கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

எதிர்மறை வினையெச்சம் அத்தியாயம் 8

Bhairavi

Member
எதிர்மறை வினையெச்சம்

அத்தியாயம் 8

கிளாசிக் ஆன்ட்டி ஹீரோ- முதல் வகை பற்றி அலசுவோம்.

ஒரு கற்பனை ஹீரோவின் பொதுவான குணங்கள்- நம்பிக்கை, துணிச்சல், துணிச்சல், புத்திசாலித்தனம், அழகான தோற்றம் மற்றும் சிறந்த சண்டைத் திறன் ஆகியவை. கிளாசிக் ஆன்டி-ஹீரோ என்பது இந்த விஷயங்களின் தலைகீழ்: சுய சந்தேகம், பயம், கவலை மற்றும் போர் திறன் இல்லாமை. பொதுவாக, இந்த வகை ஆன்ட்டி ஹீரோவின் குணாதிசயங்கள் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றாலும், ஒரு கட்டத்தில் அவர்களின் "பலவீனங்களை" கடந்து எதிரியை வீழ்த்துகிறது.
அப்போது தான் அவன்/ அவள் வெற்றி பெறுகிறான்/ள். மக்களின் மனதில் இடம் பிடிக்கிறான்/ள்.

இந்த வகை ஆன்ட்டி ஹீரோ கதாபாத்திரங்கள் ஒழுக்கத்தின் கிரே ஸ்கேலில் இருக்க வேண்டிய அவசியமில்லை, அவை வீரம் பற்றிய வாசகர்களின் முன்கூட்டிய கருத்துக்களை வெகுவாக மீறுகின்றன.

எதிர்ப்பு ஹீரோ
பில்போ தி ஹாபிட்டில் ஸ்மாக்கைப் பார்க்கிறார் (வார்னர் பிரதர்ஸ் படங்கள்).
எடுத்துக்காட்டு: தி ஹாபிட்டிலிருந்து பில்போ பேகின்ஸ்

"எதிர்ப்பு" - பில்போவுக்கு கிட்டத்தட்ட ஐம்பது வயது, சாகசங்களை வெறுக்கிறார். சாதாரண வாழ்க்கை வாழ்கிறார். வசதிகள் நிறைந்த தரையில் உள்ள அவரது இருப்பிடத்தை விரும்புகிறார். அவர் உண்மையில் ஒரு "சராசரி ஜோ" தான். டிராகன் ஸ்மாக்கிடம் இருந்து திருடப்பட்ட பொக்கிஷத்தை மீட்டெடுக்கும் பணியில் குள்ளர்களின் ஒரு தரப்பினரால் அவருக்கு "திருட்டு" வேலை வழங்கப்பட்டபோது, பணிவுடன் மறுத்துவிட்டார்.

"ஹீரோ" - இந்த பிரபலமற்ற ஹீரோவின் பயணம் எப்படி இருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். பில்போ குள்ளர்களுடன் இணைகிறார். அவர் ஒரு சமதளமான இடத்தில் இறங்கும்போது (அவர் தனது கைக்குட்டையை மறந்துவிட்டார்!) கடினமான பயணம் அவரது உள் தைரியத்தைக் கண்டறிய வாய்ப்பாக அமைகிறது.

ட்ரோல்களை அகற்றுவது முதல் டிராகன்களிடமிருந்து விலையுயர்ந்த கற்களைத் திருடுவது வரை, ஹாபிட் கதையில் நுழைந்த தருணத்தை விட அதிகத் தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறார்.

நமது தமிழ்த் திரைப்படங்களிலும் பயந்தாங்கொள்ளியாக இருப்பவன் திடீரென வீரனாக மாறுவது போலக் காண்பிப்பதும் இந்த வகை ஆன்ட்டி ஹீரோ தான்.

எடுத்துக்காட்டாக சரஸ்வதி சபதம் படத்தில், பேச முடியாத ஊமையாக இருப்பவன், சரஸ்வதி தேவி அருளால் கவிஞனாவதும், பயந்தாங்கொள்ளியாக வரும் ஒரு சாதாரணக் குடிமகன் பார்வதி தேவியின் அருளால் வீரனாக மாறி நாட்டின் படைத்தளபதியாக மாறுவதும், பிச்சைக்காரியான பெண் திருமகளின் அருளால் நாட்டின் அரசியாக மாறுவதும் கூட இந்த வகை ஆன்ட்டி ஹீரோ/ ஹீரோயின் கதாபாத்திரங்கள் தான்.

இவர்கள் பாரம்பரிய ஹீரோக்களின் குணாதிசயங்கள் துளிக்கூட இல்லாமல் எதிர்மறையாக அறிமுகப்படுத்தப்பட்டு இறுதியில் பாரம்பரிய ஹீரோக்கள் அளவு முழுமையான கதாபாத்திரங்களாக உரு மாற்றம் அடைகிறார்கள்.

தற்போதைய திரைப்படங்களில் பெரும்பான்மையானவற்றில் இந்த வகை கதாபாத்திரங்கள் அதிகம் உலா வருகின்றன.

அடுத்த பகுதியில் அடுத்த வகை ஆன்ட்டி ஹீரோ பற்றிப் பார்க்கலாம்!

-பைரவி


'எப்படி விக்னேஷைத் தோற்கடிப்பது? எப்படி மாறனுக்கு ஒரு பாடம் கற்பிப்பது?' எனத் தன் அலுவலக அறையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி யோசித்துக் கொண்டிருந்தாள் நிலா. முன்னும் பின்னும் அதன் முதுகுப் பகுதியை ஆட்டி ஆட்டி எத்தனை முறை யோசித்தும் சரியான வழிமுறை கிடைக்கவில்லை.

"ஹே நிலா! ஒரு போலீஸ் ஆபீசர் உன்னைத் தேடி வந்திருக்காங்கடி" என பதட்டத்தில் வியர்வை வழிய வந்து நின்றாள் அருவி.

"ம்ம் அவங்களை உள்ள வரச் சொல்லு அருவி!" என்றாள் நிலா சுரத்தில்லாமல்.

"என்னடி போலீஸ் வந்திருக்காங்கன்னு சொல்றேன், நம்ம செய்யுற வேலைக்குக் கொஞ்சம் கூட பதட்டப்படாம இருக்கியே"

"அவங்களே நம்மளைத் தேடி வந்திருக்காங்கன்னா இது ஃஅபிஷியல் டீலிங்கா இருக்கத்தான்‌ அதிகம் வாய்ப்பிருக்கு அருவி. அப்படியே நம்மைத் தோண்டித் துருவ வந்திருந்தாலும் அவங்களுக்கு ஒண்ணுமே கிடைக்காது. ஆனா நீ மட்டும் இப்படி திருட்டு முழி முழிச்சு காட்டிக் குடுத்துடாதே.. முழிக்கிறதை நிறுத்திட்டு, அவங்களை உள்ள அனுப்பு! ஒரு டூ மினிட்ஸ்க்கு அப்புறம் சூடா ரெண்டு காபி அனுப்பு!" என்று அருவியை அனுப்பி வைத்தாள்.

போலீஸ் என்றதும் ஒரு ஆண் தான் வரப் போகிறார் என்று நினைத்தவள், கட்டம் போட்ட கலர் சட்டை, காக்கி பேண்ட் சகிதம் மிடுக்கென உள்ளே நுழைந்த வெண்பாவைக் கண்டு விழி விரித்தாள். கம்பீரத்தை அடையாளமாகவும் கடமையை அணிகலனாகவும் அணிந்திருந்த வெண்பா பார்த்தும் நிலாவைக் கவர, "வெல்கம் மேம், ப்ளீஸ் பீ சீட்டட்!" என எழுந்து நின்று‌ கை குலுக்கிவிட்டு அவரை அமர வைத்தாள்.

வழக்கமாய் யார் வந்தாலும் அவரின் விருப்பத்தைக் கேட்காமல் தனக்கு விருப்பமான காபியை ஆர்டர்‌ செய்துவிடும் நிலா இம்முறை வெண்பாவிடம், "என்ன சாப்பிடறீங்க மேடம்?" என அன்போடு வினவினாள்.

வெண்பாவும் வீணான‌ ஜம்பம் பார்க்காமல், "சூடான இஞ்சி டீ ப்ளீஸ்!" என்றாள். இன்டர்காமை எடுத்து அருவியிடம் இரண்டு இஞ்சி டீயினை ஆர்டர் செய்த நிலாவின் செய்கை அருவியை புருவம் உயர்த்த வைத்தது.


"சொல்லுங்க மேடம்! வாட் கேன் ஐ டூ ஃபார் யூ!"

"முதல்ல மேடம்னு கூப்பிடாம வெண்பான்னு கூப்பிடுங்க! உங்ககிட்ட ஹேக்கிங் சம்பந்தமா பேச வந்தேன்" என சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.

"ம்ம் என்ன செய்யணும் வெண்பா! எதிக்கல் ஹேக்கிங்காக என்னைத் தேடி வந்திருந்தா யூனிஃபார்ம்ல வந்திருப்பீங்க இது அன்அஃபீஷியல் தானே! சொல்லுங்க என்ன டீடெயில்ஸ் வேணும்" என்றவளின் புத்திக் கூர்மையை வெண்பா இதழை கீழ் நோக்கி வளைத்து மெச்சினாள். அதைக் கண்டு நிலா சிரித்தாள்.

"நிலா, எனக்கு மூணு பேர் பத்தின டீடெயில்ஸ் வேணும். இந்த ஃபைல்ல எல்லா விவரமும் இருக்கு. அவசரமில்லாம பொறுமையா ரெண்டு நாள் எடுத்துக்கிட்டு செஞ்சா போதும். பட் செய்யுற வேலை பெர்ஃபக்டா இருக்கணும்!" என ஃபைலை அவள் புறம் நகர்த்தி வெண்பா தனக்கு முன்னே இருந்த இஞ்சி டீயினை ரசித்து ருசித்துக் குடித்துவிட்டு, "சீக்கிரம் பார்க்கலாம்" என ஒரு ஸ்நேகப் புன்னகையோடு விடை பெற்றாள்.

வெண்பா யாரைக் கண்காணிக்கச் சொன்னார் என்ற ஆர்வத்தில் அந்தக் கோப்பினை பிரித்தவளுக்கு முதலில் ஒரு புகழ்பெற்ற வக்கீலின் பெயர் தென்பட்டது. அடுத்து ஒரு போலீஸ் அதிகாரியின் பெயர் இருந்தது. இறுதியாக இருந்த பெயரைப் பார்த்ததும் நிலாவின் இதயம் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து அவள் வாய்வழி வரத் தயாராக இருந்தது.

'செத்தடா மவனே!' என மாறனின் தந்தையின் பெயரை மூன்றாவதாகக் குறிப்பிட்டதைக் கண்டதும் சந்தோஷத்தில் சத்தமாக சிரித்துக் கொண்டாள்.

'ஒரே கல்லுல மூணு.. இல்ல இல்ல நாலு மாங்கா. அப்பன், மவன், அப்புறம் அந்த மவனோட ஹெல்பர்‌ செல் விக்னேஷ் மற்றும் காதல் மன்னன் பிரசன்னா. எல்லாரையும் போட்டுக் குடுத்துட வேண்டியது தான்' என முடிவெடுத்து அந்த நிமிடமே விவரங்களைத் தேடத் தொடங்கினாள். மதியம் பதினொன்று முதல் மூன்று மணி வரை தேடியதில் கிடைத்த விஷயங்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள் அவள்.


ஏதாவது உப்புச் சப்பில்லாத கருப்புப் பண விவகாரமாய் இருக்கும் என அசட்டையாய் நினைத்த நிலாவிற்கு அவளின் கணினி அதிர்ச்சி அலைகளைத் தந்தது. ஒவ்வொன்றும் ஒரு சக்தி வாய்ந்த அணுகுண்டிற்குச் சமமானதாய் இருந்தது. தோண்டத் தோண்ட நிறைய புதுத் தகவல்கள் கிடைக்க, அந்த மூவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது தெரிந்தது.

மாறனின் அப்பாவின் அலைபேசி, வங்கிக் கணக்கு மற்றும் மின்னஞ்சலை ஆராய்ந்ததில் மாறன் சிக்கினான். அடுத்து மாறனின் விவரங்களை ஆராய, அதில் விக்னேஷும் சிக்கினான். நூல் பிடித்தாற் போல் ஒருவர் பின் ஒருவராக துண்டிலில் மீன் சிக்குவது போல் சிக்க, உற்சாகத்தில் குர்ரே என கத்தினாள் நிலா.

அவளை மதிய உணவிற்கு அழைக்கலாம் என்று வந்த அருவியோ "என்னடி இது இப்படி கத்துற?" என ஆர்வத்தோடு கேட்டாள்.

படபடவென பட்டாசாய் விவரங்களைச் சொன்ன நிலாவிடம் பதில் பேசாமல் அமர்ந்திருந்தாள் அருவி.

"என்ன அருவி சைலண்ட் ஆயிட்ட! என் அறிவைப் பாத்து மெர்சல் ஆயிட்டியா!"

"இல்ல நீ ஏன் இப்படி மக்கா ஆயிட்டன்னு யோசிச்சேன்" என்றாள் கன்னத்தில் கை வைத்தபடியே,

"என்ன?" என தன்னை அவள்‌ மக்கு என்று சொன்னதை தாள முடியாமல் நிலா புருவம் உயர்த்த, "நீ மாறனோட நிறுத்துறது தான் நமக்கு சேஃப், அந்த விக்னேஷ் விஷயத்தைத் தூக்கு!" என்றாள் அருவி.

"ஏன் விக்னேஷ் மாட்டுனா அடுத்து உன் டார்லிங் பிரசன்னா மாட்டுவானேன்னு உனக்குக் கவலையா! அதான் என்னை மக்குன்னு சொல்லி மட்டம் தட்டுறியா!" என நிலா நக்கல் அடித்தாள்.

'அறிவு கெட்ட முண்டம்!' என்று மனதிற்குள் நிலாவைத் திட்டியவள், அதை வாய்விட்டு சொல்ல முடியாமல், "பிரசன்னா என் வாழ்க்கையில நேத்து வந்தவன்.. அவன் இன்னிக்கு எங்க இருக்கான், நாளைக்கு எனக்காக இருப்பானான்னு எதுவுமே தெரியாது. நான்‌ அதுக்காக சொல்லலை, நீ எப்படியோ அப்படித்தான் விக்னேஷும். உடம்பு ஃபுல்லா மூளை வெச்சிருக்குறவன். நீ அவனைப் போட்டுக் குடுத்த அடுத்த நிமிஷமே உன்னைப் பத்தியும் அவன் போட்டுக் குடுத்துடுவான்" என்று அருவி சொன்னது நிலாவை யோசிக்க வைத்தது.

"வந்து போன போலீஸ் மேடமைப் பார்த்தாலே தெரியுது அவங்க எவ்வளவு சின்சியர்னு. எதிரிக்கு எதிரி நண்பன். நமக்கு நேர்மையான போலீஸ் எதிரி, அவனுக்கும் அதே தான். சோ அவனை இந்த லிஸ்டில் இருந்து தூக்கு"

"சரி தான் அருவி.. நீ சொன்னது ரொம்ப சரியான யோசனை. இப்போதைக்கு இந்த லிஸ்ட்ல இருந்து விக்னேஷைத் தூக்குறேன். ஆனா நிச்சயமா சீக்கிரமே அவனுக்கு பெரிசா எதையாவது செய்வேன். இப்போதைக்கு மாறன்‌ சிக்கிட்டான் அதுவே எனக்குப் பெரிய சந்தோஷம்.

மாறனோட அப்பன் இருக்கானே அவன் செய்யுற வேலைகளை எல்லாம் நீ கேட்டா தாங்கமாட்டடி. போலீஸ்ல நல்லா சிக்கி களி தின்னாத்தான்‌ புத்தி வரும். ம்ம்ஹும் அப்பயும் வராது, தூக்குல போடணும்!" என சட்டென்று மகிழ்ச்சியில் இருந்து ரௌத்திரத்திற்கு மாறினாள் நிலா.

°°°°°°°

"அடேய் விக்கி உனக்கும் இந்த ப்ராஜெக்ட் இல்ல, எனக்கும் அந்த நிலா இல்ல" என வானத்தில் இருந்த நிலாவைக் கைகாட்டி குடி போதையில் உளறிக் கொண்டிருந்தான் மாறன்.

"சார் கொஞ்சம் டைம் குடுங்க பாத்து பதமா செய்வோம்!" என பிரசன்னா சமாதானம் செய்ய,

"பாத்து பதமா செய்ய இது என்ன பால்கோவாவாடா மாங்கா மடையா! ஆளும் மண்டையும் பாரு. அதான் நம்மகிட்ட தொக்கா அந்த குழந்தை சிக்கியிருக்குல்ல அதை வெச்சு ஏதாவது செய்வோம்யா" என்று சொல்லிட்டு அடுத்த பாட்டிலை காலி செய்வதில் முனைந்தான் மாறன்.

மொடாக்குடிகாரனின் எதிரில் அமர்ந்திருந்த பிரசன்னா வெறும் பழரசம் குடித்துக் கொண்டிருக்க, விக்னேஷ் எதுவும் உண்ணாமல் தீவிர சிந்தனையில் இருந்தான். வேலையில் ஆயிரம் தகிடுதத்தங்கள் செய்தாலும், நண்பர்கள் இருவரும் டீ டோட்டலர்கள்.

"மாறன்‌ சார்‌ அந்தக் குழந்தை என்ன செஞ்சுச்சு. எதுக்கு அதை இதுக்கு நடுவுல தேவையில்லாம இழுக்கணும். நம்ம என்ன காமடி வில்லனா குழந்தையை வெச்சுக்கிட்டு மிரட்ட!" என மாறனின் பார்வையை எப்படியாவது குழந்தை பிரபாவிடம் இருந்த திருப்ப நினைத்தான் விக்கி. தேவையில்லாமல் பெரியவர்களின் ஆட்டத்தில் ஒரு சிறு குழந்தையின் எதிர்காலத்தைப் பலியிடக் கூடாது என விக்னேஷின் கையகல இதயத்தில் இருந்த கால் இஞ்ச் நல்ல மனது எடுத்துரைத்தது.

"விக்கி! புள்ளையைத் தூக்குனா நிலாவுக்கு வலிக்கும்ல.. அப்ப தானா என் வழிக்கு வருவாடா..க்க்க்" என்று சிரித்தான் மாறன். சிரித்த சிரிப்பில் விக்கல் வந்து தொலைத்தது.

"அண்ணே! அந்த நிலா தான் குழந்தை குட்டின்னு செட்டில் ஆயிடுச்சே, உங்க ரேஞ்சுக்கு உலக அழகி கூட வெயிட் பண்ணும் அண்ணே நம்ம வேற ஆளைப் பார்ப்போம்" என சாராயத்தால் பற்றி எரியும் மாறனின் வயிற்றை மேலும் பற்ற வைத்தான் பிரசன்னா.

"அடேய் விக்கியோட அப்ரசெண்டு! அந்த புள்ள நிலா கல்யாணம் ஆகாதவ டா! போன‌ மீட்டிங்குல விக்கி சொன்ன தகவலை வெச்சு என் மூளையைக் கசக்கி, அடியாட்களைத் துவைச்சு நிறைய தகவல்களை தெரிந்து வெச்சிருக்கேன்டா. அவளுக்கே தெரியாத ரகசியம் கூட இந்த மாறனுக்குத் தெரியும்டா"

"ஓஹோ அப்ப கல்யாணம் பண்ணாமலேயே குழந்தையா சூப்பர்ண்ணே! அதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு செட்டாகுதுன்னு வெட்டி விட்டுருங்க" கான்ட்ராக்ட் கிடைக்கவில்லை என்றாலும் இந்த குடிகாரனிடம் இருந்து குழந்தையைப் பாதுகாத்தால் போதும் என்று பேசினான் பிரசன்னா.

மாறன் எதிர்வினையாற்றும் முன்‌ விக்னேஷ் அவன் தொடையை நன்கு வலிக்கும் படி கிள்ளி வைத்தான்.

"அப்ரசெண்டு! யாரைக் குறை சொல்ற, அந்த வானத்து நிலாவுக்குக் கூட களங்கம் இருக்கும், ஆனா என் நிலா ப்யூர் கோல்டு. அவ என் டார்லிங். அந்தக் குழந்தை நிலாவோட குழந்தை இல்லை. அது யாரோட குழந்தைன்னு அவளுக்கே தெரியாது, ஆனா எனக்குத் தெரியும்" என்று அந்த பரம ரகசியத்தை அவர்கள் இருவரிடமும் கூறினான் மாறன்.

"இப்ப சொல்லு விக்கி, நிலாவை சிக்க வைக்க முடியுமா? முடியாதா?"

"ஏன் முடியாது? நாளைக்கே நிலா உங்க பக்கத்துல ஜோடியா நின்னு போட்டோவுக்கு போஸ் குடுக்க வைக்கிறேன்" என சூளுரைத்தான்‌ விக்னேஷ்.

"சபாஷ்! நிலா இந்தக் கையில ப்ராஜக்ட் அந்த கையில" என தன் கையையும், விக்கியின் கையையும் காட்டியவன் அவன் கைகளில் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டுக்கட்டைத் திணித்தான்.

"பிரசன்னா இந்த காசை வழக்கம் போல என்ன செய்யணுமோ செஞ்சுடு" என அவன் கைகளில் திணித்தான் விக்கி.

"ம்ம்கும் கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கிறதுன்னா இது தான்" என முனகியபடி அங்கிருந்து நடையைக் கட்டியதும், "பாவம் டா நிலா" என்று கூறினான்.

விக்கி, "பாவமா?"

"ஆமாம் டா அந்த குழந்தை மேல அவளுக்கு எத்தனை பாசம் இருக்கு. இப்ப நம்ம புடுங்கப் போறது தேவையில்லாத ஆணிடா!"

"குழந்தை எங்கிருந்து வந்துச்சோ அங்க போக வேண்டாமா? பிடிச்சிருக்குன்னா எந்தக் குழந்தையை வேணும்னாலும் தூக்கிட்டு வந்து வளக்கலாமா?"

"ஆனா பாவம் நிலாக்கு அந்தக் குழந்தை யாருன்னு தெரியாதேடா!"

"ஓ! நீ நிலாவைக் காப்பாத்துற சாக்குல உன் அருவியைக் காப்பாத்த விரும்புற அப்படித்தானே. இரு இரு ரெண்டு பேரையும் குழந்தை கடத்துன வழக்குல உள்ள தள்ளுறேன்" என்ற நண்பனை என்ன செய்வது எனத் தெரியாமல் விழித்தான் பிரசன்னா.

தொடர்வாள்,

பைரவி.


 

Sspriya

Well-known member
இன்னும் பிரபா ஒரு கேள்விக்குறியாவே இருக்காளே 🙄🙄🤔🤔🤔🤔🤔... யாரு அவள் ஏன் நிலா அவ மேல அவ்ளோ பாசமா இருக்கா 🤔
 

Bhairavi

Member
இன்னும் பிரபா ஒரு கேள்விக்குறியாவே இருக்காளே 🙄🙄🤔🤔🤔🤔🤔... யாரு அவள் ஏன் நிலா அவ மேல அவ்ளோ பாசமா இருக்கா 🤔
thank u
 
Top