கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

எதிர்மறை வினையெச்சம் 10

Bhairavi

Member
எதிர்மறை வினையெச்சம்

அத்தியாயம் 10

மூன்றாம் வகையான ஆன்ட்டி ஹீரோ

3. நடைமுறை ஆன்ட்டி ஹீரோ

இப்போது நாம் சாம்பல் பகுதியில் சிறிது ஆழமாக அலசத் தொடங்குகிறோம். சாம்பல் நிறம் ஆன்ட்டி ஹீரோவிற்கான பிரத்யேக நிறம் என்பதை வாசகர்களுக்கு நினைவு படுத்துகிறோம்.

சுருக்கமாக, பிராக்மாடிக் அதாவது இந்த வகை நடைமுறை ஆன்ட்டி-ஹீரோ, நைட் இன் சோர் ஆர்மர் எனப்படும் இரண்டாம் வகை ஆன்ட்டி-ஹீரோவின் சற்றே இருண்ட, கொஞ்சம் மோசமான பதிப்பாகும். இவர்கள் இருவருமே ஓரளவிற்கு சுயநலவாதிகள் மற்றும் ஹீரோவாகத் தயங்குபவர்கள்.

ஆனால் இரண்டாம் வகை ஆண்டி ஹீரோ, பொதுவாகப் போரில் அடியெடுத்து வைப்பதில் தயங்கும் அதே நேரத்தில், மூன்றாம் வகை ஆன்ட்டி-ஹீரோ, வில்லன்களின் கொடுமைகளை கவனித்தவுடனேயே செயலில் இறங்கத் தயாராக இருக்கிறார். முக்கிய வேறுபாடு என்னவென்றால், இறுதி வரை காத்து இருப்பதில்லை. அதாவது போராட ஆயுதம் ஏந்தியே ஆகவேண்டும் என்ற கட்டாயம் வரும் வரை பொறுத்துக் கொண்டு இருப்பதில்லை.

உதாரணம்: தி க்ரோனிகல்ஸ் ஆஃப் நார்னியாவில் இருந்து எட்மண்ட் பெவென்ஸி.

ஆன்ட்டி ஹீரோ எப்படி மாறு படுகிறான் என்று பார்க்கலாம். ஒவ்வொரு பெவென்சி குழந்தையும் நார்னியாவில் ஒரு பெயரைப் பெறுகிறார்கள், மேலும் எட்மண்டின் பெயர் "எட்மண்ட் தி ஜஸ்ட்". இது பொருத்தமான பெயர் தான். ஏனெனில் எட்மண்ட் நடைமுறையில் மிகவும் இயல்பானவர். மற்றும் மக்கள் தங்களுக்குத் தகுதியானதைப் பெறுவார்கள் என்று நம்புகிறார். இந்த வழியில், அவர் இரக்கமற்றவராகவும், கருணை காட்ட விரும்பாதவராகவும் இருக்கலாம். உதாரணமாக, அவரது மூத்த சகோதரர் "பீட்டர் தி கிரேட்" எதிரியான மிராஸுடன் சண்டையிடும் போது, பீட்டர், மிராஸை நிராயுதபாணியாக்குவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளார், கொல்ல நினைக்கவில்லை. ஆனால் எட்மண்ட், மிராஸைக் கொல்லும்படி தனது சகோதரரை ஊக்குவிக்கிறார். இந்த விஷயத்தில் பாரம்பரிய ஆன்ட்டி-ஹீரோவில் இருந்து இவர் மாறுபடுகிறார்.

ஹீரோ எட்மண்ட் சுயநலமாக நடந்துகொள்கிறார்; மற்றும் அவரது உடன்பிறப்புகளுக்கு துரோகம் செய்கிறார். இறுதியில் அவர் தனது வழியில் முன்னேறி எதிரிகளைத் தோற்கடிக்க உதவுகிறார் - மேலும் தொடர் முழுவதும் மேலும் வீரச் செயல்களைச் செய்கிறார்.

சுயநலம், தீய குணங்கள் உள்ள ஆன்ட்டி-ஹீரோ தான் இந்த மூன்றாம் வகை ஆன்ட்டி-ஹீரோ. இறுதி வரை காத்திருக்காமல் முதலில் இருந்தே எதிர்ப்பைத் தன் வழியில் காட்டுபவர்.

இந்தியாவில் பார்த்தால் ஒரு காலத்தில் ஜமீன்தார்கள் ஆட்டுவித்த கொள்ளைக்காரியான பூலன் தேவியை இந்த வகை ஆன்ட்டி ஹீரோயினாக ஏற்றுக் கொள்ளலாம். தனக்கு நடத்த அநீதிகளைத் தட்டிக் கேட்க ஆயுதத்தைக் கையில் எடுத்தவர், தனக்குத் தீங்கு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கத் தயங்கவேயில்லை.

இந்தியன் படத்தில் வரும் தாத்தா, அந்நியன் படத்தில் வரும் அந்நியன், ஜெண்டில்மேன் படத்தில் வரும் அர்ஜுன் கதாபாத்திரம் எல்லாம் இந்த வகை தான். பொதுவாக டைரக்டர் ஷங்கருக்கு இந்த வகை ஆன்ட்டி-ஹீரோ விருப்பம் போல இருக்கிறது.
இதே போல நடிகர் விஜய்சேதுபதி நிறைய படங்களில் இந்த வகை கதாபாத்திரங்களை ஏற்று
நடிக்கிறார்.


அத்தியாயம் 10

"குசுகுசுன்னு பேசாமப் படத்தைப் பாருங்க" என்று பல முறை திரும்பிப் பார்த்தும் முறைத்தும் குறிப்புக் காட்டிய அந்த ஜோல்னாப் பை பெரியவர், இந்த முறை உரக்கவே திட்டிவிட்டார்.

அவர் இவ்வளவு நேரம் காட்டிய எதிர்ப்பை அருவியும் பிரசன்னாவும் கவனிக்கவே இல்லை. இருவரும் இருந்தது ஈகா தியேட்டரில். உலகப் புகழ் திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து திரையிடுவதற்கென்றே பெயர் வாங்கிய திரையரங்கம். ஒருகாலத்தில் அறிவுஜீவிகளால் நிரம்பி ஜே ஜே என்றிருந்தது, மேலும் ஓடிடிகளின் வருகையால் ரொம்பவே களையிழந்து இருந்தது.

பிரசன்னா எதற்காக இங்கே வரச் சொல்கிறான் என்று தெரியாமல் தான் வந்திருந்தாள் அருவி. நிலாவுடன் பழகிய இந்த ஏழு ஆண்டுகளில் இப்பொழுது தான் அவளுக்குத் தெரியாமல் ஒன்றைச் செய்திருக்கிறாள். காலையில் தெரியாத எண்ணத்தில் இருந்து ஒரு அழைப்பு வந்தது, அதில் "அருவி! நான் தாங்க பிரசன்னா.. காலைல பத்தரைக்கு ஈகா தியேட்டருக்கு வந்துடுங்க ப்ளீஸ்" என்று கெஞ்சல் குரலில் கேட்டிருந்தான் பிரசன்னா. அவன் குரலில் இருந்த ஏதோ ஒன்று அருவியின் மனதைத் தொட்டு விட, 'வயிறு வலிக்குது.. ரெண்டு தடவை வாமிட் பண்ணிட்டேன்.. அதனால் அரை நாள் லீவு' என்று மென்னிலாவிடம் பொய் சொல்லிவிட்டு இங்கு வர வைத்திருந்தது.

செவன் சாமுராய் என்ற புகழ்பெற்ற ஜப்பானிய படத்தைத் திரையிட்டுக் கொண்டிருந்தார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாகத் திரையரங்கில் மொத்தமே மொத்தம் முப்பது பேருக்குள் தான் இருந்தார்கள். அதில் கிட்டத்தட்ட 20 பேர் கசமுசா செய்த ஜோடிகளைப் போல் தான் தெரிந்தது. நம்மையும் அந்த லிஸ்டில் சேர்த்து விடுவார்களோ என்று அருவிக்கு ஒரு கணம் தயக்கம் இருந்தது உண்மை. ஆனால் ஒரே நிமிடத்தில் பிரசன்னா அந்த தயக்கத்தைப் போக்கி விட்டான்.

அவளை அழைத்து வந்ததாகட்டும், இடம் பார்த்து அமர வைத்ததாகட்டும், தண்ணீர் பாட்டிலை நீட்டியதாகட்டும்.. நொடிக்கு நொடி அருவியின் மனதுக்கு நெருக்கமாகிக் கொண்டே தான் வந்தான். ஆனால் அவள் உட்கார்ந்து சுற்றுப்புறத்தைக் கவனிப்பதற்குள், அவளது கையை தன் இரு கைகளாலும் பற்றிக் கொண்டான். அதிர்ச்சியுடன் கைகளை விலக்கிக் கொள்ள பார்த்தாள்.

"ப்ளீஸ் ப்ளீஸ்! நமக்கு நேரம் கொஞ்சமாத் தான் இருக்கு.. என்னோட ஃப்ரெண்டும் உங்களோட ஃப்ரெண்டும் நம்மைத் தேடிக் கண்டுபிடிச்சு இங்க வர்றதுக்குள்ள நான் பேச வேண்டியதை எல்லாம் பேசிடுறேனே" என்று சொல்லி விட்டான்.

ஆண்கள் இவ்வளவு கெஞ்சுவார்களா? அப்படி கெஞ்சுபவனுக்குத் தான் வாழ்க்கை கொடுக்க வேண்டுமா என்று ஒரு கணம் யோசித்தாள் அருவி. இருந்தாலும் அவள் மனதில் பிரசன்னாவின் மேல் மொட்டு விட்டிருந்த காதல் அந்த யோசனையைக் கடக்க உதவியது.

"சொல்லுங்க.. எனக்கும் அந்த பயம் தான்.. அதனால நான் ஃபோனை சுவிட்ச் ஆப் பண்ணி ரூம்ல வெச்சிட்டு வந்துட்டேன்" என்றாள்
அருவி.

"தேங்க்ஸ்! நமக்குள்ளே எவ்வளவு ஒத்துமை பார்த்தீங்களா.. ஒரு வேலை விஷயமா விக்னேஷ் ஆந்திரா வரைக்கும் போயிருக்கான்.. ஆபீஸைப் பார்த்துக்கிறேன்டா அப்படின்னு நானும் அவனைக் கழட்டி விட்டுட்டுத் தான் இங்க வந்தேன். சரி.. இப்ப ஸ்ட்ரெயிட்டா பாய்ண்ட்க்கு வரேன்.. என்னமோ தெரியலைங்க, உங்களைப் பார்த்ததுல இருந்து நான் நானாவே இல்லைங்க"

"படுத்தாத் தூக்கம் வரமாட்டேங்குது.. சாப்பாடைப் பார்த்தா பிடிக்க மாட்டேங்குது.. அதானே?"

"அது இல்லைங்க! இவ்வளவு நாளா விக்னேஷ் வேற, நான் வேற இல்ல.. இப்ப அவனைப் பார்த்தாலே பிடிக்க மாட்டேங்குது.. அதான் வித்யாசமா இருக்கு"

"எனக்கும் வரவர நிலாவைப் பார்த்தாலே பிடிக்கல" என்றாள் அருவி.

சொன்னபின் தான் என்ன சொன்னோம் என்பதையே உணர்ந்தாள்.

"அட! அப்ப நமக்குள்ள அதுவே தாங்க!! நான் பர்மிஷன் எல்லாம் கேட்டிருக்கவே வேண்டாம்.. நல்லாவே கை போடுகிறேன்.. நமக்கு டைம் கம்மியாத் தானே இருக்கு" என்று இன்னும் அவளை நெருங்கி அமர்ந்தவன் அவள் கையை விட்டுவிட்டு தோளைச் சுற்றித் தன் கையைப் போட்டுக் கொண்டான். அப்போதுதான் முன்னால் அமர்ந்திருந்த அந்தப் பெரியவர் அவர்களைக் கடிந்து கொண்டார்.

"சரி வாங்க! மத்தவங்களுக்கு டிஸ்டர்பன்ஸா இருக்கவேண்டாம்.. நாம வெளியே போயிடலாம்" என்று அருவி கூற, "அதுக்கு என்னங்க.. இனிமே வாழ்க்கை பூரா நீங்க சொல்றதைத் தானே கேட்க போறேன்" என்றபடி வெளியே கிளம்பத் தயாரானான் பிரசன்னா..

"ஓவர் ஸ்பீடு உடம்புக்கு ஆகாது" என்றாள் அருவி.

"நம்ம ரெண்டு பேரு சூழ்நிலைக்கும் இந்த ஸ்பீடே கம்மிங்க" வெளியே வந்தவர்கள் திறக்காத தியேட்டர் கேன்டீனின் முன்னாடி பெஞ்சில் அமர்ந்தனர்.

"அதான் இவ்வளவு நெருங்கிட்டோமே.. அப்புறம் என்ன நீங்க வாங்கன்னு சொல்றீங்க.. சாதாரணமாவே கூப்பிடுங்க" என்று அருவி கூற,

"அப்படிங்கிறியா.. ஓகே.. அப்ப நான் உனக்கு வச்சிருக்குற செல்லப் பேரையும் சொல்லியே கூப்பிடுறேன்.. வாட்டர் ஃபால்ஸ், வாட்டர் ஃபால்ஸ்.. உன் ஃப்ரெண்டு நிலா என்ன அவ்வளவு ரர் பீஸா?" என்றான்.

"அருவிக்குச் செல்லப் பேரு வாட்டர் ஃபால்ஸாக்கும்.. சகிக்கல"

"இப்ப அதுவா முக்கியம்? மெல்லமா செல்லப் பேரு யோசிச்சுக்கிறேன்.. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.. நிலா டெரர் பீசா?" என்றால்.

"அவ ரொம்ப ஸ்ட்ரிக்ட்.. பயங்கர உழைப்பாளி.. எதற்கும் கலங்காதவ"

"எங்க விக்னேஷும் அந்த மாதிரி தான்.. இவங்க ரெண்டு பேருக்கும் சம்திங் சம்திங் வந்தா நமக்கு ரூட் கிளியர் ஆயிடும் இல்ல.. உலகத்திலேயே நண்பர்கள் காதலுக்கு வில்லனா இருக்கும் நம்ம கதையில தான் நடக்கும்னு நினைக்கிறேன்" என்று பிரசன்னா பெருமூச்சு விட்டார்.

"சே சே! எங்க மென்னிலா.. அப்படி எல்லாம் இல்ல.. வில்லத்தனம் பண்ண மாட்டா..

"ஏங்க.. ஊருக்கு வெளியே கெஸ்ட் ஹவுஸ்ங்குற பேர்ல பேய் பங்களா வச்சிருக்கிறது, அடியாள் வச்சிருக்கிறது இதெல்லாம் வில்லி பண்ற வேலை இல்லையா.. அதுவும் ஆணழகர்கள் ரெண்டு பேரை கடத்தி அடைச்சு வைக்கப் பாத்தீங்களே.. உங்களை.. சாரி
சாரி.. உன்னைப் பார்க்கும் போது கூட எனக்கு அப்பப்ப பயந்து வருது" என்றான் பிரசன்னா. .

அப்படியே அவ கூட வந்துட்டேன்.. என் லைஃப்ல ஃபிரண்டாத் தான் வந்தா.. இப்ப எனக்கு அம்மா, அப்பா எல்லாமே அவ தான். என்னைப் பொறுத்த வரைக்கும் அவ தப்பே பண்ணினாலும் அது சரிதான்" என்று அருவி கண்கலங்கிக் கூற,

"அச்சோ.. அழாதே அருவி.. உந்தன் சோகம் என்னைத் தாக்குது.." என்று பாடுவது போல் ராகமாக இழுத்தான், அவனை முறைத்தாள் அருவி.

"பாரேன்.. நம்மைப் பத்திப் பேசாம நம்ம நண்பர்கள் பத்தியே பேசிகிட்டு இருக்கோம்.. சொல்லு.. நமக்கு ரூட் கிளியர் தானே.. இல்ல, உனக்கு அம்மாவா அப்பாவா இருக்கிற நிலா ஏதாவது சொல்லுவாளா?" என்று பிரசன்னா கேட்க,

"அப்படி எல்லாம் இல்ல.. " என்று ஒரு கணம் யோசித்தவள், "நீங்க ஏன் எங்க கம்பெனியை நோட்டம் விடுற மாதிரி வந்தீங்க.. எதுக்கு டெடி பியர் அனுப்பினீங்க.. நீங்களும் உங்க ஃப்ரண்டு விக்னேஷும் சேர்ந்து ஏதாவது புதுசா பிளான் பண்றீங்களா?" என்று கேட்டாள் அருவி.


"சேச்சே! உன்னை இம்ப்ரஸ் பண்ண தான் அந்த ப்ளான் செல்லம்.." என்று அதிரடியாக பிரசன்னா கூற

"இல்லை.. பொய்! நீங்க அதுக்கு முன்னாடி பாத்திருக்க வாய்ப்பே இல்லை.. அந்த டெடி பேர், கிஃப்ட் அதெல்லாம் நிலாவுக்குத் தானே அனுப்பினீங்க.. எனக்கா அனுப்பினீங்க?"

என்ன சொல்வது என்று யோசித்த பிரசன்னா, "அதான் கோபமா.. நானே உனக்கு தான் இனிமே.. என்னையே டெடி பியாரா நினைச்சுக்கோ!.. பாரேன் இப்பக் கூட அவங்களைப் பத்தித் தான் அதிகமாப் பேசிக்கிட்டு இருக்கோம்.. நம்மைப் பத்தி பேசுவோம்.. என் குடும்பத்தைப் பத்திச் சொல்லட்டா?"
என்று கேட்டான்.

"இதுவரை நீங்க யாரு, என்னன்னு எனக்கு தெரியாது.. உண்மையைச் சொல்ல மாட்டேங்கறீங்க.. அப்ப நான் உங்களை நம்பி எப்படி லவ் பண்றது.. அதுக்குள்ள நீங்க கல்யாணம் வரைக்கும் போயிட்டீங்க. ஒன்னும் அவசரம் இல்ல மெதுவாப் பேசிக்கலாம். நான் வரேன் பாய்!" என்று எழுந்தாள் அருவி.

தியேட்டரின் கேட் உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. வாட்ச்மேன் எங்கே என்று அருவி தேட, "நானே வாழ்க்கையில முதன்முறையா ஒரு பொண்ணைப் பாத்து இம்பிரஸ் ஆகி, வித்தியாசமா ப்ரொபோஸ் பண்ணி ஓகே சொல்ல வச்சிட்டேன்னு ஒரு நிமிஷம் சந்தோஷப் பட்டேன்.. அந்த சந்தோஷத்துல ஏதாவது சம்பந்தம் இல்லாம உளறியிருப்பேன்.. என்னை விட்டுப் போயிடாதே வாட்டர் பால்ஸ்.. ப்ளீஸ் வாட்டர் ஃபஸ்! .ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்ல கமிட்டட் னு வச்சு அதுக்கு அரை மணி நேரத்துல ஐநூறு லைக் வந்துடுச்சு.. என் ஹார்ட்டை ப்ரேக் பண்ணிடாத வாட்டர் ஃபால்ஸ்" என்று கூறிய பிரசன்னா சுற்றுமுற்றும் பார்த்து விட்டு அருவியின் அருகில் வந்தான்.

'இந்த வேகாத வெயில்ல தியேட்டர் வாசல்ல வச்சு என்ன செய்யப் போறான், ஐயையோ பக்கத்துல வர்றானே' என்று யோசித்து அருவி பின் வாங்கினாள். அதைப் பொருட்படுத்தாது மேலும் நெருங்கினான் பிரசன்னா. 'அச்சோ கட்டிப் பிடிச்சுடுவானோ.. கிஸ் அடிப்பானோ' என்ற பயத்தில் அருவி சிக்கென்று கண்களை மூடிக்கொண்டாள். கொஞ்சமும் யோசிக்காமல் சாஷ்டாங்கமாக அவள் காலில் விழுந்து விட்டான் பிரசன்னா.

"ப்ளீஸ் வாட்டர் ஃபால்ஸ்! நீதான் எனக்குன்னு என் மனசுக்குள்ள பிக்ஸ் ஆயிடுச்சு.. இனிமே என்னால அதை மாத்த முடியாது.. என்னைக் கல்யாணம் பண்ணிக்கோயேன்.. ப்ளீஸ்!" என்றான்.

கண்திறந்து பார்த்து அதிர்ந்தாள் அருவி. ஒரு நிமிடம் இப்படியொரு தெய்வீக அன்பைப் பெற்றுவிட்டதில் பெருமையாக உணர்ந்தாலும், காதலன் தன் காலில் விழுந்ததைத் தாங்க மாட்டாத அருவி, "சரி சரி.. வாங்க உள்ளே.. ஆனா தியேட்டர்ல போய் படம் தான் பாக்கப் போறேன்.. உங்க கிட்ட எல்லாம் பேச நேரமில்லை" என்றபடி உள் நோக்கி நடந்தாள். பிரசன்னாவும் அகமகிழ்ந்து போய் அவள் கைக்குள் தன் கையை விடாப்பிடியாக நுழைத்துக் கொண்டு மீண்டும் திரைப்படம் பார்க்க வந்தான்.

அந்த படத்தைப் பற்றி, குறிப்பாக அதன் கிளைமாக்ஸ் காட்சியைப் பற்றி அருவியும் முன்பே கேள்விப்பட்டு இருந்தாள். மெல்ல அவள் படத்தில் மூழ்க, அவள் புறமாக சாய்ந்து அமர்ந்த பிரசன்னா, அவள் தோள்களில் சாய்ந்து அவளுள் மூழ்க முயன்று கொண்டிருந்தான். கரடியாக அழைத்தது அவன் செல்போன். அழைத்தது மாறன்.

"விக்னேஷ் நம்பருக்குக் கூப்பிட்டா ஏதோ தெலுங்குல சொல்லுது.. எங்கே அவன்?" என்று சிடுசிடுத்த குரலுடன் மாறன் கேட்க, 'என்னை டிஸ்டர்ப் பண்ணிட்டு நீ டென்ஷன் ஆகுற..?' என்று மனதினுள் மாறனை திட்டியவன்,

"அண்ணா அவன் ஆந்திராப் பக்கம் தான் போயிருக்காண்ணா.. நைட் வந்துடுவான்.. வந்தவுடனே கூப்பிடச் சொல்லவா? எதுவும் முக்கியமாண்ணா?" என்று ஏகப்பட்ட 'அண்ணா'க்களைப் போட்டான்.

"ஆந்திரா ல போய் அவன் என்ன செய்றான்.. சரி இப்ப இதைக் கேளு.. சீக்கிரம் கிளம்பி வரச் சொல்லு" என்று கூறிவிட்டு மாறன் கூறிய விஷயம் இடி போல் இறங்கியது பிரசன்னாவின் காதுகளுக்குள்.

தொடரும்,

பைரவி.



 

Sspriya

Well-known member
காலில் விழுந்து ok பண்ணா தெய்வீக காதலா 🙄🙄... இது என்ன டா புது புரளியா இருக்கு... இடி இடிக்குற அளவுக்கு என்ன விஷயமா இருக்கும் 🤔🤔🤔🤔
 

Bhairavi

Member
காலில் விழுந்து ok பண்ணா தெய்வீக காதலா 🙄🙄... இது என்ன டா புது புரளியா இருக்கு... இடி இடிக்குற அளவுக்கு என்ன விஷயமா இருக்கும் 🤔🤔🤔🤔
Thank you❤❤❤
 
Top