கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

எதிர்மறை வினையெச்சம் 11

Bhairavi

Member
எதிர்மறை வினையெச்சம்

அத்தியாயம் 11

4. நேர்மையற்ற ஆன்ட்டி ஹீரோ

முதலில் இருந்தே நேர்மையற்ற செயல்களே செய்கிறவர் தான் இந்த ஆன்ட்டி ஹீரோ. என்னதான் மனதில் பழி வாங்கும் எண்ணங்கள் என்று, தான் செய்யும் காரியங்களை இவர் நியாயப்படுத்தினாலும், அதற்காக எடுத்துக் கொள்ளும் வழிமுறைகள் அனைத்துமே வன்முறை நிறைந்தவை. ஏற்றுக் கொள்ளவே முடியாதவை. தனக்கோ அல்லது தன்னைச் சார்ந்தவர்களுக்கோ ஏதோ அநீதி நடந்து விட்டது என்று அதற்கான வன்மத்தை
மனதில் ஏற்றிக் கொண்டு, இவர் செய்கிற மாற்றுச் செயல்கள் தவறானவை. சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டு தானே தண்டனை வழங்குகிறார்.

அந்த வன்முறைச் செயல்கள் இவருக்குப் பழகிப் போகும் நிலையில், இவரது வாழ்க்கையே அந்த வன்முறைப் பாதையில் திசை திரும்பிப் பயணிக்க ஆரம்பிக்கிறது. அதற்கேற்ப இவருடைய சிந்தனையும் இழிநிலைக்குத் தள்ளப்படுகிறது.

உதாரணம்: கானன் தி பார்பேரியன்


வன்முறை அல்லது சிறு குற்றங்களில் ஈடுபடுவதில் கோனனுக்கு எந்த கவலையும் இல்லை: திருட்டு, படுகொலை, கூலி வேலை, திருட்டு - இவை அனைத்தும் ஒரு நாள் வேலை. ஒரு வேடிக்கையான நாளின் வேலை. இந்தக் குற்றங்களைச் செய்வதற்கு ஒரு போதும் அவர் தயங்குவதில்லை. அனுபவித்து செய்கிறார்.

அடுத்ததாக, வாஸ்தவ் என்ற ஹிந்தித் திரைப்படத்தில் சஞ்சய்தத்தின் பாத்திரப் படைப்பைச் சொல்லலாம். குண்டர்களால் துன்புறுத்தப்படும் சாமானிய மனிதனான சஞ்சய் தத் ஒரு கட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கும் போது குற்றங்களையும், கொலைகளையும் செய்ய ஆரம்பிக்கிறார். யாரை எதிர்த்து நிற்பதாக நினைத்து வன்முறை என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்தாரோ, அதே முரடராகத் தானும் உருவாகி விடுகிறார். ஒரு கட்டத்தில் அதை விட்டு வெளியே வர நினைத்தாலும், வெளியேற முடியாதபடி அந்த வன்முறை வாழ்க்கை, ஒரு மாயப் புதைகுழியாக அவரைத் தன்னுள் இழுத்துக் கொள்கிறது. இறுதியில் அந்த வாழ்க்கையில் இருந்து அவருடைய தாயின் மூலமாக அவருக்கு விடுதலை கிடைக்கிறது. அவரைப் பெற்றெடுத்த தாயே அவருக்கு மரணத்தைப் பரிசாக அளிக்கிறார்.

தமிழ்த் திரைப்படங்களை அலசும் போது, நந்தா படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் கிட்டத்தட்ட இதே போன்ற ஆன்ட்டி ஹீரோ பாத்திரம் தான். ரேணிகுண்டா படம் இன்னொரு எடுத்துக் காட்டு. கே. ஜி. எஃப் படம் கூட இதே போன்ற கதாபாத்திரத்தின் கதையைத் தான் படம் பிடித்துக் காட்டுகிறது.

இந்த வகை ஆன்ட்டி ஹீரோக்கள்,
வில்லனில் இருந்து ஒரு துளியளவு தான் மாறு படுகிறார்கள்.

அத்தியாயம் 11

அருவியின் தோளில் சாய்ந்து கொண்டு ஆனந்தமாக ஏதேதோ கனவுகளை மனதில் கற்பனை செய்து கொண்டு காதலுடன் கிறங்கிக் கிடந்தவனை, மாறனின் வார்த்தைகள் அடித்து எழுப்பி நிமிர்ந்து உட்கார வைத்தன.

" என்ன, என்ன என்னண்ணா சொல்லறீங்க? நெஜமாவா சொல்லறீங்க? " என்று கத்திப் பேச ஆரம்பித்தவன், அருவி அருகில் இருப்பதைச் சட்டென்று உணர்ந்து குரலை இறக்கினான்.

" அண்ணா, நான் கெளம்பி நேரில வந்து பாக்கறேன். என்ன நடக்குதுன்னு எனக்கு வெவரமாச் சொல்லுங்க. விக்கியை எப்படியாவது திரும்பி வரவைக்கறது என் பொறுப்பு" என்று தலையலடிக்காத குறையாக உறுதியாகப் பேசினாலும், அவன் காதில் ஏற்கனவே விழுந்த அந்த சொற்கள் அவனை நடுநடுங்க வைத்திருந்தன.

" ஒடனே பொறப்பட்டு வா. எனக்கு வர ஆத்திரத்துல உங்க ரெண்டு பேரையும் ஒட்டகத்தோட காலில கட்டி அரபு நாட்டுப் பாலைவனத்துல சுத்த விடணும்னு தோணுது. ஒட்டகம்னா, மெதுவா சோம்பேறித்தனமா நடை போடற ஒட்டகம் இல்லை. பைத்தியம் புடிச்சுக் கண்ணு மண்ணு தெரியாம ஓடற ஒட்டகத்தைச் சொல்லறேன். தரதரன்னு அது இழுத்துட்டு ஓடற சமயத்தில கரகரன்னு பாலைவனத்து மண்ணு அதுவும் சூடா உடம்பில பட்டுத் தோலெல்லாம் உரிஞ்சு எரியணும். அதை நான் கூலா வேடிக்கை பாக்கணும் " என்று அதீத அன்புடன் வார்த்தைகளை உதிர்த்தான். மாறனுடைய ஒவ்வொரு வார்த்தையும் அவன் மனதில் இருந்த கொடூரத்தையும் கோபத்தையும் இலவச இணைப்புகளாகத் தன்னுடன் இணைத்துக் கொண்டு வந்து பிரசன்னாவைப் பார்த்து ஈயென்று இளித்தது.

" அண்ணா, என்ன விஷயம்னு சொல்லுங்கண்ணா. விக்கி வரதுக்குள்ள நானே ஸால்வ் பண்ணிடுவேண்ணா" என்று பிரசன்னா ஏகத்துக்குக் குழைய, அங்கே எதிர்முனையில் மாறனோ ஏகத்துக்குக் கடுப்பானான்.

" கிழிச்சுருவ நீ போ! என் வாயைக் கிளறாதே. உங்க ரெண்டு பேரையும் நம்பிக் காரியத்தை ஒப்படைச்சுட்டுத் திண்டாடறேன் நான். மண் குதிரையை நம்பி ஆத்தில இறங்கினாக் கூட நீந்தியாவது தப்பிக்கலாம். இது மாவுக் குதிரையா இல்லை இருக்கு! தானும் கரைஞ்சு என்னையும் தண்ணில கரைச்சிடும் போலத் தோணுது. எனக்கு வர ஆத்திரத்துல… … . சரி, நேரில வா. ஃபோனில திட்டி வாய் வலிக்குது. மீதி அர்ச்சனையை நேரில தரேன் " என்று சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்தான் மாறன்.

அயர்ன்பாக்ஸை வைத்துத் தேய்த்தது போல மாறியிருந்தது பிரசன்னாவின் முகம். அவனையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த அருவிக்கு ஏதோ தவறாகப் பட்டது.

" என்ன ஆச்சு? திரும்ப ஏதாவது பிரச்னையில் மாட்டிக்கிட்டீங்களா? " என்று அருவி கேட்க, பிரசன்னா முகத்தை சரியாக்கிக் கொள்ள முயற்சி செய்தான்.

" அது வந்து வாட்டர் ஃபால்ஸ்… . யாரோ ஒரு கிளையன்ட். நானே அதிசயமா என்னோட ஸ்வீட் டார்லிங்கோட ஜாலியா இருக்கும் போது டிஸ்டர்ப் செய்யறான், மடையன், ஸ்டுபிட் ஃபெல்லோ"

" என்னது மடையன், ஸ்டுபிட் ஃபெல்லோ வா? என்னை என்ன பச்சைக் குழநதைன்னு நெனைச்சீங்களா? எங்க நிலா மாதிரி நான் ஸ்மார்ட் இல்லைன்னாலும், கொஞ்ச கொஞ்சம் நல்லது, கெட்டது தெரியும். நிலா கூடப் பழகிப் பழகி அவளோட விழிப்புணர்ச்சி என் மேலயும் ஒரு வைரஸ் மாதிரி ஒட்டிட்டிருக்கு. ஒரு மடையன் கிட்டத் தான் அண்ணா, அண்ணான்னு ஆயிரம் அண்ணா போட்டுக் குழைஞ்சு பேசினீங்களா? நாம பாத்த சினிமாக் கதையை விட இது ஜாஸ்தி சுத்தலா இருக்கே? உண்மையைச் சொல்லுங்க. அந்தக் கேடு கெட்ட மாறன் கிட்டத் தானே பேசினீங்க? நான் நினைக்கிறது உண்மையா மட்டும் இருந்தா, உங்க பக்கம் இனிமேல் திரும்பிக் கூடப் பாக்க மாட்டேன்.

டெட்டி பியரும், சாக்கலேட்டும் கொடுத்து அடிக்கடி ஃபோன் செஞ்சு பேசி, சினிமாக்குக் கூட்டிட்டு வந்துட்டாப் போதும், இந்த அப்பாவிப் பொண்ணை மயக்கிடலாம்னு மட்டும் நினைக்காதீங்க. நிலாவுக்கு எதிரா ஏதாவது மோசமான வேலையில் நீங்க இறங்கினீங்கன்னா, என்னை நீங்க மறந்துற வேண்டியது தான். க்ளியராச் சொல்லிடறேன்" என்று கடுகாகப் படபடவென்று பொரிந்து விட்டுக் கிளம்பினாள் அருவி.


அவளை சமாதானப்படுத்தக் கூட முயற்சி செய்யாமல், தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான் பிரசன்னா.

என்ன தான் பிரசன்னா மீது அருவிக்கு ஒரு நல்ல எண்ணம் உருவாகி இருந்தாலும், மாறனோடு அவனுடைய நட்பு அவளால் ஏற்கவே முடியாது. 'அதுவும் வெண்பாவுடன் ரெஸ்டாரண்டில் இருந்தபோது, குழந்தை பிரபாவைக் கடத்தவோ இல்லை தாக்கவோ மாறனின் அடியாட்கள் செய்த முயற்சியை எப்படி மன்னிக்க முடியும்? அது தெரிய வந்ததில் இருந்து இரத்தம் கொதிக்கிறது! அந்தக் கேவலமான காரியத்தில் பிரசன்னாவின் பங்களிப்பு இருக்காதுன்னு தோணுது. ஒருவேளை பிரசன்னாவுக்குத் தெரியாம விக்னேஷ் உதவி செஞ்சிருந்தா……' என்று யோசித்து யோசித்துக் கொந்தளித்துப் போயிருந்தாள் அருவி.


நிலாவைப் போலவே அருவிக்கும் குழந்தை பிரபாவின் மேல், இல்லை இல்லை நிலாவை விட அதிகமாகவே பாசம் இருக்கிறது. ' என்னை மாதிரியே நெருங்கிய உறவுகளை இழந்து பாவப்பட்ட அனாதையாக பிரபா நிற்கிறாள்! ' என்று நினைக்கும் போதே அளவுக்கு அதிகமான கருணையும் ஒட்டுதலும் அருவியின் மனதில் பொங்கி வழிந்தன.

' என்னை நட்போடு அணைத்த அதே மென்னிலா, இந்த அனாதைக் குழந்தையைப் பாசத்துடன் அரவணைத்திருக்கிறாள். இவ்வளவு நல்ல மனசு இருக்கற மென்னிலாவை எப்படி என்னால விட்டுக் கொடுக்க முடியும்? அவ செய்யற சில தப்புகளைக் கூட அதுனால தான் என்னால மன்னிச்சு ஏத்துக்க முடியுது. அவளோட செயல்முறைகள் சரியில்லைன்னாலும், மனசால ரொம்ப நல்லவ. இந்த பிரசன்னா கிட்ட இவ்வளவு சீக்கிரமா மனசைப் பறிகொடுத்தது தவறு தானோ? ஒருவேளை இவன், நிலாவைப் பத்தின தகவல்களைத் தெரிஞ்சுக்கறதுக்காக என்னைப் பயன்படுத்தறானோ?' என்று தன் எண்ண அலைகளை அலைபாய விட்ட போது, அருவியின் நெஞ்சே வெடித்துச் சிதறியது. நட்பும், காதலும் போட்டி போட்டுக்கொண்டு அவளைத் தங்கள் பக்கம் இழுக்கப் பார்த்தன.

அங்கே பிரசன்னாவின் நிலையோ அதை விட மோசமாக இருந்தது. ' இருந்து இருந்து இன்னைக்குத் தான் அருவியிடம் மனம் விட்டுப் பேச முடிஞ்சது. அவளுக்கும் என் மேல இன்ட்ரஸ்ட் இருக்குன்னு
என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது. ஜில்லுன்னு ஐஸ்க்ரீம் சாப்பிட்டுட்டு இருக்கும் சமயத்தில், கையிலிருந்து ஐஸ்க்ரீம் குச்சி தவறி விழற மாதிரி, இந்த மாறனோட ஒரு ஃபோன் கால் எல்லாத்தையும் ஸ்பாயில் பண்ணிடுச்சே! இனிமேல் அருவியை எப்படி கூல் பண்ணப் போறேன்? ' என்று தன் விதியை நொந்து கொண்டான்.

அதிரடியாக என்ன செய்து அருவியின் நம்பிக்கையை எப்படிப் பெறலாம் என்று யோசித்தபடி எழுந்த பிரசன்னா, விக்னேஷிற்கு மாறனிடம் உடனடியாகப் பேசச் சொல்லித் தகவல் அனுப்பினான். அழைக்க முயற்சி செய்தபோது, சுந்தரத் தெலுங்கில் பதிவு செய்யப்பட்ட செய்தி தான் திரும்பத் திரும்ப வந்தது.

வெறுத்துப் போன பிரசன்னா வேறு வழியே இல்லாமல் எரிமலையை எதிர்கொள்ளத் தனியாகக் கிளம்பினான். அவன் எதிர்பார்த்ததை விட அதி தீவிரமாக இருந்தது பிரச்சினை.

" வாங்க, வாங்க. பெரிய மனுஷராயிட்டீங்களா? நாங்களாக் கூப்பிட்டாத் தான் வருவீங்களா? ஒருத்தர் சொல்லாமக் கொள்ளாம ஆந்திரா, கர்நாடகான்னு சுற்றுலா போறாரு! இன்னொருத்தரு ஜாலியா சினிமா தியேட்டரில் உக்காந்து படம் பாக்கறாரு! " என்று கேலியாக வார்த்தைகளை உதிர்த்த மாறனை ஆச்சரியமாகப் பார்த்தான் பிரசன்னா.

" என்ன? இவனுக்கு எப்படித் தெரியும் னு ஆச்சரியமா இருக்கா? இவனுக்கு நாம உதவி செய்யப் போனா, இவன் நம்மையே கண்காணிக்கறானேன்னு பாக்கறயா? உங்க ரெண்டு பேரை மாதிரி எத்தனையோ பேரைப் பாத்து வளந்தவன்டா நான்! என் கிட்ட நீங்க வாலாட்ட முடியாது. என்ன ஆச்சு நான் கொடுத்த வேலை? இது வரைக்கும் ஒரு பர்ஸன்ட் கூட ரிசல்ட் கொடுக்கலை நீங்க. உங்களோட கான்ட்ராக்ட் விஷயத்தை இதோட மறந்துட வேண்டியது தான் நீங்க" என்று மாறன் சொன்னதும் பதறிப் போய் எழுந்து விட்டான்.

" அய்யய்யோ, அப்படியெல்லாம் சொல்லாதீங்க. நீங்க நெனைச்சபடியே எல்லாமே நல்லபடியா முடிச்சுக் கொடுத்துருவோம். விக்கி திரும்பி வந்ததும் அதிரடி ஆக்ஷன் தான் " என்ற பிரசன்னாவைக் கேவலமாகப் பார்த்தான் மாறன்.

" சரி, இப்போ இதையெல்லாம் விடத் தலைபோற காரியம் வந்தாச்சு. நம்ம எல்லாரையும் வேட்டையாட ஒரு பெண் புலி களத்தில் இறங்கிருக்கு. உங்க வி, பி கம்பெனி பத்தியும் யாரோ அவங்க கிட்டப் போட்டுக் கொடுத்திருக்காங்க" என்று மாறன் சொன்னது பிரசன்னாவுக்கு சுத்தமாகப் புரியவில்லை.

" என்னண்ணா சொல்லறீங்க? பெண் புலியா, யாரது? புலி வந்தாலும் சிங்கத்து கிட்டத் தோத்துரும்ணா" என்றவனை அலட்சியமாகப் பார்த்த மாறன்,

" புரியாமப் பேசறே அப்ரண்டிசா! நான் சொல்லறது வெண்பா ஐ. பி. எஸ் ங்கற போலீஸ் ஆஃபிஸரைப் பத்தி. அவங்க முன்னாடி நீயும் உன்னோட தோஸ்த்தும் பலியாடுகள் தான். என்கௌன்டர் ஸ்பெஷலிஸ்ட் அவங்க. உங்க கம்பெனி பத்தின ஸீக்ரெட் ஃபைல் ஒண்ணு தயார் பண்ணி வச்சிருக்காங்களாம். அடுத்து டைரக்டா என்கௌன்டர் தான். நான் குடுத்த வேலையை இப்போதைக்கு விட்டுரு. அதை நானே பாத்துக்கறேன். கான்ட்ராக்ட், காதல் எல்லாத்தையும் மறந்துட்டு உசுரைக் காப்பாத்திக்கப்
பாரு. ஒருவேளை உன்னோட ஸோ கால்டு ஃப்ரண்ட் ஒன்னை இங்கே மாட்டி விட்டுட்டு ஆந்திராப் பக்கம் போயி ஒளிஞ்சிக்கிட்டானோ, என்னவோ! " என்று மாறன் சொல்ல, பிரசன்னாவின் மேல் யாரோ அமிலத்தை வீசியது போல இருந்தது.

"நிஜமாவா சொல்றீங்க அண்ணா? " என்று பரிதாபமாகப் பார்த்த பிரசன்னாவின் நிலையைப் பார்த்து அடக்க முடியாத சிரிப்பு தான் வந்தது மாறனுக்கு.

" சீக்கிரமாய் கெளம்பிப் போய், உன்னோட கடைசி ஆசைகளை நிறைவேத்திக்கோ" என்று அடுக்கடுக்காகப் பொய்களை அள்ளி வீசி பிரசன்னாவின் மீது சுனாமித் தாக்குதல் செய்து விட்டு மனநிறைவுடன் கிளம்பினான் மாறன்.

மாறனின் மனதில் இருந்த கடுப்பை எல்லாம் பிரசன்னாவின் மீது இறக்கி விட்டு, தான் கொடுத்த வேலையை முடிக்காத அந்த நண்பர்களைப் பழி வாங்கிய திருப்தியுடன் கிளம்பிய மாறன், காலையில் தனது தந்தையுடன் நடந்த உரையாடலை எண்ணிப் பார்த்தான்.

முதல் நாள் ரெஸ்டாரண்டில் மென்னிலா, பிரபா மீது நடந்த தாக்குதல் முயற்சி பற்றி அவனுக்குத் தெரிய வந்தது. மாறன், அய்யாசாமி இரண்டு பேருக்கும் நெருக்கமான அல்லக்கை ஒருத்தன், அந்தத் தகவலை மாறனிடம் பகிர்ந்திருந்தான். நிச்சயமாக தனக்குத் தெரியாமல் அவர் வேறு ஏதோ ரகசியத் திட்டத்தில் இறங்குகிறார் என்று அவனுக்கு ஏற்கனவே ஒரு சந்தேகம் இருந்தது.

" என்னப்பா இது? குழந்தையைக் கடத்த ஆளனுப்பினது நீங்க தானே? அந்தக் குழந்தைக்கு ஏதாவது ஆயிருந்தா, அந்த மென்னிலா ஒரு நாளும் என் காதலை ஏத்துக்கவே மாட்டா. உங்களுக்கு ஏன் இந்த விஷயம் புரிய மாட்டேங்குது? இனிமே இதில நீங்க தலையிடாதீங்க. நானே பாத்துக்கறேன். குழந்தை பத்தின ரகசியத்தை உங்க கிட்ட சொன்னதே தப்பாப் போச்சு " என்று பொரிந்தான் மாறன்.

" என்னடா, எனக்கே பாடம் சொல்லித் தர ஆரம்பிச்சுட்டயா? நான் டாக்டர் பட்டம் வாங்கின துறையில நீ இன்னும் நர்ஸரியே முடிக்கலை. என்ன செய்யணும், செய்யக் கூடாதுன்னு எனக்குப் பாடம் எடுக்காம, நான் சொல்லற பொண்ணைக் கட்டிக்கோ. அடுத்த எலெக்ஷனில் உனக்கு சீட்டு வாங்கி, உன்னை எப்படியாவது மினிஸ்டர் ஆக்கிடும்னு நான் மனசுக்குள்ள மைசூர் மாளிகையையே கொண்டு வந்து நிறுத்திருக்கேன். நீ என்னடான்னா, காதல், கத்திரிக்காய்னு காலேஜ் பையன் மாதிரி ஒருதலை ராகம் பாடிட்டு இருக்கயே? எல்லாத்தையும் மூட்டை கட்டி, குட்ஸ் டிரெயின்ல அனுப்பிட்டு இளைஞரணித் தலைவனாற வழியைப் பாரு" என்றார் அந்த அரசியல்வாதி தீர்மானமாக.

" உங்களுக்கு என்னைப் பத்தி நல்லாத் தெரியும். எதையாவது செய்யணும்னு நெனைச்சாப் பின்வாங்க மாட்டேன். இந்த நிலா விஷயம் நல்லபடியா முடியட்டும். அதுக்கப்புறம் உங்க ஆசைப்படி அரசியல் தான் " என்று உறுதிமொழி தந்தான் மாறன்.

அவர்கள் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் அய்யாசாமியின் ஃபோனில் அழைப்பு வர, அதை எடுத்துப் பேசிய அய்யாசாமியின் முகம் மாறியது. பேசி முடித்துவிட்டு மாறனைப் பதட்டத்துடன் பார்த்தார் அவர்.


" சரி, இப்போ வேறொரு முக்கியமான விஷயம் தெரிய வந்திருக்கு. நம்ப சண்டையை அப்புறம் வச்சுக்கலாம். அந்த போலீஸ் அதிகாரி வெண்பாவைப் பத்திக் கேள்விப்பட்டிருக்க இல்லையா? அவங்க நம்மைப் பத்தின தகவல்களை இரகசியமா சேகரிச்சுட்டு இருக்காங்களாம். நம்ப வக்கீல் தான் இப்பப் பேசினார். நம்மைக் கொஞ்சம் கவனமா இருக்கச் சொன்னாரு. நம்மைச் சுத்தியிருக்கற எல்லார் பத்தியும் விசாரிச்சு நாலா பக்கத்தில் இருந்தும் வலை விரிக்கறதாவும் சொல்றாரு. பொம்பளைன்னு அலட்சியமா விடாதே. கவனமா இரு" என்று சொல்லி மகனை அனுப்பினார் அந்தப் பொறுப்பான தந்தை.

தந்தை சொன்னதை வைத்துத் தான் பிரசன்னாவை மிரட்டிப் பயமுறுத்தி வைத்திருந்தான் மாறன். விக்னேஷ், பிரசன்னா பற்றி வெண்பாவிற்குத் தகவல்கள் போயிருக்காது என்று மாறனுக்குத் தெரியும். இருந்தாலும் விக்னேஷ் இல்லாத சமயத்தில் பிரசன்னாவைக் கலவரப்படுத்தியதில் மனதில் குரூரமான திருப்தி.

மகனிடம் காலையில் பேசி அனுப்பிய பிறகு அய்யாசாமி தீவிர யோசனையில் ஆழ்ந்தார். மகனுக்குத் தெரியாமல் இன்னும் சில வேலைகளைத் திட்டமிடத் தொடங்கினார்.

மாறன் சொன்னது சரி தான். சின்னக் குழந்தையில் இருந்து எதையாவது அடைய வேண்டும் என்று நினைத்தால் அதை அடைந்தே தீருவான். பயங்கரப் பிடிவாத குணம். ஒருமுறை மாறனின் அம்மா, மாறன் கூப்பிட்ட போது திரும்பிப் பார்க்காமல், அவர்கள் வீட்டில் வளைய வந்து கொண்டிருந்த பூனைக்குட்டியை மடியில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தாள். உடனே மாறன் அந்தப் பூனையைத் தூக்கிக் கொண்டு போய் கிணற்றில் போட்டு விட்டான். அன்றிலிருந்து மாறனின் அம்மாவே, மாறனை விட்டு ஒதுங்கியே இருந்தாள்.

அதே போல, பள்ளியிலும், கல்லூரியிலும் எத்தனையோ சம்பவங்கள். அய்யாசாமி தனது பணபலத்தையும், அரசியல் செல்வாக்கையும் உபயோகித்து சரி செய்திருக்கிறார். தனது மகனைக் காப்பாற்றியிருக்கிறார்.

எதிரியைப் பழி வாங்குவதற்காக நிலாவிடம் இருக்கும் குழந்தைக்கு ஏதாவது தீங்கு இழைக்கும் முடிவை, தனது மகனுக்காக அவர் மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. அதில் என்னவோ உறுதியாக இருந்தார். அடுத்து மாறன், தானாகவே நிலாவை மறக்க வேண்டும் என்பதற்காக இன்னொரு பயங்கரமான திட்டம் அவர் மனதில் உருவானது. அவருடைய சதுரங்க விளையாட்டின் அடுத்த நகர்வில், தனக்குத் தேவையில்லாத விக்னேஷ், மென்னிலா, பிரசன்னா ஆகிய மூன்று சிப்பாய்களையும் ஒரே சமயத்தில் வெட்டி வீழ்த்தத் துணிந்தார்.

பிரசன்னா, மாறனைச் சந்தித்து விட்டு வந்து ஒரேடியாகக் கலங்கிப் போய் உட்கார்ந்திருந்தான். அந்தக் கலக்கத்தின் காரணகர்த்தாவான மாறனோ, மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தான். அவனுடைய மகிழ்ச்சிக்கு ஆப்பு வைப்பதற்காகவே, அய்யாசாமி அவனை அழைத்தார்.

" தம்பி, நீ என்னவோ என் நிலா, பெண் நிலா, அழகு நிலா
, மென்னிலான்னு கற்பனையில் டூயட் பாடிட்டுத் திரியறயே, அந்தப் பொண்ணு வேற யாரோட வானத்து நிலாவாகப் போகுது போல இருக்கே? உன் முதுகுக்குப் பின்னால உனக்கே ஆப்பு வைக்கிறாங்களே இந்தப் பசங்க! இந்த விஷயம் கூடத் தெரியாத அப்புராணியா இருக்கயே? " என்று சொல்லி, மாறனைக் கலங்கடித்தார்.

தொடர்வாள்,

பைரவி.
 
Last edited:
Top