசன்னா உணர்ச்சி குவியலாகப் பேச,

"இந்த விக்னேஷ் என்னைக்கும் முரட்டு சிங்கிள் தான்.. நிலாவோட ராஜ்யத்துக்குள்ள நுழையுறதுக்கு எனக்குத் தேவை ஒரு லூஸ் ஸ்பாட்! அந்தப் பொண்ணு அருவி உன்னை ஓரக்கண்ணால பாக்குறதையும், நீ அது மேல காதல் கணைகளைத் தொடுக்குறதையும் பார்த்தேன்.. சரி உங்க ரெண்டு பேருக்கும் பத்திக்கிட்டா எனக்கு வேலை சிம்பிளா முடியும்னு கணக்குப் போட்டேன்.. வாய்ப்பு கிடைச்சதும் அவ ஃபோனை எடுத்து என் நம்பருக்கு ஒரு மிஸ்ட் கால் குடுத்துக்கிட்டேன்.. அவ்வளவுதான்.. மாறனோட லவ் சக்சஸ் ஆகுறதுக்கான பயணத்துல ஆன் த வே ஒரு சின்ன பயல் காதலிச்சுட்டுப் போறான்னு நினைச்சேன்.. பேசிக்கலி ஐ அம் அ பிசினஸ்மேன் யூ நோ?" என்றான் விக்னேஷ்.

"உன் காரியத்துக்காகத் தான்னாலும் நண்பனுக்கும் சைடுல நல்லது நடக்கட்டும்னு நினைக்கிற பாத்தியா.. அங்க நிக்கிற டா நீ! இது போதும்.. உன் மேல என்ன வருத்தம்னாலும் நான் மன்னிச்சுடுவேன்" என்றபடி விக்னேஷின் ஃபோனிலிருந்த அருவியின் எண்ணைத் தன் மொபைலில் சேமித்துக் கொண்டான் பிரசன்னா.

அதன்பின், 'ஹாய்' 'நான் பிரசன்னா' 'இது என் புது நம்பர்' 'சாப்ட்டியா?' என்பதுபோல புலனத்தில் பேசத் தொடங்கி இருபுறமும் பத்துக்கும் மேற்பட்ட மெசேஜ்கள் பரிமாறப்பட்ட பின் Shall I call you என்று அருவியிடம் கேட்டு, பேசியும் விட்டான் பிரசன்னா.

மென்நிலாவுக்குத் தெரியாமல் ரகசியமாய் வெளியே வந்து அவனது அழைப்பை ஏற்றாள் அருவி.

எடுத்த எடுப்பிலேய, "எங்க நேத்து போனோமே பீச் ஹவுஸ்.. அது விற்பனைக்குன்னு நெட்ல பார்த்தேன்.. அதுக்குள்ள ஏன் ஸேல் பண்றாங்க?" என்று கேட்க,

'ஓ! அப்ப அங்கிள் சொன்னது உண்மைதானா!' என்று அருவி எண்ணினாலும், "இதுக்காகத்தான் போன் பண்ணினீங்களா இப்ப?" என்று கோபமாகக் கேட்டாள்‌.

'டேய் மடையா! முதல்தடவையா ஃபோன் பண்றியேடா.. பிசினஸ் டீலிங் மாதிரியா பேசி வைக்கிறது.. ரொமான்டிக்கா பேசமாட்டே?' என்று தன்னைத்தானே குட்டி கொண்டவன்,

"இல்ல.. அந்த வீடு விக்னேஷ்க்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு.. வேறு யாரும் பேசி முடிக்கிறதுக்கு முன்னாடி விலை விசாரி டா ன்னு சொன்னான்.. மத்தபடி நான் உங்ககிட்ட பேசுறதுக்காகத் தாங்க ஃபோன் பண்ணினேன்.." என்று சமாதானம் செய்ய,

"தெரியாது! என்கிட்ட எதுவும் நிலா சொல்லல! விஷயம் தெரிஞ்சா சொல்றேன்" என்று முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டு அலைபேசியை அணைத்தாள் அருவி.

அதேவேகத்தில் மென்னிலாவிடம் சென்று, "ஏன் நிலா? நான்தான் உனக்கு என் வாழ்க்கையில் முக்கியமான இடம் குடுத்து வச்சிருக்கேன் போல.. உன் பீச் ஹவுஸை விக்கப் போறியாமே.. அது மட்டும் இல்லாம ஏதோ தியேட்டர் ஓனர் கடத்தல்.. அப்படின்னு கூட நேத்து மைக்கேல் சொன்னாரு.. ஏன் இதெல்லாம் பண்றே.. என்கிட்ட ஏன் மறைக்கிற? என் மேல நம்பிக்கை இல்லையா?" என்று கோபத்துடன் ஆரம்பித்தவள் கண்கலங்க முடித்தாள்.

அருவியின் கண்ணீரில் மென்னிலாவின் உள்ளம் லேசாக நெகிழ்ந்தது. "அடச்சீ! கண்ணத் துடை..
உன் பிஞ்சு நெஞ்சு தாங்காதுன்னு தான் நானும் சில விஷயம் சொல்றதில்ல.. ஒரு தியேட்டர் ஓனர், அவரோட ஃபைனான்சியல் டிரான்சாக்சன்ஸை ஹாக் பண்ணி, அவர் இருக்கிற இடத்தையும் ட்ராக் பண்ணி கொடுத்தேன் ஒரு பார்ட்டிக்கு.. அந்த ஆள் ஒன்னும் ஒழுக்க சீலன் கிடையாது. ஊரெல்லாம் கடன் வாங்கி இருந்தான். தியேட்டரை வித்து பணம் குடுக்கிறேன்னு சொல்லிச் சொல்லியே அஞ்சு ஆறு கோடி வாங்கிருக்கான்.. பத்து கோடிக்குத் தன்னோட தியேட்டரை வித்துட்டு அப்புறம் நீட்டா ஃபேமிலியை வேற ஸ்டேட்ல செட்டில் பண்ணிட்டு கம்பி நீட்டிட்டு கிளம்பிட்டான்.. இங்கே அவனுக்குக் கடன் குடுத்தவங்க எல்லாம் முழிச்சுக்கிட்டு இருந்தாங்க.. அப்ப தான் அந்த அசைன்மென்ட் வந்துச்சு.. அவன் லொகேஷனைக் கண்டுபிடிச்சேன்.. அப்புறம் பேச்சு வாக்குல அந்த பார்ட்டி அந்த ஃப்ராடு பயலைக் கடத்தணும், அதுக்கு யாராவது தெரிஞ்ச ஆள் இருக்காங்களா அப்படின்னு கேட்டாங்க.. 10 லட்சம் ரேட் சொன்னாங்க.. சரி நானே பண்றேன்னு அந்த ஆபரேஷனை முடிச்சு விட்டேன்.. நாலஞ்சு தடிமாடுங்களை சோறு போட்டு வளர்க்கிறோமே.. அவனுங்களுக்கு வேலை வேண்டாம்.. அதுக்காகத்தான்.. காசுக்குக் காசும் ஆச்சு.. கடத்தலுக்கு டிரெயினிங் கொடுத்த மாதிரியும் ஆச்சு.. இதெல்லாம் எதுக்கு உன்கிட்ட சொல்லிக்கிட்டுன்னு விட்டுட்டேன்.. ஆமா உனக்கு எப்படித் தெரியும்.. வீடு விக்கப் போறது?"

"எவ்வளவு ஆசைப்பட்டு வாங்கினே.‌.. அதை ஏன் விக்கணும்?" கவனமாக 'எப்படித் தெரியும்' என்ற கேள்விக்கான விடையை தவிர்த்தாள் அருவி. மனதுக்குள், என் காதல் பூக்கத் துவங்கிய முக்கியமான இடம் அல்லவா அந்த வீடு.. அதை விற்காமல் இருக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது.

அதற்குள் வீட்டு விற்பனை தொடர்பாகப் பேசுவதற்கு யாரோ வந்திருப்பதாக வரவேற்பாளினி மென்னிலாவை அழைத்துச்சொல்ல, "கண்டவங்களுக்கு எல்லாம் அந்த வீடும் அதோட லே அவுட்டும் அத்துப்படி ஆயிடுச்சு.. இதுக்கு மேல நம்ம அன்டர்க்ரவுண்ட் வேலைகளுக்கு அதை வச்சுக்க முடியாது.. அதான் டிஸ்போஸ் பண்றேன்.. ஏதோ கண் கலங்கினியேன்னு இதெல்லாம் சொல்லி கிட்டு இருக்கேன்.. இனிமே இப்படி கேள்வி கேட்கிற வேலையெல்லாம் எங்கிட்ட வச்சுக்காத.. ஃப்ரண்ட்டுங்கிறது பர்சனல் லைஃப்க்கு மட்டும்தான்.. இது என்னோட தொழில் சம்பந்தப்பட்டது.. இதுல நீ கேள்வி கேக்குறது இதான் லாஸ்ட் டா இருக்கணும்" என்று அருவியின் மனதை இன்னும் கொஞ்சம் புண்படுத்தி விட்டே அவளை அனுப்பி வைத்தாள் மென்னிலா.

அதேநேரம் அங்கு மாறனின் தந்தை, எக்ஸ் மினிஸ்டரும் தற்போதைய எம்எல்ஏவுமான அய்யாசாமி மாறனை வறுத்தெடுத்துக்கொண்டிருந்தார். "நாமல்லாம் காடாறு மாசம் நாடாறு மாசம்னு சொல்லுவாங்களே.. அந்த மாதிரி தான்.. என் அரசியல் அனுபவத்துல எத்தனையோ தடவை ஜெயிலுக்கு போயிட்டு வந்திருக்கேன்.. இப்ப நாம ஆளும் கட்சியில் இருக்கோம்.. அடுத்த தடவையே எதிர்க்கட்சியா ஆக வேண்டியதிருக்கும். அப்ப நம்ம மேல கேஸ் போடுவான்.. உள்ளே தள்ளுவான்.. அப்ப குடும்பத்தைப் பார்க்கிறதுக்கு அடக்கமா அமைதியான பொண்ணு தான் வேணும்.. அதேசமயம் அவ கொஞ்சம் விவரமாவும் இருக்கணும்.. அதுக்கு நம்ம சாதியிலேயே பொண்ணு எடுத்தாத் தான் சரியா இருக்கும்.. உனக்குப் பொண்ணு குடுக்க நான் நீ ன்னு அரசியல் பின்னணி உள்ள குடும்பத்துல இருந்து நிறைய பேர் போட்டி போடறாங்க.. நீ என்ன ஏதோ கம்ப்யூட்டர் வேலை பாக்குற பொண்ணைப் போய் புடிச்சிருக்குன்னு சொல்ற.. எனக்குத் தெரியாம பொண்ணு கேட்கக் கூட ஆள் அனுப்பி இருக்கே?" என்று தாறுமாறாகத் திட்டிக் கொண்டு இருந்தார்.

"அப்பா! சாப்ட்வேர் வேலைல இருந்தா ஆளும் சாஃப்டா இருப்பான்னு நினைச்சிங்களா. அவளும் நம்மளை மாதிரி அதிரடி தான்.. நம்ம கிட்டயே டகால்டி காட்டினானே அந்த அன்பகம் தியேட்டர் காரன். அவனைக் கடத்தி வச்சு, அவன் வாங்கின கடன் தொகையிலையும் முக்கால்வாசி வசூல் பண்ணிக் குடுத்திருக்கா.. அவ மருமகளா வந்தா நம்ம பிசினஸ் எல்லாத்துக்கும் சரியா வரும்.. அதுவும் சாப்ட்வேர் கம்பெனிங்கிற போர்வையில நம்ம பிளாக் மணி எல்லாத்தையும் ஒயிட் மணி ஆக்கிக்கலாம்.. அவளை ஒரு தடவை பாருங்க.. அதுவும் போக, எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.. கட்டுனா அவளைத் தான் கட்டுவேன்" என்று மாறனும் விடாமல் வாதாடினான்.

"பார்த்தேன் பார்த்தேன்.. இந்த அளவுக்கு நீ போறேன்னா நான் விசாரிக்காமலா இருப்பேன்.. பாக்குறதுக்கு சாதாரணமா தானேடா இருக்கு பொண்ணு.. உனக்காக சினிமா ஸ்டார் மாதிரி பொண்ணுக க்யூல நிக்குது.. இது தேவையா? உன் வயசை விட எனக்கு அரசியல் அனுபவம் ஜாஸ்தி.. சொன்னாக் கேளு.. ப்ளாக்கை ஒயிட்டா ஆக்க இதுவாடா வழி? காலாகாலத்துல உனக்கு நானே பொண்ணைப் பாத்து முடிச்சிருக்கணும்.. வந்துட்டான்.. காதல் கீதல்னு"

"உங்க பையன் தானே நான்.. உங்களை மாதிரியே நான் முடிவு பண்ணினா பண்ணினது தான்னு தெரியாதா உங்களுக்கு?" என்று அப்பாவுக்கு நிகரான கோபத்துடன் மாறன் கூறிவிட்டு சரேலென்று நாற்காலியைத் தள்ளிவிட்டு எழுந்தான்.

அவன் வெளியேறிய நேரம் அய்யாசாமியின் பிஏ அவரது காதில் ஏதோ கிசுகிசுக்க, "மாறா! ஒரு நிமிஷம் நில்லுடா! அந்தப் பொண்ணு சாஃப்ட்வேர்ல புலின்னு சொன்னியே? ஹேக்கிங் அப்படிங்குறாங்களே.. அதெல்லாம் பண்ணுமா அது?" என்றார் அய்யாசாமி.

தொடர்வாள்

பைரவி.





 

Sspriya

Well-known member
அடேய் மோதிர stand... நீ திட்டம் போட்டு தான் காதலிக்குறியா 🙄🙄
 

Arthy

Member
First of all, great work Bhairavi! 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼 அஞ்சு பேர் சேர்ந்து எழுதின மாதிரி தெரியலை. நல்ல நடை. Great coordination! ஒரு மூன்று எபி ரைட்டரை கெஸ் பண்ண முடியும். But I’ll wait for sometime.

story thought superb! Antihero பற்றிய குறிப்புகள் அருமை! 👊🏼👌🏼 இதை அந்தந்த எபி ரைட்டர் தர்றாங்களா? அல்லது ஒருவரான்னு கேள்வி எழுந்தது. Nice 👍🏼

கலகலன்னு போகுது கதை. விக்கி - பிரசன்னா காம்போ 😂😂😂😂
மென்னிலா - 😍😍😍😍😱😱😱
அருவி - 🫂🫂🫂 ரொம்ப பொறுமையைக் கடைபிடிக்கணும். Good wishes!
பிரபா - who is she?
மாறன்- டம்மி ஆர் smartass?

Waiting for more to come!
 

Bhairavi

Member
அடேய் மோதிர stand... நீ திட்டம் போட்டு தான் காதலிக்குறியா 🙄🙄
மோதிர stand, நல்லாருக்கு இந்தப் பேர். தேங்க்ஸுங்க.
 

Bhairavi

Member
First of all, great work Bhairavi! 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼 அஞ்சு பேர் சேர்ந்து எழுதின மாதிரி தெரியலை. நல்ல நடை. Great coordination! ஒரு மூன்று எபி ரைட்டரை கெஸ் பண்ண முடியும். But I’ll wait for sometime.

story thought superb! Antihero பற்றிய குறிப்புகள் அருமை! 👊🏼👌🏼 இதை அந்தந்த எபி ரைட்டர் தர்றாங்களா? அல்லது ஒருவரான்னு கேள்வி எழுந்தது. Nice 👍🏼

கலகலன்னு போகுது கதை. விக்கி - பிரசன்னா காம்போ 😂😂😂😂
மென்னிலா - 😍😍😍😍😱😱😱
அருவி - 🫂🫂🫂 ரொம்ப பொறுமையைக் கடைபிடிக்கணும். Good wishes!
பிரபா - who is she?
மாறன்- டம்மி ஆர் smartass?

Waiting for more to come!
Thank you. உங்கள் எதிர்பார்ப்புகள் நிச்சயமாக ஏமாத்தம் அடையாது. தொடர்ந்து படியுங்க. நீங்க கண்டுபிடிச்சு தாராளமாச் சொல்லலாம். காத்துக்கிட்டே இருக்கோம். தேங்க்ஸ் அகைன்! 🥰🥰🥰🥰🥰
 
Top